கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 12, 2018

கடைசி இந்தியனின் வாக்கு……..

7.jpg

ஐந்து மாநிலத் தேர்தலில் கொண்டாடப்படுவது காங்கிரஸ் கட்சியின் வெற்றி அல்ல, மாறாக பாரதீய ஜனதாக் கட்சியின் தோல்வி, பாரதீய ஜனதாக கட்சியின் செயல்திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று மதம் சார்ந்த பொய்யான உணர்வு அலைகளைத் தூண்டி விட்டு மக்களை ஒரு கும்பலில் கோவிந்தா (“Mob Mentality”) மனநிலைக்குக் கொண்டு வருவது. பிறகு அந்தப் பொய்க்கு அலங்காரம் செய்து வெகுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஊடாக ஒரு உண்மையைப் போல எடுத்துச் செல்வது, பிறகு அதன் மீது சமூக அரசியல் வண்ணம் பூசி அதிகார மையமாக உருமாற்றம் பெற வைப்பது. இந்தியாவைப் போன்றதொரு வளரும் ஏழை நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய வெறுப்பு அல்லது அடிப்படை மதவாதம் என்கிற இரண்டு இணையான கோடுகளின் மூலமாக மேற்கண்ட செயல்திட்டங்கள் மூலமாகவே பாரதீய ஜனதா தன்னை வளர்த்து எடுத்துக் கொண்டது. பெருநகரங்களின் அரசு அலுவலகங்கள், பார்ப்பனீய பனியாக்களின் நிதி மற்றும் பங்குச் சந்தைப் பொருளாதாரம் சார்ந்த நிறுவனங்கள், நேரடிச் சங்கிகளான காக்கி டவுசர்கள் என்று தேங்கிக் கிடந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் நிறுவனமான பாரதீய ஜனதாக் கட்சி இன்றைக்கு இந்தியாவின் ஒற்றைக் கட்சியாக மாற்றம் பெறுவோம் என்று கூக்குரல் இடுவதற்கு மேற்சொன்ன செயல்திட்டமே காரணம்.

ஒருவகையில் பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் தங்கள் வளர்ச்சிக்காக யாருக்கேனும் நன்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் பாகிஸ்தானுக்குத் தான் சொல்ல வேண்டும், இஸ்லாமிய வெறுப்பின் மூலதனத்தைக் கொண்டு நாம் இந்துக்களாக இணைய வேண்டும் என்று பல நேரங்களில் பாகிஸ்தான் மீதான பகையுணர்ச்சியை புகை மூட்டம் போல காவிகள் வளர்த்தெடுத்தார்கள், இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்குத் திறந்து விடப்பட்ட நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலும் சரி, தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கி இந்தியாவை நகர்த்த முயன்ற ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்திலும் சரி, காவிகள் இந்துத்துவ ஒற்றுமை ஓங்குக என்கிற முழக்கத்தை மெல்ல பெருநகர நடுத்தர மக்களிடம் எடுத்துச் சென்றார்கள்.

yogi_PTI_ladityanathl

மந்தை ஆடுகளின் மனப்போக்குக் கொண்ட பெருநகர நடுத்தர மக்கள் காவிகளின் இந்த செயல்திட்டத்தை தங்களுக்கு வழங்கப்பட்ட பெருமைக்குரிய பரிசாகக் கருதி அடிப்படை இந்துத்துவத்தின் கோர முகத்தை இந்துக்களின் பெருமை என்கிற முகமூடியோடு ஊரகப் பகுதிகளுக்குக் கடத்தினார்கள். மிக நுட்பமான அரசியல் அறிவு வழங்கப்படாத கிராமங்கள் தேர்தல் நேரத்தில் வாஜ்பாய், மோடி போன்ற பிம்பங்களை நம்பும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அவர்களிடம் வளர்ச்சி, ஊழலற்ற புனிதம், இந்துக்களின் பாதுகாப்பு போன்ற தங்களுக்குத் தொடர்பே இல்லாத வாக்குறுதிகளைக் காவிகள் உலவ விட்டார்கள். இறுதியில் பாரதீய ஜனதா என்கிற அடிப்படை இந்துத்துவ பயங்கரவாதிகளின் கட்சியாக மட்டுமில்லாமல் இந்தியாவில் ஊழலை ஒழிக்கவும், இந்துக்களைப் பாதுகாக்கவும் அவதாரமெடுத்த ஆபத்பாந்தவனாக வளர்ந்து கிளை பரப்பி ஆட்சி அதிகாரத்தை மட்டுமன்றி இந்தியாவின் இயற்கை வளங்களையும், சந்தைப் பொருளாதாரத்தையும் பெருமுதலைகளை நோக்கி மடைமாற்றியது காவிக் கூட்டம், அதற்கான கூலியாக பெரும் பொருளைப் பெற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் அதனைக் கொண்டு இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இருக்கும் வர்ண பேதங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில், சமூக நலத்துறைகளில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் மூலமாக நிலையாக வைத்திருப்பதற்கான திட்டங்களை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தத் துவங்கியது.

இத்தகைய திட்டங்களால் பெருமளவு நாம் தான் பாதிக்கப்படப் போகிறோம் என்கிற சூழ்ச்சியை அறியாத இந்திய மக்களின் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் காவிகளின் கூட்டத்தோடு ஐக்கியமாகி அவர்களின் வெற்றிக்குத் துணை நின்றார்கள்.

உச்சக்கட்டமாக கடந்த 2017 உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சங்கிகள் ஊடகங்களின் மூலமாக செயல்படுத்திய உணர்வு மயமான இந்துத்துவ வெறியேற்றம் பெருவெற்றியை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்தது, 40 விழுக்காடு மக்கள் வாக்களிக்காத அந்தத் தேர்தலில் சங்கிகள் பெற்ற வெற்றி “ஸ்விங் வோட்டர்ஸ்” (Swing Voters) எனப்படுகிற புதிய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அரசியல் குழப்பம் கொண்ட நடுத்தர மேல்தட்டு மக்களால் வழங்கப்பட்டது.

cffugm8g_priyanka-nick-pm-modi-instagram_625x300_05_December_18

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்விங் வோட்டர்ஸ் வழங்கிய கொடை காவிகளை வெற்றி பெற வைத்தது, சமூக இணைய தளங்கள் மற்றும் அலைபேசி வழியான பரப்புரை வழிமுறைகளை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட பாரதீய ஜனதாக கட்சி, இந்துத்துவ வெறியேற்றம், இஸ்லாமிய வெறுப்புணர்வு போன்ற நுட்பமான உள்ளீடுகளை இந்தியாவெங்கும் பரப்பிய காவிகள் துவக்க நிலையில் இருந்த சமூக இணைய தளங்களின், அலைபேசி ஊடகங்களின் வாய்ப்பை நன்றாகக் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஐந்தாண்டுகளில் கடும் நெருக்கடிகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளான இந்திய மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பணமதிப்பிழப்பு மற்றும் GST குறித்த பொய்ப் பரப்புரைகள் காவிகளால் உருவாக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டாலும் மக்கள் அவற்றை நம்பும் நிலையில் இல்லை, தாங்கள் ஏமாற்றப் பட்டதாக அவர்கள் நம்பத் துவங்கி விட்டார்கள். மோடி என்கிற பிம்பம் முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பொய்யான வளர்ச்சியின் நிழல் என்று விவசாயிகளும், சிறு வணிகர்களும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் கடைசியாக உணர்ந்த போதுதான் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள். இந்த முறை தொழில் நுட்ப வளர்ச்சியும், இணையப் பயன்பாடும் பரவலாக்கப் பட்ட பின்பான சூழலில் காவிகளின் உணர்ச்சிப் பரப்புரைகளுக்கும், பொய்களுக்கும் எதிரான ஒரு மிகப்பெரிய கூட்டமே சமூக இணைய தளங்களில் தன்னியக்கமாக உருவாக்கியது, காவிகளின் பொய்களை உடைக்கும் உடனுக்குடனான பதில்கள், உண்மை என்ன என்கிற விளக்கங்கள் இந்தியா முழுவதும் பரவலாக உள்ளீடு செய்யப்பட்டது, கிராமப்புற வாக்காளர்களும், புதிய தலைமுறை வாக்காளர்களும் பொய்களுக்கும், உண்மைக்கும் இடையிலான வேறுபாடுகளை அறிந்து கொண்டார்கள்.

மத நல்லிணக்கத்தை விரும்புகிற முதல் நிலை இந்து வாக்காளர்கள் கூட இன்று காவிகளின் இந்துத்துவ அடிப்படை வாதத்தை வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள், பெரும்பாலான இந்தியர்கள் மிதமான மேட்டிமைத் தன்மை கொண்ட காங்கிரஸ் கட்சியைக் கடந்து ஒரு தீவிர இயக்கத்தைத் தேடும் சூழலில் தான் பாரதீய ஜனதாக கட்சி வேறு வழியற்ற ஒரு மாற்றாக உருவாக்கப்பட்டது. இப்போதும் காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு இந்துவாக நிரூபிக்க விரும்புகிற, “நான் ஒரு பூணூல் அணியும் காஷ்மீர் பார்ப்பனன்” என்று ராகுல் காந்தியைப் பேச வைக்கிற இடத்தில் தான் நின்று கொண்டிருக்கிறது.

ஆனாலும், பெரிய அளவில் படிக்காத, அரசியல் நுண்ணுணர்வு இல்லாத இந்தியன் அமைதியாக இருக்கிறான், தனக்கு என்ன வேண்டும் என்று உணர்ந்தவனாக, சித்தாந்தங்களை, தலைவர்களை நொடியில் தூக்கி அடிக்கும் வல்லமை கொண்டவனாக அடிப்படை அறம் கொண்டவனாக இந்த தேசத்தைப் பாதுகாக்கிறான். இந்தியா எப்போதும் அவனது கரங்களில் தான் தன்னுடைய நம்பிக்கையை ஒப்படைக்கிறது.

********

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 31, 2017

ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.

17THaryan migrationrevised-1

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்கிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.

உலகின் மிகப் பழமையான புதைந்து போன நகரத்தில் இருந்து பெறப்பட்ட சுவடுகள் தோண்டி எடுக்கப்பட்டது, அதன் அதிர்வுகள் நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியது. திராவிட நாகரீகம் என்று பெயரிடப்பட்ட அந்தப் பெருமைக்குரிய வரலாறு கல்விக்கூடங்களில் நிலைபெற்றபோது, புராணப் புனைவுகளால் நெய்யப்பட்ட மூட நம்பிக்கைகளும், சமூக அநீதிகளும் நிரம்பிய ஆரியம் என்கிற உயரடுக்கு சரியத் துவங்கியது.

விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆரிய உள்ளீடுகள், திராவிட நாகரீகத்தின் வரலாற்று அடையாளங்களை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்கியபோதும், குடியேற்ற இனக்குழுவின் நம்பிக்கைகளும், கலாச்சாரப் பின்புலமும் பழங்குடிகளால் நிராகரிக்கப்பட்டபோதும், ஆரியம் ஒரு நுட்பமான பரப்புரையை முன்னெடுத்தது.

“ஆரியக் குடியேற்றம் என்பதே ஒரு கட்டுக்கதை, அப்படியான ஒரு நிகழ்வு இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழவே இல்லை என்று பல்வேறு போலியான ஆய்வுகளையும், தரவுகளையும் முன்வைத்து, “சரஸ்வதி நாகரீகம்” என்றொரு புதிய நாகரீகத்தை கட்டமைக்க முயன்றது. DNA ஆய்வுகள் இப்படியான ஒரு ஆரியக் குடியேற்றத்தை உறுதி செய்யவில்லை என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பழங்குடிகள் என்றும் பிதற்றத் துவங்கின.

கடந்த இருபதாண்டுகளில் தீவிர ஆரிய இனக்குழுவின் உறுப்பாக இயங்கும் பார்ப்பனீயம், பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, ஆரியக் குடியேற்றத்தைப் பொய்யென்று உறுதி செய்யப் பெருமுயற்சி செய்தது. DNA ஆய்வுகள், தொழில்நுட்ப உதவியோடு மிகத் தீவிரமாக இயங்கத் துவங்கிய கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றில், அறிவியல்பூர்வமாக “ஆரியக் குடியேற்றம் நிகழ்ந்தது உண்மைதான்” என்பதைப் பல்வேறு பல்கலைக்கழங்கங்களின் உயிர் மூலக்கூறு ஆய்வுகள் உறுதி செய்யத் துவங்கி இருக்கிறது.

முன்னதாக X க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட சான்றுகள் (அதாவது தாய் ——மகள் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டது) குறிப்பிட்ட ஆரியக் குடியேற்ற DNA அடையாளங்களை உறுதி செய்ய முடியாமல் இருந்தபோது, புதிய Y குரோமோசோம்களில் (தந்தை – மகன் உறவுமுறை) இருந்து பெறப்பட்ட சான்றுகள், ஆரியக் குடியேற்றம் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆரியக் குடியேற்றம் பெரும்பான்மை ஆண்களை உள்ளடக்கியது என்கிற தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு புதிய Y க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை இணைக்கும் போது இதுவரையில் இருட்டறையில் இருந்த ஆரியக் குடியேற்றம் குறித்த மர்ம முடிச்சுகள் விலகித் தெளிவான முடிவுகள் கிடைக்கத் துவங்கி இருக்கிறது.

mtDNA – Data எனக்குறிக்கப்பட்ட முதன்மை ஆய்வுக் குறிப்புகளில் குடியேற்ற ஜீன்களின் பரவல் குறித்த உறுதியான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை, அல்லது குறைந்த அளவிலான தரவுகளே கிடைக்கப்பெற்றன, ஆனால், YDNA – Data என்றழைக்கப்படும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் குடியேற்றம் குறித்த ஆய்வு முடிவுகளைத் தலை கீழாகத் திருப்பிப் போட்டன.

“A Genetic Chronology for the Indian Subcontinent points to heavily Sex – Biased Dispersal” என்ற தலைப்பிலான ஆய்வுகள், 16 உயிரியல் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது, பேராசிரியர் மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான ஹட்டர்பீல்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த, “ஆரியக் குடியேற்றத்தில் பெருமளவில் ஆண்களே பங்குபெற்றார்கள்” என்கிற தீர்க்கமான முடிவே இந்தத் தலைகீழ் மாற்றங்களை உருவாக்கியது.

719235ஜீன் பரவலாக்கம் ஒரு எளிய பகுப்பு :
R1a———-Europe
R1a———-Central & South Asia
R1a —– Z-282 (Only Europe) ——Z-93 (Only Central & South Asia)

இந்த வரிசைக்கிரமத்தில் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், R1a ——-ஆரிய இனக்குழுப் பரவலுக்கு மாதிரியாகப் பெறப்பட்ட உயிர் மூலக்கூறு, Z-93 என்கிற பகுப்பாக 5800 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் பரவலாக்கம் பெறுகிறது, அதன் மூல வேரான R1a —– Z-282 வழியாகப் பகுப்படைந்து ஐரோப்பாவில் மட்டும் நிலைகொள்கிறது, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா தவிர்த்த எந்த நிலப்பரப்பு வரலாற்றிலும் R1a வின் மூலமோ, பகுப்புகளோ அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் Dr. அண்டர் ஹில்லின்ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் தெளிவான செய்தி.

முன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின், ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் Dr. டேவிட் ரீச், 2009 இல் வெளியிட்ட “Reconstructing Indian Population History” என்கிற ஆய்வு ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியது. ANI – Ancestral North Indians, எனக்குறிக்கப்படும், வட இந்தியப் பழங்குடிகள் மத்திய கிழக்குத் தரைப்பகுதி, மத்திய ஆசிய பகுதி மற்றும் ஐரோப்பிய ஜீன்களோடு நெருங்கிய தொடர்புடையது என்றும், ASI – Ancestral South Indians எனக்குறிக்கப்படும் தென்னிந்தியப் பழங்குடிகள் இந்தியாவின் தனித்துவமான ஜீன்களை உள்ளடக்கியவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டது.

உயிரியலில் மிகத் துல்லியமாக இனக்குழு வரலாற்று நகர்வுகளை முடிவு செய்யும் DNA – Mapping ஆய்வுகளில் உள்ளீடு செய்யப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு, ஸ்டேன்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் பீட்டர் அண்டர் ஹில் தலைமையில் 32 துறை சார் அறிஞர்கள் R1a ஜீன்கள் குறித்த 16,244 ஆண் மாதிரிகளை 126 வெவ்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள், முடிவுகள் இரண்டு துணைக்குழுக்களைக் கண்டறிந்தது, (R1a ஜீன் மாதிரி என்பது ஆரியக் குடியேற்றத்துக்குப் பிறகான இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 17.5 % பரவலாகி இருக்கிற மாதிரி), R1a முதன்மை ஜீன்கள் ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலை ஜீன்களான Z-93 – மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் கண்டறியப்பட்டன.

R1a வின் முதன்மைப் பகுப்பு ஜீனான Z-282, 98 % ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலைப் பகுப்பு ஜீனான Z-92, 98.4 % மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் கண்டறியப்பட்டது, R1a வின் இந்தப் பகுப்பு 5800 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. R1a – வின் பரவலாக்கம் ஐரோப்பா முழுவதும் மட்டுமன்றி மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் நிகழ்ந்திருக்கிறது, அதே போல R1a வின் முதல் நிலைப் பகுப்பான Z-282 வின் பரவலாக்கம் ஐரோப்பாவில் மட்டும் கண்டறியப்பட்டது, இரண்டாம் நிலை இணை ஜீனான Z-93 இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலைத் தொடர்களில் கண்டறியப்பட்டது.

