எனக்கு முதல் காதல் பத்து வயதிலேயே வந்து விட்டது பாஸ், என்னடா நல்ல பய இப்படிச் சொல்றானேன்னு நினைக்கிறீங்களா? நெசமாலுமே தான், அஞ்சாப்புப் படிக்கிற காலத்திலேயே அகிலா, அகிலான்னு ஒரு புள்ள நல்லா துறு துறுன்னு பூனைக் கண்ணு மாதிரி வகுப்புல உக்காந்திருக்கும்.
நம்ம வகுப்புக்கும், அந்தப் புள்ள வகுப்புக்கும் பெரிய சொவரெல்லாம் கெடையாது, ஒரு கனமான ஊதாக் கலர் துணி தான் போட்டிருப்பாங்கே, நம்ம கொஞ்சம் ஓரமா உக்காந்து அப்ப அப்ப ஒரு லுக் விடுறது, அப்படியே கொஞ்சம் அட்டுராக்டு பண்றதுக்கு முயற்சி பண்றதுன்னு நல்லா ஓடிக்கிட்டு இருந்துச்சு.
இடைல செந்தில் செந்தில்னு ஒரு பய உள்ள நுழைஞ்சு பார்வதி டீச்சர் கிட்டப் போட்டுக் குடுத்துட்டான், அதுல பாருங்க அவனும் நம்ம காதலைக் கண்டுபுடிச்சு, அதத் தீவிரமா எதிர்த்து எல்லாம் போட்டுக் குடுக்கல, சும்மா போற போக்குல, டீச்சர் டீச்சர், இந்த அறிவுப் பய, ஸ்க்ரீனை அப்ப அப்ப விலக்கிப் பாக்குறான்னு சொல்லப் போக, அதோட நம்ம எடத்த மாத்தி வுட்டாங்கே பாஸ். முதல் காதல் ரெண்டு மாசத்துலேயே புஸ்ஸுன்னு போயிருச்சு.
ஆனாலும், அந்தப் புள்ள கண்ணுல இருந்த அந்த ஒளி இன்னமும் நெஞ்சுக்குள்ள ஊடுருவிக் கிடக்குது, பத்து வயசுலேயே பயபுள்ளக விட்டுக் கண்ணு இந்த மின்னு மின்னுனா, அப்பறம் பயலுக என்னத்தப் படிக்கிறது, இருந்தாலும் நம்ம படிப்புல ஒன்னும் கொற இல்ல பாருங்க, வரிசையாக் கோடு போட்ட மாதிரி எப்பவும் மொதல் ரேங்க்குதான்.
மொதல் காதலு கொஞ்சம் டம்மிப் பீசாப் போயிருச்சேன்னு ஐயா மனம் தளரவெல்லாம் இல்லை, ரெண்டாவது காதலுக்கான சரியான நேரத்தைப் பார்த்துக் கொண்டே முருங்கை மரத்தில் ஏறப் போகிற விக்ரமாதித்தன் மாதிரி கண்களில் காதல் வாளோடு பம்பரம், கோழிக்குண்டு, பேந்தா என்று பிஸியாக இருந்தேன்.
பயபுள்ள வந்து சேந்துச்சு பாருங்க ஒன்னு, சுபான்னு பேரு, வட நாட்டுல இருந்து மாற்றலாகி பொசுக்குன்னு ஒருநாள் ஞாயித்துக்கிழமை எதுத்த மாதிரி இருந்த காலனி வீட்டுக்கு தட்டு முட்டுச் சாமான்களோட வந்து இறங்கீட்டாங்கே, சும்மா, சின்ன வயசு சாவித்திரி அம்மா மாதிரி அப்பீடி ஒரு அழகு பாஸ், கண்ணுல இருந்து சுமாரா ஒரு 500 வாட்ஸ் மின்சாரம் எந்நேரமும் பாயுது, வந்ததும் வராததுமாய் நம்ம வீட்டு மாடி ஏறி தண்ணி கேட்டுப் புட்டாங்கே, கையும் ஓடல, காலும் ஓடல, இங்கிலிஷ்ல வேற பேசுதா, ஒரே பொகை போட்ட கனவு மாதிரி இருந்துச்சு.
தண்ணி குடுத்துட்டு, வெளில பால்கனில நின்னு அந்தப் புள்ளையவே பாத்துக்கிட்டு நின்னேன், அப்பறம் ரொம்ப இருட்டாயிருச்சு, அதுகளும் வீட்டுக்குள்ள போயிருச்சா, கெளம்பி தூங்கப் போயாச்சு,தெரியாத்தனமா அந்தப் புள்ளைய நம்ம பள்ளிக் கூடத்திலேயே சேத்து விட்டுட்டாங்கே, ஒரே ரிக்சா, ஒரே பாடம், ஒரே பென்சிலுன்னு ரொம்பக் கலராப் போச்சு பாஸ் நம்ம ரெண்டாவது காதல்,
ஒன்னாவது ரேங்க் எடுக்கற பயங்குறது ஒரு பெரிய தகுதி பாஸ் அப்பவெல்லாம், அட்டெண்டென்ஸ் எடுக்கச் சொல்லுவாங்கே, டீச்சருக்குத் தண்ணி எடுத்துக் குடுக்கச் சொல்லுவாங்கே, அப்ப அப்ப நம்ம பேர வேற கிளாஸ்ல சொல்லி நம்மளக் கிளு கிளுப்பா வச்சுக்குவாங்கே, புள்ளையும் அசந்து போயிருச்சு, நம்ம பவரை அப்ப அப்ப பயன்படுத்தி அதுவும் சீன் போட ஆரம்பிச்சுருச்சு, சரி, நம்ம ஆளு தானே, போனாப் போகுதுன்னு நானும் அப்படியே பில்ட் அப் குடுத்துப் போய்க்கிட்டே இருந்தேன், திடு துப்புன்னு ஒரு நாள் நம்ம ஆளோட மொகமே தெரியாமப் போச்சு.
ஆளையே காணம், அப்ப அப்ப அவுக அப்பனும் வந்து போய்க்கிட்டு அப்பாகிட்ட அரியர்ஸ், சம்பளம் பத்தியெல்லாம் பேசிகிட்டு இருப்பான், அந்த ஆளையும் காணும், என்னடா, இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைன்னு நானும் தாவாங்கட்டயத் தடவித் தடவி ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா, கடைசில தான் தெரிஞ்சது பக்கத்துக்கு வீட்டு வெங்கட்ராமனும் அவன் பொண்டாட்டியும் சேந்து ஒரு நாள் படத்துக்குப் போகைல புள்ள அப்பன்கிட்ட நம்ம சாதியப் பத்தி போட்டு விட்டுருக்கான்.
வடநாட்டு ஷர்மாவுள்ள, சும்மா இருப்பாரா, படக்குன்னு உறவ முறிச்சுக்கிட்டாறு, அழுகாத கொறையா நானும் என்னையத் தேத்திக் கரை சேந்து அடுத்த வகுப்புக்குப் போறதே பெரிய கம்ப சூத்திரம் ஆகிப் போச்சு, பாழாப் போன சாதின்னா என்னடான்னு அப்பத்துல இருந்தே நம்மளத் தேட விட்டாங்கே பாஸ். ரெண்டாவது காதல் இப்புடி சோகமா முடிஞ்சு போகும்னு நானே எதிர் பார்க்கல பாஸ்……
மூணாவது காதல் நம்மள நெருங்க விடாம நம்ம படிப்பும், மத்த இத்யாதி ஐட்டங்களும் ரொம்ப பிசியாவே நம்மள வச்சிருந்துச்சு பாஸ், ஹிந்தி கிளாஸ், டைப் ரைட்டிங் கிளாஸ், கர்நாடக சங்கீதம்ன்னு அப்பா ரொம்பவே மெனக்கெட்டு என்னையும் ஒரு மனுஷப்பயலா மாத்திப் புடனும்னு விடாம வெரட்டுனாறு, பய மேல அவருக்குக் காதல் அதிகம், சாய்ங்காலம் ஆபீஸ்ல இருந்து வந்து கேப்பேன் பத்துத் திருக்குறள் சொல்லனும்டான்னு திகில் உண்டாக்கி விட்டுட்டுப் போயிருவாரு.
ஒவ்வொரு நேரம் கீழ பயலுக வெளையாடுற சத்தம் பலமாக் கேக்கும், முட்டிக்கிட்டு வர்ற அழுகிய அடக்கிட்டு திருக்குறள் படிப்பேன், பொறவு ஒரு வழியா கொஞ்சம் ப்ரீ டைம் வர ஆரம்பிச்சுருச்சு பாஸ், நானும் அடிச்சுப் புடிச்சு பத்தாவது வந்து சேந்துட்டேன், கொஞ்ச நாளு ரொம்ப சுவாரசியம் இல்லாம டல்லாவே போய்கிட்டு இருந்துச்சு நம்ம வண்டி, புதுப் பள்ளிக் கொடம், புது வாத்தியாருக. புதுப் புள்ளைக, புது சைக்கிள்னு அப்பிடியே ஸ்லோ மோசன்ல போயிட்டிருந்த வண்டி படக்குன்னு மொதல் கியருக்கு மாறிச்சு பாருங்க,
கணக்கு வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டு இருந்தப்ப நமக்கு எதாச்சும் புதுசா கணக்குத் தெரியுதான்னு வெளியே பாத்தா ஒரு புள்ள சாட்ஸ் போட்டுக்கிட்டு கிரௌன்ட்ல ஓடிட்டிருந்துச்சு, லேசா ஒரு புன்னகையும், அப்பப்ப அலட்டலுமா அந்தப் புள்ள ஓட ஓட நம்ம மனசு அது பின்னாடியே ஓடிக் களைக்க ஆரம்பிச்சிருச்சு, துப்பறியும் புலி மாதிரி பள்ளிக் கூடம் விட்ட ஒடனே அது பின்னாடியே சைக்கிள்ல போயி வீடெல்லாம் கண்டு பிடிச்சு, அப்பப்ப அது கண்ல பட ஆரம்பிச்சேன், சைடுல கரகாட்டக்காரன் ரூபத்துல இளையராஜா வந்து "அந்த மான் எந்தன் சொந்த மான்னு" மனசப் பிசஞ்சு ஜூஸ் எடுத்துக் கொல்ல, வாழ்க்கை சும்மா அதோட அதிகபட்ச வேகத்துல போக ஆரம்பிச்சுடுச்சு.
ஒரு நாளு கர்நாடக சங்கீதம் பாடத் தெரிஞ்ச பயன்னு ஹெட் மாஸ்டர் சுதந்திர தின விழாவில சுதந்திரமா மேடைல ஏறிப் பாடுடா பயலேன்னாரு பாருங்க, கெடைச்சதுடா வாய்ப்புன்னு, ஒன்ன நெனெச்சேன், பாட்டுப் படிச்சேன்னு குட்டக் கமல் உருகுன ரேஞ்சை விட ஒரு மடங்கு அதிகமா உருகப் போயி, ஓவர் நைட்ல அய்யா சூப்பர் ஹிட்டு ஆயிட்டேன்,
புள்ளைக எல்லாம் ஆட்டோகிராப் கேட்காத கொறைதான் போங்க, நம்ம ஆளு கிளிக் ஆயிருச்சு, ரெண்டு மூணு நாளுல பேசிப் பழகி பதினொன்னாவது வரைக்கும் பள்ளியில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட காதல் பறவைகளா மாறியாச்சு, ஒரு பக்கம் இனம் புரியாத மகிழ்ச்சி, ஒரு பக்கம் பயம், ஏல, நாம என்ன பண்றம், நம்மளப் படிக்கச் சொல்லி பள்ளிக் கூடம் அனுப்புனாங்கே, நம்ம இங்கே வேற என்னவோ பண்றோமேன்னு மனசு பக்கு பக்கு அடிக்க சரியா எவனோ வீட்ல போட்டுக் குடுத்துட்டாங்கே பாஸ் நம்ம காவியக் காதல,
அப்பா சும்மா, டென்னிஸ் மட்டைல குடுத்தாரு பாருங்க, ஆண்ட்ரி அகஸ்சி கூட அந்த மாதிரி சாட் எல்லாம் அடிச்சிருக்க மாட்டாரு, காதலாவது, கத்திரிக்காயாவது, ஆள விடுங்கடா சாமின்னு, பெரிய கும்பிடா போட்டுட்டு பொம்பளப் புள்ளக பக்கமே திரும்புறது இல்ல, அந்தப் புள்ளையும், ரொம்பவெல்லாம் அலட்டிக்கல, பன்னெண்டாவது பாதி படிக்கைலேயே கல்யாணம் பண்ணிட்டு ஒரு நாள், அறிவு, நல்லாருக்கியான்னு டவுன் பஸ்ல போகும் போது கேட்டுச்சு. அதோட அந்தக் காதல் முடிஞ்சு போச்சு பாஸ்.
சரி, அதோட முடிஞ்சுருக்கும்னு நீங்க நெனைக்கைல தான் பாஸ், உண்மையிலேயே கிளை மாக்ஸ் சீன் ஆரம்பிச்சுச்சு, அடிச்சுப் புடிச்சு காலேஜ் வந்து ஏகப்பட்ட புள்ளைக கூட ஒன்னா மன்னாத் திரிஞ்சப்ப எனக்கு காதல் எல்லாம் சும்மா பம்மாத்துடா மாப்பிள்ளை என்கிற அளவுக்கு முதிர்ச்சி வந்துருச்சு, பயலுக டேய், அவனாடா இவன்னு வடிவேல் ரேஞ்சுக்கு கேக்குற வரைக்கும் காதல் எனக்கு வரவே இல்ல பாஸ், வராதுல்ல, அப்பா, கொடுத்த டென்னிஸ் மட்டைப் பயிற்சி அப்பிடி.
காலேஜ் முடிச்சு, வாழ்க்கை தொடங்கிருச்சு, சுத்து முத்தும் பாத்தா ஒரே இருட்டு, கன்னக் கட்டிக் கொண்டு போயி கண்காணாத கடற்கரை நகரத்துல வுட்டுட்டாங்கே, பசியும், மயக்கமும் தான் பாஸ் வந்துச்சு, காதலும் வரல, ஒரு கஸ்மாலமும் வரல, பசி வாழ்க்கையைக் காதலிக்க வைக்குற பெரிய வாத்தியாரா மாறிருச்சு, என்னடா, எல்லாப் பயலுகளும், கார்லயும், வண்டிலையும் காசத் தண்ணி மாதிரி செலவழிச்சுக்கிட்டு என்ஜாய் பன்றாங்கே, நாம எங்கே பின்தங்கி இருக்கோம், குறைஞ்ச பட்ச வாழ்க்கையை, அதன் தேவைகளை எப்படி நாம பூர்த்தி செய்யுறதுன்னு மலைச்சுப் போயிக் கெடக்கைல தான் பாஸ் உண்மையிலேயே ரொம்ப நாளைக்கு அப்புறமா காதல் வந்துச்சு,
நம்ம மத்த காதல் மாதிரி இது பாண்டஸி காதல் கெடையாது, கடங்காரன் ஒருத்தன் வந்து கழுத்தைப் புடிக்கைல அது கழுத்துல கெடந்த செயின கழட்டி கைல குடுத்துச்சு, அந்தச் செயின செய்றதுக்கே வாழ்க்கை பூரா உழைக்கிற குடும்பத்துல இருந்து வந்த புள்ள, காசப் பத்தி யோசிக்கல பாருங்க, அதுல கொஞ்சம், கூட வான்னு சொன்னதும் ஒரு மஞ்சப் பைய எடுத்துக்கிட்டு கூடவே வந்திருச்சு பாருங்க அதுல கொஞ்சம்.
சொந்தக் காரப் பயலுக எல்லாம் என்னவோ கருணை காட்டுற மாதிரி கொஞ்ச நாளு வேணும்னா நம்ம வீட்டுல வேலை கீளை பாத்துகிட்டு இருக்கட்டும் தம்பின்னு சொன்னப்ப, என்னைய மேலேயும் கீளையும்பாத்துகிட்டே கொஞ்சமாக் கண்ணு கலங்குச்சு பாருங்க அப்பக் கொஞ்சம், ரொம்ப நாளா ஏச்சும் பேச்சும் கேட்டு எட்டு வருஷம் கழிச்சு ஒரு சாதி இல்லாத தேவதையைப் பெத்துக் பக்கத்துல படுக்கப் போட்டுக்கிட்டு கண்ணு கலங்குச்சு பாருங்க அப்பக் கொஞ்சம்.
புதுசா வாங்குன கார்ல, அர்த்த ராத்திரில எங்கேயோ பஸ்ஸ விட்டுட்டு அனாமத்தா நின்னுட்டு இருக்குற குடும்பத்த ஏத்தி பின் சீட்டுப் பூரா உக்கார வச்சு முன் சீட்டுல உக்காந்து லேசா என்னையப் பாத்து சிரிச்சுச்சு பாருங்க அப்பப் கொஞ்சம், முதல் சிறுகதைத் தொகுப்ப வெளியிட்ட போது எங்கேயோ மூலைல உக்காந்து பாத்துட்டு யாரு யாரு என்ன பேசினாங்கன்னு மனப்பாடமாச் சொல்லுச்சு பாருங்க அப்பக் கொஞ்சம்னு, இன்னும் காலம் பூராத்துக்கும் உனக்குக் காதல் வச்சிருக்கேண்டான்னு கூடவே வருது பாருங்க.
அதப் போயி அசிங்கப் படுத்துறாங்களே இந்த ஆர்.எஸ்.எஸ் காரப் பயலுக, நீங்களே சொல்லுங்க பாஸ், காதல் என்ன கலாச்சாரமா, அது மனுஷப் பயலுகள இன்னும் இன்னும் நாகரீகமா மாத்துற பொருள் சொல்ல முடியாத பேரண்டம் பாஸ். சும்மாவா சொன்னாரு நம்ம பாவலரு……
“கூடத்திலே மனப் பாடத்திலே விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தனிற்
பட்டுத் தெரித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்னு”.
நம்மளும் ஆயிரம் ஏடு திருப்பி இன்னும் தேடிக் களைச்சு முடிஞ்சாலும் காதல் நம்மள விடாது பாஸ், காதல் வேற ஒன்னும் புதுசு கெடையாது, இன்னொரு உயிரை நம்மதாகவும், நம்ம உயிரை இன்னொன்னாவும் நினைக்கிற சின்னப் புரிதல் தான பாஸ், என்ன சொல்றீக????

விளையாட்டா ஆரம்பிச்சு உருக வச்சுடீங்க பாசு
எழுதியவர் Rajan நாள் பெப்ரவரி 16, 2012
நேரம் 3:19 மு.பகல்
Very touching… This is the real Love Arivu..
எழுதியவர் SATHEESH JAYABALAN நாள் பெப்ரவரி 16, 2012
நேரம் 4:09 மு.பகல்