(நினைவு தெரிந்த நாட்களில் இருந்து கவிதை எழுதி இருக்கிறேன், ஆனால், அவை என் படைப்புகள் என்று சொல்ல மாட்டேன், உணர்வுப் பெருவெளிகளில் சிலிர்த்து மொழி வெள்ளம் வழியும் போது சில நேரங்களில் நெஞ்சம் நிறையும் தருணங்கள் வாய்க்கும். சில தருணங்களில் அப்படி எனக்குள் பெருகிய தமிழின் வெள்ளத்தை உங்கள் விழி ஓடைகளில் பாய்ச்சுகிறேன், இவை கவிதைகளா???? இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்)
சங்கத் தமிழின் எஞ்சிய செய்யுள்
இமை பட்டுத் தெறிக்கும் பளிங்குகள்
மை இட்டு நிரப்பிய எரிமலை
மொழி கட்டுக் கடங்காக் கவிதைகள்
பனி பற்றிப் படர்ந்த தாமரை
நொடி சுற்றிச் சுழன்ற போதினில்
தானடி அறிந்தேன்
எனை விட்டுப் போகிற நினைவினை……
கண்மணி, இவை கண்களா….இல்லை,
சங்கத் தமிழில் எஞ்சிய செய்யுளா???
********
கலையாத நினைவுகள்…..
மழைச் சாரல் போல வருகிறது
உன் கலையாத நினைவுகள்…..
நீயோ மலையருவியின் வேகத்தில்
கடந்து காணாமல் போகிறாய்…..
நிலவின் தொடர்ச்சி போல என் கூடவே
வருகிறது உன் முகம்…….
பயணத்தில் கடக்கும் மரங்களைப் போல
முகம் திருப்பி ஒரு நாள் முத்தமிடுவாய்
என்ற மாறாத நம்பிக்கையில் தானடி பெண்ணே
என் வீட்டு நாட்காட்டிகளும் நகர்கிறது…….
************
என் உயிரின் வட்ட வடிவங்கள்……….
உன் பூங்கரங்கள் எப்போதும்
எனக்கே எனக்கானவை,
ஆனால், வளையல்கள்
கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள்,
அவை எப்போதும் உன் கரங்களைத்
தழுவும் வரம் பெற்று உன்னையே
வலம் வருகின்றன,
இருப்பினும் என் காதல் தேவதையே
அவை நான் அனுப்பிய காவல் வளையங்கள்,
என் மெல்லிய காதலில் வருடலை
வழங்கவே உன்னிடம் வந்த
என் உயிரின் வட்ட வடிவங்கள்
**************
வா, வா, பகையே வா…
வீதியெங்கும் சிதறிக் கிடக்கும்
எம் தமிழ்ச் சாதியின் சாம்பல்
கண்டு நகைத்தாயா?
இரும்பு வேலிக்குள் இறுக்கப்பட்ட
எம் அரும்புகளின் வாழ்வை
அறுத்தெறிந்து ஆடினாயா?
வளைக்கரங்களில் மலர்களுக்கும்
வலிக்காமல் பறிக்கின்ற எம் தங்கத் தமிழ்
மங்கையரின் மானம் குலைத்தாயா?
வெள்ளைக் கொடி காட்டிவந்த
எம் வீரவேங்கையரின் நெஞ்சுரத்தை
உன் வஞ்சகத்தால் பொசுக்கினாயா?
வா, வா, பகையே வா,
எம் விடுதலையின் வேட்கையை
வெற்றி கொள்ள உன்னால்
ஒரு நாளும் முடியாது
**********
சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்
எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி
எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே……
எங்கள் துப்பாக்கித் தோட்டாக்களில்
இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும்
உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை…….
எங்கள் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத
உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள்
விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம்……
சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில்
ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்…..
புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்.
***************
உன் புன்னகைப் பூக்களை….
இமைகள் படபடக்க நீ பேசும்போதெல்லாம்,
இதயம் படபடக்க உன் விழிக்கோளங்களில்
கரைந்து காணாமல் போயிருக்கிறேன்……
உதடுகள் உறைந்து போகுமளவிற்கு நீ
முத்தமிடும்போதெல்லாம் உன் இதழ்களுக்குள்
என்னையே இழந்து தேடியிருக்கிறேன்…..
