ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நேரத்தில் தொலைக்காட்சியைப் பார்ப்பது என்றால் எனக்குக் கொஞ்சம் அச்சமாகவே இருக்கும், சாதீயத்தின் கொடும் ஆணி வேர்கள், இப்போது செயற்கைக் கோள்களின் வழியாக ஒவ்வொரு வீடுகளின் வரவேற்பறைகளுக்குள்ளும் களிநடனம் புரியும் காட்சி எனக்கு என்னவோ சாதி என்கிற அரக்கனின் பிடியில் இருந்து நம் மக்களை மீட்டெடுப்பது மிகக் கடினமான செயல் என்பதை உணர்த்துவதாகவே நினைக்கிறேன்.
புரியவில்லையா, திருமண மாலை, கல்யாண மாலை, மணமாலை..இன்னும் பல்வேறு பெயர்களில் ஒளிபரப்பாகும் அதிகாரப்பூர்வ திருமணச் சந்தை நிகழ்வுகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உண்மையிலேயே சாதீயம் என்கிற நெருப்பை கொஞ்சமேனும் ஆற வைக்க நினைக்கும், எந்தவொரு உணர்வுள்ள மேம்பட்ட மனிதனுக்கும் இப்படியான நிகழ்வுகள் மகிழ்வைத் தர வாய்ப்பில்லை என்கிற உண்மை.
ஒரு சிறிய எடுத்துக்காட்டு : -
“கள்ளர் இனத்தைச் சார்ந்த, வேறு உட்பிரிவுகள் சம்மதமில்லை, பிரமலைக் கள்ளர் இனப் பெண் மட்டுமே வேண்டும், நன்றாகப் படித்து குறைந்த பட்சம் 10,000 ரூபாய் ஊதியம் பெறுகின்ற, வீட்டு வேலைகளையும், எங்களையும் நன்றாகக் கவனித்துக் கொள்கிற வரனாகத் தேடுகிறோம்.”
மேற்கண்ட வசனங்கள், ஒரு தனியார் தொலைக்காட்சியின் காலை நேரத்தில் செயற்கைக் கோள்களின் வழியாக உலகெங்கும், ஒளிபரப்பாகியது கண்ட நாள் முதல்தான், நான் முதல் பத்தியில் விவரித்த அச்சம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. மேற்கண்ட இந்த மனநிலை சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமின்றி, இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் வாழுகிறோம் என்கிற அடிப்படை உண்மையை ஆட்டி வைத்தது. சாதீயத்தின் பறந்து பட்ட கிளைகள் இப்போது இன்னும் கிளைத்துப் பரவி உட்பிரிவுகளுக்குள் மூழ்கி இருக்கும் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இது போன்ற நிகழ்வுகள்.
இதனை தொலைக்காட்சியின் குற்றமாகவோ, இல்லை பங்கு பெறுகின்ற குடும்பங்களின் குற்றமாகவோ கருத இயலாது, இது ஒட்டு மொத்த சமூகத்தின் குறைபாடும், குற்றமும் ஆகும். சமூகத்தின் பல்வேறு தளங்களில் சாதி ஒழிக்கப் பட்டது போன்ற ஒரு தோற்றம் விரவிக் கிடக்கிறது, இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று சமூகம் அழகான ஒரு பொய்யை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நிலை இன்னும் மோசமானதாக இருக்கிறது என்பதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” போன்றது.
மேற்கண்ட அந்தத் தொலைகாட்சி வசனத்தில் இன்னும் பல்வேறு சமூகத்தின் இருண்ட பக்கங்களான “பெண்ணடிமை மனப்போக்கு” மற்றும், “பொருள் மீது கொண்ட மோகம்” ஆகியவற்றை விவாதிக்கலாம், இருப்பினும் மூலப் பொருளான சாதீயம் பற்றியே கட்டுரையாக இதனைக் கொண்டதால், நாம் பிறகு அவை பற்றிப் பார்ப்போம்.
