கிழக்கில் முன் நவீனக் கவிதைகள்

(கீழ்க்கண்ட கவிதைகள் “கிழக்கில் முன் நவீனக் கவிதைகள்” என்று வரிசைப்படுத்தப்படும், என்ன நண்பர்களே குழப்பமாக இருக்கிறதா? இது மாதிரியான கவிதைகளை நீங்கள் எழுத வேண்டுமென்றால், கிழக்குப் பக்கமாக உட்கார்ந்து, நவீனமான ஆடைகளை அணிந்து கொண்டு, தாளின் முன் பக்கங்களில் மட்டுமே எழுதத் துவங்க வேண்டும், பின் பக்கங்களை அப்படியே விட்டு விட வேண்டும், மீறி எழுதினால் அவை மேற்கில் பின் நவீனக் கவிதைகள்" ஆகி விடும். வேறொன்றுமில்லை…..”கிழக்கில் முன் நவீனக் கவிதைகள்” என்பது படித்தவுடன் புரிய வேண்டும் அவ்வளவுதான்)

ஒரு புன்னகையின் பயணம்………

2

பள்ளி நூலொன்றின் பின் அட்டையில்
யாருக்கும் தெரியாமல் உன் பெயரை
எழுதிக் கிழித்திட்ட பக்கங்கள், ஆன்மத்தில்
இன்னும் அழியாமல் இறைந்து கிடக்கிறது.

முன்னம் ஒரு பின்னிரவில் தொடர்ந்த நம்
உரைகளின் நீட்சியொன்று, முன்னிரவில்
விழித்து ஓலமிட, வலிகொண்ட விழிப்பொன்றின்
வழியாக என்னைக் கடக்கிறது உந்தன் புன்னகை,

அண்ட வெளிகளில் அலைந்து களைத்த என்
உயிரின் ஓசை உன் மௌனத்தில் மட்டுமே
ஊமையாய்க் கிடந்து ஓய்வெடுக்கையில்,

உன் நினைவுகளில் எஞ்சிய நீர்ப்பரப்பு,
கடற்கரை மணலில் பதிந்த நம் காலடித்
தடங்களைக் கழுவித் துடைக்கிறது.

என் மொழிகளை ஊமையாக்கி என்னைக்
கவிஞனாக்கிய கருப்பொருள் நீயென்ற
உண்மையில் மட்டுமாவது உறங்கட்டும்
நம் காதலின் எஞ்சிய கனவுகள்………….

காதலில் வரைந்த ஓவியம்……..

1

அலைகள் நனைத்த பூவைச் செடியோடு சுமந்து
உனைத்தேடி நகர்கிறது நதிப்புறத்து நீரலைகள்,

பகல் முழுதும் உன் பளிங்கு முகம் கண்டு பரவிச்
சிவந்த வண்ணம் கொட்டிச் குளிர் நிலவாய்
உருமாறக் கடல் தேடிக் கரைகிறது சூரியன்,

கடக்கும் விண்மீனைக் கைகளில் பிடித்து உன்
கழுத்தில் சூடிவிடக் கவனமாய்க் காத்திருக்கிறது
மலை உச்சியில் மகிழ்வோடு ஒரு வண்ணமுகில்,

இழந்த சந்தத்தை உன் இதழ்களில் கண்டு உயிர்த்து
எழுகிறது மறந்த கவிதையின் முத்தான முதல்வரி,

படைத்த பேருலகை, படித்த இலக்கியத்தைக் கடந்து
நான் மலைத்து மருளுகையில் கையில் தவழ்கிறது
நான் காதலில் வரைந்த ஓவியம்……….

முத்தமிழாய், முக்கனியாய், முத்தாரச் சிரிப்பாய்………….

நான் மீளக்குடியமர்வேன்……….

3

நிறைந்து வழிந்த மனிதத் தடங்களைத்
தேடியலைந்து மீண்டும் வாசலில் பதிக்கவும்,
புதையுண்ட உறவொன்றின் பாதி மலர்ந்த
செடியொன்றைத் தோண்டி எடுக்கவுமாய்,
பூமரக் காற்றின் சிதைந்த புகையூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்……….

மீன்பிடித்த குளமொன்றின் உடைப்படைக்கவும்,
கரும்பலகைச் சிதிலங்கள் கரிபூசி மெழுகவுமாய்,
குருதி படிந்திருக்கும் புழுதி நிலத்தூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்……….

பாதியில் நிறுத்திய கவிதையை முடிக்கவும்,
பாதையில் படர்ந்த கொடிகள் அகற்றவுமாய்,
வங்கக் கடலின் வண்ண அலையூடே
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்…………

தேசக்கனவில் புதைந்து வெளிவராத
தொட்டாவொன்றைச் செலுத்தவும்,
என் தேகமெங்கும் நிறைந்திருக்கும்
தமிழீழக் கனவை உயிர்க்கவுமாய்,

மனிதம் தின்ற உலகினூடே மறுபடி
ஒருநாள் நான் மீளக்குடியமர்வேன்.

நீ மீளக் குடியமர்த்தும் முன்னதாய்
நானே ஒருநாள் மீளக்குடியமர்வேன்.

பயணச் சுமையாய்………

4

படிமப் பாறையொன்றில் காலத்தின்
கீறலாய்ப் பதிந்து அழுந்திக் கிடக்கிறது
வாழ்க்கையின் சுவடுகள்……….

கடந்து வெளிவரும் ஒவ்வொரு முறையும்
திறக்கிறது நினைவுத் துருப்பிடித்த பழைய
வாயிலொன்றின் கதவு…………

சதுர வயல்களை, வட்ட மரங்களை
வண்ண மனிதர்களைத் தாண்டிய
நெடிய பயணங்களின் முடிவிலும் கூட
சேருமிடத்தின் முன்னதாய் வந்தடைகிறது
உனைப் பற்றிய சின்ன நினைவுகள்………..

காலப் பெருவெளியின் நீட்சியில் உனை
மட்டும் கடக்கவே முடியாத பயணியாய்ப்
புறப்பட்ட இடத்திற்கே மறுபடி வருகிறேன் நான்.

நீயோ பயணச் சுமையாய்க் கூடவே வருகிறாய்!!!

வானில் உயர்நிறை மதியோ…..

5

தேனில் ஊறிய சுளையோ – தீந்தமிழ்
வேனில் முகிழ்த்த வெண்மலர் இதழோ….
ஊனில் உறைந்தொரு உயிர் பெருக்கிய
வானில் உயர்நிறை மதியோ…..

ஓடு நதிக்கரை நுரைதனில் ஆடிடும்
பாடு மூங்கிலின் இசையோ – செந்தமிழ்
ஏடு நிறைந்து வழிந்தபின் எங்கள்
நாடு கடந்திடும் கவியோ…..

வெட்ட வெளிகளில் சுற்றி அலைந்திடும்
வட்ட மரங்களின் காற்றோ, கனித்தமிழ்
சொட்ட உருகிடும் பனிமலை முகடின்
கிட்ட உரசிடும் முகிலோ…..

எத்தனை இன்பம் திளைத்திருந்தாலும்
என் தமிழ் போலொன்றும் இல்லை,

எத்தனை நிலங்கள் கடந்திருந்தாலும்
என் தமிழே உயிர் எல்லை.

நத்தையின் முதுகுச்சுமை…….

6

ஊருணிக் கரைகளின்
புதர்மண்டிய பிளவுகளில்,
பிறந்த நாள் முதலாய்த்
ததும்பி வழிந்து கிடந்து,

நீர் வற்றி வறண்ட
காலங்களில் நத்தையின்
முதுகுச்சுமை போலூர்ந்து
கரையேறி ஊருக்குள்
புகுந்து பரவிக்கிளைத்து,

நாட்டார் நகரத்தாரின்
கொட்டொலிகளில் பிறப்பைக்
கொண்டாடி மகிழ்ந்து,

பறையின் ஒலி போல்
செவிப்பறை கிழித்து
எனக்குள் எப்போதும்
எதிரொலித்துக் கிடக்கிறது,

என்னை யாரென்று எனக்கே
சொல்லித்தர இன்னும்
இருக்கிற எந்தன் சாதி……….

வண்ணத்தமிழ் வரியொன்றில்………..

7

கணன்ற விழிச்சுடரில் என்
கவிதைகளைப் பற்ற வைத்தாய்,

நடந்த பாதைகளில் என்
மொழிச்சுவடை ஒட்ட வைத்தாய்,

நிமிர்ந்த கணமொன்றில் என்
விழிச்சுவரில் பட்டுத்தெறித்தாய் நீ, பவளம் போல்,

பாடும் பறவைகளும், ஓடும் நதியலையும்
ஊனில் உயிர்த்தெழுந்து, உன்னை நினைவுறுத்தத்

தேடும் விழிகளதில் ஊடல் கலந்திருக்க
வாடும் பயிரதுபோல் வானம் பார்த்த்திருந்தேன்,

நீயோ, வண்ணத் தமிழ் வரியொன்றில்
என் வாழ்வாய்க் கலந்திருந்தாய்,ஆழப் பதிந்திருந்தாய்…….

* * * * * * * * * * * *

8 மறுவினைகள் முதல் “கிழக்கில் முன் நவீனக் கவிதைகள்”


  1. 1 பாலாஜி அப்பு 5:35 மு.பகல் இல் அக்டோபர் 5, 2009

    அண்ணா, இருந்தாலும் இந்த நக்கல் ஆகாது, பின் நவீனம் என்ற பெயரில் எழுதும் சில மறை கழன்ற கவிஞர்களுக்கு நல்ல ஆப்பு தான்.

    கவிதைகள் அனைத்தும் மிக அருமை, தொடர்ந்து எழுதுங்கள்.

  2. 2 புத்தளம் வளர்மதி 5:39 மு.பகல் இல் அக்டோபர் 5, 2009

    “ஓடு நதிக்கரை நுரைதனில் ஆடிடும்
    பாடு மூங்கிலின் இசையோ – செந்தமிழ்
    ஏடு நிறைந்து வழிந்தபின் எங்கள்
    நாடு கடந்திடும் கவியோ…..”

    அழகான இந்த மரபுக் கவிதையில், இன்னும் அழியாமல் வாழும் தமிழ்.

    மரபுக் கவிதைகளுக்கும் மணி மகுடம் சூட்டும் உங்கள் தமிழுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    உங்கள் அன்புள்ள
    புத்தளம் வளர்மதி

  3. 3 Shanmuganathan V P 5:45 மு.பகல் இல் அக்டோபர் 5, 2009

    Dear Mr.Arivazhagan,

    As a fellow Tamilian, I am proud of you, we are all somehwhere out from our Motherland, Your Poems are always making us to feel the grip. Hats off to your work.

    V P Shanmuganathan
    Toronto – Canada

  4. 4 R.KALIPRASADH 3:50 மு.பகல் இல் அக்டோபர் 6, 2009

    I wonder…..

    kai Arivazhagan kavithaiyum ezhuthuvaaraa?

    nice poems…

    keep writing…

    ( sorry to tye in English boss…

    I am in a net cafe…)

  5. 5 கை.அறிவழகன் 2:58 மு.பகல் இல் அக்டோபர் 7, 2009

    நக்கல் இல்லை அப்பு பாலாஜி, இது ஒரு விதமான மனவருத்தம், பலர் இன்று கவிதை என்றால் அது எளிய மனிதர்களுக்குப் புரியும் வகையில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டே துவங்குகிறார்கள், அதற்காக இவ்வாறு குறிப்பிட்டேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  6. 6 கை.அறிவழகன் 2:59 மு.பகல் இல் அக்டோபர் 7, 2009

    நன்றி, வளர்மதி, உங்கள் கவிதைகளையும் படித்திருக்கிறேன், வாழ்த்துக்கு நன்றி, தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணிகள்.

  7. 7 கை.அறிவழகன் 3:01 மு.பகல் இல் அக்டோபர் 7, 2009

    நன்றி சண்முகநாதன், உண்மையில் என்னுடைய கவிதைகள் உங்களை மகிழ்வுறச் செய்திருந்தால் அதைவிடப் பெருமை வேறொன்றுமில்லை. நம் மக்களுக்காக எழுதும் என் எழுத்துக்களின் வலிமை அதிகரிக்க உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள் உறுதுணையாய் இருக்கும். நன்றி.

  8. 8 கை.அறிவழகன் 3:03 மு.பகல் இல் அக்டோபர் 7, 2009

    காளி பிரசாத், அறிவழகன் கவிதைகள் படித்தும், எழுதியும் தான் இலக்கிய உலகில் நுழைந்தார், இப்போது கொஞ்சம் கட்டுரைகளை விடுத்து முழுக்கக் கவிதைகள் எழுதுவதால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறதோ என்னவோ? உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்வளிக்கின்றது. நன்றி.


மறுமொழி இடுக




அதிகளவு சொடுக்குகள்

வலைப்பூவில் உலா வந்தவர்கள்

  • 26,372

நிழற்படங்களில் நெஞ்சில் நிறைந்தவை

untitled

More Photos

RSS My English Blog

தொகுப்புகள்