ஆரியக் குடியேற்றம் கட்டுக்கதை என்று சொன்னவர்கள், பல்வேறு மாறுபட்ட உயிரியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், குடியேற்ற நிகழ்வுகள் குறித்த உறுதியான தரவுகளை முன்வைக்காததை ஒரு மிகப்பெரிய சான்றாகக் காட்ட முனைந்தார்கள். முதலாவதாக mtDNA மூலமாக X க்ரோமோசோம்களை வைத்துப் பெறப்பட்ட முடிவுகளான, “12,500 ஆண்டுகள் வரை இந்தியத் துணைக்கண்டத்தில் மிகப்பெரிய அளவிலான புதிய ஜீன் பரவலாக்கம் நிகழவில்லை” என்ற வாதம், தற்போதைய Y க்ரோமோசோம்களின் மாதிரிகளை மையமாக வைத்துப் பெறப்பட்ட முடிவுகளால் தகர்க்கப்படுகிறது, 4500 ஆண்டுகளுக்குள் 17.5 % R1a ஜீன்களின் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது. X முடிவுகள் ஏன் தோல்வியைத் தழுவின என்றால், ஆரியக் குடியேற்றத்தை முன்னின்று நடத்தியது ஆண்கள் என்கிற ஆய்வு முடிவுகள், ஆக X முடிவுகள் அந்தக் குடியேற்ற நிகழ்வுகளை எதிரொலிக்க முடியாது.

Harrapan+cities+had+a+strong+central+government+which+led+to+organized+cities..jpg

இரண்டாவதாக “ஆரியக் குடியேற்றம் பொய்” என்று சொல்பவர்களால் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது, R1a வின் இருப்பும், வீரியமும் இந்தியத் துணைக்கண்டத்தில் தீவிரமாக நிலைகொண்டிருப்பதால் அது இந்தியாவில் உருவாகி ஏனைய பகுதிகளில் பரவலாக்கம் அடைந்திருக்கலாம் என்பது, ஆனால், 2016 இல் வெளியிடப்பட்ட R1a வின் துணைக்குழுக்களைப் பற்றிய உயிர் மூலக்கூறு ஆய்வுகள் நமக்குச் சொல்வது R1a வின் பகுப்பான Z-93 வெறும் 5000 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்டது.

மூன்றாவதாக வைக்கப்படும் “ஆரியக் குடியேற்றத்துக்கு முன்பாகவே, இந்தியத் துணைக்கண்டத்தில் இருவேறு பழங்குடி இனக்குழுக்கள் நிலைபெற்றிருந்தன என்கிற வாதம் வரலாற்று உயிரியல் அறிஞர்களால் கண்டிக்கப்படுகிறது. மனித இனத்தின் இடப்பெயர்வு ஒரு இயல்பான நிகழ்வு, கடந்த 15,000 ஆண்டுகளில் மனித இனம் பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு நிலப்பரப்புகளில் குடியேற்றமடைந்திருக்கிறது, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் எல்லா உயிரியல் தொகுப்பு இனக்குழுக்களை கலப்பின அடையாளங்களோடு தான் வளர்ந்திருக்கிறது, அந்தமான் நிக்கோபாரின் “ஓங்கோ” இனக்குழு மட்டுமே கலப்பற்ற இனமாக இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் அடையாளம் காணப்படுகிறது.

பிறகு எதற்காக “ஆரியக் குடியேற்றம்” குறித்த சமூக, அரசியல் மற்றும் அறிவியல் விவாதங்களில் இத்தனை அக்கறை கொள்ள வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது, ஏனெனில், இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் அரசியலோடு திராவிட நாகரீகத்தின் சுவடுகளும், ஆரியக் குடியேற்ற நிகழ்வினால் விளைந்த தாக்கங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயச் சிந்தனைகள் ஆரியக் குடியேற்ற நிகழ்வின் மானுட நீதியற்ற பல்வேறு நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த காலகட்டத்தில், தாங்கள் ஆரியர்கள், அறிவிற்சிறந்தவர்கள், வரலாற்றுப் பெருமையும், பிறப்புத் தகுதியும் கொண்ட உயர் மானுடக் குழுவினர் என்று எக்காளமிட்டனர்.

பின்பு, குடியேற்றக் குழுவின், சமூக நீதியற்ற, மானுட மேன்மைக்கு எதிரான பல்வேறு புரட்டுக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இல்லை, “நாங்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும், இந்திய பழங்குடிகள்” என்றும் நிறுவ முயன்றார்கள். சக மனிதனின் வாழ்வையும், உரிமைகளையும் ஒடுக்கிப், பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு முரணான கூற்றை நிறுவி அதன் மூலம் , உழைப்புச் சுரண்டல், அரசியல் அதிகாரக் கைப்பற்றல், சமூக அநீதியிழைத்தல், கலை மற்றும் பண்பாட்டு இருட்டடிப்பு என்று நவீன மானுட நாகரீகத்துக்கு எதிரான மனநிலையைப் பரவலாக்கி அதையே உண்மை என்று நம்ப வைக்கிற வேலையை இந்த அடிப்படை இனக்குழுவாதிகள் தீவிரமாகி செய்வதாலேயே நாம் குடியேற்ற வரலாற்றில் அறிவியல் உண்மைகளைத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.

இன்று தம்மைப் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிற, ஆரியன் என்று பெருமையாகப் பேசுகிற பார்ப்பனீயத்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது, இந்த அரசியல் அதிகாரம், மதம், சாதி, புனிதப் பெருமைகள், முதலாளித்துவ – ஊடக முட்டுக் கொடுப்பு என்று பல்வேறு காரணிகளால் பெறப்பட்டது, தொடர்ந்து உழைப்புச் சுரண்டல் செய்து வர்ண அமைப்பை அதிகார பூர்வமாக்கி இந்தியத் துணைக்கண்டத்தை உலகின் நாகரிக வளர்ச்சிப் பயணத்திலிருந்து விலக்கமடைய வைக்கும் ஒரு பின்னடைவாகவே இந்தப் பார்ப்பனீயத்தின் அரசியல் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

உழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை முதலாளிகளிடம் விற்று, எளிய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி, அவசர அலங்கோலத் திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்வை அலைக்கழிக்கும் காவிகளின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ளவும், மனித நேயமற்ற சமூக நீதிக்கு எதிரான அவர்களின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் நாம் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முனைவது வெறுப்பைக் கக்கி அவர்களோடு போர் புரிய அல்ல, மாறாக இன்னும் அழகிய உலகத்தை உருவாக்கும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, “சமூக நீதிக்கான இந்தப் பழங்குடிகளின் போராட்டம், நாகரீக உலகின் மேன்மைக்கான தன்னியல்பான இயக்கம், இதன் பலன் ஒட்டுமொத்த மானுட குலத்தின் மீது அணையாத விளக்காய் சுடர் விட்டெரியும்”.

Reference: “How Genetic is settling the Aryan Migration Debate” by Tony Joseph’s (Former Editor Business World) Article on The Hindu dated 16th June 2017.

**************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 10, 2016

மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 10

Descifran-el-legado-de-los-genes-neandertales-en-los-humanos-actuales_image_380

ஆரியக் குடியேற்றம் அல்லது படையெடுப்பு குறித்த பல்வேறு விவாதங்கள் இன்றளவும் தொடர்ந்து நடைபெறுகிறது, தமிழ்ச் சமூகத்தில் ஆரிய திராவிடக் கோட்பாடுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அரசியல் வெற்றிகரமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மேன்மைப்படுத்தியது, தந்தை பெரியார் திராவிட அரசியல் கோட்பாட்டை முன்னிறுத்தியது, ஆரியம் என்கிற இனக்குழுப் பெயரில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் மயமாக்களைத்தான் என்பதை அவரே பல முறை விளக்கி இருக்கிறார். அறிவியல் வழியிலான விவாதங்களில் இனக்குழு வரலாற்றை அணுகும் போது ஒரு எளிய உண்மையை நாம் திரும்பாத திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. அது, "ஆரியம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு இனவெறிக்கு குறியீடு, அது எளிய உழைக்கும் மக்களின் வாழ்வியலை மதம் மற்றும் பிறப்பின் வழியாகச் சுரண்ட நினைக்கும் மேட்டிமைக் கூட்டத்தின் அடையாளம்".

பெரியார் ஆரிய திராவிடக் கோட்பாட்டை மையமாக வைத்துத் தனது அரசியலை முன்னெடுத்தபோது அவர் தெளிவாகப் பல இடங்களில் சொல்லி இருப்பதைப் போல இந்த கோட்பாட்டுப் போர் மானுட வரலாற்றின் க்ரோமோசோம்களையும், உயிரியல் வழித் தோற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகள், தொன்று தொட்டுக் கடைபிடிக்கப் படும் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

மானுட வரலாற்றில் அறிவியலும், அதன் விளைபொருட்களும் உயிரியல் வழியான இனக்குழுக் கோட்பாடுகளுக்கும், அகப்பொருள் சிந்தனைகளுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறது, நிலவியல் சார்ந்த உயிரியல் கட்டமைப்பு மானுட உயிர் வரலாற்றில் தகவமைப்பு தொடர்புடையது என்று உயிரியல் வல்லுநர்கள் ஆய்வுகளால் உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆனாலும், ஏன், இங்கே நாம் ஆரியம் – திராவிடம் போன்ற உள்ளீடுகளை முன்வைத்துத் தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது? என்றொரு கேள்வி இயல்பாக எழக்கூடும்.

ஆரியம் அறிவியல் வழியாக முற்றிலும் ஒரு பொய்யான கோட்பாடாகவே இருந்து விட்டுப் போகட்டும், அது குறித்து நமக்கு கவலை இல்லை, ஆரியப் படையெடுப்பு என்கிற ஒரு கோட்பாடு முற்றிலும் கற்பனையாகவே இருந்து விட்டுப் போகட்டும், அது குறித்து நமக்குத் பெரிய அளவில் கவலை இல்லை, ஆனால், தொடர்ந்து திராவிட இயக்க அரசியலில் குறிக்கப்படுகிற ஆரியம் என்கிற கோட்பாடு ஒரு குறியீடு, எளிய உழைக்கும் மக்களின் வாழ்வியலைச் சிதைக்கும், அவர்களின் பிறப்பைக் கேலி செய்யும் ஒரு மேட்டிமைக் கோட்ப்பாட்டின் வடிவமாகவே இங்கே ஆரியம் மேற்கோள் காட்டப்படுகிறது, ஆரியம் என்கிற இந்த அரசியல் இயங்கியல் இங்கே, ஒரு மதத்தைக் வளர்த்தெடுத்தது, அந்த மதத்தின் பெயரில் எழுதப்பட்ட நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட சட்டங்கள் நான்கு வர்ணங்களைக் கொண்டு சேர்த்தது, அரசவை துவங்கி அரச மரங்கள் வரையில் பிறப்பால் உயர்ந்த பார்ப்பனன் என்றும் பிறப்பால் தாழ்ந்த பஞ்சமன் என்றும் கிளை பரப்பியது. கடந்த பல நூற்றாண்டுகளில் இந்தப் புரட்டு மானுட வாழ்க்கையை, மானுட மனத்தை ஆகப்பெரும் அழுத்தங்களை நோக்கித் தள்ளியது, இந்தப் பிறவிக் கோட்பாடே இந்தக் கணம் வரை இந்திய தேசத்தின் பள்ளிக்கு கூடங்களில் ஆசிரியர்களால் நிகழ்த்தப்படும் சாதிய வன்மம் முதற்கொண்டு இஸ்லாமியர்களின் மீது வெறுப்பு வரையில் ஒரு தொடர் வன்முறையாக நீண்டு பரவுகிறது. இத்தகைய கோட்பாட்டு வன்முறையின் குறியீடாகத்தான் ஆரியம் என்கிற ஒற்றைச் சொல்லை நாம் இங்கே கையாள்கிறோம்.

நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மானுடத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது, மதம் என்கிற கோட்பாட்டின் தலைமைப் பொறுப்பில் கடவுளை மனிதன் அமர்த்துகிறான், அந்தக் கடவுளின் இருப்பிடமாகக் கோவில் வடிவமைக்கப்படுகிறது, கோவிலின் புத்தகங்கள் மனிதனின் சமூக நிலைப்பாடுகளை வரிசைப்படுத்துகின்றன, எடுத்துக்காட்டாக இந்து மதத்தின் மனு தர்மமும், கீதையும் வர்ணங்களை வரிசைப்படுத்தி அவற்றை மனிதனின் தலையில் ஏற்றுகின்றன, கோவிலின் கருவறையில் நுழையத் தகுதியானவன், தகுதியற்றவன் என்கிற வேறுபாடுகளை இந்த மத நம்பிக்கை எளிய மனிதர்களையும் நம்ப வைக்கிறது. குழந்தைகளின் ஆழ் மனதை கடும் அழுத்தத்துக்கு உள்ளாகும் மடமையை இந்த மத நம்பிக்கைகளே உள்ளீடு செய்கின்றன.

சமூகத்தின் அவலமான சாதிக் கட்டமைப்புகளை உருவாக்கிய முதல் அமைப்பு மதம், இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய தேசத்தில் மதத்தின் பெயரால் உழைப்புச் சுரண்டல் துவங்கி அரசியல் அதிகாரம் வரையில் ஊடுருவிச் செல்லும் மறைமுகச் சுரண்டல் அமைப்பே மதம், மதம் குறித்த அறிவியல் பூர்வமான சிந்தனைத் திறப்புகளை உருவாக்கும் கல்வி முறை தொடர்ந்து இங்கே மறுக்கப்பட்டு வருகிறது, மாறாக அமைப்பு ரீதியாக மதத்தின் கட்டுமானங்களை உறுதி செய்யும் எல்லா வேலைகளையும் பார்ப்பனீயச் சிந்தனை கொண்ட அரசுகளும், அதன் உறுப்புகளும் தொடர்ந்து நிலை நாட்டி வருகின்றன.

மதங்களின் வரலாறும், மதம் மானுடத்தின் ஆழ்மனதில் நிகழ்த்தும் நம்பிக்கை சார்ந்த கற்பிதங்களும் இந்தியக் கல்வி முறையில் உடனடியாகக் கற்பிக்கப்பட வேண்டும், மதம் உருவாக்கிய சாதிக் கட்டமைப்பின் வேர்கள் அறிவியல் வழியாக நமது மாணவர்களுக்கு ஊட்டப்பட்ட வேண்டும், மதம் இந்திய தேசத்தில் உருவாக்கி இருக்கும் நம்பிக்கை சார்ந்த கற்பிதங்களை அழிக்காமல் சாதியையோ, வர்ண பேதங்களையோ நம்மால் ஒழிக்கவே இயலாது. மதம் குறித்த அடிப்படை நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் சிந்தனையே இல்லாத ஒரு சமூகத்தில் சாதி ஒழிப்பு குறித்த விளம்பரங்களால் எந்தப் பயனும் உருவாகி விடப் போவதில்லை.

Best Periyar Quotes

காலம் காலமாக நமது குழந்தைகள் மதத்தின் பெயரால், இனக்குழுக்களின் பெயரால் அறிவில் தாழ்ந்தவர்கள், ஒழுக்கத்திலும், பல்வேறு ஆற்றல்களிலும் திறன் குறைந்தவர்கள் என்கிற ஒரு கற்பித்தத்தால் மனச் சிதைவுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள், ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே மாதிரியான உயிரியல் தகுதிகளோடு பிறக்கும் குழந்தைகளில் ஒன்று உயர் குலத்தில் பிறந்ததென்றும், மற்றொன்று கீழானது என்றும் சான்றளிக்கப்படுகிறது, இந்த வேறுபாடு தொடர்ந்து மதத்தின் பெயரால் நிலை நிறுத்தப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத இந்த அழுத்தமான வேறுபாட்டை பல்வேறு சமூக நிலைப்பாடுகளில் எதிர் கொள்ளும் குழந்தைகள் தங்கள் மேன்மையான வாழ்க்கைப் பயணத்தில் இந்தத் தடையை உடைக்கும் வலிமை கொண்டவர்களாக மாற்றுவதற்குக் கல்வியும், வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்கிற உயர் நோக்கிலேயே இட ஒதுக்கீட்டு முறையை அண்ணல் அம்பேத்கார் நடைமுறைப்படுத்த முனைந்தார், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் தடையாக இருக்கும் சமூகக் காரணிகளை மையமாக வைத்தே இந்திய அரசியலமைப்பில் இரட்டை வாக்குரிமை முறையை அறிமுகப்படுத்த முயன்றார்.