திருமணங்கள் தான் இன்றைய சாதீய அடுக்கு முறைகளுக்கு மிகப் பெரும் அரணாக இருப்பவை, ஏனெனில், திருமணங்களில் தான் நாம் சாதீய உட்பிரிவுகளின் தன்மையை உறுதி செய்கிறோம், பல்வேறு மேடைகளில் சாதீய ஒழிப்பு, வாழ்க வளமுடன், சமூக நீதி என்றெல்லாம் முழக்கமிடுகின்ற தலைவர்கள் மட்டுமின்றி அவர்களைப் பின்பற்றுகின்ற தொண்டர்களும், உண்மையில் சாதீயம் என்னும் மன அழுக்கில் இருந்து விடுபடுகிற நிலையில் இல்லை, தங்கள் குடும்பங்களின் திருமண என்றால் உடனடியாக மேடை முழக்கங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, சாதீய உட்பிரிவின் எல்லைகள் வரை சென்று உறுதி செய்து கொள்ளும் மனப்போக்கு மிகக் கொடுமையானது. வெளிப்படையாக சாதீயம் போற்றும் குடும்பங்களை விட இது போன்ற வேடதாரிகள் தான் சாதீயம் காக்கும் செயல் வீரர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கல்வி என்கிற ஒரு போலியான பொருளீட்ட வகை செய்யும், வணிகக் கல்வியும் இது போன்ற சமூகச் சீர்கேடுகளை வளர்க்கும் காரணிகள் என்று சொன்னால் அது மிகை அன்று. கல்வியின் உண்மையான பயனாக இருக்க வேண்டிய சமூக விழிப்புணர்வு, மனித நேயம், வர்க்க வேறுபாடு களைதல் போன்ற இன்றியமையாத காரணிகள் இன்று தேடிக் கண்டடைகின்ற ஒரு புதையலாக இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. தொடர்ந்து பெற்றோர்களின் பொருளாசை அல்லது சமூக நிலைப்பாடு நோக்கிய பேராசை தங்கள் பிள்ளைகளையும் அதை நோக்கித் திருப்புகின்ற ஒரு அறிவீனமான செயல்களை ஊக்குவிக்கின்றன. பல்வேறு உயர்கல்வி பட்டங்களைப் பெற்று மிகப் பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் இன்றைய இளைஞர்களும் சாதீயப் போர்வைகளுக்குள் வெட்கமின்றி ஒளிந்து கொள்ளப் பெற்றோர்களே காரணம் என்கிற உண்மை சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு செயலாகும்.
இன்றைய இளைஞர்களில் இது போன்ற சீர்கேடுகளில் இருந்து விலக்குப் பெற்றவர்கள் ஒரு மிகக் குறைந்த விழுக்காடு இருக்கிறார்கள், ஆனால் எஞ்சிய மிகப் பெரும் விழுக்காட்டின் வெள்ளத்தில் இவர்களின் எண்ணங்கள் அடித்துச் செல்லப்படுவது மட்டுமன்றி, இவர்கள் நகைப்புக்குரிய பிழைக்கத் தெரியாதவர்கள் வரிசையில் சேர்க்கப்படுவது இன்னும் கொடுமை.
எண்ணற்ற சமூகப் புரட்சிகளை மேற்கொண்ட இளைய சமூகமே, சாதீயம் என்னும் நெருப்பை, வர்க்க வேறுபாடுகளை, பொருளாதார, கல்விச் சமன்பாடுகளில் இன்று கிழிந்து கந்தலாய்த் தொக்கிக் கொண்டிருக்கும் சமூக நீதியை உட்பிரிவுத் திருமணங்களை மறுப்பதன் மூலம் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்கிற உண்மையை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே நம்மால் சாதி சமய வேறுபாடுகள் அற்ற ஒரு உன்னதமான நிலையை அடைய முடியும். இந்தக் கட்டுரையைப் படித்தவர்களில் ஒருவரேனும் அத்தகைய உட்பிரிவுத் திருமணத்தை மறுதலிக்க முயன்றால் அதுவே ஒரு மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.


In your article everthing is very good.
Please change the background radium color. It’s more contrasting.
Thank you
ம்…வேதனைக்குரிய தகவல்தான். நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. அதனால் இதுபோன்ற தகவல்கள் தெரியவில்லை. கல்யாணமாலை நிகழ்சி இருப்பது தெரியும். என்னசெய்வது. புரையோடிப்போய் உள்ளது. மிகப்பெரிய அறுவைச் சிகி்ச்சை தேவை. செய்வோம் இணைந்து. நன்றி.
