கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 20, 2011

“முற்றத்து மரங்கள்” – ஒரு முன்னோட்டம்

mutrathu marangal

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு “முற்றத்து மரங்கள்” என்னும் தலைப்பில் நூலாக வெளியாகிறது, தகிதா பதிப்பகம் பதிப்பு வேலைகளையும், ஓவியர் அனந்த பத்மநாபன் அட்டைப்படங்களையும் வடிவமைக்க தம்பிகள் வேல்முருகன் (சிங்கப்பூர்), அருள் ராமலிங்கம் (ஜப்பான்) மற்றும் அண்ணன் துரை நந்தன் (கனடா)ஆகியோர் இந்த நூல் வெளியாவதற்கு உளப்பூர்வமான தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

படைப்பிலக்கியம் அல்லது புனைவுகள் முற்றிலும் கற்பனையில் எழுதப்பட இயலாது என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு, எந்த ஒரு எழுத்தாளனும் அல்லது படைப்பிலக்கியவாதியும் தன்னைச் சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டே தனது எழுத்தின் மூலத்தைக் கண்டறிகிறான், இலக்கியங்களில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான நிகழ்வுகள் பதிவு செய்யும் மனிதனின் பதின் வயதில் நிகழ்ந்தவையாய் இருக்கின்றன, பதின் வயதில் உள்ளீடு செய்யப்படும் வாழ்வியல் தொகுப்புகள் எஞ்சிய நாட்களில் மிகுந்த தாக்கத்தை விளைவிக்கின்றன.

இந்தத் தொகுப்பும் அதற்கு விதி விலக்கல்ல, இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பான்மையான நிகழ்வுகள் அதிகாலைப் பனி மூடிய நினைவு மரங்களைப் போல காலத்தைக் கடந்து எழுத்தாய் நிலை பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதிய பிறகு நான் ஒரு இலக்கியவாதி என்று சொல்லத் துவங்கினால் அது ஒரு மூடனின் பிதற்றலாய் இருக்கும், இதில் இடம்பெறும் நிகழ்வுகளும், புனைவுகளும் மொழியை அல்லது இலக்கியத்தைக் கற்றுக் கொள்வதற்குத் துடிப்புடன் இயங்கும் ஒரு சிறு குழந்தையின் காலடித் தடங்களைப் போன்றவை. ஆனால், எல்லா இலக்கியங்களும் ஒரு குழந்தையின் காலடித் தடங்களில் இருந்தே துவங்கி இருக்கும் என்பதில் முரண்கள் இருக்க முடியாது.

இந்தச் சிறுகதைகளின் மூலத்தையும், அவை சொல்ல வரும் செய்திகளையும் ஒரு படைப்பாளனின் பார்வையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

312554_293881737307602_100000573330162_1116528_847433190_n

சிறுகதை 1

சிறுவயதில் இருந்தே வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும், வரலாற்று நினைவிடங்களைப் பார்வையிடுவதிலும் அளப்பரிய ஆர்வம் எனக்குள் இருந்து வந்திருக்கிறது, நிகழ்காலத்தின் அவலங்கள் வரலாற்றின் நிழலில் சிறிது நேரமேனும் இளைப்பாறிக் கொண்டு விடுகிறது, போரும், கொலைவெறியும் நிரம்பிக் கிடக்கிற வரலாற்றின் பக்கங்களில் மனிதர்களின் சில மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்ய சில மாவீரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உதவி இருக்கிறார்கள், அந்த வகையில் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுக்க வந்த போது நிகழ்ந்த சில உண்மைகளின் மீது புனையப்பட்ட சிறுகதை.

சிறுகதை 2

தொலைந்து போன சின்னஞ்சிறு பொருட்கள், நினைவுகள், மனிதர்கள் இவை எல்லாம் நமக்குள் விளைவிக்கும் தாக்கம் மகத்தானது, எல்லா மனிதர்களின் நினைவுச் செல்களிலும் இடைவிடாது ஒரு முள்ளைப் போல உறுத்திக் கொண்டிருக்கும் சில மறக்க முடியாத சிறு பொருட்கள் இருக்கக் கூடும், எனக்குள் தொலையாமல் எனது நிலப்பரப்பில் மட்டுமே தொலைந்து போன ஒரு டிக்கி டிக்கி, காளியம்மைப் பாட்டி, அம்மாவின் வகுப்புத் தோழி இவர்களின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதை ஏறத்தாழ ஒரு உண்மைக்கதையே, கதையை அழகு செய்வதற்காகச் சில புனைவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறுகதை 3

முதலாளிகளின் வணிகமும், அதன் தாக்கமும் வயல்களையும் மரங்களையும் அழித்தபடி பயணிக்க, ஊரகப் பகுதிகளில் அமைதியாக வாழும் உழைக்கும் எளிய மக்களை அன்றாடம் தனக்குள் விழுங்கி ஏப்பம் விடுகிறது நகரத்தின் கட்டிடங்கள், எல்லா மனிதர்களையும் போலவே இவ்வுலகில் பொருளைத் தேடித் பயணிக்கும் ஒரு முதியவரின் வாழ்க்கை நகரத்தின் பாதுகாவலர்களால் துரத்தப்படுவதை இந்தக் கதை அதன் போக்கில் சொல்கிறது, ஐந்து பெண்களைப் பெற்ற ஒரு எளிய தந்தையின் இருப்புக்கான தடைகள், பொருள் தேடலுக்கான இடர்கள் இவைகளைக் குறித்துப் பேசும் இந்தக் கதையின் பின்னே எனக்கு மிக நெருக்கமான ஒரு உறவு இருக்கிறது.

சிறுகதை 4

பிச்சைக்காரர்கள் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிற சில மனிதர்களின் பின்னே இருக்கும் ரகசியங்களை, அவர்களுக்குள் புதைந்து கிடக்கிற மனித வாழ்க்கையின் சுவடுகளை கால்களில் வலுவிழந்த ஒரு முதியவரின் மூலமாகச் சொல்ல முற்படுகிறது இந்தக் கதை, ஏறத்தாழ இது எனது வாழ்க்கையின் இளம்பருவத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைக் கதையே, தந்தையின் மிதிவண்டியில் அமர்ந்தபடி பயணித்த உன்னதமான சில கணங்களை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு குறைந்த அளவில் என்னுடைய வரலாற்றிலாவது பதிவு செய்யப்பட வேண்டிய கதை என்பதால் இந்தக் கதை உருப்பெற்றது, புனைவின் அலங்காரம் இருந்தாலும் எனக்கு மிக நெருக்கமான ஒரு கதை இது.

268228_2201007941426_1134136782_2701446_1985912_a

சிறுகதை 5

உடல் நீள அகலங்களை வைத்து மனிதர்களை அளவிடும் நமது பொதுப் புத்தியின் இயலாமையை சுட்டும் கதை, மனதின் நீளமும் அகலமும் எல்லா மனிதர்களின் அளவீடுகளோடு பொருந்திப் போவதை நமக்கு உணர்த்துகிறான் ஒரு மனிதன். சில நேரங்களில் மனிதர்களை விடவும், மனித எண்ணங்களை விடவும் விலங்குகளின் கலப்படமற்ற அன்பு நம்மை நிலைகுலைய வைக்கிறது, தங்களுக்கான நீள அகலங்களுக்கு ஏற்ப மனதைச் சுருக்கிக் கொள்ளும் வலி மிகக் கொடுமையானது மட்டுமில்லை தவிர்க்கப்பட வேண்டியதும் கூட என்கிற சமூக நெறி இதற்குள் பொதிந்து கிடக்கிறது.

சிறுகதை 6

எனது முதல் சிறுகதை, ஒற்றையடிப் பாதைகளின் வழியாகப் பயணிக்கத் துடிக்கும் ஒரு சிறுவன் இன்னும் எனக்குள் ஒளிந்து கிடப்பதை அடையாளம் கொண்டு சொன்ன கதை, மலைகள் குறித்த வியப்பு மனிதனுக்குள் அடங்காமல் கிடப்பதை நினைவூட்டி பழைய பண்பாட்டு விழாக்கள் மற்றும் ஒன்று கூடல்களின் தொலைக்க முடியாத நினைவுகளை அள்ளித் தெளிக்கும் கதை, சில உண்மை நிகழ்வுகளோடு புனைவும், இயற்கையும் மட்டுமன்றிக் கொஞ்சம் கத்துக் குட்டியின் நடையும் கலந்திருக்கும். அப்பத்தா, முற்றத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள், பலூன்களை வைத்து நெற்றியில் உடைத்து விளையாடும் பருவம் எல்லாம் பொதுவாய் இருக்க சாதியின் பிளவுகள் மலைக்குன்றுகளை உடைக்கும் வலிமையோடு அலைவதை வேடிக்கை பார்க்கும் இயலாமை என்று தொடரும் கதை.

சிறுகதை 7

நவீனத் தொழில் நுட்பங்களும், கருவிகளும் மனிதனை இவ்வுலகை ஆளப் பிறந்தவனாக மமதை கொள்ள வைக்கும் காலகட்டத்தில் இயற்கை அவனது மிதமிஞ்சிய ஆளுகையை சில நேரங்களில் முறித்துப் போடுகிறது, அவனும் மற்ற விலங்குகளைப் போலவே இவ்வுலகின் தகவமைப்பைப் பகிர்ந்து கொள்ளப் பிறந்தவன் தான் என்பதை அவனுக்கு உணர்த்துகிறது, சுனாமியின் இருபது அடி உயர அலைகள் மனிதனின் எல்லாத் தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் அடித்து வீழ்த்தி சமநீதியைப் போதிக்கிறது. ஒரு பயணத்தில் மேலும் கீழுமாய் உயரும் உயிர் அச்சம் சில மாறுபட்ட மனித உணர்வுகளை எதிரொலிக்கிறது. சுனாமி சீறித் தீர்த்த நாளில் ஒரு விமானியின் வலைப்பதிவை மையமாக வைத்து எழுதப்பட்டது, ஏறத்தாழ என்னுடைய வாழ்க்கையோடு எந்த நெருங்கிய தொடர்பும் இன்றிப் புனைவாகவே எழுதப்பட்டது.

சிறுகதை 8

பயன்பாட்டில் இருந்து அருகிப் போன சில பொருட்களை மீண்டும் காணும்போது அவை பயன்பாட்டில் இருந்தபோது இயங்கிய கணங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் விளைந்த நெல்லைக் கொட்டி வைத்திருந்த பரண்கள் இப்போது தேவையற்ற பொருட்களை அடைந்து வைக்கும் வைப்பு அறையாகி விட்டன, ஆனாலும் அவற்றுக்குள் இன்னும் ஈரமாய் சொட்டிக் கொண்டிருக்கும் காலத்தின் போக்கை கொஞ்சமாய் இந்தக் கதை சொல்ல நினைக்கிறது, இந்தப் பரண்களில் நமது மொழியின் மிகப் பழைய சொல்லடைகளும் ஓசைகளின்றி உறங்குவது தான் இப்படியான ஒரு பரணுக்குள் என்னை ஏற்றிப் பார்த்தது. நினைவுப் பரணில் ஏற்றி விடப்பட்டிருக்கும் காலக் குழந்தையின் மெல்லிய காலடித் தடங்களை அங்கு படிந்திருக்கும் நிகழ் காலத் தூசியால் மறைக்க முடிவதில்லை.

Vel

சிறுகதை 9

ஒரு பேருந்துப் பயணத்தின் போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகளையும் அவர்களின் தாயையும் கவனிக்க நேர்ந்த போது கருக்கொண்ட கதை, தாய்மையின் உன்னதமான பொழுதுகளைப் படம் பிடித்த ஒரு அற்புதமான உணர்வு, குழந்தைகளை எப்போதும் குழந்தைகளாகவே பார்க்கும் மனநிலை ஒரு தாய்க்கு மட்டுமே இருக்கும் என்பதை உரக்கச் சொல்லும் கதை, ஊனமுற்ற சமூகம் உன்னதமான சில குழந்தைகளை எப்படிப் பார்க்கிறது அல்லது விலக்கி வைக்கிறது என்கிற மிக மெல்லிய உணர்வை ஒரு ஆணின் பார்வையில் படம் பிடிக்கும் கதை, பனிக்கட்டியால் செய்யப்பட கத்தியின் கூர் முனைகளைக் கொண்டு இதயத்தின் ஆழம் வரை ஊடுருவி பேரண்டத்தின் புரியாத சிக்கல்களை நமக்குள் செலுத்தி விட்டுத் தடங்கள் இன்றி வெளியேறும் குளிர் நீரைப் போல இலக்கியத்தின் மூலமாய் வலிகளைப் பகிரும் சிறுகதை.

சிறுகதை 10

காதல் ஒரு நிலவின் பல்வேறு பரிமாணங்களைப் போல இவ்வுலகின் அசைக்க முடியாத ஆற்றலாய் நிலை கொண்டிருக்கிறது, கல்லூரிக் காலம் முடிந்து பொருளை மும்பை மாநகரின் பெரிய வீதிகளில் தேடி அலைந்த போது சந்தித்த எண்ணற்ற மனிதர்களில் சங்கீதாவும் ஒருத்தி, பெண்மையின் பல்வேறு கூறுகளை மிக எளிமையாக விளக்கிப் பெண்மையே இவ்வுலகை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்கிற மிகப்பெரிய செய்தியை எளிமையாய் அதிகச் சொற்கள் இன்றி விளக்கிச் சொன்னவள் சங்கீதா, எனது வாழ்வனுபவங்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய கதைதான் என்றாலும் உலகின் பொதுவான கதை போலத் தோற்றம் கொள்கிறது, மறுவாசிப்புச் செய்யும் போது.

5460_1179080284409_1450211022_479362_3479554_n

சிறுகதை 11

உலகின் ஒவ்வொரு தாயும், தந்தையும் தனது குழந்தைகளின் மேம்பாட்டை நோக்கிக் கனவு காண்கிறார்கள், தனது குழந்தைகள் இவ்வுலகில் அதிகச் சிரமங்கள் இன்றியும், மகிழ்ச்சியோடும் காணப்படும் நிலையில் அவர்களின் உணர்வுகள் அமைதி அடைகின்றன, தங்கள் வாழ்க்கையின் நோக்கம் நிறைவு பெற்றதாக அவர்கள் அப்போது ஒரு நீண்ட பெருமூச்சில் ஓய்வு கொள்கிறார்கள், குறிப்பாக இந்திய சமூகத்தில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஆங்காங்கே நெருடும் இடைவெளிகளை நிரப்ப முயலும் ஒரு சிறு முயற்சி.

சிறுகதை 12

சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக்குக் காரணமான சிறுகதை, ஒரு மரத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் மிக மெல்லிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறுகதை, இதன் பாத்திரங்கள் எல்லாம் நமக்குள் ஒளிந்து கிடக்கும் மென்மையான உணர்வுகளே, ஆதிக் குடிகளின் மனதில் இன்னும் படிந்திருக்கும் இயற்கையோடு ஒன்றிக் கிடக்கிற வாசம் மொழியின் வழியாய்ச் சிதறி வழிந்த போது சிறுகதையாய் வடிவம் பெற்றது. தனது மண்ணும், மக்களும் மனிதர்களின் உயிரெல்லாம் நிறைந்து கிடப்பதை ஒரு மெல்லிய நீரோடை போலச் சொல்ல முற்பட்ட சிறுகதை.

**********

 

 

 

 

 

 

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 10, 2011

வீடு திரும்பும் பாதையில்……..

migration

மயில் ஜீவன் என்று ஒரு நண்பர் சென்னையிலிருந்து அலைபேசியில் தொடர்பு கொண்டார், “உங்கள் வலைப்பூவைப் படித்துப் பார்த்தேன், உங்கள் தமிழும், அறிவும் சிறப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள், ஆனால், நீங்கள் படித்தது, வளர்ந்தது எல்லாம் இந்தத் தமிழ் மண்ணிலே, உங்கள் அறிவுக்கான உரம் இடப்பட்டது தமிழ் மக்களின் கைகளால், நீங்கள் இப்போது பணிபுரிவது பெங்களூரில், உங்கள் உழைப்பும், அறிவும் கன்னட மக்களுக்குப் பயன்படுகிறது, அதிலும் குறிப்பாகத் தமிழர்களை எதிரியாகப் பார்க்கிற கன்னட மண்ணில் இருந்து கொண்டு நீங்கள் இப்படியெல்லாம் தமிழ் குறித்து எழுதுவது முரண்பாடாக இல்லையா உங்களுக்கு? இதற்கு நீங்கள் பதிலுரைத்தே ஆக வேண்டும்” என்று குரலை உயர்த்திச் சொன்னார்.

நான் அப்போது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன், அமைதியாக அவரிடம், ஐயா, உங்கள் கேள்வியில் இருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது, ஆனால், இது குறித்து நாம் அலைபேசியில் உரையாடி ஒரு தீர்வுக்கு வந்து விட முடியாது, உங்களுக்கான பதிலை நான் மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானாலும் குறைந்தது அரை மணி நேரம் ஆகும், ஆகவே பிறகு ஓய்வாக உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

அன்று மாலை வீடு திரும்பும் போதும், இரவு படுக்கையில் இருக்கும் போதும் கூட அவரது கேள்வி திரும்பத் திரும்ப என் செவிப்பறைக்குள் உலவிக் கொண்டே இருந்தது. இந்தக் கேள்வியை என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள், வெவ்வேறு சமூக இணையத் தள உரையாடல்களின் போது “முதலில் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் குறித்தும், தமிழ் மக்கள் குறித்தும் பேசுங்கள்” என்று சொன்னவர்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

இந்தக் கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்னர் சில அடிப்படை விஷயங்கள் குறித்து நாம் பேசியாக வேண்டும், “மனித உயிர்களின் இருப்பு”, “மொழியின் தாக்கம்”, “இடம்பெயர்தல்”, மற்றும் இதன் மூலமான அடையாளங்களைப் புரிந்து கொள்ளுதல், முதலில் மனித உயிர்களின் இருப்புக் குறித்துப் பேசுவோம்.

ஒவ்வொரு மனித உடலும் தாயின் உடலில் இருக்கும் பொழுதிலேயே தனித்து இயங்கும் வல்லமை கொண்டது. தாயின் சிந்தனைகளும், கருவின் சிந்தனைகளும் வேறு வேறானவை, தனக்கான உணவு மற்றும் இயக்கங்கள் குறித்து மனித உடல் கருவாக இருக்கும் போதிலே சிந்திக்கத் துவங்கி விடுகிறது, ஆகவே எந்த ஒரு உயிரின் இயக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் படி இயங்க வைப்பது மிகச் சிக்கலானது மட்டுமன்றி கடினமானதும் கூட.

animal-migration-caribou

தாயின் உடலில் இருந்து பிரிந்து தனி உயிராக ஒரு குழந்தை இயங்கத் துவங்கும் போது அதன் இயக்கம் குறிப்பிட்ட அளவில் மரபணு வழியாகவும், பெருமளவில் தன்னில் தாக்கம் விளைவிக்கிற சூழலின் வழியாகவும் நகரத் துவங்குகிறது. குடும்பத்தின் எல்லைகளைச் சில நேரங்களில் உடைத்துக் கொண்டு வெளியேற முனைகிறது, தன் கண்ணுக்கு முன்னே பறந்து விரிந்து கிடக்கும் இப்பேரண்டத்தின் எல்லைகளை நோக்கித் தனது சிந்தனைகளை விரிக்கத் துவங்குகிறது.

நிலவியலின் அமைப்புகளை வேடிக்கை பார்த்தபடி பயணிக்கும் மனித உயிரின் வளர்ச்சியில் தொடர்ந்து தான் சந்திக்கிற மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், அமைப்புகள், அரசியல், சமூக நிலைப்பாடுகள் இவை யாவும் அவ்வுயிருக்கான பழக்கத்தை அல்லது வாழ்க்கை முறையை உருவாக்குகிறது.

ஒரு காலிப் பாத்திரமாய் அல்லது கொஞ்சமாய் நிரப்பப்பட்ட சோதனைக் குடுவை மாதிரியான மனித உடலின் பல்வேறு வேதியியல் நிகழ்வுகளை புலன்கள் வெவ்வேறு திரவங்களைக் கொண்டு நிரப்புகிறது, பெரும்பான்மையாக நிரப்பப்பட்ட பண்புகளின் தொகுப்பாக ஒரு மனிதன் உருமாற்றம் அடையத் துவங்குகிறான், நானும் அப்படித்தான், நீங்களும் அப்படித்தான், ஆகவே ஒரு மனிதன் எவ்விடத்தில் தன் உயிர் வாழ்க்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிற உரிமை அனேகமாக இவ்வுலகில் வேறு ஒருவருக்குக் கிடையாது.

இப்பேரண்டம் முழுவதும் சுற்றி அலையும் உரிமை இங்கிருக்கும் ஒவ்வொரு துகளுக்கும் அது அந்தத் துகளாக உருமாற்றம் அடையத் துவங்கும் போதே வழங்கப்பட்டு விடுகிறது, இடையில் காணக் கிடைக்கும் எல்லைக் கோடுகளும், கட்டுப்பாடுகளும், சட்ட விதிகளும் இன்னும் எல்லா விதமான குறுக்கீடுகளும் சக மனிதர்களால் அல்லது சக சமூகங்களால் உண்டாக்கப்பட்ட மாயைகள் என்பதில் எனக்கு எப்போதும் தீவிர நம்பிக்கை உண்டு.

ஆதி மனிதனுக்கு இயற்கையைத் தவிர இடம் பெயர்தலுக்கு எந்தக் குறுக்கீடுகளும் இருந்திருக்கவில்லை, மனித உயிர் தொன்மையான காலம் தொட்டு இடம் பெயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இடம் பெயர்தல் என்பது பல்வேறு இயற்கையின் கோட்பாடுகளால் முடிவு செய்யப்படுகிற நிலைத்தன்மை கொண்ட பண்பு, அது மனித வாழ்க்கைக்கு என்று இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு அறிவியல் பண்பு.

கடலில் மட்டுமே இருந்த உயிர் வாழ்க்கை பிறகு பல்வேறு நெருக்கடிகளால் நிலத்துக்கு வந்து தவளைக்குக் கால் முளைத்தது, மீனுக்கு வால் முளைத்தது, முதலைக்குச் சிறகு முளைத்தது என்று இன்னும் பல்வேறு உயிரின் ரகசியங்களை நாம் உயிர் வரலாற்றைப் படிக்கும் போது அறிய முடியும், ஆகவே இடம் பெயர்தலை ஒரு வெகு இயல்பான மனிதப் பண்பாகவே நான் நோக்குகிறேன்.

winged_migration

இனி மனித உயிர்களில் மொழியின் தாக்கம் குறித்துப் பேச வேண்டும், மொழி ஒரு தனி மனித உரிமையா? மொழி இனவாதத்தின் அடிப்படைக் காரணியா? மொழி குறிப்பிட்ட சமூகத்தின் நன்மைகளுக்காகவே படைக்கப்பட்டிருக்கும் கருவியா? மொழி மனிதனை அடையாளம் செய்யும் மிகப்பெரிய பண்பா? இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லும் அளவுக்கு மனித உயிர்களில் மொழியின் தாக்கம் அளப்பரியது.

மொழி இவ்வுலகில் ஒழுக்கத்தைக் கொண்டு வந்தது, நாகரீகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு மகத்தானது, மொழி இலக்கியங்களைப் படைத்தது, ஒரு தனி மனிதனின் புலன்களை இன்னொருவருக்குக் கடத்தும் மிக முக்கியமான கருவியாக மொழி மாற்றம் பெற்றிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்கிறோம், இலக்கியம் எப்படி வரலாற்றைச் சுமந்து செல்லும் ஒரு ஊர்தியாக இருக்கிறதோ அதே போல மொழி மனித உணர்வுகளைக் கடத்திச் செல்லும் ஊர்தியாக இருக்கிறது.

மொழியால் அன்பு செலுத்தவும், சக மனித உயிர்களைப் பற்றிய குறிப்புகளையும் அறிந்து கொள்ள முடியுமே தவிர மொழியால் வெறுக்கவும், மொழியால் மனித உயிர்களைத் துண்டாடவும் இயலாது, அப்படி நிகழுமேயானால் மொழியின் அடிப்படை நோக்கம் சிதைந்து போய் விடும், குறிப்பாகத் தாய்மொழியின் சிறப்பு சக மனிதனின் இலக்கியங்களை அறிவதன் மூலம் அவனுக்கு மிக நெருக்கத்தில் நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது, தாய்மொழி ஒரு மனிதனைக் குறுக்கி அவனை தேங்க வைப்பதில் நிறைவு பெறுவதில்லை மாறாக இப்பேரண்டத்தின் ஒரு சிறு பகுதியாக அவனை உணர வைக்கிறது.

வெகு நுட்பமாகத் தாய் மொழியின் சிறப்பையும், அதன் நோக்கத்தையும் ஒருவன் உணரத் துவங்கும் போது தான் அவன் இந்த மனித குலத்தின் பொது மனிதனாகப் பரிணாமம் அடைகிறான், தனது மொழியை நேசிப்பவனால் வேறெந்த மொழியையும் வெறுக்க இயலாது, தனது மொழியின் நுட்பங்களை உணந்தவனால் மட்டுமே மனித மனத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் திறனைப் பெற முடிகிறது.

நான் எனது மொழியை நேசிக்கிறேன், எனது மொழியின் நுட்பங்களின் வழியாகவே நான் இவ்வுலகம் குறித்த தரிசனங்களைப் பெற்றுக் கொள்கிறேன், எனது மொழியின் வழியாகவே உலகெங்கும் வாழ்கிற சக மனிதனின் எண்ணங்களைப் புரிந்து கொள்கிறேன், அவர்களுக்கு விடையளிக்கிறேன், அவர்களின் துன்பங்களுக்கான காரணங்களைக் கண்டறிகிறேன், ஆகவே நான் எங்கு வாழ்ந்தாலும் எனது மொழிக்கும் எனது மக்களுக்கும் மிக நெருக்கமானவனாகவே என்னை உணர்கிறேன்.

அப்படித்தான் இவ்வுலகில் வாழ்வதற்காக வெவ்வேறு இடங்களுக்குத் துரத்தப்படும் ஒவ்வொரு மனிதனும் உணர்கிறான், கனடாவில் இருந்து கொண்டு “என் மக்களே, என் மொழியே, என் மண்ணே” என்று ஓலமிடுகிற மனிதனும், உள்ளூரில் இருந்து பக்கத்துக் குடிசை மனிதனின் வலிகளைத் துடைக்கிற மனிதனும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவன் தான், இவர்கள் இருவரின் உடலுக்கும் இடையில் இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்புகிற அற்புதக் கருவிதான் அவர்களுடைய தாய்மொழி.

இவ்வுலகின் எல்லா இடங்களிலும் சக மனிதனின் உழைப்பும், குருதியுமே கொட்டிக் கிடக்கிறது, இப்பூவுலகம் முழுவதும் மனிதர்கள் உலவித் திரியும் உழைப்புக் காடாகவே நான் உணர்கிறேன், புவிப்பந்தின் எந்த மூலைக்குச் செல்ல நேரிட்டாலும் அங்கு வாழும் சக மனிதனின் வலிகளை அறிந்து கொள்ளும் இன்னொரு மனிதனாகவே நான் இருக்க விரும்புகிறேன்.

மொழிகளைக் கடந்து, எல்லைகளைக் கடந்து, இனங்கள், சாதிகள், மதங்கள் அனைத்தையும் கடந்து என்னால் இந்த மனித குலத்தின் ஒரு சிறு துண்டாக உணர முடிகிற மிகப்பெரிய வரத்தை எனக்கு வழங்கியது எனது தாய்மொழி, அதற்காகவே அந்தக் கருவியை எனக்குக் கிடைத்த எல்லாக் கருவிகளையும் விடச் சிறந்த ஒன்றாகக் கொண்டாட என்னால் முடிகிறது.

உலகின் எந்த மூலையில் வாழ்ந்திருப்பினும் அதனால் தான் எனது தாய்மொழியின் புதிய படைப்புகளை, பழைய இலக்கியங்களைத் துரத்தி ஓட முடிகிறது, எனது மொழியின் மூலமே எனது வெளிப்பாடுகள் வெளிவரத் துவங்கும் போது என் மண்ணின் மீதே வாழ்ந்து கிடக்கிற ஒரு ஒப்பற்ற உணர்வை நான் பெற்றுக் கொள்கிறேன்.

இது ஒரு வகையில் இது சுயநலம் கலந்ததும் கூட, ஏனெனில் முதலில் எனது தனிமையை, எனது துரத்தல்களை, எனது இடம் பெயர்தலை எல்லாம் என்னில் இருந்து ஆற்றுப் படுத்தும் ஒரு மருந்தாகவும் என் மொழி எனக்குப் பயன்படுகிறது. ஆகவே எனது தாய்மொழியைப் பேசுகிற எனது மக்களுக்கு, அவர்களின் உழைப்பில் உரமிடப்பட்ட எனது அறிவும் (கல்வி), திறனும் ஒரு போதும் தீங்கிழைப்பதில்லை.

நான் அவர்கள் உழுது பயிரிடுகிற நிலங்களில் என் எழுத்துக்களால், என் மொழியால் நிரம்பிக் கிடக்கிறேன், எனது உடல் அதன் தனியான தேவைகளுக்காக ஓரிடத்தில் நிலை பெற்றிருந்தாலும் நிலத்தால், நீரால், காற்றால் மனிதர்களின் வழியாக ஒரு நிலப்பரப்பைப் போலவே நான் அவர்களோடு இணைக்கப்பட்டிருக்கிறேன், அந்த இணைப்பு உயிர்களின் இணைப்பைப் போலவே இயற்கையானது.

இறுதியாக நண்பர் மயில் ஜீவன் அவர்களுக்கு நிலவியல் சார்ந்த சில செய்திகளைச் சொல்ல வேண்டும், கன்னட மொழியைப் பேசுகிற உழைக்கும் மக்களோ அல்லது எளிய விவசாயியோ ஒருபோதும் தமிழையும், தமிழர்களையும் வெறுக்கவில்லை, மாறாக அவர்களது பெயரில் செய்யப்படுகிற அரசியல் அப்படியான ஒரு காழ்ப்புணர்வை நம்மீது அள்ளித் தெளித்திருக்கிறது, தங்களுடைய அரசியல் படி நிலைகளுக்காக அங்கிருக்கும் எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்பட்டிருக்கிறது. உலகெங்கும் அப்படித்தான் நிகழ்கிறது.

back_to_home____by_Alcove

ஒரு சமூகத்தின் அரசியல் அந்த மொழியோடு தொடர்புடையது, சமூக ஒழுக்கங்களை, சமூக ஏற்ற தாழ்வுகளை எல்லாம் இட்டு நிரப்புகிற குறியீடாக அந்தச் சமூகத்தின் மொழி காலம் காலமாய் அவர்களோடு வளர்கிறது, அறனும், அன்பும் கற்றுக் கொடுக்காத எந்தச் சமூகத்தின் அரசியலும், அந்த சமூகத்தின் மொழியால் உரமிடப்பட்டு வளர்க்கப்பட்டதே,

இறுதியாக, இன்னும் வேற்றுக் கிரகங்களுக்குப் போய் வாழும் வாய்ப்புக் கிடைத்தாலும் என்னை ஒரு தமிழன் என்று அறிமுகம் செய்து கொள்வதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. எனது தாய்மொழியை நோக்கி என்னை அழைத்துச் செல்லும் பாதையே, இப்பேரண்டத்தின் எல்லா மொழிகளுக்கும் எல்லா மனிதர்களுக்கும், மிக நெருக்கமாக என்னை அழைத்துச் செல்லும் பாதை.

**************

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 7, 2011

“சூர்ப்பணங்கு” – குறி அறுக்கும் கலை வீச்சு.

legring

மூன்று நாட்களுக்கு முன்னர் மாலையில் ஒரு இளைஞர் அழைத்தார், அண்ணா, பெங்களூரில் தமிழ் நாடகமொன்றை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம், “சூர்ப்பணங்கு” என்ற பெயரில் முருகபூபதியின் இயக்கத்தில் தயாராகி இருக்கிற இந்த நாடகம் முதன் முறையாக பெங்களூரில் நிகழ்த்தப்படுவதால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார், இதுகுறித்து நாம் இயன்றால் நாளை மாலையில் சந்தித்துப் பேசலாம் என்றும் சொன்னார்.

“சரி தம்பி, நாடகம் குறித்த தகவல்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்” என்று சொல்லி விட்டு அமைதியானேன், அன்று இரவே முரளி மனோகரின் "கர்ண மோட்சம்" குறும்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன், ஆர்வமின்மையோடு அருகில் அமர்ந்து பார்க்கத் துவங்கிய நிறைமொழி கண் சிமிட்டாமல் அந்தப் பதினைந்து நிமிடக் குறும்படத்தைப் பார்த்து முடித்து விட்டே அங்கிருந்து நகர்ந்தாள். நிகழ்த்துக் கலைகளின் ஒப்பனைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே அதனை என்னால் உணர முடிந்தது.

மறுநாள் நண்பகலில் “ரவீந்திர கலாசேத்ரா” சென்று நண்பர்களைச் சந்தித்தேன், “ஆரங்கள்” என்கிற இலக்கிய வாசிப்பு இயக்கத்தில் இருக்கும் “தோழர் சீனிவாசன்”, “தம்பி திருஜி”, “ஹாலுக்குறிச்சி” என்கிற கன்னட நாடக அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் “தோழர் சிவசங்கர்” ஆகிய மூவரும் தீவிரமாக இதற்காக இயங்கிக் கொண்டிருப்பது அவர்களின் முகத்தில் தேங்கி இருந்த வியர்வைத் துளிகளில் தெரிந்தது.

“ஆரங்கள் சீனிவாசன்” மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், பரமக்குடி ஒடுக்கப்பட்ட மக்களின் படுகொலை நிகழ்வு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சூர்ப்பணங்கு நாடகம் குறித்த சில தகவல்களை மிகச் சுருக்கமாக என்னிடம் எடுத்துரைத்தார்.

அவருடைய ஆழ்ந்த அமைதியும், கூரிய பார்வையும் அவர் பேச்சை விடச் செயலில் அதிக ஆர்வம் காட்டும் மனிதர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. நான் எனக்கான குடும்ப நுழைவுச் சீட்டுக்களையும், நண்பர்களுக்கான தனி நுழைவுச் சீட்டுக்கள் ஆறையும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு விடைபெற்றேன்.

SDC13474

நவீன மேடை நாடகங்கள் இன்று பெருமளவில் எல்லா இந்திய மொழிகளிலும் நிகழ்த்தப்படுகின்றன, தமிழை விடக் கன்னடத்தில் இத்தகைய முயற்சிகள் பெரிய அளவில் வரவேற்புப் பெறுகின்றன, மேலும் முன்னணிக் கன்னடத் திரைப்பட நடிகர்கள் கூட இத்தகைய மேடை நாடகங்களில் பங்கு பெறுவதை ஒரு மதிப்புக்குரிய செயலாகக் கருதுகிறார்கள், சென்னையை விடவும் பெங்களூர், பண்பாட்டு வழியான நிகழ்த்துக் கலைகளையும், நவீன நிகழ்த்துக் கலைகளையும் மிகுந்த மதிப்போடு நடத்துகிறது.

நவீன மேடை நாடகங்கள் பெரும்பாலும் ஒலி, ஒளிக் குறியீடுகளாலும், காட்சிப் படிமங்களாலும் நிகழ்த்தப்படுபவை, தொடர்ச்சியான உரையாடலோ வழக்கமான காட்சிகளோ அவற்றில் இடம் பெறாது, அவற்றைச் சரியாக உணர்ந்து கொள்ளக் கொஞ்சம் பார்வைத் திறனும், கொஞ்சம் சமூக அக்கறையும் இருந்தால் போதுமானது.

சிலர் சொல்வதைப் போல “நவீன நாடகங்கள் சரியாகப் புரிந்து கொள்ள இயலாதவை” என்கிற குற்றச்சாட்டு அவர்களின் மனநிலையில் உருவாக்கப்பட்டிருக்கும் காட்சி ஊடகத் தாக்கங்களின் எதிர்மறை உணர்வு தான் என்பதை ஒருமுறை நவீன மேடை நாடகத்தைப் பார்ப்பவரால் உணர்ந்து கொள்ள முடியும்.

திரைப்படம் என்கிற பொழுதுபோக்கு ஊடகமும் நிகழ்த்துக் கலையாகிய மேடை நாடகத்தின் ஒரு மேம்படுத்தப்பட்ட தொகுதி தான், திரைப்படங்களின் தாயாகிய மேடை நிகழ்த்துக் கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

சூர்ப்பணங்கு மேடையில் நிகழ்த்தப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகத் தம்பி திருஜியைத் தொடர்பு கொண்டு “அரங்கின் இருக்கைகள் எத்தனை?, எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?” என்று ஆர்வமாகக் கேட்டேன், “அண்ணா, அரங்கின் இருக்கைகள் அறுநூற்று ஐம்பது” என்றும், ஏறத்தாழ நூற்றைம்பது பேர் வந்திருப்பதாகவும் கொஞ்சம் தொய்வாகச் சொன்னார்.

நூற்றைம்பது என்பது அவர்களின் மனநிலையை, உழைப்பைக் குலைக்கிற எண்ணிக்கை என்ற கவலையோடு அரங்கை அடைந்த போது மிகப்பெரும் வியப்பு காத்திருந்தது, ஏறத்தாழ அரங்கம் நிரம்பி இருந்தது, பெரும்பாலும் இளைஞர்கள், அதிக எண்ணிக்கையில் குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் என்று விழிகள் விரிய எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். தொலைவில் இருந்து பாய்ச்சப்படுகிற விளக்கொளியில் மேடை ஒரு அழகிய காட்சிப் பொருளாய் நிலைத்திருந்தது.

நாடகத்தின் மையப் பொருள் உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மெல்லிய இழையாய் நிகழ்த்துக் கலை மூலம் விளக்குவதும், நீதி கேட்பதும் தான். இன்றைய நவீன உலகில் பெண்ணின் உடல் மற்றுமொரு முதலாளித்துவப் பண்டமாய் மாற்றப்பட்டிருக்கிறது, பொருட்களை விற்கவும், வாங்கவும் பெண்களின் உடல் காட்சிப் படுத்தப்படுகிறது.

DSC_4001

பெண் தனக்கான வாழ்க்கையை வாழ இவ்வுலகில் இன்று வரையில் மறுக்கப்படுகிறது, ஏனைய மனிதர்களின் வாழ்க்கையை வாழும்படியோ, ஏனைய மனிதர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கத் தன்னால் ஆன தியாகங்களைச் செய்யும்படியோ பெண்களை ஆண்களால் ஆளப்படுகிற இவ்வுலகம் தொடர்ந்து வற்புறுத்துகிறது.

பெண்ணின் உடல் ஒரு உணவுப் பண்டத்தைப் போல நுகரப்பட்டு உமிழப்படுகிறது, பெண்களின் உடல் சேவைகளைச் செய்யப் படைக்கப்பட்டிருக்கும் ஒரு பருப்பொருளைப் போலவே நோக்கப்படுகிறது, ஒரு நீரோடையைப் போல நகர வேண்டிய பெண்ணுடலின் ஆசைகளை பல்வேறு குறியீடுகளின் மூலம் ஒடுக்கித் தேங்கிய குட்டையைப் போல மாற்றி வைத்திருப்பதில் நம் அனைவருக்கும் அளப்பரிய பங்கிருக்கிறது,

சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிற இந்தப் பெண்களுக்கு எதிரான மனநிலை சிறிய அளவில் ஒரு குற்ற உணர்வாகக் கூட நம்மிடம் காணப்படுவதில்லை, படுக்கை உட்பட நாம் எடுத்து எறிகிற ஒவ்வொரு பொருளும் அவற்றுக்கான இடங்களில் நிலைத்திருக்கும் பணியை எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லாமல் பெண்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், இத்தகைய சூழலில் குடும்பங்களின் உணவுத் தேவைகள், குடிநீர்த் தேவைகள் மட்டுமன்றி உடைகளின் ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு பெண்ணின் கைரேகை படிந்து கிடப்பதை வெகு நுட்பமாக சூர்ப்பணங்கு உணர்த்துகிறாள்.

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆணாகக் குற்ற உணர்வு பீறிடுவதைத் தடுக்க இயலவில்லை, நகர வாழ்க்கையில் கொஞ்சமாய் வண்ணங்கள் பூசப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் பெண் உடலுக்கு எதிரான இந்த சமூக மனநிலை ஊரகப் பகுதிகளில் எந்த வண்ணங்களும் இன்றி நிலைத்த உண்மையாகச் சுடுகிறது, போரில், சமூக அரசியல் இயக்கங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் அவமானங்கள், புராணங்களில் வெட்டி எறியப்படும் சூர்ப்பனகையின் மூக்கைப் போல நம் கண்களில் காட்சியாய் நெருடுகிறது, மேடையெங்கும் பெண்ணின் உடலை வெட்டி குருதி பொங்க வீசி எறிகிறார்கள் பங்கு பெற்ற நடிகர்களும், அதன் இயக்குனரும்.

பெண்களின் கண்ணீரைப் போல அரங்கின் மேலிருந்து வெவ்வேறு அளவுகளில் ஒளி வழிந்து கொண்டே இருக்கிறது, சுற்றிலும் கட்டப்பட்டிருக்கும் மதில் சுவரைப் போல ஆண்மையைப் பெண்கள் உணர்வதை வெகு நேர்த்தியாகவும், உறுத்தல்கள் இன்றியும் இயக்குனர் முருகபூபதி கையாண்டிருப்பது அவருக்கு உண்மையிலேயே பெண்களின் விடுதலை குறித்த பெரிய அளவிலான தாக்கம் இருப்பதை பார்வையாளனுக்கு உணர்த்துகிறது.

298790_1791829295015_1818137511_1173825_1051262563_n

பெண்ணின் உடலைச் சுற்றிப் பல்வேறு குறியீடுகளை நட்டு வைத்திருக்கும் மனித குலம், அந்தக் குறியீடுகளை நீக்காதவரை நாகரீக காலத்தில் நடமாடுவதாகச் சொல்வது மிகப்பெரிய பொய், பெண் நடந்து வருகிற ஓசையை அறிந்து கொள்வதற்கும், கணக்கிடுவதற்கும் கூடக் கொலுசுகளைக் கட்டி வைத்திருக்கும் இந்திய சமூகம், நிரந்தரமாய் அவளைத் தான் ஒரு அடிமை என்று உணர வைப்பதற்காய்த் தாலிகளைக் கண்டறிந்தது.

நெற்றியில் இடப்படுகிற பொட்டின் வண்ணங்களில் இருந்து அளவுகள் வரையில் வெவ்வேறு அடிமைத்தளைக் குறிப்புகளை இட்டு வைத்திருக்கும் இந்த உலகம், பெண்ணுடலில் இடப்படும் ஒப்பனைப் பொருட்களில் கூட விடுதலையின் குறியீடுகளைத் தட்டிப் பறித்தது.பெயர்களைத் தாண்டி, இடங்களைத் தாண்டி உலகெங்கும் பெண்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதை நுட்பமான படிமங்களால் உணர்த்தும் "சூர்ப்பணங்கு" நாடக வரலாற்றில் வெகு வேகமாகக் காணாமல் போக வேண்டிய நிலையை உருவாக்குவது தான் நமக்கு முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.

நவீன நாடகங்களில் இசை வெறும் சடங்காக இல்லாமல் ஒரு பாத்திரமாக மாற்றப்படுவதில் தான் அந்தக் குறிப்பிட்ட நாடகத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது என்பதற்கு சூர்ப்பணங்கு ஒரு நேரலை சாட்சி, பல்வேறு நாட்டுப்புற இசைக்கருவிகளின் ஓலம் நாடகம் முழுவதும் நமது குற்ற உணர்வின் எல்லையை விரிவு படுத்திக் கொண்டே ஒரு தென்றலைப் போலத் துவங்கி புயலாய் ஒட்டு மொத்த வளிமண்டல அழுத்தமாய் இதயத்தின் புறச்சுவற்றைக் கீறிக் காயம் செய்கிறது.

164817_1375804734661_1818137511_694197_1307873_n

உலகெங்கும் இடைவிடாது ஒலிக்கும் பெண்களின் ஓலத்தை சிற்சில இசைக் கருவிகளில் அடைத்து வந்து பார்வையாளனின் காதுகளுக்குள் ஒரு நாகப்பாம்பின் பிளவுற்ற நாவுகளைச் செருகி வதை செய்வது உன்னதமான ஒரு நிகழ்வு. ஆண்களின் உலகில் விழுதுகளைப் போலவும், தூண்களைப் போலவும் நிலைத்திருக்கும் சமநீதிக்கு எதிரான குறிகளாய் மண்டிக் கிடக்கும் அடையாளங்களைக் கலை என்கிற வெகு நுட்பமான கருவியின் மூலம் சூர்ப்பணங்கு வெட்டி எறிகிறாள், வெட்டுப்பட்ட காயத்தில் இருந்து கொப்பளித்து வெளிக்கிளம்பும் ஒவ்வொரு ஆணின் ஆற்றாமையும், குற்ற உணர்வும் புற உலகின் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது என்பது தான் இந்த நிகழ்த்துக் கலை வடிவத்தின் தனிச் சிறப்பு.

நாடகம் முடிந்தும் சொல்லவும் உணரவும் முடியாத கயிற்றால் பிணைக்கப்பட்டு செவ்வண்ண மேலாடையும், வெள்ளை வண்ணக் கீழாடையும் அணிந்திருக்கும் பெண்ணின் உடல் "எனக்கான நீதியைக் கொடு, எனக்கான வாழ்க்கையை எனக்குத் திருப்பிக் கொடு" என்று ஓலமிட்டபடி கூடவே வருகிறது. சூர்ப்பணங்கு உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான நவீன நாடகம்.

***************

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 4, 2011

பெருநீரின் கிளை நதிகள்……..

8979_hi_res_picture_1

உயிர் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் சாவின் அலைகள் இடைவிடாது புரண்டு கொண்டே இருக்கின்றன, சாவு என்கிற தவிர்க்கவே முடியாத முதலாளியிடம் மருத்துவ ஒப்பந்தங்களைச் செய்தபடி மனிதன் வாழ்நாட்களை நீட்டித்துக் கொள்கிறான், சாவு ஒரு வகையில் நிரந்தர அமைதியை உயிர்களுக்கு வழங்கி விடுகிறது, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் பயணத்தைப் போல மரணம் மனிதனைத் துரத்துகிறது, வளைந்தும், நெளிந்தும் கண்களை மூடியும் மனிதன் அதிலிருந்து தப்பி விடலாம் என்று ஓடிப் பார்க்கிறான், ஆயினும் இறுதியில் ஒருநாள் அம்பு தனது இலக்கை அடைந்து விடுகிறது. சாவு ஒரு கிரியா ஊக்கியாக இவ்வுலகின் இயக்கத்தை நிகழ்த்திப் பார்க்கிறது, உயிர்களின் துன்பங்களுக்கான காரணிகளைத் தேடி இலக்கியங்களைப் படைக்கிறது, அன்பு, காதல், இருத்தலுக்கான போராட்டம், உறவுகள், வீடு, நிலம், விவசாயம், நாகரீகம், மருத்துவம் என்று பல்வேறு துணை நதிகளை உருவாக்கியபடி வற்றாத நதியாய் சளைக்காமல் சாவு ஓடிக் கொண்டே இருக்கிறது.

கடந்த வாரத்தில் வழக்கமான ஒருநாள் அலுவலக மாலை, தொலைபேசி ஒலிக்கிறது, மறுமுனையில் பதட்டமாய் தொழிற்சாலைப் பணியாளர் ஒருவர் "ஐயா, கட்டுமானப் பணிகளின் போது ஒரு சுவர் இடிந்து மூன்று மனிதர்களின் மீது விழுந்து விட்டது. ஒருவர் கவலைக்கிடமாய் இருக்கிறார், இன்னுமிருவருக்குக் பலத்த காயங்கள், என்ன செய்ய???" என்கிறார், "உடனடியாக அங்கிருக்கும் பொறியாளரின் மகிழுந்தை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு மருத்துவமனை செல்லுங்கள்" என்று சொல்லி விட்டு என்னுடைய உயர் அலுவலரிடம் சென்று "இது போல ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது" என்று நிலவரத்தைச் சொன்னேன். மும்பை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவரும் பேசினார், உங்களைப் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி என்னை இருக்கைக்குப் போகச் சொன்னார்.

நான் திரும்ப இருக்கைக்கு வந்த பிறகு தொழிற்சாலை மேலாளரை அழைத்தேன், "ஐயா நான் பிறகு பேசுகிறேன்" என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் அவர். என்னுடைய உயர் அலுவலர் சிறிது நேரம் கழித்து என்னைத் தொடர்பு கொண்டார், "காயமடைந்தவர்கள் அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், நமது நிறுவனத்துக்கும் அவர்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை, ஒப்பந்த நிறுவனத்தை அழைத்து விவரங்களைச் சொல்லிப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று சொன்னார். நான் மீண்டும் அவருடைய அறைக்குள் சென்று "ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயினும் அவர்கள் நமது நிறுவனத்தின் இடத்திலே வேலை செய்கிறார்கள், ஒப்பந்த நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் யாரும் அங்கே இருப்பதில்லை என்பதால், நாம் யாராவது அங்கு செல்வது மிக முக்கியமானது" என்றேன், "நீங்கள் சொல்வதும் சரியானதுதான், அப்படியானால் நீங்களே சென்று வாருங்கள்" என்று சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாராகி விட்டார்.

அலுவலக மகிழுந்தில் ஏறி அமர்ந்து மீண்டும் ஒருமுறை தொழிற்சாலை மேலாளரைத் தொடர்பு கொண்டேன், "மிகவும் சன்னமான குரலில், ஐயா, ஒருவர் இறந்து விட்டார்", நகரத்தின் காற்று மண்டலத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் புகையைப் போல எனக்குள் கவலை படியத் துவங்கியது, "எப்படி நிகழ்ந்தது இந்த விபத்து?, இறந்தவருக்கு என்ன வயது?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு மேலாளரிடம் " நான் வரும் வரைக்கும் அருகிலேயே இருங்கள், காயம்பட்டவர்களின் உடல் நிலையை மருத்துவர்களிடம் அறிந்து கொண்டு உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்றேன்.

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அடர்த்தியாய் அலைந்து திரிகிற காற்றைக் கிழித்துக் கொண்டு மகிழுந்து பயணிக்கும் போது மனம் அமைதியிழந்து தவிக்கிறது, நம்மைப் போலவே காலையில் வேலைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு தானே அந்த மனிதனும் வந்திருப்பான், அவனுடைய வாழ்க்கை வேலையிலேயே முடிந்து போனதாக அவனது பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் சபிக்கப்பட்ட சொற்களால் தெரிவிக்க வேண்டுமே, அந்த நிமிடங்கள் தான் எத்தனை கொடுமையானது, அவனது உயிர் இயக்கங்களை நிறுத்திக் கொண்டு இந்தப் பேரண்டத்தின் பருப் பொருட்களில் ஒன்றாக மாறிப் போனான் என்று முத்தம் கேட்கிற குழந்தைகளுக்கும், அவனது குடும்ப உறுப்பினர்களுக்கும் யார் சொல்வது, அலறித் துடிக்கப்போகிற அவனது மனைவியை எந்தக் கைகள் ஆறுதல் செய்யும், நெஞ்செங்கும் முகம் தெரியாத அந்த மனிதனின் உலகம் படர்ந்து கிடக்கிறது, வழக்கமான தங்களின் சிந்தனைகளோடு அவர் அவருக்கான பயணம் நெடுஞ்சாலையில் தொடர்ந்து நீண்டு கிடக்கிறது.

மருத்துவமனை வாயிலில் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட மகிழுந்து கவலைகளும், உணர்வுகளும் இல்லாமல் காற்றோடு உரையாடத் துவங்குகிறது, காயங்களோடு படுத்திருக்கும் மனிதர்களை அவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கவலை அடைய வேண்டாம், உங்களுக்கான எல்லா மருத்துவ உதவிகளையும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்கிற உறுதி மொழியைக் கொடுத்து விட்டு அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரை அவரது அறையில் சென்று சந்தித்தபோது இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகமாகக் காயமடைந்தவரின் மேல் மருத்துவத்தை இங்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையும், இன்னும் பெரிய மருத்துவமனை ஒன்றுக்கு அவரை உடனடியாக மாற்றுவது நல்லது என்றும் மருத்துவர் என்னிடம் சொன்னார்.

உடனடியாக ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியை அலைபேசியில் அழைத்து தகவலைக் கொஞ்சம் கடுமையான தொனியில் சொன்னபோது அவர் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாதவர் போலக் கொஞ்சம் தயங்கிப் பின் ஒப்புக் கொண்டார். அதே இரவில் காயம்பட்ட மனிதரை வேறொரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பும் போது "அவரிடம் அருகில் சென்று இப்படி முணுமுணுத்தேன், "நம்பிக்கையோடிருங்கள், உங்களுக்கு எதுவும் நிகழாது" சிரிக்க முயன்றபடி அவசரகால ஊர்தியில் ஏறிப் புறப்பட்டார் அந்த மனிதர், கூடவே ஒரு ஒப்பந்தப் பொறியாளரும் பயணிக்க, நான் இப்போது இறந்து போன மனிதனைச் சந்திக்க வேண்டும்.

modern-artists

இவ்வுலகில் மிகக் கடுமையான சவால் இறந்து போன மனிதனின் முகத்தைக் காண்பது தான், ஏனெனில் இறந்து போன மனிதனின் முகம் தான் வாழ்வில் கடைசியும் பெரிதுமான உண்மை, அந்த உண்மையை எதிர் கொள்வது தான் உயிருள்ள எந்த மனிதனுக்கும் மிகக் கடுமையானது. இறந்து போன மனிதன் எந்தச் சலனமும் இல்லாமல் நம்மெதிரே படுத்திருக்கும் போது நமது உயிர் இயக்கம் எல்லாச் சலனங்களையும் கண்டடைகிறது, குழப்பத்தில் ஆழ்கிறது, நடுங்கியபடி தற்காலிகமாக எண்ணங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துடிக்கிறது, ஆயினும் நான் இந்த நீண்ட இரவில் எப்போதாவது அந்த இறந்த மனிதனின் முகத்தைச் சந்தித்தே ஆக வேண்டும், என்னை நானே தயார் செய்து கொண்டு அங்கிருந்த மருத்துவரிடம் "ஐயா, நான் இறந்து போன மனிதனைப் பார்க்க வேண்டும்" என்றேன். வாயிலில் நின்று கொண்டிருந்த ஒரு பணியாளரை அழைத்து என்னைக் கூட்டிப் போய் மார்ச்சுவரி என்றழைக்கப்படும் பிணவறையில் விடுமாறு சொல்லி விட்டு அமைதியானார்.

அறைக்குள் சென்று கொஞ்சம் தயங்கிய கால்களை இழுத்து அழைத்துக் கொண்டு அந்த மனிதன் கிடத்தப்பட்டிருந்த மேசைக்கு எதிரே நின்ற போது எந்த அசைவுகளும் உணர்வுகளும் இன்றி இறுதி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் கோவிந்தப்பா என்கிற அந்த இருபத்தாறு வயதே நிரம்பிய இளைஞன். அவனது கண்கள் கடைசியாய்ச் சந்தித்த காட்சியின் வெளியில் நிலைத்திருந்தது, அவனது வாய் கடைசிச் சொல்லின் உச்சரிப்பை இன்னும் மிச்சம் வைத்திருந்தது, அவனது முகத்தை உற்றுப் பார்க்கத் துவங்கிய போது அச்சம் நீங்கி ஆறுதலும், பரிதாபமும் பெருகியது, இறந்த மனிதர்களைக் கண்டு நாம் ஏன் அஞ்சி நடுங்குகிறோம் என்கிற கேள்வி அந்த நேரத்திற்குப் பொருந்தி இருக்காவிட்டாலும் எனக்குள் மிகப்பெரியதாக எழுந்து நின்றது. எதிர்பாராத மரணத்தைச் சந்தித்த இந்த மனிதனின் இழப்பை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும் என்று பெருமூச்செறிந்தபடி அந்த இடத்தை விட்டு நகரத் துவங்கினேன்.

வெளி வாசலில் மருத்துவரும், காவல்துறை அலுவலர் ஒருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், அவரைச் சுற்றி உறவினர்களும், ஊர்ப் பெரியவர்கள் சிலரும் நின்று கொண்டிருக்க மருத்துவர் என்னருகில் வந்து என்னை அந்தக் காவல்துறை அலுவலருக்கு அறிமுகம் செய்து விட்டு இப்படிச் சொன்னார், ஐயா, இரவிலேயே "போஸ்ட் மோர்டேம்" எனப்படும் பரிசோதனை நிகழ்த்தப்பட வேண்டும், ஊர்தி தயாராக இருக்கிறது, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று சொன்னார், இரவோடு இரவாக அந்த இறந்த மனிதனின் உடலைக் கடத்தி விட வேண்டும் என்பதில் தனியார் மருத்துவமனை உறுதியாக இருக்கிறது.

ஊர்தியில் ஏற்றப்பட்ட கோவிந்தப்பாவின் உடலோடு பயணிக்க அவரது தாயார் மட்டுமே அங்கே இருந்தார், இறந்து போன தனது மகனின் முகத்தை வழிகிற கண்ணீரோடு சேலைத் தலைப்பின் முனைகளின் ஊடாகத் தனிமையில் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தாயைப் பார்க்கச் சகிக்காமல், நானும் அந்த ஊர்தியின் பின்புறத்தில் ஏறிக் கொண்டேன், கோவிந்தப்பா என்கிற அந்த இளைஞனுடன் கடைசியாகப் பயணம் செய்கிற வாய்ப்பு எனக்கும் அவனது தாய்க்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அந்தப் பயணத்தில் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

அரசு மருத்துவமனையின் பிணக் கிடங்கும், இறந்த உடலை ஆய்வு செய்யும் அறையும் அருகருகில் இருந்தன, அரக்கு உடையணிந்த இரண்டு பணியாளர்கள் ஒரு தூக்குப் பலகையை எடுத்து வந்து கோவிந்தப்பாவின் உடலை உள்ளே எடுத்துச் சென்றார்கள், "சிமெண்ட்" மேடை ஒன்றில் கிடத்தி உடைகளைக் களையத் துவங்கியவர்களில் ஒருவர் என்னைப் பார்த்து வெளியே இருக்கும் படி சைகை காட்டினார். நான் வெளியேற மனமின்றி அங்கேயே நின்றிருந்தேன், கொஞ்சம் இளையவராக இருந்த அந்தப் பணியாளர்களில் ஒருவர் கோவிந்தப்பா வின் உடலை பின்புறமாக அணைத்தபடி மேலே தூக்கி ஒரு முறை நிமிர்த்தினார், அப்போது அந்தப் பணியாளரின் முகத்தை உற்று நோக்கினேன் நான், ஏறத்தாழ கோவிந்தப்பாவின் முகத்தைப் போலவே எந்தச் சலனமும் இன்றி இருந்தது அவரது முகம்.

உடல் ஆய்வு செய்யும் அந்த இரவு நேர மருத்துவர், அப்போது தான் எழுந்து வந்தவர் போலிருந்தார், வரும் போதே எத்தனை உடல்கள் என்ற கேள்வியோடு வந்தார் அரசு மருத்துவர், அதற்கு மேலாக என்னை அங்கே நின்றிருக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், கதவு தாழிடப்பட்டது, உடைக்கப்படும் ஓசைகளும், நெகிழ்த்தப்படும் ஓசைகளும் நிறைந்து கிடக்கும் அந்த அறைக்கு வெகு தொலைவில் நான் துரத்தப்பட்டேன். என்னருகில் உயிருள்ள நிறைய உடல்கள் வெவ்வேறு பெயர்களில் நடமாடிக் கொண்டிருந்தன, ஒருவரைக் காவல்துறை உயர் அலுவலர் என்கிறார்கள், ஒருவரை மருத்துவர் என்கிறார்கள், ஒருவரை ஓட்டுனர் என்கிறார்கள், இன்னும் சிலரை லிங்காயத்துகள் என்றும், கௌடர்கள் எனவும் அடையாளம் செய்து கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள், எதிரில் இருக்கும் அறைக்குள் கிடத்தப்பட்டிருக்கிற எந்த மனிதருக்கும் அடையாளங்கள் இல்லை, அவை பிணங்கள் என்கிறார்கள், உடல் ஆய்வுக்கு வரும் எல்லா மனிதர்களின் உடலையும் ஒரே மாதிரியாகத்தான் மருத்துவர்கள் உடைத்தும் கீறியும் ஆய்வு செய்கிறார்கள்.

3d-chalk-art-waterfall-parking-lot-edgar-mueller

இரவு நீண்டு எங்களைக் கடந்து செல்வது போலிருக்கிறது விடியல் பறவைகளின் ஓசை, அவை இன்னொரு நாளை வரவேற்கத் தயாராகின்றன, வழக்கம் போலவே மனிதர்கள் தங்களுக்குள் எப்போதும் ஒளிந்திருக்கும் பிணத்தை மூடி மறைத்து ஆடைகளை அணிந்து கொள்வார்கள், அடையாளங்களை ஒப்பனைப் பொருட்களைப் போல அணிந்து கொண்டு இன்னொரு மனிதனை இவன் என்னை விடப் பிறப்பால் தாழ்ந்தவன் என்றும், உயர்ந்தவன் என்றும் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள், அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், மருத்துவமனைகளின் பிணவறைகளில் அவர்களின் எல்லா அடையாளங்களும் நீக்கம் பெற்று விடும் என்று………..

கோவிந்தப்பாவின் உடல் ஆய்வு முடிந்து நீல நிறத் துணியால் அவனைப் போர்த்தி எடுத்து வந்து மீண்டும் ஊர்தியில் கிடத்தும் போது அவ்விரண்டு பணியாளர்களும் களைத்திருந்தார்கள், அவர்களின் பணி இங்கே நின்று கொண்டிருக்கும் எல்லா மனிதர்களின் பணியை விடவும் மேன்மையானது போலவும், கடுமையானது போலவும் எனக்குத் தோன்றியது, ஏனென்றால் நாம் எப்போதாவது சந்திக்கும் இறந்த மனிதர்களின் முகத்தை அவர்கள் எப்போதும் எதிர் கொள்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு நகர்ந்து கொண்டேன் நான், ஊர்தி நகரத் துவங்கியது, இனி இறப்புக்கான எளிமையான சடங்குகள் சிலவற்றைச் செய்து கோவிந்தப்பாவின் வாழ்க்கை வரலாறு முற்றுப் பெறும். விடியத் துவங்கி இருக்கிறது, பிணவறையின் பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் பறவைகள் கிளைகளில் இருந்து பறப்பதும், பிறகு அமர்வதுமாய் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன, வானம் தெளிவானதாய் நீல நிறத்தில் மிளிரத் துவங்குகிறது, மருத்துவமனை படிக்கட்டுகளில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் அமர்ந்திருக்கிறாள், இன்னொரு உயிரை இந்த உலகுக்கு வழங்கத் தயாராக இருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் தாய்மையின் அன்பு நிரம்பிக் கிடக்கிறது, சிலவற்றை உண்டாக்கியபடியும், சிலவற்றை அழித்தபடியும் காலம் சாவு என்கிற மற்றொரு பெயரில் ஒரு பெருத்த நதியைப் போல ஓடிக் கொண்டே இருக்கிறது.

the-river-artwork

அலைபேசி ஒலிக்கிறது, மறுமுனையில் என்னுடைய உயர் அலுவலர், "நிறுவனம் இறந்த மனிதரின் மனைவிக்கு நிரந்தர வேலை கொடுக்கும், ஒப்பந்த நிறுவனம் இழப்பீட்டுத் தொகை கொடுக்கும்" என்றார். "அதெல்லாம் சரி ஐயா, அந்த மூன்று வயதுக் குழந்தைக்கு தந்தையை யார் கொடுப்பார்கள்?" என்று கேட்கத் தோன்றியது எனக்கு. தந்தை இல்லாத, தாய் இல்லாத குழந்தைகளும் கால நதியின் ஓட்டத்தில் சில கிளை நதிகள் போல……நாம் என்ன செய்வது……

**********

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 30, 2011

மணிமுடிக் கனவுகள்……

001

முதல் நாள் இரவின் கனவில் கூட நான் இந்தப் பயணம் மேற்கொள்வது குறித்து அறிந்திருக்கவில்லை, தம்பிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது, தம்பி மனைவிக்குச் சொந்த ஊர் கும்பகோணம், குடும்பத்தின் புதிய வரவைக் காண்பதற்காக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை விரைவுத் தொடர் வண்டியில் பயணித்து நேற்றுக் காலை ஆறு மணிக்கெல்லாம் கும்பகோணம் சென்றாகி விட்டது.

போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அரசலாற்றின் கிளை ஒன்றில் ஆடைகளற்ற சிறுவர்களோடு மனதை மயக்கும் நீண்ட குளியல், வழக்கமான அன்பு விசாரிப்புகள், அணைப்புகள், எளிய மனிதர்களின் பண்பட்ட விருந்தோம்பல் என்று காலை ஒன்பது மணி வரைக்கும் காலம் விரைந்தோடியது.

ஒன்பது முப்பதுக்கு ஒரு மனிதர் வந்தார், அவர் யாரென்று தெரியாது, உறவினர் என்பது மட்டும் தெரியும், ஒரு ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம், விடை பெறும் போது எப்போது கிளம்புகிறீர்கள் என்று கேட்டார், குறைந்தது இரண்டு நாட்கள் இருப்போம் என்ற ஆவலில் பக்கத்தில் இருக்கும் புகழ் பெற்ற வழிப்பாட்டிடங்கள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லிக் கொண்டே வந்தார், ஆர்வமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன், கடைசியில் “கங்கை கொண்ட சோழபுரம்” இங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டு விடைபெற்றார்.

022

அதுவரையில் இல்லாத ஆர்வமும், பொறியும் படக்கென்று நெஞ்செங்கும் ஒட்டிக் கொண்டு விட்டது, மனம் பரபரக்கத் துவங்கித் திட்டங்களைத் தன்னிச்சையாக இடத் துவங்கியது. பள்ளிக் காலங்களில் இருந்தே “கங்கை கொண்ட சோழபுரம்” என்ற அந்தப் பெயர் என் மனதை மயக்கும் ஒரு அதிசயமாக இருந்தது, கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுரத்தை எங்காவது புகைப்படத்தில் கண்டு விட்டால் ஏறத்தாழ ராஜேந்திர சோழன் உயிர் பெற்று என்னருகில் வந்து விடுவதைப் போலவே ஒரு பிரம்மாண்டத்தை எனக்குள் நானே கட்டமைத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கனவுலகில் காலடி பாதிக்கும் நாளுக்காய் எனது நினைவுச் செல்களில் சில எப்போதும் காத்திருந்தன.

இறுதியில் அந்தப் பயணம் துவங்கி விட்டது, கும்பகோணத்தில் இருந்து அணைக்கரைக்குப் பேருந்தில் பயணம் செய்து பிறகு அங்கிருந்து தனியார் பேருந்திலோ தானியிலோ பத்துக் கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்ற ஒரு உள்ளூர் ஓட்டுனரின் வழிகாட்டுதலைப் பற்றிக் கொண்டு அணைக்கரைப் பேருந்தில் அமர்ந்த போது மனம் சோழ மன்னர்களின் அளப்பரிய ஆதிக்கத்தை அசை போடத் துவங்கி இருந்தது.

ஏறத்தாழ தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் சோழர்களால் கட்டப்பட்ட கோவில்கள், மண்டபங்கள், அரண்மனைகள் என்று தங்களின் ஆட்சிக் காலத்தை அவர்கள் வரலாற்றில் நிலை நிறுத்திச் சென்றிருக்கிறார்கள், வேறெந்த மன்னர்களும் மிகப் பெரிய கட்டிடங்களைக் கட்டித் தங்கள் வெற்றியைப் பதிவு செய்யவில்லை அல்லது அத்தகைய வெற்றிகளைப் பெறவே இல்லை.

023ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலின் இன்னொரு மாதிரியைப் போலக் கட்டத் துவங்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை அவரது மகன் ராஜேந்திர சோழனால் கட்டி முடிக்க இயலவில்லை, அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, உண்மை ராஜேந்திர சோழனுக்கு மட்டுமே தெரியும் போலிருக்கிறது.

அணைக்கரை என்பது உண்மையிலேயே ஒரு அணையின் கரை என்பது அங்கு சென்ற போது தான் விளங்கியது, ஒரு அணையில் நீர் ததும்பிக் கொண்டிருக்க மற்றொரு அணையின் சீரமைப்புப் பணிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, பேருந்து குறித்த விவரங்களை அருகில் இருந்த கடையில் கேட்டபோது இரவு திரும்பிச் செல்வதற்கான தொடர்வண்டியின் பயணச் சீட்டு நினைவுக்கு வந்தது, ஒரு தானியைப் பிடித்துக் கொண்டு செல்வதே விரைவானதாகவும், எளிதானதாகவும் இருக்கும் என்று முடிவு செய்து தானியில் அமர்ந்தாயிற்று.

மற்றொரு அணையைக் கடக்க இயலாதபடி அதன் சீரமைப்புப் பணிகள் தடையாக இருக்கவே ஆற்றுக்குள் ஒரு தற்காலிகச் சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது, நீரால் சூழப்பட்டிருக்கும் தஞ்சையின் மண்வளம், பசுமையை வழியெங்கும் அள்ளித் தெளித்திருக்கிறது, சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் தானி பயணிக்கத் துவங்கி இருந்த போது தன்னிச்சையாகக் கண்கள் அந்த வரலாற்றுச் சின்னத்தின் உயர்தனி அடையாளத்தைத் தேடத் துவங்கியது.

மரங்களின் ஊடாக திடுக்கென்று தோன்றி மறைந்த மலைக்க வைக்கும் அந்த கோபுரத்தைக் கண்டபோது மனம் ஒரு பறவையைப் போல சிறகடிக்கத் துவங்கியது, ஆம், வாழ்க்கையின் நெடுநாளையக் கனவான ஒரு காட்சி இப்போது என் கண்களில் தோன்றுவதும், மறைவதுமாய்ப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது, நெடுஞ்சாலையில் இருந்து கிளைத்துப் பிரியும் கங்கை கொண்ட சோழபுரத்தின் நுழைவாயிலில் தானி இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போது எனது உயிரியக்கம் அதிகமாகத் துவங்கி இருந்தது,

011

"யுனெஸ்கோ" என்கிற உலகத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தால் உலகின் கட்டிடங்களில் ஒரு அதிசயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிற இந்த வரலாற்றுச் சின்னத்தை குறைந்த பட்சம் தமிழகத்தில் இருக்கும் நாமாவது ஒரு முறை பார்த்து விட வேண்டும், அழகிய புல்வெளிகளில் நமது வாழ்க்கைக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாமல் அப்படி ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதைக் காணும் போது வரலாற்று உணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும் யாரும் என்னைப் போலவே மலைத்துப் போய்க் கிடப்பார்கள்.

இறைவழிபாட்டிற்கு அப்பால் மிகப் பெரிய வெளியில் வழிந்து கிடக்கிற கட்டிடக் கலை நுட்பங்களும், அதன் பின்னால் இருக்கிற வரலாற்று நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் நிகழ்காலத்தில் இருந்து தூக்கி எறியப்படும் ஒரு துகளைப் போல நாம் மிதக்க நேரிடலாம்.

கட்டிடத்தின் பிரம்மாண்டம் ஒரு புறம் இருக்கட்டும், இதன் பிரம்மாண்டத்தை நிறுவுவதற்காக சோழ மன்னர்கள் கையாண்ட கட்டுமான யுத்திகள் மலைக்க வைப்பவை மட்டுமல்ல, எளிய உழைக்கும் மக்களின் உயிர் வாழ்க்கையை ஒரு பொருட்டாகவே கருதாத தினவும் நிறைந்தவை.

மிக உயரமான மண்மேடுகளை நிறுவி யானைகளைக் கொண்டும், குதிரைகளைக் கொண்டும் மிகப் பெரிய பாறைகளை மேலேற்றிச் செதுக்கும் முறையை இந்தக் கோவில்களைக் கட்டுவதற்கும், அரண்மனைகளைக் கட்டுவதற்கும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள், யானைகளும், குதிரைகளும் பற்றாக் குறையாகும் போது அவ்விடத்தில் மனிதர்களைப் பொருத்திப் பல உயிர்களை அழித்திருக்கிறார்கள்.

தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றியும், கங்கை கொண்ட சோழபுரத்தின் பெரிய கோவிலைச் சுற்றியும் அப்படியான அழிவு ஆரங்கள், அடையாளங்களாய் இன்னும் நிலைத்திருக்கின்றன, இடைப்பட்ட விவசாய நிலங்களைக் கோவில் நிலங்களாக அறிவித்த சோழ மன்னர்கள், அங்கிருந்த விவசாயிகளைத் துரத்தி அடித்தார்கள்.

032

ஒடுக்கப்பட்ட, எளிய மனிதன் அங்கேயும் போராடி இருக்கிறான், இத்தகைய நிலக் கையகப்படுத்தலை எதிர்த்துத் தஞ்சையைச் சுற்றி இருக்கும் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அரண்மனைக்கு எதிராகவோ குறிப்பிட்ட கோவில் வாசலிலோ தலையை அறுத்துக் கொண்டு போராடி இறந்திருக்கிறார்கள், மன்னராட்சியின் கொடுமைகளுக்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்ட அன்றைய விவசாயிக்கு அது ஒன்று தான் வழியாக இருந்திருக்கிறது.

ராஜ ராஜ சோழனுக்கும், அவனது மகன் ராஜேந்திர சோழனுக்கும் இடையில் ஒரு பனிப் போர் நிகழ்ந்து வந்ததாகச் சொல்கிறார்கள், தனது தந்தையை விடவும் ஒரு பிரம்மாண்டமான கோவிலை வடிவமைக்கும் பொருட்டே ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினான் என்று சில வரலாற்று ஆய்வாளர்களும், இல்லை, கங்கை வரையிலான தனது வெற்றியை வரலாற்றில் பொறிக்க வேண்டியே இந்த நகரத்தை ராஜேந்திர சோழன் வடிவமைத்தான் என்று இன்னும் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கங்கை கொண்ட சோழபுரத்தின் கோவில் கோபுரம் தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரத்தை விடவும் சிறியதாக இருப்பதால், தந்தையை விஞ்சி விட வேண்டும் என்கிற ராஜேந்திர சோழனின் கதை கொஞ்சம் தொய்வடைகிறது. கண்ணில் தென்படும் கோவிலைத் தவிர “கங்கை கொண்ட சோழபுரம்” சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகள் பலவற்றைத் தனக்குள் உள்ளடக்கி உறங்கிக் கிடக்கிறது, அரண்மனையின் மீள் தடங்கள், கட்டுமான எச்சங்கள் என்று ஏறத்தாழ பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பல்வேறு புதைந்த வரலாற்றுப் படிமங்கள் நிறைந்து கிடக்கிறது.

041

வெள்ளையர்களால் சிதைக்கப்பட்ட மதில் சுவர்கள் வெறும் கற்களாய் அணைகளைக் கட்டப் பயன்பட்டிருக்கிறது. ராஜராஜ சோழனுக்குப் பிறகு எல்லாச் சோழ மன்னர்களும் கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் பதவியேற்றுக் கொண்டார்கள் என்கிறது வரலாறு, கடற்படை, காலாட்படை, யானைப்படை, குதிரைப் படை என்று தெற்கு ஆசியாவின் பரந்த எல்லைகளை வெற்றி கொண்ட ஒரு மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகரம் இப்போது ஒரு கோவிலின் சிதிலங்களோடு ஒடுங்கிக் கிடக்கிறது.

ராஜேந்திர சோழனின் இந்த போர் வெறிக்கும், அடங்காத நில ஆளுகை ஆவலுக்கும் ஒரு நெடிய காரணம் இருக்கிறது, ராஜேந்திர சோழனின் தந்தை வழிப் பாட்டனாருக்குப் பாட்டனார் பராந்தகச் சோழன், பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மனைப் போரில் வென்றிருக்கிறான், ஆனால், அவனைக் கைது செய்து மணி முடியைக் கைப்பற்ற முடியவில்லை, போரில் தோற்ற ராஜசிம்மன் கடல் வழியாகத் தப்பி ஓடி இலங்கை மன்னன் ஒருவனிடம் மணி முடியைக் கையளித்து ஒளிந்து கொண்டான்.

பராந்தகச் சோழனுக்கு தனது வாழ்நாளில் எப்படியாயினும் அந்த மணிமுடியைக் கைப்பற்றி அணிந்து கொள்ள வேண்டும் என்கிற அடங்காத ஆவல் இருந்ததாகச் சொல்கிறார்கள், ஆசை நிறைவேறாமலேயே இறந்து போன பராந்தகச் சோழனின் மணிமுடிக் கனவு பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டிருக்கிறது, அதன் காரணமாகவே தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளின் மீது ராஜேந்திர சோழன் போர் தொடுத்தான், வெற்றி கொண்டான் என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது.

046

கோவிலின் முகப்பில் இருக்கும் நுழைவாயிலின் சிதிலமடைந்த பாறைகளின் மீது ஏறி மேல் தளத்திற்குச் சென்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த போது அந்தக் கோவில் கட்டிடத்தின் பிரம்மாண்டமும், கோபுரத்தின் உயரமும் பத்தாம் நூற்றாண்டுக்குள் என்னை அழைத்துச் சென்றது, பத்தாம் நூற்றாண்டின் கனவுலகில் பயணித்துக் கொண்டிருந்த போது குனிந்து கீழே பார்த்தால் "யோவ், தம்பி, இறங்குய்யா, இறங்குய்யா" என்று இரண்டு மூன்று மனிதர்கள் நுழைவாயிலை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனடியாக இருபத்தோராம் நூற்றாண்டுக்குள் குதித்து அவர்களிடம் சமாதானம் பேச வேண்டியிருந்தது.

ஒரு வழியாகச் சோழர்களின் தலைநகரத்தில் இருந்து விடை பெற வேண்டும் என்கிற எண்ணத்தை கைக்கடிகாரம் உணர்த்தியது, காத்திருந்த தானி ஓட்டுனரை அடைந்த போது வெளிர் நீல நிறத்தில் ஒரு கப்பல் மாதிரியான மகிழுந்து நின்று இளைப்பாறத் துவங்கியது, அதன் கதவுகளைத் திறந்து கொண்டு இறங்கிய ஜெர்மானியச் சுற்றுலாப் பயணிகளின் முகம் கோபுரத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியப்பில் கலவரமடைந்து "வாவ்வவ்வ்வ்வ்" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை அந்த உயர்ந்த கோபுரத்தைப் அருகில் இருந்து ஆசை தீரப் பார்த்து விட்டுக் கிளம்பினோம் நானும் ஓட்டுனரும், வழியெங்கும் மரங்களின் ஊடாக மீண்டும் மறைந்தும், தோன்றியும் வரலாற்றைப் போல வந்து கொண்டிருந்தது கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் கோபுரம்.

045

*********

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 14, 2011

பியர் ரிவியேயும், பரமக்குடியும்

gun shot photo

தனது மகனைத் தோள் மீது கிடத்திக் கொண்டே கண்ணெதிரில் இருக்கும் நீண்ட நிலப்பரப்பை உழுது பயிர் செய்தான் அந்தப் பாசமிகு தந்தை, உழைப்பால் மரத்துப் போன தனது கைவிரல்களால் மகனின் தலைமுடியை வருடித் தனது எல்லையற்ற அன்பை பக்கத்தில் பொங்கி வரும் ஆற்று நீரைப் போலப் பாய்ச்சினான், மனித வாழ்க்கையின் மிக நுட்பமான அன்பின் வீச்சைத் தனது மகனுக்குப் பரிசாக்கி மகிழ்ந்தான், தனது தந்தையின் மீது அளப்பரிய நேசத்தை வளர்த்துக் கொண்டு வளர்ந்து பெரியவனானான் மகன், மெல்லிய மலர் ஒன்றின் இதழ்களை வருடிப் பார்க்கும் வண்ணத்துப் பூச்சியின் சிறகினைப்

போல அன்பு செலுத்திய அவனது தந்தையை அவன் உழைக்க இயலாத காலத்தில் அவமானம் செய்தது மொத்தக் குடும்பமும், பொருளீட்டத் தெரியாத மூடன் என்றும் நவீன காலத்தின் முடவன் என்றும் அந்தப் பாசமிகு தந்தையை குடும்ப உறுப்பினர்கள் எள்ளி நாகையாடிய போது இளைஞனான மகனின் மனம் அழுத்தத்தில் சிதைவுற்றது, வழிந்து உருகிய அன்பைத் தவிர வேறெதையும் ஊட்டியிராத தனது தந்தைக்குக் கொடுமனம் மிகுந்த தனது தாய் உணவு வழங்க மறுத்த போதெல்லாம் தனது உணவைத் தந்தைக்காய் ஈடு செய்து பட்டினி கிடந்தான் மகன்.

தந்தையை அவமானம் செய்யும் தாயையும், சகோதரிகளையும் உயிரற்ற திடப் பொருட்களைப் போல நோக்கத் துவங்கினான், ஒரு நாள் தனது பாசம் நிறைந்த தந்தையை உடலால், உள்ளத்தால் துன்புறுத்திய குடும்ப உறுப்பினர்களை விவசாயக் கருவியொன்றின் உதவியோடு அடித்துக் கொன்று விட்டான், குருதி வெள்ளத்தில் அவர்கள் பிணமாகச் சரிந்து கிடந்தபோது தனது தந்தையின் நெற்றியில் கைவைத்து இப்படிச் சொன்னான் அந்த மகன், "அப்பா, இனி இவ்வுலகில் உங்களை அவமானம் செய்யவும், துன்புறுத்தவும் இனி யாரும் இல்லை, மகிழ்ச்சியோடிருங்கள்"

சட்டமும், உலகமும் அந்தக இளைஞனைப் பைத்தியக்காரன் என்றது, அவனைச் சிறை பிடித்தது, இவன் மனநிலை பிறழ்ந்தவன் என்று தூற்றியது, ஆயினும் எந்தக் குற்ற உணர்வும் இல்லாது மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் மகன், இரண்டு மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பின்பு நீதிமன்றத்தில் சரணடைந்தான் அந்த இளைஞன், நீதிமன்றத்தில் பெருங்குரலில் இப்படிச் சொன்னான், "அன்பையும், உழைப்பையும் தவிர வேறொன்றையும் அறியாத என் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கவே ஆண்டவன் என்னை அனுப்பி இருந்தான், எனது பணியை எவ்விதக் குறையுமின்றி நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன் நான்" என்று பெருங்குரலில் கத்திய அவனை இந்த உலகம் விநோதமாகப் பார்த்தது. வரலாறு குறிப்பெடுத்துக் கொண்டது.

171952paramakidi_1

கற்பனைக் கதையல்ல இது, 1835 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் நோர்மாண்டியில் அமைந்திருந்த ஒரு கிராமத்தில் இந்தக் கொலைகளை நிகழ்த்தினான் பியர் ரிவியே என்ற இருபதே வயது நிரம்பிய இளைஞன், சிறையில் நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான் பியர் ரிவியே, தனது தந்தையின் மீதிருந்த அளவற்ற அன்பினால் உலகம் வகுத்து வைத்திருந்த எல்லைக் கோடுகளை உடைத்து எறிந்தவன் பியர் ரிவியே, இந்தக் கொலைகளின் பின்னிருக்கும் தார்மீக மனித உணர்வுகளை நம்மால் சமூகத்தின் மனசாட்சியில் இருந்து பிரித்தெடுக்க முடியாது, காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் இது போன்ற செய்திகளைப் படிக்கும் போது பார்க்கும் போது அறம் சார்ந்த பொது மனிதன் மன எழுச்சி அடைகிறான், மகிழ்கிறான்.

அளவற்ற அன்பைத் தனக்கு வழங்கிய தந்தைக்கு நிகழ்ந்த அவமானத்தைப் பொறுக்கும் மன வலிமையற்றுப் பெரும் அழுத்தத்தில் அமிழ்ந்து இந்தக் கொலைகளைப் புரிந்த பியர் ரிவியே தான் சிறையில் இருந்த போது எழுதிய தன்வரலாற்றுக் குறிப்பில் தனது பக்கம் இருக்கிற நியாயங்களை தீர்க்கமாகவும், தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறான், தள்ளாத முதிய வயதில் கண்ணெதிரில் என் தந்தை பட்ட துயரங்களும், அவமானமும் என்னை ஆழமாகப் பாதிப்படைய வைத்தது, மனிதப் பண்புகள் என்று என் தந்தையால் எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த அன்பும், பாசமும் அறவே இல்லாத எனது தாயையும், சகோதரிகளையும் நான் உலகின் ஒழுங்குக்கு உட்பட்டு மதிக்கவும், அன்பு செய்யவும் வேண்டும் என்று எனது உள்ளுணர்வு ஒருபோதும் எனக்குச் சொல்லவில்லை.

மனிதர்களில் சிலர் அன்பு நிறைந்த சக உயிரை மதிக்கத் தெரியாத இழிபண்பு மிக்கவர்கள், மானம் கெட்டவர்கள், இத்தகைய மனிதர்களை விட நான் மேன்மையானவன், நான் அன்பு நிறைந்த என் தந்தைக்காக மனித சட்டங்களை மறுதலிக்கத் துணிந்தேன், எனது உயிரினும் மேலாக நான் அன்பு செலுத்திய அவருக்காக எனது உயிரை அர்ப்பணிப்பதால் அழியாப் புகழை அடைகிறேன், ஒரு மன்னனுக்காகவோ, அவன் வகுத்த எல்லைக் கோடுகளுக்காகவோ சீருடை அணிந்து மரணித்துப் போகிற எத்தனையோ போர் வீரர்களை மாவீரர்கள் என்றும், தியாகிகள் என்றும் போற்றி வழிபடும் இந்தச் சமூகத்தில் நான் நேசித்து வழிபட்ட என் தந்தையின் விடுதலைக்காக மூன்று உயிர்களை நான் பறித்தது எந்த வகையில் அநியாயம் என்று கேள்வி எழுப்பி விட்டு மடிந்து போனான் பியர் ரிவியே.

புதைக்கப்பட்ட வரலாற்றின் சில பக்கங்களை பியர் ரிவியேவின் குரல் மூலம் வெளிக் கொண்டு வந்த பிரெஞ்சு தத்துவாசிரியர் மிக்கேல் பூக்கோவின் ஆய்வுகளைப் படிக்கும் போது தண்டனைகள் குறித்தும், சட்டங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

தூக்குத் தண்டனைக்கு எதிரான எழுச்சியும், மனித நேயத்தின் மீது தாங்கள் வைத்திருக்கும் அளப்பரிய மதிப்பும் தமிழகம் முழுதும் எதிரொலித்த போது முதலாளித்துவ பாசிச மாநில, மற்றும் தேசிய அரசுகள் கலக்கம் கொண்டன, இத்தகைய எழுச்சியை ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு என்கிற ஒரு மிகச் சிறிய வட்டத்துக்குள் அடைத்து விடவும், வரலாற்றின் போக்கில் தமிழர்களின் தன்னியல்பான விடுதலைப் பாதையை அடைக்கும் நோக்குடனும் பல்வேறு ஆற்றல்கள் செயல்புரிந்தன, இப்படியான எழுச்சி முதலாளித்துவ அரசுகளால் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் உயர் சொகுசு வாழ்க்கையின் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கும் என்று அஞ்சி நடுங்கிய அத்தகைய ஆற்றல்கள் என்ன விலை கொடுத்தேனும் இந்த எழுச்சியை மட்டுப்படுத்த விரும்பின. இந்த எழுச்சியின் பின்னணியில் வெறும் மண்டல உணர்வுகளும், குறுகிய தமிழ் தேசியப் பார்வையும் மட்டுமே இருந்தன என்று நம்மை நம்ப வைக்கப் படை திரண்ட சில ஊடகங்கள், தமிழர்களின் தேசியப் பற்றுக் குறித்த கேள்விகளை எழுப்பியபடி எகிறிக் குதித்தார்கள்.

183

வரலாறு குறித்த எந்தப் புரிந்துணர்வும் இல்லாத முதிர்ச்சியில்லாத மேதாவிகளால் தமிழ் மக்களின் விடுதலைப் போர் பங்களிப்புகள், இந்த மிகப் பெரிய தேசத்தின் பின்னிருக்கும் ஒவ்வொரு தமிழர்களின் உழைப்பு மற்றும் இழப்புகளை ஒரு முறை தீவிர மீள்பார்வை செய்தால் அவர்களுக்கான விடை ஏராளமாகக் கிடைக்கும், மூன்று உயிர்களுக்கு ஆதரவாகத் தமிழினம் திரண்டு நின்றதற்கான உண்மையான காரணம் அவர்களின் அடிப்படை மனித நேயம், கொத்துக் குண்டுகளை வீசிக் கொன்றழிக்கும் இனத்தின் இரண்டு இளம் காதலர்கள் இந்த மண்ணில் தஞ்சமடைந்த போதும் அவர்களுக்காய் உணவு சமைத்துக் கொடுத்து உச்சி முகர்ந்தவர்கள் இந்த மண்ணின் மக்கள், இந்த மண்ணிலேயே அவர்கள் நிம்மதியாய் வாழட்டும் என்று உருகி வழிந்தவர்கள் அவர்கள், தூக்கு மேடையில் நின்று உங்கள் மண்ணில் எங்களுக்கு இப்படியான ஒரு தண்டனையா?, நாங்கள் நிரபராதிகள் என்பதை உறுதி செய்ய எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படமாட்டாதா? என்று யார் கேட்டிருந்தாலும் இப்படித்தான் திரண்டிருப்பார்கள் தமிழர்கள், எனது மகன் குற்றமற்றவன், அவனை என்னோடு வாழ விடுங்கள், இந்த மண்ணிலே கொன்று விடாதீர்கள் என்று எந்த மொழி பேசும் தாய் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் இப்படித்தான் திரண்டிருப்பார்கள் தமிழர்கள். அதுதான் அவர்களின் உயர் பண்பும், நெறியும்.

சட்டங்கள், தண்டனைகள் இவை குறித்தெல்லாம் நாடெங்கும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தக் கதை பல்வேறு செய்திகளை நமக்கு வழங்குகிறது, நீண்ட கால உறக்கத்திற்கும், முள்ளிவாய்க்காலில் கண்டடைந்த மிகக் கொடுமையான பாடங்களுக்கும் பிறகும் தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஒரு முறை திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டிருக்கிறார்கள், மூன்று மனித உயிர்களுக்குப் பின்னே உறங்கிக் கொண்டிருந்த மனித நேயத்தின் ஆணி வேரைத் தேடி நம்பவே இயலாதபடி தன்னெழுச்சியாய் இளைஞர்கள் போராடினார்கள், இயல்பான ஒரு ஒருங்கிணைவையும், எழுச்சியையும் தமிழர்கள் சந்தித்த சில நாட்களிலேயே அரச பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்ட படுகொலை ஒன்று பூர்வகுடித் தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்டிருக்கிறது, இதன் மூலமாக மீண்டும் சாதிக் கூட்டுக்குள் தமிழர்களை அடைத்து நசுக்கி விடுவது போன்ற நுட்பமான திட்டங்கள் இருக்கக் கூடுமோ என்ற அச்சமும் தோன்றுகிறது.

dalits-murdered-in-india

முதலாளித்துவ உலகின் சட்டங்களையும், நீதியற்ற சமூக ஒழுங்குகளையும் கேள்வி கேட்கும் எத்தகைய ஒன்று கூடல்களும் இத்தகைய கொடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்கிற எச்சரிக்கை விடப்பட்டிருக்குமோ என்று உள்ளூர ஒரு நடுக்கம் நேரிடுகிறது, கூடங்குளம் அணு உலையை மூடுவதற்காகப் போராடுகிற, அல்லது அடிப்படை வசதிகளைக் கேட்டுப் போராடுகிற ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்று கூடல்களுக்கு இத்தகைய நிகழ்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கக் கூடும். இயல்பாகத் தங்கள் சமூகத் தலைவர் ஒருவரின் நினைவு நாள் விழாவிற்கு ஒன்று கூடுகிற ஒடுக்கப்பட்ட மக்களின் மீது எதற்காக கடும் நெருக்கடிகள் காவல் துறை மூலம் கொடுக்கப்பட்டது? விழாவில் கலந்து கொள்பவர்கள் எதற்காகக் காவல் நிலையத்தில் பெயர்களைப் பதிவு செய்யும்படி வலியுறுத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் சென்று விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதற்காக வேண்டுகோள் விடப்பட்டது, இவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருந்து செயல்பட்ட சிந்தனை எது? இப்படியான கேள்விகள் நமது நெஞ்சைத் துளைக்கிறது.

இரண்டு சமூகங்கள் மோதிக் கொண்டு நிகழ்ந்த சாதிக் கலவரமல்ல பரமக்குடியில் நிகழ்ந்தது, அது காவல்துறையின் சில கருப்பு ஆடுகளால் வெகு நுட்பமாகத் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்று செய்திகள் வந்த வண்ணமிருக்கிறது, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைக் குலைக்க நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட முன்மாதிரித் தாக்குதலா இது என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இறந்து போன ஏழு எளிய மனிதர்களின் உயிருக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதிகாரமும், பொருள் பலமும் இல்லாத எளிய மக்களை மட்டுமே முதலாளித்துவ அரச பயங்கரவாதம் சுட்டுத் தள்ள முடிகிறது, தூக்கில் தொங்க விட முடிகிறது, சுரண்டலும், ஊழலும், அறமற்ற வர்க்க மனநிலையும் கொண்ட மனிதர்களின் அருகில் கூட அவை செல்ல முடிவதில்லை, சமூகத்தில் சகல வசதிகளும், பாதுகாப்பும் நிறைந்திருக்க அவர்கள் வலம் வரும்போது பியர் ரிவியே போன்ற மனிதர்கள் உரைக்கும் உளவியல் தாக்கம் உண்மைதானோ என்று பல நேரங்களில் தோன்றுகிறது.

equality

பியர் ரிவியேயின் தந்தையை நடத்தியது போலத்தான் பல மனிதர்களை இந்தச் சமூகம் நடத்திக் கொண்டிருக்கிறது, மனிதர்களை மட்டுமல்ல பல்வேறு சமூகக் குழுக்களை அவர்களின் அடிப்படை உரிமையை மறுத்தும், அவர்களுக்கான வாழ்வுரிமைகளைத் தட்டிப் பறித்துமாய் அரசும், சமூகமும் இணைந்து செயலாற்றும் போது குற்றங்களின் தன்மை மீதான மனிதனின் பார்வை மாறி விடுகிறது, பரமக்குடியிலிருந்து பியர் ரிவியேக்கள் தோன்றி விடக் கூடாது என்பதே இப்போதைக்கு நமக்கிருக்கும் உளக்கிடக்கை.

***************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 12, 2011

சமூகமும், சட்டம் ஒழுங்கும்.

violence

மீண்டும் ஒரு குருதிக் கறை படிந்திருக்கிறது தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில், இம்முறை கொல்லப்பட்டது ஏழு மனிதர்களின் உயிர், வழக்கம் போலவே பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்வினைகளும், ஆதரவுக் குரல்களும் எழுந்தவண்ணம் இருக்கிறது, “இவர்கள் கலவரக்காரர்கள் என்றும், சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே” என்று ஒரு புறமும், “தலித் மக்களைக் குறி வைத்துக் கொன்றிருக்கிறது காவல்துறை” என்று மற்றொரு புறமுமாய் ஏறத்தாழ இரண்டு அணியாய் மாறி இருக்கிறது தமிழ்ச் சமூக மனநிலை.

ஒன்றைத் தெளிவாக இந்நேரத்தில் உணர முடியும், இந்த இரண்டு அணிகளில் ஒன்று “ஒடுக்கப்பட்ட மக்களின் இறப்பை எண்ணிக் கலங்கும், அதிகார வர்க்கத்தின் தொடர் வன்முறைகளை எதிர்க்கும் அணி”, இன்னொன்று “பொதுவாகக் கலவரம் யார் செய்தால் என்ன?, காவல்துறை மீது வன்முறையை ஏவும் நேரத்தில் அவர்களைக் சுட்டுக் கொலை செய்வதும் தவறில்லை என்று வாதிடும் அணி”.

இப்போது நாம் அனேகமாக இரண்டாகப் பிளக்கப்பட்டிருக்கிறோம், ஆம், மூன்று குற்றம் சுமத்தப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்த தமிழ் மக்கள் இப்போது சரியான நேரத்தில் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள், இப்படி நம்மைப் பிளவு செய்யும் ஒரு மிகப்பெரிய காரணியாகவே சாதி பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நிலை பெற்றிருக்கிறது.

முதலில் இந்தக் கலவரச் சூழலை யார் துவக்கி இருந்தாலும் அது மிகப்பெரிய குற்றம் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை, “ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் செய்தால் எதுவும் குற்றமில்லை, அல்லது அவர்கள் எப்போதும் கலவரங்களில் ஈடுபடுவதில்லை” என்று வாதம் செய்வதல்ல நமது நோக்கம், மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலுக்குள் நுழையும் போது தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எதனால் உண்டாக்கப்படுகின்றன என்கிற முழு உண்மையை ஒரு நடுநிலை உள்ள மனிதனால் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய சமூகத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை எப்போதும் அச்சம் சூழ்ந்ததாகவே இருக்கிறது, எந்த நேரத்திலும் அவனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவனது கொண்டாட்டங்கள் மறுதலிக்கப்படுவதையும் தன்னுடைய தகுதியாகவே வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியின் மனநிலையில் தலித் அல்லது ஒடுக்கப்பட்டவன் “தான் கொடுக்கிற உரிமைகளால் அல்லது உதவிகளால் வாழும் மனிதனைப் போலத் தோற்றமளிக்கிற விலங்கு” என்று தான் கற்பிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வீடுகள் இருக்கும் பகுதிக்குச் செல்வது ஊறு விளைவிக்கும் குற்றம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது, ஆதிக்க சாதி மனிதனின் வயல்களுக்கு நடுவே இருக்கும் தன்னுடைய வயல் வெளிகளில் விவசாயம் செய்யும் உரிமையைக் கூடக், கடந்து செல்ல முடியாத காரணத்தால் இழந்து நகர்ப்புறமாக நகரத் துவங்கிய எத்தனையோ குடும்பங்களை எனக்குத் தெரியும்.

பல்வேறு சமூக வெளிகளில் புறக்கணிக்கப்படுகிற அல்லது துரத்தி அடிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வலியை அறிய முடியாத எவராலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிரான அழுத்தமான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியாது, ஏனென்றால் பல நேரங்களில் அந்த வழியைத் தோற்றுவிப்பவர்களாக அவர்களே இருக்கிறார்கள், விழாக்காலங்களில் தாம் விரும்புகிற தலைவரின் படங்களை மரியாதை செய்கிற உரிமை நமது சமூகத்தில் ஆதிக்க சாதி மக்களின் கைகளில் இருந்தே புறப்படுகிறது.

Seven_Killed_In10652

பிறப்பின் மூலமே கிடைக்கிற இந்தத் தகுதியின் உதவியால் கல்வி அறிவாலும், தனது கடின உழைப்பாலும் மேலெழுந்து வருகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வளர்ச்சிப் பாதையை, அவனது சுய மரியாதையைக் கேள்வி கேட்கும் அல்லது சீண்டிப் பார்க்கும் நிலையை அடைகிறான் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லப்படுகிற மனிதன். இந்தச் சீண்டல் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மனிதனின் உளவியலில் அழுத்தத்தையும், நெருக்கடியையும் உருவாக்குகிறது.

இதனை எதிர்த்துக் குரல் எழுப்புகிற எவரையும், அவர் எப்படியான கருத்தியலைக் கொண்டிருக்கிறார் என்கிற காரணங்கள் ஏதும் அறியாமலேயே ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞன் பின் தொடர்கிறான், தனது வாழ்க்கையின் மீது சுற்றி வளைத்துக் கட்டப்பட்டிருக்கிற சாதி அடக்குமுறை வடிவங்களைக் கடந்து தான் நிம்மதியாக வாழ்வதற்கு இத்தகைய தலைவர்களில் யாரேனும் ஒருவர் உதவி செய்வார் என்று அவன் முழுமையாக நம்பத் துவங்குகிறான்.

ஆழி சூழ்ந்த நிலப்பரப்பில் அச்சத்தோடு வாழும் இத்தகைய ஒடுக்கப்பட்ட மனிதனின் மனநிலையே ஒரு வழிபாட்டு மனநிலைக்கு அவனைத் தள்ளி விடுகிறது, ஏறத்தாழ கடவுள் கோட்பாட்டினைப் போலவே தன்னால் அவிழ்க்கவே முடியாத சமூகச் சிக்கல்களின் ஒரு முனையைத் தலைவர்களின் மீது கட்டி விட்டு இன்னொரு முனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான், தலைவர்களின் கரங்களில் கொடுக்கப்பட்ட மற்றொரு முனையில் சரணடைந்து தன்னுடைய அச்சத்தை முழுமையாக ஒப்படைத்து விட்டதாக நம்பி பெருமூச்சு விடுகிறான்.

ஆனாலும், தனது பிறப்பின் அதிகாரத்தைப் பறிக்கவே தோற்றம் கொண்டவர்கள் இந்தத் தலைவர்கள் என்று நம்புகிற பிறவி ஆதிக்க சாதி மனிதனால் ஒடுக்கப்பட்ட மனிதனின் நிம்மதிப் பெருமூச்சைப் பொருக்க முடிவதில்லை, தனக்குச் சேவகம் செய்யும் ஒரு கீழான நிலையிலேயே ஒடுக்கப்பட்ட மனிதன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக எண்ணுகிற ஒவ்வொரு ஆதிக்க சாதி மனிதனும் அதற்கான அடிப்படை வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான், அவன் மட்டுமன்றி அவனது சந்ததியும் அப்படியே இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்கிறான்,

பிறப்பால் தனக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையை இழப்பதையோ, விட்டுக் கொடுப்பதையோ அவமானமாய் உணரும் ஆதிக்க சாதி மனிதன் ஒடுக்கப்பட்ட மனிதனை ஒரு சக மனிதன் என்றோ, சக உயிர் என்றோ உணரத் தலைப்படுவதே இல்லை, சக மனிதனை தன்னோடு இப்பூவுலகில் வாழும் இன்னொரு உயிர் என்கிற உயிரியல் அல்லது வாழ்வியல் உண்மையை வசதியாக மறந்தே போகிறான், அது தான் இறுதியாக இந்த மனித குலம் அடையத் துடிக்கும் உண்மையான நாகரீகம் என்பதை அவனது மதமும், சாதியும் அவனுக்குக் கற்றுக் கொடுப்பதே இல்லை.

இனி பரமக்குடி நிகழ்விற்கு வருவோம்,

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக பரமக்குடி சுற்றுப் புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ஒழுங்குப் பாதுகாப்பு (பெயருக்கு) என்கிற பெயர் கொண்ட ஆதிக்க மனப்போக்கு அப்பகுதி இளைஞர்களிடையே ஒரு விதமான கிளர்ச்சியான சூழலை உண்டாக்கி இருக்கிறது, தான் தலைவராக ஏற்றுக் கொண்டவரை அவரது நினைவு நாளை அல்லது பிறந்த நாளைக் கொண்டாடும் உரிமையைக் கூட இந்தச் சமூகம் எனக்கு வழங்கவில்லை என்கிற தார்மீகக் கோபமே ஒரு வன்முறை மனநிலையை நோக்கி இந்த இளைஞர்களைத் தள்ளி இருக்கிறது.

பிள்ளையாருக்கும், பிள்ளையார் ஊர்வலங்களுக்கும் இருக்கும் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடும் இது போன்ற இடங்களுக்கு இல்லை என்பதே இந்தச் சமூகத்தின் மாற்றாந்தாய் மனநிலையை நாம் அறிந்து கொள்ள உதவி செய்கிறது, காவல் நிலையங்களில் பெயர்களைப் பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்திய காவலர்கள், தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சென்று விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று கட்டளையிட்ட அதிகாரிகள் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இந்த நிகழ்வில் ஏழுக்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது காவலரோ அல்லது ஒடுக்கப்பட்ட மனிதனோ, தமிழனோ, தெலுங்கனோ, மலையாளியோ என்கிற ஆய்வுகளுக்கு முன்னாள் இறந்து போனவை நம்மைப் போலவே உடலுக்கும், உள்ளத்துக்கும் இடையே கட்டப்பட்டிருக்கிற மனித உயிர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதே நிகழ்வு மற்றொரு சாதி அணிவகுப்பில் அல்லது தலைவரின் நினைவு நாளில் நிகழ்ந்து அங்கேயும் ஏழு மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்குமேயானால் சக மனிதனாகக் குரல் கொடுக்கும் பண்பாட்டை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Caste-System-in-India

சமூகத்தின் மனநிலையைப் போலவே அரசின் ஒவ்வொரு அடுக்கும் செயல்படும், காவல் துறையில் பணியாற்றும் மனிதராகட்டும், அமைச்சரைவையில் பணியாற்றும் மனிதராகட்டும் நீங்களும் நானும் என்ன சிந்திக்கிறோமோ அதனையே எதிரொலிக்கிறார்கள், சாதி ஒழிப்பிற்கும், வர்க்க வேறுபாடுகளுக்கும் பகல் முழுதும் குரல் கொடுக்கும் பல தலைவர்கள் இரவு நேரங்களில் தமது சொந்த சாதி நலன்கள் குறித்து அதிகம் சிந்திப்பவர்களாக நாம் அவர்களை மாற்றி வைத்திருக்கிறோம், நாமே நமது சொந்தக் குழந்தைகளுக்கு ஒரு மிகக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறும் ஆற்றலை வழங்க ஒப்புவதில்லை, மாற்று சாதி அல்லது பக்கத்துக்கு வீட்டு மனிதன் குறித்த வன்மத்தையே பல நேரங்களில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஒரு மிக நுட்பமான சமூகத்தின் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் இருக்கிறோம் என்கிற உள்ளுணர்வு இல்லாத காவல்துறை அதிகாரிகளின் கவனக் குறைவால் இந்தக் கொடுமையான நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது என்பதில் துளியும் ஐயம் இல்லை, தலைமைப் பண்புகளும், ஆளுமைத் திறனும் இல்லாத சில குறிப்பிட்ட மனிதர்களின் தவறுகளால் ஏழு உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது, மேலும் ஆதிக்க மனப்போக்கும் அதிகார மையங்களும் ஒருங்கிணைகிற காவல் துறையின் மனசாட்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பொது மக்களின் கூடுதலின் போதும், போராட்டங்களின் மீதும் கட்டவிழ்க்கப்படுகிற இந்த அரச வன்முறையை ஒரு மிகப்பெரிய தேசத்தின் சட்டங்கள் எப்படிக் கையாள்கின்றன என்பதை மீள்பார்வை செய்யும் ஒரு சிக்கலான பாடத்தை இந்த நிகழ்வு நமக்கு வழங்குகிறது. இத்தகைய இக்கட்டான தருணங்களில் யார் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை அல்லது அனுமதியை வழங்குகிறார்கள்?, யார் வழங்கினார்கள்?, மனித உயிர்களை அரசுகள் கொல்வது இத்தனை எளிதானதா? போன்ற சட்டக் கேள்விகளை நாம் தீவிரமாக எதிர் கொண்டாக வேண்டும்.

காவல்துறையினர் உடனோ அல்லது ஆதிக்க சாதி மனிதர்கள் உடனான முரண்பாடுகளின் போதோ எப்படியான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்கிற அடிப்படை ஒழுக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களும், அவற்றின் முன்னணித் தலைவர்களும் தங்களின் தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். மிகப் பெரிய இழப்புகளில் இருந்தும், தேவையற்ற முரண்பாடுகளில் இருந்தும் எளிய மக்களைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை எந்த ஒரு அரசியல் கட்சியின் அல்லது இயக்கங்களின் தலைவர்களும் உணர வேண்டும்.

இந்த நிகழ்விற்கு அடிப்படைக் காரணமான ஒரு பள்ளிச் சிறுவனின் மரணத்துக்கு பின்னே மனித நேயத்தோடும், நமது பதவிக்கான உயர் தகுதி அடையாளங்களோடும் நாம் பணியாற்றினோமா என்கிற கேள்வியை ஒவ்வொரு காவலரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களுக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுக்கும் இன்றைய தமிழ் இளைஞர்களின் உளவியலில் இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியைக் கொடுக்காதபடி வழி நடத்திச் செல்கிற தங்கள் பொறுப்பை ஒவ்வொரு சாதியின் தலைவரும் உணர்ந்து இறந்து போன மனித உயிர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

robins-dead-body-and-the-desperation-of-his-wife-just-minutes-before-being-laid-to-rest

எல்லாவற்றையும் கடந்து இறந்த மனிதர்கள் அனைவரும் போராட வந்தவர்களா?, இல்லை வேடிக்கை பார்த்தவர்களா?, கல்லெறிந்தவர்கள் மட்டுமே குண்டடிபட்டிருக்கிறார்களா? என்கிற பல உண்மைகளை நாம் அறிய வேண்டியிருக்கிறது, காயமடைந்த காவலர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சக மனிதர்களாகவும், சக உயிர்களாகவுமே நாம் உணர வேண்டியிருக்கிறது.

பல்வேறு விழாக்கள், ஒன்று கூடல்கள், தலைவர்களின் பிறந்த நாட்களின் போதெல்லாம் நிகழாத வன்முறையும், துப்பாக்கிச் சூடுகளும் தலித் மக்களின் ஒன்று கூடல்களின் போது தவறாது நிகழ்வதன் பின்னிருக்கும் சமூக மன நிலையை அல்லது அரசியல் காரணங்களை அறிந்து அவற்றை நீக்குவதற்கான மிக அடிப்படையான பலவேறு செயல்பாடுகளில் நாம் ஒருங்கிணைய வேண்டிய ஒரு கட்டாயம் நிகழ்ந்திருக்கிறது,

இறந்த மனிதர்களின் குழந்தைகளை, அவர்களின் அழுகுரலை, அந்தக் குடும்பங்களில் நிகழவிருக்கிற அவலங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள், அந்த அழுகுரலும், அவலங்களும் மரணத்தின் பெயரால் எல்லா மனித உயிர்களுக்கும் பொதுவானது, நாம் தூக்கிலடப்படும் மூன்று உயிர்களைக் காக்கத் தன்னெழுச்சியாகப் புறப்பட்டவர்கள், நமது மண்ணில் உயிர்களைப் பலியிடும் அரச நடைமுறைக்கு எதிராகக் கிளர்ந்தவர்கள், நாம் வரலாறு நெடுகிலும் நாகரீகத்தின் பல்வேறு கூறுகளை விதைத்து முன்னேறியவர்கள், தொடர்ந்தும் அப்படியே இருப்போம் நண்பர்களே………

“நாம் இப்படி சண்டையிட்டுக் கொள்வதையே நமது எதிரிகள் விரும்புகிறார்கள், ஏனென்றால் நமது வலிமையும், பலவீனமும் என்னவென்பதை அவர்கள் நம்மைவிட நன்கறிவார்கள்.”

************

கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 10, 2011

நிகழ்த்துக் கலையும், ஒரு இளைஞரும்

250838_132817336796387_100002043633462_221953_4061_n

முன்பெல்லாம் நமது விழாக்களில் தவறாது இடம்பெறும் தெருக்கூத்து அல்லது மேடை நாடகங்களை ஏறத்தாழ இழந்து விட்டோம் என்று நினைக்கத் தோன்றுகிறது, வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த மேடைகள், அதன் உள்ளிருந்து குதித்தபடி இசை முழக்கிக் காட்சி தரும் நமது பண்பாட்டு வழிக் கலைஞர்கள் இவர்களெல்லாம் இப்போது எங்கிருப்பார்கள், வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வார்கள், எங்காவது கூலி வேலை செய்து கொண்டும், மண்ணோடு போராடிக் கொண்டும் இருக்கும் இந்தக் கலைஞர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு எனக்கும் உங்களுக்கும் நேரமிருக்கிறதா?

“ம்ம்ம், கலைஞர்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் என் கம்பெனி வேலை போய் விடுமப்பா” என்று நீங்கள் பெருமூச்சு விடுவது கேட்கிறது. ஆனால் ஒரு இளைஞர் தனது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், நிகழ்வுகளையும் மட்டுமே கருதாமல், இந்தக் கலைஞர்களைப் பற்றியே பேசுகிறார், எழுதுகிறார், அவர்களுக்காக உழைக்கிறார், பல்வேறு உரிமைகளை அரசுகளிடம் போராடிப் பெற்றுத் தருகிறார். அவர் மணல்வீடு ஹரிகிருஷ்ணன், எளிமையான மண்ணுக்கே உரிய மொழியோடு பேசும் ஒரு அரிய இளைஞர். மணல்வீடு என்றொரு அற்புதமான இலக்கியப் பேரிதழை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கிராமியக் கலைகளை மீட்டுக் கொண்டு வந்து நமது அரங்குகளில் நிறுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாய்ப் போராடும் இவரைப் போன்ற மனிதர்களை நாம் குறைந்தபட்சம் ஆதரிக்கவாவது செய்யலாம் என்று தோன்றுகிறது, நிகழ்த்துக் கலைகளின் அழிவு நமது பண்பாட்டு வழிக் கலைகளின் முடிவாகத் தான் பொருள் கொள்ளப்பட வேண்டும், நிகழ்த்துக் கலைகளின் தேவை என்பது ஒரு சமூகத்தின் நுண்ணறிவுத் தேவை, பிழைப்பின் வழியாய்ச் சோர்ந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் அன்றாட நிகழ்வாய் இருந்த நிகழ்த்துக் கலைகள் இப்போது அவர்களைப் போலவே அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது போலத் தெரிகிறது. இந்த அழிவு நமக்கு முன்னால் மிக வெளிப்படையாகவே நிகழ்ந்து கொண்டிருப்பதும், அதை நாம் வேடிக்கை பார்ப்பதும் தான் மனதை கனக்கச் செய்யும் செய்தி.

253310_153997894678331_100002043633462_301953_6836127_n

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஹரிகிருஷ்ணனைப் போல சில இளைஞர்களும், எழுத்தாளர்களும் நிகழ்த்துக் கலைகளின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றின் அழிவு குறித்தும் நம்மிடம் பேசுகிறார்கள், வாய்க்குள் நுழையாத செவ்வாய்க் கிரகக் கலைஞர்கள், அண்டார்டிக் தீவுக் கலைஞர்கள் குறித்துப் போதனைகள் செய்கிற இன்றைய நவீன எழுத்தாளர்கள் பலருக்கு இடையில் தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற அரிய நிகழ்த்துக் கலைகள் நமது தலைமுறைக்குத் தெரியாமலேயே போய் விடுமோ என்கிற அச்சமே இந்தக் குறிப்பை எழுதத் தூண்டியது.

தனது அடிப்படை வாழ்வாதாரப் பணியை ஒரு தனியார் நிறுவனத்தில் செய்து கொண்டே பல்வேறு கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இடைவிடாத பணிகள், நிகழ்த்துக் கலைகளுக்கான அரங்குகளை உருவாக்கும் மிக முக்கியமான பணி, இலக்கியப் பேரிதழ்ப் பணிகள், நிகழ்த்துக் கலைகள் குறித்த நூல்களை வெளியிடும் பணி, நிகழ்த்துக் கலை வடிவங்களையும், அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ஆவணப்படங்கள் தயாரிக்கும் பணி என்று இடை விடாது இயங்கிக் கொண்டிருக்கும் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் உண்மையில் நாம் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய இளைஞர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவரோடு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் “அம்மாப்பேட்டை கணேசன்” அவர்களையும் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டியது அவசியம்.

அவரது பணிகளுக்கு உறுதுணையாய் இருக்கவும், அவரது பணிகளில் பங்கெடுக்கவும், அவரது முயற்சிகளை ஆதரிக்கவும் விரும்பும் நண்பர்கள், எந்த வழியிலும் உதவி செய்யலாம், ஏனெனில் ஒருவகையில் அது நமது கடமையும் கூட, நமது பண்பாட்டுக் கலைகளின் வடிவங்கள் அழியாமல் காக்கும் ஒரு மிகப்பெரிய பணியிலிருக்கும் இந்த இளைஞருக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறீர்களா? கீழ்க்கண்ட அவர்களின் களரி அறக்கட்டளைக்குக் கொடையளியுங்கள்

Kalari Heritage and Charitable Trust,

A\C.No.31467515260

SB-account – State Bank of India

Mecheri Branch

Anch Code-12786.

253988_134835229927931_100002043633462_235218_4382436_n

உங்களால் முடியவில்லையா, ஒரு முறை ஹரிகிருஷ்ணனை அவரது (09894605371) அலைபேசியில் அழையுங்கள், அவரது முயற்சிகளுக்கு உங்கள் உளப்பூர்வமான வாழ்த்துக்களையும், நன்றியையும் சொல்லுங்கள்.

மணல்வீடு ஹரி கிருஷ்ணன் குறித்து மேலும் அறிய உதவும் சில சுட்டிகள்:

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2303507.ece

http://www.facebook.com/media/set/set=a.132003926877728.32324.100002043633462#!/profile.php?id=100002043633462

**************

கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 1, 2011

"தோலய்யா" என்றொரு மனிதர்.

oldmuslim_800

"தோலய்யா, இறந்து போய் விட்டார்" என்கிற சொற்களை ஒரு உரையாடலின் போது மிக எளிதாகக் கடக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை, "தோலய்யா" வின் மரணம் அத்தனை பரபரப்பானதாக இருக்க வாய்ப்பில்லை தான், ஏனென்றால் அவருடைய அழுக்குப் படிந்த தலையணைக்குக் கீழே கோடிக்கணக்கில் பணமும், வைர நகைகளும் இருந்திருக்காது, கடைசி காலத்தில் மட்டுமன்றி எப்போதுமே அவர் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறு குரான் நூலும், வெற்றிலைப் பையும், சில அழுக்குப் படிந்த ரூபாய் நோட்டுக்களும் மட்டுமே அவரிடம் மிச்சமிருந்தன.

அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது "ஐயா, தோலையா செத்துப் போயிட்டாருப்பா", என்று சொன்னார்கள், அம்மாவுடன் பேசி முடித்த பிறகு சில நிமிடங்கள் எந்த இயக்கங்களும் இன்றிக் கடந்து போவது போலிருந்தது, கொதிக்கும் சோற்றுப் பானையில் இருந்து தவறிக் கீழே விழுந்து தனித்துக் கிடக்கும் ஒரு பருக்கையைப் போல அவரது முகம் எனக்குள் கிடப்பதை உணர முடிகிறது.

தோலைய்யாவை ஒரு மாலையும், இரவும் கலந்த நேரத்தில் திடுமெனச் சந்திக்க நேர்ந்தது, அந்த இரவில் அவர் ஒரு அரசரைப் போல வீட்டுக்குள் அமர்ந்திருந்தார், அவரைச் சுற்றி அவரது பேரக் குழந்தைகள், மகன்கள், மருமக்கள், இன்னும் சில பெரியவர்கள், மீரா ஐயா என்று ஒரு கூட்டமே அமர்ந்திருந்தது, மனிதர்கள் தனித்து விடப்பட்ட ஒரு நகர வீதியில் அப்படி ஒரு கண் கொள்ளாத காட்சி அந்த வீட்டுக்குள் ஒளிந்திருந்ததை நான் அருகில் இருந்து பார்க்க நேர்ந்தது ஒரு விபத்தைப் போல இருந்தாலும், கிளர்ச்சியான மனித உணர்வாக இருந்ததை மறைக்க முடியாது.

சில குழந்தைகள் ஒரு சிறு குன்றைப் போல அமர்ந்திருந்த அவரது உருவத்தின் மீது ஏற முயன்று கொண்டிருந்தார்கள், மலையுச்சியில் வீசும் காற்றைப் போல அவர் ஏதும் செய்யாமலிருந்தார், குழந்தைகள் ஏற முயல்வதும், பிறகு சறுக்கி விழுவதுமாய் இருந்தார்கள், அவரது மூன்று மகன்களில் இருவர், நாளை ஆடு பிடிக்கச் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள், ஒரு பேராசிரியரிடம் பாடம் கேட்கிற மாணவர்களைப் போல அவர்கள் வெகு அடக்கமாய் அமர்ந்திருந்தார்கள், தோலய்யா என்னை நிமிர்ந்து ஒரு முறை பார்த்து விட்டு அவரது பெரிய மகனை நோக்கித் தனது பார்வையைத் திருப்பினார். "கலாக்கா மகேந்த்தா, மூத்த பய" என்று தந்தையிடம் என்னை அறிமுகம் செய்தார் சாகுல் அண்ணன்.

"கலா மயனா, சின்னப் புள்ளைல பாத்துதுப்பா, நெனப்பில்ல, வாய்யா உக்காரு" என்று வாஞ்சையோடு தனக்கு அருகில் என்னை அமர்த்திக் கொண்டார், இப்போது சில குழந்தைகள் என் மீதும் ஏறத் துவங்கி இருந்தார்கள், அவரது பெருத்த உருவத்தின் அருகே அப்போது நானும் ஒரு குழந்தையாகி இருந்தேன், அது அவர்களின் இரவு உணவு நேரம், "பாத்திமா" என்று உள்ளறையை நோக்கிக் குரல் கொடுத்து அவர் அமைதியானபோது சில தட்டுக்களும் ஒரு பெரிய பேசினில் நெய்ச்சோறுமாக அந்த அம்மா வந்தார்கள், சுற்றிலும் மனிதர்கள் சூழ அந்த நெய்ச்சோற்றைக் கரண்டியில் எடுத்து அனைவருக்கும் பரிமாறத் துவங்கினார் தோலய்யா.

images

எங்கள் பகுதியில் இருக்கும் பழைய இஸ்லாமியக் குடும்பங்களில் பெரும்பாலும் பெண்கள் பரிமாறும் பழக்கம் இல்லை, நடுவில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை அவரவரே எடுத்துச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஆனாலும் அன்று என்னவோ தோலய்யா எங்கள் எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார். திண்ணைக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு நாய்கள், சில ஆடுகள், நான்கைந்து குழந்தைகள், உள்ளறையில் சில பெண்கள், நான், மீரா ஐயா, ஒரு தோல் வணிகர், என்று ஒரு எளிய குடும்பத்தின் இரவில் கூட்டமாய் உணவு சாப்பிடுவது ஏதோ விழாக்காலம் போலிருந்தது.

உணவு நேரத்தில் வீட்டுக்கு வரும் யாராக இருந்தாலும் சாப்பிட்டாக வேண்டும் என்பதை ஒரு கண்டிப்பான விதியாகவே தோலய்யா பின்பற்றிக் கொண்டிருந்தார், இந்துக்கள், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற வேறுபாடுகள் எதையும் தோலய்யா வீட்டுத் தட்டுகள் அறிந்திருக்கவில்லை. அந்த சந்திப்புக்குப் பிறகு நான் பலமுறை தோலய்யாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. தோலய்யா தீவிர இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்றும் அந்தப் பகுதி ஜமாத்தின் தலைவராக இருக்கும் பெரிய மனிதர், அவரது குடும்ப வருமானம் ஒன்றும் சொல்லிக் கொள்கிற அளவில் பெரிதில்லை, ஆனாலும் அவரது வீட்டின் அடுக்களையில் எப்போதும் பிறருக்கான சோறு வடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அது குறித்த பல்வேறு விமர்சனங்களை அவர் காலம் முழுதும் எதிர் கொண்டார்.

சொந்த வீட்டில் மட்டுமல்லாது, மருமகன்கள், சம்மந்த வீட்டு மனிதர்கள், ஜமாத் நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் என்று பல நேரங்களில் தோலய்யாவின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாய் இருப்பது அவர் எல்லோருக்கும் இப்படி வடித்துக் கொட்டுவது தான் என்று புகார் வாசித்துக் கொண்டே இருந்தார்கள் மனிதர்கள், அந்தப் புகாரின் சாரத்தில் ஒளிந்திருக்கிற மனிதர்களின் சுயநலம் தோலய்யா வீட்டு நெய்சோற்றின் வாசத்தில் பல்லிளித்துக் கொண்டிருந்ததை அந்த ஒரே ஒரு இரவு உணவின் போது என்னால் உறுதியாக உணர முடிந்தது.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நாடெங்கும் மத அடிப்படைவாதிகள் எழுச்சி பெற்றிருந்தார்கள், அப்போது பள்ளிவாசலில் ஜமாத் தலைவராக இருந்தார் தோலய்யா, பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின் போது யாரோ சில விஷமிகள் கல்லெறிந்து நிலைமை மோசமாக இருந்த ஒரு காலகட்டத்தில் ரம்ஜான் ஊர்வலம் ஒன்றை நடத்த வேண்டியிருந்தது, பெரும் கலவரம் நிகழும் சூழல் உருவாகி இருந்தது அன்று, இரவு முழுவதும் ஊர்வலத்தை எப்படி எல்லாம் அமைதியாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார் தோலய்யா, இறுதியாக அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இப்படிச் சொன்னார் "அல்லா கருணையும், பண்பும் நிரம்பியவன், நாமும் அப்படியே இருக்க வேண்டும்". சுற்றி இருந்த பெரியவர்களுக்கு இன்னும் குழப்பம் தீர்ந்தபாடாக இல்லை, ஒரு அவநம்பிக்கையோடு வீடு திரும்பினார்கள்.

046c5_Love others

மறுநாள் காலையில் ஊர்வலம் துவங்கி மெல்ல நகரத் துவங்கியது, சில இந்து மத அடிப்படைவாதிகள் எந்த நேரத்திலும் கல்லெறிந்து கலவரம் உண்டாக்கத் தயாராக இருந்தார்கள், பழிக்குப் பழி, பிள்ளையாருக்குக் கல்லெறிந்தவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று முன்னிரவில் முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். தோலய்யா எல்லோருக்கும் முன்பாக நடக்கத் துவங்கினார், அவரது நடையில் ஆழமான அமைதி குடி கொண்டிருந்தது.

பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக வந்ததும் தோலய்யா தனது செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே புகுந்தார், பிறகு மெல்லிய குரலில் "குருக்களே இங்க வாங்க" என்று கோவிலுக்குள் இருந்த பிச்சைக் குருக்களை வெளியே அழைத்தார், பிச்சைக் குருக்கள் பதட்டமடைந்து வெளியே வந்து தயங்கியபடி நின்றார், தனது நீளமான அங்கியைப் போன்றிருந்த சட்டைப் பைக்குள் கையை நுழைத்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்தார் தோலய்யா, "பள்ளிவாசல் ஜமாத் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணுங்க, இன்னைக்கு ரம்ஜான் ஊர்வலம் நல்ல படியா நடக்கணும்னு வேண்டிக்குங்க ஐயா" என்று சொல்லி விட்டுத் திரும்பினார்,

அந்தக் கணத்தில் இருந்து சுற்றி இருந்த அனல் காற்று தென்றலாய் மாறிப் போனது, முதல் முறையாக மதநல்லிணக்கத்தை ஒரு தனி மனிதனாய் உருவாக்கிக் காட்டினார் தோலய்யா, தனது தீவிர இஸ்லாமியப் பண்பாடுகள் எதையும் உடைக்காமல், மாற்று மதத்தவரின் மனங்களை வென்று தன்னந்தனியாகத் திரும்பி கூட்டத்தில் கலந்து விட்டார் தோலய்யா, இந்து மத இளைஞர்கள், பகுதிப் பெரியவர்கள் என்று எல்லோரிடத்திலும் ஒரு சமூகத்தின் அமைதியை வெகு நேர்த்தியாகக் கட்டமைத்தார் தோலய்யா, அந்த ஊர்வலத்தில் பல இந்துக்களும் இன்று வரையில் கலந்து கொள்வதற்கு ஒரு முன்னோடியாய் இருந்தவர் தோலய்யா.

தனது மனநிலை சரியில்லாத ஒரு தம்பியை எந்தக் குறைகளும் இன்றி ஒரு குழந்தையைப் போல அவர் கவனித்துக் கொண்டார், மீரா ஐயா என்று அழைக்கப்பட்ட அந்த மனிதரின் ஒவ்வொரு வேளை உணவையும் தனது மிகப்பெரிய கடமையாக அவர் கருதினார், அந்தக் கடமைக்குள் அழுந்திக் கிடக்கிற ஒரு பாசமுள்ள அண்ணனை வேறெவரும் உணர்ந்தார்களோ இல்லையோ நான் உணர்ந்திருக்கிறேன்.

"டேய் மீரா, சாப்பிடும்போது "தொனத்தொனன்னு பேசாத", "கீழ சிந்தாத", "கொழம்பு ஊத்திக்க", என்று அவரது ஒவ்வொரு திவளைச் சோற்றையும் கண்கள் பணிக்கப் பார்த்திருப்பார். மன அளவில் தனது தம்பியை எந்தத் தாக்கங்களும் இல்லாமல் அவர் ஒரு உறை போலப் பார்த்துக் கொண்டார். தானும் இந்த சமூகத்தில் ஒரு உறுப்பினர் தான் என்கிற நம்பிக்கையை மீரா ஐயாவின் கண்களில் வரவழைத்துக் கொடுத்ததில் தோலய்யாவுக்கு ஒரு மிகப் பெரிய பங்குண்டு.

தெருக்களில் சுற்றித் திரிகிற ஒவ்வொரு மனநிலை சரியில்லாத மனிதருக்கும் தோலய்யாவைப் போல அன்பான ஒரு அண்ணன் இருப்பான் என்கிற வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.மன நிலை சரியில்லாத மனிதர்களை தோலய்யாவை நான் சந்தித்த பின்பு, முன்பு என்று என்னால் தெளிவாகப் பிரித்தறிய முடிந்தது.

feetprings in sand

தோலய்யா இரண்டு நாய்களை வளர்த்தார், அந்த நாய்களோடு அவர் தனது ஓய்வு நேரங்களில் திண்ணையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பார், அந்த உரையாடல் எனது அன்றாட அலுவலக உரையாடல்களை விட மிக மேன்மையானது என்று இப்போது உணர்கிறேன் நான், அத்தனை நெருக்கமாக விலங்குகளோடு உரையாடுகிற மனிதர்களை நான் இனியும் சந்திக்கப் போவதில்லை, "டேய், அவென் தட்டுக்கு எதுக்குப் போற நீ, தள்ளு இங்க வா" என்று பெரிய நாயை அவர் அழைத்தவுடன் அவரது குருந்தாடிக்கு மிக நெருக்கமாகச் சென்று நக்கி ஈரம் செய்யும் அந்த நாய்" குழந்தைகளின் மலையேற்றம் போலவே அந்த நாய்களையும் அவர் பார்த்துக் கொண்டிருப்பார். உயர் தத்துவங்களிலும், உலக அறிஞர்களின் நூல்களிலும் வாழ்க்கையைத் தேடும் நம்மைப் போன்ற பலருக்கு தோலய்யா எளிமையாக வாழ்வதையே உயர் தத்துவமாகக் காட்டினார்.

கடைசியாக நான் தோலய்யாவை அவரது பேத்தியின் திருமணத்தில் பார்த்தேன், இஸ்லாமியத் திருமணங்களில் இயல்பாகவே இருக்கும் மரபுகளை மீறி அது ஒரு பன்மதத் திருமணம் போலிருந்தது, ஒரு தேவாலய மண்டபத்தில் நிகழ்ந்த அந்தத் திருமணத்துக்கு பழனிக்கு மாலை போட்டிருக்கும் இந்துமதக்காரர்கள், பிச்சைக் குருக்களின் மகன்கள், பாதிரியார் என்று பலரும் பிரசன்னமாயிருந்தார்கள், பல்வேறு பணிகளில் மும்முரமாய் இருந்த தோலய்யாவின் அருகில் சென்று "ஐயா" என்றேன். யாரென்று பார்க்காமலேயே "வாங்கத்தா, வாங்க" என்று சொல்லியபடி திரும்பினார்.

பிறகு "கலா மயனா?", என்கிற வழக்கமான அவரது முத்திரைச் சிரிப்போடு எனது கைகளைப் பிடித்துக் கொண்டார் அவர், ஒரு குழந்தையைப் போல அவர் பின்னால் நடந்து சென்றேன், தனது பேரன்களில் ஒருவனை அழைத்து "டேய் மூசாக்குண்டு, அண்ணன சாப்பிடக் கூட்டிப் போ" என்று என்னை அந்தச் சிறுவனிடம் ஒப்படைத்தார், உடல் இளைத்திருந்தாலும், அவரது விருந்தோம்பல் பெருத்து நகர முடியாமல் போன தருணம் அது. தொலைவில் இருந்து அவரைப் நீண்ட பார்த்துக் கொண்டே இருந்தேன். அதுதான் அவரை உயிரோடு கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு என்பதை உணராமலேயே.

தோலய்யவைப் போன்ற மனிதர்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள், ஒரு நல்ல மனிதராக, ஒரு நேர்மையான வணிகராக, பல்லிகளைப் போல ஒட்டிக் கொள்கிற பேரப்பிள்ளைகளின் தாத்தாவாக, விருந்தினர்களை மட்டுமன்றி உணவு நேரத்தில் வீட்டுக்கு வருகிற மனிதர்களின் பசி போக்கும் அட்சய பாத்திரமாக, மீரா ஐயாவின் அன்புக்குரிய அண்ணனாக, நாய்களோடு உரையாடும் ஒரு எளிய மனிதராக, பிள்ளையார் கோவிலுக்குள் சென்று பள்ளிவாசல் ஜமாத்தின் பெயரில் அர்ச்சனை செய்யச் சொல்கிற மத நல்லிணக்கவாதியாக, எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது வாழ்க்கையை சக மனிதர்களோடு கொண்டாடுகிற ஒரு உயர்ந்த மனிதராக அவர் வாழ்க்கையை எதிர் கொண்டார், அவரது வாழ்க்கையின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அந்த வீதியில் இருந்து துவங்கி உலகெங்கும் கிளை விட்டுக் கொண்டே இருக்கும் என்று உள்ளம் ஏங்குகிறது.

98190-6

இஸ்லாமியப் புனித நூலின் ஒரு இடத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார்கள்,

"யாரொருவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்வோடு வைத்திருக்கிறானோ, அவன் கடவுளை அடைகிறான்",

தோலய்யாவுக்காக இந்தச் சொற்களை நான் இப்படி மாற்றி எழுதுவேன்,

"யாரொருவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்வோடு வைத்திருக்கிறானோ அவன் கடவுளாகவே ஆகிப் போகிறான்".

ஆம், நண்பர்களே, உயர்ந்த மிகச் சிறந்த மனிதர்கள் வரலாற்றின் பக்கங்களில் இருப்பதில்லை, மனிதர்களின் உள்ளங்களில் எளிய சக மனிதர்களாய் வாழ்ந்திருப்பார்கள்.

******************

கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 28, 2011

ராஜபார்ட் சேவுகன். (சிறுகதை)

53799

"டேய், பெரிய பயலே, வாடா இங்க, கொஞ்சம் தலப்பாயையும், அங்கியையும் எடுத்துக் குடுக்கிறியா" என்று மகனை அழைத்தார் சேவுகன், நாற்காலியை எடுத்துப் போட்டு பாண்டி என்கிற வீரபாண்டியன் அப்பாவின் தலப்பாயையும் அங்கியையும் பரணில் இருந்து எடுத்துக் கீழே போட்டான், தலை வைக்கும் இடத்தில் அழுக்குப் படிந்து பிசுபிசுப்பாக ஒட்டிக் கொண்டிருந்தது, பார்க்கவே அருவருப்பாகவும், குமட்டிக் கொண்டும் வந்தது பாண்டிக்கு, சேவுகன் அந்தத் தலைப்பாகையையும், அங்கியையும் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

"மேகலா, அந்த ஊசியையும் நூலையும் கொஞ்சம் எடுத்துக் குடு புள்ள" என்று உரக்கக் குரல் கொடுத்து விட்டு அங்கியில் படிந்திருந்த தூசியைத் தட்ட ஆரம்பித்தார் சேவுகன் என்கிற ராஜபார்ட் சேவுகன். அங்கியின் இடது பக்கத்தில் இருந்த பூ கிழிந்து கீழே விழும் அளவுக்கு நைந்து போயிருப்பதைப் பார்த்தவுடன் அதைச் சரி செய்ய வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.

"யப்பா, எதுனாச்சும் திருவிழாவுக்கு புக் பண்ணியிருக்காகளா?" என்று கேட்டபடி ஊசியில் கோர்க்கப்பட்ட நூலை நீட்டினாள் மேகலா, "ஆமா புள்ள, சாரங்கோட்டத் தேரு ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தேன் ஓட்டப் போறாகளாம், அம்பலாரு நம்ம சின்னச்சாமியக் கூப்புட்டு நேத்து சொல்லி இருக்காரு, தடபுடலா தேரு ஓட்டிப்புடனும் சின்னச்சாமி, உங்க ட்ரூப்புத்தேன் நாடகம்னு" சொல்லி அட்வான்சும் குடுத்துட்டாராம், சின்னச்சாமி காலைல டீக்கடைல பாத்து சொன்னான். ரெண்டாயிரம் தரேண்ணே, அங்கியும், தலைப்பாயும் மட்டும் ரெடி பண்ணி வைங்கன்னான், இந்த அங்கி கொஞ்சம் பூக் கிழிஞ்சாப்ல இருக்கு, அதத் தச்சுப்புடுவம்னு உக்காந்தேன்" என்று சொல்லியபடி கண்ணுக்கு அருகில் ஊசியையும், ஊசிக்கு அருகில் நூலையும் வைத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தார் சேவுகன். குறி நான்காவது முறையாகத் தவறியது.

மேகலா, சேவுகனுக்கு அருகில் முட்டி போட்டு அமர்ந்தாள், "குடுங்கப்பா நான் தச்சுத் தாரேன்" என்று அங்கியைப் பறித்து மடியில் வைத்துக் கொண்டு அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள், அப்பா இப்போதே கிட்டத்தட்ட ராஜபார்ட் ஆகி விட்டிருந்தார், நீண்ட நாளைக்குப் பிறகு அப்பாவுக்கு ஒரு நாடகம் புக் ஆகி இருக்கிறது, பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்பா நாடகங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டங்கள் மேகலாவின் நெஞ்சில் நிழலாடியது, அப்பா ஒரு சினிமா நடிகரைப் போலக் காலையில் எழுந்து பல மனிதர்களைச் சந்திப்பார், சிலர் பணத்தை வைத்துக் கொண்டு கெஞ்சுவார்கள், "அண்ணே, சரோஜா வள்ளியா இருந்தா சேவுகன் தானப்பா சரியா வரும்னு மணியக்காரய்யா சொல்றாக, அவுக வார்த்தைக்காவது வெல குடுங்க, கூட நானூறு ஐநூறு கூடச் சேத்து வாங்கிக் குடுக்குறேன்" என்று கெஞ்சுபவர்களை விரட்டி அடிப்பார் அப்பா, "கைநீட்டிக் காசு வாங்குன பொறவு வரலைன்னு சொல்றது அம்புட்டு நாயமா இருக்குமா தவசி, இந்தப் பயலுவ புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்கே" என்று பக்கத்துக்கு வீட்டுத் தவசி ஐயாவிடம் புலம்புவார்.

அப்பாவின் பயண எற்பாடுகளில் அம்மா தீவிரமாக இருப்பாள், அப்பாவுக்குத் தூதுவளைத் துவையல் செய்வது, அவரது வேட்டியை மடித்து தோல்பையில் வைப்பது, அவரது அங்கியை அழுக்கில்லாமல் ஈரத் துணியால் துடைத்து வைப்பது என்று ஏறத்தாழ ஒரு ராஜபார்ட் மனைவியாகி விடுவாள் அம்மா, அந்த நேரங்களில் அம்மாவிடம் எதுவும் கேட்க முடியாது, "இரு புள்ள, அப்பா கெளம்பிக்கிட்டு இருக்காரில்ல, அந்த மனுஷன் நல்லா இருந்தாத்தேன் எல்லாத்துக்கும் சோறு தண்ணி கெடைக்கும்" என்று சொல்லியபடியே அப்பாவைத் தெருமுனை வரை வழி அனுப்பி விட்டுத்தான் நிகழ் காலத்துக்கு வருவாள் அம்மா. எத்தனை நெருக்கமான கணவன் மனைவி என்று இப்போது தோன்றியது மேகலாவுக்கு, மேகலா திருமண வயதைத் தாண்டி வெகு காலமாய் ஒரு நல்ல பயலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள், அந்த நல்ல பயலை எங்கும் காணவே முடியாமல் திரிந்து அலைகிறார் சேவுகனும், காசு வாங்காமக் கல்யாணம் பண்ணிக்கிற நல்ல பயலுக இன்னும் இருக்காங்கே என்று சேவுகனும் சரி, மேகலாவும் சரி இன்னும் தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

"ஏலே,பாலு, அது என்ன பேரு சொன்ன?", பத்தாம் வகுப்புப் படிக்கும் இளைய மகனை அழைத்துக் கேட்டார் சேவுகன், "ஜாமண்ட்ரி பாக்சுப்பா" என்று அலுக்காமல் இம்முறையும் சொன்னான் பால்பாண்டி, இந்த மாதத்தில் மட்டும் பதினோராவது முறையாக இதே கேள்வியைக் கேட்கிறார் சேவுகன், அவனும் அலுக்காமல் அப்பா இன்னைக்கு வாங்கி வருவார், நாளைக்கு வாங்கி வருவார் என்று நம்பிக்கையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான், தேர்வுகள் வருவதற்குள் ஜாமண்ட்ரி பாக்சை அப்பா எப்படியும் வாங்கித் தந்து விடுவார் என்று பால்பாண்டி நம்பினான். மேகலா அப்பாவின் அங்கியைத் தைத்து முடித்திருந்தாள், அப்பா, அங்கியைக் கையில் ஏந்திக் கொண்டு ஒரு விதமான ஏக்கத்தோடு கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார், அவருடைய நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன,

dali-persistence-of-time

இதே அங்கியோடு தான் மிகச் சிறந்த நாட்டுப் புறக் கலைஞர் என்கிற விருதை அவர் எம்.ஜி.யாரின் கையால் வாங்கி இருந்தார், எத்தனை பெரிய பெரிய மனிதர்கள், குழல் விளக்குகள், மிகப் பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மேடையில் முதலமைச்சரின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தைப் பார்த்த போது எப்போதும் இல்லாத ஒரு நிறைவு உண்டாகி இருந்தது சேவுகனுக்கு, ஊர் ஊராகச் சுற்றி வந்து இந்த மேடை நாடகத்தை விடாது நடத்திக் கொண்டிருந்த வைராக்கியத்தின் விலையை அவர் அந்த மேடையில் பெற்றிருந்தார், தனது வாழ்க்கையின் மிக உயரமான இடத்தைத் தான் அடைந்து விட்டதாக அன்று சேவுகன் உணர்ந்தார். ஆனால், விருதுகளையும், உயரங்களையும் தாண்டி வாழ்க்கையின் எளிதான உண்மைகள் எல்லா மனிதர்களையும் துரத்தி வருவதை சேவுகனால் மட்டும் என்ன தடுத்து விடவா முடியும்??

சாரங்கோட்டைத் தேர் நாளும் வந்து விட்டது, நீண்ட நாட்களுக்குப் பிறகு தோட்டத்தில் அமர்ந்து ஒருமுறை நாடகப் பாடல்களை நினைவு படுத்திக் கொண்டார் சேவுகன், மேகலா, இடையிடையில் வந்து அப்பாவுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தாள், சின்னச்சாமி வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழையவும், அப்பா தலைப்பாகையை எடுத்துத் தனது பைக்குள் வைத்துக் கொள்ளவும் சரியாக இருந்தது, "அண்ணே, கெளம்புவமா, ஆர்மோனியம் நேரா மேடைக்கு வந்திர்றேன்னு சொன்னான், அது என்னவோ ரெண்டு மூணு பட்டன் போயிருச்சாம், சரி பண்ணிக்கிட்டு வர்றேன்னு சொன்னான்" என்ற சின்னசாமியையும் அவனது முகத்தில் நீண்ட நாளைக்குப் பிறகு தெரியும் மகிழ்ச்சியையும் கவனித்துப் பார்த்தார் சேவுகன்.

சில நேரங்களில் உலகம் மிக அழகானதாய் இருக்கிறது, நமக்கு நெருங்கிய மனிதர்களின் கண்களில் தெரியும் மகிழ்ச்சியில் அத்தகைய உலகின் நிழல் படிந்திருக்கும். வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் மேகலாவிடம் "அம்மா, பாண்டி வந்ததும் நீ கடைக்குப் போ", என்று சொல்லி விட்டுத் திரும்பினார், சுருக்கென்றது சேவுகனுக்கு, "அவுக அம்மாவே நின்னாப்புல இருக்குடா தம்பி" என்று சின்னச்சாமியிடம் சொன்னபோது சேவுகனின் கண்களில் மனைவியின் நினைவுகள் தேங்கிக் கிடந்தன.

அம்பலாரின் வீட்டுக்கு அருகில் வண்டி நின்றதும், சேவுகன் கீழே இறங்கிக் கொண்டார், சுப்பிரமணி என்ற அம்பலார் வாசலில் நின்றபடி வரவேற்றார், “ஏய், வாப்பா சேவுகா, எம்புட்டுக் காலமாச்சு நம்ம வீட்டுல கை நனைச்சு, அந்தப் பகட்டும், பவிசும் ஒன்னைய விட்டுப் போகலையே, எல்லாம் எம்.ஜி.யாரு குடுத்த செல்லம்" நாடகம் போடுவதும், நாடக நடிகர்களை வீட்டுக்குள் அழைத்துச் சாப்பிட வைப்பதும் பெருமைக்குரிய காலமாய் இருந்த காலத்தில் இருந்து அம்பலார் இப்படித்தான் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டிருந்தார், நீண்ட நாளைக்குப் பிறகு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி,

பறையனும் பள்ளனும் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்பலக்காரர்களின் வீட்டில் நாடக நடிகர்களுக்கு மட்டும் சாதி இல்லாமலிருந்தது சேவுகனுக்கு ஆச்சரியமாய் இருக்கும். "அதுக்காக எல்லாப் பறையனும், பள்ளனும் என்ன நாடகத்துலயாடா தம்பி நடிக்க முடியும்" என்று ஒரு முறை சின்னச்சாமியிடம் கேட்டார் சேவுகன், "இல்லண்ணே, இவங்களுக்கு உள்ளுக்குள்ள பொசுபொசுன்னு தான் இருக்கும், ஆனாலும், காலங்காலமா நாடகக் கோஷ்டிக்கு வீட்டுக்குள்ள சோறு போட்டுப் பழகினதுநாள நம்மளையும் உள்ள கூப்புடுறாங்கே" என்றான் சின்னசாமி. "இருக்கும்டா" என்று சொல்லியபடி வேலையில் வந்து நின்றார் சேவுகன். பிறக்கும் போதே கிடைக்கிற உயர் நிலையை யார் தான் வெறுப்பார்கள், பிறந்த பிறகும் அந்த உயர் நிலைகளைத் தேடித்தானே ஒவ்வொரு மனிதனும் நகரத் துவங்குகிறான் என்று சம்பந்தமே இல்லாமல் தோன்றியது சேவுகனுக்கு.

Carnival_of_Time_Artwork

"ஒன்னுக்கு பச்சக் கலர்ல இருக்கச் சொல்லுங்க, அவர நான் அம்பலார்னு ஒத்துக்குறேன்" என்று ஒரு முறை சின்னச்சாமி போதையில் சொன்னது நினைவுக்கு வந்தது. சிரித்தபடி மேடையை நோக்கி நகரத் துவங்கினார் சேவுகன், மேடையின் முகப்பு விளக்குகள் ஒளிரத் துவங்கி இருந்தன, தொலைவில் இருந்து பார்த்தபோது அந்த நாடக மேடை அத்தனை அழகானதாக இருந்தது, காற்றில் அசையும் அதன் துணித் தூண்கள் ஏதோ ஒரு அரசவையின் மிச்சம் போல மனசுக்குள் தொக்கி நின்றது.

மேடையின் பின்புறமாக தட்டியை விலக்கிக் கொண்டு சென்ற போது அங்கே சரோஜாவும், கணேசனும் அமர்ந்து ரோஸ் பவுடர் பூசிக் கொண்டிருந்தார்கள், சரோஜாவின் முதுகுக்குப் பின்புறம் இருந்த தட்டியை கொஞ்சம் விலக்கி யாரோ ஒரு விடலைப் பையன் பார்த்துக் கொண்டிருந்தான், சேவுகன் உள்ளே நுழைந்ததும் எழுந்து காலைத் தொட்டு வணங்கினான் கணேசன், "இருக்கட்டும்டா, இன்னும் பழைய காலத்துலேயே இருக்கியேடா" என்று அவனைத் தொட்டுத் தூக்கினார் சேவுகன். பையில் இருந்து துண்டை எடுத்துக் கீழே விரித்துக் கொண்டு அவர்களோடு அமர்ந்து தன்னுடைய அலங்காரத்தைத் துவக்கினார் சேவுகன்.

சரோஜாவின் தங்க முலாம் பூசிய நகைகளைப் பார்த்தவுடன் பால்பாண்டியின் "ஜாமண்ட்ரி பாக்ஸ்", வீரபாண்டியின் "சைக்கிள் டயர்", மேகலாவின் "உடைந்த ஜிமிக்கி" எல்லாம் சேவுகனின் நெஞ்சில் வந்து அழுத்தியது. அங்கியை அணிந்து கொண்டு ஒரு முறை தலைப்பாகையை வைத்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தார் சேவுகன், கம்பீரமாய் ஒரு அரசனைப் போல அங்கே ராஜபார்ட் நின்று கொண்டிருந்தார், இன்னும் எட்டு மணி நேரத்திற்கு அவர் தான் இந்தப் பகுதி முழுவதற்கும் ராஜா, கதாநாயகன், அம்பலார், மணியக்காரர் எல்லாமே.

வந்தனம் மோவ்வ்வ்வவ்வ்வ்………..நாளும் தெரிஞ்ச சனம், பாரும் புகழும் தினம் வந்தனம் மோவ்வவ்வ்வ்வ்…..ஹார்மோனியம் வெகு உற்சாகமாகத் தனது உச்சஸ்தாதியில் பாடத் துவங்கி இருந்தான், சேவுகனின் வாழ்க்கையில் இன்னுமொரு நாடகம் துவங்கி இருந்தது, அந்தக் கலவையான இசையைக் கேட்டவுடன் ஒரு புதிய பலம் பெற்று விடுகிறார் சேவுகன், தனது பிறப்பு, தனது சிறுமையாக இந்த ஊர் சொல்லும் சாதி எல்லாவற்றையும் மறந்து ஒரு கலைஞனாகி விடுகிறார் சேவுகன், கலை மிகக் குறைந்த நேராமாகிலும் அவரை ஒரு மனிதனாக வைத்திருக்கிறது, அதற்காகவே அவர் நாடகங்களை விடாமல் நடிக்கிறார். நேரம் செல்லச் செல்ல காற்றும், இசையும், மக்கள் திரளுமாய் ஒரு புத்தம் புது உலகம் மின்னத் துவங்கி இருந்தது. தனது பகுதியை எதிர் நோக்கி மேடையின் பின்புறமாய் அமர்ந்திருந்தார் சேவுகன்.

அப்போது தான் அந்தக் குழப்பமான குரல் கேட்டது சேவுகனுக்கு, மேடையில் ஏறிக் கணேசனிடம் சில இளைஞர்கள் "தேவர் பாட்டுப் பாடுறா, நாடகம் ஆரம்பிச்சு ஒரு மணி நேரமாச்சு இன்னும் பாடலைன்னா என்ன அர்த்தம்" என்றபடி குழப்பம் செய்து கொண்டிருந்தார்கள், ஊரில் தகராறுகள் வந்ததில் இருந்து நாடகத்தில் எந்த சாதிப் பாடலும் பாடக் கூடாது என்று தடை வாங்கி வைத்திருக்கிறார்கள், இப்போது இவர்கள் குழப்பம் செய்தால் இந்த நாடகமும் நடக்காது போலிருக்கிறதே என்று கவலையோடு மேடையை நோக்கி நடந்து திரைக்குப் பின்புறம் நின்று கொண்டார் சேவுகன், கணேசன் பிடிவாதமாய் "எந்தப் பாட்டும் பாடக் கூடாதுன்னு போலீஸ்ல சொல்லி இருக்காகண்ணே" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தான். "டேய், தேவரையா பாட்டுப் போடலைன்னா நாடகமே வேண்டாம்டா, அடிச்சுப் பத்துங்கடா எல்லாரையும்" என்றபடி ஒரு முடிவோடு சில இளைஞர்கள் வந்திருந்தார்கள், ஒதுக்குப் புறமாய் சில குரல்கள் இப்போது தெளிவாய்க் கேட்கத் துவங்கின சேவுகனின் செவிகளில்.

0

"டேய், தேவர் பாட்டுப் போட்டா, அம்பேத்கர் பாட்டுப் போடணும்டா" என்றவாறு புதுக்குடி இளைஞர்கள் சிலர் எழுந்து நிற்கத் துவங்கி இருந்தார்கள். நாடகம் தடைபட்டிருந்தது, நீண்ட காலம் கழித்துக் கிடைத்த ஒரு நாடக வாய்ப்பை இந்தப் பாழும் சாதி வந்து தின்னப் பார்க்கிறதே என்று சேவுகனின் அடிவயிற்றில் இருந்து கவலைகள் உருளத் துவங்கின. இறங்கி நடக்கத் துவங்கினார் சேவுகன், சாரங்கோட்டை இளைஞர்களைப் பார்த்து "யப்பா, நல்லா இருக்குற ஊருக்குள்ள கலவரம் பண்ண வேணாம், எதுனாலும் பேசிக்கலாம்” என்று சமாதானம் செய்யத் துவங்கினார், திடுமென்று ஒரு கல் வந்து மேடைக்கு அருகிலோ விழுந்தது, தொடர்ந்து யாரோ யாரையோ அடிக்கும் சத்தமும், கூச்சலும் தொடர நீண்ட காலத்துக்குப் பிறகான ஒரு நாடக வாய்ப்பை இழந்தார் ராஜபார்ட் சேவுகன்.

மறுநாள் காலையில் எழுந்து திண்ணையில் அமர்ந்து இரவு வீட்டுக்கு வந்து கழற்றி வாய்த்த அங்கியை வெறித்துப் பார்த்தபடி இருந்தார் சேவுகன், தொலைவில் சின்னச்சாமியின் வண்டிச் சத்தம் கேட்டதும், முகத்தைத் துடைத்துக் கொண்டார், கண்பார்வைக்கு அருகில் வந்ததும் தான் தெரிந்தது சின்னச்சாமியின் வண்டியின் பின்புறமாக அம்பலார் அமர்ந்து இருப்பது, வாங்க, வாங்க, பெரியவுகெல்லாம் வீட்டுக்கு வந்திருக்கீக, உக்காருங்க, டேய் பாலு அந்த ஸ்டூல எடுத்திட்டு வா, என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து மேகலாவிடம் தேநீர் போடச் சொல்லி விட்டு ஓட்டமும் நடையுமாக வந்தார்.

"யப்பா, சேவுகா, என்னமோ, நல்லாத் தடபுடலா நடந்து முடிய வேண்டியது, கடைசி நேரத்துல இப்படி ஆயிப் போச்சு, மனசுல ஒன்னும் வச்சுக்க வேண்டாம், இந்தா, பேசுன படி பணம், எப்பா சின்னச்சாமி குடுப்பா" என்று ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டினார் சுப்பிரமணி என்ற அம்பலார்.

"ஐயா, தப்பா நெனச்சுக்காதீங்க, என்னடா சேவுகன் இப்புடிச் சொல்றானேன்னு!!, வேலை முடிஞ்ச பிறகு தான் எனக்குக் கூலி வாங்கிப் பழக்கம், நாடகம் முடியுற வரைக்கும் யாருகிட்டயும் அஞ்சு பைசா வாங்கி எனக்குப் பழக்கம் இல்ல, தயவு பண்ணி இன்னொரு வாட்டி நாடகம் முடிஞ்ச பெறகு சேத்துக் குடுங்க" என்றார். அம்பலாரும், சின்னச்சாமியும் மலைத்துப் போய் சேவுகனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள், "இல்ல, சேவுகா, இப்ப இருக்குற நெலமைக்கி வெவரம் புரியாமப் பேசுறியே" என்று ஏதோ பேசத் துவங்கிய அம்பலாரை இடை நிறுத்தி மிடுக்காகவும் உறுதியான குரலிலும் சொன்னார் சேவுகன்.

imagesCAIGIQNY

நெலம மோசமாப் போனா திருடியும், அண்டியும் பொழைக்க முடியாது ஐயா, ராஜபார்ட் சேவுகன்னு சொன்னா நாளைக்கு யாரும் காசுக்கு மாரடிச்ச பயன்னு சொல்லக்குடாது பாருங்க" அந்தப் பேரும், அடையாளமும் தாயா எனக்கு வேணும், காசெல்லாம் நெறையப் பாத்துட்டேன்" என்றபடி எழுந்தார்.

அம்பலார், மெல்ல எழுந்து கிளம்புவதற்குத் தயாரானார், சின்னச்சாமியும் எழுந்து கொள்ள, மேகலா தேநீர்க் கோப்பைகளை எடுத்துக் கொண்டு நடக்கத் துவங்கினாள், ஒரு நல்ல பயலும் கெடைக்கக் கூடாது எனக்கு, அப்பாவோடையே இருந்து செத்துரனும் போலத் தோன்றியது அவளுக்கு, வீட்டுக்குள் பாண்டி என்ற வீரபாண்டியன் அப்பாவின் தலைப்பாகையைக் கையில் எடுத்து மெல்ல வருடிக் கொண்டிருந்தான், முன்பிருந்த அழுக்கின் பிசுபிசுப்பும், குடலைப் புரட்டும் நாற்றமும் இப்போது அதில் இல்லை. மாறாக ஒரு நேர்மையான கலைஞனின் வரலாற்று நறுமணம் வீடெங்கும் பரவிக் கிடப்பதை உணரத் துவங்கினான்.

************

« புதிய இடுகைகள் - பழைய பதிவுகள் »

பிரிவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 5,185 other followers

%d bloggers like this: