தூரதேசத்தின் திசை மாறிய பறவையொன்று
தேடலை விடுத்துப் பிறை நிலவின் கிளைகளில்
நீ நடக்கிற வழி பார்த்து அமர்கிறது.
நதிகளின் ஓரத்து ஓடை மலர்கள், கொடிகளில்
இருந்து குதித்துத் தம் இருப்பை விடுத்து இடம்
பெயர்ந்து உன் விழி பார்த்து நடக்க…..
கடல் தன் அலைகளைக் கொஞ்சம் நிறுத்தி
வானமெங்கும் விரவிக் கிடக்கிற உன் வட்ட
முகத்தைத் தன்னில் விரிக்கிறது.
மழை தன் தூறலுக்குப் பல வண்ணங்களை அடித்துத்
தன்னை மறந்து கிடந்த மாலைப் பொழுதொன்றில்…
எனைப் பார்த்து வழக்கமாய்த்தான்
இமைத்திருக்கும் உன் விழிகள்…….
என்னுலகில் மட்டும் ஏனடி இத்தனை திருவிழாக்கள்???
*****
என் இரவுகளின் மௌனம்……….
அடர்ந்த இருளில் உடைந்து விழுந்த
உன் சிரிப்பொலியின் மிச்சங்களாய்
சிதறிக் கிடக்கிறது விண்மீன்கள்
நதியின் கரைகளைக் கடந்து மலையின்
முகடொன்றில், உயிரில் படர்ந்த உன்முகம்
போல உயர்ந்து எழுகிறது முழுநிலவு
பக்கத்தில் நீயிருந்த பகலொன்றைச் சுமந்து
இருளின் சிறகொன்றில் மிதந்து வருகிறது
வெட்கத்தில் விளைந்த உன் புன்னகை.
மாலையில் விரிந்த தாமரை மலரொன்றில்
உயிர்த்து எழுகிறது உனைப்பற்றிய கனவொன்று
வாழும் கணங்களின் வலியை உணர்த்தியபடி
நீண்டு கிடக்கிறது என் இரவுகளின் மௌனம்
என்னருகில் நீயிருக்கும் விடியலைத் தேடியபடி….
*****
உனக்காய் விடிகிற, எனக்கான உலகம்……
நீண்ட இரவுகளில் இதழ் மூடிக்
குவிந்த மொட்டுக்கள் காலையில்
நீ எழுந்து நடக்கையில் மலர்ந்து
சிரிப்பதை நான் பார்த்தேன்.
முன்னிரவில் வெள்ளொளி பரப்பிக்
கிடந்த முழுநிலவின் விளிம்புகள்
உனைக் கண்டதும் வெட்கத்தில்
ஒரு முகிலுக்குள் ஓடி மறைந்தன.
உன்விழி பார்த்த கணங்களில் வழிமாறிய
நதியொன்று என் வாசலில் வழிந்தோட……
பின்னர் வருகிற பொழுதொன்றில் உன் இதழ்
பற்றும் கனவுகளில் துள்ளிக் குதித்து உடைந்தன
என் வீட்டுத் தேநீர்க் கோப்பைகள்.
உன் நினைவுகளை ஏந்தியபடி மெல்ல
உதிக்கிறது எனக்கான உலகம்.…..
*****
தேய்ந்த நிலவின் காய்ந்த ஓடைகளில்……….
முறிந்த சிறகொன்றின் மீளாத வலியோடு
உன்னோடு நானிருந்த பொழுதுகளைப்
பொதியாய்ச் சுமந்தபடி காலப் பெருவெளியின்
துருவங்களில் இளைப்பாற இடைவிடாது
பறக்கிறது உன் நினைவுகள்.
வழியெங்கும் திரிந்தலையும் மலையுச்சி
மேகமொன்றில் முன்னர் உன்னிடத்தில்
நான் கொடுத்த மலரொன்று முழுதாய்
உதிர்ந்து சிதறிக் கிடக்கையில்….
பொங்கி வழிகிற விழிநீர்த் திவலையொன்றில்
படிந்து பெருக்கெடுத்து விழுகிற மழை நீராய்,
செம்மண் உடைசல்களில் கலந்து உன் முல்லைச்
சிரிப்பலைகளைத் தேடித் தேய்ந்த நிலவின் காய்ந்த
ஓடைகளில் இன்னும் பயணிக்கிறது….
உன்னைத் தொலைத்த எந்தன் வாழ்க்கை……
**************


kaathalin pirivai migavum valiyudan solkireerkal.kaviththuvamaana mozhinadai migavum sirappu….thodarungal.
அழகான , நேர்த்தியான கவிதை வரிகள் நண்பா. கொஞ்சம் வேலைப்பளு அதிகம் அதனால் தான் வலைப்பக்கம் வர முடியவில்லை