இத்தனை ஆயிரம் திருமணங்கள் எங்கள் நிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றுள்ளது என்று எண்ணிக்கைக் கணக்கைக் காட்டி விளம்பரம் தேடுகின்ற இந்த நிகழ்வுகள், இவர்கள் வாயிலாக மணவாழ்வில் இணைந்து இன்றைக்கு முறிவைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கையை ஏன் தெரிவிப்பதில்லை?
இவர்களுக்கு ஜாதிய முகம் இருந்தாலும் இவர்களிடம் ஜாதி மறுப்பு என்கிற முகமூடியும் இருக்கிறது. ஜாதி தடையில்லை என்ற கோரிக்கை அல்லது நிபந்தனையுடன் வருகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஜாதி தடையில்லை என்று கூறுகிறவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களிடம் பெண்ணெடுப்பதில்லை. “நன்கு படித்த, வேலைக்குப் போகிற, மாமியார் மாமனாரைப் பெற்றோரைப் போல பார்த்துக் கொள்கிற நல்ல மணமகளாக இருக்க வேண்டும்” என்கிற வாக்கியத்தைத் தொடர்ந்து தான் “ஜாதி தடையில்லை” என்று சொல்கிறார்கள். இங்கே ஜாதியின் இடத்தை பணம் பிடித்துக் கொள்கிறது.
ஒரே ஒரு விஷயத்தைத் தவிர உங்கள் பதிவில் வெளிப்படுத்தியுள்ள உங்கள் கோபங்கள் அனைத்திலும் உடன்படுகிறேன். சீர்திருத்தவாதிகளாக இருக்கிற தலைவர்கள் கூட திருமண விஷயத்தில் சாதியத்தை உதறாமல் இருக்கிறார்கள் என்பது தான் அது. சாதி மறுப்பு என்கிற கோணத்தில் பார்த்தால் திருமணம் என்பது இருமுனைக் கத்தி. உறவிலே பெண்ணெடுத்தால் ஆதிக்க சாதிகள் “இவ்வளவு பேசுகிற நீ ஏன்டா ”கலப்பு” மணம் செய்யவில்லை” என்று கேட்பதும். ஜாதியை மறுத்து மணம் செய்தால் “உன் ஜாதியில் பிறந்த பெண்ணை நீயே திருமணம் செய்யவில்லை, வெளியில் பெண்ணெடுக்கிறாயே” என்று கேலி செய்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதை உங்களது கருத்துக்கு மறுப்பாகக் கூறவில்லை. இந்த ஒரு விஷயத்தில் நானும் குழப்பத்தில் தான் இருக்கிறேன் (நான் சொந்தத்தில் தான் பெண்ணெடுத்தேன்). தெளிவுபடுத்தினால் நல்லது.
நண்பர் விஜயகோபாலசாமிக்கு,
அடையாளங்களை மறைப்பது, அல்லது அழிப்பது ஒன்று மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும், பல்வேறு சமூகக் கலப்புகளில் பிறக்கும் குழந்தைகள் உறுதியாக ஓரிரு தலைமுறைகளில் சாதியை மறந்து விடுவார்கள், ஆனால், அதற்கான ஒரு நீண்ட பயணம் நம் முன்னர் இருக்கிறது, சாதீய அடையாளங்களை நம் மனங்களில் இருந்து வெளியில் எறிந்தால் மட்டுமே நம்மால் அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றி பெற முடியும்.சாதீய அடையாளங்களை முன்னெடுக்கும் தலைவர்களை மக்கள் அதாவது இளைய தலைமுறையினராகிய நாம் மறுதலிக்க வேண்டும், மாற்றங்களுக்கான விதைகளை இன்றைய தலைமுறையிடம் விதைக்க வேண்டும்.
உங்கள் கருத்துரைகள் எம்மை மேலும் செம்மைப்படுத்த உதவியாக இருக்கும்.
நன்றி
தோழமையுடன்
கை.அறிவழகன்