உலகை மறக்கும் தருணங்களில் கூட
உன் நினைவை இழக்கும் வலிமையை
நான் பெறுவதில்லை என்று தெரிந்து தானே
என் கண்மணி……..
"உன் புன்னகைப் பூக்களை எப்போதும் என் மீது எரிகிறாய்……"
***********
உன் கண்கள்….
உன் கண்கள் வரைந்த புதுக் கவிதைகளின்
முன்னாள் என் மரபுக் கவிதைகள்
மண்டியிடுகின்றன…
தூரிகைகள் இன்றி என் மனத் திரைகளில்
நீ வரைந்த ஓவியங்கள் என் வரவேற்பறை
ஓவியங்களை வெறுக்க வைக்கிறது…
தாய் மொழியின் சிறப்பையும் தாண்டி
நீ பேசும் காதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம் இலக்கியங்களை
எனக்குள் அள்ளித் தெளித்து
ஆழ்கடலாய் ஆர்ப்பரிக்கிறது…..
காதலே வா…..
நான் தமிழில் உறைய வேண்டும்
**********
என் பிணத்தருகே
உறவுகளை இழந்திருப்பேன்,
உள்ளார்ந்த அன்பை ஒரு போதும் அல்ல….
நிலங்களை இழந்திருப்பேன்,
அவை மீட்கும் வலிமையை ஒருபோதும் அல்ல….
கனவுகளை இழந்திருப்பேன்,
கருவில் உருவாகும் என் கலைப் பண்பாட்டை
ஒரு போதும் அல்ல…..
நூல்கள் பலவற்றை நீ பற்ற வைத்த
நெருப்பில் இழந்திருப்பேன்,
என் மொழியின் தொன்மையை ஒருபோதும் அல்ல……
என் இன விடுதலையின் எதிரியே…..
நான் உயிரையும் இழந்திருப்பேன்,
உள்ளிருக்கும் விடுதலை வேட்கையை ஒரு போதும் அல்ல….
என் பிணத்தருகே வரும்போதும் கவனமாய் இரு……….
**********
விடுதலை வேட்கை
எங்கள் விடுதலை வேட்கையின் முன்னாள்
உங்கள் போராயுதங்கள் வெறும் விளக்குமாறுகள்,
எங்கள் தணியாத சுதந்திர தாகத்தின் முன்னாள்
உங்கள் விமானங்கள் எங்கள் முற்றத்துப் பறவைகள்,
எங்கள் குருதியில் பற்றி எரியும்
விடுதலை நெருப்பின் முன்னாள்
உங்கள் படையணி எல்லாம்
விளையாட்டு பொம்மைகள்,
மரணமே அஞ்சி ஓடும் போர்க்களம்
ஒன்று கண்டதுண்டா உலகமே?
எங்கள் வன்னிக் காடுகளில் வந்து
எம் தம்பியரைப் பாருங்கள் தெரியும்…..
எம் தம்பியரின் தோள்களில்
எஞ்சியிருக்கும் வலிமையின் முன்னாள்
உலக வல்லாதிக்கங்களே,
ஈழம் மட்டுமில்லை,
வானமும் பூமியும் சேர்ந்தே வசப்படும்….
***********
"காதலே" வா
இதயத்தின் அதிர்வுகள்
உடைந்த சருகாய் மாறி
உடலுக்குள் ஊர்வலம் வருகிறது,
மெல்லிய மலர்களின் வருடல் போல
உன் நினைவு உயிரை அழுத்தக்
காலையில் கண் விழிக்கிறேன்……
கனவுகளோ, நினைவுகளோ
உன் அருகாமை தரும் இன்பம் மட்டும்
காலகாலமாய் எனக்கு வேண்டும்,
"காதலே" வா,
நான் கவிதையாவது எழுத வேண்டும்……..
*********
"காதலில் மட்டுமே நிகழுமா" தோழி???
கலையாத சிரிப்பு, மறையாத மகிழ்ச்சி
பிரியாத நட்பு, புரியாத பிரபஞ்ச வெளிகள்…
அதிகாலை வானம், நண்பகலின் நிழல்,
மங்கிய மழை இரவு, ஒரு கோப்பைத் தேநீர்,
மலைச்சாரல் பயணம், காட்டருவிக் குளியல்,
கனி உண்ணும் களிறு, தேன் ததும்பும் மலர்கள்,
அப்பாவின் அதட்டல், அம்மாவின் அணைப்பு,
மேடையில் வாங்கிய முதல் முதல் பரிசு…..
இவை யாவும் கொடுத்திராத இன்பத் தேனமுதை
உன் இதழ் முத்தம் அள்ளி வழங்கிய அதிசயம்
"காதலில் மட்டுமே நிகழுமா" தோழி???
**********
"புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்"
தலை முடியை சிரைத்து
தலைகீழாய் தொங்க விட்டார்கள்,
கைவிரல்கள் நொறுங்க கடுந்
தடியால் ஓயாமல் அடித்தார்கள்,
நெஞ்சுக்கு நேராக துப்பாக்கி
அழுத்தி திரும்பத் திரும்பக் கேட்டார்கள்,
கண்ணுக்குள் விரல் விட்டு
துடிக்கத் துடிக்க அழுந்தித் தேய்த்தார்கள்,
உயிர்ப் பிச்சை கொடுக்கிறேன்
என்று உறுதி எல்லாம் சொன்னார்கள்,
உயர் வாழ்வு வாழ வசதிகள்
தருவோம் என்று வால் பிடித்தார்கள்,
வெறுப்பின் உச்சத்தில் நெஞ்சில் தோட்டாவின்
துளையிட்டு,வெறும் தரையில் சாய்த்தார்கள்,
திறக்காத என் வாய் திறக்க……
அருகே வந்தார்கள், ஆவலாய்
குனிந்தருகே அவதானித்த போது,
சன்னமாய் என் சாவின் குரல் அவர் செவியில் சொன்னது
"புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்"
பீரங்கிகளும், குழல் துப்பாக்கிகளும்
சூழ்ந்த சிங்களத்தின் படை
என் விடுதலை வேட்கைக்கு முன்னாள்
தோற்றுச் சிதற
மரணத்தை மகிழ்வுடன்
தழுவிக் கொள்கிறேன்…….
*********
நாங்கள் பிச்சைக்காரர்கள்
பாத்திரம் கூட இல்லை ஏந்துவதற்கு
நாங்கள் பிச்சைக்காரர்கள்
பிச்சைக்காரர்கள் இல்லாத தேசத்திற்குப்
போராடியதில் உலகம் எமக்கு வழங்கிய
உன்னத வெகுமானம் "உணவுப் பொட்டலங்கள்",
விருந்தோம்பலில் பெயர் போன எமது இனத்தின்
பிள்ளைகள் இப்போது வரிசையில் நின்று
கஞ்சி குடிப்பதில் முன்னோடிகள்………….
நாய்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த எம் பிள்ளைகள்
கூடாரங்களில் ஒண்டிக் குலைந்து கிடக்கிறார்கள்…..
தண்ணீர் கிடைக்காமல் போனதாலோ என்னவோ
கண்ணீர் வருவதே இல்லை எங்கள் கண்களில்,
யார் யாருக்காக அழுவது என்பதில் குழப்பம்
வருவதால் ஒட்டு மொத்தமாக ஒப்பாரி வைத்து விடுகிறோம்….
மஞ்சள் நீர் தெளித்து விளையாடிய மாலை நேரங்களை
செங்குருதி வழிய ஓடிவரும் எம் குழந்தைகள் நினைவூட்ட,
உலகின் மூத்த குடியாய் வாழ்ந்த எங்களை முற்றிலும்
குலைத்து காட்டுவாசிகளாய்க் கரைத்த உலகே……
தன்மானம் மிக்க விடுதலை வாழ்வு கேட்டுப் போராடுவது
தங்கள் அகராதியில் தீவிரவாதம் என்றால்……..
எங்கள் தமிழினத்தை இனித் தீவிரவாதிகள் என்றே பட்டியிலிடுங்கள்.
மரணம் ஒருபோதும் எமது விடுதலை வேட்கையை
முறிக்க இயலாது.
உணவுக்காகக் கையேந்தி அலைவதை விடவும்
விஷ வாயுக் குண்டுகள் எம்மை விழுங்கியது எத்தனை மேல்….
கடைசித் தமிழ் மறவன் உயிரோடு உலவும் வரையில்
சிங்களமே தமிழீழக் கனவு மட்டும் கலைந்து விடாது….
மரணத்தை விழுங்கி நாங்கள் உயிர்த்திருப்பது
விடுதலை என்கிற கருக்கூட்டுவதற்கு மட்டுமே…..
புலிகள் என்றில்லை, தமிழ் வீட்டு எலிகள் கூட
இனி தமிழீழம் மட்டுமே கேட்கும்.
*************


என்ன மனிதரய்யா நீர் …நீர் கையில் பிடித்திருப்பது பேனாவா.?…கூர்ந்துபாரும் துப்பாக்கியாக இருக்கப்போகிறது ..
இதன் பின்னும் நான் கூற வேண்டுமா இவை கவிதைகள் அல்ல என்று
அன்பு(2) அண்ணனுக்கு… மிகவும் அருமை…
ஆனால் காதல்,விடுதலை வேட்கை என இரண்டு பிரிவுகளாக பிரித்தால் நன்றாக இருக்கும்.
தங்களின் அன்புத் தம்பி,
அப்துல் காதர் முகைதீன்,வெற்றியூர்
porkalangalayum poraligalayum patri paadum podu veerathayuum….
kaadalai patri padumpodu adan menmayayum unara mudigiradu…
irandu verupatta karuthugalai…miga azhagaga.. orey tharathil.. thara mudivadenbadu… ungalukku kidaikapetra oru ariya varam….
nenjarnda paratukkal..
ஆம், தம்பி தமிழ்,
இது தமிழ் மொழி நமக்குக் கொடுத்த வரம், நம் மொழிக்குக் கொடுத்த வரத்தை இயற்கை நம் மக்களுக்கு மட்டும் கொடுக்க மறந்து பொய் விட்டது, அந்த வரத்தை நாம் வேண்டிப் பெற இயலாது, இனி போராடித் தான் பெற வேண்டும் என்னும் சூழலில் நீங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கிறார்கள் என்ற மிகப் பேரும் பலம இன்னும் வீரியமாய் நம்மை இனமானப் போரில் ஈடுபட வைக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன் உங்கள் அண்ணன்
கை.அறிவழகன்
தம்பி அப்துல்,
காதலும் வீரமும் தமிழரின் இரு கண்கள், இந்தக் கண்கள் இரண்டும் ஒரே இடத்தில் இருந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று தான் கலந்து பதிவு செய்தேன், தேவைப்படின் இவற்றை பிறகு பிரிக்கலாம்.
இருப்பினும் உங்கள் அன்பான வேண்டுகோளை வரும் காலங்களில் செயலாக்குவேன்.
நன்றி.
அன்புடன் உங்கள் அண்ணன்
கை.அறிவழகன்
அன்புக்குரிய வேதநாயகப் பிரபாகர் அவர்களே,
எம் இனம் அழிவில் கிடந்தது தவித்த போது எழுத்துக்கள் வரவில்லை மாறாக கண்ணீர்த் துளிகள் தான் மடை திறந்து விழுந்தது, இருப்பினும் உங்கள் மாறாத அன்பும், ஊக்கமும் என்னை மீண்டும் எழுத வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது, நீண்ட நாட்களாக உங்கள் கட்டுரைகளைக் காணவில்லையே என்று நீங்கள் கேட்ட பிறகு எழுதப் பட்டவை தான் இவை.
கையில் துப்பாக்கி இருந்திருந்தால் நான் கவிதைகள் எழுதிக் கொண்டு காலம் கழிக்க மாட்டேன்…….அதற்கான தருணம் வரும் போது அதையும் கொண்டு கவிதைகள் எழுதுவேன், எம் எதிரியின் கருவறுக்கும் துப்பாக்கிக் கவிதைகள்.
உங்கள் பின்னூட்டம் எனக்கான முன்னூட்டமாகவே இருக்கும் எப்போதும்.
நன்றியுடன்
கை.அறிவழகன்
MIGA NANADRU….
வழக்குரைஞர் ராஜேந்திரன் அவர்களே,
உங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மகிழ்வை அளிக்கின்றன.
நன்றி தோழர். தொடர்ந்து தமிழை உலகெங்கும் பரப்புவோம்.
தோழமையுடன்
கை.அறிவழகன்
Most of ur writings are good. But in some poems some extra lines are there. For eg. if it is ended like this that will be very good
திறக்காத என் வாய் திறக்க……
அருகே வந்தார்கள், ஆவலாய்
குனிந்தருகே அவதானித்த போது,
சன்னமாய் என் சாவின் குரல் அவர் செவியில் சொன்னது
“புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்”
however, i salute u for ur thoughts