வண்ணத்துப் பூச்சியின் சிறகில்…….
மழை முடிந்து மலர்களில் வழியும்
மயங்கிய மாலைப் பொழுதொன்றில்
தென்றலின் வாசனை சுமந்து
தென்னங்கீற்றின் வழியாய்
வண்ணத்துப் பூச்சியின் சிறகில்
வந்திறங்கினாய் நீ……..
கண்களில் சிதறிய புன்னகைத் துளிகள்,
முல்லைக் கொடியில் மொட்டாய் அமர,
நதிகளில் உடைந்த நிலவின் ஒளியாய்,
ஆழ்கடல் அமைதியில் ஆடும்அலையாய்
உயிரில் கலந்தாய் என் உதிரம் நிரப்பினாய்……
வானம் வரை நான் வளர்ந்திருக்கையில்,
கானல் நீராய்க் கனவுகள் பறித்து,
ஒரு மின்னல் பிடித்து நீ மறைந்த போதிலும்
இன்னும் இருக்குது வாழ்க்கை,
என்னுள் இனிக்கிற நினைவாய்…….
****
முத்தத்தின் மிச்சம்…..
கனிமொழிகளைக் கலந்து உயிர் பிழிந்த
உன் நினைவுகளைத் தனி மரமாய் நான்
தேடும் அதிகாலைப் பொழுதொன்றில்……………
பனி மூடிக் கிடக்கிறது பழைய பாதையொன்று…….
உன் கரம் பற்றி நான் நடந்த நினைவொன்றின்
வெளிச்சத்தில், மலரொன்று வழிகாட்ட
மங்கலாய்த் தெரிகிறது, நம் பாதச் சுவடுகள்……….
எழுந்து நடக்கையில் எதிர் நின்ற முகிலோடு,
வெள்ளருவிக் கிளையொன்றில் மெல்லச் சொட்டியது,
முன்னர் நீ கொடுத்த முத்தத்தின் மிச்சம்…..
விழுந்த அருவியின் ஊடாக மிதந்து வழிந்து
அலைந்தொரு கணத்தில் மீண்டு சரிகிறது மார்பில்,
முழுநிலவாய்……..என் மூச்சுக் காற்றாய்………
****
நீ நடந்த நிலவொளியின்………
அந்தி சாய்கிற ஒரு அரையிருள் வேளையில்
அழகாய்ச் சிவந்து வானம் என் அருகில் இருந்தது……
காதோரம் கலைகிற உன் கார்குழல் ஓசையில்
கொஞ்சும் யாழிசை என் மார்பில் புரண்டது……..
கண்ணிமைச் சிறகினில் மின்னிய திறப்பில்
முகிலொன்று தடுமாறிக் கடலில் விழுந்தது……..
உயர்ந்த சிகரத்தின் உச்சியில் மலர்ந்த குறிஞ்சி
மலரொன்றின் இதழில் விழுந்து, இன்னும் எரிகிறது………
எனக்காய் நீ தந்த இறுதிப் புன்னகை,
நீ நடந்த நிலவொளியின் நிழலில் விழுந்து, தொலைந்த
என் விழிகளைத் தேடி, விரைந்து கரைகிறது வாழ்க்கை……..
****
புதிய கோளொன்றின் பழைய நதிக்கரையில்………
உன் சுவாசத்தின் வாசம் கலந்து,
காற்று மணம் பரப்பிய மாலைப்
பொழுதொன்றில் மலர்களிடை,
மறைந்திருந்த உன் பாதி முகம்
தவறி என் விழிகளில் விழுந்தது………………..
அன்றிரவு பெய்த அடைமழை எஞ்சியிருந்த
உன் மீதி முகத்தை முழுதாய் எனக்குள் தூறி
மறைந்த பின்னரும், மழையின் சுவடுகள்,
முற்றத்து மரங்களில் திட்டுத் திட்டாய்ப் படிந்திருக்க,
நீ மட்டும் முற்றாய் ஒட்டிக் கொண்டு உயிர் கலந்திருந்தாய்………..
காதலின் கரம் பிடித்துப் பின்னிரவின் பேரண்ட வெளிகளில்,
புதிய கோளொன்றின் பழைய நதிக்கரையில், குளித்து எழுகிற
உடல் உடைத்த, என் உணர்வுகளைத் தேடி நான் அலைந்து திரிகிறேன்……..
நீயோ அங்கேயே நின்று அடுத்த மலர் பார்த்து அழகாய்ச் சிரிக்கிறாய்…..
*****
{கவிதைகள் எழுதுவதும், வாசிப்பதும் ஒரு தவம் போல எனக்குள் மொழியின் விசாலங்களைத் இன்னும் இன்னும் விரிவாக்கிக் கொண்டே விரைகிறது, என் கவிதைகள் ஒரு போதும் என்னைக் கவிஞன் என்று அடைமொழிகளுக்குள் அடைத்துக் கொண்டு அடங்கிப் போகிறவையோ, இல்லை புரியாத கையாடல்களில் புதிய நவீனங்கள் என்று பொய்கள் சொல்லித் திரிபவையோ அல்ல. மாறாக என் மக்களின் அழுகுரலாய், அழகியலின் தீற்றல்களாய், காதலின் வண்ணங்களாய், மொழியின் சிறப்பாய் எப்போதும் என்னுள் நிறைந்து கிடப்பவை. தமிழின் சுவையை எனக்கு உணர்த்திய கணங்களைப் போலவே உங்களுக்கும் சில கணங்கள் கிடைக்கப் பெறலாம்}
தோழமையுடன்
கை.அறிவழகன்


annaa,supperb…..!kavithai…ithuthaan kavithai.kaathalin valikal niraintha varikal…!vaazhththukkal.
நன்றி தம்பி, ராவன் ராஜ்குமார்.
உங்கள் வரிகள்
வர்ணிக்க முடியா
பேரழகாய்,
தமிழிற்க்கு பெருமிதத்தை,
வாசிப்போர் உள்ளத்தை
தென்றலாய்,அலை கடலாய்
மெல்ல மெல்ல
முழுவதுமாய்
வருடிச்செல்கிறது……….
superb, no words to praise u….
it is sooooooooooooooo nice
அன்புக்குரிய சாய்,
தமிழ் எனக்குள் நிகழ்த்திய தென்றலின் வருடலை நான் உங்களுக்குக் கொஞ்சம் மடை மாற்றினேன், உங்கள் புகழ் மொழிகள் அனைத்தும் என் மொழிக்கும், உங்கள் அன்பு எனக்குமாய்ப் பெருகி வழியட்டும், நன்றி..
தோழமையுடன்
கை.அறிவழகன்