தமிழ்ச் சமூகத்தில் இந்தத் தடைகளை உடைக்கும் முதல் படியாகவே தந்தை பெரியார் ஆரியம் – திராவிடம் என்கிற கோட்பாட்டு அரசியல் நடத்தினார், அது மரபு வழியானது இல்லை என்று அவரே தனது பல்வேறு உரைகளிலிலும், எழுத்துக்களிலும் விளக்கினார். ஆனாலும், அவர் மரபு வழி இனக்குழு வாதத்தை வைத்து அரசியல் செய்தார் என்கிற புரட்டு இன்றளவும் பார்ப்பனீயத்தால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

இன்றைய நவீன உலகின் மானுடம் அறிவியல் வழியாக ஒரு புள்ளியில் இருந்து பிரிந்து பல்வேறு நிலவியல் மற்றும் உயிரியல் சார்ந்த கிளைகளாகப் பரவியது என்பதுதான் நிலைத்த உண்மை, அறிவும், திறன்களும் எந்த ஒரு மானுடப் பிரிவிலும் பிறப்பால் கிடைத்து விடவில்லை, சூழலும், வாய்ப்புகளும், கல்வியும், பொருளாதாரமும் மானுடத்தின் அறிவையும், திறன்களையும் நிர்ணயம் செய்யும் காரணிகள் என்பது அறிவியல் சார்ந்து சிந்திக்கிற எந்த ஒரு நவீன மனிதனுக்கும் புலப்படும்.

ஆரியம் அல்லது பார்ப்பனீயம் என்பது ஒரு இனவெறிக் குறியீடு, அது இன்றைய இந்தியாவின் அரசியல், பொருளாதாரம். கல்வி, வேலை வாய்ப்பு என்று எல்லா நிலைகளிலும் தனது கிளைகளை பரப்பி மதத்தின் பெயரால் செய்த வேலைகளை இப்போது தேசியத்தின் பெயரால் முன்னெடுக்க விரும்புகிறது. தனது உணவுப் பழக்கத்தை மிக உயர்ந்ததென்று சொல்லி உழைக்கும் எளிய மனிதனின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது, மதம் சார்ந்த அரசியலை உணர்வுக் குவியலாய் மாற்றி இந்து – முஸ்லீம் பிரிவினையைத் தூண்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உணவில் கைவைத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது.

இந்திய சமூகத்தில் வேரூன்றி இருக்கும் இந்த ஆரிய இனக்குழு அரசியலை உடைத்து உயர் மானுட சமூகத்தின் எல்லைகளுக்குள் நாம் நுழைய வேண்டுமானால், திராவிட இயக்க சிந்தனைகளால் உரமூட்டப்பட்ட நமது அரசியல் இயக்கங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து மதம் மற்றும் சாதி குறித்த அறிவியல் சிந்தனைகள் அடங்கிய கல்வித் திட்டத்தை நோக்கி நகர வேண்டும், அதன் முதல் படியாக மதம் சாதி குறித்த உள்ளார்ந்த அறிவியல் பயிலரங்குகளையும், விழிப்புணர்வையும் உருவாக்க முன்வர வேண்டும்.

இறுதியாகப், பிறவியிலேயே நான் தகுதி பெற்றவன் என்று சொல்கிற எவனும் நேர்மையாக இந்த உலகை அணுகும் மனநிலையில் இல்லாத மனஅழுத்தம் கொண்டவன், அத்தனை எளிதாக அவனால் பிறவித் தகுதியை விட்டு விலகி ஒரு வெளிப்படையான போட்டியைச் சந்திக்க இயலாது. ஆகவே அவனோடு மல்லுக்கட்டும் முட்டாள்தனமான விளையாட்டை நம்மால் செய்ய முடியாது.

மாறாக நமது குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் திறன்களையும், அழகையும் போற்றும் கலையை நாம் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நல்ல நூல்களை வாசிக்கவும், நல்ல மனிதர்களோடு அவர்கள் உரையாடும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுங்கள். சிறந்த நண்பர்களை உருவாக்கிக் கொடுத்து தேவைகளுக்கான வாழ்க்கை முறையை அறிமுகம் செய்யுங்கள். வாழ்க்கையின் கடுமையான சூழல்களை அவர்கள் எதிர் கொள்ளும் துணிவையும், வழிமுறைகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்து நமது குழந்தைகள் முன்னேற ஒழுக்கமான வாழ்க்கை முறை ஒரு மிக முக்கியமான தேவை, தரமான, சிறந்த உணவு முறைகளையும், உடற்பயிற்சி முறைகளையும் அவர்கள் கற்றுக் கொள்ள வழி வகை செய்யுங்கள், தாங்கள் சிறந்தவர்கள் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குங்கள், எந்த நிலையிலும் தம்மை விடப் பிறப்பால் உயர்ந்த ஒருவன் உண்டென்று அவர்களை நம்ப விடாதீர்கள். அந்த மனஅழுத்தம் அவர்களை அணுக விடாமல் அவர்களைப் பாதுகாப்பது மிக மிக அவசியமான ஒன்று.

உரிமைகளுக்காகப் போராடும் பழக்கத்தை வளர்ப்பதும், தடையின்றித் தங்கள் அரசியல் பிரதிநிதிகளை சந்திப்பதும் அவர்களின் உரிமை என்கிற அடிப்படை அரசியலை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள், அவர்களின் உரிமைகளுக்காக நீங்கள் குரல் கொடுப்பதை நிறுத்தி அது அவரவர் வேலை என்று உணர்ச்சி செய்யுங்கள், பள்ளிகளில் துவங்கி, வேலையிடங்கள் வரை அவர்களின் உரிமைகளுக்காக அவர்கள் பேசும் வலிமையை அவர்களுக்கு வழங்குங்கள். உரிமைக்கான போராட்டங்களும், திட்டங்களும் தான் இன்றைய நவீன உலகில் பல்வேறு வேறுபாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஆயுதங்கள், ஆகவே, உணர்ச்சிப் பெருக்கோடு உங்கள் உரிமையைப் போராடி வெல்லுங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

மூர்க்கத்தனமாகப் போராடுவதும், திட்டமிட்டுப் போராடுவதும் வெவ்வேறானவை, மூர்க்கமான போராட்டங்கள் இழப்புகளை வழங்கக் கூடும், தெளிவான திட்டங்களோடு உங்களால் என்ன செய்ய முடியும் என்கிற உள்ளார்ந்த சீராய்வுகளை மேற்கொள்ளுங்கள். தனியாகப் போராடுவதற்கும், குழுக்களாய், இயக்கங்களாய் நின்று போராடுவதற்குமான வேறுபாடு மிக முக்கியமானது, நண்பர்களையும், குடும்பத்தினரையும் இணைத்துக் கொள்ளுங்கள், ஒற்றைச் சாதியையும் மதத்தையும் உயர்த்திப் பிடிக்கும் எந்த மனிதரின் கருத்தையும் உடனடியாக எதிர் கொண்டு அவர் சொல்வது உண்மைக்கு மாறானது, குற்றச் செயல் என்று முகத்திற்கு எதிரே சொல்லும் வலிமையைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

n5-1080x420

காலம் காலமாய் எந்த மத நம்பிக்கைகளை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அந்த நம்பிக்கைகள் தான் நம்மை இன்னும் அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்கிற அடிப்படை உண்மையை உணர்ந்து அதிலிருந்து வெளியேறும் வலிமையை அவர்களுக்கு வழங்குங்கள். மானுட வாழ்க்கை ஒப்பற்றது, புவிப்பந்தில் வாழும் வாய்ப்பு உயிர்களுக்குக் கிடைத்திருக்கிற இந்த அரிய  வாய்ப்பை இனக்குழு வாதங்களோடும், மதக்குழு வாதங்களோடும், சாதிய, பாலின வேறுபாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் வீணாக்குவது மடமைத்தனம். இன்னும் அழகான உலகை உருவாக்குவது வேறுபாடுகளைக் களைவதன் மூலமாகவே நிகழ்த்தப்படும்.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, "நமது இந்தப் போராட்டம், பொருளுக்கானது அல்ல, அதிகாரத்துக்கானதல்ல, மானுட குலத்தின் மேன்மைக்கானது".

 

*******************

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 13, 2015

ஜி ஹே பார்க்…..

JiHaeMusicJournal0512

"சைக்கிளில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்பவனாகவே எனது வாழ்க்கை தொடராது", என்கிற மன எழுச்சியை எனக்கு "ஜி ஹே பார்க்" கொடுத்தார் என்றால் சிரிப்பீர்கள், வெளிறிப் போன சில சட்டைகளும், எந்த நேரத்திலும் தரைகளைத் தொட்டுப் பார்த்துவிடும் நிலையில் இருந்த பழைய காலணியும், மிச்சமிருந்த கொஞ்ச நம்பிக்கைகளும் தவிர வேறேதுமில்லாத நாட்களில் காலணியை விட நம்பிக்கை வேகமாகத் தேய்ந்து விடும் போலிருந்த காலம், "டக் யூங்" என்கிற மும்பையின் வால்கேஸ்வரில் வசித்த ஒரு கொரிய முதலாளி ஒரு கிறிஸ்துமஸ் நாளிரவில் "ஜி ஹே பார்க்" கின் இசைத்தட்டு ஒன்றைப் பரிசளித்தார்.

பசியில் காதடைத்துப் படுத்துக் கிடந்த அந்த இரவில் அவரது வயலின் கம்பிகளில் இருந்து நம்பிக்கையின் கற்றைகளை எனக்குள் செலுத்தினார். முதன்முதலில் "ஜி ஹே பார்க்"கின் இசைத் தொகுப்பைக் கேட்டபோது எனக்கு வயது 24, அவருக்கு வயது 14, ஆனால், அவர் உருவாக்கியதும், நினைவுபடுத்தியதும், பல்லாயிரமாண்டு கால மானுட வரலாற்றின் ஒப்பற்ற இசைக்குறிப்புகள். "ஜி ஹே பார்க்" கின் காற்றைக் கலைக்கும் ஒவ்வொரு துளி இசைக்குறிப்பும் வாழ்க்கையின் கணங்களை அளவற்ற வியப்பில் ஆழ்த்தி எனது நம்பிக்கையின் வேர்களை இன்னும் ஆழமாக இந்தப் புவிப் பந்தில் ஊன்றச் செய்தது. நெடு நாட்களுக்குப் பிறகு நேற்றைய இரவில் அவரது வயலின் இசையைக் கேட்டேன்.

"ஜி ஹே பார்க்"கின் வயலினை கேட்கும் போது எனக்கு என்ன நிகழ்கிறது என்றொரு கேள்வியை நேற்று இரவு படுக்கையில் சாய்வதற்கு முன்பாக என்னிடமே கேட்டேன், என்ன நிகழ்கிறது?, வயலினின் கம்பிகளோடு உரசும் அந்தக் குதிரையின் நீள முடிகளால் உங்கள் இருப்பை உணர்த்தும் நியூரான்களை முதலில் வலிக்காமல் உங்கள் ஹைப்போதலாமஸில் இருந்து பிடுங்கி எறிந்து விடுவார், பிறகு கம்பிகளுக்கும், உரசும் மெல்லிய நாரிழைகளுக்கும் இடையில் அவர் உருவாக்கும் காற்றுச் சங்கிலிகளை உங்கள் காதுகளுக்குள் செலுத்துவார், அதிரும் அந்தக் காற்றுச் சங்கிலிகள் உங்களுக்குள் உண்டாக்கும் மாற்றங்கள் வாழ்க்கையைக் குறித்த உங்கள் எள்ளலை அடித்து நொறுக்கும்.

வாழ்க்கை இத்தனை பிரம்மாண்டமானதா?, வெறும் புலன்களால் வீடுபேறடைய முடியுமா? என்றெல்லாம் உங்களுக்குள் குழப்பத்தை உண்டாக்குவார், பிறகு சலனங்கள் இல்லாத ஒரு இலைக்கும் அதன் மீது படிந்து கிடக்கும் காலைப் பனிக்கும் இடையில் கிடக்கும் அனிச்சையான இடைவெளியைப் போல உங்களை உணர வைப்பார், அப்போது ஒன்று நீங்கள் அவருடைய வயலினாக இருப்பீர்கள் அல்லது அதனுள்ளிருந்து பெருக்கெடுக்கும் இசையாக இருப்பீர்கள், அல்லது அவ்விரண்டாலும் நிரப்பப்பட்ட ஒரு மானுடத் துண்டமாய் மிதப்பீர்கள், நானில் இருந்து நாமுக்கும், நாமில் இருந்து ஏதுமின்மைக்கும் பிறகு ஏதுமின்மையில் இருந்து எல்லாவற்றுக்கும் உங்களை அழைத்துப் போவார்.

இருள் சூழ்ந்திருக்கும் எல்லைகளற்ற அகண்ட வெளிக்குள் உங்களைத் தள்ளி உங்கள் மனக் கதவுகளில் ஏதும் நுழைய முடியாதபடி அடைத்து விடுவார், பிறகு திரிக்கும் விளக்குக்கும் இடையில் தவிக்கும், தத்தளிக்கும் ஒளிப்பிழம்புகளை ஒவ்வொன்றாய் ஏற்றுவார், நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் முடிவுறாத விளக்கொளிப் பிழம்புகளை அவர் ஏற்றி முடிக்கும் ஒரு கணத்தில் உங்கள் முன்னாள் ஒரு மிக உயர்ந்த பனி படர்ந்த மலைச்சிகரம் விளக்குகளின் வெளிச்சத்தில் தகதகக்கும், அதன் பாதைகளில் மெல்ல ஒலிக்கும் சின்னச் சின்ன வெண்கல மனியோசைகளை அவர் உங்கள் உடலின் செல்களில் ஏற்றுவார், அப்போது காதுகள் மூச்சு விடப் பழகும், நாசிகளில் நீங்கள் இசை கேட்பீர்கள்.

Ji – Hae Park’s strings from Dokho Island

நீங்கள் வீட்டிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு, ஒரு மிகப்பெரிய  பலூனில் அடைக்கப்பட்டு உலகின் புராதான நகரங்களின், நதிக்கரைகளின், மேகங்களின் வழியாக உயர உயரப் பறப்பீர்கள், பிறகு அவரது எஞ்சிய இசையின் நினைவுகளைப் பற்றிக் கொண்டு வீடு திரும்புங்கள்.

 

**************

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 12, 2015

"தி வாக்" (The Walk)" – மானுடக் கனவுகளின் மகத்தான பயணம்.

வாழ்க்கையைக் குறித்த சில முன்முடிவுகளை மாற்றும் வல்லமை கலைக்கு இருக்கிறது,  மானுட வாழ்வின் இயல்பான இருத்தலுக்கான போராட்டத்தைக் கொஞ்சமேனும் சுவாரசியம் மிகுந்த ஒரு பயணமாக மாற்றும் ஆற்றல் உறுதியாக ஒரு நூலுக்கோ ஒரு திரைப்படத்துக்கோ உண்டு என்று நான் நம்புகிறேன், பான்ட்ரி (Fandry) திரைப்படத்தைப் பார்த்த போது ஒரு அறச்சீற்றமும், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் சார்பில் ஆதிக்க உணர்வின் தலையில் கல்லெறிந்ததைப் போல ஒரு நிம்மதியும் உருவானது,  அதற்குப் பிறகு ஒரு விபத்தைப் போல இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு, கயிற்றின் மேலே நடக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை.

நியூயார்க் நகரத்தின் மன்ஹட்டனின் இரட்டைக் கோபுரம் பின்புலத்தில் விரிய "சுதந்திர தேவி" சிலையின் உச்சியில் நின்று பிலிப் தனது கதையைச் சொல்லத் துவங்கும் காட்சியிலேயே ஒரு எதிர்பார்ப்பையும், வியப்பையும் உருவாக்குகிறார் இயக்குனர். "தி வாக்" (The Walk), பாரிஸ் நகரத்தில் வசிக்கும் ஒரு பைலட்டின் மகன் "பிலிப்" வழக்கமான தந்தையின் கனவுகளைச் சுமக்க மறுத்துவிட்டு சர்க்கஸ் நிகழ்வுகளின் மீது கவனம் செலுத்துகிறான், "பாப்பா ரூடி" என்கிற குடும்பம் செய்கிற சாகசங்களையும், கயிற்றின் மீது நடக்கும் சர்க்கஸ் காட்சிகளையும் பிலிப் தொடர்ந்து தனது இளம் வயதில் பார்க்கிறான், பிறகு கயிற்றின் மீதி நடக்கும் கலையின் மீது அவனுக்கு அளப்பரிய ஈர்ப்பு உருவாகிறது, வீட்டின் பின்புறம் மரங்களின் இடையே கயிற்றைக் கட்டி நடந்து பழகுகிறான், ஆர்வம் அதிகமாகி "பாப்பா ரூடி" சாகசம் செய்யும் சர்க்கஸ் கூடாரத்துக்கு இரவு நேரத்தில் சென்று கயிற்றின் மீது நடந்து பழக முயற்சி செய்யும்போது பிடிபடுகிறான் பிலிப், பாப்பா ரூடி அவனது ஆர்வத்தையும், திறன்களையும் கண்டு வியந்து கயிற்றின் மீது நடக்கும் கலையின் நுட்பங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.

பிலிப்பின் தந்தைக்கு தனது மகன் ஒரு சர்க்கஸ் கோமாளியைப் போலக் கயிற்றின் மீது நடப்பது கண்டு எரிச்சல், ஒரு கட்டத்தில் பிலிப்பை வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார், பிலிப் தெருவோரங்களில் கயிற்றைக் கட்டி வித்தை காட்டிப் பிழைக்கிறார், பாரிஸ் நகரின் தெருவோரத் திண்டு ஒன்றில் மலர்களுக்கு நடுவே வயலின் இசைத்தபடி அமர்ந்திருக்கும் ஆனியைச் சந்திக்கும் பிலிப் அவரோடு நட்புக் கொள்கிறார், விளக்குத் தூண்கள், மலர்ப் பாத்திகள், நிழற்குடைகளில் அமர்ந்து தேநீர் குடிக்கும் இளம் காதலர்கள், அழகான, அமைதியான அந்த பாரிஸ் நகரத்தின் வீதி மனதுக்கு நெருக்கமாய் இருக்கிறது, மழை நமக்குள் பெய்கிறது, ஒரு நிழற்குடையைப் பெயர்த்து ஆனிக்காக எடுத்துச் செல்லும் பிலிப்பின் மனமும், பிலிப்பின் கனவுகளை அடைய ஆனி உதவுவதாகச் சொல்லும் தருணங்களும் இயல்பானவை மட்டுமல்ல, மனதுக்கு நெருக்கமான மானுட உணர்வுகளைத் தூண்டும் காட்சிப் படிமங்கள்.

