(இணையக் குழுமங்களில் பல்வேறு நண்பர்களின் திராவிடக் கொள்கைகள் சார்ந்த விமர்சனங்களுக்கு நாம் தொடர்ந்து பதில் அளித்து வந்தோம், அவற்றின் சில தொகுப்புகளை இங்கே கேள்வி பதில் வடிவாகத் தருகிறேன்)
1) பெரியார் சாதீயப் பெயரை தன் பெயரில் எதற்காக வைத்துக் கொண்டார்?
பெயர் என்பது ஒரு அடையாளம், உ.வே சாமிநாதையர் என்று ஒருவர்பெயர் வைத்துக் கொண்டார், ஆனால் முழுமையான தமிழ் நூல்கள் நமக்குக் கிடைப்பதற்கு அவர் தான் வழி செய்தார், அவர் ஒரு ஐயர் என்பதற்காகவும், அவர் பெயரில் ஆரியம் இருக்கிறது என்பதற்காகவும் எப்படி அவரை தமிழ் மற்றும் திராவிட வரலாற்றில் இருந்து மறைக்க முடியாதோ, அதை போலவே, பெரியார் தன் பெயரை கடைசி வரை ஒரு அடையாளமாகவும், பெற்றவர்கள் வைத்த பெயரை அவமதிக்கக் கூடாது என்கிற உன்னத நோக்கிலும் தான் இட்டுக் கொண்டார். அதில் பெரிய அளவில் விவாதிக்க ஒன்றும் இல்லை நண்பரே ….
2) பெரியார் ஏன் சக்த்ரியன் என்கிற ஆரிய முறையை ஒப்புக் கொண்டு அதனை எதிர்த்தார்?
ஆரியம் என்பதும், திராவிடம் என்பதும், வரலாற்றுக் கர்ப்பிதங்கள், இரு வேறு மனிதக் குழுக்களின் முரண்பாடுகள், ஆரியமாகவும், திராவிடமாகவும் திரிபு அடைந்தன என்பதை நாம் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும், குல தர்மம் என்பது, பல்வேறு காலகட்டங்களில், ஒரு குறிப்பிட்ட மனித இனம் ஆளுமை அடைந்திருந்த போது, உருவாக்கப்பட்டன, ஆரிய இனமாக பின்னர் சித்தரிக்கப்பட்ட இனம், சூழலுக்கு ஏற்ப உருவாகிய ஒரு தோற்றம் தான் குல தர்மம், தங்களுடைய சொகுசான வாழ்க்கைக்காக திட்டங்களையும், சட்டங்களையும் ஆளும் வர்க்கமும், அது சார்ந்த மனித குழுக்களும் எல்லாக் காலங்களிலும் உருவாக்கி இருக்கிறார்கள், அது போன்ற ஒரு உருவாக்கம் தான் மனுவின் பெயரால் பல்வேறு ஆரிய ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட குலதர்மம்.பெரியார், தான் ஒரு மனிதனாகப் பிறந்தேன், பின்னர் பல்வேறு அடையாளங்களால் திணிக்கப்பட்டேன் என்கிற அந்த நிலையை, ஒரு குறிப்பிட்ட அடையாளங்களைக் கொண்டு மறுதலித்தார், மறுத்தார், அவருக்கு நன்றாகவே தெரியும், பொய்யாக உரைக்கப்பட்ட சில படைப்புத் தத்துவங்களால், அவர் வாழும் கால மனிதர்கள், கடும் அடக்கு முறைக்கு உள்ளாக்கபட்டார்கள், அந்த அடக்கு முறையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் தொடர்ந்து போராடினார்.
3)பெரியார் ஏன் சில மக்களின் நம்பிக்கை சார்ந்த வழிபடும் சிலைகளை உடைத்தார்?
சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், மனிதனை மலம் குடிக்க வைக்கிறீர்கள், மனிதனின் கண்களைப் பிடுங்கி அவனை கழுதை மேல் எற்றிநீர்கள், இன்னும் சொல்ல இயலாத பல்வேறு கொடும் குற்றங்களை எல்லாம் புரிந்தோம், மதங்களின் பெயரால், ஆனால் விடுதலையின் பெயரால், வெறும் சிலைகள் உடைக்கப் பட்டது உங்களுக்கு குற்றமாகத் தெரியுமானால், உங்கள் பார்வையில் கோளாறு இருக்கிறது நண்பர்களே, மேலும் பெரியார், எந்தச் சூழலிலும், போது இடத்தில் இருக்கும், பல்வேறு மனிதர்கள் வழிபடும், சிலைகளை கடவுளர் விக்ரகங்களை உடைக்கவில்லை, தன் வீட்டில் இருந்த சிலைகளை அவர் உடைத்தார், அது ஒரு தனி மனித செயலேயன்றி சமூக நோக்கில் வராது. மிகப் பெரும் புரட்சிகளை எல்லாம் மனித குலம் ஏற்றுக் கொள்கிறது, மனிதர்களில் இழி நிலையில் இருந்த சம கால மனிதர்களுக்காக சிலைகளை உடைத்ததை நீங்கள் வன்முறை என்று சொன்னால், அந்த வன்முறை எங்களுக்கு தேவைப்பட்டது. இன்னும் அதற்கான தேவை மிச்சம் இருக்கிறது.
4)கர்ப்பைப் பற்றிய பெரியாரின் கருத்துக்கள் பிர்ப்போக்கானவையா?
பெரியார் பெண்களைப்பற்றி பல்வேறு இடங்களில் சொல்லி இருக்கிறார், குறிப்பாக, கற்பு என்கிற ஒரு கடிவாளத்தை பயன்படுத்தி அவர்களுக்கான விடுதலையை, முன்னேற்றத்தை ஆண்கள் எப்போதும் தடுக்கிறார்கள், எனெவே அந்த மன நிலையில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்கிறார், மேலும் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் போலியாக உருவாக்கப்பட்ட தோற்றம், ஏன் ஆண்களுக்கு கற்பு இல்லையா? இல்லை ஆண்கள் எல்லோரும் கற்புடன் நடந்து கொள்கிறார்களா? ஆணாதிக்க மன நிலையை உடைப்பதற்காக சொல்லப்பட்ட ஒரு உயரிய கருத்தை உங்கள் ஆழமான வக்கிர உணர்வில் சொந்த சகோதரர்களின் வீட்டுப் பெண்களை வீதிக்கு வரச் சொல்லும் உங்கள் எண்ணமே சொல்கிறது, உங்களுக்கான விடையை.
5)பெரியார் திருக்குறளை வெறுத்தாரா?
பெரியார், திருக்குறளில் இருக்கும் சில பழமை வாதக் கருத்துகளை எற்றுக்கொள்ளவில்லையே தவிர, திருக்குறளையே மறுதலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, திருக்குறள் என்பதற்காக அது கூறு நோக்கில் ஆனா ஆய்வுக்கு உட்படாது என்று சொல்ல இயலாது, ஒரு நூலை உங்களுக்கான முன்வடிவமாக ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் முற்றிலும், தனி மனித விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டது. பெரியார் சொன்னார் என்பதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை, அவர் அப்படிச் சொல்லவுமில்லை,
நான் சொல்லும் கருத்துகளின் உட்பொருளையும், உங்கள் நுண்ணறிவுக்கு உட்படுத்தி, அதில் உண்மை இருப்பின் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தான் பெரியார் சொன்னார், தவிர நான் சொன்னது தான் சட்டம் என்று அவர் ஒரு போதும் சொல்லவில்லையே….
6)பெரியார் மட்டுமே சாதீயம் எதிர்த்த தலைவரா?
யார் சொன்னார்கள், பெரியார் ஒருவர் மட்டுமே, சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் பாடுபட்டார் என்று, சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போரிட்ட பிராமணர்கள் கூட இருக்கிறார்கள், உங்கள் வரிசை கிரமத்தில் அவர் கடைசியில் வந்தாலும், இன்னும் பல்லாயிரம் தமிழர்களின் வாழ்க்கை நீரோட்டத்தில், பெரியார் முதல் இடத்தில் தான் இருக்கிறார், அதற்கான சான்றிதழ்கள் தேவை இல்லை, ஐ.நா மற்றும், UNICEF போன்ற உயரிய மனித சமூக நிறுவனங்கள் ஒப்புக் கொண்டு அதனை அவர்களது குறிப்புகளில் பதிவும் செய்து உள்ளன.ஆனால், கடைசியாக நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா, அவர் தாம் சார்ந்த மக்களுக்காக உழைத்தார் என்று, இது தான் ஒரு தலைவனின் உண்மையான வெற்றி, அவர் உங்களுக்கும் எனக்குமான தலைவர் அல்ல, அவர் கடை மட்டத்தில் கிடந்த அடிமைக் கூட்டம் கண்டெடுத்த ஒரு மாபெரும் புரட்சிக்காரர்.
7)மதங்களைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும் அறியாத பெரியார் எதற்காக அவற்றை எதிர்த்தார்?
விடுதலைக்கான போராட்டம் என்று வரும்போது, காந்தி அஹிம்சை வழியைத் தெரிவு செய்தார், சுபாஷ் சந்திர போஸ் ஆயுத வழியைத் தெரிவு செய்தார், ஆனால் இருவரையும் நாம் விடுதலை போராட்ட வீரர்கள் என்று தானே சொல்கிறோம்,
அது போல சில நேரங்களில் கடுமையான வழி முறைகளைக் கையாண்டால் தான் சிக்கல்களை தீர்க்க முடியும் என்கிற போது பெரியார் தனக்கே தெரிந்த போராட்ட முறைகளை எடுத்தார்.மனித குல இன்னல்களுக்கு எதிராக போராட வேண்டும் என்கிற நிலையில் பட்டங்களும், படிப்பும் எப்போதும் யாருக்கும் தேவை இல்லை. இத்தனை உலக வரலாற்றில் பல்வேறு பக்கங்களில் நீங்கள் காணலாம்.
8)பார்ப்பனர்கள் மட்டுமே சாதிய வெறி பிடித்தவர்களா?
ஒரு கருத்தியலை உருவாக்குவது என்பது வேறு, அந்தக் கருத்தியலை பின் தொடர்வது என்பது வேறு, இங்கு, சாதீயம் நீர்த்துப் பொய் பிராமண நண்பர்களிடமும், முந்தைய ஆதிக்க சாதி நண்பர்களிடமும் இருந்து இடம் மாறி இப்போது பிற்ப்படுத்தப்பட்ட சமூக நண்பர்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கான மூலமும், காரணிகளும் இன்னும் கூட ஆதிக்க மேல் சாதியினரிடம் தான் இருக்கிறது.சமூக அடுக்கு என்கிற, சாதீய முறை, எங்கிருந்து தொடங்குகிறது என்பதும், அந்த அடுக்கின் முதல் அடுக்காக இருப்பது எது என்பதும், உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நம்புகிறேன், இன்றையா சூழலில், பிற்ப்படுத்தப்பட்ட சமூக மக்களின் ஒடுக்குமுறை என்பது நில மானிய முறைகளையும், மரியாதை, உரிமை போன்றவை சார்ந்த திசைகளிலும் இருக்கிறது, ஆனால், இவற்றைத் தகர்ப்பதற்கான மூல காரணிகளான கல்வி,வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதாரம் ஆகியவை இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரப் பகிர்வு சார்ந்த அரசுக் கோட்பாடுகளை தான் இயங்குகிறது, அப்படி வரும் போது இவற்றை முழு மூச்சாக எதிர்ப்பது யார், என்கிற கேள்வியின் பதில் இப்போதும், ஆதிக்க மேல் சாதியினர் இடம் தான் இருக்கிறது, தொடர்ந்து, பொய்யான கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி, மக்களை ஒரு குருட்டுத் தனமான நம்பிக்கைகளின் பின்னால் செல்ல வைப்பதில், இன்றும் பிராமணர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வீர்களா?பெயர்களில், சாதீய அடையாளங்களை இடுவது, மற்றும், நில மானிய முறைகளின் கீழான மரியாதை போன்ற காரணிகளை நம்மால் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடுகளின் மூலம் முற்றிலும் நீக்கி விட முடியும், ஆனால் அடிப்படைக் கொள்கைகள் மீதே எதிர்ப்புக் காட்டும் ஆதிக்க மேல்சாதியினரின் சித்தாந்தப் போர் தான் மிக முக்கியமானது நண்பரே…..எனெவே நீங்கள் சொல்லும் காரணிகள், வாதத் திறனுக்காக ஒப்புக் கொள்ளப் பட்டாலும், அவை முற்றிலும் ஏற்றுக் கொள்ளப் பட முடியாத சில சப்பை கட்டுகள் என்பது உறுதி.
9)சாதரண மனிதராகிய CM சிலைய அவமதிக்கவே இன்னைக்கு யாருக்கும் உரிமை இல்லை.. அப்டீ இருக்கும் போது பல கோடி மக்கள் வணங்கும் தெய்வத்தின் சிலையை உடைக்கலாமா..?
பல உயிர்களைக் , காப்பதற்கு, பல்வேறு சூழலில் கொடும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைக் கடவுளர் பெயரால் சிலர் கேள்விக் குறியாக்கினால், அந்தச் சிலைகளை உடைப்பதில் தவறு என்ன இருக்கிறது நண்பரே, உங்களுக்கான நம்பிக்கையா, எங்களுக்கான வாழ்வுரிமையா என்ற கேள்வி வரும் போது, உலகின் மாபெரும் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் வாழ்வுரிமை தானே மேலோங்கும், அந்த வாழ்வுரிமையின் அடிப்படையில் தான் தந்தை பெரியார் சிலைகளை உடைத்தார்.இன்று நீங்கள் வாழும் காலம் என்பது வேறு, பல்வேறு நிலைகளில், ஒடுக்கப்பட்ட மக்கள் அடக்குமுறைகளைக் கடந்து, வாழ்வின் பல்வேறு முன்னேறிய மட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள், ஆதலால் உங்களால், அன்றைய சூழலில் தாகத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை, மக்கள் ஆதரவுடன் தானே, பெரியார் சிலைகளை உடைத்தார், மக்கள் பெரும் கூட்டமாக அவரது பாதை பின்பற்றி நடந்தார்களே, இன்றும், மிகப் பெரும் திராவிட இயக்கங்கள் வெற்றி பெற்று, தமிழினத்தை ஆண்டு கொண்டிருப்பதற்கு அய்ய பெரியார் தானே காரணம். மக்கள் ஆதரவுடன் செய்யப்பட அந்த உடைப்பு அன்றைய தேவையாக இருந்தது நண்பரே.
10)திராவிடன் என்பவன் யார்?
திறந்த இடத்தவன், (திறந்த சமவெளிப் பகுதிகளில் வசிப்பவன்) என்பது மருவி திராவிடன் என்றானது, சிந்துச் சமவெளி பகுதிகளை இருக்கும், சான்றுகள் ஒரு நீண்ட கால இடைவெளிக்கு முன்னரே திராவிடர் என்னும் இனத்தவர், திறந்த இடங்களில் வசித்தவர் என்கிற குறியீடுகளில் அழைக்கப்பட்ட போது கடைபிடிக்கப் பட்ட அடைமொழிகள் பிற்காலத்தில் மருவி திறந்த இடத்தவன், திராவிடன் என்றானது.மேலும், திராவிடன் என்கிற சொல்லுக்கு பல்வேறு மூலக் கதைகள் இருக்கிறது, அவற்றில் முதன்மையானது, தமிழா —– த்டமிழ / டமிழா / திராமிலா —– திராவிடா என்கிற ஒரு மூலம் இன்றளவும் சொல்லப்படும் மூலமாகும், மொழி கூறுகளின் அடிப்படையில் இவற்றின் ற்ற – மருவி திரா என்று ஆவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றும், மொழி நூல் ஆய்வாளர்களால் சொல்லப் படுகிறது.ஆதி சங்கரர் தன்னை ஒரு திராவிட புத்திரர் என்று கூறினார் என்றும், திரவம் – வித்துக்கள் இவற்றின் அருகாமையில் வசித்த இனம் திராவித்து, பின்னர் திராவிடன் என்கிற ரீதியில் ஒரு சாரார் கருத்துக் கூறுகிறார்கள், இருப்பினும், இன்னும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதி திராவிடர் என்று அழைக்கப் படுவதும், அவர்களின் நீண்ட நெடு நாளைய வரலாற்றில் இந்த வார்த்தை தொன்று தொட்டு வருகிறது என்பதும் புலனாகிறது.
11)தமிழன் என்பவன் யார்?
தமிழன் என்பவன் ஒருபோதும் வெறியனாக இருக்க மாட்டான், தமிழன் என்று சொன்னாலே அன்பு வடிவானவன், பண்பில் சிறந்தவன் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, நான் ஒரு போதும் என் மொழி மீது வெறியனாக இருக்க மாட்டேன், நான் என் மொழியை நேசிப்பேன், பிற மொழிகளை பிற இனத்தவரை மதிப்பேன், ஒரு நாளும் அவர்கள் வாழும் உரிமையை கேள்விக் குறியாக்க மாட்டேன், என்னுடைய மொழி மீதும் இனத்தின் மீதும் எந்த அளவு நேசம் வைத்து இருக்கிறேனோ, அதே அளவு சம நேசத்தோடு பிற மொழியினரை, பிற இனத்தவரை நேசிப்பேன். என் மொழி எப்போதும் பிறரை அழிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை, போரிடும் போதும், புற முதுகிட்டு ஒடுபவனை விட்டு விடு என்றும், மிஞ்சி அணிந்தவனைக் கொள்ளாதே என்றும் (புதிதாய் மணமான இளைஞன்) அன்பின் வழியை வீரத்திலும் பறை சாற்றிய தமிழினத்தின் வழி வந்த நான், அனைவரையும் மதிக்கும் பண்புடனே பிறந்தேன், வளர்ந்தேன் . ஆனால், பிராமணர்கள் என்கிற ஒரே காரணத்தைக் காட்டிப் புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி மீதான உண்மை அக்கறை கொண்ட, நண்பர்களையும் நான் தமிழர்கள் என்று தான் சொல்வேன். அதில் எனக்கு ஒரு போதும் மாற்றுக் கருத்து இல்லை. குருட்டுத் தனமாக ஆரியர்கள் என்றால் அனைத்துப் பார்ப்பனர்களும் என்கிற அரசியல் கணக்கு அல்ல அது, இன்றும் பல்வேறு தளங்களில், உலகெங்கும், தமிழ் மொழி மீதும், இனத்தின் மீதும் மாறாத பற்றுக் கொண்ட பிராமண நண்பர்களை எனக்குத் தெரியும்.
12)எல்லோரும் ஓரினம் என்று சொல்லும் பொது, பின்னர் எதற்கு இன உணர்வு?
மனிதர்கள் எல்லோரும் ஓரினம் என்பதையும், சமம் என்பதையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாட்டைப் பாடிய இனம் தான் தமிழினம்.எல்லோரும் ஓரினம், என்று சொல்லிக் கொண்டும், அனைத்தும் ஒரே பாலினம் என்று அம்மாவையும், மனைவியையும் நம்மால் ஒரே நோக்கில் பார்க்க முடியாது, அம்மா என்றும் அம்மாவாகவும், மனைவி என்றும் மனைவியாகவும் தான் இருக்க முடியும், அதே போலத் தான் மொழி, மற்றும் இனம் ஆகியவற்றின் மீதான பற்றும், சார்பு நிலையும், நான் இனப் பற்றுக் கொண்டு இருக்கிறேன் என்றால், அது நான் கடந்து வந்த பாதச் சுவடுகளின் மீதான பிணைப்பு, இந்த அடிப்படை கூடவா உங்களுக்குத் தெரியாது?
13)இந்திய தேசியத்தை நீங்கள் மறுக்கிறீர்களா?
தம்பி, யதிராஜா, உங்கள் கண்மூடித் தனமான குற்றச்சாட்டை திரும்பப் பெறுங்கள், இந்தியா என்கிற ஒரு நிலவியல் கோட்பாட்டுக்குள், திராவிட இயக்கங்களும் ஒன்றி விட்டன, அவை தொடர்ந்து இந்திய தேசியம் அல்லது உங்கள் சொற்களில் இந்துஸ்தானம் என்கிற கட்டுக்குள் தான் செயல்படுகின்றன என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை, மேலும் பாரதியின் தமிழ் மீதோ, பாரதியின் புலமை மீதோ எந்த ஒரு பெரியார் வழி நடக்கும் நண்பருக்கும் அய்யம் இல்லை, பாரதியை ஆய்வுக்கு உட்படுத்தும் போது கருத்தியல் ரீதியாக சிலர் அவரது பாடல்களை விமர்சனம் செய்யலாம்.இந்திய தேசியம் என்கிற கட்டுக்குள் இருக்கிறோம் என்பதால் மட்டும், நான் தமிழன் என்று சொல்வதிலும், தமிழினத்தின் பெருமைகளை முன்னெடுப்பதிலும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால், நிலைத்தன்மை அற்ற இந்திய தேசியம் ஒரு நாள் சிதைந்து போகலாம், தமிழன் என்கிற இன அடையாளம் ஒரு போதும் மாறிப் போவதற்க்கோ, இல்லை நீர்த்துப் போவதற்க்கோ வாய்ப்புகள் இல்லை.
14)குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று நம்பும் பகுத்து அறிவளர்களுக்கு எல்லாரும் ஓரினம் என்பதில் மட்டும் ஏன் நம்பிக்கை இல்லை?
எல்லோரும் ஓரினம் என்று சொல்லும் மாண்புமிகு நண்பர் சென் அவர்களே, நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், தாழ்த்தப்பட்ட குடும்பத்தினருடன் தான் மணம் புரிவேன், முழுமையாக நான் சாதி மறுப்புத் திருமணம் தான் செய்வேன் என்று இங்கு அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? அல்லது உங்கள் குடும்பத்தில் அது போன்ற நிகழ்வுகளை நீங்கள் முன்னெடுத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு ஆதாரங்களுடன் நிரூபியுங்கள்.உங்கள் அனைத்து வாதங்களையும் ஒப்புக் கொண்டு, உங்கள் கருத்துக்களையே பின்பற்றத் தயாராக இருக்கிறேன்.
அல்லது, எல்லோரும் ஓர் குலம், ஓரினம் என்று ஒப்பாரி வைக்கும் நண்பர்கள் யாராவது நாங்கள், சாதி மறுப்பு மற்றும் மத மறுப்புத் திருமணம் மட்டுமே செய்கிறோம் என்று உரக்கக் கூறுங்கள் பார்க்கலாம். எல்லாம், வெறும் வாய்ப் பேச்சும், வான வேடிக்கையும் தானே நண்பர்களே……ஆனால், பெரியாரின் வழி வந்தவர்கள் தான் இன்றும் சாதி மறுப்பை உறுதி செய்து சாதியத்தின் ஆணி வேர்களை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு இனிய செய்தி.
15)மற்ற மொழிகளுக்கு ஏன் தடையாக இருக்கிறீர்கள்?
யார் இப்போது மாற்ற மொழிகளுக்கு தடையாக இருப்பது? நானும் பெரியார் வழியில் வளர்க்கப்பட்டவன் தான், இந்தி உட்பட 8 இந்திய மொழிகளைப் பேசவும், 4 இந்திய மொழிகளை எழுதவும் நான் தெரிந்திருக்கிறேன், ஆனால், தாய் மொழி மறந்து ஆங்கிலம் பேசுவதே அழகு, ஆங்கிலத்தில் பேசினால் தான் அறிவு என்று உளறிக் கொண்டு திரியும் ஒரு கூடத்திற்கு மட்டும் தான் நான் கூறுவது, மொழிகளைப் படிப்பதும், மாற்ற மொழிகளை அறிந்து கொண்டு அவற்றின் மூலமாக நமது தொடர்பு எல்லைகளை விரிவு படுத்திக் கொள்வதும், அறிவார்ந்த செயல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை.அதே நேரத்தில், என் மொழிக்கான அனைத்து வளர்வு நிலைகளும் உறுதிப் படுத்தப் பட வேண்டும் என்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டவன் நான்.
16)விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று தானே உலகம் பார்க்கிறது?
பார்க்கட்டும் நண்பரே, இன்றைக்கு உலகில் வாழும், தமிழர்களில்,(குறிப்பாக பிராமணர்கள் தவிர) அனைவரும், விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்கிறார்கள், விடுதலை புலிகள் இல்லாத தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவு மட்டும் தான் என்பதிலும், அவர்கள் தங்கள் உரிமைகளை காக்கப் போராடும் இனப் போராளிகள் என்பதிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், இன்னும் பல்வேறு நாடுகளும் அங்கீகரித்து இருக்கின்றன.தமிழகத்திலும், முதல்வராக இருக்கும் ஒரு மனிதர் கூட, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ் செல்வன் அவர்களின் மறைவுக்காக இறங்கர்ப்பா எழுதும் அளவில் தமிழர்களுன் நெஞ்சில் இன்றும் என்றும் நீங்கா இடம் பெரும் போராலிகளாய் விடுதலைப் புலிகள் இருப்பார்கள், (ராஜீவ் காந்தி படுகொலை என்கிற ஒரு சாக்கை அருள் கூர்ந்து இங்கு கொண்டு வர வேண்டாம், ஏனெனில் ராஜீவ் கொலைக்கு விடுதலை புலிகள் தான் காரணம் என்கிற வாதம் இன்னும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப் படாமலேயே இருக்கிறது.).ராஜீவ் படுகொலை பற்றிய புலன் விசாரணையில் ஈடுபட்ட திரு.கார்த்திகேயன் கூட, பல இடங்களில் தன்னுடைய (ராஜீவ் காந்தி படுகொலை: ஒரு புலன் விசாரணை) என்னும் நூலில் தெளிவாகக் கூறுகிறார். இந்தக் கொலையின் பின்புலத்தில் விடுதலை புலிகள் தவிர்த்து வேறு சில சக்திகள் இயங்கினார்கள் என்பதும், ஆனால், அவை எந்த அடிப்படையில் இயக்கப்பட்ட காரணங்கள் என்பதும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
17)அப்படியானால், பிரபாகரனை தமிழ் மக்கள் தலைவர் என்று சொல்கிறீர்களா?
அதற்காக நான் ஒன்றும் விடுதலை புலிகளின் தலைவரை என்னுடைய மானசீகத் தலைவராகக் கொண்டு, என்னுடைய நிலவியல் சாராத நிலைகளில் முழு ஈடுபாடு காட்டும் புலி ஆதரவு மனிதன் அல்ல, என் இன மக்கள் நலமுடன் வாழ மட்டும் நினைக்கும் ஒரு தமிழன்.தமிழீழச் சிக்கல் என்பது, இரு தேசிய இனங்களின் உரிமை போர், மறுக்கப்படும் உரிமைகளை ஒரு சாரார், அமைதியாகவும், ஒரு சாரார் போர் சார்ந்த முறையிலும் அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள், அது அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு சிக்கல், ஆனால் தீர்வு காண்பதில் இருந்த காலம் கடத்தலின் விளைவாக, ஒரு பெரும் ஆயுதப் போராட்டம் நோக்கி சிறுபான்மை இனத்தை செலுத்தி இருக்கிறார்கள், இதற்க்கு சிங்களப் பேரினவாத அரசும், அதன் பாசிசப் போக்கும் தான் காரணமாக இருக்க முடியும்.
18)மற்றவர்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
எல்லா இடங்களிலும், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், எதிர் மறை எண்ணம் கொண்ட மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதற்காக, மிகப் பெரும் மனித குல மாற்றங்களை விளைவித்த தந்தை பெரியார் போன்றவர்களை மிகவும் கீழ்த் தரமாக கொச்சைப் படுத்தக் கூடாது எனபது தான் என்னுடைய வேண்டுகோள்.
அதே போல பலரின் நம்பிக்கையில் நிறைந்திருக்கும் கடவுளரையோ, மதம் சார்ந்த நம்பிக்கைகளையோ பெரியார் வழி வந்தவர்கள் என்பதற்காக புண்படுத்த நினைப்பதும் ஒரு முட்டாள தனமான செயல் தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
19)காந்தியார் சாதியம் ஒழிக்கப் பாடுபட்டார்?
சாதீயம், என்கிற அடுக்கு முறை தான் முழுமையான பொருளாதார, சமூக ஏற்ற தாழ்வுகளின் பிறப்பிடமாக இருக்கிறது என்கிற அடிப்படை உண்மையை ஒரு முறை கொஞ்சம் விரிவாகப் படித்துப் பாருங்கள்.காந்தியா? அவருக்கும் சாதீய ஒழிப்புக்கும் என்ன தலைவா தொடர்பு, சும்மா கொழப்பு கொழப்புன்னு கொழப்புரீங்க தலை, நீங்க இன்னும் கொஞ்சம் நிறையப் படிக்கணும், சாதீய முறைகளின் பின்புலம், அவற்றை ஒழிப்பதில் இந்த தேசம் காட்டிய நடைமுறைகள், காந்தியாரின் சாதீயப் பார்வை? சாதீய ஒழிப்பு முறைகளைப் பொருத்த வரை, சோஷலிசம் என்கிற தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நேரு பரவாயில்லை, காந்தியார் பல்வேறு விமர்சன நிலைகளில் இருக்கிறார். எனவே நீங்கள் தமாஷு பண்ணாமல் ஒழுங்காகப் பேசவும்.
20)ராஜீவ் காந்தியை வெருக்கிறீர்களா?
இந்திய தேசியத்தின் ஒரு மிகப் பெரிய தலைவராகவும், இன்றைய தொழில் நுட்ப வளர்வுக்கு விதையிட்டவருமான திரு.ராஜீவ் காந்தி அவர்களின் மீது இன்றளவும் மிகப் பெரும் மதிப்பு எனக்கு இருக்கிறது, ராஜீவ் என்னும் ஒரு இளம் தலைவரைக் கொன்றது யாராக இருப்பினும் அது மிகப் பெரும் குற்றமே, அது விடுதலைப் புலிகளாக இருப்பினும் மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், தமிழ் மக்களின் விடியலை முன்னிறுத்தி ஈழ மண்ணில் நடைபெறும் போராட்டங்களுக்கும், ராஜீவ் கொலைக்கும் முடிச்சுப் போட்டுக் கொண்டு ஒரு விடுதலைப் போராட்ட நிகழ்வினை, தமிழன் என்கிற முறையில் என்னால் ஆதரிக்காமல் இருக்க முடியாது.நண்பர்கள், நான் எதோ ராஜீவ் காந்திக்கு எதிரி என்பது போலவும், இந்திய தேசியத்துக்கு எதிரி என்பது போலவும் எண்ண வேண்டாம். ராஜீவ், ஈழ மண்ணில் இந்திய அமைதிப் படை என்ற பெயரில், காலிகளை அனுப்பி, தமிழ் மக்களைக் கொன்று குவித்த வரலாறும், தமிழ்ப் பெண்களை மானபங்கப் படுத்திய வரலாறும் தெரிந்திருந்தும், பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிரை, வாழ்வை, ஒரே ஒரு ஊழல் அரசியல் தலைவரின் உயிருக்குப் பணயம் ஆக்குவது என்பது தெரிந்தே நான் செய்யும் இனத் துரோகமாகும்..
21)இன்று திராவிட கழகம் பெரியார் வழி செல்கிறதா என்று கை.அறிவழகன் தான் சொல்ல வேண்டும். ஏன் இந்த அவலம்?
திராவிடர் கழகம் என்பது பல்வேறு திசைகளில் இன்று சிதறிப் போய் இருக்கிறது, தாய்த் திராவிடர் கழகம் என்பது ஒரு பணம் பண்ணும் நிறுவனம் ஆகி பல ஆண்டுகள் ஆகிறது, பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புவதை விடவும், தன்னுடைய புகழ் பரப்புவதில் ஐயா.வீரமணி அவர்கள் இறங்கி அந்த வேலைகளில் மும்முரமாய் இருக்கிறார், திராவிட வழி வந்த ஐயா கருணாநிதி பல்வேறு வழிகளில் சோடை போய், இன்று, இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவிகள் புரியும் ஒரு அரசின் ஆலோசகர் ஆகிவிட்டார்.ஆகவே, பெரியாரைப் பின்பற்றுகிறேன் என்பது பெரியாரை மட்டும், அவரது கருத்தியலை மட்டும் பின் தொடர்வதாகும், பெரியாரியல் என்பது, பல்வேறு வளர்வு நிலைகளுக்கு ஆன காரணிகளைக் கண்டறிந்து, மென்மேலும் மொழியையும் இனத்தையும் வளர்த்தெடுத்தலே அன்றி, கண்மூடித் தனமாக அவரின் செய்கைகளை ஏற்றுக் கொண்டு, தனி மனித வழி பாடு செய்வது அல்ல.
புத்திசாலி மோகன், அவர்களே, தார்மீகமாக ஒரு படை அனுப்புதலை முடிவு செய்வது என்பதும், பிறகு அந்தப் படைகளை தமிழ் போராளிகளுக்கு எதிராகச் செயல்பட உத்தரவு பிறப்பிப்பதும், ஆயுதங்களை எல்லாம் அமைதி என்கிற பெயரில் பறிமுதல் செய்து பிறகு சுற்றி வளைத்து அவர்களைக் கொல்லச் சொல்வது போன்ற நற்காரியங்களில் ஈடுபட்ட திரு.ராஜீவ் காந்தி அவர்கள் மீது தலைவர் என்கிற முறையில் மரியாதை கொண்டதும் தவறென்றால், விட்டு விடுங்கள், அந்த மரியாதையும் தேவை இல்லை.
22)ராஜீவ் காந்தியைத் தமிழர்கள் தானே கொன்று விட்டார்கள்?
நீங்கள் எல்லாம், எந்த ஊர் ஐயா? உங்களுக்கு எங்கோ பிறந்து, ஊழலின் பெயரால், ஊரைத் தின்று, நீங்களும், நானும் கட்டிய வரிப் பணத்தில் சொகுசுக் கார்களில் பவனி வரும், ராஜீவ் மீது இருக்கும் அக்கறையும், அவர் உயிர் பொய் விட்டதே என்று நீங்கள் புலம்பும் புலம்பலும், நீங்கள் தமிழ் மக்கள் மீது காட்டும் அன்பை சொல்லாமல் சொல்கிறதே, தெரியாமல் தான் கேட்கிறேன், உங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா?கேட்பாரற்று, அடக்கம் செய்யக் கூட நாதியற்றுப் பொய் என் இன மக்கள் கொல்லப்பட்டும், எம் இனப் பெண்கள் கர்ப்பழிக்கப்பட்டு, எமது மீனவர்கள் நிர்வாணக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, தினம் தினம் சுட்டுக் கொல்லப்படுவது எல்லாம் உங்கள் எக்ஸ் ரே கண்களுக்கு தெரியாது?ராஜீவ் என்னும் ஒரு ஊழல் பெருச்சாளி கொல்லப்பட்டது கண்டு நீலிக் கண்ணீர் வடிக்கிறார் அண்ணன், உங்களை எல்லாம் இதனால் தமிழர்களின் கணக்கிலே சேர்க்க முடிவது இல்லை. அடித்து ஒடுக்கப்படும் ஒரு இனத்துக்காக உங்களால் ஒரு நாளும் குரல் எழுப்ப முடியாது, சொந்த மொழியும், ரத்த உறவுமாய் இருக்கிற தமிழர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த முடியாது? வந்து விட்டார், ராஜீவ் காந்தியின் அஸ்தியை எடுத்துக் கொண்டு…….நீரும் உம்ம நியாயமும்.
23)தமிழீழம் கிடைத்தால் தமிழர்கள் அனைவரும் சொந்த மண்ணுக்கு திரும்பி வருவார்களா?
நணபர் கோடாங்கி அவர்களே, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், பொருளாதார அளவில் நல்ல நிலையில் இருக்கும் எந்த இனத்தவர்க்கும், இருப்பிடம் ஒரு பொருட்டல்ல, அவர்களில் ஒரு குறிப்பிட்ட சாரார் வேண்டுமானால், தன்னுடைய தாய் மண்ணை மறக்காமல், மீண்டும் வரலாம், ஆனால், நாம் குறிப்பிடும், ஈழத் தமிழர்கள் என்பது, இன்னமும், அன்றாட உழைப்பில் பொருளீட்டி, உழைக்கும் வர்க்கமாக இருக்கும், புலம் பெயர முடியாத தமிழ் மக்களைப் பற்றியது தான்.கடும் பாதிப்புகளுக்கும், கொடும் அடக்குமுறைகளுக்கும், எப்போதும் ஆட்படுவது அவர்கள் மட்டும் தான்.
24)ராஜீவைக் கொன்று குவித்த குழுவிற்கு நாங்கள் எப்படி தமிழராக ஆதரவு அளிக்க முடியும்?
ஐயா, தமிழரல்லாத மோகன் அவர்களே, நீங்கள் என்றாவது, இலங்கையில் கொன்று குவிக்கப்படும், தமிழர்களுக்காக இரக்கப்பட்டதுண்டா? உங்களை யாரும், புலிப் படையில் சேர்ந்து உயிர் விடச் சொல்லவில்லை, புலிகளை ஆதரித்துக் கொடி பிடிக்கச் சொல்லவில்லை? தொடர்ந்து கடும் அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படும் தமிழினத்திற்காக குரல் கொடுங்கள் என்று சொன்னால் அது விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குங்கள் என்று அர்த்தம் ஆகாது.இருப்பினும், ஒன்றை கவனித்தீர்களா, உங்களையும் அறியாமல், ஈழம் என்று சொன்ன உடன், விடுதலைபுளிகளைத் தான் நீங்கள் முன்னிருத்துகிறீர்கள், ஈழப் போராட்டத்துடன் புலிகளுக்கு எதிரான உங்களுக்கே இவ்வளவு பிணைப்பு என்றால், களத்தில் இருக்கும் மக்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் தமிழராக இருக்க முடியாது, நண்பரே, ஏனெனில் சொந்த சகோதரன் கொள்ளப் படும் போது வேதனையில் வெந்து தனலாய்த் தவிக்கிறானே, அவன் தான் உண்மையான தமிழன், உங்களை போன்றவர்கள் வெளியிலே பகல் வேடமாய் தமிழர் என்று சொன்னாலும், உணர்வால் நீங்கள் தமிழினத்துக்கு எதிரானவர்கள். ராஜீவ் காந்தியைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ஆடும் நீங்கள், மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ” போபோர்ஸ் ஊழல் பணத்தை உலகெங்கும் இருக்கும் வங்கிகளில் பதுக்கிய மக்கள் துரோகி என்பது நினைவுக்கு வருவதில்லை” .இன்னமும் சொல்கிறேன், ராஜீவ் என்கிற இந்திய தேசியத்தின் தலைவன் மீதும் என்னுடைய இனத்தை விலை கொடுத்து நீங்கள் மதிப்பும் மரியாதையும் வைக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மரியாதை எனக்குத் தேவை இல்லை என்று முன்பே சொல்லி இருக்கிறேன்.
25)ராஜீவை மதிக்கிறேன் என்கிறீர்கள், பிறகு அவரை ஊழல் பெருச்சாளி என்கிறீர்கள், விளக்கம் அளியுங்கள்?
ஒரு மனிதரின் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக, அவர் செய்த ஊழல்களை விமர்சிக்கக் கூடாதா என்ன? நல்லவற்றை பாராட்டவும், ஊழல்களை எடுத்துக் கூறவும் உரிமை இல்லையா என்ன? பாராட்டினால் ஒரே அடியாகப் புகழ வேண்டும், தூற்றினால் அவன் நல்லவை செய்யினும் தூற்றி குப்பையில் போட வேண்டும் என்கிற அரசியலை உங்களுக்கு எந்த வரலாற்று ஆசிரியர் சொல்லித் தந்தார் நண்பர் சென் அவர்களே…..
26)மனசாட்சியோடு வாழும் கோடானு கோடி இந்திய மக்கள் எனும் இனம் இருக்கிறதே?
இந்த மாதிரி எல்லாம் நீங்கள் பக்கத்து மாநிலங்களில் இருக்கும், வாட்டாள் நாகராஜ், ராஜ் தாக்கரே போன்றவர்களின் அடிவருடிகளிடம் சொல்லி விடாதீர்கள்? முதுகுல டின் கட்டி அனுப்பி விடுவார்கள்?குடிப்பதற்கு நீர் தர வக்கில்லை, இந்திய இனமாம், இந்திய இனம், நீங்களும் உங்கள் இந்திய இனமும்.எங்கே கேரளாவில் போய் முல்லைப் பெரியார் நமது இந்திய இனம் சார்ந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம், அந்த நீருக்குள்ளேயே உங்களை மூழ்கடித்து விடுவான், மலையாளி.
எங்கே கர்நாடகாவில் போய், நமது இந்திய இனம் சார்ந்தது காவேரி என்று சொல்லிப் பாருங்கள், பெரிய பாறாங்கல்லைத் தூக்கி உங்கள் தலையில் போட்டு விடுவான் கன்னடன்.எங்கே மகாராஷ்ட்ராவில் போய் நமது இந்திய இனம் சார்ந்தது மும்பை, என்று சொல்லிப் பாருங்கள், உடன் உங்களுக்கு ரயில் பயணம் இலவசமாகக் கிடைக்கும்.தேசியம் பேசுற உங்களுக்கு எங்கயாவது அடி விழுந்தால் தான் தெரியும் தமிழனாய் இருப்பதன் உண்மையான பயனும், விளைவும்.
27)பிறகு தேசியம் என்றால் என்ன?
தேசியம் என்கிற ஒரு கருத்தாக்கம் ஒரு சார்பாகவே இருக்கக் கூடாது, அதை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும், நீங்கள் சொல்லும் தேசியத்தில் அனைத்து இனத்தவரும், மொழி வேறுபாடின்றி உரிமைகளைப் பெற்று இருக்க வேண்டும், ஆற்று நீரை பகிர முடியாத உங்கள் தேசியம் யாருக்கு வேண்டும்?
மனிதர்களை மனிதர்களாகவே மதிக்கத் தெரியாத முட்டாள்களிடம் போய் தேசியம் பேசினால் கர்நாடக மாநிலத்தில் கொல்லப் பட்டார்களே தமிழர்கள், நூற்றுக்கும் மேலானவர்கள்…அவர்களைப் போல அடிபட்டு சாக வேண்டியது தான்…உங்கள் மொழியும் இனமும் தான் உங்களை எங்கும் நிலை நிறுத்தும் என்பது ஒரு தேசியம் சார்ந்த கருத்தியல் ஆய்வாளர்களாலும் ஒப்புக் கொள்ளப் பட்ட உண்மை.
28)தலைமை குணம் என்பது பிறவி குணம் என்று சொன்னவர் தானே நம் நண்பர் அறிவுஅழகன்?
தலைமைப் பண்பு என்பது இப்போதும் சொல்கிறேன், பிறவிக் குணம் தான்…..ஆனா அதுக்கும், இந்த நீங்க சொல்ல வர்ற கருத்துக்கும் என்னப்பா சம்பந்தம்,??தலைமைப் பண்பு என்பது, ஒரு மனிதனுக்கு பிறப்பில் இருக்கிறது, சில குறிப்பிட்ட நிலைகளில், சில வரைமுறைகளில் பயிற்சியின் மூலமாகவும் இது பெறப்படுகிறது, வழி வழியாக வருகின்ற பரம்பரைக் குணங்களால் ஒரு மனிதனுக்குத் தலைமைப் பண்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் 60 சதவிகிதத்திற்கும் மேலாக இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சிக்மன்ட் பிராய்டு தன்னுடைய மனவியல் ஆய்வுகளில் மனித மனம், தன்னுடைய பரம்பரைக் குணங்களால் எழுச்சி அடைகிறது என்பதை, தன்னுடைய ஆய்வுகளில் பலமுறை கூறி இருக்கிறார். அரச பரம்பரைகளில் அடுத்த தலைமுறை தலைமைப் பண்புடன் இருப்பதற்கு ஜீன்களும் ஒரு மிக முக்கியக் காரணி என்பது நிரூபிக்கப் பட்ட உலக வரலாறுகளில் தெரியும். கொஞ்சம், படிக்கிற பழக்கத்த அதிகப் படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே….
29)கலப்பின விதிகளும், கலப்பினக் குழந்தைகளும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டிருக்கிறார்கள் என்கிற அறிவியல் ஆய்வுகள் பற்றி நண்பரே?
உண்மையில் பண்புகளைக் கடத்துவதில் வேண்டுமானால், அவை உதவி புரியலாம், ஒரு புதிய பண்பான சாதி மதம் கடந்த மனித நேய சமூகப் பண்பை வளர்த்தெடுக்க புதிய வகை ஜீன்கள் தான் உதவி புரியும் நண்பரே, அந்தப் பழைய ஜீன்களை அழிக்க வேண்டும் என்பது தானே நமது நோக்கம்?
கலப்பு மணம், என்பது இன்று அரசுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட, சாதீய முறை என்னும் கொடிய நச்சுக் கிருமியை ஒழிக்க இருக்கும் மிக எளிதான முறை என்று அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட பின்பும், நீங்கள் இன்னுமும் அதனை முன்னிறுத்துவது, கொஞ்சம் அச்சம் தரும் செய்தியாகத் தான் எனக்குத் தெரிகிறது நண்பரே???????? சாதி மதம் கடந்த நிலையில் வெற்றி பெற்றாலும் தலைமுறைப்பண்புகள் மூலமாக வளர்ந்த அறிவின் வளர்ச்சி அடுத்த தலைமுறையை சாராமல் சென்றுவிடும்?எனக்குப் புரியவில்லை நண்பரே? கலப்புத் திருமணம் என்கிற ஒரு காரணி, மிகச் சிறந்த ஜீன்களை உருவாகும் என்பதையும், எந்த ஒரு இனக் கலப்பும், பல்வேறு வகையான வளர்வு நிலைகளுக்கு உயிர் வாழ்கை முறைகளை எடுத்துச் செல்லும் என்றும் அறிகிறோம்.ஒரே, ரத்த உறவுகளில் திருமணம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூடப் பரிந்துரை செய்கிறார்கள், அவ்வாறு செய்யும் போது பரம்பரை நோய்களுக்கான தொடர்வு என்பது அதிகம் என்றும், இனக் கலப்புகள் தான் பல்வேறு வீரியமிக்க இனங்களை கொடுத்திருக்கிறது என்றும் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்?ஒரு நகைச்சுவைக்காக, “அரசன், யாகம், வேள்வி என்று சென்றாலும் அது குடிமக்களுக்குத் தானே நல்லது,” (உங்கள் பார்வையில்).சாதிய ஒழிப்பு என்பது ஒரு முர்ப்போக்கான கருத்தன்றோ, கலப்பு இனங்கள் பெருகும் போது, இந்த ஒரு கட்டமைப்பு அடியோடு மறக்கப்படும் அல்லது மறுக்கப்படும் அல்லவா? இன்று கலப்பு மணம் புரிந்த எத்தனையோ நண்பர்களையும், அவர்களது குழந்தைகளையும் பார்த்தால், ஒரே இனத்தில் மணம் செய்யப்பட்ட இனைகளின் குழந்தைகளை விடவும், மிகவும் அறிவார்ந்தவர்கலாகவே இருக்கிறார்கள். ஒரு சிறிய உதாரணம், திரு.ராஜீவ் காந்தி அவர்கள், ஒரு இத்தாலிய இனப் பெண்மணியை மணந்தார், அவர்களின் குழந்தைகள் இருவரும், மிகப் பெரும் அறிவாளிகளாகவும், தலைமை பண்பு கொண்டவர்களாக்கவுமே இருக்கிறார்களே நண்பரே, இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான், நண்பரே, இது போல உலக வரலாற்றில் கலப்பு மணம் புரிந்தவர்களின் குழந்தைகள் மற்றும் தலைமுறை மிகப் பெரும் எழுச்சி பெற்ற வரலாறு மிக நீண்டதாகவே இருக்கிறது? திரு.பெரோஸ் காந்தி அவர்கள் பார்சி இனம் சார்ந்த மனிதராகவும், திருமதி.இந்திரா அவர்கள் ஒரு காஷ்மீர்ப் பண்டித இனம் சார்ந்தவரும் தானே, நண்பரே, அவர்களுக்குப் பிறந்த குழந்தையான திரு.ராஜீவ் அவர்கள், ஒரு ஆளுமை மிக்க மனிதராக இருக்கும் போது எப்படி நீங்கள் சொல்லும் வாதம் சரியாகும்?எனவே ஆளுமைப் பண்பு என்பது மரபியல் ரீதியாகவும் கலப்பினங்களுக்குத் தான் அதிகம் என்பது மெய்ப்பட்டு விடுகிறதே?
இருப்பினும் ஒன்று மட்டும் உறுதி, கலப்புத் திருமணங்களால் மிக எளிமையான வழியில், எந்த ஒரு கருத்தியல் மோதல்களுக்கும் இடம் கொடுக்காமல் சாதி என்னும் மிகப் பெரும், கொடிய விசக் கிருமியை நம்மால் கொல்ல இயலும், அதனை உங்களைப் போன்ற நண்பர்களும் உணர்வீர்கள், உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டு சாதியற்ற சமூகம் படைக்க முன்வருவீர்கள் என்று நம்புகிறேன்.
30)பெரியார் ஆரியம் வேண்டாம் என்றார் ஆனால் தன் பேரில் ஆரியம் கொண்டார்?
பெரியார் ஆரியம் வேண்டாம் என்று சொன்னதை நீங்கள் தவறாக ஏன் பொருள் கொள்கிறீர்கள், பெரியார் ஆரியம் வேண்டாம் என்று சொன்னால் திரு.ராஜாஜி அவர்களை தன்னுடைய வாழ்நாள் முழுதும், எப்படி நண்பரைக் கொண்டார்??
அவர் சொன்ன ஆரியம், அழிவு நிலைகளைப் போதிக்கும் ஆரியம், சாதீயம் பேணும் ஆரியம் நண்பரே……அதனை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்….
பெரும்பாலோர் கூறுகின்ற ஒரு குழந்தைத் தனமான குற்றச்சாட்டு இது, பெரியார் ஆரியம் வேண்டாம் என்று சொன்னதன் நோக்கம், ஆரியத்தில் இருக்கும் சில நச்சுக் கருத்துக்கள், பல்வேறு நிலைகளில் சமூகப் புரையோட்டங்களுக்கு காரணமாக இருந்ததன் விளைவே, மேலும் பெரியார், ஆரியர் இனம் சார்ந்த பல்வேறு நண்பர்களிடம் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் நட்பும் அன்பும் பாராட்டினார், எனவே பெரியார், ஆரியம் சார்ந்த தீமைகளை மட்டும் தான் சாடினார் தவிர, முழுமையான ஆரிய இனத்தை அடியோடு அழிக்கக் கிளம்பினார் என்பது போல ஒரு மாயையை உருவாக்குவது எற்ப்புடையதல்ல. மேலும் பெயரில் ஒரு மனிதனின் அடையாளம் காண்பது என்பது, சமூகப் போராளிகளுக்கு ஒரு தேவையற்ற செயலாகவே கருதப்பட்டது, பெயர் என்பது ஒரு மனிதன் தானாக சிந்தித்து தனக்குத் தானாகவே சூட்டிகொள்வதல்ல, பிறக்கும் போதே நிர்ணயம் செய்யப்படும் இது பொ0ந்ட்ர அடையாளங்களின் மீதான விவாதம் செய்வது, அறிவுக்குப் பொருந்தாத ஒரு செயலேயன்றி, ஒரு மேலான விவாதமாக இருக்க வாய்ப்பில்லை.
32)பெரியார் திருக்குறள் தவறு என்றார் ஆனால் அவரை தொடர்ந்தவர்கள் திருக்குறள் உரை மட்டுமே தவறு என்கின்றனர்?
ஆம், பெரியார் திருக்குறளைப் பல்வேறு காலகட்டங்களில் தூற்றினார், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி மிகப் பெரிய ஆய்வே செய்யலாம், இருப்பினும், திருக்குறள் என்பது நடைமுறையில் இருந்த காலம், அதாவது அது இயற்றப்பட்ட காலம் என்ன, அந்த கால கட்டத்தில் இருந்த சமூக அடித்தளம் என்ன, என்பது பற்றி அறிந்து கொண்டால மட்டுமே, திருக்குறளை நம்மால் சரியாக எடுத்துக் கொள்ள முடியும், பல நூறு ஆண்டுகள் பிந்தைய திருக்குறள், எழுதப்பட்ட காலத்தில் இருந்த ஒரு சமூக அமைப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட திருக்குறளில், சில பிற்ப்போக்கான கருத்துக்களும், பெண்ணடிமைக் கருத்துக்களும் இருக்கிறது என்பது கண்கூடு, “பின்தூங்கி முன்னேழுவாள் பத்தினி” என்ற ஒரு கருத்தை நம்மால் கூட இன்று ஏற்றுக் கொள்ள முடியாது, இவை போன்ற கருத்துக்கள் விரவி கிடந்ததால் பெரியார் அதனை எதிர்த்தார், மேலூர் பெரியார் எதிர்த்தார் என்கிற காரணத்துக்காக திருக்குறளில் விரவிக் கிடக்கும் பல்வேறு நல்ல கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அவர் ஒரு போதும் சொல்லவில்லை, பெரியார், எல்லா நேரங்களிலும், ஒரு கருத்தை சொல்லி விட்டு, கடைசியில், இந்த ராமசாமி சொல்கிறான் என்பதற்காக எதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம், உங்கள் அறிவைப் பயன்படுத்தி அதில் உண்மைகள் இருந்தால் மட்டும் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார். இது போன்று சொல்லக் கூடிய ஒரு பண்பு எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத பண்பு.எனவே, திருக்குறளில் இருக்கும், நல்லவற்றை எடுத்துக் கொண்டு, தேவையற்ற சில கருத்துக்களை, அதாவது இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத சில கருத்துக்களை நாம் வீட்டு விடலாம் என்பதே எனது கருத்து.
33.பெரியார் சாதி வேண்டாம் என்றார் பார்பனியம் தவறு என்றார் ஆனால் பார்ப்பார்கள் இல்லாத இடங்களில் குட சாதி தகராறு உள்ளது?
நண்பர்களே, பெரியார் சொன்னதன் முழு விளக்கம், சாதீயம் வேண்டாம், பார்பனீயம் வேண்டாம் என்பது தான், சரி…..நீங்கள் சொல்கிற கூற்றுப்படி பார்த்தால், பார்ப்பனர்கள் இல்லாத இடங்களில் கூட சாதித் தகராறு இருக்கிறது என்பதையும்ன், இன்றைய சூழலில், சாதீயம் பேணும் செயல்களில், பார்ப்பனர்களை விட மற்ற ஆதிக்க சாதியினர் அது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன், ஆனால், இதற்கான மூல காரணம் என்ன என்பதையும், சாதீயம் தனது வேர்களை எப்படி சமூகத்தில் புரையோட விட்டது என்பதையும் நாம் அறிய வேண்டும், சாதீயம் வேரூன்றக் காரணமான மிக முக்கியமான காரணிகளில் மனு தர்மம் என்று சொல்லப்படும், ஒரு தொகுக்கப்பட்ட சட்ட திட்ட நூலாக இருக்கும், இருந்த ” மனு தர்ம சாத்திரம்” என்னும் நூல் மிக இன்றியமைந்ததாகும், இந்த நூலின் மூலமாக சொல்லப்பட்ட குலப் பிரிவுகள் பிறப்பினால் உருவாக்கப்பட்டவை என்னும் கருத்தியல் மூலம் தான் இன்றைய சாதித்த முறைகளுக்கான அடித்தளம், இதற்கான சான்றுகள், பல்வேறு நிலைகளில் பல்வேறு சமூகவியல் ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால நண்பர்களுக்கு அந்த ஆய்வுகள் பற்றிய குரிப்புகலையோ, சுட்டிகலையோ தருவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்.
இந்த நூலுக்கான அடித்தளமும், அதனை பின்பற்றும் ஒரு இனமும் ஆரியமாக இருந்தது, பின்னர் காலப் போக்கில் அது எல்லா விதமான சமூக நிலைகளுக்கும் தன்னுடைய கிளைகளைப் பரப்பத் துவங்கியது. அதனால் தான் பெரியார் மூலத்தை எதிர்த்தார், ஒரு சமூக சீர்கேட்டிற்கு யார் மொள்ள காரணம், என்பதை அறிந்து அவர்களை பெரியார் எதித்தார், ஆனால், இன்று பல்வேறு நிலைகளில் பார்ப்பன நண்பர்கள், சாதீயம் மறந்து, ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த மனிதர்களை, தங்கள் வாழ்கையில் துணைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களிடம், சாதீயம் கொஞ்சம் நீர்த்து பொய் இருக்கிறது என்கிற உண்மையை நான் ஒப்புக் கொள்கிறேன்.
34)பெரியார் பிள்ளையார் உடைத்தார் பிள்ளையார் சிலை இன்று தெருவுக்கு தெரு உள்ளது?
பெரியார், பிள்ளையார் சிலை உடைத்தார், சரி,
பெரியார், பல்வேறு மடாலயங்களுக்குச் சென்றார், அவர்கள் கொடுத்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டார், திருநீற்றினை தனது நெற்றியில் பல்வேறு மத நம்பிக்கைகள் சிதையக் கூடாது, மனிதர்களின் நம்பிக்கைகளை அவமரியாதை செய்யக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தார், இத்தனை ஒப்புக் கொள்கிறீர்களா?தன்னுடைய வாழ்நாள் முழுவதும், அவர் கொள்கை ரீதியாக மட்டுமே, தன்னுடைய போராட்டங்களை கையாண்டார், பல்வேறு உணவகங்களில், வைக்கப்பட்ட, பிராமணாள் மட்டும் சாப்பிட அனுமதி என்னும் சித்தாந்த ரீதியான மனிதநேய அவமரியாதையை விடவும், பிள்ளையார் சிலை உடைப்பு என்னும் சித்தாந்த ரீதியான போராட்டம் அவ்வளவு வந்மமையானது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.பிள்ளையார் சிலை இன்று தெருவுக்குத் தெரு இருக்கிறது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன், ஆனால், பெரும்பாலானா தெருக் கோவில்கள் முழுமையான நில ஆக்கிரமிப்பின் அடையாளம் என்பதும், அவற்றில் பெரும்பாலானவை சாலைகளை கையகப் படுத்த சிலர் நடத்தும் நாடக வடிவம் என்பதும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை,எல்லாக் கோவில்களும் அப்படி இல்லை, மக்களின் உண்மையான நம்பிக்கை சார்ந்த கோவில்களும் அவற்றில் இருக்கின்றன என்பதை நானும் மதிக்கிறேன், பல்வேறு நம்பிக்கைகள் வளர்வதற்கான காரணிகள் வெவ்வேறு நிலைகளில் காலூன்றி இருக்கின்றன, கம்யூனிசம் வென்றெடுத்த ருஷ்யாவில் இன்று அது இல்லை, மிகப் ஏறும் மத நம்பிக்கை கொண்டே உலகின் ஒரே இந்து நாடு என்று வர்ணிக்கப்பட்ட நேப்பாளத்தில் இன்று மாவோஇசம் வெற்றி பெற்று இருக்கிறது, இவை எல்லாம், ஒரு தலைவனின் போராட்டத்தையும், ஒரு வெற்றி பெற்ற கருத்தியலின் தாகத்தையும் ஒரு போதும் பாதிக்காது. திராவிட இயக்கங்களால் விளைந்த பலன்களை மட்டும் பார்க்கையில், உரிமை பெற்று கோவில் காட்டி வழி படுதல் மற்றும் கோவில்களுக்குள் நுழைய முடியாமல் தவித்தல் ஆகியவற்றின் வேறுபாடு உங்களுக்குப் புரியும்.
35.பெரியார் தேசியம் வேண்டாம் என்றார் அண்ணா தேசியம் ஏற்றார் ..திராவிட நாடு கொள்கையை கைவிட்டார்?
பெரியார், ஒரு மிகப் பெரிய தேசியவாதியாக இருந்து பின்னர் மாறியவர், என்பதையும், பெரியார் காந்தியாருக்கே, பல்வேறு போராட்ட நிலைகளில், ஆலோசனைகளை வழங்கியவர் என்பதும், நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று கருதுகிறேன், காந்தியாரின், மது விளக்குக் கொள்கைக்காக தனக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார், தான் மட்டுமின்றி, தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் மதுவிலக்குப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தார், காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒரு மிகப் பெரும் தலைவராக பெரியார் இருந்தார் என்பதும், கால ஓட்டத்தில், தேசிய இயக்கங்களால் ஒடுக்கப்பட்ட மக்குளுக்கான உண்மையான விடுதலையை பெற்றுத் தர முடியாது என்கிற உண்மையை உணர்ந்த பிறகு அவர் திராவிடம் என்கிற கொள்கையை கையில் எடுத்தார் என்பதும் வரலாறு.பெரியார் மற்றும் அண்ணா இருவரும் ஒரே கருத்தியலைக் கொண்டிருந்தாலும், பல்வேறு உள் முரண்பாடுகளை கொண்டிருந்தார்கள், எனவே அண்ணாவின் முடிவுகளுக்கும், பெரியாரின் கருத்துக்களுக்கும் முடிச்சுப் போடுவது, பாரதிய ஜனதா கட்சியில் கீ.வீரமணி இணைந்தார் என்படதி போன்ற வாதமாகும், அண்ணா தேசியத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணத்தை நம் நாடு இதில் தெளிவாகக் கூறி இருக்கிறார். அது முற்றிலும் அவர் சார்ந்த கருத்தியல் நிலைப்பாடு ஆகும், அதற்கும், பெரியாரயுன் கொள்கைகளுக்கும் தொடர்பு இல்லை என்றே நான் கருதுகிறேன், ஆனாலும், அண்ணா தங்கள் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில், தலைவர் போருப்புக்கான நாற்காலி எப்போதும் காலியாக தந்தை பெரியாருக்காக காத்திருக்கும் என்று தன்னுடைய அளவற்ற மரியாதையை வெளிப்படுத்தினார்.
36.பெரியார் கற்பை பற்றி பேசியதை யாரும் கேட்டதாக குட தெரியவில்லை?
பெரியார் கற்ப்பைப் பற்றி பல்வேறு நிலைகளில் பேசி இருக்கிறார், பேசியது மட்டுமன்றி, கர்ப்ப ஆட்சி என்னும் தலைப்பில் ஒரு மிகப் பெரும் நூலே எழுதி இருக்கிறார்.பெரியார் கற்ப்பைப் பற்றிக் கூறியவற்றின் சாரம் இதுதான்…….
பெண்கள் கற்பு என்னும் பெயரால் பல்வேறு நிலைகளில் ஒடுக்கப் படுகிறார்கள், பெண்களின் கற்பு என்கிற ஒரு காரணத்தை காட்டி, ஆண்கள் பல்வேறு அவர்களை அடிமைப் படுத்த நினைக்கிறார்கள், மேலும் உடலியல் ரீதியாகவும், மனவியல் ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை தனக்கே உரிய வழக்கமான அதிரடி கருத்துக்களால் கூறினார், இந்த ஒரு நிலைப்பாட்டில் பெரியாரை விமர்சனம் செய்பவர்கள், சமூக அறிவற்ற, பெண்ணடிமைத் தனத்தை இன்னமும் விரும்பும், ஆணாதிக்க சக்திகள் என்பது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை.
கர்ப்பத் தடை என்னும் ஒரு மிகப் பெரும் மருத்துவ அறிவியல் சார்ந்த சிந்தனையை, அவர் வாழும் காலத்தில், சிந்தித்ததில் மிகப் பெரும் தொலை நோக்குப் பார்வை இருந்தது.எனவே கற்ப்பைப் பற்றிய பெரியாரின் பார்வை முழுக்க முழுக்க ஒரு தொலை நோக்குப் பார்வை மட்டுமன்றி, இன்றைய பெண்களின் வாழ்நிலையில் பெரும் முர்ப்போக்கான விளைவுகளை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை.
37)சாதி ஆதிக்க்கதை எதிர்த்து பெரியார் மட்டுமே போராடவில்லை என்று நீங்களே ஒப்புக்கொண்டு உள்ளிர்கள் அதனால் அதில் பெரியாரின் பங்கு உள்ளதே தவிர தனித்தன்மை இல்லை?
பெரியார் மட்டுமே போராடவில்லையே தவிர, பெரியார் சாதீயம் ஒழிக்கப் பாடுபட்ட தலைவர்களில் எத்துனை முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது பக்கத்து மாநிலமான கேரளாவில் நடைபெற்ற வைக்கம் நுழைவுப் போராட்டம் மூலமாக நமக்கு தெரியும், இன்று இருக்கும் ஒரு சில தலித் அரசியலை முன்னிறுத்தும் தோழர்கள், பெரியாரை விமர்சனம் செய்கிறார்கள், ஆனால், பெரியார் சமூக விடுதலையின் பாதையில், சாதி மறுப்பு நிலைகளில் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதும், மிகப் பெரும் எழுச்சி நிலைகளுக்கு அவர் விதைத்த விதை தான் காரணம் என்பதும் நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
தனித் தன்மை என்பது வேறு, தலைமை ஏற்று ஒரு இயக்க ரீதியான போராட்டம் நடத்துவது என்பது வேறு, பல்வேறு அடுக்குகளில் இருக்கும் மக்களை, ஒருங்கிணைத்து போராட்ட வழிகளில் ஒரு மிகப் பெரும் விடியலுக்கான துவக்கத்தை பெரியார் தான் கொடுத்தார் என்கிற தார்மீக அடிப்படை வாதம் யாராலும் மறுதலிக்கப் படுவதில்லை என்பதே உண்மை.இப்பொழுதும் சொல்கிறேன், சாதி ஒழிப்பிற்கு பெரியார் மட்டுமே காரணமில்லை, பெரியார் என்கிற ஒரு இலச்சினை மக்களின் என்ன ஓட்டத்தை பிரதிபலித்த ஒரு மாபெரும் கருத்தாக்கம், பெரியார் என்பவர் ஒரு தனி நபர் அல்ல, அவர் ஒரு சமூகத்தின் உருவகம், ஆகவே பெரியாரை பழிப்பது என்பதும், பெரியாரை ஒரு கீழ்மட்ட நிலைகளில் விமர்சிப்பது என்பது, ஒரு பறந்து பட்ட சமூகத்தை அதன் அடையாளங்களை பழிப்பதும், இழிப்பதுமே ஆகும்.இறை சார்ந்த நம்பிக்கைகளை அவர் எப்படி மதிப்புடன் அனுகினாரோ, அதே போல அவரின் உண்மையான வழி வந்தவர்கள், உறுதியாக பிற மக்களின் நம்பிக்கைகளை மதிக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவர் விட்டுச் சென்ற கருத்துகளில் ஒன்று. மத ரீதியான, இறை ரீதியான நம்பிக்கைகள் என்பது ஒரு தனி மனித எண்ணம் தொடர்பான விஷயம், எப்படிப் பெரியாரை அவரது கருத்துகளைப் பின்பற்ற எனக்கு உரிமைகள் இருக்கிறதோ, அதே அளவு உரிமையும், நிலையும் எதிர்க் கருத்துக் கொண்டோர்க்கும் இருக்கிறது என்பதில் பெரியாரின் வழி நின்று சொல்லுவதில் பெருமை அடைகிறேன்.ஆனால் உங்கள் நம்பிக்கைகள் ஒருபோதும், இன்னொரு மனிதனின் வாழுரிமைகளை பாதிக்கும் வண்ணமும், ஒடுக்கும் வண்ணமும் இருக்கக் கூடாது.
38)ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொல்லிக் கொண்டு சாதீயம் கடை பிடிக்கும் சிலர் பற்றி?
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று ஒரு சில நேரங்களில் முழங்குகிறீர்கள், சாதி மறுப்புத் திருமணம் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் சொல்கிறீர்கள், சில நேரங்களில் நீங்கள் பேசுவது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது நண்பர் அம்பா அவர்களே, கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள். நீங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் கருத்தியலில் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவரா?மேலும், இறை நம்பிக்கைக்கும், இந்த இழைக்கும் துளியும் தொடர்பு இல்லை, இறை நம்பிக்கை என்பது ஒருவரது மனம் சார்ந்த நிலை, தனி மனித நம்பிக்கைகள் சார்ந்த ஒரு கருத்தே இறை நம்பிக்கை என்பது…..இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும்இறை மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகளை ஒரு போதும் பெரியாரை முழுமையாக உணர்ந்தவர்கள் கொச்சைப் படுத்த மாட்டார்கள், (உண்மையாக பெரியாரை உணர்ந்தவர்கள்). மதம் சார்ந்த உங்கள் நம்பிக்கைகளை எப்போதும் மதிக்கும் பண்பை தந்தை பெரியார் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அருள் கூர்ந்து மற்றவர்களை ஒப்பிட வேண்டாம், எனக்கு மற்றவர்களின் மன நிலை பற்றித் தெரியாது. சந்தர்ப்பவாதிகள் எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் இருக்கிறார்கள், சித்தாந்த ரீதியிலான பல்வேறு இயக்கங்களிலும் சந்தர்ப்பவாதிகளும் இருக்கிறார்கள், மதம் என்கிற ஒரு அழகான வழிகாட்டுதலை, கடவுள் என்கிற ஒரு அருமையான உருவகத்தை என்று மனிதன் தன்னுடைய சுய நோக்கங்களுக்காக சிதைக்கத் துவங்கினானோ, அப்பொழுதே மதங்கள் கறை படிந்த ஒரு பகுதியாக மாறி விட்டது.எனவே இதில், திராவிட இஅயக்கம் மட்டும் விதி விலக்காக் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, மேலும் பெரியார் மக்களின் விடுதலைக்காக மட்டுமே மதங்களை எதிர்த்தார், உண்மையில் கடவுள் என் கண்ணெதிரே வந்து நின்று விட்டால் உடனடியாக நானும் கடவுளை வழிபடுவேன் என்று மிக எளிமையாகச் சொன்னவர் தான் தந்தை பெரியார், மேலும் பெரியார் ஒரு வெற்றி பெற்ற கருத்தாக்கம் என்பதும், பெரியாரின் திராவிட இயாகம் தான் இந்தியாவில் எங்குமே இல்லாத வண்ணம், ஆட்சி அதிகாரம் கைப்பற்றி பல்வேறு சமூக முன்னகர்தலை நோக்கி தமிழக மக்களை அழைத்துச் சென்றது என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை தம்பி யதிராஜன்.
39)பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் மட்டும் தானா?
பெரியாரை நீங்கள் நினைப்பது போல வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்ப்பது, யானையை பூதக் கண்ணாடி வழி பார்ப்பது போன்ற ஒரு செயல். அவர் கடவுளை மறுத்ததை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அதையும் தாண்டி, மக்களின் சமூக முன்னகர்தலுக்கு அவருடைய பணிகள் பெரும் பங்காற்றி இருக்கிறது.நீங்கள் இன்னும் ஒரு கடவுள் மறுப்பாளர் என்கிற ரீதியில் மட்டுமே சிந்தனை செய்கிறீர்கள், அதனை விடுத்து அவர் ஆற்றிய மக்கள் பணிகளை கணக்கில் கொண்டால் உண்மையான பெரியாரை கண்டறியும் வாய்ப்புகள் இருக்கிறது தம்பி யதிராஜன்.
40)திராவிட இயக்கங்கள் வெற்றி பெறுவதற்கு அவர்கள் செய்யும் ஊழலே முக்கிய காரணம்… இதில் கள்ள ஓட்டு வேற அதிகரித்து உள்ளது.. மேலும் திராவிட கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்திடவே அரசியலில் உள்ளனர்.. அவர்கள் பெரியார் என்பவரால் தான் வெற்றி பெற்றார்கள் என்று நீங்கள் கருதுவது என்றால், பெரியார் மிக பெரிய விஷ செடிகளை நட்டு விட்டு சென்றுள்ளார் என்றே அர்த்தம்.. இதை வைத்தே பெரியார் நல்லது செய்தாரா, தீமையை செய்தாரா என்று அறியலாம்.?
அன்புள்ள தோழி ஸ்டார் அவர்களுக்கு, பெரியார் என்னும் ஒரு தனி மனிதர் மீது கொண்ட காழ்ப்புணர்வால் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன், ஏனெனில், பல்லாயிரக்கணக்கான மக்களால் தங்கள் தன்னிகரற்ற தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரியாரை, அவர் தம் பின்னால் வந்த தலைவர்களை வைத்து எடை போட இயலாது, காந்தியார் கண்டெடுத்த காங்கிரஸ் பேரியக்கத்தை இன்றைய காங்கிரஸ் தலைவர்களை வைத்து நம்மால் எப்படி எடை போட இயலாதோ, அதைப்போலவே, பெரியார் என்னும் ஒரு வெற்றி பெற்ற மனிதரின் தத்துவங்களை இன்றைய நீர்த்துப் போன திராவிட இயக்கத் தலைவர்களை வைத்து எடை போட இயலாது.அதுமட்டுமன்றி, ஊழல் என்னும் ஒரு சமூகம் சார்பான சீர்கேடுகளுக்கு முழு முதற்க் காரணங்களாக தலைவர்களை மட்டும் சொல்ல முடியாது, மக்களாகிய நாமும் நமது சுயநலமும் இதற்க்கு ஒரு முக்கிய காரணம், சமூகம் விளைவிக்கும் பயிர்கள் தான் தலைவர்கள், ஆகவே, ஊழலும், சித்தாந்த சீர்கேடுகளும் ஒரு சமூகம் சார்ந்தவை, மேலும் பெரியார் யாரையும் தன்னுடைய அரசியல் வாரிசாகவோ, தன்னுடைய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவராகவோ சுட்டிக் காட்டவில்லை, அவர் வாழும் காலத்திலேயே நீங்கள் சுட்டிக் காட்டும் தலைவர்கள் எல்லாம் அவரை விட்டு நீங்கி தனிக் கட்சியை துவக்கியது வரலாறு.இன்னும் முழுமையாக அவரைப் பற்றிய கருத்தியல் தாக்கங்களை நீங்களும் அறிய வேண்டும், நானும் அறிய வேண்டும்.
41)பெரியார் பலநூறு மக்களின் தலைவர் என்று கூறினால் தகும். பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைவர் எனக்கூறுதல் மிகைப்படுத்தல் ஆகும். கோடிக்கணக்கான மக்களுள் சில நூறு பேர் தலைவராக இவரை எடுத்துக்கொண்டுக் கொண்டிருக்கலாம்?
இன்றைய திராவிடர் கழகம் என்பதே ஏறத்தாழ இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது, இன்றும், தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஏறத்தாழ பத்தில் இருந்து பதினைந்து குடும்பங்களாவது பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றன, நேரடியாக இல்லாவிடினும், ஆன்மீக வழியிலான குடும்பங்கள் கூட, பெரியார் ஒரு பெரும் தலைவர், அவர் தன்னிகரற்ற வழியில் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்னும் ரீதியில் மானசீகமாக பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், பெரியாரை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சி என்பதே இன்று தமிழகத்தில் இல்லை, மதவெறிக் கும்பலாம் பாரதீய ஜனதாக் கும்பலும் இன்று பெரியார் சிலைக்கு மாலை மரியாதை செய்யாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய இயலாது என்கிற நிலை இருக்கிறது, உண்மை நிலை இவ்வாறு இருக்க, நண்பர் அம்பா அவர்கள், எங்கிருந்து உங்கள் புள்ளி விவரங்களை கொடுக்கிறீர்கள்? இது சற்று நகைப்புக்குரிய வாதம் போல இருக்கிறதே நண்பரே? உங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், அவர் தலைவரே என்று சொல்லும், பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் கதை போன்ற வாதம் உங்கள் வாதம் நண்பரே??????
42)பாரதீய ஜனதா கட்சி இந்தியாவில் மதவெறிப் பேய் பிடிப்பதற்கு மூல காரணியா?
நண்பரே, நீங்கள் இதனைக் கண்டனம் செய்வதற்கான காரணிகளை கொஞ்சம் வகைப்படுத்தினால், மேற்கண்ட என்னுடைய வாதத்தை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன், ஆர்.எஸ்.எஸ் இல் இருந்து துவங்கி, காந்தியாரைக் கொன்று துவங்கிய பயணம், வெற்றிகரமாக இன்று மதவெறி நாயகன் மோடியின் கைகளில் கொடுக்கப்பட்டு, இந்தியாவில் மிகப் பெரும் வன்முறைகளுக்கு வித்திட்ட பெருமை பாரதிய ஜனதா மதவெறிக் கும்பலையே சாரும் என்பது தானே உண்மை, தங்களுடைய நம்பிககைகளில் மட்டும் தீவிரமாக இருந்த சிறுபான்மையினரை உயிரோடு கொழுத்தி, உலகெங்கும் மதவெறியில் தலை சிறந்தவர் நாங்கள் தான் என்று பறை சாற்றிய கூட்டம் தானே பாரதீய ஜனதா மதவெறிக் கும்பல், இத்தனை உங்களால் மறுக்க முடியுமா??????/
43)நாசி பார்ட்டி மாதிரி வேன்னா ஒரு minority குழு, ஈ.வே.ரா வுக்காக இயங்கலாம். ஆனால் மக்கள் மனதில் அவர் ஒரு கரும்புள்ளியாகவே இருப்பார். அவர் செய்த வெண்மையான செயல்கள் அந்த கரும் புள்ளிக்குள் மறைந்து விட்டன?
தம்பி, விவசாயம், ஏதோ தந்தை பெரியாரை ஒரு தீவிரவாதக் குழுவின் தலைவர் போல சித்தரிக்க முனைவது மிகவும் வருந்தற்க்குரிய ஒரு செய்தி, பெரிய பெரிய வார்த்தைகளை ஒர்குட் முகப்பில் போட்டுக் கொண்டு, கருத்துத் தீவிரவாதம் செய்வது போன்ற ஒரு தோற்றத்தை மற்றவர்கள் வேண்டுமானால், அதி புத்திசாலித்தனம் என்று பாராட்டலாம், ஆனால், இது போன்ற உங்கள் கருத்துக்கள், எந்த ஒரு அறிவுசார்ந்த மனிதரும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு வாதமாகும், காமராஜரை என்ன பெரியார் முன்னின்று தோர்கடித்தாரா? பெரியார் என்னும் ஒரு தலைவருக்கும், காமராஜரின் தோல்விக்கும் என்னய்யா தொடர்பு? காமராஜர் தோற்றுப் போனதற்கு அரசியல் ரீதியான பல்வேறு காரணங்கள் இருக்கிறது, அவற்றை வேண்டுமானால் வேறு இழையில் நான் விவாதிக்கலாம்? அதற்கும், பெரியாரின் கொள்கைகளுக்கும் என்ன தொடர்பைக் கண்டீர்கள் தம்பி நீங்கள்?
44)அப்புறம் செத்துப்போன (சாகறதுக்கு முன்னாடி ஹிட்லர் மாதிரி இருந்திட்டு போன) ஈ.வே.ரா. பத்தி அடுத்ததலைமுறைக்கா தெரியப்போகுது?
சில பெற்றோர்கள் கூட ஹிட்லரைப் போலத் தோற்றம் அளிக்கிறார்கள், அவர்களின் கண்டிப்பு எத்தனை முன்னிறுத்தி இருந்தது என்பது தெரிய வரும்போது நாமே அவர்களின் அன்பு எந்த அளவிற்கு மேலானது என்று உணர்கிறோம், அடுத்த தலைமுறை என்பது வந்தே விட்டது, நாங்கள் எல்லாம் பெரியாரின் அடுத்த தலைமுறை சேர்ந்தவர்கள் தான் தம்பி விவசாயம், மேலும் பெரியார் நீங்கள் என்னதான் புலம்பினாலும், கதறினாலும் வரலாறாக மாறிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற ஒரு அழிக்க முடியாத தலைவர் ஆகி நெடுங்காலம் ஆகி விட்டது, நீங்கள் பேசுவது எதோ மிட்டாய் கிடைக்காத பிள்ளை மிட்டாய் சுருட்டிய காகிதம் தின்ற கதையாய் இருக்கிறது. மேலும், நாங்கள் பேசுவது ஏதோ ஒரு இசம் என்று கொண்டால், நீங்கள் பேசுவது கூட ஒரு இசம் தான் தம்பி, இசங்கள் தான் வாழ்க்கை, இசங்கள் இல்லாத ஒரு வாழ்க்கை முறை என்பதே இல்லை, வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், நாம் ஒவ்வொரு இசம் பேசித்தான் வாழ வேண்டும், சந்நியாசம் பேசுவது கூட ஒரு வகையில் இசம் தான், இசம் என்பது ஒரு மனிதனோ இல்லை அவன் சார்ந்த சமூகமோ முன்னெடுத்துச் செல்லும் கருத்தியல், அவ்வளவே!!!!!


0 மறுவினைகள் முதல் “சில கேள்விகளும், ஒரே பதில்களும்”