கலைஞர் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா ஒன்றில் எங்கள் ஐயா பேராசிரியர் அன்பழகன் ஒரு பொன்மொழி உதிர்த்தார், கடந்த நான்கைந்து மாதங்களாகக் கனன்று கொண்டிருந்த ஈழ நெருப்பை ஊதி ஊதி அணைத்த கையோடு ஐயா உதிர்த்த இந்தப் பொன்மொழிகளால் “ஆரிய, திராவிடப்" போர் பற்றிய சில கேள்விகள் என்னைப் போலவே பல தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வியப்புக் கலந்த மனநிலையைத் தோற்றுவித்தது. காலம் கடந்த காலத்தில் ஐயா அன்பழகனின் ஆற்றாமையின் வெளிப்பாடா? ஏற்கனவே மன இறுக்கத்தில் உறைந்து போன தமிழர்களின் மனநிலையைக் கொஞ்சம் மாற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியா? இல்லை, உண்மையிலேயே ஒரு புரட்சிக்கு வழிகோலும் “ஆரிய திராவிடப்” போர் பற்றிய பேராசிரியரின் ஆய்வின் துவக்கமா? ஒன்றும் புரியவில்லை……….
ஒரு மிகச் சிக்கலான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது, ஆரியம் திராவிடம் என்கிற நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி உலகம் முழுதும் தமிழினம் இன்று தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறது, தனியொரு இனம், தனியொரு மொழி என்று இனவாதம் பேசுவதாகத் தவறாக நினைக்க வேண்டாம், இவற்றிற்கு எல்லாம் வெகு தொலைவில் இருக்கிற மனிதத்தின் சாயல் என்கிற தனிப்பெரும் பண்பும், நாகரிக உலகிற்கான அடிக்கல் நாட்டிய ஒரு இனத்திற்கான உரிமைகளும், பொருளியலை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்படாத ஒரு பழமையான பேரினத்திற்கான அடையாளமும் ஒரு போதும் இனவாதமாக இருக்க முடியாது என்பது பேராசிரியருக்கு நம்மை விடப் பலமடங்கு நன்றாகவே தெரியும்.இப்படி ஒரு சிக்கல் எம் இனத்திற்கு ஏற்பட்டதற்குப் பல்வேறு காரணிகளை பேராசிரியர்களால் தேர்ந்த அரசியல்வாதிகளாக அடுக்கி அளவெடுக்க முடியும்………..
ஆனால், இழந்த எம்மக்களின் உயிரையும், உரிமைகளையும் யாரால், எப்படி மீட்டெடுக்க முடியும் என்கிற வலிமிகுந்த கேள்விக்கு எங்களால் விடை கண்டறிய முடியவில்லை. புவியியல் ரீதியிலான பாதுகாப்பு என்கிற பெயரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், ஏறத்தாழ 40,000 எம் இனத்தவரை, எங்கள் தாய்மாரைத், தந்தையரை, உடன்பிறந்த சகோதரர்களை, அக்கா, தங்கையரை, அழகான குழந்தைகளை, அப்பாவி மக்களை, மனித உயிர்களை, இந்திய தேசியவாதிகளும், காங்கிரஸ் கனவான்களும் , சிங்கள இனவாதிகளும் சேர்ந்து கொன்றழித்திருக்கிறார்கள், அமைதியைத் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடிப் போராடி 35 ஆண்டுகள் களைத்துப் போய், தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆயுதம் எடுத்துச் சமர் புரிந்தார்கள் எம் சகோதரர்கள், உலகிடம் தங்கள் விடுதலைக்காய், தங்கள் குழந்தைகளின் அமைதியான வாழ்வுக்காய் மன்றாடினார்கள், தங்கள் மொழி அடையாளங்களையும், வாழ்வாதார உரிமைகளையும் நோக்கித் தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நசுக்கப்பட்டன, காலம் அவர்களைக் கானகங்களில் அலைய விட்டது, உலகம் அவர்களின் முற்றான அழிவிற்குப் பின்னால் இன்று படுகொலைகளைத் தெளிவாகப் புகைப்படம் எடுத்தது நானா? நீயா? என்று ஐ.நா மன்றங்களில் அரட்டை அரங்கம் நடத்துகிறது.
இந்த ஒரு “இனிமையான” தமிழர்களின் வரலாற்றுத் தருணத்தில் தான் பேராசிரியர் ஐயா அன்பழகன் இரண்டாவது சுற்றுக்கு வந்திருக்கிறார், ஆரியம், திராவிடம் என்று எங்களைத் திசை திருப்புவதற்கு……..இன்றைக்கு உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கும் எந்த அடக்குமுறையின் வடிவமும், இனவாதமாகவும், மொழிவாதமாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட, இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, வர்க்கப் போரின் சாயலாக இவை காலம் காலமாக நடக்கிறது என்கிற உண்மை, இன விடுதலைப் போர்களின் உள்ளடக்கமாகப் பொதிந்து கிடக்கிறது, இந்தப் போரின் இன்னொரு பெயர் பொருள் முதல்வாதப் போர், உழைக்கும் மக்களாகிய பொருள் உலகை கட்டி அமைக்கும் பாட்டாளி வர்க்க அடையாளங்களுக்கும், உண்டு கொழுக்கும் உல்லாச வர்க்கத்திற்கும் இடையிலான கடும் போர் நடந்து கொண்டிருக்கிறது, இந்தப் போர், உலகின் நாகரிக மனிதனின் வரவுக்குப் பின்னால் பல்வேறு புதிய வடிவங்களில் நிகழ்ந்தாலும், பொருள் முதல் வாதத்தின் எல்லைகளில் தான் தன்னை நிலை நிறுத்தி இயங்குகிறது. ஆங்காங்கே தென்படுகிற மற்ற சமத்துவக் கோட்பாடுகளை முதலாளி வர்க்கம் முழுமையாகத் தின்று பசியாறி விட முனைப்பாய் இருக்கிறது, அதன், கோரம் தான் இன்று தமிழனுக்கும் நிகழ்கிறது, ஆசிய நிலபகுதியில் இந்தச் சமரில் வெற்றி பெற நமக்கு இருந்த ஒரே ஆயுதமும் திராவிடத்தால் பறிபோனது என்கிற உண்மையை மட்டும் பேராசிரியர்களால் மறைக்கவும், மறுக்கவும் முடியாது
பொருளியல் விழுமியங்களை முழுமையாகத் தன் கையில் வைத்திருக்கும் வல்லாதிக்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் உலா வருகின்றன, அதனை நீங்கள் ஆரியம் என்கிறீர்கள், இலங்கையில் சிங்களம் என்கிறார்கள், மேற்குலகு வெள்ளையினம் என்கிறது, இன்னும் பல தெரியாத பெயர்களில் அவை ஆனந்த வாழ்வில் எப்போதும் திளைக்கிறது. இப்போது நாங்கள் அதனை “திராவிடம்” என்று அடையாளம் காண முடியும் அளவிற்குக் கழகங்களின் பங்கு இந்தப் போரில் மகத்தானது, மறைமுகமாக சில ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு சொந்த இனத்தை அழிக்க முன்னின்ற திராவிட அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தீராக்கறை. இதனைப் பூசி மெழுக இன்று பேராசிரியர்கள் "ஆரிய, திராவிடப்" போர் பற்றிப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது, ஆரியம், மறைமுகமாகப் பல்லாண்டு காலமாகச் செய்து வந்த கொடுமைகளை ஓரிரு மாதங்களில் நிகழ்த்திக் காட்டிய பெருமை திராவிடத்தைச் சேர்ந்ததால் இன்று ஆரியமும், திராவிடமும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவி எம் இனத்தைக் கொன்று அழித்துவிட்டது.
மிக நன்றாகவும், தெளிவாகவும், இங்கே நிகழ்கிற ஒரு வர்க்கப் போரின் வடிவம் தானே ஐயா தமிழீழப் போர், கொஞ்சம் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள், வன்னிக் காடுகளில் ஓடி ஒளிந்து கடைசியாய் மடிந்து போன விவசாயிக்கு வசதியும் வாய்ப்புகளும் இருந்திருந்தால் இந்நேரம் உலகின் எங்காவது ஒரு மூலையில் “ஏதிலி” என்ற பெயரோடாவது வாழ்ந்து கொண்டிருப்பான், அப்படி வாய்ப்புகள் இருந்த பலரும் கூடக் கடைசி வரை தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடி மரணித்தார்கள் என்பது தான் எம் இனத்தின் சிறப்பு, இது போன்ற விடுதலை உணர்வுகள் எதுவும் இல்லாத ஆயிரக் கணக்கான சிங்கள இளைஞர்கள் கூட இந்த வல்லாதிக்க வெறியின் இரையாகிப் போனார்கள் என்பதையும் ஒரு தமிழனாக நினைவில் கொள்ளும் கடமை இருக்கிறது, ஒரே வர்க்கத்தில் இருக்கிற போதும், வெறியூட்டலில் நிகழ்ந்த இந்தக் கோரம் முதலாளித்துவத்தின் முகத்தை அப்பட்டமாக எதிரொலித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
பேராசிரியரின் " ஆரிய, திராவிடப்" போரின் தொடர்ச்சி என்னிடம் சில கேள்விகளாகக் கிடந்து உழல்கிறது. ஏனென்றால், திராவிட இயக்கத்தில் பொருள் முதல்வாதச் சிந்தனை இல்லாத ஒரு தலைவராக உங்கள் ஒருவரை மட்டுமே என் சிற்றறிவால் அடையாளப்படுத்த முடிந்தது…..உங்களிடம் இருந்து உறுதியாக இதற்கான பதிலை நாங்கள் எதிர் நோக்குகிறோம், எண்ணற்ற எம்மினத்தின் தமிழ் இளைஞர்களின் சார்பாகவே நான் இந்தக் கேள்விகளை நான் உங்களிடம் வைக்கிறேன்………. பேராசிரியர் அவர்களே, ஆரிய, திராவிடப் போர் நடப்பது உண்மை என்றால், அந்தப் போரிலே நாங்கள் பங்கு கொள்ள வேண்டும் என்றால், முதலில் எங்கள் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்?????
கேள்வி எண் – 1
திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைகளும் உறுதியோடு தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் திரும்பப் பெற்று, இந்திய தேசியத்தின் அதிகார வர்க்கத்திடம் ஒரு உறுதியான அழுத்தம் கொடுத்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை அழிவில் இருந்து காக்கும் ஒரு அரிய வாய்ப்பு உங்கள் கைகளில் (திராவிட முன்னேற்றக் கழகத்தின்) இருந்த போதும் அதனைத் தட்டிக் கழித்து உங்களை நீர்த்துப் போக வைத்த ஆற்றலின் பெயர் ஆரியமா? திராவிடமா?
கேள்வி எண் – 2
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் கூட தங்களுக்கென உரிமைகளைப் பெற்று ஓரளவு சுயவிடுதலை சார்ந்த வாழ்வில் ஈடுபட இயல்கிற போது, இந்திய தேசியத்திற்குள் வாழும் மொழி, இன அடையாளமாகிய தமிழர்களின் போராடும் உரிமை கூட நசுக்கப்பட்டு, ஒரு வேடிக்கையான இனமொழி அரசியல் பேசுகிற வேடதாரிகளாக தமிழகத் தலைவர்களை (ஆட்சி அதிகாரத்தில் இருந்த மற்றும் இருப்பவர்கள்) உலகத் தமிழர்களிடம் அடையாளப் படுத்திய ஆற்றலின் பெயர் ஆரியமா? திராவிடமா?
கேள்வி எண் – 3
தொடர்ந்து நிகழ்கிற இந்த வர்க்கப் போரின் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பார்க்கிற தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது, இந்திய தேசியக் கட்டமைப்புக்குள் இருக்கிற தமிழர்களின் இன, மொழி அடையாளத்தின் மீள் வடிவம் என்று தமிழர்கள், குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள் கருதுகிற சூழலில், அதே இந்திய தேசியத்தின் அதிகார மையமாக இருக்கிற நீங்களும் உங்களைச் சார்ந்த இயக்கமும், மீட்சியின் சமரில் பங்கு கொள்ளாமல், உங்களை நீங்களே எதிர்த்து நிகழ்த்திய போராட்டங்களின் உள்ளார்ந்த முரண்பாடுகள் உருவானதற்கு உண்மையில் காரணம் ஆரியமா? திராவிடமா?
கேள்வி எண் – 4
தன்னுடைய தாய் மொழியையும், தான் பிறந்த இனத்தின் பெருமைகளையும் போற்றுதல் மட்டுமன்றி, அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ், தமிழர் என்கிற அடையாளத்தை மீட்கும் நோக்கிலான எமது இளைஞர்களின் புதிய அரசியல் இலக்குகளும், அவர்களின் இன உணர்வும் இந்திய தேசியத்தின் பெயரில் நசுக்கப்படுகிற ஒரு நிகழ்வினை வேடிக்கை பார்க்க மட்டுமே முனைகிற, பதவிகளை அடைவதற்கு மட்டும் தேசியத்திடம் போராடும் நீங்களும் நமது நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆரியர்களா? திராவிடர்களா?
கேள்வி எண் – 5
சாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்ல முயன்ற ஆரியத்தை விடவும், ஒரே நாளில் வேதிக் குண்டுகளை எம்மக்களின் மீது போட்டுக் கூண்டோடு கொல்வதற்கு எல்லா வகையிலும் துணை நின்ற உங்கள் ஆட்சி உண்மையில் ஆரிய ஆட்சியா? இல்லை திராவிட ஆட்சியா?
முரண்பாடுகளின் மொத்த வடிவமாக உழைக்கும் வர்க்க மக்களின் குரல் வளையில் குருதி குடிக்கும் பொருள் முதல்வாதத்திற்கும், “அன்பின் வழியதுயிர் நிலை” என்று உலக சமூகத்திற்கு அறைகூவல் விடுத்த எம் தமிழின வாதத்திற்கும் இடையில் நடக்கும் போர் இது, எதிரணி முகாம்களில் இருப்பவர்களை அடையாளம் காணும் பணியே இந்தச் சமரில் கடுமையான சவால்கள் நிறைந்தது, ஆரிய, திராவிடப் போரை எல்லாம் கடந்து பொருள் முதல்வாதப் பயன்பாடுகளில் உண்டு திளைக்கும் ஒரு திராவிட இயக்க அரசியல் தலைமுறையை உருவாக்கிய பெருமை தெரிந்தோ தெரியாமலோ பேராசிரியர் ஐயாவையும் சாரும், நடந்து முடிந்த இனப் படுகொலைகளுக்கு அறிந்தோ அறியாமலோ நீங்களும் வரலாற்றில் ஒரு காரணி என்பதை மட்டும் காலம் அழுத்தமாகவே பதிவு செய்து வைத்திருக்கிறது,
இந்த நேரத்தில் நீங்கள் “ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும்” போர் என்று சொல்லி இருப்பது, உங்கள் ஆட்சியை எதிர்த்து நீங்களே செய்த ஈழ ஆதரவுப் போராட்டங்களைப் போலவே நகைச்சுவை நிரம்பியது.மற்ற நாட்களாய் இருந்தால் சிரித்து மகிழ்ந்திருப்போம், ஒட்டு மொத்தமாய் நாற்பதாயிரம் உறவுகளை உலகப் போரில் கூட இல்லாத அளவிற்கு இழந்து விட்டு நிரந்தர இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் நீங்கள் நகைச்சுவை பேசுவது நாகரீகம் இல்லை ஐயா. நாகரீகம் இல்லை.
*************


I remember what was Fonseka told about TN Politicians,, but now we all admit with him, He was right, He understood them better than Tamils
தோழ, பொருள்முதல் வாதம் பேச வந்து ஆரியத்தின் தண்மையை எதிர்த்து ஆரியராக மாறிப்போய் , காங்கிரசு எங்கிற சனநாயக ஆரியத்தை எதிர்த்து பின் காங்கிரசாக மாரறிப்போய் உழைக்கும் மக்களைச்சுரண்டலிலிருந்ந்து காக்கப்போய் சுரண்டும் குழுவாக
மாரிறிப்போன க.அன்ப்ழகன் அவர்கள் 1986களில் தமிழகத்தில் முகிழ்த்த
த.நா.இனவிடுதலைச் சிந்தனைக்குக் கொடுத்த பதில்… [தஞ்சை
கரந்தை கல்வி வளாகம்] “இது நல்ல முயற்சி .எங்களால் முடியாது.செய்யுங்கள். எங்களை எதிர்பார்க்காதீர்கள்.” என்பதேயாகும்.
இந்தக்காலம் தமிழின எதிர்புரட்சிக்காலம்.இவர்கள் எதிர் புரட்சியாளர்கள். ஆனால் ஆரியம் ஆரியம்தான். இந்தநபர்களால்
ஆரியம் தப்பித்துவிடக்கூடாது. திராவிடச்சிந்தை என்பது ஒரு தத்துவப்
பார்வை.இவர்கள் அதில் ஒளிந்துகுளிர்காயும் எதிர்புரட்சியாளர்கள்.
அவ்வளவுதான். இனஅழிவைப்பார்த்து கண்ணீஈ சிந்தக்கூட துணை முதல்வர் கோபிப்பாரோ? என்.கே. நாராயணன் அம்பு [500கோடிஅம்பு]
என ஏங்கித்தவிக்கிறார்போல் உள்ளது.விடுங்கள்.இவர்கள் இப்படித்தான்.
மிகவும் அருமையான பதிவு சகோதரரே!!
அன்புடன் கணேசன்
i always feel is there any tamilan out there that i could trust. i have you , thanks for your blog