Rober Zemeckis (The Director)

robert-zemeckis-might-direct-wizard-of-oz3

வரலாற்றுச் சிறப்பு மிக்க "நோட்ரே டேம்" கோபுரங்களின் இடையே கயிற்றைக் கட்டி நடக்கிறார் பிலிப், பின்பொருநாள் நியூயார்க் நகரின் மன்ஹட்டன் இரட்டைக் கோபுரங்களை ஒரு வார இதழில் பார்க்கிறார், அந்த இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே கயிற்றைக் கட்டி நடந்து விட்டால், "உலகின் மிகச் சிறந்த கயிற்றின் மீது நடக்கும் கலைஞனாக மாறி விடுவேன்" என்று பிலிப் நம்புகிறார், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். பிலிப் கயிற்றின் மீது நடப்பதை ஒரு வித்தையாகவோ, பொருளீட்டும் தொழிலாகவோ கருதவில்லை, மாறாக கயிற்றின் மீது நடப்பதை ஒரு அற்புதக் கலையாகவே தனக்குள் உணர்கிறார், அப்படிச் செய்வதை அவர் ஒருபோதும் ஒரு இழிவான செயல் என்று கருதவில்லை, "பாப்பா ரூடி" பார்வையாளர்களுக்கு எப்படி வணக்கம் சொல்வது என்று பிலிப்புக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சியில் பிலிப் "பார்வையாளர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை, இது எனக்கும் கயிற்றுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்" என்கிறார், "இது பிழைக்கும் வித்தை அல்ல, கலை, எனது இதயத்தில் இருந்து சுரக்கும் கலை வடிவம்" என்று சொல்கிறார், உலகின் ஒவ்வொரு நிகழ்த்துக் கலையில் ஈடுபாடு காட்டும் கலைஞனுக்கும் இருக்கும் செருக்கை, அவனது கலை மனத்தை வெகு நுட்பமாகச் சித்தரிக்கிறார் இயக்குனர் "ராபர்ட் செமெக்கிஸ்".

ஆனால், முதியவரான "பாப்பா ரூடியோ" பார்வையாளர்கள் இல்லாத கலையால் பயனொன்றுமில்லை என்று வாதிடுகிறார், ஆனாலும் பிலிப் காட்டும் ஈடுபாட்டையும், கடின உழைப்பையும் மதிக்கிறார், கயிற்றின் மீது நடக்கும் ஒரு சர்க்கஸ் நிகழ்வின் மீது ஒரு புதிய கலைப் பரிமாணத்தை பிலிப் உண்டாக்கி இருப்பதாக நம்புகிறார். எந்த ஒரு செயலையும், தொழிலையும் மனிதனின் மனம் உன்னதமான ஒரு கலையாகவோ, படைப்பாகவோ மாற்றக் கூடிய வல்லமை கொண்டது என்பதை பிலிப் உயிரோட்டமாக வாழ்ந்து காட்டுகிறார், திரையில் தோன்றும் ஒவ்வொரு கணமும் அவரது முகக்குறிப்புகளும், உடல் மொழியும் நிஜமான பிலிப்பின் கனவுகளை நமக்குக் காட்டுகிறது.

ஒரு மானுடத் துண்டத்தின் உயிர்த் தூண்டலும், காதலும், ஈடுபாடும் எப்படி எட்ட முடியாத உயரங்களில் அவனைக் கொண்டு செலுத்துகிறது, எப்படி அவனை காற்றிலும், நீரிலும் நடக்க வைக்கிறது என்று நுட்பமான திரை மொழியால் சொல்கிற இயக்குனர் மனதைக் கொள்ளையடிக்கிறார். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத இயல்பான நண்பர்கள், எப்படி சக மனிதனின் கனவை வாழ்கிறார்கள் என்கிற ஒரு தனிக்கோட்டில் பயணிக்கும் கதையும் "தி வாக்"கில் உண்டு, உயரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஒரு நண்பன் எப்படி உயரத்திலேயே வாழும் நண்பனின் கனவைப் பின்தொடர்கிறான் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றாலும் அது இயக்குனர் "ராபர்ட் செமெக்கிஸ்" மீதான மதிப்பைக் கூட்டுகிறது.

Dariuz Wolski (The Cinemotographer)

dariusz600

ஆனியைத் தனது திட்டத்துக்கான முதல் கூட்டாளி என்று பிலிப் சொன்னாலும், ஆனி பிலிப்பின் மீதும் அவரது கலை மீதும் அளப்பரிய காதல் கொண்டவராயிருக்கிறார், ஒரு கலைஞனின் வாழ்வில் துணையாக வரும் பெண்ணோ /ஆணோ எப்படி அந்தக் கலைஞனின் மன எழுச்சியைப் பாதுகாக்கிறார்கள் என்கிற வெகு நுட்பமான உளவியலை இயக்குனர் பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார், இரட்டைக் கோபுரங்களின் மீது கயிற்றைக் கட்டி நடப்பதற்கு முதல் நாள் இரவில் பல திட்டங்களை பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களின் இடையில் பிலிப்பை சாப்பிடச் சொல்லி ஆனி கொடுக்கும் தட்டில் தான் எத்தனை எத்தனை அன்பும், நேசமும் வழிகிறது. ஆனி, பிலிப் நட்பை வெறும் காதலாக மட்டுமில்லாமல் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிகழும் இடைவிடாத நுட்பமான மனமொழியாக விவரிக்கிறார் இயக்குனர்.

பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பிலிப்பும் அவரது நண்பர்களும் இரட்டைக் கோபுரங்களின் மீது பிலிப் நடப்பதற்கு முதல் நாள் இரவில் நிலை கொள்கிறார்கள், பிலிப்பின் திட்டத்துக்கான எல்லா வேலைகளையும் சட்டவிரோதமாக அதே வேளையில் உணர்வுப்பூர்வமாகவும், இதய சுத்தியோடும் செய்கிறார்கள், திட்டமிட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பிடிக்கிறது பிலிப்பின் கனவுப் பயணம். ஜெப் என்கிற உயரத்துக்கு அஞ்சும் நண்பன் கடைசி நேரத்தில் இரட்டைக் கோபுரத்தின் மீது நின்றபடி நண்பனின் கயிற்றைக் கட்டுகிறான். மறுமுனையில் நின்று "ஜீன் லூயிஸ்" நண்பனின் கனவுகள் வீழ்ந்து விடாமல் இறுக்கப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறான், இறுதிக் காட்சியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் கட்டப்பட்ட முறுக்குக் கயிறு கொஞ்சம் கொஞ்சமாக மேலேறும் போது மானுட நட்பின் வலிமை உயர உயர மேலே எழும்புவதைப் போல அற்புதமான உணர்வாக இருக்கிறது. கீழே நண்பனின் திட்டம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிகழாமல் இருப்பதை நினைத்து வருந்தியபடி நிற்கிறார்கள் பாரியும், ஆனியும்  

ஒருவழியாக பிலிப்பின் இரட்டைக் கோபுரங்களுக்கு இடையிலான கனவுக் கயிறு கட்டி முடிக்கப்படுகிறது, பிலிப்பின் கால்கள் கயிற்றின் மீது நிலை கொள்கிறது, மேகக் கூட்டம் கண்களையும், மறுமுனைக் கோபுரத்தையும் மறைக்க பிலிப்பின் கண்களில் கயிறு ஒரு எல்லைகளற்ற பரப்பில் நீண்டு கிடப்பதைப் போலத் தெரிகிறது, பிலிப் மனதை அமைதியாக்கி கயிற்றுக்கும், ஒரு மிகச் சிறிய மானுட உயிரின் கால்களுக்கும் இடையிலான இடைவிடாத காதலையும் ஈடுபாட்டையும் உயிரூட்டுகிறார், 140 அடி நீளத்தை வானளாவிக் கிடக்கும் இரட்டைக் கோபுரங்களின் ஊடாகக் காற்றில் கடப்பதைப் போல பிலிப் நடந்து கடக்கிறார், காட்சி அனுபவங்களின் மிக அற்புதமான உணர்வை அந்த அற்புதக் கணங்களில் நமக்கு உணர்த்த முயற்சி செய்கிறார் "டேரியுஸ் வோல்ஸ்கி", டேரியுஸ் ஒரு போலந்து நாட்டு ஒளிப்பதிவாளர், "பைரேட்ஸ் ஆப் கரீபியன்ஸ்" திரைப்படத்தைப் பார்த்தவர்கள் உறுதியாக இவரை அறிந்து கொள்ள விரும்பி இருப்பார்கள், செயற்கைத் தன்மையற்ற இயல்பான கோணங்களில் அதே வேளை வெகு நுட்பமாகத் தனது கலைக் கண்களை மூடிக் கொள்ளாமல் படம் முழுக்க ஓடும் இவரது கேமரா, இறுதிக் காட்சிகளிலும் அதே இயல்புத் தன்மையையும், முதிர்ச்சியையும் காட்டி இருப்பது அற்புதம்.

Allan Silverstri (The Musician)

alan-silvestri_jpg

ஒருமுறை கயிற்றைக் கடந்து விட்ட பிலிப் மறுமுனைக்கும் செல்கிறார், பாப்பா ரூடியின் பார்வையாளர்களுக்கான வணக்கத்தை கயிற்றின் நடுவே நின்றபடி செலுத்துகிறார், பிறகு ஒரு கணத்தில் கயிற்றின் மீது படுக்கிறார், 1400 அடி உயர இரட்டைக் கோபுரங்களின் மீது 1974 ஆம் ஆண்டு கயிற்றின் மீது நடந்து கடந்து காட்டிய உண்மையான பிலிப்பின் அசாத்திய மன எழுச்சியையும், கடும் உழைப்பையும், மனித மனதின் விசித்திரமான கனவுகளைத் துரத்தும் உன்னதத்தையும் இவ்வளவு அழகாக யாரும் சொல்லி இருக்க முடியாது, இரட்டைக் கோபுரங்களுக்கு நடுவே ஒரு சின்னஞ்சிறு பறவையைப் போல காற்றின் இசையைக் கேட்டபடி படுத்திருக்கும் பிலிப்பின் கண்களுக்கு மேலே அப்போது ஒரு வெண்ணிறப் பறவை காட்சியளிக்கிறது, உயர உயரப் பறக்கும் பிலிப்பின் கனவு மகுடங்களை அலங்கரிக்கும் ஒரு கோஹினூர் வைரத்தைப் போல காட்சியைச் செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ராபர்ட்.

பிலிப்பின் அற்புதமான  உடல் மொழி, திகைக்க வைக்கும் நடிப்பின் மீதான ஈடுபாடு, காமெராவின் இயல்பான கோணங்கள், மானுடத்தின் அழகான கனவுகள் என்று பல நுட்பமான கூறுகளோடு இணையும் "அல்லேன் சில்வெஸ்ட்ரி" யின் பின்னணி இசை காட்சிகளோடு நம்மைக் கட்டிப் போடுகிற "பெர்பெக்ட்" வகை, கயிற்றின் மீது இறுதிக் காட்சியில் பிலிப் நடக்கத் துவங்கும் போது நாம் கேட்பது பலமுறை இந்தியச் சாலைகளில் மகிழுந்துகள் பின்னோக்கி வரும்போதோ, பொம்மைகளுக்குச் சாவி கொடுத்து முடிக்கும் போதோ கேட்கிற இசை தான், ஆனால், அதனையே ஒரு அற்புதமான இசையனுபவமாக மாற்றிக் இருக்கிறார் அல்லேன்.

Joseph Gordan Levitt (The Replicate)       &      Phillippe Pettit (The Original)

The Walk

சராசரி மனித வாழ்க்கையை விடுத்து ஒரு கணமேனும் உன்னதமான வாழ்க்கை அனுபவங்களை நோக்கியோ, ஒரு அழகிய கனவைத் துரத்தியோ ஓடும் மனம் கொண்ட மனிதரா நீங்கள், கிளம்பி முதல் வேலையாக "தி வாக்" திரைப்படத்தைப் பார்த்து விடுங்கள், ஒருவேளை வாழ்க்கை குறித்த மிகச் சிக்கலான உங்கள் முன்முடிவுகளை இந்தப் படம் மாற்றக் கூடும். "தி வாக்" – வெறும் நடையல்ல, விண்ணை நோக்கிச் செல்லும் மனிதக் கனவுகளின் பயணம்.

 

************

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 8, 2015

பூன……..

zoom_149

போன தடவ வந்தப்பவும் ஊருணிக் கரைக்கு வந்து நின்னேன், நடுவுல சில்லுன்னு படிஞ்சு கிடக்கிற வெங்காயத்தாமரயும், நாலஞ்சு தாமரப் பூவும், கரைல நிக்கிற அரசமரக் காத்தும் ஊரணித் தண்ணிய மெல்ல அசைச்சுக்கிட்டு இருந்துச்சு, மதகுக் கல்லுல பாதி அழிஞ்சு போன "தீபா டெக்ஸ்டைல்ஸ்" விளம்பரம், அதுல காலத் தொங்கவிட்டு ரெண்டு பொடிப்பயலுக உக்காந்து மொட்ட வெயில்ல ஏதோ பேசிட்டு இருந்தாங்கே, அவங்கே என்ன பேசிட்டு இருப்பாங்கேன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்துச்சு, பக்கத்துல போனா அவங்கே ஒலகம் கலஞ்சிரும், தீபாவளிக்கு வாங்கப் போற வெடியப் பத்தியோ, பள்ளிக்கூடத்து வேலில திரியிற சாரப் பாம்பப் பத்தியோ சுவாரசியமா பேசிட்டு இருக்குற பயலுக கிட்டப் போனா மெரண்டு போவாங்கே, எதுத்த கரைல புள்ளையாரு அப்டியே காத்தாட எப்பயும் போலவே உக்காந்திருந்தாரு.

மனசுக்கு ரொம்பவே நெருக்கமான எடம், கிரிக்கெட் விளையாடி முடிஞ்சு முகத்தை கழுவீட்டு அப்டியே கையக் குவிச்சு ரெண்டு மடக்குத் தண்ணி குடிச்சோம்னா பசி பாதி போயிரும், முடி வெட்ட வரும்போது ரெண்டு மூணு பேரு கூட இருந்தா கருப்பையா அண்ணன்கிட்ட சொல்லிட்டு தாமரக் கொட்டை எடுக்குற "தவளக்குஞ்சு" ஐயாவோட கமுத்திப் போட்ட கூடாரப் படக வேடிக்க பாத்துகிட்டே நிக்கிறது ஒரு அலாதியான ஒலகம், அப்பெயெல்லாம் ஒரு நாளைக்கி ரொம்ப நேரம் இருந்துச்சு, லீவுல ஈச்சங்கா புடுங்கித் திங்கப் போறது, மொயல் பாக்கப் போறது, மீன் பிடிக்கப் போறதுன்னு திரிஞ்சு அலஞ்சு வீட்டுக்கு வரும்போது முழுசா ஒரு ராத்திரி மிச்சம் இருக்கும்.

அதே காத்தும் மரமும் தான், ஆனா, மனுசப் பயலுக மனசு மட்டும் மாறிகிட்டே இருக்கு, அப்பயிருந்த கலவையான பாதுகாப்பான உணர்ச்சி இப்ப இல்ல, யாரோ கயித்தக் கட்டி இழுத்துட்டு வந்த மாதிரி இருக்கு, கனமா தொங்கிட்டு இருக்குற அந்த ஆலமரத்து விழுதுல எம்பூட்டு நாள் ஆடி இருப்போம், சிரிப்பும், பாட்டுமா ஒருத்தர ஒருத்தர் முதுகப் புடிச்சுத் தள்ளி விட்டபடி புழுதி படிஞ்ச காலோட அப்ப இருந்த மனசுக்கு இப்ப வயசாயிருச்சு.

அன்னைக்கி நான் பூனயப் பாத்தேன், முழங்காலுக்கு மேலே மடிச்சுக் கட்டின அழுக்கு வேட்டியோட கை ரெண்டுலயும் செவப்புக் கலர் பிளாஸ்டிக் கொடத்தத் தூக்கிட்டு மேலே ஏறிட்டு இருந்தான், அவனிருக்குற பக்கமா மெதுவா நடந்து போயி அவனுக்கு எதுத்த மாதிரி நின்னேன், பக்கத்துல கடந்து போறப்ப லேசா சிரிச்சேன், அவனும் என்னைய பாத்து ஏதோ செஞ்சான், அது சிரிப்பா, இல்ல வேற எதாச்சும் உணர்ச்சியான்னு எனக்குத் தெரியல, ஆனா, பூனயோட கண்ணப் பாக்குறப்ப எல்லாம் எதாச்சும் ஒரு அழிஞ்சு போன மனுஷனோட நெனப்பு மனசுல தடக்குன்னு வந்துட்டுப் போகும்.

அந்த நெனப்பு இன்னிக்கும் வந்துச்சு. பூனயப் பத்தி ஒங்களுக்கு சொல்லணும், பூன எப்போ இங்க வந்தான்?, அவன யாரு கூட்டிட்டு வந்தாங்க? அவனோட ஊரு எது? அவனுக்கு அப்பா அம்மா குடும்பம் எல்லாம் இருக்கான்னு? யாருக்கும் தெரியாது. , தங்கராசையாவுக்கும், சைக்கிள் கட வாசையாவுக்கும் ஒரு வேல தெரிஞ்சிருக்கும், ஆனா, அவங்க ரெண்டு பேருமே செத்துப் போய்ட்டாங்க.

கண்காணாத இடத்துல இருந்துகிட்டு பால்ய வயசுல இருந்து பழகின தெரிஞ்ச மனுஷங்களோட சாவுக்குப் போகாம அந்த எழவு வீட்டையும், சடங்குகளையும் யோசிக்கிறது பெரிய வலி, தங்கராசையா செத்தன்னிக்கி எங்கேயோ வடக்குப் பக்கத்துல இருக்குற போபால் நகரத்துல இருந்தேன், "தங்கராசையா செத்துப் போயிட்டாருப்பான்னு" அம்மா சொன்னப்ப கெதக்குன்னு நெஞ்சுக்குள்ள என்னவோ பண்ணுச்சு, ஒன்னும் சொல்லல, என்னத்தச் சொல்றது, காலத்துக்கெல்லாம் பதில் சொல்லிட்டுத் திரிய ஆரம்பிச்சா கத நடக்காது.

தங்கராசையாவோட சாவோட பூனயப் பத்தின ரகசியங்கள் எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு தான் தோணுது, பூனய எனக்கு ஒரு எட்டு வயசுல இருந்து தெரியும், வாட்டசாட்டமா இருப்பான், ரொம்ப நீளமான காலுங்க அவனுக்கு, அவனப் பாத்தா ரோமானியப் படைங்க போருக்குப் போனப்ப வுட்டுட்டுப் போன ஆளு மாதிரி இருப்பான், அவனோட கண்ணு ஒருமாதிரி பழுப்பு நெறத்துல, பூனைங்களுக்கு இருக்குற மாதிரி இருக்கும், பெரும்பாலும் அவன் சட்டை போடுறது இல்ல, பாத்த நாளைல இருந்து இன்னிக்கு வரைக்கும் பிளாஸ்டிக் கொடத்துல தண்ணியத் தூக்கிட்டு போற அவனோட பிம்பம் இந்த ஊருக்கு ஒரு அடையாளம் மாதிரி, அவன் அப்படித் தண்ணி தூக்காத நாளே இல்லைன்னு நெனைக்கிறேன்.

எப்பயாச்சும் சின்னப் பயலுக பூன கூட வம்பிளுப்பாணுக, அவன் மேலே கல்லத் தூக்கி எரியுறது, ஒளிஞ்சிக்கிறது, அப்புறமா அவனோட வேட்டிய அவுத்து விட முயற்சி பண்றதுன்னு எதாச்சும் சின்னப்புள்ளத் தனமா பண்ணுவானுக, பொறுமை இழந்தா ஒருமாறி அடிக்குரல்ல கத்திகிட்டு அவனுகளத் தொரத்திக் கொஞ்ச தூரம் ஓடுவான் பூன, அது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும்தான், போஸ்ட் ஆபீஸ் கேட்டுகிட்ட வந்தா நின்னுக்கிடுவான், பயலுக தைரியமா தப்பிச்சு ஓடிருவாங்கே, அவனோட மூக்கு கழுகுக்கு இருக்குற மாதிரி முனைல வளைஞ்சு கூர்மையாயிருக்கும், வெத்தலக் கரை படிஞ்ச பல்லுங்க, பாதி தொறந்த மாதிரியே இருக்குற வாய்ன்னு பூன ஒரு விசித்திரமான மனுஷன்.

அவனோட ஒலகமே தங்கராசையா கடத் தாவாரமும், இந்த ஊரணியும், அப்பறமா போஸ்ட் ஆபீஸ் கேட் வரைக்கும் உள்ள ரோடும் தான், அவன் அதைத் தாண்டிப் போனதே இல்ல, ஒருநா பட்டையா கோயில் திருவிழா நடந்தப்ப "வள்ளிதிருமணம்" நாடகத்தப் பாத்துகிட்டே ஓலப்பாயில தங்கராசையா மகனுக்குப் பக்கத்துல படுத்துட்டிருந்த பூனய நான் வினோதமாப் பாத்தேன். கடையத் தாண்டி ரொம்பத் தொலைல பூனயப் பாத்தது அப்பத்தான். பூனயின் உலகத்தில் சில காய்கறிகள், ஒரு அருவாமனை, ஊரணிக்கும் கடைக்கும் அவன் தண்ணீர் சுமந்து செல்கிற அவனது காலடித்தடங்களால் உண்டான ஒரு ஒத்தையடிப்பாதை, தங்கராசையா, கசங்கிய சிவப்பு நிறத்தான குத்தாலத் துண்டு ஒன்று என்று வெகு அரிதான பொருட்களும் மனிதர்களுமே இருந்தார்கள்.

9034916524ea2598baab81

பூனக்கி வாய் பேச வராது, அடிக்குரல்ல எப்பயாச்சும் கத்துறதும், வாய்க்குளேயே மொனகுறதும் தான் பூனயோட குரல், பூனயோட நசிஞ்ச மர்மமான குரல்ல அவனோட பேரு ஒளிஞ்சிட்டு இருக்கணும், யாராச்சும் பூனக்கி பேரு வச்சிருப்பாங்க, அவனும் ஒருநாள் அம்மா கூடயோ அப்பா கூடயோ எங்கேயாச்சும் போயிருப்பான், அவனோட அம்மாவும் நம்மள எல்லாம் கூப்பிடுற மாதிரி எதாச்சும் செல்லப் பேரு வச்சு அவனக் கூப்பிட்டிருப்பாங்க, ஆனா, அந்தக் கதையெல்லாம் பூனயோட மனசுக்குள்ள ஒரு அழிஞ்சு போன அரண்மனை மாதிரி இருக்கும்னு தோணிச்சு எனக்கு.

தங்கராசையா கடைக்கிப் பின்னாடி இருக்குற தாவாரத்துக்கு மேலே தட்டி போட்டு மூடி இருக்குற கூரைக்குக் கீழ எலக்கட்டு, அப்புறமா காய்கறி எல்லாம் குமிஞ்சு கிடக்கும், ராத்திரி பதினோரு மணிக்கு மேலே குத்தாலத் துண்டு விரிச்சு பூன படுத்து தூங்கிருவான், காலைல எப்படியும் பூனை ஒரு அஞ்சு மணிக்காச்சும் எந்திரிச்சு ஆகணும்னு நினைக்கிறேன். பூனையோட தண்ணிக் கொடம், வெத்தலக் கறை வுட்டு அவனப் பத்தி சொல்லனும்னா ரெண்டு விஷயம் தான் ஞாவுகம் இருக்கு, மொத விஷயம் பூன அழுதது.

ஒருநாள் நல்ல உச்சி வெயில்ல பூனய ரெண்டு தளக்காவூர்க்காரப் பயலுக அடிச்சுகிட்டு இருந்தாங்கே, குடிபோதைல இருந்தாங்கே போல, நல்ல குண்டா தடியன் மாதிரி இருந்த ஒரு பய "செய்ய மாட்டியோ, ஊமப் பயலேன்னு, ஊமப் பயலே"ன்னு சொல்லிகிட்டே பூனயக் கன்னத்துல அடிச்சான், "வாயில்லாத ஜீவன ஏண்டா இப்டிப் போட்டு அடிக்கிறீங்க"ன்னு கல்லாவுல இருந்து இறங்கி தங்கராசையா வரதுக்குள்ள பூனையா ஆச தீர அடிச்சு முடிசிட்டாங்கே பயலுக.

பூனகிட்ட அந்தத் தடியன் வெளில கெடக்குற அவனோட செருப்ப எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கான், பூன பதில் எதுவும் சொல்லாம அப்படியே நிக்கவும், ரெண்டு மூணு வாட்டி சொல்லிப் பாத்துட்டு தடியன் அடிக்க ஆரம்பிச்சுருக்கான். அன்னைக்கிப் பூன ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்தான், யாரையாச்சும் நினச்சு அழுதுருப்பான்ல பூன, அம்மாவையோ, அப்பாவையோ, ஒருவேள கல்யாணம் ஆகியிருந்தா பொண்டாட்டியையோ, புள்ளையையோ, அந்த நேரத்துல அவன் மனசுல யாராச்சும் கண்டிப்பா இருந்திருப்பாங்க.

ஆனா, யாருக்கும் தெரியாத அந்த நெனெப்ப என்னன்னு சொல்ல, நம்மல்லாம் அழுகுறப்ப யாரையாச்சும் நினைச்சுகிட்டு அழுகுறம்ல அதே மாதிரத் தானே பூனயும் அழுதுருப்பான், அந்த அழுகைல ஏதோ ஒரு இனம்புரியாத மனுஷப் பயலுக வாழ்க்கையோட சோகமெல்லாம் சேந்து தண்ணியா வடிஞ்ச மாதிரி இருந்துச்சு, கோவம் கோவமா வந்துச்சு, தங்கராசையா பூனயக் கைத்தாங்கலா தாவாரத்துக்குக் கூட்டிப் போயிப் படுக்க வச்சாரு.

ரெண்டாவதா பூன சிரிச்ச கதை, இன்னைக்கி வரைக்கும் அவன் ஏன் அப்படிச் சிரித்தான் என்று புரியவே இல்ல, அன்னைக்கி வழக்கத்துக்கு மாறா ஊரணிக் கரைல ரொம்பக் கூட்டமா இருந்துச்சு, செங்க லாரி டிரைவர்ல இருந்து போஸ்ட் மாஸ்ட்டர், ஜான் சாரு, அப்பறம் நர்சம்மா எல்லாரும் ஊரணிக் கரைல நின்னுகிட்டு இருந்தாங்க, ஐயரு கவலையோட "நேத்துச் சாயங்காலம் "சங்கடஹரசதுர்த்தி" நல்லாக் குளிப்பாட்டி அலங்காரமெல்லாம் பண்ணி பூஜை புஷ்பம் வச்சுட்டுத்தான் போனேன், காத்தால இப்படி ஆயிடுத்தே"ன்னு கவலையோட பொலம்பிக்கிட்டு இருந்தாரு, போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிரலாம்னு சில பேரும், யாரோ வெளியூர்ப் பயலுக தான் வினாயகரப் திருடிப் பிரதிஷ்டை பண்ணும்னு தூக்கிட்டுப் போயிருக்காங்கே, பூனயும் அங்க வந்து நின்னு ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துட்டே இருந்தான்.

அப்பறம் பஞ்சாயத்துத் தலைவர் வந்து ஒடனே வைரவபுரத்துல போயி வலம்புரிப் புள்ளையார வாங்கிட்டு வரச் சொல்லிப் பயலுக கிட்டக் காசு குடுத்து அனுப்புனாரு, அப்பையெல்லாம் சும்மா தான் இருந்தான் பூன. சாயங்காலம் ஒரு ஆறு மணி இருக்கும், நாங்கல்லாம் பள்ளிக்கூடம் விட்டு வந்து காணாமப் போன புள்ளையாரப் பத்தி ரொம்பக் கவலையோட பேசிட்டிருந்தோம், கொஞ்ச நேரத்துல எஸ்.எம்.ஆர் அண்ணன் 407 ல புள்ளையாரக் கொண்டு வந்து சேத்தாங்கே பயலுக, புள்ளையார இறக்கி ஊரணிக் கரை மேலே அரசமரத்தடில இருக்குற கோயில் திண்டுக்கு கொண்டு போயி உக்கார வச்சப்ப, ஐயரு பயலுகலப் பாத்துச் சொன்னாரு, "வினாயகனப் படுக்க வைங்கோ", பயலுகளும் புள்ளையாரப் படுக்க வச்சாங்கே, புள்ளையாரு மல்லாக்கப் படுத்து வானத்துல தெக்கால பறந்து வேட்டங்குடிக்குப் போற வெளிநாட்டுப் பறவைகளைப் பாத்துகிட்டு இருந்தாரு.

field-watercolor-painting

அப்பப் பாத்துப் பூன கூட்டத்த வெளக்கி உள்ள வந்தான் பாத்துக்கோங்க, வழக்கமா பூவும் பொட்டுமா அமர்க்களமா உக்காந்திருக்குற புள்ளையார துணிமணி எதுவுமில்லாம கீழ படுக்க வச்சிருக்கிற கோலத்தைப் பாத்ததும் பூனக்கி சிரிப்பு வந்துச்சா, இல்ல, என்னன்னே தெரியல, பூன குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சான், அவனால சிரிப்ப அடக்கவே முடியல, புள்ளையாருக்கு துணி மணியெல்லாம் சுத்தி உக்கார வச்சு பிரதிஷ்டை பண்ணி முடிக்கிற வரைக்கும் பூன சிரிச்சுகிட்டே இருந்தான்.

ஐயரும், தங்கராசையாவும் பூனய மானாங்கன்னியா வஞ்சு "ஏண்டா ஊமப் பயலே, திமுரா ஒனக்கு"ன்னு தொரத்தி விட்ட பின்னாடியும் தண்ணிக் கொடத்தத் தூக்கிகிட்டு போகும் போதும் வரும் போதும் புள்ளையாரப் பாத்து சிரிச்சுகிட்டே இருந்தான் பூன. ஒருநாளப் போல மணியண்ணன் கிட்டப் பேசிட்டு வக்கப் போறப்ப "அட, தம்பி, பூன செத்துட்டாம்பான்னு ரொம்பச் சாதாரணமா சொல்லிட்டு வச்சுட்டாரு, அதுக்கப்பறமா இன்னைக்கித்தான் ஊருக்கு வந்திருக்கேன், ஊரணிக் கரைல வந்து நின்னப்ப பூன கொடத்தத் தூக்கிட்டுத் தண்ணி எடுக்க நடந்து நடந்து நல்ல வெள்ளைக் கலர்ல அந்தப் பாதை அப்டியே கெடந்துச்சு, ஊரணியையும் கடையோட கொல்லைப்புறத்தையும் இணைக்கிற ஒரு நேர்கோடு மாதிரி அந்தப் பாதை எப்பவும் வானம் பார்த்தபடி, செங்கக் காலவாய் புகைக்கி நடுவுல மனச ஏதோ பண்ணுச்சு, பூனங்கிற ஒரு மனுஷனோட வாழ்க்கையைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச இந்த ரெண்டு கதையும் விட்டு வேறே எதுவுமே தெரிஞ்சிக்க முடியாமப் போச்சேன்னு கவலையா இருந்துச்சு.

பூன, அம்மா அப்பா கூட எடுத்துகிட்ட ஒரு போட்டா எங்கயாச்சும் ஒரு இரும்புப் பொட்டிலையோ, காகிதங்களுக்கு நடுவுலையோ இருக்கும், பூனையோட பேர யாராச்சும் எங்கயாச்சும் எழுதி வச்சிருப்பாங்க, பூனயோட வாழ்க்கைல அவனுக்கு நண்பர்கள் யாராச்சும் இருந்திருப்பாங்கல்ல, பூனக்கி ஒரு ஊரும், வீடும் கொஞ்சம் சொந்தக்காரங்களும் இப்பவும் எங்கயாச்சும் இருக்கும் தானே?

 

****************

கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 3, 2015

“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………

abstract-love-love1

கதவுச் சதுரத்தின் பாதி இடைவெளியில் வெளி படர்ந்து கிடக்கிறது, குளிர் காற்றின் சலசலப்பைத் தாங்கியபடி இருளோடு மல்லுக்கொண்டிருக்கிறது தொலைதூர மரம், இரவுப் பறவைகள் வருகிற நேரம் ஆகி இருக்கவில்லை,  அவை இன்னும் சில நிமிடங்களில் வரக்கூடும், பிடிக்காத ஏதோ ஒன்றைப் பார்த்தபடி நாயொன்று இரவின் ஏகாந்த அமைதியில் குரைத்துக் கொண்டிருக்கிறது, பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இரவு ஒரு நெருங்கிய நண்பனைப் போல எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது, சிவப்பு நிறமும், கருநீல நிறமும் கொண்ட ஒரு உருண்டையான வண்டு தோள்பட்டையில் ஊர்கிறது, அதற்கு என்னிடத்தில் அச்சமில்லை, உனைப்போலவே எனக்கும் இரவின் நெருக்கம் பிடித்திருக்கிறது, நீ ஒன்றும் தனிமையில் இல்லை என்று சொல்வதைப் போல இருக்கிறது அதன் இயக்கம், இரவு விளக்கின் மங்கிய வெம்மையில் அந்த வண்டு தயக்கங்களும், அச்சமும் இல்லாமல் ஏதோ நினைத்தபடி எனது உடல் பரப்பில் நகர்கிறது.

இரவுச் சாலையைப் பார்க்கிறேன், எப்போதாவது கடக்கிற ஊர்திகளின் வெளிச்சம் பட்டு விழித்துக் கொள்ளும் கட்டிடங்களின் சுவர்கள், இரவுச் சாலையில் இயக்கம் எளிதாய் இருக்கிறது, வாழ்வின் அழுத்தங்களும், தயக்கங்களும் மேற்கில் மறைந்த வெளிர் ஆரஞ்சு நிறச் சூரியனின் கதிர்களோடு கரைந்து விடுகின்றது, இரவு பக்கத்தில் இருக்கிற மரங்களையும், நிலவொளியில் பறக்கிற பறவைகளையும், சந்திக்கிற மனிதர்களையும் எளிதாக உயிருக்கு அருகில் கொண்டு வருகிறது, பகல் உயிரியக்கத்தின் மீது ஒரு கனத்த போர்வையைப் போர்த்தி விடுகிறது, உடல் உழைப்பும், மனத்தடைகளும் இல்லாத ஒரு போலியான முதலீட்டிய வாழ்க்கையில் இருந்து தப்பிக்க இரவையும், அதன் பரந்த வெளியையும் நோக்கியே ஓட வேண்டியிருக்கிறது. ஆகவேதான், இரவுகளை நான் உறங்கிக் கழிக்க விரும்பாதவனாக இருக்கிறேன், உறக்கத்தில் இரவுகளைக் கழித்த பிறகு பகல் நீண்டதாய் இருந்து துன்புறுத்துகிறது, சிவப்பு நிற வண்டுகளுனுடனோ, ஆழ்ந்த மயக்கத்திலோ, உறக்கத்திலோ சுவற்றை ஒட்டிக் கிடக்கும் ஒரு மஞ்சள் வண்ண பட்டாம்பூச்சியின் சிறகுகளுடனோ, தொலைதூர இரவு மரத்தில் இலைகளின் சலசலப்புடனோ வாழ்வது உடலை எளிதானதாக்குகிறது.

பேரண்டத்தின் சிதறலில், மிக வினோதமான பொருள் மனித உடல், அதன் இயக்கம், அதன் பரந்த சிந்தனை வெளி, அதன் தேடல் என்று எல்லாக் கோணங்களிலும் உடல் ஒரு வினோதமான பண்டத்தைப் போலவே காட்சி அளிக்கிறது, அதனுள்ளிருந்து தான் மானுடத்தின் குரல் உலகெங்கும் ஒலிக்கிறது. அதனுள்ளிருந்து புறப்பட்ட தேடல் தான் எட்ட முடியாத தொலைவில் இருக்கும் செவ்வாய்க் கிரகத்தின் நீர்நிலைகளைக் கண்டறிகிறது, மனிதக் கண்களால் நேரடியாகப் பார்க்கப்படாத அதன் மிக உயர்ந்த சிகரங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் அழுத்தமாய் வழிந்து ஓடுவது வெறும் செவ்வாயின் தண்ணீர் அல்ல, மனித இதயத்தின் வலியும், வேதனையும் நிரம்பிய பயணத்தின் சுவடுகள், ஒவ்வொரு அறிவியல் இயக்கத்தின் கண்டுபிடிப்புகளுக்காகவும், எண்ணற்ற மானுட உயிர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

First_flight2

மானுட இயக்கத்தில் பறத்தலின் மலர்களைப் பூக்கச் செய்த "ஆர்வில்லே" மற்றும் "வில்பர்" ரைட் சகோதரர்கள் ஒருநாள் இரவில் தங்கள் வீட்டின் பின்பக்கமிருக்கும் தோட்ட நிலத்தில் நெடுநேரம் விழித்திருந்தார்கள், 1903 ஆண்டின் முதல் பறத்தல் வெற்றிகரமாக முடிந்திருந்தது, மானுட வாழ்க்கையின் பயணங்களின் துயரத்தை ஒரு திறப்பின் மூலமாக அவர்கள் வெல்ல முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தார்கள், உலகம் வியக்கும் ஒரு உன்னதமான அந்த நிகழ்வைக் குறித்து வரலாறு எண்ணற்ற குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, ஆனால், அன்றைய இரவில் அழுது கொண்டிருந்த ஒரு தந்தையின் இதயத்தை நமக்குத் தெரியாது, ரைட் சகோதரர்களின் தந்தையான "மில்ட்டன் ரைட்" அன்றைய இரவில் தனது கண்ணீரைத் துடைத்தபடி "எனது அன்பு மகன்கள் இருவரையும் பறத்தலின் அற்புதத்துக்காக நான் இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்று கதறினார், தங்கள் உடலையும், உயிரையும் பணயம் வைத்தே வடக்குக் கரோலினாவின் "கில் டெவில் ஹில்ஸ்" இல் இருந்து அந்த இளைஞர்கள் பறத்தலை சாத்தியம் என்று நம்பினார்கள். பிறகு மில்டனின் கண்ணீருக்காக சகோதரர்கள் ஒரு உறுதிமொழியைக் கொடுத்தார்கள், இருவரும் சேர்ந்து ஒருபோதும் பறப்பதில்லை என்கிற தந்தைக்கான உறுதிமொழி.

பிறகொருநாள், 1910 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஆர்வில்லே தனது 82 வயதான தந்தையை ஓரளவு பறக்கக் கூடிய தங்களது வானூர்தியில் ஏற்றிக் கொண்டு பறந்தார், தள்ளாடும் கைகளோடு பறத்தலின் போது, மில்டன் என்கிற அந்த முதியவர்,  "மகனே, இன்னும் உயர உயரப் பற, இன்னும் உயர உயரப் பற" என்று கதறி அழுதார். அது ஒரு தந்தையின் ஒப்பற்ற மகிழ்ச்சியாய் இருந்திருக்க வேண்டும், அந்த மகிழ்ச்சியும், மன எழுச்சியும் தான் அவரது குழந்தைகளைப் பறக்கச் சொல்லித் தூண்டியது. அந்த அன்பும், வாழ்க்கை மீதான பிடிப்பும் தானே வகை வகையான வானூர்திகள் கண்டுபிடிக்கப்பட்டு வெவ்வேறு கோள்களுக்குப் பயணித்தாலும் மனிதனைத் தனது மண்ணையும், மானுடத்தையும் நேசிக்க வைக்க வைக்கிறது.

"ரோனல்ட் காரொன்" 2008 இல் முதன்முறையாகப் பன்னாட்டு வான்வெளி ஆய்வுக் கூடத்தில் கால் பதித்த இரவில் தான் வாழும் பூமி இத்தனை அழகானதென்று வியந்தார், கண்கொள்ளாமல் பேரண்ட வெளியில் இருந்து புவிப்பந்தின் மீது அலையடிக்கும் ஆழ்கடலின் அற்புதங்களையும், விளக்கொளியில் ஜொலிக்கும் அதன் நகரங்களையும் கண்டு பூரித்தார், ஆனால், அவரது அந்த மகிழ்ச்சியும், பூரிப்பும் அடுத்த கணங்களில் மாறிப் போனது, கிடைக்காத அந்த அரிய வாய்ப்பின் முனைகளில் மனிதர்களால் எட்ட முடியாத உயரத்தின் நின்றபடி அவர் கண்ணீர் சிந்தினார், அவருடைய சொற்கள்:

"மிக அற்புதமான அந்தக் கணத்தில் நான் கீழே பூமியைப் பார்த்தேன், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தர வேண்டிய அழகான அந்த நிமிடம் மாறாக எனக்குள் ஒரு கடுந்துயரை நோக்கித் தள்ளியது. அந்த அழகிய உருளைப் பந்தில் வாழும் மானுடப் பரப்பெங்கும் பரவிக் கிடக்கும் சமூக அநீதிகள், பசி, தாகம், போர், ஏழ்மை என்று எல்லாம் என்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியது"     

("But as I looked down at this stunning, fragile oasis — this island that has been given to us, and has protected all life from the harshness of space — a sadness came over me, and I was hit in the gut with an undeniable sobering contradiction. In spite of the indescribable beauty of this moment in my life, I couldn’t help but think of the inequity that exists on the apparent paradise we have been given. I couldn’t help but think of all the people who don’t have clean water to drink or enough food to eat, of the social injustice, conflicts, and poverty that exists throughout the Earth.")

பிறகு பூமிக்குத் திரும்பி ரொனால்ட் என்ன செய்தார் தெரியுமா? ஆப்ரிக்காவின் ருவாண்டாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தைத் துவங்கி அங்கிருக்கும் குழந்தைகளுக்குத் தூய்மையான குடிநீரை வழங்கும் பணிகளை இன்றும் செய்து வருகிறார். அந்த மானுடத்தின் மீதான அன்புதானே உயர உயர வெளியெங்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.

earth-from-space-east-coast-united-states

இத்தனை பேரன்பு நிரம்பிய மானுடத்தின் இதயம் தான் பக்கத்தில் வசிக்கும் ஒரு சக குழந்தையைத் தனது வீதிக்குள் நுழைந்தான் என்று கைகளைப் பொசுக்கி விடுகிறது, தனக்குப் பிடிக்காத எதையோ தின்றான் என்று கொன்று விடுகிறது, சக உயிரைக் காதலித்தான் என்று கழுத்தை அறுத்துத் தண்டவாளங்களில் எறிந்து விடுகிறது, குருதியும் சதையுமான எண்ணற்ற மானுட உயிர்களையும், அவற்றின் வாழ்க்கையையும் விட மதம், சாதி, தேசம் என்கிற கண்ணுக்குப் புலப்படாத மானுட எல்லைகளால் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் நலனே மிக முக்கியம் என்று வாதிடுகிறது.

மீண்டும் ஒருமுறை கதவுச் சதுரத்தின் வழியாக வெளியைப் பார்க்கிறேன், வெகு தொலைவில் பேரண்டத்தின் புலப்படாத கோட்டில் மிதக்கும் ஒரு பருப்பொருளைப் போல உடலைக் கடந்து உயரத்தில் மிக உயரத்தில் கண்சிமிட்டும் ஒரு நட்சத்திரத்தின் மீது ஒரு துளி காதலைத் தெளிக்கிறேன், அங்கே பூக்கள் மலரும், அங்கே தேசங்களையும், எல்லைகளையும், மதங்களையும், இனங்களையும் கடந்த ஒரு புதிய குழந்தைகளுக்கான உலகம் காத்திருக்கும், மனித மனத்தின் உள்ளே ஆழமாய்ப் பதிந்து கிடக்கும் எல்லா வேறுபாடுகளையும் கடந்து எல்லைகளும், போருமற்ற அமைதி இந்த இரவைப் போல அங்கே ஊடுருவிச் செல்லும். படுக்கையறைக்குச் சென்று குழந்தைகளைப் பார்க்கிறேன், வேறெந்த உலகமும் தெரியாமல் என்னையே சுற்றிச் சுற்றி அன்பு கொள்ளும் அவர்களின் காதல் பன்னாட்டு வான்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து பூமியைப் பார்க்கும் காட்சியை விடப் பூரிப்பானது.

 

************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 24, 2015

பெரியாரும், ஜனநாயகத்தின் கூறுகளும்.

s18

சமகாலத்தில் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய பல்வேறு பண்புகளோடு அரசியல் தலைவர்களும், வெற்றி பெற்ற மனிதர்களும், அறிவுச் சுடர் பொங்கும் பேராசிரியர்களும், பல்வேறு விருப்பத் துறை சார்ந்த தலைவர்களும் இருக்கிறார்கள், ஆனால், அவர்களை எல்லாம் விடுத்து எமது காலத்தில் வாழ்ந்திராத ஒரு கிழவரை, அவரது நூல்களை, அவரது சொற்களை, அவரது உரைகளை என்னைப் போலவே இன்னும் இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இளைஞர்களும், மாணவர்களும் படிக்கிறார்கள், தீவிரமாக நேசிக்கிறார்கள், கடைபிடிக்கிறார்கள், பின்தொடர்கிறார்கள் என்றால் அது ஒரு தற்செயலான, தாக்கங்கள் ஏதுமற்ற முக்கியத்துவம் இல்லாத நிகழ்வாக இருக்குமா?

சாதிப் பிரிவினைகளும், இந்திய தேசத்தின் வர்ண வேறுபாடுகளும் உண்மை என்று நம்ப வைப்பதற்கான எல்லா உள்ளீடுகளையும் நான் பெற்றிருந்த ஒரு காலம் அது, “பார்ப்பனர்கள் உயர் சாதியினர் என்றும், பறையர்கள் கீழ் சாதியினர்” என்றும் நான் நம்ப வைக்கப்பட்டிருந்தேன், பல்வேறு இடங்களில் அத்தகைய மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன், வகுப்பில் “ஒரு பிராமண மாணவனால் தான் கர்நாடக சங்கீதத்தைச் சரியாகப் புரிந்து பாட முடியும்” என்று சொன்ன ஆசிரியரைக் கடந்து வந்திருந்தேன், திருமணங்களுக்கு வந்துவிட்டுக் “கலர்” குடித்துச் செல்பவர்களை, சேரிக்குள் நுழையாமல், வேப்பமரத்தடியில் நின்று மாடு திறக்கும் அம்பலக்காரர்களை, கல்வி, பொருள், திறன்கள் எல்லாம் பெற்ற சக மாணவனாக இருந்தும் என்னோடு சேர்ந்து விளையாடக் கூடாது என்று சொன்ன நண்பனின் பெற்றோர்களை என்று வழக்கமாக இந்திய சமூகத்தில் நிகழும் சாதியின் கோரப் பிடியில் சிக்கி நம்பிக்கையை இழக்க இருந்த, மனவலிமையை மீட்கப் போராடுகிற ஒரு மாணவனாக இருந்தேன்.

வழக்கமாக அப்பா கொடுக்கிற நூல்களை வேண்டா வெறுப்போடு படிக்கும் காலம் அது, அப்பா, ஒருநாளைக்கு ஒரு திருக்குறள் என்று கட்டளை இட்டிருந்த காலம் அது, அன்று அப்பா கொடுத்த ஒரு நூல், பெரியார் குறித்த ஒரு திராவிடர் கழக வெளியீடு, ஆழ்ந்த ஈடுபாடு ஏதுமில்லாமல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் சொற்றொடர் எனது உள்ளுணர்வுக்கு ஏதோ சொன்னது.

“மனிதன் சுயமரியாதையையும்,  தன் மீதான மதிப்பையும் உயிரை விட மேலானதாகக் கருத வேண்டும், மானமும், அறிவுமே மனிதர்க்கு அழகு, ஆகவே, புராணங்களும், மதப் புளுகு மூட்டைகளும் சொல்கிற பார்ப்பான் பிறவியிலேயே உயர்ந்தவனாகப் பிறக்கிறான் என்பதை நம்பாதீர்கள், உங்களை அடிமையாகவே வைத்திருக்க அவன் செய்கிற தந்திரம் அது”

எனது உண்மையான கல்வி அங்கே தான் துவக்கம் பெற்றது, எந்த மனிதனும் ஒருவனை ஒருவன் உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ பிறப்பது அறிவியலின் படி சாத்தியமற்ற முட்டாள்தனமான நம்பிக்கை என்கிற உண்மையான கல்வியையே எனக்குள் உருவாக்கியது பெரியாரின் அந்தச் சொற்கள் தான், மதம் சொல்கிற அல்லது செயல்படுத்துகிற எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டும், மொழியைக் குறித்த பெரிய அளவிலான ஈடுபாட்டை இழந்தும் தடுமாறிக் கொண்டிருந்த ஒரு மொழி இனக்குழுவை, அவரது வருகை ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தை நோக்கித் தள்ளியது, அவர் தெருக்களெங்கும் பேசினார், அவர் பயணம் செய்யாத ஊரே தமிழகத்தில் இல்லை என்கிற அளவில் வாழும் காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு தலைவராக அவர் இருந்தார், மக்களை அவர் நேசித்தார், மொழியின் மீது அற்புதமான காதல் கொண்டிருந்தார், வளர்ச்சியின் மீதும், அறிவியலின் மீதும் அளப்பரிய நம்பிக்கை கொண்டவராக மூர்க்கமாக எந்த விளைவுகளையும் பொருட்படுத்தாத ஒரு போர்வீரனைப் போல அவர் தமிழக சமூகச் சூழலில் போராடினார். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார், அவரது இயக்கம் பழம்பெரும் அழுகிப் போன நம்பிக்கைகளைச் சிதைக்கும் வாள் வீச்சாக இருந்தது.

untitled

இன்றைய தமிழ்ச் சூழலில் பெரியாரை எந்த ஒரு இனக்குழுவும் மறுதலிக்கவில்லை, பெரியாரின் போராட்டங்களால் அவரது மூர்க்கத்தனமான மூட நம்பிக்கை எதிர்ப்பால், அவருடைய தீர்க்கமான பார்ப்பனீய எதிர்ப்பால் தான் இன்று தமிழக அரசியல் இயக்கங்களும், அறிவுலகமும் ஏனைய மாநிலங்களை விட நம்மை வெகு தொலைவு நகர்த்திச் சென்றது, அவரது சிந்தனைகளே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் கல்வியையும், வேலை வாய்ப்புகளையும், பொருளாதார வளத்தையும் ஓரளவுக்குக் கொண்டு சேர்த்தது. தனி மனித விளம்பரங்களுக்குக் கட்சி நடத்தும் ஒரு சில ஒட்டுண்ணித் தமிழ்த் தேசியக்  குழுக்களையும், அடிப்படைவாதக் காவி அரசியல் இயக்கங்களும் தவிர தமிழகத்தின் பெரும்பான்மையான வெகுமக்களின் மனதில் பெரியார் ஒரு மகத்தான ஜனநாயகச் சிந்தனைகள் கொண்ட ஒரு தலைவர், அது மட்டுமல்ல, ஒட்டு மொத்த பொது சமூக மனநிலையிலும் ஜனநாயகத்தின் பண்புகளை உரமேற்றிய ஒரே தலைவரும் அவரே.

பார்ப்பனீயம் என்பது எப்படி ஒரு கோட்பாடாக இருக்கிறது, மனித உடலை வெறுப்பதும், மனிதன் உருவாக்குகிற, நம்புகிற கோட்பாடுகளை வெறுப்பதும் வெவ்வேறானது என்று பெரியார் பல இடங்களில் சொல்லி இருக்கிறார், நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன்? என்கிற கேள்வியைப் பல மேடைகளில் அவர் முழங்கி இருக்கிறார், தெளிவாக அதற்கான காரணங்களை அவரே விளக்குகிறார்.

“பாப்பனர்கள் என்பவர்கள், இப்படியான கீழான, மனித குலத்துக்கு விரோதமான பிரிவினைகளையும், அதன் மூலமாக உழைப்புச் சுரண்டலையும், துவேசத்தையும் பரப்புகிற காரணத்தாலே நாம் அவர்களை வெறுக்க வேண்டியாதாய் இருக்கிறது.”

சமூகத்தில் பிறவித் தகுதிகளையும்,  முன்னிலை வகிக்கிற நிலைப்பாடுகளையும், “சாமி” என்கிற பெருமைக்குரிய உளவியல் சொகுசையும் பல காலமாக ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்த “சோ கால்ட்” பார்ப்பனீய உளவியல் சமூகக் குழுவுக்கு, அவர் தனது உரைகளாலும், தனது அரசியல் இயக்கங்களாலும், பிரச்சாரங்களாலும், எழுத்தாலும், கிடைக்கிற எல்லா வாய்ப்புகளைக் கொண்டும் ஆப்படித்தார். பொது சமூகத்தில் பார்ப்பனர் என்றால் நெடுங்காலமாக இருந்த அச்சம் கலந்த சமூக மரியாதையை அவர் குலைத்தார். அதுவரை உலகின் தலைசிறந்த அறிவாளிகள் என்றும், கல்வியையும், உயர் பதவிகளையும் அடையத் தகுதியான ஒரே இனக்குழு என்று அவர்களே உருவாக்கி வைத்திருந்த ஒரு லாபி மனநிலையை அவர் அடித்து நொறுக்கினார்.

இந்த ஆறாத உளவியல் சினம் அவருடைய தலைமுறையில் வாழ்ந்த பார்ப்பன சமூக குழு உறுப்பினர்களை ஒரு தீவிர வெறுப்புணர்வுக்குள் தள்ளியது, அவர்கள் அப்போதைக்கு ஒடுங்கிய மனநிலையில் இருந்தாலும் தங்கள் குடும்பங்களில் இளைய தலைமுறைக்கு இந்த வெறுப்புணர்வை மடை மாற்றினார்கள், பெரியார் உண்மையில் சமூக அறிவியலின் படி என்ன செய்தார் என்பதைக் கண்டறியும் ஆய்வுகளை விடுத்து அவர் எங்கே எல்லாம் தவறு செய்திருக்கிறார் என்று கண்டுபிடிக்கும் ஒரு நவீனத் தலைமுறையை அவர்களே உருவாக்கினார்கள். அந்த வெறுப்புணர்வு அவர்களை மீண்டும் மீண்டும் பொது சமூகத்தில் இருந்து விலக்கியே வைக்கிறது என்ற உண்மையை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கையும், அரசியலும் மானுட குலத்துக்கு என்ன நன்மைகளை வழங்கியது என்ற புரிதலுக்குள்ளும், ஆய்வுகளுக்குள்ளும் பார்ப்பனீய உளவியல் செல்ல மறுக்கிறது. அந்த மறுதலிப்பின் தொடர்ச்சியே, அந்த வெறுப்புணர்வின் தொடர்ச்சியே இப்போது சோ ராமசாமியாகவும், சுப்ரமணிய சாமியாகவும், பீ. ஏ. கிருஷ்ணனாகவும், பத்ரி சேஷாத்ரியாகவும், இன்னும் பல பெயர்களிலும் தொடர்கிறது.

periyar1
ஆனால், இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும், பெரியார் முதலில் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது, மானுடத்தை எப்படி நேசிப்பது என்கிற அரிச்சுவடியைத் தான், அவர் எங்களுக்கு உறுதியாகக் கற்றுக் கொடுத்தது என்ன தெரியுமா?, “உலகம் என்ன உள்ளீடுகளைக் எனக்குக் கொடுத்தாலும், நான் ஒரு சுயமரியாதையும், தன் மதிப்பும் கொண்ட மனிதன் என்கிற அடிப்படை அறிவை மறக்க வேண்டாம்” என்பதைத் தான் அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார், மானுட ஏற்ற தாழ்வுகளை அவர் எங்களை மறுக்கச் சொன்னார், சமநீதி கொண்ட அன்பும், அமைதியும் நிலவுகிற ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவே அவர் தனது இறுதி மூச்சு வரை போராடினார். அவர் உங்களைப் போல ஆய்வுகளை மேற்கொள்ளும் உயர் கல்வித் திட்டங்களில் படித்து முனைவரானவர் அல்ல, அவருடைய சொற்களையும், கோட்பாட்டையும் அப்படியே “ரா”வாக (Raw) எடுத்து மேற்கோள் காட்டுவது என்பது அந்தப் பழைய தீராத கோபமும், வன்மமும் தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனர்களைக் குறித்த எங்கள் நிலைப்பாடு மிக எளிமையானது, மானுடத்தின் சிறப்புகளையும், மானுட இருப்பின் வலியையும் பார்ப்பனர்களுக்கு ஒன்று, பறையர்களுக்கு ஒன்று என்றெல்லாம் வேறுபடுத்த இயலாது, எமது குழந்தைகளை நேசிப்பதைப் போலவே நாங்கள் உங்கள் குழந்தைகளையும் நேசிக்கிறோம், நாங்கள் வெறுப்பது உங்கள் உளவியலில் இன்னுமும் மிச்சமிருக்கிற “நான் பிறவியிலேயே உயர்வானவன்” என்கிற தேவையற்ற செருக்கையும், உங்கள் சுயநலம் மிகுந்த உழைப்புச் சுரண்டல் மனநிலையையும் தான், மற்றபடி உங்கள் தனி மனித நம்பிக்கைகளில், வாழ்க்கை முறைகளில், உங்கள் மொழி குறித்த நம்பிக்கைகளில் எல்லாம் ஒருபோதும் நாங்கள் தலையிட விரும்புவதில்லை, மாறாகப், பார்ப்பன உளவியல் கொண்ட சமூகக் குழுக்களுக்கும் நாளை ஒரு ஒடுக்குமுறையும், அழுத்தமும் நிகழுமேயானால், தந்தை பெரியாரின் மாணவர்களாக, அவரது மானுட நேசத்தை உள்வாங்கிய அறிவார்ந்த மனிதர்களாக நாங்களே முன்னே வந்து நிற்போம், ஏனெனில் அவர் எங்களுக்கு அடிப்படையில் அத்தகைய நேசத்தைத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்.

                         கை. அறிவழகன்                          

*************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 22, 2015

பீ.ஏ.கிருஷ்ணனும், வன்மத்தின் கூறுகளும்.

08jan_kol_01__P_A_K_888992e

பாசிசத்தின் "பெரியாரும், பாசிசத்தின் கூறுகளும்" என்கிற கட்டுரையை ஏதோ மிகப்பெரிய அறிவுத்தள விவாதத்தில் வைத்து எழுதப்பட்ட கட்டுரை அளவுக்கு பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா என்று பல பேர் இணைப்பெல்லாம் கொடுக்க, மதிப்புக்குரிய ஐயா பேராசிரியர் ராஜன் குறை அவர்கள், விவாதமெல்லாம் நடத்திக் கொண்டிருக்க, கொஞ்சம் அச்சத்தோடு கட்டுரையைப் படிக்கத் துவங்கினால், "செம காமெடி". இப்போது கட்டுரையின் மூலத்துக்குள் செல்வதற்கு முன்னதாக, பெரியார் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான ஒரு வாழ்க்கைக் குறிப்பை நினைவில் கொண்டு துவங்குவோம்.

1905 ஆம் ஆண்டு ஈரோடு நகரத்தில் பிளேக் நோய்த்தாக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து தெருக்களில் கிடந்தார்கள், பலர் நோய் வாய்ப்பட்டு மருத்துவ வசதிகள் இல்லாமல் இங்குமங்குமாக அலைந்து திரிந்தார்கள், ஈரோட்டில் உலக அமைதியையும், நோயற்ற வாழ்வையும் தரும் சமஸ்க்ருத மந்திரங்கள் தெரிந்த பார்ப்பனர்கள் பலர் இருந்தார்கள், இந்துக்களின் மடங்களும், புண்ணிய பிரபுக்களும் இருந்தார்கள், கருணை வடிவான கனவான்கள் இருந்தார்கள், ஆனால், இறந்து பிணமாகக் கிடந்த எந்த மனிதனையும் தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குச் செல்வதற்கு அங்கே இவர்களின் கருணையும், கருமாந்திரமும் வரவில்லை. ஒரு மிகப்பெரிய செல்வந்தர் வீட்டு இளைஞனாக இருந்த 26 வயது நிரம்பிய இதே ஈ.வே.ராமசாமி தான் பல பிணங்களைத் தோளிலே தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குச் சென்ற உண்மையான கருணையும், மானுடத்தின் மீதான நேசமும் கொண்டவர். இதுதானே பீ. ஏ. கிருஷ்ணனும் இன்னும் பல சேஷாத்ரிக்களும் சொல்கிற பாசிசத்தின் கூறு.

"ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்" கருத்தை அறியவும் வரவில்லை, ஒரு முட்டையும் போடவில்லை, கிரிப்ஸ்சின் இந்தியப் பயணம் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் நிலைப்பாடுகளை ஆதரிக்கும் ஒரு இந்திய அரசியல் தோற்றத்தை நோக்கியது, தேசியத் தலைவர்கள் பலருடைய கருத்துக்களை ஒருங்கிணைத்து ஆங்கிலக் காலனி ஆட்சியின் மீதான புனித வெளிச்சம் பாய்ச்ச நினைத்த வின்சென்ட் சர்ச்சிலின் கருவியாக இருந்தார் கிரிப்ஸ், உள்நாட்டிலும், உலக அரங்கிலும் இங்கிலாந்துக்கு இருந்த அவப்பெயரை நீக்கிக் கொள்ள வாய்ப்பாக அவர்கள் காந்தி மற்றும் ஜின்னா போன்ற பல தலைவர்களைச் சந்தித்தார்கள், இந்தியாவுக்கு போர் முடிந்தவுடன் "டொமினியன்" தகுதி வழங்கப்படும் என்று உறுதிமொழிகளை வாரி வழங்கினார், ஆனாலும் யாரும் மசிவதாக இல்லை. பிறகு அவரது அந்தப் பயணம் தோல்வியில் முடிந்தது.

இங்கு மிக முக்கியமாக, கிரிப்ஸ்சை பெரியார் சந்தித்த நிகழ்வுக்கும், நீதிக் கட்சியில் எழுந்த அதிகாரச் சண்டைக்கும் ஒரு தொடர்புமில்லை, பெரியார், விஷயம் மிக எளிதானது, பெரியார் அப்போதே தனி நாடு கேட்கிறார், மதராஸ் மாகாணம் இந்திய யூனியனோடு சேர்ந்து இருக்க முடியாது என்று மிகத் தெளிவாகவே சொல்கிறார், மேலும், நீதிக் கட்சியில் உண்டான உள்கட்சி முரண்பாடுகளுக்கும், கிரிப்ஸ் மிசனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது, பிறகு எதற்கு ஆரம்பத்திலேயே இப்படி கிரிப்சை முன்வைத்துக் கிருஷ்ணன் பிதற்றுகிறார் என்று தெரியவில்லை, ஒருவேளை வெள்ளைக்காரன் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு நாம நம்பீருவம்னு ஒரு நம்பிக்கை போல அவருக்கு.

உண்மையில் நீதிக் கட்சிக்குத் தலைவராக வந்த பிறகு பெரியார் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு அதன் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றினார், நீதிக் கட்சியின் பெயரிலேயே இயங்கிய தேர்தல் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஒரு குழு பி.டி ராஜன் தலைமையில் 1957 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இயங்கியது.

பீ.ஏ கிருஷ்ணன் இந்தப் பத்தியில் கடைசி வரியில் கட்சித் தொண்டர்களுக்கு இடையே பெரியாருக்கு செல்வாக்கு இருந்தது என்பதை ஏதோ கருணை காட்டுவதைப் போலச் சொல்கிறார். உண்மையில் பெரியார் தனது ஜனநாயகப் பண்புகளால் தான் அப்படி ஒரு மக்கள் திரளை எப்போதும் வைத்திருந்தார், ஒரு அரசியல் இயக்கத்தில் நிகழும் சிக்கல்களையும், உழைக்கும் எளிய மக்களுக்குத் தேவையான அரசியல் ஆற்றல்களையும் பெருக்கிக் கொள்ள பெரியார் பல சிக்கலான தான் விரும்பிய முடிவுகளை எடுத்தார், அவை ஒருபோதும் வேதம் படிக்கிற சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று போன்ற வன்கொடுமையும், மானுட எதிர்ப்பியக்கமுமாக இல்லை. மாறாக, மானுடத்தை நேசிக்கிற ஒரு திறந்த இதயமாகவே இருந்தது.

சேலம் மாநாட்டில் பெரியார் பேசியதை ஏதோ உலக பாசிசத்தின் ஒப்பற்ற உரையைப் போல விளக்குகிற கிருஷ்ணன் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை,

"எனக்குத் தோன்றியதைச் செய்தேன், நான் ஒரு தலைவன் ஆகவே நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்" என்று ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் சொல்வதில் என்ன பாசிசத்தின் கூறு கண்டு பிடிச்சீங்க சார். ஒண்ணுமே பிரியல.

பெரியாரை அண்ணா பாசிசவாதி என்று சொன்னாராம், ஒரு மூல இயக்கத்தில் இருந்து பிரியும் உணர்ச்சிப் பூர்வமான சூழலில் ஆட்சி அதிகாரத்தின் மீது நேர்மையான ஆவல் கொண்ட பேரறிஞர் அண்ணா, அப்படிச் சொல்கிறார், ஆனாலும், அதே அண்ணா தான் பெரியாருக்கான நாற்காலி எப்போதும் காலியாக இருக்கும் என்றும் சொன்னார், சம காலச் சூழலில், இயங்கிய இரு தலைவர்களின் முரண்களை பொதுமைப்படுத்தி அண்ணா, பெரியாரைப் பாசிஸ்ட் என்று சொல்லி விட்டார் என்று பிதற்றுவது உறக்கத்தில் ஊளையிடுவதைப் போல ரொம்பவே விகாரமாக இருக்கிறது.

07-06-1943 ஆண்டு திருப்புத்தூர் கூட்டத்தில் பேசுகிற பெரியார் சொல்கிறார்,

"பார்ப்பனனுக்கும் நமக்கும் என்ன தனிப்பட்ட பகை இருக்கிறது, அவர்களை நமது வீட்டு விழாக்களுக்கு அழைத்து, அவர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தால் என்ன குறைந்து விடப் போகிறது? நமது கவலையெல்லாம், அவன் நம்மை மனிதனாகக் கூட மதிக்கத் தவறுகிறானே, அவனை நாம் ஏன் அழைக்க வேண்டும் என்பது தானே" என்று தெளிவாகச் சொல்கிறார்,

இந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல இன்னும் பல மேடைகளில் பெரியார் பார்ப்பனர்களை அவர்களது உடலை வெறுக்கச் சொல்லி அறிவுறுத்தும் மூடத்தனத்தை அறிவுறுத்தவில்லை, மாறாக, பார்ப்பனீயம் என்கிற கோட்பாடு மானுட குலத்துக்கு எப்படி எதிரானது என்கிற ஒற்றைப் புள்ளியிலேயே நிற்கிறார். நீங்களோ மானுடத்தை நேசித்த ஒரு மகத்தான மனிதனை பாசிசவாதி என்று தலைகீழாக நின்று நிறுவப் பார்க்கிறீர்கள், பெரியாரின் வாழ்க்கையும், உரைகளும், இயக்கங்களும், போராட்டங்களும் திறந்த புத்தகம் போன்றவை, உட்கட்சி முரண்பாடுகளை எல்லாம் வைத்து பெரியார் என்கிற கோட்பாட்டு இயக்கத்தின் வரலாற்றுப் பயணத்தை அத்தனை எளிதாக மடக்கி உங்களால் வீழ்த்த இயலாது கிருஷ்ணன்.

மனுவின் மாறுவேடம் ஜனநாயகமாக இருக்கலாம் என்று அவர் அச்சமும், கலக்கமும் கொண்டதில் என்ன தவறு இருக்கிறது? மனு தர்மமே இந்த தேசத்தின் அழுகித் துர்நாற்றம் பிடித்த சாதிய விழுமியங்களை இன்று வரையில் அடை காக்கிற நோய்க்குறி. அதனால் அதன் மீது அவர் கடும் சினம் கொண்டிருந்தார். அவர் ஜனநாயக ஆட்சி என்று குறிப்பிடுவது பார்ப்பனர்களின் ஜனநாயகம் என்கிற பெயரிலான ஒரு குறியீட்டு வெளியை அன்றி உண்மையான மக்கள் போற்றும் ஜனநாயகத்தை அல்ல என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியக்கூடிய செய்தி, ஆனால், கிருஷ்ணன் என்னமாய்ப் பம்முகிறார் இங்கே பாருங்கள், மனுதர்மவாதிகள் இருக்கிற வரை இந்த நாடு ஒழுக்கம், நீதி, நேர்மையைப் பெறவே முடியாது என்று உண்மையை உரக்கச் சொன்னதால் பெரியார் பாசிஸ்ட் ஆகிவிடுகிறாராம்.

INF3-60_Sir_Stafford_Cripps_Artist_Arthur_Boughey

நோயைக் கண்டறிந்து சொன்னால் மருத்துவர் குற்றவாளி ஆகிவிடுவாரா கிருஷ்ணன் சார்? செமையா சொதப்பீட்டீங்களே???

பெரியார், பெண்களின் மீதான ஆண்களின் அடக்குமுறைகளையும், ஆதிக்கச் சங்கிலியையும் அறுத்தெறிய “கருப்பை” என்கிற உறுப்பையே வெட்டி எறியுங்கள் என்று முழக்கமிட்ட மாபெரும் புரட்சிக்காரன், கர்ப்பம் என்பதும், குழந்தைப் பேறு என்பதும் பெண்களை எப்படியெல்லாம் வீட்டுக்குள் முடக்கி அவர்களை அடக்கி ஆளப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு சமூக விஞ்ஞானியைப் போல பல ஆண்டுகளுக்கு முன்னதாகச் சொன்ன மானுடத்தின் அற்புதம் பெரியார், அவருடைய மூர்க்கத்தனமான பேசும், எதிர்க்குரலும் ஒரு அடையாளக் குறியீட்டு நோக்கிலேயே அறிஞர்களால் பார்க்கப்படுகிறது மாறாக, உங்களைப் போல சொற்களின் பொருளைத் தேடித் பயணிப்பது ஆய்வு நோக்கில் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனம்.

நெடு நாட்களாகப் பல பார்ப்பனர்களைப் பார்த்து வருகிறேன், சிவகங்கை கோசலராமன் ஐயரில் இருந்து இன்றைய பாரதீய ஜனதாவின் ராகவன் வரைக்கும் ஒரு தீய்ந்து போன பழைய கிராமபோன் ரெக்கார்டைப் போட்டு அரைத்தபடியே இருப்பார்கள், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று பெரியார் சொன்னார், யாரு எப்போ இல்லைன்னு சொன்னது, தமிழ் இலக்கியம் என்கிற பெயரில் நிகழ்ந்து வந்த புராணப் புளுகு மூட்டைகளை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை, அறிவியலும், அரசியலும், சமூகவியலும் நிரம்பிக் கிடக்க வேண்டிய ஒரு மொழியின் இலக்கியத்தில் பக்தியின் பெயரில் இருள் சூழ்ந்து கிடக்கிறது என்று உறைக்கும்படி சொல்ல கடுஞ்சினத்தோடு பல மேடைகளில் அவர் தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பேசினார், ஆனால், பெரியாரைப் போல தமிழை நேசித்தவர் யாரிருக்கிறார் இங்கே?

20-07-1930 ஆம் ஆண்டு கொடைக்கானலில் ஒரு நூலகத்தைத் திறந்து பேசும்போது சொல்கிறார் பெரியார், "

“தமிழில் அறிவியலும், பொது அறிவும் ஏற்படும்படியான ஆதாரங்களே இல்லை, வடமொழி ஆதாரங்களையே மொழி பெயர்த்து பல வேஷங்களுடன் உலவ விட்டிருக்கிறார்கள், மக்களுக்கு அறிவும், சுயமரியாதையும், வேண்டுமானால், உலக இயலை தமிழ் மொழிக்குள் கொண்டு வரும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்".

கிருஷ்ணன்ஜி,  இதைவிட மொழியை நேசிக்கிற ஒரு பண்பட்ட தலைவரை நான் இன்னும் சந்திக்கவில்லை, இதைப் போல உங்களுக்கு பல நூறு உரைகளை என்னால் ஆதாரமாகத் தர முடியும், இல்லையென்றால் மெல்ல நடந்து பெரியார் திடல் நூலகத்துக்குப் போய் வாருங்கள், இயலாது என்றால் எனது செலவிலேயே உங்களை எனது இல்லத்துக்கு அழைக்கிறேன், உயர்தரச் சைவ உணவுக்கு நான் பொறுப்பு.

இதனை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெரியார் தமிழை கடும் சினத்தோடு அப்படிச் சொல்லியதைப் போலத்தான் பார்ப்பனீயம் மற்றும் பார்ப்பனர்கள் குறித்த பல்வேறு சினத்தோடு கூடிய கருத்தியலை தனது வாழ்க்கையின் பல்வேறு இடங்களில் முன்வைக்கிறார். ஆனால், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஒரு தலைவனின் வாழ்க்கையும், உரைகளும் அவன் சார்ந்திருக்கிற மக்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளைத் தந்தது என்பது குறித்துத்தான், மாறாக நீங்களோ, கிள்ளினான், அடித்தான் என்பது மாதிரியான பள்ளி விளையாட்டுக்களை ஆய்வுகளைப் போலப் பரப்ப முயற்சி செய்கிறீர்கள். பெரியாரின், உரைகளையும், அவரது உளவியலையும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நம்மால் ஆய்வுக்கு உட்படுத்த முடியும், ஆனால், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரியாரின் வெறும் சொற்களை மட்டும் கட்டுரைகளுக்குள் திணிக்காதீர்கள், மாறாக, அவர் எந்தச் சூழலில், என்ன காரணத்துக்காக அப்படி ஒரு உரையை நிகழ்த்தினார் என்பதையும் உணர முயற்சி செய்யுங்கள்.

periyar

பெரியார் எல்லாவற்றுக்கும் தீர்வு என்றோ, புனித அடையாளம் என்றோ இங்கே யாரும் சொல்லவில்லை, அவரும் கூட ஒருநாளும் அப்படிச் சொன்னதே இல்லை. பெரியாரை நன்றாக விமர்சனம் செய்யுங்கள், விவாதத்துக்கு உட்படுத்துங்கள், அதற்கு முன்பாக அவருடைய வாழ்க்கையை இன்னுமொருமுறை நன்றாக வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள். பெரியார் எல்லாக் காலங்களிலும் மானுடத்தை நேசித்தவர், உங்கள் கோட்பாடுகள் பாசிசத்தின் உண்மையான முகங்களை பக்தியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் மறைத்துக் கொண்டு மானுடத்தின் நாகரீகப் பயணத்தில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த போது, இருளைப் பரப்பும் வேத விளக்குகளை நீங்கள் ஏற்றிக் கொண்டிருந்த போது ஒரு வெளிச்சக் கீற்றாய் இங்கே தோன்றிய அறிவுச் சுடர் அவர். அவர் ஏற்றிய அறிவுச் சுடரில் உங்களைப் போல மானுடத்துக்கு எதிரான பிதற்றல் காரர்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும், அறிவையும் பெற்றுக் கொண்டவர்கள் நாங்கள்.

ஜனநாயகம் என்கிற அடையாளக் குறியீட்டுச் சொல்லை அவர் எதற்காகப் பயன்படுத்துகிறார் என்பதைக் கடைசி வரையில் பீ.ஏ.கிருஷ்ணன் தனது கட்டுரையிலோ, வாழ்க்கையிலோ உணர்ந்தது போலத் தெரியவில்லை, அவர் சொல்கிற ஜனநாயகம் என்பது பார்ப்பனீய நச்சுக்களால் அழுகிப் புரையோடிப் போயிருந்த உழைப்பைச் சுரண்டலை ஊக்குவிக்கிற ஜனநாயகத்தை, சமூக நீதியும், சம வாய்ப்புகளும் வழங்கப்படாத ஒரு தேசத்தில் நிகழும் பித்தலாட்ட ஜனநாயகத்தை திரு. பீ.ஏ கிருஷ்ணன்.   

தனது அறிவுத் திறனை ஒரே ஒரு இடத்தில் மட்டும் பீ.ஏ . கிருஷ்ணன் இந்தக் கட்டுரையில் நிறுவி விடுகிறார் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும், பழிவாங்கலின் அவதூறுகள், இழத்தலின் வலி எல்லாவற்றையும் காற்றில் அள்ளி வீசி விட்டுக் கடைசியில் என்ன சொல்கிறார் பாருங்கள்,

"தனிப்பட்ட முறையில் நயத்தக்க நாகரீகத்தைக் கடைபிடித்தவர், வன்முறையை என்றுமே விரும்பாதவர்".

இந்த இரண்டு பண்புகளையும் கொண்ட ஒரு மனிதரை நீங்கள் எப்படி பாசிஸ்ட் என்று சொல்ல முடியும்???, ஆனால், முடியும், அந்த மனிதரின் கோட்பாடுகளால் கடும் இழப்புகளை சந்தித்து, அவர் மீது காழ்ப்போடும், வன்மத்தோடும் ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், நிச்சயமாக முடியும். அது உங்கள் இயல்பான அரசியல், பெரியார் இந்த சமூகத்துக்குச் செய்த மிகப்பெரிய நன்மைகளை நீங்கள் உணர்ந்து கொள்ளும் வரையில் பார்ப்பனராகவும், உணர்ந்த பிறகு மானுட குலத்தின் மகத்தான உறுப்பினராகவும் மாற்றம் பெறுவீர்கள்.                              

                           

பெரியாரின் மீது நீங்கள் சொல்லும் பாசிசக் கூறுகள் எல்லாம் வெறும் பிதற்றல்கள், உங்கள் மூதாதையர்களின் தோல்வியை வெற்றி கொள்ள நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வு என்பதைத் தவிர என்ன சொல்வது. "The Muddy River" மாதிரி புனைவுகளை தொடர்ந்து நீங்கள் எழுதிக் கொண்டே இருக்கலாம், பெரியாரைக் குறித்து எழுத  நீங்கள் இன்னும் வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது  திரு. பீ. ஏ .கிருஷ்ணன்.

************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 21, 2015

கிழக்கின் போலி முகங்கள்.

css1000

கிழக்குப் பதிப்பகத்தின் இணையப் பதிப்பு "சொல்வனம்", கிழக்கின் டைரக்டர் ஜெனரல் "பத்ரி சேஷாத்ரி", சொல்வனத்தின் டைரக்டர் ஜெனரல் "அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்", கிழக்கின் அரசியல், தமிழ் கூறும் நல்லுலகில் முழு வெற்றி பெற்ற கோட்பாடான திராவிட இயக்கக் கோட்பாடுகளை நீர்த்துப் போகச் செய்து மீண்டும் கக்கத்தில் துண்டைக் கட்டிக் கொண்டு "சாமி வரார், வழி விடுங்கோ" என்கிற வேத கால ஒற்றையடிப் பாதையை நோக்கி மக்களை இயன்ற அளவுக்கு நகர்த்துவது, முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு மிதவாத பார்ப்பனீயம் பேசி மக்களை மழுங்கடிப்பது.

கிழக்கின் பெரும்பாலான நூல்கள் தமிழ்த் தேசியச் சிந்தனைகளையும், திராவிடக் கோட்பாட்டுச் சிந்தனைகளையும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ எதிர்ப்பது. தமிழ் ஈழப் போரில் விடுதலைப்புலிகளால் தான் எல்லாச் சிக்கல்களும் உருவாகி சிங்களர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று புழுகி நிறுவுவது, சிந்துச் சமவெளி நாகரீகம் தமிழ் மொழிக்கூறுகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதது என்று எப்படியாவது கூலிக்கு மாரடிக்கும் வெளிநாட்டு அறிஞர்களை வைத்து உறுதிப்படுத்தி நிம்மதியாக உறங்கப் போவது.

இவர்களை மையமாக வைத்து இயங்கும் ஒரு ஒட்டுண்ணி எழுத்தாளர் குழாம் இருக்கிறது, இவர்களின் இப்போதைய அஜெண்டா, "பெரியார்". அவர் ஒரு படுபயங்கரமான பாசிஸ்ட், அவர் எப்போதும் கொலை வாளோடு அலைந்தவர், பெரியாரால் தான் இந்த ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமே நாசமாய்ப் போனது என்பது போல எழுதுவது.

பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாக, அவர்களின் சுயநலக் கோட்பாடுகளில் விரலை விட்டு ஆட்டி, நூறாண்டு கால சொகுசுச் சுரண்டல் வாழ்க்கையை கேள்வி கேட்டு "சாமி சாமி" என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்களை எல்லாம் பார்ப்பனீயத்தின் மனிதத் தன்மையற்ற சுயநல விஷத்தை அறிந்து கொள்ள வைத்தார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்கிற உண்மையை எப்படியாவது மறைத்து, அவருடைய கழிவறையில் மலக்குழிக்குக் கீழே அவர் எழுதி வைத்திருந்த பல அரிய உண்மைகளை எல்லாம் ஆய்வு செய்து உலகத்துக்குச் சொல்லுவது போன்ற "அபத்த" மான குப்பைகளை ஆய்வு தோற்றக் கூறுகளோடு "பாசிசத்தின் கூறுகள், மார்க்சியத்தின் தரவுகள்" போன்ற கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்குக் கொண்டு வருவது,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பார்ப்பனீயம் தழைத்து ஆபத்தின்றி வளரும் காலத்தில் தமிழகத்தில் மட்டும் தங்கள் பல்லாண்டு கால சொகுசு வாழ்க்கையையும், புராணப் புளுகுகளையும் துரத்தி அடித்து ஆயிரமாண்டு கால இருட்டை அறுபதாண்டு கால பகுத்தறிவுக் கேள்விகளால் துளைத்து மூக்கறுத்து மூச்சு முட்ட வைத்த வெண்தாடிக் கிழவனை அவனது கோட்பாடுகளை வீழ்த்துவது என்பது மானுட குல அழிவுக் கோட்பாடான பார்ப்பனீயத்தின் மிக முக்கியமான வேலைத்திட்டம் என்பது பலமுறை தோலுரிக்கப்பட்ட உண்மை.

இப்போது புதிதாகக் கிளம்பி இருக்கும் கிழக்குச் சிந்தனையாளர் வரிசையில் "அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்" என்கிற பீ. ஏ. கிருஷ்ணன் அதே பழைய பஞ்சாங்கக் குப்பையைக் கிளறி புழுதி வாரித் தூற்றி தங்கள் மூதாதையர்களின் ஆவிகளை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால், இந்த கிழக்கு லாபிக்கு ஒரு சின்ன விஷயம், நீங்கள் பெரியார் குறித்த உங்கள் உயர்தர சைவ ஆய்வுகளை மேற்கொண்டு இங்கிருக்கும் திராவிடக் கோட்பாட்டால் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொண்ட இணைய இளைஞர்களை திசை மாற்றி வலது சாரி சிந்தனையாளர்களாய் மாற்றி விட முடியும் என்று நினைப்பது மோடி இந்தியாவை முன்னேற்றுவார் என்பதைப் போன்ற அக்மார்க் நகைச்சுவை.

பெரியார் இந்திய தேசத்தின் மிகச் சிக்கலான உழைப்புச் சுரண்டலையும், பிறவித் தகுதிகளையும் கட்டமைத்த வர்ணக் கோட்பாடுகளின் எதிரி, அவருக்கு உங்களைப் போல ஆய்வு ரீதியாகவோ, வரலாற்றுப் புரிந்துணர்வுடனோ பேச வராது, ஆனால், தெளிவாக இலக்கை நோக்கி அடித்தவர், அதனால் தான் நீங்கள் இன்னும் 117 ஆண்டுகளுக்குப் பின்னரும் பெரியார் குறித்த பல ஆய்வுகளையும் தரவுகளையும் நோக்கி ஓடுகிறீர்கள்.

நீங்கள் முன்வைத்துப் பேச வேண்டியது அவருடைய அரசியல் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வந்தது, தமிழ் சமூகத்துக்கு மட்டுமன்றி இந்திய சமூகத்தின் பல்வேறு ஒடுக்கப்பட்ட தொல்குடி மக்களுக்கு என்ன மாதிரியான மீளுரிமைகளைக் கொண்டு வந்தது, அவருடைய இருப்பு எப்படி வெறும் அரசியல் இயக்கமாக இல்லாமல் சமூக இயங்கியலின் மிக முக்கியமான மாற்றமாக அமைந்தது என்பதைக் குறித்துத் தான். அவற்றைக் குறித்த நேர்மையான விவாதங்களில் நீங்கள் பங்கேற்க மாட்டீர்கள். பார்ப்பனீய லாபியால் அல்லது கிழக்கு பதிப்பகம் மற்றும் சொல்வனம் லாபிகளால் பெரியாரை வீழ்த்தி விட முடியாது, மாறாக, அவர்களே பெரியாரின் இருப்பை அவரது சிந்தனைகளின் நிலைத்த உறுதியான இருப்பை மீண்டும் மீண்டும் நமக்கு உறுதி செய்பவர்கள்.

ஆகவே, பெரியார் குறித்த பார்ப்பனீய லாபியின் கூச்சல் இருக்கும் வரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது தான் பொருள், மற்றபடி பெரியார் குறித்த விவாதங்களில் பீ.ஏ. கிருஷ்ணன், பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் "ஜஸ்ட் லைக் தட்" நிராகரிக்கப்பட வேண்டிய கிழக்கின் போலி முகங்கள்.

 

************

Older Posts »

பிரிவுகள்

%d bloggers like this: