நான் தமிழனா? இந்தியனா?

nr58-1

"நாட்டுப்பற்று என்பதும் தேசத்தின் மீதான காதல் என்பதும் இன்னொரு மனிதக் குழுவை வெறுக்கிற அல்லது காழ்ப்புணர்வு கொள்கிற ஒரு உணர்வு"

என்று ஒரு வாதத்தை சமூக நெறிகள் பற்றிய ஆய்வாளர் “பால் கோம்பெர்க்” வைக்கிறார். அது ஓரளவுக்கு உண்மையாகத் தான் இருக்க வேண்டும், இந்திய தேசிய வடிவமும் அதன் ஆளுமை மையங்களும் இடைவிடாது ஒரு அண்டை நாட்டின் மீது வளர்க்கும் காழ்ப்புணர்வு இதற்குச் சான்றாகத் தோன்றுகிறது, அரசியல் நிலையிலான பல்வேறு முரண்பாடுகளைக் கடந்து நம்மைப் போலவே அன்றாடம் வாழ்க்கையை நோக்கிப் போராடுகிற எண்ணற்ற மக்களைக் கொண்ட இன்னொரு தேசத்தை வெறுக்கவும் அதன் மீதான நமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்கவும் நமக்கான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நாமும் அதனைப் பின்பற்றி முகம் தெரியாத மக்களை, அந்த மக்களின் அழகிய குழந்தைகளை, அவர்களின் வழிபாட்டு முறைகளை, அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை வெறுக்கத் துவங்கி இருக்கிறோம்.

பல்வேறு இனக்குழுக்களின் நசுக்கப்பட்ட அடையாளங்கள் அடக்குமுறைகளின் உடைபாடுகளில் சிக்கி முனகிக் கொண்டிருப்பதை இந்திய ராணுவத்திற்கு எதிராக அஸ்ஸாம் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் துவங்கி ராஜதானி விரைவு ரயிலின் கடத்தல் வரையிலான பல்வேறு செயல்பாடுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உச்சமாக உலகமே இன அழிப்பு என்று எதிர்க்குரல் கொடுக்கிற இனப்படுகொலையை, சிங்களப் பேரினவாதத்தை நியாயம் செய்து ஒரு பக்கம் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிற தேசிய வடிவம் தங்கள் நாரயணங்களை அனுப்பி தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற அமெரிக்கா வரை பறந்து பறந்து தனது தேசிய வடிவத்தை வார்ப்பில் வடிக்கிறது.

nation-national-poster

இந்த நிலைகளில் “நான் தமிழனா? இல்லை, இந்தியனா?” என்றொரு கேள்வி விடுதலை பெற்ற இந்தியாவில் வாழும் தமிழ் இளைஞர்களை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த வீச்சுடன் எதிர்கொள்கிறது. இந்தக் கேள்வி எழுந்ததன் காரணிகளை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவை இல்லை என்றாலும், எனது மொழியையும், எனது பண்பாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிற எனது உறவுகள் என்று நான் கருதுகிற தமிழினத்தின் மீதான ஒரு பேரினவாதப் போரை ஆதரித்து அதன் அழிவிற்குத் துணை நிற்கிற தேசியத்தின் வடிவம் எனக்கானதா? என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்துதான் மேலே தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கேள்வியின் மூலம் ஒளிந்து கிடக்கிறது.

என் பள்ளி நாட்களில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது அதனை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட எனது சக மாணவனைப் பள்ளியின் வழிபாட்டுக் கூடத்தில் அடித்து என்னை ஒரு தேசப் பற்றாளனாக அடையாளம் கண்டிருக்கிறேன், இந்தியா என்கிற கோட்பாட்டை, தேசிய வடிவத்தை எனக்குள் ஊற்றி வளர்த்த எனது பள்ளிகளின் வகுப்பறைகளும், கல்லூரியின் விளையாட்டு அரங்குகளும், என்னை விட்டு விலகி நீண்ட தூரத்தில் இருப்பதைப் போலவே, தேசத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கையும் சிதைந்து, சிதிலம் அடைந்து இருக்கிறது, இந்தச் சூழலில் தேசியம் என்கிற கருத்தாக்கத்தின் வேர்களைத் தேடி பயணம் செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகிறது.

1993 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தின் “லாத்தூர்” மற்றும் “உஸ்மானாபாத்” மாவட்டங்களில் நிகழ்ந்த மிகப்பெரும் கொடிய நிலநடுக்கத்தின் போது, புவி அமைப்பியல் மாணவர்களின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டி எனது தீவிரமான தேசியச் சிந்தனைகளை வலிமைப்படுத்தி வைத்திருந்தேன். எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்த அந்த தேசப்பற்றின் சுவடுகள் இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் எனக்குள் முற்றிலும் இல்லை, நீர்த்துப் போன எனது தேசியம் பற்றிய சிந்தனைகளோடு தேசியம் பற்றிய எனது பார்வை மாறுபாட்டினை அடைந்து வேறு திசையில் பயணிக்கத் துவங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது, இந்த மாற்றம் எனக்குள் எவ்வாறு விளைந்தது? இந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணிகள் என்ன என்பதைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கத் துவங்கி இருந்தேன், அப்படிச் சிந்திக்கும் போது தேசியம் பற்றிய எனது தேடல் துவங்கியது என்று சொல்லலாம்.

india

வெவ்வேறு முரண்பாடுகள், அரசியல் மற்றும் சமூகத் தாக்கங்களைக் கடந்து தேசியம் என்கிற கருத்துருவாக்கம் ஒரு மாயத் தோற்றமா? அல்லது கற்பிதமா? உலக இயங்கியலின் இன்னொரு பிரிவா? என்கிற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது……

எந்த ஒரு கருத்தாக்கமும் மனித மனங்களில் ஒரே மாதிரியான விளைவுகளை உருவாக்குவதில்லை, ஒரு தனி மனிதனின் அல்லது சமூகத்தின் உள்வாங்குதலைப் பொருத்தும், அதற்குப் பின்புலமாக இருக்கிற புறக்காரணிகளின் அடிப்படையிலுமே கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெறுகின்றன, பின்னர் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆதி காலம் தொட்டு மனிதர்களுக்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகளாக மருவிப் போராகவும், ஆட்சி மாற்றமாகவும், ஆதிக்கமாகவும் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான கருத்தாக்கங்களையும் போலவே தேசியம் என்பதும் தனி மனிதனின் அல்லது ஒரே சிந்தனையுள்ள மனிதக் குழுக்களின் தன்னியல்பான வாழ்க்கை முறைகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது.

வாழிட ஆதாரங்களை, மொழியை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட மரபுசார் மனிதக் குழு, நீண்ட காலமாகத் தொடர்ந்து செயல்படுகிற போது தேசியம் என்கிற கருத்தாக்கம் தோற்ற மடைகிறது, அதன் கூறுகளின் வலிமையைப் பொறுத்து வடிவம் பெறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது என்று நம்மால் தேசியத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

12350480616751lF

தேசியம் என்கிற கருப்பொருள் ஐரோப்பிய நிலப்பரப்பில் இருந்தே துவங்கியது என்று வாதம் செய்கிற சில மேலைநாட்டு அறிஞர்களை நம்மால் கண்டறிய முடிகிறது, எடுத்துக்காட்டாக "ஜோகன் காட்ப்ரைட்" என்ற ஜெர்மானிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடலாம், இவரை தேசியம் என்கிற கோட்பாட்டின் வடிவமைப்பாளராக சித்தரிக்கிறார்கள், ஆனால் இவரது வாதத்தின் நம்பகத்தன்மை ஏனைய கருத்துக்களில் நிகழும் ஒரு ஐரோப்பிய ஆளுமை மனப்போக்கைப் போலவே காணப்படுகிறது, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் எழுதப்பட்ட சில வரலாற்றுக் குறிப்புகள் உலக வரலாற்றில் எஞ்சிய நிலப்பரப்புகளில் காணக்கிடைத்த உண்மைகளை மறுதலித்து தங்கள் வாழிடங்களின் புறச் சூழலைத் தழுவியே இறுதி செய்யப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.

ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் முன்னதாகவே தொடங்கிச் செழித்திருந்த நமது இலக்கியங்களும், வாழ்வியல் கட்டமைப்புகளும் இத்தகைய ஆய்வுகளில் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே தேசியம் பற்றிய நமது கருத்தாக்கம் முன்னரே அறிந்து கொள்ளப்பட்ட ஒன்று என்கிற முடிவுக்கு நம்மால் எளிதில் வர இயலும். தேசியம் என்கிற ஒரு கருத்து வடிவத்தின் இன்றியமையாத பகுதிகளாகப் பண்பாட்டையும், மொழியையும் நம்மால் இனம் காண முடியும், ஒரே மாதிரியான பண்பாட்டையும், மொழியையும் கொண்ட மனிதக் குழுக்களே தேசியம் என்கிற கருத்து வடிவத்தை முழுமை பெறச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.

PostIndustrialization

இதற்கிடையில், தேசியம், தொழில் மயமாதலின் விளைபொருளாகவும், முதலாளித்துவத்தின், ஊடகங்களின் துணைப் பொருளாகவும் சித்தரிக்கப்படுவதும் நிகழ்கிறது, தொழில் மயமாதலின் விளைபொருளாகத் தேசியம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது, வேண்டுமானால், மேற்கத்திய நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் உருவாகி இருக்கலாம், ஆனால், ஒட்டு மொத்த உலகிற்கும் தேசியம் என்கிற ஒரு வடிவம் தொழிற்புரட்சிக்கு முன்னதாகவே தோன்றி வளர்ந்திருந்தது என்பது தான் உண்மை. நதிக்கரை நாகரிக காலங்களில் தொழில் மயமாதலின் அடிப்படை ஆழமாகப் பரவி இருக்கவில்லை என்பதும், விவசாயம் அல்லது நிலப்பரப்பு சார்ந்த தொழில்கள் மேம்பட்டிருந்த காலங்களில் கூடத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் படிமங்கள் இருந்ததற்கான சான்றுகளை நம்மால் காண இயலும்.

mohenjo-daro-5

எடுத்துக்காட்டாக “திராவிட நாகரீகம்” தோன்றி வளர்ந்த சிந்து நதியின் சமவெளி சார்ந்த பண்பாட்டுக் காலத்தை (கி.மு 2600 – 1900) தேசியக் கருத்தாக்கங்களை அதன் மூல வேர்களை உருவாக்கிய காலம் என்று சான்றுகளுடன் நம்மால் உறுதி செய்ய முடியும், கலை, கலாசார, மொழிக் கருவிகளோடு செழித்திருந்த சிந்துச் சமவெளி நாகரீகம் தேசியக் கோட்பாட்டின் வெளிப்பாடாகிய தலைமைப் பண்புகளை வரையறுக்கும் வரையில் கிளைத்திருந்தது என்பதை தேசியம் பற்றிய வெவ்வேறு ஆய்வுகளில் “சார்லஸ்” “மேசன்”, “பியூம்ஸ்”, “கன்னிங்காம்” மற்றும் “தேம்ஸ்” போன்ற அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள், அதேவேளையில் தேசியம் பற்றிய ஆய்வுகளில் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வையும் அதன் முடிவுகளையும் “மிக்கேல் ஜெ ஹெக்கேன்பெர்கர்” மற்றும் “அன்டோனி டி ஸ்மித்” போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் இவர்களது தேசியம் பற்றிய வரையறைகளையும் அதன் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தேசியம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட அல்லது முரண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகவே இன்றளவும் காணப்படுகிறது, தேசியத்தின் நன்கு அறியப்பட்ட பிரிவுகளாக கீழ்க்கண்டவற்றை நம்மால் பட்டியலிட முடியும்.

1) மரபு வழியான தேசியம்.

2) அரசியல் வழியான தேசியம்.

3) கொள்கை வழியான தேசியம்.

4) பண்பாட்டு வழியான தேசியம் .

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.

6) உரிமைகள் வழியான தேசியம்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.

8) மத வழியான தேசியம்.

9) தனிமனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.

10) இலக்கு வழியான தேசியம்.

இந்தப் பிரிவுகள் தவிர்த்து இன்னும் சில தனி வரையறைகளைக் கொண்ட தேசிய வகைகளும் இருப்பினும், நன்கு அறியப்பட்ட தேசிய வகைகளாக மேற்காணும் பிரிவுகளை அடையாளம் காண இயலும்.

1) மரபு வழியான தேசியம். (Ethnic Nationalism)

ஒரே மொழியை, பழக்க வழக்கங்களைக். குடும்ப அமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக வாழிட ஆதாரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவத்தை மரபு வழியிலான தேசியம் என்று பொருள் கொள்ளலாம்.

2) அரசியல் வழியான தேசியம். (Civic Nationalism)

வெவ்வேறு மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான அரசியல் வடிவங்களைப் பெற்று ஆட்சி முறைகளில் ஒருங்கிணையும், நில எல்லைகளை மாற்றி அமைக்கும் நெகிழ்வு கொண்ட ஒரு தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ளலாம்.

3) கொள்கை வழியான தேசியம்.(Expansionist Nationalism)

அரசியல், மொழி மற்றும் கலாசார மதிப்பீடுகளை விடுத்துக் கொள்கைகள் அடிப்படையில் இணைகிற அல்லது உருப்பெருகிற தேசியமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

4) பண்பாட்டு வழியான தேசியம். (Cultural Nationalism)

மரபு வழி தேசிய வடிவிற்கும், பண்பாட்டு வழியான தேசிய வடிவிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும், மொழி மற்றும் நிலப்பரப்பு எல்லைகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒத்த பண்பாட்டில் ஒருங்கிணையும் ஒரு தேசிய வடிவமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம். (Post Colonial Nationalism)

பல்வேறு பண்பாட்டு, மொழி மற்றும் அரசியல், குடும்ப அமைப்பு, வழிபாட்டு முறைகள், கலை வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு தேசியமாகச் செயல்பட்டு வந்த குழுக்கள், மற்றொரு குழுவின் ஆளுமைக்குப் பிறகு வலிந்து ஒரே மாதிரியான அரசியல் அளவீடுகளில், தனது நிலப்பரப்பை வரையறுத்துக் கொள்கிற தேசிய வடிவமாகவும், ஏற்கனவே உருவாகித் தழைத்திருந்த மரபு வழி மற்றும் அரசியல் வழியிலான தேசிய அடையாளங்களை விழுங்கி ஒரு புதிய தோற்றம் தரக்கூடிய தேசியமாக இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

6) உரிமைகள் வழியான தேசியம். (Liberation Nationalism)

ஒரு குறிப்பிட்ட தேசிய வடிவில் இருந்து இழந்த தங்கள் உரிமைகளை மீட்டு மீண்டும் நிறுவுவதற்குப் போராடித் தங்கள் தேசிய வடிவத்தை உள்ளிருந்து மாற்றி அமைக்கிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம். (Left – Wing Nationalism)

குறிப்பிட்ட தேசிய வடிவினால் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட அல்லது உரிமைகளை இழந்த மனிதக் குழுக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பொது மக்களுக்கு நன்மை தருகிற அரசியல் வழியிலான தேசிய வடிவத்திற்கு மாற்றம் பெறுகிற தேசிய வடிவம் என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.

8) மத வழியான தேசியம்.(Religious Nationalism)

ஒரே வழிபாட்டு முறைகளைக் கொண்ட, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவாக்கம் பெறுகிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

9) தனி மனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம். (Fascist Nationalism)

ஒரு தனி மனிதனின் சிந்தனைகளின் அடிப்படையிலும், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத மக்களுக்கு எதிரான கொடுங்கோன்மை வழியாக உருப்பெருகிற தேசியமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

10) இலக்கு வழியிலான தேசியம். (Diaspora Nationalism)

வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழினும் தங்கள் இலக்கு நோக்கிய செயல்பாடுகள் மூலமாக ஒரு தேசிய வடிவைக் கட்டமைக்கிற அல்லது செயல்படுகிற தேசியக் கருத்தாக்கமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

9888b9449bf40ae360f3ee48b0666cc6

நீண்ட தேடலுக்குப் பிறகு, என்னால் உள்வாங்கப்பட்ட தேசியம் என்கிற கருத்துரு உண்மையில் எனக்கானது அல்ல என்பதை அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த சில அண்மைய நிகழ்வுகள் உறுதி செய்தது மட்டுமன்றி என்னைப் போன்று எண்ணற்ற இளம் தலைமுறைத் தமிழர்களை இந்திய தேசியம் என்கிற கோட்பாட்டில் இருந்து திசை திருப்பி இருக்கிறது. இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்திய தேசிய அரசியலையும், தமிழ் மக்களின் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் மாற்றி அமைக்கும்.

நான் மரபு வழியிலான ஒரு தேசத்தில், உயர்ந்த பண்பாட்டு மொழிக் கோவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய வடிவத்தில் அல்லது அதற்கும் மேலான " யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தேசியங்களைக் கடந்த ஒரு வடிவத்தில் எனது வாழ்வியலைச் செம்மைப்படுத்தி வாழ்ந்த போது, பொருளாதார நோக்கிலும், வல்லரசுக் கனவுகளிலும், முதலாளித்துவச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு குறுகிய இருநூறு ஆண்டுகால நாகரீகத்துடன் இணைத்துக் கொண்டு எனக்கான தேசிய வடிவமாக அதனை ஒப்புக் கொள்வது ஒரு வகையில் அறிவீனமானது என்றே தோன்றுகிறது.

மரபு வழியிலான, மொழி வழியிலான, இன வழியிலான கலைப் பண்பாட்டு வழியிலான எனது உறவுகள் என்று நான் கருதுகிற, மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் அல்லது பேரினவாதக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு மண்டல வல்லரசுக் கனவின் வழியாகச் செலுத்தப்படும் தேசியத்திலும், அதன் அரசியல் நிலைப்பாடுகளிலும் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இழப்பு உருவாகி இருக்கிறது. என்னைப் போலவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களுக்கும் உருவாகி இருக்கிறது என்பதும் உண்மை.

tamil_genocide_march2009_032

எனது உறவுகள் என்று நான் கருதுகிற மக்களைப் பாதுகாக்கிற வலிமை இருந்தும், அந்த வலிமையை எம்மிடம் இருந்தே பெற்றிருந்தும் கூட எமது உணர்வுகளைக் கொஞ்சமும் மதிப்புடன் நடத்தாத, எனது நிலப்பரப்பின் வழியாகவே இன அழிப்பிற்கான ஆயுதங்களைக் கொண்டு செல்லத் துணிந்த ஒரு தேசிய வடிவத்தில் நாம் இணைந்து செயல்படுவதும், அதனைக் கொண்டாடி மகிழ்வதும் எனது வழிவழியான மனிதநேயச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவும், முற்றிலும் முரண்பட்ட ஒரு தேசிய வடிவமாகவும் இருப்பதால் என்னை இந்திய தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதில் இருந்து மாற்றி இருக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, எனது மரபு வழியிலான தொழில்களை முற்றிலும் அழித்துப் பொருளாதார மயமாக்கல் என்கிற ஒரு முதலாளித்துவ ஏமாற்று வழியை உள்ளிருத்தி அறம்சார்ந்த எனது வாழ்வியலைப் பொருள்சார்ந்த வாழ்வியலாகத் திரிக்க முனைகிற, எனக்கான இன, மொழி அடையாளங்களை சிதைவுறச் செய்து ஒரு மதச்சார்பு வழியில் இயங்கத் துடிக்கிற குழுக்களின் ஆளுமையை தேசியவடிவம் என்று ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இவற்றின் ஆளுமையில் இருந்து விடுபட்டு நிலைத்த மேன்மையான எனது "தமிழன்" என்கிற அடையாளத்துடனேயே நான் வாழவும், அடையாளப்படுத்தப்படவும் விரும்புகிறேன்.

090116%20January-2009%20bombing%20&%20shelling_2

என்னுடைய தேசிய வடிவம் மரபு வழியான முதல் பிரிவில் உலகெங்கும் அறியப்படுகிறது, மனித நேயம் நிறைந்த, சாதி வேறுபாடுகளும், மதக் குழப்பங்களும் அற்ற இயற்கையை வணங்கிப், பெண்களின் தலைமைப் பண்புகளை ஒட்டிக், கலை மற்றும் பண்பாட்டு வெளிகளில் நிறைந்து வாழ்கிற நீண்ட காலத் தேசிய வடிவம் என்னுடையது. அதன் அடையாளங்களை எந்த தேசிய கீதத்தின் இசைப்பிலும் நான் இழப்பதை விரும்பவில்லை. என்னை இந்தியன் என்று யாரும் அழைப்பதை இப்போது நான் வெறுக்கிறேன், குடியுரிமைகள் கொண்ட ஒரு இந்தியனாக நான் இருக்கிற போதிலும், கொள்கை வழியாக நான் இந்திய தேசியத்தில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கிறேன், அல்லது எனக்குக் குடியுரிமைகள் வழங்கிய ஒரு தேசம் என்னை தனது செயல்பாடுகள் மூலமாக விலக்கி வைத்திருக்கிறது.

2095434_3c9f7e44ec

நான் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது, உண்மையான தமிழனாக இருந்தால் இந்தியனாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது, இதனைப் படிக்கும் உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!

நான் தமிழனா??? இந்தியனா???

 

தமிழீழமும், மூன்று எதிரிகளும்

government-of-sri-lanka-state-terror-militarism-terrorist-tamil-tigers

"என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று" என்றொரு வேண்டுதல் வழக்கு உண்டு, அதன் சாரம் முழுதும் தமிழீழச் சிக்கலில் குளிர்காய நினைக்கும் சில தமிழக அரசியல்வாதிகளுக்காக எழுதப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது, உலகமெங்கும் பெருகி வரும் தமிழீழ ஆதரவுக் குரலை நெறிக்கும் வகையில் இந்தியப் பேரரசால் திட்டமிடப்படும் பல்வேறு தந்திர வித்தைகளை முறியடிக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இந்த வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்வி ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் உள்ளக் குமுறலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்??? என்று முடிவு செய்வதற்கு முன்னாள், நம் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசரம் மிகுந்த ஒரு தேவையாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வமான தமிழீழ எதிரிகளாக மூன்று பிரிவுகளை அடையாளம் காண இயலும், முதல் எதிரி நேரிடையான இன எதிரி, உன்னுடைய அடையாளங்களை நான் எதிர்க்கிறேன் என்று தொடர்ந்து கடந்த அறுபது ஆண்டுகளாக தன்னுடைய சிங்கள மேலாண்மையை நம் மீது திணிக்கும் நேரடி எதிரி, இந்த எதிரியை எதிர் கொள்வதும் அடையாளம் காணுவதும் நமக்கு அப்படி ஒன்றும் கடினமான செயலாக இல்லை, இருக்கப் போவதும் இல்லை,

2144boycott-sri-lanka_J

இரண்டாவது எதிரி, தமிழ் இனம் என்கிற சொல்லாடலையே வெறுக்கும் அல்லது கருவறுக்க நினைக்கும் இந்திய தேசப் பார்ப்பனீயம், இந்த எதிரியை நமக்கு நீண்ட காலமாகவே தெரியும் என்றாலும், கடந்த நான்கைந்து மாதங்களில் அதன் கோர முகத்தை நம்மால் நன்றாகவே உணர முடிந்தது, இயன்ற வகைகளில் எல்லாம் தன்னுடைய பிராந்திய வல்லரசுப் போர்வையைப் போர்த்தியபடி தமிழின அழிப்பில் மறைமுகமாக ஈடுபட்ட இந்திய தேசியம் நமது இரண்டாவது எதிரி என்பதில் நமக்கு அய்யம் இல்லை. இந்த எதிரியை மேற்குலகின் ஆதரவோடுதான் நம்மால் வெல்ல முடியும், அதற்கான அனைத்து முயற்சிகளிலும் நமது புலம் பெயர்ந்த இளைஞர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது எதிரி தான் கண்டறிய முடியாத அளவிற்கு நாடகங்களையும், புனைவுகளையும் புரிந்து நம்மில் இருந்து கொண்டே நம்மைக் கருவறுக்கும் செயல்களை மிகத் தீவிரமாக இந்திய தேசியத்திற்காகச் செய்து விடத் துடிப்பவன். இந்த எதிரியை எதிர் கொள்ளத் தகுந்த மாற்று இயக்கங்களை, அரசியல் ஒருங்கிணைவுகளை நமது தமிழக மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள் உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

FrontImage_BumperSticker

விடுதலைப்புலிகளை ஒடுக்கி, அழித்து விட்டால் தமிழர்களின் ஒட்டு மொத்த விடுதலை உணர்வையும், தமிழர்களின் தனி அடையாளத்தையும் அழித்து ஒழித்து விடலாம் என்கிற ராஜபக்சே சகோதரர்களின் கனவில் இடி விழுந்தாற்போல உலகெங்கும் தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து இலங்கை அரசிற்கு எதிராக அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள், “தமிழீழம்” என்கிற ஒரு கோட்பாட்டின் அடிப்படை எதிரியான சிங்களம், தன் மேல் குத்தப்பட்ட மனித உரிமை மீறல் அடையாளங்களை அழிக்க இயலாமல் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கும் சூழல் உருவாகி வருவதை நம்மால் காண முடிகிறது. முதல் எதிரியான சிங்களம் தலை குனியும் நேரத்தில், இரண்டாவது எதிரி அதனைச் சரி செய்யும் வேளையில் ஈடுபடுவதையும் நாம் உணர்கிறோம், ஆம், இந்திய தேசியம் வரிந்து கட்டிக் கொண்டு இலங்கைக்குத் தொடர்ந்து சரிவுகள் நிகழாமல் காக்கும் அளப்பரிய பணியைச் செய்து வருகிறது.

Mahinda Rajapakse with Dr_ Manmohan Singh

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில நாட்களுக்கு முன்னர் உலக வங்கிக்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுத்தார், உலக வங்கி இலங்கைக்குக் கடன் வழங்க மறுக்கும் சூழலில், இந்திய தேசியம் 2.6 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்கும் என்பது தான் அந்த மறைமுக மிரட்டல், உலக வங்கியின் மிகப்பெரிய பயனாளரான இந்திய தேசியம் விடுக்கும் மிரட்டலுக்கு, செவி சாய்க்க வேண்டிய நிலையில் தான் உலக வங்கி இருக்கிறது, ஏனென்றால் உலக வங்கி நடைபெறுவதற்கு ஒரு மிக முக்கியக் காரணி இந்திய தேசியம் தான், அதிக அளவில் வட்டியும் முதலும் செலுத்தும் நாடாகவும், உலக வங்கியின் மிகப் பெரிய பயனாளியாகவும் இந்திய தேசியம் இருப்பது தான் இதற்குக் காரணம் (The most valuable Customer).

வல்லரசு, புல்லரசு என்றெல்லாம் கதைகள் சொல்லிக் கொண்டு, உழைக்கும் மக்களின் பணத்தில் உண்டு கொழுக்கும் இந்திய தேசியம் உலக வங்கியின் படியளப்பில் தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகள் உலக வங்கியின் பிடியில் இருந்து விடுபட்டுத் தங்கள் பொருளாதாரத்தைச் சீரமைக்க ஆர்வம் காட்டும் நேரத்திலும், உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான  அலுவாலியாவுடன் இணைந்து இந்திய தேசியத்தை ஒட்டு மொத்தமாக உலக வங்கியிடம் அடகு வைக்கும் ஆர்வம் இந்தியப் பிரதமரிடம் அளவற்றுக் கிடப்பது விந்தையான ஒன்றாகும்.

titlephoto ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகைகளை இலங்கைக்குக் கொடுப்பதை நிறுத்தப் போவதாகச் சொல்லும் சூழலில், ஏனைய நாடுகள் இலங்கையுடனான தங்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவிப்புகள் வெளியாகும் வேளையில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது கட்டமைக்கப் போகிற பிராந்திய வல்லரசு வெறியை இந்தியப் பார்ப்பனீய தேசியம் வெளிப்படுத்தத் துடிக்கிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுத் தான் இந்த உலக வங்கிக்கான மிரட்டல்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகாம்களைப் பார்வையிடும் நாடகம் முடிந்து இலங்கைக்கு நற்சான்று கொடுக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்து, தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான வர்த்தக உறவுகள் மலர்ந்து செழிக்கப் போவதாகச் சொன்னதும், புதிய திட்டங்களில் இலங்கையுடன் இணைந்து செயல்படப் போவதாகச் சொன்னதும் தான் மிகக் கொடுமையானது மட்டுமன்றி மன்னிக்க முடியாததும் ஆகும். உலகம் முழுதும் வர்த்தகத் தடையை எதிர் நோக்கும் இலங்கையுடன், தொப்புள் கொடி உறவுகளாகிய நாம் வர்த்தகம் செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பு எத்தனை சூழ்ச்சிகள் நிறைந்தது, எத்தனை வலியைத் தரக் கூடியது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மாநில முதல்வருக்குத் தெரியாமல் போனதும், கொஞ்சமும் நெருடாமல் இருந்ததும் வெட்கக் கேடானது. கண்டனத்திற்குரியது.

Mahinda%20Indian%20MPs1

தமிழக முதல்வரும் அவரது பரிவாரங்களும் தமிழீழச் சிக்கலில் என்ன செய்கிறார்கள் என்றால், கூடவே இருந்து குழி பறிக்கிறார்கள் என்பது தான் விடையாகிறது. இலங்கைக்கு உலக அரங்கில் உருவாகி இருக்கிற அவப்பெயரைத் துடைக்கும் சீரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரும், அவரது பரிவாரங்களும் ராஜபக்சே சகோதரர்களின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர்களாகி இருக்கிறார்கள், உலகம் இலங்கையைப் புறக்கணிக்கத் தயாராகி வரும் சூழலில், இலங்கையின் ஆட்சியாளர்களைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகெங்கும் வலுப்பெறும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையையே தனது கொடுங்கோன்மையின் எல்லைகளுக்குள் அனுமதிக்காத ராஜபக்சே, எப்படி தமிழக நாடாளுமன்றக் குழுவை அனுமதித்தார்???,

இது முற்றிலும் இந்திய தேசியத்தின் உளவுத் துறையினர் ஆலோசனைப்படி நடத்தப்பட்ட நாடகமாக இருக்குமோ??? என்ற மிகப் பெரிய ஐயம் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளின் அழுத்தத்தில் இருந்தும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்புகளிடமும் கொடுப்பதற்கு ஒரு நற்சான்றிதழ் தேவைப்பட்ட நேரத்தில், மிகச் சரியாகத் தனது காய்களை நகர்த்தி தமிழக நாடாளுமன்றக் குழுவை ராஜபக்சே வரவழைத்திருக்கிறார், குழுவினரும் மிகச் சிறப்பாகக் கொலைகாரர்களின் தோளுக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்தி, கட்டித் தழுவித் தங்கள் தேசிய அடையாளத்தைக் காட்டி வந்திருக்கிறார்கள்.

06_03_09_maur_03

இப்படி ஒருபுறம் நமது எதிரிகள் தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு சாதகமான விளைவுகளும் "தமிழீழம்" என்கிற கோட்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நகர்வது ஒன்று தான் சற்று ஆறுதல் தரக்கூடியது,

அவற்றில் சில இன்றியமையாதவை:

1) அமெரிக்க வெளியுறவுத் துறையால், அமெரிக்கக் காங்கிரசுக்குக் கையளிக்கப்பட்ட 67 பக்க அறிக்கையும் அது உருவாக்கும் தாக்கமும்.

2) ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி – பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் அதன் விளைவுகளும்.

3) இலங்கையின் அரசியலில் நிகழ்ந்து வரும் குழப்ப நிலை.

4) தமிழீழம் தவிர்த்த எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல்.

மேற்கண்ட யாவும் தானாக நிகழவில்லை என்பதையும், உலகெங்கும் வாழுகின்ற தமிழ்ச் சமூகம் தனது குரலை விடாமல் ஒலித்துக் கொண்டே, பல்வேறு போராட்டங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதன் விளைவுதான் இத்தகைய மாற்றங்கள் என்ற உண்மையை நாம் உணரும் போதும், நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விக்கான விடை தானாகத் கிடைக்கும்.

198605888_6b677e4fe9

தமிழக இளைஞர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன.இன்னும் வீரியமான அரசியல் மற்றும் ராஜதந்திர நகர்வுகளை ஒருங்கிணைந்து நாம் நிகழ்த்தினால் நமது "தமிழீழம்" என்கிற நீண்ட நெடிய பயணத்தின் தொடுபொருளை நம்மால் விரைந்து அடைய முடியும். தங்கள் அரசியல் நலன்களையும், தனி மனித வளர்வு வணிகத்தையும் ஈழத் தமிழ் மக்களின் குருதியின் ஊடாகக் காப்பாற்றிக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் பயன்படுத்தும் கபட வேடதாரிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பதும் இன்றைய தேவையாகி இருக்கிறது. ஆழமான பயன்களைத் தரக்கூடிய ஊடகப் பரப்புரைகள், உலகளாவிய ஒருங்கிணைந்த தமிழ் இளையோர் கூட்டமைப்பு போன்ற திட்டங்களில் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். மேலும், "நாடு கடந்த தமிழீழ அரசு", உலகத் தமிழர் பேரவை" போன்ற உலகளாவிய அமைப்புகளின் குறைபாடுகளைக் களைந்து அவற்றை மென்மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

dsc03140f

தெரிந்தோ தெரியாமலோ, மேற்குலக நாடுகள் தமிழீழம் தொடர்பாகத் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க அறிக்கையே கூட, தெற்காசியாவில் இலங்கை போன்ற ஒரு கடல் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்டைத் தன் கீழ்ப்படிதலுக்குக் கொண்டு வருகிற முயற்சியாக இருக்கலாம், ஆனால், இவற்றில் இருந்து நாம் பெற வேண்டியவற்றைப் பெற்று நமது இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக எப்படிப் பயணிக்கப் போகிறோம் என்பது தான் நமக்கு முன்னிருக்கிற மிகப் பெரிய கேள்வி.

எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியுடன் கூடிய வாழ்க்கை நெறிகளை நாங்கள் மேற்கொள்வதைத் தடை செய்து, இன மற்றும் மொழி ஒடுக்குமுறைகளில் நம்மைச் சிறுமைப்படுத்திய சிங்களச் சிறு நரிகளுக்கும், தமிழினத்தின் தனி அடையாளம் கண்டு எப்போதும் குலை நடுங்கித் தங்கள் "புதிய தலைமுறைகளில்" ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய இந்திய தேசத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையைக் காலம் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மொழிக்காகவும், இனத்தின் விடுதலைக்காகவும் இறந்து போன அந்த உயிர்களின் மதிப்பை தமிழ் இளைஞர்களாகிய நாம் மீட்டு எடுப்போமா? இந்தக் கேள்விக்கான காலத்தின் பதிலில் ஒளிந்து கிடக்கிறது நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும்.

317_0052

வெட்ட வெட்டத் தழைப்போம்!  பிடுங்கப் பிடுங்க நடுவோம்!! அடிக்க அடிக்க அடிப்போம்!!! அடைக்க அடைக்க உடைப்போம்!!!! அழிக்க அழிக்க எழுதுவோம்!!!! விழ விழ எழுவோம்!!!!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

பிணங்களின் கவிதை

 

வான் வற்றிப் போகட்டும்…….

 

7218_1231718826406_1032183894_30746563_6700347_n

மண்ணைச் செழிக்க வைத்து இன்னுயிராய்,
மடைகளில் அடைந்தேனும், என் மக்களை
நேசித்தாய், மாமழையே………

பொன்னைப் பொருளை எல்லாம் பிறப்பித்த
சிறப்புற்று, வெள்ளமாய்க் கரைபுரண்டாய்,
உயிர் வளர்த்தாய், மாமழையே……..

கண்ணாய், மணியாய், விளைந்திட்ட பயிர்
வளரக் காரணியாய், வரப்புயரக் களித்து
நின்றாய், மாமழையே……..

வரம் ஒன்று வேண்டுகிறேன், வாராதே மாமழையே,

வாராது வந்துதித்த மாமழை நீயென்ற வரலாறு
பொய்க்கட்டும், வான் வற்றிப் போகட்டும்…….

காலி வயிற்றோடு கைக்குழந்தை நனைந்தழுகும்,
வேலிக் கூடாரம் வேதனையைக் கூட்டி நிற்கும்,
வாழ்ந்த இனமொன்று ஒண்டுதற்கும் இடம் தேடி ,
தாழ்ந்த நிலமெல்லாம் கண்ணீரால் குளம் கட்டும்,

வேண்டி உனைக் கேட்பேன், வீழும் மாமழையே….
"வேலிக்குள் வாராதே" "வேலிக்குள் வாராதே".

 

 

எனக்கான தீபாவளி…..

 

9116_1227353197268_1032183894_30733537_491795_n

 

பூக்களைக் கொட்டிப் பின் கருகிக்
கிடக்கிற பூந்தொட்டியின் புகை
வழியே மங்கலாய்த் தெரிகிறது,
மறைக்கப்பட்ட என் மக்களின்
மரணக் குழி மௌனங்கள்…….

பற்றிச் சிதறிக் கருகி விழுகிற
மத்தாப்புக் கம்பிகளில் ஒட்டி
இருக்கும் கருப்பு மிச்சங்கள்,
கொத்துக் குண்டுகளின் கொடும்
வெம்மையில் விழுந்து எரிந்து
பின் கருகிய குழந்தையொன்றின்
வெள்ளைச் சிரிப்பை நினைவுறுத்த…….

சுற்றிச் சுழலும் ஒரு சங்குச்
சக்கரத்தில் ஏறிப் பயணித்துக்
கம்பி வேலிகளில் கட்டுண்டு
கிடக்கிற என் மக்களின் கனவில்
கரைந்து காணாமல் போகிறது
எனக்கான தீபாவளி…..

 

பூவாய் மலர்ந்தேன்……

9927_1224921616480_1032183894_30726940_6512138_n

முல்லைக் கொடி என் பெயராய் இருக்க,
முன்னொரு நாளில் பூத்துக் குலுங்கினேன்,

மன்னவர் முடிகளில் ஏறி அமர்ந்தேன்,
கடவுளர் தளங்களில் மணம் பரப்பினேன்,

தங்கத் தேரதில் பவனிகள் வந்தேன்,
பூவையர் மகிழக் கூந்தலில் படர்ந்தேன்,

சங்கமும், மன்றமும் பெருகிக் கிளைக்கச்
செந்தமிழ் சேர்த்து மாலைகள் தொடுத்தேன்,

மலைகளில் விளைந்தேன், அருவியில் கரைந்தேன்,
சிலைகளின் கழுத்தில் சுமைகளாய்க் கிடந்தேன்

கொஞ்சமும் நிறைவில்லை, கொண்ட பிறப்பதில்,

பின்னொரு மாலையில் விடுதலைப் போரதில்,
மரணம் தரித்த என் மறத் தமிழ் வீரனின்
கல்லறை வாசலில் உதிர்ந்து கிடந்தேன்,

முதன்முறை நானொரு பூவாய் மலர்ந்தேன்,
நெஞ்சம் நிறைந்தேன், உள்ளம் மகிழ்ந்தேன்…..

 

கொடுமை விடுத்து…..

7218_1231718986410_1032183894_30746564_648160_n

மழையில் நனைகிற மழலையர் தம்மை,
அடைத்த வேலியின் அவலம் அளந்து,
மரிக்கப் போகிற மக்களை எழுதிப்,
பசியில் அழுகிற குழந்தையின் குரலில்
கவிஞனாய் வாழும் கொடுமை விடுத்து…..

கனத்து நெகிழ்ந்த வாழ்வைக் கடந்து,
கவிழ்ந்து கிடக்கிற கவிதைகள் நிறுத்தி,
அழுது துடிக்கிற இதயம் வெடித்து நான்
இறந்து போகலாம்………..

வலியின் வரிகளை வடிக்க மறுத்து,
இறப்பின் மடியில் விழுந்து கிடக்கும்
பிணமாய் மாறலாம், ஈழப்பிணமாய் மாறலாம்……

**********************************************************************************

சாதிக் குறியீடும், ஆடைகளில் உருவமும்.

ambedkar “What are we having this liberty for? We are having this liberty in order to reform our social system, which is full of inequality, discrimination and other things, which conflict with our fundamental rights.” – Dr.B R Ambedkar 

டாக்டர் அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள் அல்லது விவாதங்கள் என்னைக் கடக்கும் போதெல்லாம், அந்த மனிதரைப் பற்றிய வியப்பும் கூடவே வந்து என்னை ஆட்கொள்வதைத் தவிர்க்க இயலாது, ஒரு மிகப்பெரிய சிந்தனையாளர், குறியீடுகளைத் தாண்டி அடக்குமுறை வடிவங்களையும், மனிதக் குழுக்களில் நிலவும் வேறுபாடுகளையும் அதன் பரிமாணங்களையும் பற்றிய மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டவர், வாழும் காலத்தில் தான் ஒரு அறிவார்ந்த மனிதன் என்பதையே கடுமையாகப் போராடி உறுதி செய்தவர், அந்த உறுதியில், மனித இனங்களின் பிறப்பு அடையாளங்களுக்கும், சிந்தனைகளுக்கும் ஒரு போதும் தொடர்பு இல்லை என்பதை தர்க்கரீதியில் உணர்த்தி ஒரு புதிய பாதையை இந்திய தேசத்தின் சமூகப் பயணத்திற்கு வழங்கிய மாமேதை அவர்.

“For a successful revolution it is not enough that there is discontent. What is required is a profound and thorough conviction of the justice, necessity and importance of political and social rights.” – Dr.B.R Ambedkar

ஆனால், இந்த அறிஞரைப் பற்றிய பார்வை பல்வேறு சிதைவுகளையும், நீட்சிகளையும் உள்ளடக்கி மாற்றம் அடைந்திருக்கிறது, இன்றைய பொது மனிதனின் பார்வையில் முற்றிலும் ஒரு குறியீட்டு அடையாளமாக அம்பேத்கர் என்னும் அறிஞர் பல்வேறு புறக்கருவிகளால் வரையப்பட்டிருக்கிறார், அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் தங்கள் மேம்பட்ட வாழ்விற்கு உழைத்தவர் அல்லது அதற்கான அடிப்படை அறிவுப் புரட்சியை மேற்கொண்டவர் என்பதையும் தாண்டி வழிபாட்டுக்குரிய தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய இந்தியாவின் இளைய சமூகம் ஒரு போலியான பொதுமைப்படுத்தப்பட்ட வாழ்நிலை வெளிகளுக்குள் இயங்கும் சூழலில், இந்த சமூகத்தின் மிக உறுதியான அசைக்க முடியாத இருண்ட பக்கமாகத் தங்களையும் அறியாமல் துரத்தி வரும் சாதீய, மதக் குறியீடுகளையும் அதன் தாக்கங்களையும் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இத்தகைய பொதுமை வெளிகளில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் சாதீயக் குறியீட்டின் எல்லையைச் சந்திக்க நேர்வது இடஒதுக்கீடு என்கிற புள்ளியில் தான், வேலை செய்யும் இடத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ பொது மனிதனாகத் தன்னை அடையாளபடுத்திக் கொள்கிற ஒரு இளைஞனின் இட ஒதுக்கீடு பற்றிய புரிந்துணர்வும், அந்தப் புரிந்துணர்வை வலிந்து உட்செலுத்தும் புறக் காரணிகளும் இன்றைய தலித் இளைஞர்களிடையே கூட இட ஒதுக்கீடு மற்றும் சாதீயக் குறியீடுகள் பற்றிய ஒரு தவறான படிமத்தை உருவாக்கி வருகிறது. இந்தத் தவறான சூழல் அதன் தவறான விளைவுகளைத் தன்னுடைய சொந்த சமூகத்தின் உள்ளடக்கத்தில் எதிரொலிக்கும் என்கிற உண்மை போலியான நகரச் சூழலில் மறைந்து, ஊரகப் பகுதிகளில் கிளைத்துத் தளைக்கிறது.

“ Unlike a drop of water which loses its identity when it joins the ocean, man does not lose his being in the society in which he lives. Man’s life is independent. He is born not for the development of the society alone, but for the development of his self.” – Dr.B.R Ambedkar

ஏற்கனவே புரையோடிப் போன சமூகப் புண்ணாக நீக்கமற எல்லா இடங்களிலும் வேரூன்றி இருக்கும் சாதி, மதக் குறியீடுகளை அழிப்பதற்கான ஒரே ஆயுதம் இட ஒதுக்கீடு தான் என்பதையும், அதன் மூலம் தான் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இருந்து, நீண்ட காலம் விலக்கப்பட்ட மனிதர்கள் உயிர்த்து எழ முடியும் என்பதை உணர்ந்து தன்னுடைய கடும் போராட்டங்களினாலும், அறிவுப் புரட்சியினாலும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு என்கிற அந்த ஆயுதம், இன்றைக்குத் தேவையற்ற ஒன்று என்கிற மனப்போக்கு தலித் இளைஞர்களிடம் வந்திருக்கிறது, இதற்கான காரணம், அம்பேத்கர் என்கிற அறிஞரின் உருவத்தைப் போற்றும் அளவிற்கு அவரது சிந்தனைகளையும், கருத்தியல் வடிவங்களையும் போற்றி வளர்க்காதது தான்.

இதற்கிடையில் தான் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடைகளை அணிய வேண்டும் என்கிற ஒரு சாராரின் குரல் உரக்க ஒலிக்கிறது, சமூகத்தின் கடைக்கோடியில் பிறந்தவர் என்று சித்தரிக்கப்பட்டவர், அறிவு சார் உலகில் இயங்கத் தகுதியற்றவர் என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு மனிதர், இவற்றை எல்லாம் கடந்து சமூகம் கட்டமைத்த அமைப்பு ரீதியான குறியீடுகள் தவறானவை, பிறப்பின் அடையாளங்களுக்கும், மனிதரின் அறிவுத் திறனுக்கும் துளியும் தொடர்பில்லை என்று தன்னுடைய வாழ்வின் உயரங்களால் மட்டுமே உறுதி செய்த மிகப் பெரிய தத்துவ ஞானியின் உருவம் பதிக்கப்பட்ட ஆடைகளை அணிவது மகிழ்ச்சிக்குரியது, அதனை விரும்பிச் செய்யும் அனைத்து இளைஞர்களையும் நாம் வரவேற்போம், வணங்குவோம்.

“It is disgraceful to live at the cost of one’s self-respect. Self-respect is the most vital factor in life. Without it, man is a cipher. To live worthily with self-respect, one has to overcome difficulties. It is out of hard and ceaseless struggle alone that one derives strength, confidence and recognition.” – Dr.B.R Ambedkar

ஆனால், இவற்றை விடவும் மேலாக மிக இன்றியமையாத பணி, அம்பேத்கரின் சிந்தனைகளை, அவரது நிறுத்தப்பட்ட அல்லது நின்று போன பணிகளைத் தொய்வின்றித் தொடர்வது என்ற உண்மையை நாம் உணர வேண்டும், ஏனென்றால் இந்திய தேசத்தில் இன்னமும் தலித் மக்களின் சேரிகளை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை வடிவமாகவும், காலனித் தொழில் செய்யும் தலித் மக்களின் கடைகளில் இறுக்கமாய் பொருத்தப்பட்டிருக்கும் உருவமாகவும், இன்னும் சொல்லப் போனால் தலித் என்கிற சொல்லாடலின் காட்சி வடிவமாகவும் அம்பேத்கர் மாற்றப் பட்டிருக்கிறார், இதிலிருந்து நீங்கள் முரண்பட்டாலும் இதுதான் மறைக்க முடியாத உண்மை. எந்த ஒரு மாற்று சமூகத்தின் வாழிடங்களிலும், வணிக நிறுவனப் பலகைகளிலும் அம்பேத்கரும், அவரது சிந்தனைகளும் விடுதலை பெற்ற இந்தியாவின் அறுபது ஆண்டுகளில் இடம் பெறவே இல்லை என்கிற உண்மையைப் புரிந்து கொண்டால், ஆடைகளில் பொறிக்கப்படும் அம்பேத்கரின் உருவம் பற்றிய வெறுமை தெரிய வரும் என்று நம்புகிறேன்.

இந்தச் சூழலில், தலித் இளைஞர்கள் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடைகளை அணிவதை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களில் இருந்து நான் முரண்படுகிறேன், படித்த, நடுத்தர வர்க்கம் சார்ந்த தலித் இளைஞர்கள் இன்றைக்கு பொதுமை வெளிகளில் இயங்கும் ஒரு சுதந்திரமான இயக்கத்தை இழக்க விரும்பவில்லை, தங்கள் அடையாளங்களில் இருந்து அவர்கள் விரும்பி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள், இந்தியாவில் மதமும், சாதியும் ஒரு சாராரைத் தங்கள் முகத்தைப் பார்த்து வெட்கம் கொள்வதற்கும், இன்னொரு சாராரைத் தங்கள் முகத்தைப் பார்த்துப் பெருமை கொள்வதற்கும் அடிப்படையாக வழி செய்து கொடுத்திருக்கிறது. அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பவில்லை, அல்லது அவர்கள் தங்கள் பழைய அடையாளங்களில் இருந்து தற்காலிகமாக விடுபட்டிருக்கிறார்கள், இப்படியான சூழலில் அம்பேத்கர் உருவம் பொறித்த ஆடைகளை அணிவது மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்களின் முற்போக்கு முகமூடியாகவோ ஒரு விளம்பரக் கிளர்ச்சியாகவோ இருக்கலாமே ஒழிய அதன் உட்பொருளை வெளிப்படுத்தும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. 

“This condition obtains even where there is no slavery in the legal sense. It is found where as in caste system, some persons are forced to carry on the prescribed callings which are not their choice.” – Dr.B R Ambedkar

ஏனென்றால், அம்பேத்கர் என்கிற ஒரு மிகப் பெரிய போராளியின் சிந்தனைகள் அவர்களை இன்னும் முழுமையாக எட்டவில்லை அல்லது அதற்கான முன்முயற்சிகளை நாம் செய்யவில்லை என்று கொள்ளலாம், அம்பேத்கரின் சமூகம் பற்றிய சிந்தனைகளை, உலகளாவிய மனித இனங்களின் குறியீட்டு அடையாளச் சிக்கல்களைப் பற்றிய கருத்துக்களை இன்னும் நவீனப்படுத்தி சமூகத்தின் பல்வேறு நிலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பணியும், அவரது கருத்தியல் வடிவங்களை மாணவர்களின் நெஞ்சில் நிலையுறுத்தும் பணியும் மிக இன்றியமையாதது. இன்றைய இந்தியாவின் பள்ளிகளில், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் முனைப்புடன் செயல்படுத்தப்படுகிற காந்தியச் சிந்தனைகளைப் போலவே அம்பேத்கரின் சிந்தனைகள் அறிவு சார் வழிகளில் உள்ளிருத்தப்பட வேண்டும்.  அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் கண்டறிந்து செயல்படுத்துவது ஒன்றுதான் அம்பேத்கர் என்கிற ஒரு மாபெரும் அறிஞரைப் பொதுமைப்படுத்த நாம் செய்யும் நகர்வாக இருக்க முடியும். அதுதான் திட்டமிட்டு அழுத்தப்பட்ட சாதீயக் குறியீடுகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரை மீட்டு வெளிக்கொண்டு வருவதற்கான வழியாகவும் இருக்கும்.

Man is mortal. Everyone has to die some day or the other. But one must resolve to lay down one’s life in enriching the noble ideals of self-respect and in bettering one’s human life. We are not slaves. Nothing is more disgraceful for a brave man than to live life devoid of self-respect.” – Dr.B.R Ambedkar

பல்வேறு உலகப் பல்கலைக் கழகங்கள், அமைப்புகள் ஒப்புக் கொண்டு இன்னும் ஆய்வு செய்கிற ஒரு மேதையின் உருவம், தான் பிறந்த சொந்த மாநிலத்தின் தெருக்களில் கூட இன்னமும் முழுமையாக நுழைய முடியாத இழிந்த சாதி, மதக் கட்டமைப்பில் நடைபோடுகிற ஒரு தேசத்தில், மென்மேலும் அந்த மேதையை ஆழமான சாதிக் குறியீடாக மாற்றும் இத்தகைய ஆடையில் உருவம் பதிக்கும் முயற்சிகளில் தங்கள் ஆற்றலை வீணடிக்காமல், அம்பேத்கர் வழியிலேயே அறிவு சார் புரட்சியின் மூலம் அவரது கருத்தியலை நகர்த்தும் பணியைச் செய்ய விளைவோம்.

அதுவரையில் ஆடைகளில் உருவம் பொறிக்கும் முற்போக்கு என்பது "வெறும் கையில் முழம் போடுவது" என்று சொன்னால் யாரும் கோபம் கொள்ள மாட்டீர்கள் தானே???

“I like the religion that teaches liberty, equality and fraternity.” – Dr.B.R Ambedkar.

**********************************************************************

என் குழந்தைக்குக் கொஞ்சம் தேநீர் கொடுங்கள் ஐயா……

2009_04_19_Sri_Lanka_children

மழை கொட்டிக் கொண்டே இருக்கிறது, மழையில் நனைந்தபடி உலகின் மிக மூத்தகுடி என்று  சொல்லப்படுகிற இனத்தின் உழைக்கும் மக்களின் ஒரு நீண்ட வரிசை, வியப்புக் குறிகளாய் உலகை வலம் வந்த உலகின் நெடிதுயர்ந்த ஒரு இனம் கேள்விக் குறியினும் கேவலமாய் உணவுக்காக வரிசையில் மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருக்கிறது. அது ஒரு உணவு நேரம், காய்கறிகள் கொடுக்கப்படக் கூடாது என்கிற கட்டளைப்படி,  வெள்ளைச் சோறு மொத்தமாக ஒரு ஓலைப்பாயில் கொட்டப்படுகிறது, அதிலிருந்து அளந்து தட்டுகளில் வீசப்படும் உணவு, அருகில் குடலைப் புரட்டி வெளிவரும் கழிவறையின் நாற்றம், திறந்தவெளிச் சாக்கடையின் நீரை மறைத்தபடி அடுத்த தாக்குதலுக்குத் தங்களைத் தயார் செய்யும் கொசுக்கள், வாரம் ஒரு முறை சுத்தம் செய்யப்படுமா இல்லையா? என்கிற கேள்விக்குறியோடு, கொசுக்களின் முழுமையான வாழிடமாக மாறி இருக்கும் இந்த இடத்திற்கு அருகாமையில் தான் அந்த உணவு ஓலைப்பாய் கிடத்தப்பட்டிருக்கிறது. ஒரு கையில் உணவை உண்ணும் பொழுதில் மற்றொரு கை முழுவதும் கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்ட முழுமையாகப் பணிக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் கைகளை கொசுக்களும் பூச்சிகளும் உணவாக்கி விடும் அளவிற்கு ஒரு கொடுமையான உணவு நேரம் அது.

090706aljazeera_3jpg

உங்களையும் என்னையும் போல தேர்வு செய்து உணவை உட்கொள்ளும் மனித சுதந்திரம் அந்த உணவு நேரத்தில் கிடையாது. சில நேரங்களில் உணவோடு சேர்ந்து வரும் பூச்சிகளையும், மணலையும் சேர்த்தே உண்ண வேண்டும்.மற்றொரு உணவு வாகனம் காலை உணவுக்காய் ரொட்டித் துண்டுகளை விசிறி எறியும், அவற்றில் இருந்து வீழும் ரொட்டித் துண்டுகளை பொறுக்கி உண்ண வேண்டும், அடித்து உருண்டு மண்ணில் புரட்டி உண்ணப்படும் அந்த அவலத்தை மகிழ்வோடு மற்றொரு இனம் படம் பிடித்து மகிழ்கிறது. இந்த மகிழ்வான உணவு நேரத்தை ஒளிப்படக் கருவிகள் எப்போதும் படம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன.

ஜூன் மாதத்தில் இருந்து  வீசும் பலத்த மணற்காற்று எப்போதும் மணலை அள்ளிப் பூசியபடி மனித உடல்களில் கோலமிடுகிறது, அவ்வப்போது பெய்யும் மழை உடலில் ஒட்டி இருக்கும் மணலை அப்புறப்படுத்தினால் உண்டு, இல்லையென்றால், உங்களுக்கான நீர் அளவீட்டுக் காலம் வரும் வரை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும், அது முழுக்க முழுக்க கொசு மற்றும் ஈக்களின் சொர்க்கம், அவை நாள் முழுவதும் உண்டு கொழுக்க இதை விடவும் வாய்ப்பான ஒரு இடம் இருக்கவே முடியாது இந்த நவநாகரீக உலகில்.

539w

கொஞ்சம் உள்ளே நுழையும் பொழுதில் ஒரு தந்தை தன்னுடைய எட்டு மாதக் குழந்தைக்கு “குறைந்த அளவாவது தேநீர்த் துகளையும், சர்க்கரையும் தாருங்கள்” என்று ஒரு காவலரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார், எட்டு மாதக் குழந்தையின் தாயிடம் சுரக்கப் பாலும் இல்லை, கண்ணீரும் இல்லை, கடந்த இரண்டு மாதங்களாக அந்தக் குழந்தை கறுப்புத் தேநீர் குடித்தே உயிர் வாழ்கிறது. அது போலவே பிறந்து சில மாதங்களே ஆன எம்மருமைக் குழந்தைகள் உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனை என்கிற பெயரில் இயங்கும் ஒரு தற்காலிக குடிலில் இரண்டு மொழி தெரியாத மருத்துவர்கள் வேகமாக இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவனின் முறை வரும் போது அந்தச் சிறுவனின் நோய் என்ன என்று கேட்காமலேயே நோய்க்கான மருந்தை ஒரு தாளில் எழுதிக் கொடுக்கிறார் மருத்துவர். தாய்க்கு எழுதிய மருந்து குழந்தைக்கும், குழந்தைக்கு எழுதிய மருந்து தாய்க்குமாய் வாழ்க்கையை மிகுந்த வலிக்கு ஆளாக்கும் ஒரு மறைமுகச் சிறைச்சாலை அது.

floodimage5_001

காய்ச்சல் வந்தால் உயிருக்கு ஒரு போதும் பாதுகாப்பு இல்லை, பெரியவர்களோ இல்லை குழந்தைகளோ, காய்ச்சல் வந்த இரண்டு மூன்று நாட்களில் இறப்பின் காலடிகளில் தஞ்சம் அடைந்து அமைதி கொள்ள முடியும். இங்கு வாழும் குழந்தைகளில் பெரும்பாலானவை மஞ்சள் காமாலை நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில், இவற்றை சரி செய்ய மருந்துகள் இல்லை, பழங்களையும் காய்கறிகளையும் கொடுங்கள் என்று மருத்துவர்கள் கூறும் அறிவுரை காய்கறிகள் வழங்காதே என்கிற கட்டளைக் குரல்களில் கரைந்து காணாமல் போகிறது.

பெண்களின் நிலையோ பெரும் கொடுமையானது, குளிக்கும் இடங்களில் மறைப்பு இல்லை, காவல் இருக்கும் மிருகங்கள், உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் தங்கள் உடலை ரசிப்பதை சகித்துக் கொண்டு கொடுக்கப்பட்ட நீரில் குளித்து முடிக்க வேண்டும், காட்டிக் கொடுக்கும் தமிழ்த் துரோகிகள் பெண்கள் வடிவிலும் உலா வருகிறார்கள், அவர்கள் யாரையேனும் உற்று நோக்கினால், அதுவும் இளம்பெண்ணாக இருந்து விட்டால் போதும், ராணுவ மிருகங்களுக்கு விருந்துதான். அவர்கள் புலிகளா என்று விசாரிக்க தனி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.பிறகு என்ன நடக்கும் எம் தங்கத்தமிழ் மங்கையருக்கு என்று உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

sri-lanka_168203s

சரி, இறப்பாவது அமைதியில் முடியுமா என்றால் அதுவும் இல்லை, இறந்து பட்டவரை முறைப்படி அடக்கம் செய்யும் வழக்கம் எல்லாம் ஒரு போதும் இல்லை, இறந்தவரின் உடல் உடனடியாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு கண்காணாத நிலையில் கதை முடிந்து போகும். இரண்டு குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது நம் குடும்பத்தில் யார் யார் இறந்து போனார்கள், யார் யார் பிழைத்து இருக்கிறார்கள் என்பது தான்!!!!

ஒரு முதியவர், தன குடும்பத்தை இழந்து கொடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அடுத்த முகாமில் நடக்கும் நிகழ்வுகளை வேலிக்கு அருகில் நின்று பார்க்கும் பொழுதில், அருகில் வரும் ஒரு காவலாளி முதியவரை கடும் குரலில் அழைக்கிறான், அவர் அருகில் வந்தது தான் தெரியும், தன் கையில் இருக்கும் கொடுந்தடியால் அந்த முதியவரை கடுமையாகத் தாக்கி தனக்கு மன நிறைவு வரும் வரையில் தன் வெறியாட்டத்தைத் தொடர்கிறான், முழுக்க முழுக்க ஒரு வேடிக்கைப் பாத்திரமாக, விதியற்ற, கேட்பதற்கு நாதி அற்ற ஒரு பெரியவராய் அவர் அங்கே நின்று கொண்டு பெருங்குரலெடுத்து அழுகிறார். காரணமே இல்லாமல் அடி வாங்கிய அழுகிற அந்த முதியவரின் வலி ஒரு இனத்தின் வலி.

18slid1

தூரத்தில் சிங்கள ராணுவத்தின் புகழ் பெற்ற வாசகமான

"இலங்கை தன் மக்களை இயன்ற அளவு நன்கு கவனித்துக் கொள்ளும்" 

என்கிற வார்த்தைகள் ஒரு பலகையில் பொன்னெழுத்துக்களில் மின்னுகிறது.

manikfarmmay2009

ஒரு மூத்த குடியின் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் கொடும் சிறைச் சாலைகளில் மிருகங்களைப் போல வதைபடுவதைப் பார்த்து நாம் தினமும் அழுது கலங்குகையில், இனத் துரோகிகளும், ஈனப் பிறவிகளும் சிங்களக் கொடுங்கோலர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள். செத்தான் பிரபாகரன் என்று ஒரு தமிழன் வலைப்பூவில் பதிந்து பூரிக்கிறான். அதை விடக் கொடுமை, எதுவுமே நிகழாத ஒரு சிங்காரச் சூழலில், போருக்குப் பின்னர் தமிழினம் வாழ்ந்து வருவதைப் போல சில தலைவர்கள் இங்கே மாறி மாறி மேடைகளில் முழங்குகிறார்கள். அவர்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நாடாளுமன்றங்களுக்கு அனுப்பும் சீரிய பணியைச் எம் தமிழ்க் குடிமக்கள் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

 
chidu

கலைஞர் அய்யா தனக்கான இந்த ஆண்டு திரைப்பட விருதைப் பெற்றுக் கொள்ளத் தயாராகிறார், அவர் அதை வாங்கலாமா? வேண்டாமா? என்று எதிர்க்கட்சித் தலைவியும், ஈழத்திற்கு ராணுவம் அனுப்புவேன் என்று முழங்கியவருமான ஜெயலலிதா அம்மையார் முடிவு செய்வார், மருத்துவர் தமிழ்க் குடிதாங்கி ராமதாஸ் அய்யா காங்கிரஸ் கூட்டணிக்குள் நுழைவதற்கான அடித்தளம் அமைக்க அயராது உழைக்கிறார், அண்ணன் திருமாவின் ஈழக் கோபமெல்லாம் வற்றிப்போய் தட்டிகளில் எழுதிய ஈழத்தை அழிப்பதில் கிழிந்து தொங்குகிறது, அய்யா சுபவீ அவர்கள் கமலஹாசனின் அடுத்த திரைப்படத்திற்கு திரைக்கதை ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சாம்பியன்ஸ் கோப்பை ஒளிபரப்பை ரசித்தபடி நானும் நீங்களும் சிநேகாவின் வயிற்றில் கிள்ளியது யார்? என்பது பற்றி ஆவலுடன் இணையத்தில் விவாதம் செய்து கொண்டு காலம் கழிக்கிறோம்.புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களில் பலர் எந்தத் திரைப்படத்தைப் புறக்கணிப்பது, எதனைப் பார்ப்பது என்று விவாதித்துக் களைத்துப் போய் இருக்கிறார்கள். தீப ஒளித் திருநாளின் கொண்டாட்டங்களை வரவேற்கத் தமிழர்கள் உலகெங்கும் தயாராகி விட்டார்கள், தங்கள் இனத்தின் வலியை மறந்து, தங்கள் உறவுகளின் கொடும் சூழலை மறந்து இணையத்திலும், அலைபேசிகளிலும் வாழ்த்துக்களை அனுப்பத் துவங்கிய தமிழர்களை அவர்களின் கையாலாகாத நிலையை உலகம் வேடிக்கை பார்த்த வண்ணம் அடிக்கடி  முகாம்களைப் பார்வையிட்டபடி தன் வழியில் நகர்கிறது.

capt_eb6f6629d8b942e88d05be4f4bba4582_sri_lanka_tamil_civilians_xej103

காலம் தன்னுடைய கழுகுக் கண்களால் தமிழையும், தமிழினத்தையும் உற்றுப் பார்த்தவாறு கண்ணீர் விடுகிறது.

வாழ்க தமிழ், வளர்க தமிழினம்.

(இந்தக் கட்டுரை இடைத்தங்கல் முகாமொன்றில் மார்ச் 2009 முதல் ஜூன் 2009 வரை அடைபட்டுப் பின்னர் விடுபட்ட ஒரு தமிழ்ச் சகோதரியின் கண்ணீர்த் துளிகளில் எழுதப்பட்டது, இக்கட்டுரைக்கான மூலம், தமிழ்நெட் இணையதளத்தில் இருந்து பெறப்பட்டது)

முழுமையான தமிழினத்தின் இடைத்தங்கல் முகாம் நிலைகளை ஆங்கிலத்தில் படிக்க: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30381

நன்றி – தமிழ்நெட் இணையதளம் (www.tamilnet.com)

கிழக்கில் முன் நவீனக் கவிதைகள்

(கீழ்க்கண்ட கவிதைகள் “கிழக்கில் முன் நவீனக் கவிதைகள்” என்று வரிசைப்படுத்தப்படும், என்ன நண்பர்களே குழப்பமாக இருக்கிறதா? இது மாதிரியான கவிதைகளை நீங்கள் எழுத வேண்டுமென்றால், கிழக்குப் பக்கமாக உட்கார்ந்து, நவீனமான ஆடைகளை அணிந்து கொண்டு, தாளின் முன் பக்கங்களில் மட்டுமே எழுதத் துவங்க வேண்டும், பின் பக்கங்களை அப்படியே விட்டு விட வேண்டும், மீறி எழுதினால் அவை மேற்கில் பின் நவீனக் கவிதைகள்" ஆகி விடும். வேறொன்றுமில்லை…..”கிழக்கில் முன் நவீனக் கவிதைகள்” என்பது படித்தவுடன் புரிய வேண்டும் அவ்வளவுதான்)

ஒரு புன்னகையின் பயணம்………

2

பள்ளி நூலொன்றின் பின் அட்டையில்
யாருக்கும் தெரியாமல் உன் பெயரை
எழுதிக் கிழித்திட்ட பக்கங்கள், ஆன்மத்தில்
இன்னும் அழியாமல் இறைந்து கிடக்கிறது.

முன்னம் ஒரு பின்னிரவில் தொடர்ந்த நம்
உரைகளின் நீட்சியொன்று, முன்னிரவில்
விழித்து ஓலமிட, வலிகொண்ட விழிப்பொன்றின்
வழியாக என்னைக் கடக்கிறது உந்தன் புன்னகை,

அண்ட வெளிகளில் அலைந்து களைத்த என்
உயிரின் ஓசை உன் மௌனத்தில் மட்டுமே
ஊமையாய்க் கிடந்து ஓய்வெடுக்கையில்,

உன் நினைவுகளில் எஞ்சிய நீர்ப்பரப்பு,
கடற்கரை மணலில் பதிந்த நம் காலடித்
தடங்களைக் கழுவித் துடைக்கிறது.

என் மொழிகளை ஊமையாக்கி என்னைக்
கவிஞனாக்கிய கருப்பொருள் நீயென்ற
உண்மையில் மட்டுமாவது உறங்கட்டும்
நம் காதலின் எஞ்சிய கனவுகள்………….

காதலில் வரைந்த ஓவியம்……..

1

அலைகள் நனைத்த பூவைச் செடியோடு சுமந்து
உனைத்தேடி நகர்கிறது நதிப்புறத்து நீரலைகள்,

பகல் முழுதும் உன் பளிங்கு முகம் கண்டு பரவிச்
சிவந்த வண்ணம் கொட்டிச் குளிர் நிலவாய்
உருமாறக் கடல் தேடிக் கரைகிறது சூரியன்,

கடக்கும் விண்மீனைக் கைகளில் பிடித்து உன்
கழுத்தில் சூடிவிடக் கவனமாய்க் காத்திருக்கிறது
மலை உச்சியில் மகிழ்வோடு ஒரு வண்ணமுகில்,

இழந்த சந்தத்தை உன் இதழ்களில் கண்டு உயிர்த்து
எழுகிறது மறந்த கவிதையின் முத்தான முதல்வரி,

படைத்த பேருலகை, படித்த இலக்கியத்தைக் கடந்து
நான் மலைத்து மருளுகையில் கையில் தவழ்கிறது
நான் காதலில் வரைந்த ஓவியம்……….

முத்தமிழாய், முக்கனியாய், முத்தாரச் சிரிப்பாய்………….

நான் மீளக்குடியமர்வேன்……….

3

நிறைந்து வழிந்த மனிதத் தடங்களைத்
தேடியலைந்து மீண்டும் வாசலில் பதிக்கவும்,
புதையுண்ட உறவொன்றின் பாதி மலர்ந்த
செடியொன்றைத் தோண்டி எடுக்கவுமாய்,
பூமரக் காற்றின் சிதைந்த புகையூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்……….

மீன்பிடித்த குளமொன்றின் உடைப்படைக்கவும்,
கரும்பலகைச் சிதிலங்கள் கரிபூசி மெழுகவுமாய்,
குருதி படிந்திருக்கும் புழுதி நிலத்தூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்……….

பாதியில் நிறுத்திய கவிதையை முடிக்கவும்,
பாதையில் படர்ந்த கொடிகள் அகற்றவுமாய்,
வங்கக் கடலின் வண்ண அலையூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்…………

தேசக்கனவில் புதைந்து வெளிவராத
தொட்டாவொன்றைச் செலுத்தவும்,
என் தேகமெங்கும் நிறைந்திருக்கும்
தமிழீழக் கனவை உயிர்க்கவுமாய்,

மனிதம் தின்ற உலகினூடே மறுபடி
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்.

நீ மீளக் குடியமர்த்தும் முன்னதாய்
நானே ஒருநாள் மீளக்குடியமர்வேன்.

பயணச் சுமையாய்………

4

படிமப் பாறையொன்றில் காலத்தின்
கீறலாய்ப் பதிந்து அழுந்திக் கிடக்கிறது
வாழ்க்கையின் சுவடுகள்……….

கடந்து வெளிவரும் ஒவ்வொரு முறையும்
திறக்கிறது நினைவுத் துருப்பிடித்த பழைய
வாயிலொன்றின் கதவு…………

சதுர வயல்களை, வட்ட மரங்களை
வண்ண மனிதர்களைத் தாண்டிய
நெடிய பயணங்களின் முடிவிலும் கூட
சேருமிடத்தின் முன்னதாய் வந்தடைகிறது
உனைப் பற்றிய சின்ன நினைவுகள்………..

காலப் பெருவெளியின் நீட்சியில் உனை
மட்டும் கடக்கவே முடியாத பயணியாய்ப்
புறப்பட்ட இடத்திற்கே மறுபடி வருகிறேன் நான்.

நீயோ பயணச் சுமையாய்க் கூடவே வருகிறாய்!!!

வானில் உயர்நிறை மதியோ…..

5

தேனில் ஊறிய சுளையோ – தீந்தமிழ்
வேனில் முகிழ்த்த வெண்மலர் இதழோ….
ஊனில் உறைந்தொரு உயிர் பெருக்கிய
வானில் உயர்நிறை மதியோ…..

ஓடு நதிக்கரை நுரைதனில் ஆடிடும்
பாடு மூங்கிலின் இசையோ – செந்தமிழ்
ஏடு நிறைந்து வழிந்தபின் எங்கள்
நாடு கடந்திடும் கவியோ…..

வெட்ட வெளிகளில் சுற்றி அலைந்திடும்
வட்ட மரங்களின் காற்றோ, கனித்தமிழ்
சொட்ட உருகிடும் பனிமலை முகடின்
கிட்ட உரசிடும் முகிலோ…..

எத்தனை இன்பம் திளைத்திருந்தாலும்
என் தமிழ் போலொன்றும் இல்லை,

எத்தனை நிலங்கள் கடந்திருந்தாலும்
என் தமிழே உயிர் எல்லை.

நத்தையின் முதுகுச்சுமை…….

6

ஊருணிக் கரைகளின்
புதர்மண்டிய பிளவுகளில்,
பிறந்த நாள் முதலாய்த்
ததும்பி வழிந்து கிடந்து,

நீர் வற்றி வறண்ட
காலங்களில் நத்தையின்
முதுகுச்சுமை போலூர்ந்து
கரையேறி ஊருக்குள்
புகுந்து பரவிக்கிளைத்து,

நாட்டார் நகரத்தாரின்
கொட்டொலிகளில் பிறப்பைக்
கொண்டாடி மகிழ்ந்து,

பறையின் ஒலி போல்
செவிப்பறை கிழித்து
எனக்குள் எப்போதும்
எதிரொலித்துக் கிடக்கிறது,

என்னை யாரென்று எனக்கே
சொல்லித்தர இன்னும்
இருக்கிற எந்தன் சாதி……….

வண்ணத்தமிழ் வரியொன்றில்………..

7

கணன்ற விழிச்சுடரில் என்
கவிதைகளைப் பற்ற வைத்தாய்,

நடந்த பாதைகளில் என்
மொழிச்சுவடை ஒட்ட வைத்தாய்,

நிமிர்ந்த கணமொன்றில் என்
விழிச்சுவரில் பட்டுத்தெறித்தாய் நீ, பவளம் போல்,

பாடும் பறவைகளும், ஓடும் நதியலையும்
ஊனில் உயிர்த்தெழுந்து, உன்னை நினைவுறுத்தத்

தேடும் விழிகளதில் ஊடல் கலந்திருக்க
வாடும் பயிரதுபோல் வானம் பார்த்த்திருந்தேன்,

நீயோ, வண்ணத் தமிழ் வரியொன்றில்
என் வாழ்வாய்க் கலந்திருந்தாய்,ஆழப் பதிந்திருந்தாய்…….

* * * * * * * * * * * *

விழிகளில் துவங்கிய விழாக்காலம்……..

LOVE 1

தூரதேசத்தின் திசை மாறிய பறவையொன்று
தேடலை விடுத்துப் பிறை நிலவின் கிளைகளில்
நீ நடக்கிற வழி பார்த்து அமர்கிறது.

நதிகளின் ஓரத்து ஓடை மலர்கள், கொடிகளில்
இருந்து குதித்துத் தம் இருப்பை விடுத்து இடம்
பெயர்ந்து உன் விழி பார்த்து நடக்க…..

கடல் தன் அலைகளைக் கொஞ்சம் நிறுத்தி
வானமெங்கும் விரவிக் கிடக்கிற உன் வட்ட
முகத்தைத் தன்னில் விரிக்கிறது.

மழை தன் தூறலுக்குப் பல வண்ணங்களை அடித்துத்
தன்னை மறந்து கிடந்த மாலைப் பொழுதொன்றில்…

எனைப் பார்த்து வழக்கமாய்த்தான்
இமைத்திருக்கும் உன் விழிகள்…….

என்னுலகில் மட்டும் ஏனடி இத்தனை திருவிழாக்கள்???

LOVE 2

*****

என் இரவுகளின் மௌனம்……….

LOVE 3

அடர்ந்த இருளில் உடைந்து விழுந்த
உன் சிரிப்பொலியின் மிச்சங்களாய்
சிதறிக் கிடக்கிறது விண்மீன்கள்

நதியின் கரைகளைக் கடந்து மலையின்
முகடொன்றில், உயிரில் படர்ந்த உன்முகம்
போல உயர்ந்து எழுகிறது முழுநிலவு

பக்கத்தில் நீயிருந்த பகலொன்றைச் சுமந்து
இருளின் சிறகொன்றில் மிதந்து வருகிறது
வெட்கத்தில் விளைந்த உன் புன்னகை.

மாலையில் விரிந்த தாமரை மலரொன்றில்
உயிர்த்து எழுகிறது உனைப்பற்றிய கனவொன்று

வாழும் கணங்களின் வலியை உணர்த்தியபடி
நீண்டு கிடக்கிறது என் இரவுகளின் மௌனம்

என்னருகில் நீயிருக்கும் விடியலைத் தேடியபடி….

LOVE 4

*****

உனக்காய் விடிகிற, எனக்கான உலகம்……

LOVE 5

நீண்ட இரவுகளில் இதழ் மூடிக்
குவிந்த மொட்டுக்கள் காலையில்
நீ எழுந்து நடக்கையில் மலர்ந்து
சிரிப்பதை நான் பார்த்தேன்.

முன்னிரவில் வெள்ளொளி பரப்பிக்
கிடந்த முழுநிலவின் விளிம்புகள்
உனைக் கண்டதும் வெட்கத்தில்
ஒரு முகிலுக்குள் ஓடி மறைந்தன.

உன்விழி பார்த்த கணங்களில் வழிமாறிய
நதியொன்று என் வாசலில் வழிந்தோட……

பின்னர் வருகிற பொழுதொன்றில் உன் இதழ்
பற்றும் கனவுகளில் துள்ளிக் குதித்து உடைந்தன
என் வீட்டுத் தேநீர்க் கோப்பைகள்.

உன் நினைவுகளை ஏந்தியபடி மெல்ல
உதிக்கிறது எனக்கான உலகம்.…..

LOVE 6

*****

தேய்ந்த நிலவின் காய்ந்த ஓடைகளில்……….

LOVE 7

முறிந்த சிறகொன்றின் மீளாத வலியோடு
உன்னோடு நானிருந்த பொழுதுகளைப்
பொதியாய்ச் சுமந்தபடி காலப் பெருவெளியின்
துருவங்களில் இளைப்பாற இடைவிடாது
பறக்கிறது உன் நினைவுகள்.

வழியெங்கும் திரிந்தலையும் மலையுச்சி
மேகமொன்றில் முன்னர் உன்னிடத்தில்
நான் கொடுத்த மலரொன்று முழுதாய்
உதிர்ந்து சிதறிக் கிடக்கையில்….

பொங்கி வழிகிற விழிநீர்த் திவலையொன்றில்
படிந்து பெருக்கெடுத்து விழுகிற மழை நீராய்,
செம்மண் உடைசல்களில் கலந்து உன் முல்லைச்
சிரிப்பலைகளைத் தேடித் தேய்ந்த நிலவின் காய்ந்த
ஓடைகளில் இன்னும் பயணிக்கிறது….

உன்னைத் தொலைத்த எந்தன் வாழ்க்கை……

LOVE 8

**************

நிர்வாணத்தின் வலி……….

போரதை முடிக்கப் புறப்படு தமிழா………

FREE 1

வீழ்ந்து கிடக்குது விடுதலை என்றினி
வாழ்ந்து கிடத்தலா முறைமை தமிழா?

மூட்டு நெருப்பாய் எரிகிற வேட்கையை
மீட்டு விதைத்தொரு புலியாய்ப் புறப்படு…….

ஆண்டு கிடந்த எம் இனமே இன்றே
தாண்டு தடைகளை, ஓடி உடைத்தெறி….

வீறு கொண்ட ஒரு தலைவன் வழியினில்
காரிருள் கிழித்தாய், காவியம் படைத்தாய்,

புதுவிசை கொடுக்கத் தமிழே எழுந்து
வருதிசை நோக்கிப் புறப்படு தமிழா…….

மோதி மிதித்திடு மூடரின் முகந்தனில்
பாதியில் முடிகிற கனவா விடுதலை????

புலரும் பொழுதினில் வேலிகள் அறுந்து
புதிதாய் மலரும் ஒருநாள் ஈழம்………

பாரினில் உனக்கா பாதைகள் இல்லை???
போரதை முடிக்கப் புறப்படு தமிழா………

FREE 2

******

நிர்வாணத்தின் வலி……….

FREE 3

அதோ தூரத்தில் தெரிகிற கடலின்
அலைகள் கழுவித் துடைக்கிறது
குருதிக் கறைபடிந்த துயரத்தின் சுவடுகளை……….

காலத்தின் சாட்சியாய் அடர்ந்த
மணற்பரப்பில் வெள்ளைக் கூடாரமிட்டு
மருண்டு சிதறிக் கிடக்கிறது மனிதம்………….

விடுதலை தேடித் படர்ந்த ஒளியின் நிழலில்
இருளைத் திரித்து அரவமற்ற மரங்களின்
மேலிறங்கிச் சருகாய் உதிர்கிறது வாழ்க்கை…………

சன்னமாய்த் துவங்கி வேகமெடுக்கிற மழையின்
துளிகளில் மரணத்தின் வாசனை கலந்து வருவதாக
யாரோ எழுதிய ஈழக்கவிதையின் வரிகளை நான்
வெறித்துப் படிக்கையில் வந்தெனை அடைகிறது…………

இலக்கின்றி விழுந்த வெடிகளின் வேதனையில்
இன்னும் முனகி அழுகிற ஒரு குழந்தையின் குரல்…………….

நிர்வாணத்தின் வலியைச் சுமந்தபடி சுட்டு
வீழ்த்தப்படுகிற சக மனிதனை இணையத்தில்
பார்த்து இடிந்து விழுகிறது எனக்கான இலக்கியங்கள்……………

FREE 4

*****

கொஞ்சம் களத்தில் இருங்களேன்………

FREE 5

முன்னொரு நாளில் நான் இறந்ததை
எண்ணியபடி மண்ணுக்குள் புதைந்திருந்தேன்…….

மௌனத்தை அடைகாத்துக் கல்லறையின்
இருட்டறையில் கடைசியாய் நான் தள்ளப்பட்டேன்……

விறைத்து நிலைகுத்திய என் கண்களில் விடுதலையின்
உயிர்ப்பு இருப்பதாய் என் இறுதி ஊர்வலத்தில் யாரோ
முணு முணுத்து மறைந்தார்கள்…….

கடைசியாய் என்னில் இருந்து வெடித்துக் கிளம்பிய
உயிர் மூச்சு தாழப் பறந்து தேடுகிறது இன்னுமொரு
தேசத்தின் விடுதலை வரலாற்றை………..

தொடர்ந்து வெடிச்சத்தங்களை எதிரொலித்துப்
பிணங்களை வரவேற்றபடி திறந்திருக்கிறது
விடுதலைக்காய் நாங்கள் கட்டிய கல்லறைகள்……..

இன்னுமொரு நாளில் உடைத்து உயிர்த்தெழுந்து
உங்களை நான் சந்திப்பேன் ஈழத்தில்………..

அதுவரை எனக்காய் கொஞ்சம் களத்தில் இருங்களேன்………..

FREE 6

தமிழரின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்.

*********

மறுபடி உதிக்கும் ஈழச் சூரியன்………

four

சுடர் விடும் என் கண்கள்…..

 

நினைவு நெருப்பின் சுடர்களில் எரிந்து
கருகிடும் சிறகின் ஊடாகப் பறக்கிறது
என் தேசத்தில் நானிருந்த இனிய நிமிடங்கள்……..
நெரிந்த என் குரல்வளைத் துளைகளின்
வழியாய் வழிந்து விழுகிறது விடுதலையின்
விரல் மீட்டும் உயிரிசை…………

அழுகையைச் சுமந்தபடி அலைகிற
என் கவிதைகள் அழகாய் இருப்பதாக
யாரோ சொல்கையில் உயிரின் ஆழத்தில்
உடைந்து நொறுங்கிடும் உண்மையின்
ஓலத்தை உணர்கிறேன் நான்…………..

கட்டி எழுப்பிய கனவு தேசத்தின்
தூண்களைக் கட்டி அணைத்தபடி
சுற்றிக் கட்டிய வேலியைச் சுட்டெரிக்கிறது
சுடர் விடும் என் கண்கள்…..ஈழச் சூரியனாய்…..
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.

******

 

Ten

மறுபடி உதிக்கும் ஈழச் சூரியன்………

 

வெள்ளைக் கூடாரத் துளையூடே ஒரு
காலையில் குவிந்த கதிரின் வெம்மை,
வேலியின் வழியாகத் திரிந்தலைந்து,
எழ மனமின்றி உடைந்திருந்த ஒரு
இருட்டு மூலைக்குள் எனைக்கண்டு அழுதது…….

காற்றில் பரவிய நெற்கதிர் வாசம் நுகர்ந்து,
கசிந்து பெருகிய குயிலின் ஓசையைக் கேட்டபடி,
தந்தையின் நிழலில் நான் பிஞ்சையில் நடந்த
நாட்களை நினைவுறுத்திப் பின் மறைந்த கதிரவன்
முதுகில் கறுத்துக் கண்ணிய ஒரு காயத்தின்
விரிசலை நான் பார்த்தேன்………..

அழுகிற சூரியனும், அழுகிக்கலங்கிடும் கடற்பரப்புமாய்
அழுந்திப் படிகிறது, சுகமாய் சுற்றித் திரிந்த சொந்த
மண்ணின் அடைப்புக் கம்பிகளில் சொல்லொணாத்
துயருடன் ஒரு அகதியின் விடியல்……….

வெயில் முடிந்து வருகிற மற்றொரு வேனிற்கால
மழையில், தொலைந்த வாழ்வின் வெளிச்சம் உடைந்த
வீடுகளை உயிர்ப்பித்து மறுபடி துளிர்க்கும்……….

அதுவரை, மருந்திட்ட காயங்களின் புண்களைக் கழுவியபடி,
மொத்தமாய்ப் புதைந்த உறவுக்குழிகளின் கீழாக ஓடிமறைந்து
மறுபடி உதிக்கும் ஈழச் சூரியன்………
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்………

*****

Thirteen

என் ஈழ வீட்டுக் “கண்ணாடி”

 

வண்ணப் பூக்களால் என்னை அலங்கரித்த
அந்திப் பொழுதுகளைத் தன்னில் சுமந்து…….
உணர்வுகளில் படிந்த பிம்பங்களை
எல்லாம் எப்போதும் எதிரொளித்து…….
நான் அழுகையில் அழுது……….
சிரிக்கையில் சிரித்து……………
தலைமுறை கண்ட பெருமைகளோடு
கூடத்து வீட்டின் முகப்பில் இருந்து,
கூடவே வருகிறது
என் ஈழ வீட்டுக் “கண்ணாடி”
வேலிகள் கடந்து, ஏதிலியாய்
என்னை எதிரொளிக்க…………..

******

{ஈழம் என்னைப் போலவே இன்னும் பல எண்ணற்ற இளைய தலைமுறைத் தமிழர்களை உளவியல் ரீதியாகப் பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது, நடைமுறை வாழ்வின் பல்வேறு வழமைகளை மாற்றி இருக்கிறது, செய்திகள் பார்க்கிற பழக்கமே என்னில் இருந்து விலகிப் போனது, வன்னியின் பரப்புகளில் நிலவும் ஒரு விதமான வெறுமை போலவே, எனக்குள் குடிகொண்டிருக்கும் வெறுமையைக் கொஞ்சம் விலக்க இந்தக் கவிதைகள் கொஞ்சமேனும் உதவி இருக்கிறது, என்னைப் போலவே மன இறுக்கத்தில் இருக்கும் யாரேனும் கொஞ்சம் தளர்வடைந்தால், மகிழ்வடைவேன்}

 

தோழமையுடன்
கை.அறிவழகன்

புதிய கோளொன்றின், பழைய நதிக்கரையில்…….

two

வண்ணத்துப் பூச்சியின் சிறகில்…….

 

மழை முடிந்து மலர்களில் வழியும்
மயங்கிய மாலைப் பொழுதொன்றில்
தென்றலின் வாசனை சுமந்து
தென்னங்கீற்றின் வழியாய்
வண்ணத்துப் பூச்சியின் சிறகில்
வந்திறங்கினாய் நீ……..

கண்களில் சிதறிய புன்னகைத் துளிகள்,
முல்லைக் கொடியில் மொட்டாய் அமர,
நதிகளில் உடைந்த நிலவின் ஒளியாய்,
ஆழ்கடல் அமைதியில் ஆடும்அலையாய் 
உயிரில் கலந்தாய் என் உதிரம் நிரப்பினாய்……

 

வானம் வரை நான் வளர்ந்திருக்கையில்,
கானல் நீராய்க் கனவுகள் பறித்து,
ஒரு மின்னல் பிடித்து நீ மறைந்த போதிலும்
இன்னும் இருக்குது வாழ்க்கை,
என்னுள் இனிக்கிற நினைவாய்…….

****

Six

முத்தத்தின் மிச்சம்…..

 

கனிமொழிகளைக் கலந்து உயிர் பிழிந்த
உன் நினைவுகளைத் தனி மரமாய் நான்
தேடும் அதிகாலைப் பொழுதொன்றில்……………

பனி மூடிக் கிடக்கிறது பழைய பாதையொன்று…….
உன் கரம் பற்றி நான் நடந்த நினைவொன்றின்
வெளிச்சத்தில், மலரொன்று வழிகாட்ட
மங்கலாய்த் தெரிகிறது, நம் பாதச் சுவடுகள்……….

எழுந்து நடக்கையில் எதிர் நின்ற முகிலோடு,
வெள்ளருவிக் கிளையொன்றில் மெல்லச் சொட்டியது,
முன்னர் நீ கொடுத்த முத்தத்தின் மிச்சம்…..

விழுந்த அருவியின் ஊடாக மிதந்து வழிந்து
அலைந்தொரு கணத்தில் மீண்டு சரிகிறது மார்பில்,
முழுநிலவாய்……..என் மூச்சுக் காற்றாய்………

****

Eight

நீ நடந்த நிலவொளியின்………

அந்தி சாய்கிற ஒரு அரையிருள் வேளையில்
அழகாய்ச் சிவந்து வானம் என் அருகில் இருந்தது……

காதோரம் கலைகிற உன் கார்குழல் ஓசையில்
கொஞ்சும் யாழிசை என் மார்பில் புரண்டது……..

கண்ணிமைச் சிறகினில் மின்னிய திறப்பில்
முகிலொன்று தடுமாறிக் கடலில் விழுந்தது……..

உயர்ந்த சிகரத்தின் உச்சியில் மலர்ந்த குறிஞ்சி
மலரொன்றின் இதழில் விழுந்து, இன்னும் எரிகிறது………
எனக்காய் நீ தந்த இறுதிப் புன்னகை,

நீ நடந்த நிலவொளியின் நிழலில் விழுந்து, தொலைந்த
என் விழிகளைத் தேடி, விரைந்து கரைகிறது வாழ்க்கை……..

****

Twelve

புதிய கோளொன்றின் பழைய நதிக்கரையில்………

 

உன் சுவாசத்தின் வாசம் கலந்து,
காற்று மணம் பரப்பிய மாலைப்
பொழுதொன்றில் மலர்களிடை,
மறைந்திருந்த உன் பாதி முகம்
தவறி என் விழிகளில் விழுந்தது………………..

அன்றிரவு பெய்த அடைமழை எஞ்சியிருந்த
உன் மீதி முகத்தை முழுதாய் எனக்குள் தூறி
மறைந்த பின்னரும், மழையின் சுவடுகள்,
முற்றத்து மரங்களில் திட்டுத் திட்டாய்ப் படிந்திருக்க,
நீ மட்டும் முற்றாய் ஒட்டிக் கொண்டு உயிர் கலந்திருந்தாய்………..

காதலின் கரம் பிடித்துப் பின்னிரவின் பேரண்ட வெளிகளில்,
புதிய கோளொன்றின் பழைய நதிக்கரையில், குளித்து எழுகிற
உடல் உடைத்த, என் உணர்வுகளைத் தேடி நான் அலைந்து திரிகிறேன்……..

நீயோ அங்கேயே நின்று அடுத்த மலர் பார்த்து அழகாய்ச் சிரிக்கிறாய்…..

Eleven

*****

{கவிதைகள் எழுதுவதும், வாசிப்பதும் ஒரு தவம் போல எனக்குள் மொழியின் விசாலங்களைத் இன்னும் இன்னும் விரிவாக்கிக் கொண்டே விரைகிறது, என் கவிதைகள் ஒரு போதும் என்னைக் கவிஞன் என்று அடைமொழிகளுக்குள் அடைத்துக் கொண்டு அடங்கிப் போகிறவையோ, இல்லை புரியாத கையாடல்களில் புதிய நவீனங்கள் என்று பொய்கள் சொல்லித் திரிபவையோ அல்ல. மாறாக என் மக்களின் அழுகுரலாய், அழகியலின் தீற்றல்களாய், காதலின் வண்ணங்களாய், மொழியின் சிறப்பாய் எப்போதும் என்னுள் நிறைந்து கிடப்பவை. தமிழின் சுவையை எனக்கு உணர்த்திய கணங்களைப் போலவே உங்களுக்கும் சில கணங்கள் கிடைக்கப் பெறலாம்}

 

தோழமையுடன்
கை.அறிவழகன்

அடுத்த பக்கம் »


அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 25,654

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

acceptance

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்