கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 16, 2015

ஒரு துரத்தப்பட்ட "ஓரிகாமி".

origami-flowers1

இந்த உலகம் முழுக்கக் கண்ணுக்குத் தெரியாத சொற்களால் கட்டப்பட்டிருக்கிறது, சொற்களின் பின்னே உயிர், உடல், படை, பொருள், அரசியல், வாழ்க்கை என்று எல்லாம் அணிவகுத்து அடிமைகளைப் போல நடப்பதை உங்களால் உணர முடியும், உறுதி கொடுக்கப்பட்ட சொற்கள் நம்பிக்கையையும், கழுவி விடப்பட்ட சொற்கள் துயரத்தையும் பரப்பியபடி அனிச்சையான காற்றில் மலரும் மலர்களைப் போல அலைவதைப் பார்த்திருக்கிறேன்.

காத்திருத்தலின் சொற்கள், காதலின் சொற்கள், போர்க்களத்தில் பாதி உச்சரிக்கப்பட்டு தோட்டாக்களால் விழுங்கப்பட்ட சொற்கள், அவமானத்தின் சொற்கள், பிரிவில் கருகிப் போன சொற்கள், மகிழ்ச்சியில் கண்ணீராய்த் திரளும் சொற்கள் என்று சொற்களின் கூர்மையான முனைகள் வளி மண்டலத்தின் வெளியில் கட்டப்பட்ட தோரணங்களைப் போல ஆடிக் கொண்டிருக்கின்றன. தன்னிடம் இருந்து பிரிந்து போன சொற்களின் பின்னே தான் மனிதனின் காலடித் தடங்கள் பயணம் செய்கிறது,

இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான ஒரு வழக்கை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் பேரண்டத்தின் வெளியில் சிதறடிக்கும் சொற்களை கருப்பு சிவப்பு வண்ணத்துப் பூச்சியின் பாதையில் தும்பைச் செடிகளோடு விரட்டி அலைந்து பிடித்திருக்கிறீர்களா? இருவருக்கும் நிறைவான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனடியாக அதைச் செய்து முடித்து விடுங்கள், உயிர்ப்பும், உற்சாகமும் நிரம்பிய மனிதர்களாய் வாழ ஒரு எளிய வழி இருக்கிறது, குழந்தைகளோடும் அவர்களின் வினோத உலகத்தோடும் நெருங்கி வாழ்வது.

பார்க்க முடியாத நிலப்பரப்புகளைப் பார்க்க நம்மிடம் இருக்கும் காதலைப் போல இதுவும் அற்புதமானது. நிறைமொழியை பள்ளியில் விட்டு விட்டு படிக்கட்டுகளில் கீழே இறங்கிக் கொண்டிருந்தேன், வாசலில் வெள்ளை மீசையோடு பெரிய குச்சியைக் கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்த வாயிற் காக்கும் பெரியவர் சிரித்தார், தொடர்ந்து அவரது இயக்கத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன், அவர் குழந்தைகளை மிரட்டுவார், ஆனால், குழந்தைகள் அவரைக் கண்டு அஞ்சுவதில்லை, மாறாக இன்னும் நெருக்கமாக அவரிடம் போகிறார்கள், மாறிப் போன பென்சில்களையும், ரப்பர்களையும் குறித்த பஞ்சாயத்துக்களை அவரிடம் சில குழந்தைகள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

தீவிரமாக அந்தப் பஞ்சாயத்துக்கான தீர்வுகளை அவர் இருதரப்புக் குழந்தைகளிடமும் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் வாழ்வின் மிக முழுமையான காட்சியாக நான் உணர்கிறேன், தான் செய்கிற வேலையை முழுமையான ஈடுபாட்டோடும், குழந்தைத்தனமான அன்போடும் செய்கிற எவரையும் நமக்குப் பிடித்து விடுகிறது, அத்தகைய மனிதர்களிடம் குழந்தைகள் ஒட்டிக் கொண்டு விடுகிறார்கள்.

papier_vouwen_een_ware_kunst

நான்கு அல்லது ஐந்தாம் வகுப்புப் படிக்கிற போதென்று நினைவு சிவகங்கைத் தெப்பக்குளத்தில் கட்டுமான வேலைகளைச் செய்து முடித்துவிட்டுக் குளித்துக் கொண்டிருக்கிற மனிதர்களையும், களைத்த முகத்துடன் வாயோடு கட்டப்பட்டிருக்கும் புற்கள் நிரம்பிய சாக்கிலிருந்து வேண்டா வெறுப்பாக முதுகுக் கொசுக்களை வாலால் விரட்டியபடி நின்றிருக்கும் குதிரை வண்டிகளையும் வேடிக்கை பார்த்தபடி வீட்டுக்குத் திரும்பும் மாலைப் பொழுதுகள் நினைவில் வருகிறது.

அப்படி ஒரு மாலையில் நான் அந்தப் பெரியவரைப் பள்ளி வாயிலில் பார்த்தேன், வண்ணக் காகிதங்களை வெட்டியும், மடக்கியும் மலர்களைச் செய்து கொண்டிருந்தார், அவரது கண்களில் காகித மலர்களை விற்கிற ஆர்வத்தை விட நான் காகிதங்களை வெட்டியும் மடக்கியும் அழகிய பூக்களை உருவாக்குபவன் என்கிற பெருமை நிரம்பி இருந்தது, நாவல் பழங்களையும், சவ்வு மிட்டாயையும் கூடைகளில் வைத்து விற்கும் வழக்கமான மனிதர்களுக்கு இடையே இவர் காகித மலர்களைச் செய்து கொண்டிருந்தார்.

 

வாங்கும் கூட்டத்தை விட வேடிக்கை பார்க்கிற கூட்டம் அதிகம் அங்கே, அந்தக் காகித மலர்கள் என்னுடைய மனதையும் கொள்ளை கொள்ளப் போதுமான அழகு கொண்டவையாக இருந்தன, அப்பாவுக்குக் குழந்தைகளிடம் வாங்கித் தின்பதற்கான காசு கொடுக்கும் பழக்கம் அறவே இல்லை, எனக்கோ அந்த மலர்களில் ஒன்றை வாங்கி விட வேண்டும் என்கிற தீவிர ஆர்வம். வேடிக்கை பார்க்கிற சக மாணவர்களோடு அவருடைய கைகள் செய்யும் அற்புதங்களை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஜப்பானிய "ஓரிகாமி" வண்ண மலர்களைப் போல அவர் கரங்களில் இருந்து மலர்கள் பூத்துக் கொண்டிருந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக மாலையின் கதிர்கள் ஆவாரம் பூக்களின் நிழலை நெடிதாகச் செம்மண்ணில் வீழ்த்திக் கொண்டிருந்த அந்த மாலையில் கடைசியாக நான் அவரிடம் போனேன், "ஐயா, நீங்கள் வீட்டுக்கு வர முடியுமா? நான் உங்களிடம் இருந்து ஒரு காகித மலரை வாங்க வேண்டும், ஆனால், என்னிடம் பணமில்லை, எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால் அப்பாவிடம் பணம் வாங்கி உங்களிடம் கொடுப்பேன்" என்று மெல்லிய குரலில் அவரிடம் வேண்டுகோள் வைத்தேன்.

"தம்பி உன் வீடு எங்கே இருக்கிறது?"

"என் வீடு NGO காலனியின் "பி" ப்ளாக்கில் இருக்கிறது, வீட்டு எண் "46""

உண்மையில் பள்ளியில் இருந்து வெகு தொலைவில் இருந்தது வீடு, சிவகங்கையின் கிழக்கு எல்லையின் முடிவில் ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த அரசு அலுவலர் குடியிருப்பு நீண்ட நெடுந்தொலைவு, ஏறத்தாழ 5-6 கிலோமீட்டர்கள் இருக்கலாம், ஒரு 25 பைசா விற்பனைக்காக எந்த வணிகரும் இவ்வளவு தொலைவைக் கடந்து வருவார் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அந்தப் பெரியவர்,

"சரி தம்பி, நான் வருகிறேன், நீ வீட்டுக்குப் போ" என்று சொன்னார்.

நம்பிக்கை கொஞ்சம் குறைவு தான், ஆனாலும் ஒரு எதிர்பார்ப்போடு வீட்டுக்கு ரிக்சாவில் வந்து சேர்ந்தோம், வீட்டில் அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை, அப்பா வருவதற்கு எப்படியும் 7 மணி ஆகலாம், அம்மா, எங்கோ கடைக்குப் போயிருக்க வேண்டும், சாவி பக்கத்துக்கு வீட்டில் இருந்தது. பெரியவரை மறந்து விட்டு வேறு ஏதோ செய்து கொண்டிருந்தோம்.

ஆறு மணியிருக்கும், வலது கைகளில் காகித மலர்களைச் சுமந்தபடியும், நீலநிறத் தோல் பையில் இடது கையை நுழைத்தபடியும் திடுமெனப் படிகளுக்குக் கீழே காட்சி அளித்தார் ஓரிகாமிப் பெரியவர். எனக்கோ தூக்கி வாரிப் போட்டது. அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை, இந்த முதியவரோ இந்தச் சிறுவனின் பேச்சை நம்பி இத்தனை தூரம் வந்திருக்கிறார், அவரை ஒரு காகித மலர்கள் விற்கிற வணிகர் என்கிற மனநிலையைத் தாண்டி அவருடைய கலையை நேசிக்கும், அவருடைய கலையால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுவனாக அப்போது நானிருந்தேன், அவர் வாசலிலேயே அமர்ந்து கொண்டார்.

origami-flowers-300x176

நேரம் கடந்து கொண்டே இருக்க அவரை வெகு நேரம் காக்க வைக்கிறோம் என்கிற குற்ற உணர்வில் மனம் பேதலிக்க, 25 பைசாவைத் தேட ஆரம்பித்தேன், வெண்கலத்தால் ஆன வழக்கத்தில் இருந்து அழிந்து போன பத்துப் பைசா நாணயங்கள் இரண்டு ஒரு டப்பாவில் இருந்தது, அவற்றை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வருவதற்கும், அம்மா படிகளில் ஏறி வருவதற்கும் சரியாக இருந்தது. அம்மாவுக்கு அநேகமாகக் குழப்பம், யார் இந்தப் பெரியவர், நான் என்ன கொடுக்கப் போகிறேன் என்கிற வினாக்களோடு பெரியவரைப் பார்த்தார்கள்.

பெரியவர், எழுந்து அம்மாவுக்கு வழி விட்டார், அம்மா, என்னிடம் நிகழ்ந்தவற்றைக் கேட்டறிந்து கொண்டார், என் கைகளில் இருந்த நாணயங்களைப் பிடுங்கிக் கொண்டார்.

 

"ஏய்யா, அவன்தான் சின்னப்பய, ஏதோ சொல்றான்னு, நீங்களும் வந்து இப்டி வீட்ல உக்காந்திருக்கீங்களே, கெளம்புங்கய்யா மொதல்ல" ஏறக்குறைய துரத்தல், பெரியவர் அவமானத்தால் குறுகியவரைப் போலிருந்தார், அவருடைய கைகளில் மலர்கிற காகித மலர்களை யாரோ கிழித்து எரிவதைப் போன்ற வலியோடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன், அம்மாவின் கைகள் எனது முதுகில் வலுவாக இறங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த வலியை விட அந்தப் பெரியவரை நான் அவமானப்படுத்தி அனுப்புகிறேன் அன்பது அதிக வலியூட்டுவதாக இருந்தது.

"அம்மா, புள்ளைய அடிக்காதீங்க" படிகளில் இறங்கிய போது காற்றைச் சலனம் செய்த அந்தப் பெரியவரின் சொற்கள் இன்னும் உயிர்ப்போடு எனக்குள் ஒரு நெருஞ்சி முள்ளின் கூரிய முனைகளைப் போல இருக்கிறது. அந்த வண்ணக் காகித மலர்கள் மாலைச் சூரியனின் கதிர்களை எதிரொலித்தபடி காற்றில் அசைந்து என் கண்களில் இருந்து மறையும் வரை நான் அந்தப் பெரியவர் போன பாதையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.வாழ்க்கையில் திரும்பச் சந்தித்து மன்னிப்புக் கேட்க விரும்புகிற பட்டியலில் எப்போதும் இந்த ஓரிகாமிப் பெரியவரின் காகித மலர்களுக்கு இடம் உண்டு.

origami-flower

"நீ வீட்டுக்குப் போ தம்பி, நான் வருகிறேன்" என்கிற அவரது சொற்களை அவர் காப்பாற்றி விட்டார்.

"ஒரு காகித மலரை வாங்கிக் கொள்கிறேன், வீட்டுக்கு வாருங்கள் ஐயா" என்கிற என்னுடைய சொற்கள் கேட்பாரற்ற அனாதைக் குழந்தையைப் போல அலைகிறது.

இப்படி எத்தனை எத்தனை கண்ணுக்குத் தெரியாத சொற்களால் நிரம்பி இருக்கிறது இந்த பிரபஞ்ச வெளி, சுற்றி அலைகிற நிறைவேறாத சொற்கள் பின்பொரு நாளில் உயர உயரப் பறந்து நிலைகொண்டு நட்சத்திரங்களாய் உருமாறிக் கண் சிமிட்டியபடி நம்மைக் கேலி செய்கின்றன, நாம் ஏதுமறியாதவர்களைப் போல நட்சத்திரங்களைப் பார்ப்பதை இப்போதெல்லாம் தவிர்த்து விடுகிறோம்.

 

**************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 9, 2015

ஒரு கதை எப்படி முடிகிறது?

10_Biorb_30_Black

இந்தக் கதையை நான் உங்களுக்குச் சொல்வது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான், ஆனாலும் அதிலே ஒரு சிக்கல் இருக்கிறது, நான் இப்போது கதையின் கடைசிப் பகுதியில் நின்று கொண்டிருக்கிறேன், ஆகவே கடைசியில் இருந்தே இந்தக் கதையை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உண்மையாகச் சொல்லப் போனால் கதைகள் ஒருபோதும் தொடங்குவதும், முடிவதும் இல்லை, தன் பாட்டில் நீண்டு கிளைத்துக் கிடைக்கிற இடைவெளிகளை எல்லாம் நிரப்பியபடி பயணிக்கும் கதைகளின் ஏதாவது ஒரு துண்டுப் பகுதியில் நாம் ஏறிக் கொண்டு விடுகிறோம் அல்லவா?

அப்படி ஒரு கதை நிகழ்கிற காலத்தில், நானும் என் மகன் அகத்தியனும் நகரத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிற எங்கள் சொந்த ஊரின் இந்த ஏரிக்கு வந்திருக்கிறோம், சதுர வயல்களில் விவசாயம் பார்த்தபடி மனிதர்கள் ஓய்வு நேரத்தின் போது திண்ணைகளில் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள், காலத்தின் நிழல் இந்த ஊரின் ஆன்மத்தில் படிந்து கிடக்கிறது, இந்த ஊரில் விறகுகளால் எரிக்கப்படும் அடுப்புகள் எந்த வீட்டிலாவது புகைந்து கொண்டே இருக்கிறது, அதன் கதகதப்பில் ஒரு தட்டை மடியில் வைத்துக் கொண்டு எரியும் சுவாலைகளின் நிழலைக் கண்களில் ஏந்தியபடி அன்பானவர்களின் அருகே அமர்ந்து  இரவு உணவு சாப்பிடுவதுதான் வாழ்க்கையை எத்தனை நெருக்கமாக உணரச்  செய்திருக்கிறது தெரியுமா? மரக்கிளைகளில் அடைந்து கிடக்கும் இருட்டுக் கதைகள், சுவர்க்கோழிகளின் ஓயாத பிதற்றல், மின்மினிப் பூச்சிகளின் அடர்த்தியான வெள்ளி நிற ஒளியில் இலையசைக்கும் வேப்ப மரக் காற்றின் வாசம்,    இந்தக் கதையைப் படிக்கும் பலருக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை, இந்த எரிக் கரையின் படித்துறைகளை ஒட்டியபடி   சில நீளக்கால் கொக்குகளும், பழுப்பு நிற மாடுகளும் நின்று கொண்டிருப்பதை எங்களால் இப்போதும் பார்க்க முடிகிறது.

பழுப்பு நிற மாடுகளைக் கண்டால் இப்போதும் எனக்குள் ஒரு விதமான நடுக்கம் தோன்றி மறைவதை என்னருகில் இருந்தால் உங்களால் பார்க்க முடியும், மிகச் சிறிய வயதில் இதே மாதிரியான ஒரு முரட்டுப் பழுப்பு மாடு எனது தாடையில் கொடுத்த உதையின் சுவடுகள் இன்னொரு கதையின் முதுகில் ஏறிப் பயணம் செய்யக்கூடும், ஏரியின் பரப்பில் சில நீர்க் காக்கைகள்  முக்குளித்து எழுவதும், அலைகளை உருவாக்குவதுமாய் இருந்ததை நான் என் மகனுக்குக் காட்டினேன், தொலைவில் திட்டுத் திட்டான மேகங்களைக் கடந்து வெகுநாட்களாய் அங்கேயே நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குடும்பத்தில் இருந்து விலகிப் போன மலைக் குன்று ஒன்றையும் நாங்கள் அகண்ட வானத்தின் அடிவாரத்தில் பார்க்க முடிந்தது, புளிய மரங்களின் கீழே சுதந்திரமாய் ஊர்ந்து போகிற சில அட்டைப் பூச்சிகள் அகத்தியனுக்கு அச்சத்தைக் கொடுத்திருக்க வேண்டும், அவன் எனது கால்களோடு ஒட்டியபடி நடக்கத் துவங்கி இருந்தான்.

நான் அப்பாவோடு இப்படிப் பல முறை ஈரத் துண்டை இடுப்பில் சுற்றியபடி ஏரிக் கரைகளில் நடந்து போயிருக்கிறேன், இதே கருஞ்சிவப்பு அட்டைப் பூச்சிகள் என்னையும் பயமுறுத்தி இருக்கின்றன. காலம் ஒரு கண்டிப்பான ஆசிரியரின் வகுப்பறையைப் போல இரவும் பகலுமாய் மனித உடல்களைக் கடந்து உயிர்களின் இயக்கத்தை தளர வைத்து விடுகிறது பாருங்கள், அன்றைக்கு இளமையாக இருந்த அதே அப்பாதான், அதே நான்தான், ஆனாலும், நாங்கள் மீண்டும் அப்படி ஏரிக் கரைகளில் நடந்து போக முடியும்  என்று தோன்றவில்லை, மூப்பும், வயதும் மனிதனால் எந்தக் கணத்தில் உணர்ந்து கொள்ளப்படுகிறது என்கிற ரகசியத்தை இயற்கை மட்டுமே வேடிக்கை பார்த்தபடி  நின்று கொண்டிருக்கிறது.

சரி, இப்போது இந்த ஏரியைக் குறித்து உங்களுக்குச் சொல்ல வேண்டும், இந்த ஏரியின் பெயர் "பெரிய சுரண்டை", பெரிய சுரண்டைக்கு இந்தப் பெயர் வந்ததன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது, அப்பத்தாவோடு ஓரிதழ்த் தாமரை பறிக்க வந்த போது ஒருநாள் நான் இந்தக் ஏரிக்கு ஏன் இப்படிப் பெயர் வந்தது என்று அவரிடம் கேட்டேன், மனிதர்களின் தோலைச் சுரண்டி ரத்தம் உறிஞ்சும் சுரண்டை என்கிற பெரிய பெரிய அட்டைப் பூச்சிகள் இந்தக் கண்மாயில் நிறைய இருப்பதால் "பெரிய சுரண்டை" என்று பெயர் வந்ததாக அவர் சொன்னதைக் கேட்டதில் இருந்து குளிக்க வரும்போதெல்லாம் உடலைச் சுற்றிக் பாய்ச்சி கட்டி இருக்கும் கலங்கிய நீரின் பரப்பை ஊடுருவிப் பார்த்தபடியே இருப்பேன் நான்.

இப்போது நாங்கள் ஏன் இந்த எரிக் கரைக்கு வந்து நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிய ஆவலாய் இருப்பீர்கள், அதோ அந்தப் படித்துறைக்கு அருகே இருக்கும் மதகடியில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கிறது பாருங்கள், அதற்குள் சில மீன்களை நாங்கள் அடைத்து எடுத்து வந்திருக்கிறோம், அவற்றை நாங்கள் எங்கள் நகரத்து வீட்டின் முற்றத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம், புத்தம் புதிதாய் அகத்தியனால் தேடித் தேடி வாங்கப்பட்ட அந்த மீன் தொட்டியின் சுவர்களை உடைத்து வெளியேற முடியாத தங்க நிறக் குட்டி மீன்களை அவற்றின் வழக்கமான வாழ்க்கைக்குத் திருப்பி அனுப்புவது என்கிற முடிவில் என்னை விடவும் இப்போது அகத்தியன் உறுதியாக இருந்தான்.

நீண்ட காலமாக இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த அகத்தியன் மனமுவந்து ஒப்புக் கொண்டதற்குக் காரணம் இன்னொரு கதை தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா என்று தெரியவில்லை, ஆனாலும் உண்மை அதுதான்.  நாங்கள் இங்கு வருவதற்கு முன்னாள் சரியாக ஆறு நாட்களுக்கு முன்னொரு விடுமுறை நாளின் மாலைப் பொழுதில் அந்தக் கதையை நான் அகத்தியனுக்குச் சொன்னேன்.

அது ஒரு குட்டி மீனின் கதை, தனது தாயோடு மகிழ்ச்சியாக நீந்திக் களித்துக்கொண்டிருந்த அந்தத் தங்க நிறத்தான குட்டி மீன் பிடிக்கப்பட்டு ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அடைக்கப்பட்ட கதை, அகத்தியன் அந்தக் கதையைக் கேட்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவனாக இருந்தான், இடையிடையில் சில கேள்விகளையும் கேட்டபடி கதையின் முடிவில் ஒரு பெருமூச்செறிந்து அகத்தியன் இப்படிச் சொன்னான், "எனக்கு மீன் தொட்டி வேண்டாம் அப்பா, நாம் இந்த மீன்களை விடுதலை செய்து விடுவோம்".

சரி, இப்போது நீங்கள் அந்த மீனின் கதையைக் கேட்க ஆர்வமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன், இந்தக் கதையில் சிக்கல்கள் ஏதும் இல்லை, ஏனென்றால் வழக்கமாக நாம் கேட்கும் கதைகளைப் போலவே இந்தக் கதையும் ஒரு ஊரிலே என்று தான் துவங்கும், அது  ஒரு மிகப்பெரிய ஏரி, அடர்ந்த மரங்கள் சுற்றிலும் கிளைத்துக் கிடக்க, சூரியக் கதிர்கள் கொஞ்சமாய் உள்ளிறங்கி மிதமான சூட்டை நீருக்கு வழங்கி மீன்களின் வாழ்க்கையை நம்பிக்கை கொள்ள வைக்கும் காலநிலை அங்கு எப்போதும் நிலவியது.

Fish-11

ஒரு மழைக்காலத்தின் முன்பகலில் முட்டையிலிருந்து வெளியேறிய இந்த செந்நிறக் குட்டி மீன் முதன்முதலாகத் தனது தாயைத் தான் பார்த்தது, பிறகு தனக்கு முன்னாள் பிறந்த மீன் குஞ்சுகள் பலவற்றையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தது, அடர்ந்து வளர்ந்திருந்த தாயின் செதில்கள்  தனது புதிய குஞ்சுகளை வாஞ்சையோடு பார்த்தபடி வருடிக் கொடுத்தன, கடைக்குட்டி என்பதால் இந்தக் கதையின் நாயகியான தங்கநிற மீன்குஞ்சு கொஞ்சம் செல்லமாய் வளர ஆரம்பித்தது, அவர்களின் வீடு ஒரு கரும்பாறையின் அடிப்புறம் மண்டிக் கிடந்த நீர்ச் செடிகளுக்குப் பக்கத்தில் இருந்தது.

அதிகாலையில் எழுந்து அம்மா தனது குஞ்சுகளை எழுப்பி, நீந்துவதற்கு அழைத்துப் போகும், ஒருவரை ஒருவர் முட்டி மோதியபடி சிரிப்பும், பாட்டுமாய் அவர்கள் கிளம்பி நீருக்கு அடியில் இருக்கிற சுரங்க ஓடையைக் கடந்து  இரை தேடப் போவார்கள், நாள் முழுதும் மகிழ்ச்சியாக நீந்தியபடி இருந்த தனது குஞ்சுகளுக்கு முதல் முறையாக நீரின் மேற்பரப்பைத் தாய் மீன் காட்டிய போது கரையில் பழைய கதையின் நீளக் கால் கொக்குகளைப் போலவே சில நின்று கொண்டிருந்தன, அந்தப் பகுதிக்கெல்லாம் போகக் கூடாதென்றும், மீறிப் போனால் கொக்குகளுக்கு இரையாக நேரிடும் அல்லது மனிதர்களின் வலைக்குள் சிக்கி விட நேரிடும் என்றும் அம்மா கண்டிப்பான குரலில் தனது உடலைக் கருஞ்சிவப்பு நிறத்தில் மாற்றிக் கொண்டு சொன்னாள்.

அடங்காத சில அண்ணன்கள் மட்டும் எப்போதாவது கரையோரங்களுக்குப் போவதை ஒரு சாதனையாகச் சொல்லித் திரிந்தார்கள், கரையில் தாங்கள் பார்த்த பழுப்பு நிற நாரையின் கால்கள் நமது வீட்டுக்கு அருகில் இருக்கும் செடிகளின் தண்டுகளைப் போல இருந்ததாக அவர்கள் அம்மாவுக்குத் தெரியாமல் பேசிக் கொண்டார்கள், அம்மா தனது குழந்தைகளை மிகவும் நேசித்தாள், அவர்களின் இன்ப துன்பங்களுக்காகவே ஒவ்வொரு நாளும் நீந்தியபடி வாழ்ந்து வந்த அம்மாவின் வாழ்க்கை குறித்து மீன்குஞ்சுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட அவள் தனது குஞ்சுகளை நேசிப்பதை நிறுத்தவே இல்லை.

மழை பெருகி வாய்க்கால்களின் வழியாக ஏரிக்குள் நுழையும் காலங்களில் காலங்களில் எதிர்ப் புறமாய் நீந்தி மலைப்பாதையில் பயணம் செய்வது குறித்தும், பிறகு திரும்பி வருவது குறித்தும் அம்மா தனது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள், கதிரவனின் ஒளி நீருக்குள் விழுந்து வேர்பரப்பும் இடங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அவை மனிதர்கள் வாழும் கரைப் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கக் கூடும் என்றும் அம்மா பாடமாய்ப் படித்தாள். சில நேரங்களில்  அவளுடைய வயதான துடுப்புகளும், செதில்களும் களைத்துப் போய் வலியெடுக்கும் போதிலும் தனது குஞ்சுகளுக்காக உணவு தேடுவதையும், நன்மைகளைச் சொல்லிக் கொடுப்பதையும் அவள் நிறுத்தவே இல்லை, கடைக்குட்டியான இந்தக் கதையின் நாயகி அம்மாவுக்கு மிக நெருக்கமாக நீந்தி வளர்ந்து கொண்டிருந்தாள்.

அம்மா ஒரு முறை மலைப்பாதையின் வழியாக தனது மீன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு எதிர்த் திசையில் நீந்திக் கொண்டிருந்த போது மனிதர்களின் தூண்டில் முள்ளில் இருந்து மயிரிழையில் தப்பிப் பிழைத்தாள், அன்று இரவு முழுவதும் மனிதர்கள் தங்கள் வாழிடங்களை ஆக்கிரமிப்பதாகவும், நம்மைப் போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் எல்லாம் அவர்களின் தேவைக்காகவே படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பது மட்டுமில்லை , அழகிய சின்னஞ்சிறு நாய்களை சங்கிலியால் பிணைத்துத் தங்கள் நடைப் பயிற்சியின் போது எதிர்ப்படும் மனிதர்களிடம் அந்த நாய்களின் ஜாதிப் பெயரை பெருமையோடு  உரக்கக் கூறுகிறார்கள், யானைகளைக் காது மடலில் குத்தி மண்டியிடச் செய்கிறார்கள், , கரடிகளை அவைகளுக்குத் தொடர்பே இல்லாத தெருக்களில் அழைத்துப் போய் தாயித்து விற்க வைக்கிறார்கள் என்று புலம்பித் தீர்த்தாள், தூண்டில் முள்ளில் இருந்து தப்பித்திருந்தாலும், அவளது வாயில் அது குத்தித் கிழித்து விட்டிருந்தது, அந்தக் கொலைகார மனிதர்கள் தாய் மீனைக் காயப்படுத்திய நிகழ்வுக்கு மறுநாள் தாவிக் குதித்து நீரைக் கலக்கி ஆபத்தான காலங்களில் எப்படித் தப்பிப்பது என்று அம்மா தனது குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள். கடைக்குட்டியான தங்க நிற மீன் குட்டி அம்மாவின் வாயில் இருந்து கசியும் குருதியைப் பார்த்தபடி பாடம் படித்தது.

கரும்பாறைத் திட்டின் இரண்டாவது அடுக்கில் எந்நேரமும் உறக்கத்தில் இருக்கும் நண்டு மாமாவுக்கு தாய் மீனின் இரைச்சல் மிகுந்த அந்தப் பயிற்சி எரிச்சலை உண்டாக்கி இருக்க வேண்டும், மூன்று நாட்கள் அவர் வேறொரு இடத்துக்கு இடம் பெயர வேண்டியிருந்தது. திரும்பி வந்த நண்டு மாமா, தாய் மீனிடம் இப்படிச் சொன்னார், ”அவர்கள் வளர்ந்தவுடன் உன்னை மறந்து விடுவார்கள், பார்த்தாயா என் பிள்ளைகளை, உன்னை விடவும் பல மடங்கு அதிகமான பயிற்சிகளையும், அன்பையும் நான் அவர்களுக்கு வழங்கினேன், ஆனால், இன்றைக்கு இந்த வயதான காலத்தில் என்னை அவர்கள் துரத்துகிறார்கள், எனக்கு குறைந்த பட்சம் அவர்களின் வேட்டையில் வீணாகும் உணவைக் கூடக் கொடுக்க மறுக்கிறார்கள்". தாய் மீன் நீண்ட நேரம் அமைதியாக இருந்து விட்டு இப்படிச் சொன்னது,  "நீ உன் வளைந்த கால்களை வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா!!! என் குழந்தைகள் உறங்கப் போகிறார்கள்". பற்களை நறநறவென்று கடித்தபடி பக்கவாட்டில் நகர்ந்து கொண்டார் நண்டு மாமா. அம்மாவைப் பொறுத்தவரை இறந்த காலம் என்பது நாங்கள் உறங்கிப் போகும் இரவுப் பொழுதாகவும், நிகழ் காலம் என்பது நாங்கள் விழித்திருந்து நீந்தும் பகல் பொழுதாகவும் மட்டுமே இருந்தது.

கடைக்குட்டியும், இந்தக் கதையின் நாயகியுமான மீன்குட்டி கொஞ்சம் வளர்ந்து பெரியவளான போது ஒருநாள் இரவில் நல்ல மழை பெய்து நீர் பெருகி இருந்தது, மறுநாள் காலையில் அவர்கள் வழக்கம் போலவே நீந்தப் போனார்கள், சுரங்க ஓடையைத் தாண்டி சல்லடை போல வளர்ந்திருந்த செடிகளுக்கு இடையே அவர்கள் கடந்து போன போது தான் அந்த நிகழக் கூடாத விபத்து நேர்ந்தது. நகரத்தின் ஓரத்தில் இருந்து வந்திருந்த மனிதர்கள் விரித்து வைத்திருந்த கரண்டி வலைக்குள் கடைக்குட்டி மாட்டிக் கொண்டு விட்டாள், கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்த அம்மாவின் கண்களில் கடைக்குட்டி தென்படவில்லை, வேகமாகத் திரும்பி நீந்திய அம்மாவின் காதில் கடைக்குட்டியின் அலறல் கேட்கத் துவங்கியது, “அம்மா, இங்கிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை, என்னை எப்படியாவது காப்பாற்று, காப்பாற்று” என்கிற கடைக்குட்டியின் அலறல் கேட்டுத் தாய் மீன் தவித்துத் துடித்தது, அதன் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரில் ஏரித் தண்ணீர் மூழ்கி மூச்சுத் திணறியது.

கரண்டி வலையைச் சுற்றியபடி நீண்ட நேரம் நீந்திக் கொண்டிருந்த தாய் மீனின் அழுகையை உணரும் ஆற்றல் அந்த நகரத்து மனிதர்களுக்கு இருக்குமா என்ன, அவர்கள் இறுதியாக கரண்டி வலையை மேலே தூக்கி மீன்களை எண்ணத் துவங்கினார்கள். தாய் மீன் கரையோரத்தில் கிடந்த குப்பைகளுக்கு இடையே புகுந்து தனது உயிருக்குயிரான கடைக்குட்டியைக் கடைசியாக ஒருமுறை பார்க்க முயற்சி செய்தது, ஆனால் மனிதர்களோ மீன்களுக்கு எட்டாத ஒரு மலைப்பாதையில் நடக்கத் துவங்கி இருந்தார்கள்.

அந்த நகரத்து மனிதர்கள் கடைக்குட்டி மீனோடு சேர்த்து பதினாறு மீன்களைப் பிடித்து இருந்தார்கள், அவர்கள் புகை பிடித்தபடி அந்த மலைப் பாதையின் வழியாக நடந்து நகரத்தின் ஓரத்தில் இருந்த ஒரு வீட்டுக்கு வந்தார்கள், மீன்கள் அடைக்கப்பட்டிருந்த கூடையில் இருந்து சில பெரிய மீன்களை அவர்கள் வெளியே எடுத்துக் கொன்று பொறித்துத் தின்றார்கள்,  அந்த வீட்டில் தகிக்க முடியாத வெப்பம் சூழ்ந்திருந்தது, புகையும், கூச்சலும் நிரம்பிய அந்த வீட்டின் ஒரு மூலையில் அன்றைய இரவு முழுதையும் கடைக்குட்டி மீனோடு தப்பித்த இன்னும் சில மீன்களும் கழிக்க வேண்டியிருந்தது, வண்ண மீன்களாய் இருந்ததால் அவை தப்பிக்க முடிந்தது என்கிற உண்மையை கடைக்குட்டி மீன் அறிந்திருக்கவில்லை.

இறப்புக்கு வெகு அருகில் சேறு நிரம்பிய ஒரு கூடை நீரில் அந்த இரவைக் கழித்த போது கடைக்குட்டி மீனுக்கு அம்மாவின் நினைவுகள்  பொங்கி எழுந்தன, கரும்பாறைக்கு அடியில் பாதுகாப்பாக உறங்கும் போது கூட அம்மா பல முறை விழித்துத் தங்களைப் பார்த்துக் கொண்டதை கடைக்குட்டி நினைத்துக் கண்ணீர் விட்டது. "அம்மா எத்தனை அழகானவள், அம்மா நம்மை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டாள், அவளது செதிளுக்குள் ஒண்டியபடி நிலவொளி மெல்ல நீருக்குள் கசியும் விழுதுகளைப் பார்த்தபடி  எத்தனை இரவுகளை நாம் கடந்திருக்கிறோம்" என்று கடைக்குட்டி மீன் அழுதபடி உறங்கிப் போனது,

how-to-introduce-new-fish-into-a-tropical-fish-tank-525d583a87ba4

மறுநாள் காலையில் அவர்களில் ஒருவன் மீன் கூடையைச் சுமந்தபடி நகரத்துக்குள் நுழைந்தான், நகர மனிதர்கள் தங்கள் குழந்தைகளோடு பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள், தாயின் அணைப்பில் செல்லும் குழந்தைகள், குழந்தைகளின் சிரிப்பில் கரையும் பெண்கள், தொப்பியோடு விரைப்பான வணக்கத்தைத் தனது மேலதிகாரிக்குச் செலுத்தும் காவலர் என்று யாருக்கும் இந்தக் கூடையின் ஒரு மூலையில் ஒடுங்கியபடி நடுங்கிக் கொண்டும், அழுது கொண்டும் தாயைக் குறித்து கவலை கொள்ளும் கடைக்குட்டியின் குரல் கேட்கப் போவதில்லை. இந்த உலகத்தை அவர்கள் முற்றிலுமாகக் கைப்பற்றி விட்டார்கள், அவர்களிடம் அறிவும், மொழியும் இருக்கிறது, அவற்றின் உதவியோடு ஏனைய உயிர்கள் அனைத்தினது சுதந்திரத்தையும் அவர்கள் பறித்து எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நீண்ட தொலைவு நடந்து சென்று "அக்குவா வேர்ல்ட்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கடைக்குள் நுழைந்தான் அந்த மனிதன், கடைக்குட்டியோடு சேர்த்து ஏழு மீன்களை அந்தக் கடையின் முகப்பில் அமர்ந்திருந்த இன்னொரு மனிதனிடம் காட்டிப் பின் மீன்களை ஒரு பளபளப்பான கண்ணாடித் தொட்டியில் விட்டுப் பணம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான். ஒரு மிகப் பெரிய ஏரியில் இருந்து கடைக்குட்டியின் வாழ்க்கை இப்படித்தான் ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் இடம் மாறியது. காலத்தின் செதில்களால் இழைத்துச் செய்யப்பட்ட நகர மனிதர்களின் கண்ணாடிக் குடுவைக்குள் அந்தக் கடைக்குட்டி மீனும், பிரிவின் வலிகளால் நிரப்பப்பட்ட பெயர் தெரியாத ஏரியில் தாய் மீனும் அழுது தவிக்க மனிதர்களின் மகிழ்ச்சிக்கான காட்சிப் பொருட்களாக ஏனைய உயிர்கள்  சிறைக்குள் தள்ளப்பட்டன.

இந்தக் கதையைத் தான் நான் அகத்தியனுக்குச் சொன்னேன், இந்தக் கதையை நான் சொல்லி முடித்த போது அகத்தியனின் கண்கள் கலங்கி இருந்தன, அவன் ஏறக்குறைய அழுது கொண்டே என்னிடம் “நாம் தொட்டியில் இருந்து மீன்களை விடுதலை செய்து விடலாம்” என்று ஒப்புக் கொண்டான். இந்த மீனின் கதையை நான் அகத்தியனுக்குச் சொல்வதற்குச் சரியாக பதினைந்து நாட்களுக்கு முன்னாள் முன்னொரு ஞாயிற்றுக் கிழமையில் நாங்கள் ஒரு அழகான மீன் தொட்டியை வாங்குவதற்காகப் புறப்பட்டோம்,

அகத்தியன் ஒரு மீன் தொட்டியை வாங்கி விட வேண்டுமென்பதில் மிகுந்த பிடிவாதமாய் இருந்தான், அவனுடைய நண்பர்கள் பலரது வீட்டில் வகை வகையான மீன் தொட்டிகள் இருப்பதாகவும், அவர்கள் தினந்தோறும் வகுப்பறைகளில் மீன்களின் வகைகள் குறித்துப் பேசிக் கொள்வதாகவும் என்னிடம் அடிக்கடி சொல்வான், முதல் நாள் இரவில் அழுது அடம் பிடித்து மீன் தொட்டி வாங்குவதற்கான அனுமதியை என்னிடம் இருந்து பெற்று விட்டான்.,

அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமான மனநிலையில் இருந்த அகத்தியனின் முகம் எனக்குக் கவலை அளித்தது, மீன் தொட்டிகளை  விற்பனை செய்யும் அந்தக் கடையை நோக்கி என்னை அழைத்துப் போனான் அகத்தியன்,  ஓரிடத்தில் எனது கைகளை விடுத்து வேகமாக நடக்கத் துவங்கிய அகத்தியனின் கைகள் உயர்ந்து அந்தப் பெயர்ப் பலகையின் மீது எனது கவனத்தைக் குவிக்க முயன்றன, நிமிர்ந்து ஒரு முறை அந்த ஆங்கில எழுத்துக்களை நான் படித்தேன், "அக்குவா வேர்ல்ட்".

இனி நாம் கதையின் துவக்கப் பகுதிக்கு வர வேண்டும், ஏனெனில் கதைகளை முடித்து விட வேண்டும் என்பது ஒரு விதியாகவே இருக்கிறது. உண்மையில் எந்தக் கதையும் முடிந்து போவதே இல்லை, மீன் கதையை எடுத்துக் கொள்ளுங்களேன், தவித்துப் போன தாய் மீனின் கதை இன்னும் மீதமிருக்கிறது, மனிதர்கள் பிடித்துப் போன கடைக்குட்டி மீனின் கதை எங்கேனும் ஒரு தொட்டிக்குள் தொடரக் கூடும், ஆனாலும், கதைகளை முடித்து விட வேண்டும் என்பது மனிதர்களின் இலக்கியத்தில் ஒரு அடங்காத விதியாக இருக்கும் பட்சத்தில் என்னால் விதியை உடைக்க முடியாது. ஆகவே கதை என்கிற காலத்தின் சிறிய துண்டு ஒன்று இங்கே முடிவடைகிறது அல்லது உங்களால் வாசித்து முடிக்கப்படுகிறது.

 

******************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 8, 2015

திராவிடம் வெறும் அரசியல் அல்ல…..

Periyar

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் எதிர்காலம் மற்றும் அதன் கொள்கைகள் சார்ந்த முடிவு, அதற்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டும், வசை பாடிக்கொண்டும் இருக்க வேண்டும் என்கிற தேவை இல்லை, ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்,

திராவிடம் என்கிற கருத்தாக்க அரசியல் உருவாகத் துவங்கியபோது தான் தமிழக அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளையும், ஒரு மதிப்புமிக்க சமூக வாழ்வையும் நோக்கி நகரத் துவங்கினார்கள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அடிமைகளாக நசுக்கப்பட்ட இந்தச் சமூகம் தந்தை பெரியாரின், பார்ப்பனீயத்துக்கும், சாதி ஆதிக்க மனப்போக்குக்கும் எதிரான போரின் போதே மிகப்பெரிய எழுச்சி பெற்றது, பல்வேறு சமூகத் தளங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்கிற மதிப்பீடுகள் நிரம்பிய தலைவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக வாழ்வில் எற்றமடைந்தார்கள்.

நிற்க, அதற்காகக் காலம் முழுவதும் திராவிடக் கட்சிகளுக்குக் காவடி எடுக்கிற அரசியலையே ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்கள் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது, இன்றைய ஒடுக்கப்பட்ட அரசியல் இயக்கங்களின் நிலையும், இலக்கும் வேறு, பெரியாரின் திராவிட இயக்கம் நிகழ்த்திய உரிமைப் போர் என்பது வேறு. ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் இன்று அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி என்பது திராவிட இயக்க அரசியல் வரலாற்றில் இருந்து பிழியப்பட்ட சாறு.

மிகுந்த இறுக்கமும், புறக்கணிப்பும் நிலவிய ஒரு சமூகக் கட்டமைப்புக்குள் இன்று இருக்கிற கொஞ்ச நஞ்ச நெகிழ்ச்சித் தன்மையை உருவாக்கியது திராவிட இயக்கங்களே என்கிற உண்மை கொஞ்சம் செரிக்கக் கடுமையானதாக இருந்தாலும் உண்மைத்தன்மை அதிகம் கொண்டது, மதிப்பீடுகள் அதிகம் நிரம்பியது. ஆகவே தான் திராவிட இயக்கங்களை விமர்சனம் செய்யும் போதும், தலைவர் கலைஞரை விமர்சனம் செய்யும் போதும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும், வரலாற்றுப் புரிந்துணர்வோடும் பேச வேண்டியிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குமான உறவு ஒரு தாய் மகவு உறவைப் போல தேர்தல் அரசியலைத் தாண்டி மதிப்போடு அணுகப்பட வேண்டியது, கலைஞரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பணிகளும், அதிகாரப் பரவலாக்கமும் முழுமையான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பீடுகள் நிரம்பியவை. அண்ணன் திருமாவளவன் கண்களைப் போன்றவர் என்றால் அந்தக் கண்களைத் தாங்கி நிற்கிற முகமாய், தலையாய்க் கலைஞர் இருக்கிறார்.

நமக்கு இருக்கிற கவலையெல்லாம் அண்ணன். திருமாவளவன் இந்தச் சிக்கலான நேரத்தில் எடுக்கிற முடிவுகள் எந்தக் காரணம் கொண்டும் பாசிச அடிமைகளின் தலைவியும், தமிழகத்தைப் பீடித்த நோக்காடுமான ஜெயாவையோ, ஒட்டு மொத்த தேசத்தை அழிவுப் பாதையை நோக்கி நகர்த்தும் ஆர்.எஸ்.எஸ் பண்டாரங்களின் கோட்பாடுகளும் தமிழகத்தில் நுழையக் கூடாது என்கிற ஒற்றைப் புள்ளியிலேயே இருக்கிறது.

காலம் விடை சொல்லட்டும்.

 

****************

கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 6, 2015

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாதிக் கட்சியா?

yousuf_07

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு. டி.கே.எஸ் இளங்கோவன் கடந்த வாரத்தில் ஒரு நாளிதழுக்கு அளித்த செவ்வியில், பாட்டாளி மக்கள் கட்சியையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் சாதிக் கட்சிகள் என்றும், தி.மு.க இவ்விரண்டு கட்சிகளோடும் இணைந்து செயலாற்றுவதை விரும்பவில்லை என்றும் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். பிறகு அடுத்த நாளே தி.மு.கவின் தலைவர் கலைஞர், இளங்கோவனுடைய கருத்துக்களுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர அரசியலில் இருக்கும் கலைஞருக்கு, உறுதியாக இளங்கோவனின் கருத்துக்கள் சமூக நீதிக்கும், திராவிட அரசியல் நிலைப்பாடுகளுக்கும் எதிரானது என்பதை உணர்ந்திருப்பார், ஏனெனில் சாதியை அடிப்படையாக வைத்தும், வர்ணச் சிந்தனைகளின் தீவிரத்தன்மைகளால் விளைந்த சமூக அநீதிகளுக்கு எதிராகவுமே திராவிட இயக்கம் உயிர்ப்புற்றது.

பார்ப்பனீயத்தின் நச்சு வேர் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை சமூகங்களின் வளர்ச்சியைப் பல்வேறு வழிகளில் முடக்கிக் கல்வி, பொருளாதாரம், பண்பாடு கலை மற்றும் கலாச்சார வெளிகளில் உருவாக்கி இருந்த இடைவெளியையும், அநீதிகளையும் எதிர்க்கும் அரசியல், சமூகக் குரலாகவே திராவிட இயக்கங்களின் மூலம் வளர்ச்சி அடைந்தது. நீதிக்கட்சிக்கு முன்பாகவே அறிவுத் தளத்தில் அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டை மலை சீனிவாசனும் திராவிடம் அல்லது தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்தின் முன்னோடிகளாக, ஒடுக்கப்பட்ட மனிதர்களின் அரசியல் முன்வடிவுகள் குறித்து உரத்துப் பேசியவர்களாக இருந்தார்கள், காலப்போக்கில் திராவிட இயக்கங்களில் பரவிய ஆதிக்க சாதிக் குடியேற்ற மனப்போக்கில் இந்தத் தலைவர்களின் குரல் அழித்துத் துடைக்கப்பட்டது.

15elan1

சிக்கல் இப்போது அதுவல்ல, டி. கே. எஸ் இளங்கோவனின் குரல் உணர்த்துவது என்ன? கலைஞர் சொல்வதைப் போல இது ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்தா? அல்லது சாதிய நச்சை அடிப்படையாக வைத்துத் தமிழக அரசியல் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியா? என்பதுதான். இளங்கோவன் என்றில்லை, தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தியில், இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால், ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரே கூட விடுதலைச் சிறுத்தைகள் மாதிரியான அரசியல் இயக்கங்களை சாதி கட்சிகள் என்று கருதுகிற, பேசுகிற உள்ளீடுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், இந்த உள்ளீடுகள், கருத்தாக்கம் எங்கிருந்து துவங்குகிறது? அல்லது அப்படி அவர்கள் கருதுவதற்கான நியாயம் ஏதேனும் இருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.

இந்த இடத்தில் அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை நினைவு கொள்ள வேண்டும், அவர் உலகெங்கும் வாழ்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து இப்படிச் சொல்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதையும், இயக்கங்களாக இணைந்து அரசியல் செய்வதையும், அவர்களுடைய சுய நன்மைகளுக்கான விடுதலை வேட்கை  என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியாது, மாறாக, இந்த நாகரீக சமூகத்தின் எஞ்சிய வேறுபாடுகளைக் களைந்து, சமநீதியை நோக்கிய, இன்னும் மேம்பாடடைந்த உலகை அடைவதற்கான மானுடத்தின் இயக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்”.

மனித குலத்தின் வளர்ச்சியையும், நன்மைகளையும் குறித்து அவர் எவ்வளவு உயர்வாகச் சிந்தித்திருக்கிறார்  என்பதற்கான ஒரு சோற்றுப் பதம் மேற்கண்ட அவரது சொற்கள். 

திராவிட இயக்கங்களின் எஞ்சிய கோட்பாட்டு அடையாளமாக இருக்கும் தி.மு.கவின் மூத்த தலைவரான டி. கே. எஸ் இளங்கோவனுடைய “சாதிக் கட்சிகள்” என்கிற சொல்லாடலை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நாகரீகத் தமிழ் சமூகத்தில்  புரையோடிப் போய் எஞ்சியிருக்கும் நவீனத் தீண்டாமையின் குரல் அது, தமிழ்ச் சமூகத்தின் இதயத்தை இன்னமும் இடைவிடாது அரித்துக் கொண்டிருக்கும் சாதிய நச்சுக் கிருமிகளின் அழிக்க முடியாத பரிதாபக் குரல் அது, 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட அரசியல் அரசியல் வரலாற்றை நகர்த்திக் கொண்டிருக்கும் சித்தாந்தம் முழுமையான வெற்றியை அடைய முடியாமல், இலக்கை அடையாமல் நலிந்து வீழ்கிற காலத்தின் சருக்கல் அது.

08TH_THIRUMAVALAVA_1781468f

ஏனெனில் பன்னெடுங்காலமாக அறிவும், வாய்ப்பும் மறுக்கப்பட்ட அபலை மனிதர்களின் அரசியல் குரலை நோக்கி சாதி ஆயுதம் கொண்டு திருப்பித் தாக்குகிற மலினமான முதிர்ச்சியற்ற அறியாமையின் குரல் அது, ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் வீழ்ந்து கிடந்தார்கள்? அது அவர்களின் தவறுதானே? அவர்கள் “வலியது வாழும்” என்கிற கோட்பாட்டு இயக்கத்தில் தோற்றவர்கள் தானே? என்றெல்லாம் கூடக் கேள்வி எழுப்புகிற அறிவு ஜீவிகளை வழியெங்கும் காண முடியும், அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும், இந்திய சமூகத்தில் வாழும் ஒரு வயதான தாயின் இதயம் எத்தனை நலிந்து கிடக்கும் என்றும், எத்தனை வழிகளையும், துயரங்களையும் தன்னகத்தே கொடிருக்கும் என்று தெரியுமா உங்களுக்கு?

ஆனாலும், தனது குழந்தைகளின் மீதான் நேசமும், குடும்பத்தின் மீதான அன்பும் வற்றாது கிடக்கும் அந்தத் தாயைப் போலவே மண்ணோடும், மரங்களோடும் அமைதியை விரும்புகிற, வாழ்க்கையை ருசித்துப் பருகும் ஒரு பறவையைப் போல வாழ்கிறான் ஒடுக்கப்பட்ட பழங்குடி மனிதன், அவனால், இயல்பாக வன்முறையை நோக்கிப் பயணிக்க இயலாது, அதற்காக அவன் கோழை இல்லை, அவன் குருதியைக் கண்டு அஞ்சுகிற அன்பு நிரம்பிய மனிதனாக இருக்க விரும்புகிறான், கடுமையான போர் தனது குழந்தையை மட்டுமல்ல, எதிரியின் குழந்தையையும் கொல்லும் என்று அறிந்து எப்போதும் அமைதியின் நிழலில் ஒதுங்கி நிற்கிறான், ஆனால், சமூகம் அவனைத் தன்னோடு வாழத் தகுதியற்ற கோழை என்று கெக்கெலித்துச் சிரிக்கிறது, அவனுக்கான உரிமைகளையும், வாய்ப்புகளையும் எந்த வெட்கமும் இல்லாமல் பறித்துக் கொள்வது மட்டுமன்றி அவனையும் அவனது உழைப்பையும் களவாடிச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது, டி.கே.எஸ் இளங்கோவனின் சொற்கள் அப்படியான உழைப்புக் கொள்ளையர்களின் எஞ்சிய குரல்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் குரலையும் சாதிக் கட்சியின் குரல் என்று நம்மால் அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது, ஏனெனில் அடிப்படையில் நலிந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக் குரலாகவே அது உருவாக்கப்பட்டது, வளர்ந்த சூழலில் அச்சமூகத்தின் சிலரால் எழுப்பப்படும் ஆண்ட பரம்பரை மாதிரியான வெற்றுக் முழக்கங்களைத் தாண்டி வன்னிய சமூக மக்களில் பெரும்பான்மையானவர்கள் உழைப்பையும், மண்ணையும் நம்பிப் பிழைக்கிறவர்கள் என்கிற உண்மையை நாம் மறந்து விட இயலாது.காலப்போக்கில் வாக்கு வங்கி அரசியல் நன்மைகளுக்காக ஏனைய சமூகங்களின் மீதான தாக்குதல்களையும் மையப்படுத்தி அது வளர வேண்டிய நிலையில் அதன் தலைவர்கள் நம்பிக்கையற்றவர்களாய் மாறிப் போனார்கள். அது தலைவர்களின் தவறான வழிகாட்டுதலே அன்றி ஒட்டு மொத்த வன்னிய மக்களின் குரல் அல்ல. எந்தச் சூழலிலும் வன்னிய சமூக மக்களின் அரசியல் குரலான பாட்டாளி மக்கள் கட்சியின் குரலையும் “சாதிக் கட்சி” அடைமொழிக்குள் கொண்டு செல்வதும், புறக்கணிப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

விடுதலைச் சிறுத்தைகளைப் பொருத்தவரை அதன் கடந்த கால வரலாற்றில் எந்த இடத்திலும், ஒரு சமூகத்துக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தியதாகக் குற்றச்சாட்டுக்கள் இல்லை, மோதல்கள் நிகழ்ந்த பல இடங்களில் அவர்கள் எதிர்வினை ஆற்றி இருப்பார்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், சென்னை போன்ற பெருநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் என்கிற அரசியல் அடையாளத்தைப் பயன்படுத்தி சில்லரைப் பஞ்சாயத்துகள் செய்யும் ஒரு வணிகக் குழுவை பொதுமைப்படுத்தி ஒட்டு மொத்த இயக்கத்தின் அடையாளமாகப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையான சமூகச் சிக்கல்களுக்கு இன்று வரை முன்னின்று போராடுகிற அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதன் தலைவர் தோல்.திருமாவளவன் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பொது மேடைகளில் பேசி இருக்கிறார், ஒரு இடத்தில கூட அவரது பேச்சு வன்முறையத் தூண்டியதாக வழக்குகள் இல்லை, மாற்று சமூக மக்களின் அரசியலை அவர் வன்மத்தோடு பேசியதாக வரலாறு இல்லை, தமிழகத்தின் எல்லா அரசியல் தலைவர்களோடும் இணக்கமாக ஏதாவது ஒரு கணத்தில் இயங்கி இருக்கிற, இயங்கிக் கொண்டிருக்கிற அரசியல் தலைவராகவே தோல்.திருமாவளவன் இருக்கிறார். தி.மு.க வோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த இணக்கத்தோடும், நட்போடும் பணியாற்றி இருக்கிறார், தி.மு.க வின் தொண்டர்களுக்கு திருமாவளவன் மீதிருக்கிற மதிப்பைப் போலவே கலைஞரின் மீதான மதிப்பை ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு ஒருபோதும் அவர் தவறியதே இல்லை. தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைப் பண்புகளையும், நாகரீகத்தையும் கட்டிக்காக்கிற ஒரு பண்பாளராகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

Pattali-Makkal-Katchi

சிறுபான்மை மக்களின் வாழ்வியலோடு நெருக்கமாக மனதுக்குப் பிடித்த சகோதரனாக அவரும் அவரது இயக்கமும் தொடர்ந்து பணியாற்றி வருவதையும், நீண்ட கால அரசியல் நல்லுறவு கொண்டிருப்பதையும் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. உழைப்போடும், மண்ணோடும் நெருங்கி வாழ்ந்து, உழுது பயிரிட்டு நாகரிகத்தை முன்னகர்த்திய பழங்குடி மனிதனின் குரலே விடுதலைச் சிறுத்தைகளின் குரல், மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளையும், விடுதலை வேட்கையையும் தமிழ்ச் சமூகத்தின் கடைக்கோடி வரை கொண்டு செல்லும் தன்னியல்பான ஒரு இயக்கமே விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம், மறுக்கப்பட்ட உரிமைகளின் முடிவுறாத குரல் அது, புறக்கணிக்கப்பட்ட சமூக நீதியின் தீவிர முழக்கம் அது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விடுதலைச் சிறுத்தைகளை “சாதிக் கட்சி” என்று திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் சொல்வார்களேயானால், எந்த நோக்கத்துக்காக திராவிடம் என்கிற அரசியல் கோட்பாடு உருவானதோ அந்த நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து நீர்த்துப் போய், குறுகிய கால நன்மைகளை, வாக்கரசியலின்  வணிக இயக்கங்களாக ஆதிக்க சாதி அரசியல் கூடாரங்களாக அவை மாறிக் கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் குரலான விடுதலைச் சிறுத்தைகளை “சாதிக் கட்சி” என்ற ஒற்றைச் சொல்லால் மூடி அவமதிப்புச் செய்த டி. கே. எஸ் இளங்கோவனைப் போன்றவர்கள் பகிரங்கமாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், அல்லது தி.மு.க போன்ற சமூக நீதி இயக்கத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

***************

29THRAMADOSS_767962f

சிறுத்தைகளுக்கு தி.மு.க தரப்பில் இருந்து செக் வைக்கப்பட்டு விட்டது, விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி  மக்கள் கட்சியும் சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்கிற "ஞானோதயம்" திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது புரிந்திருக்கிறது, பாட்டாளி மக்கள் கட்சி இனிக் கூட்டணிக்குத் தயாரில்லை என்கிற திடமான முடிவு  தி.மு.க வை இப்படியான ஒரு நிலையை எடுக்க வைத்திருக்கிறது, விடுதலைச் சிறுத்தைகளின் கடந்த ஆறேழு மாத காலச் செயல்பாடுகள், அளவுக்கு மீறிய கற்பனை அரசியல் போன்ற நிகழ்வுகள் திமுக தலைமையை எரிச்சல் அடைய வைத்திருக்கும், அரசியல் அதிகாரப் பகிர்வு போன்ற பெரிய பெரிய கோட்பாட்டு சாமாச்சாரம் எல்லாம் கலைஞருக்கு எப்போதுமே உவப்பானது இல்லை.

போகிற போக்கில் தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள் ஆகியோருக்கு வெற்றிலை பாக்கும் வைக்கப்பட்டு விட்டது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் உறுதியாக ஐவர் கூட்டணியிலிருந்து சிலர் எஸ்கேப் ஆகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது, உறுதியாகக் கழற்றி விடப்பட்டது சிறுத்தைகள் தான். விடுதலைச் சிறுத்தைகளின் தான் தோன்றித்தனமான நீண்ட கால அரசியல் பார்வை இல்லாத முடிவுகள் தான் தி.மு.க போன்ற ஒரு பெரிய கட்சியை இந்த முடிவுக்கு நகர்த்தி இருக்கிறது. வழிபாட்டு மற்றும் துதிபாடல் அரசியலின் மாயைக்குள் விடுதலைச் சிறுத்தைகள் சிக்கிக் கொண்டதும் கட்சியைச் சார்ந்திருக்கும் தொண்டர்கள் மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்கள் கருத்துக்களை உள்வாங்காமல் ஒற்றை மனித அரசியல் செய்யும் அண்ணன் திருமாவளவனின் குழப்பமான முடிவுகளே தி.மு.க விடம் இருந்து ஒரு முக்கியமான காலகட்டத்தில் பிளவை நோக்கிச் செல்லக் காரணம்.

இப்போது சிறுத்தைகளுக்கு நான்கைந்து தேர்வுகள் இருக்கிறது.

1) யாருடைய கருணையும் தேவையில்லை என்று திடமாக முடிவு செய்து 2016 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது, தங்களுடைய முழுமையான பலம் என்ன? வாக்கு வங்கி எவ்வளவு என்று கண்டறிவது, வெற்றி பெரும் வாய்ப்புள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளைக் கண்டறிந்து மிகக் கடுமையாகக் களப்பணியாற்றி அதன் மூலமாக குறைந்தது ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவது. (The Best Possible Option)

2) இப்போதிருக்கும் ஐவர் கூட்டணிக்குள் தேமுதிகவை எப்படியாவது கொண்டு வருவது, (சும்மா ஒரு கனவு தான்) காங்கிரஸ், த.மா.க போன்ற  போன்ற கட்சிகளையும் இணைக்க முயற்சி செய்து மூன்றாவது போட்டி முனையை உருவாக்க முனைவது. (The Toughest option, But, Hopefully Possible)

3) மெல்ல ஐயாவுக்கு அடித்த ஜால்றாவைத் திருப்பி அம்மாவுக்கு அடிக்கத் துவங்குவது. அம்மாவின் கருணைப் பார்வைக்காக போயஸ் தோட்டத்தில் போய் நாள்கணக்கில் சமைத்துச் சாப்பிட்டு ஏங்கிக் கிடந்து தூக்கிப் போடுவதைப் பெற்றுக் கொள்வது. (The Impossible Option, But, Try to make it Possible).

4) பா.ம.க வின் தலைவர்களைச் சந்திப்பது, முன்னொரு காலத்தைப் போல இரண்டு சமூகமும் இணைந்து செயல்படுவதற்கான முகாந்திரங்களை உருவாக்குவது, சாட்சிக்காரன் காலில் விழுவதற்குப் பதில் சண்டைக்காரன் காலிலேயே விழுந்து பலன் பெறுவது நலம் பயக்கும் தானே. (The most Hated option, But, why Not?).

இறுதியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவுத் தளத்தில் இருக்கும் நாயமார்களுக்கு (டி.கே.எஸ். இளங்கோவன் மாதிரியான…), நாயமாரே, இதே பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் உங்களோடு கூட்டணி வைத்து உங்கள் வெற்றி வாய்ப்புக்கு உறுதுணையாக முற்காலங்களில் இருந்த போதெல்லாம் அவை சாதிக் கட்சி என்று தோன்றவில்லையா? அரசியல் பாரம்பரியமும், நெடுங்கால அரசியல் அனுபவமும் கொண்ட தி.மு.க போன்ற கட்சிகள் பா.ம.க அல்லது விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை வெறும் சாதி அரசியல் செய்யும் கட்சிகள் என்று புறந்தள்ளி விடுவது உண்மையில் கோட்பாட்டு வழியில் சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுதானா?

பல இடங்களில் ஆதிக்க சாதி அரசியல் செய்தாலும், வன்னிய சமூக மக்களில் பெரும்பான்மையானவர்கள்  உழைக்கும் எளிய பிரிவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களைப் போலவே வாழ்கிறவர்கள் தானே, மேலும் விடுதலைச் சிறுத்தைகளைப் போல நம்பிக்கையோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலில் இயங்கும் ஆற்றல்களை சாதிக் கட்சி என்று முற்றிலுமாக போகிற போக்கில் அவமதிப்பது தி.மு.க வைப் போல சமூக நீதியின் மீது நம்பிக்கை கொண்ட கட்சிக்கு வரலாற்றில் அத்தனை சிறப்பான தோற்றத்தைக் தருமா?

**************

கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 31, 2015

கடவுளின் கூலிப்படை……இந்துத்துவா.

02BG_KALBURGI_1286001e

"மல்லேஷப்பா மடிவாளப்பா கல்புர்கி" சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற செய்தி எனது செவியை எட்டிய போது நான் குளித்துக் கொண்டிருந்தேன், குளியலறைக் கதவிடுக்கில் கசிந்து வந்த செய்தி வாசிக்கும் பெண்ணின் குரல் அவரது இறப்பை எனக்கு உணர்த்தியது, இடது கையால் எனது வலது தோள்பட்டையில் ஒருமுறை கையை வைத்து அழுத்திப் பார்த்தேன், பெங்களூரில் ஒரு போராட்டத்தின் போது ஒருமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன், பொதுவாகவே கார்வார் என்று சொல்லப்படுகிற தென் கனரா மனிதர்களின் பேச்சு வழக்கு அவர்களை ஏனைய கன்னட மொழி பேசுபவர்களிடம் இருந்து தனித்துக் காட்டும். அன்று என்னை உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று ஒரு ஊடக நண்பர் அவரிடம் அறிமுகம் செய்தார், சில நொடிகள் அவரோடு தெளிவான கன்னடத்தில் பேசினேன், நகரும் போது வலது தோளுக்குக் கீழே ஒரு அழுத்தம் கொடுத்து இப்படிச் சொன்னார், "நீங்கள் பேசும் கன்னடம் நன்றாக இருக்கிறது" ("ஆதரூ, நிம்ம கன்னடா சன்னாகிதே"). பேசுவதற்கு வேறு சில விஷயங்கள் இருந்தாலும் தனது மொழியை ஒரு மாற்று மொழிக்காரன் சிறப்பாகப் பேசுகிறான் என்பதே அவர் மனதில் நின்றிருக்கிறது, அதற்குப் பிறகு அவரைக் குறித்த எந்த நினைவுகளும் இல்லை.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன், இந்துத்துவ பிற்போக்குவாதிகளின் மனதில் பெருங்கனலாக உழன்ற அந்த உறுதியான மனிதரின் கரங்கள் ஒரு அடையாளம் போல எனது வலது தோள்பட்டையில் பதிந்திருக்கிறது.  "கல்புர்கி" எழுதுகிற எல்லா மனிதர்களுக்கும் பெருமை சேர்த்துப் போயிருக்கிறார், மானுடத்தை அழிக்கும் அடிப்படையான சிலை வழிபாட்டையும், கடவுள் வழிபாட்டையும் மட்டுமல்லாது வீரசைவர்கள் வழிபடும் "பசவா" குறித்த பல்வேறு வரலாற்று ஆய்வுக் குறிப்புகளை வெளியிட்டதன் மூலமாக லிங்காயத்துகள் என்றழைக்கப்படும் ஒரு ஆதிக்க சாதிக் கூட்டத்தின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார், பிறகு தனது கருத்துக்களைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லிவிட்டு ஊடகங்களிடம், "எனது குடும்பத்தைக் காப்பாற்ற பசவர் வரமாட்டார் அல்லவா?" என்று சிரித்தபடியே சொன்னார். பிறகு பல இடங்களில், கூட்டங்களில் "எனது அறிவு தற்கொலை செய்து கொண்ட நாள் அது" என்று குறிப்பிடுவதைத் தவிர்க்கவில்லை, மரணத்தைக் கண்டு ஒருபோதும் அஞ்சிய மனிதர் இல்லையென்றாலும், தனது மானுடத்தின் மீதான காதலை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை.

தீவிர இந்துத்துவக் கும்பலுக்கு கருத்துக்களை எதிர் கொள்வதில் இருக்கும் வழக்கமான சிக்கலாகவே இந்தப் படுகொலை புரிந்து கொள்ளப்பட வேண்டும், தொடர்ந்து மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தலும் இந்தியாவின் உச்ச அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பார்ப்பனீயத்தின் உண்மையான முகம். தொடர்ந்து முற்போக்குக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றல்களை அழித்து விடுவதில் இந்துத்துவக் கும்பல் தீவிரமாயிருக்கிறது, இந்தியா என்கிற மிகப்பெரிய தேசத்தின் ஒற்றைக் குவியமாக இந்துத்துவ அடையாளங்களைக் கொண்டு வருவதற்கான அரசியல் முயற்சியாகவே இந்தப் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும்.

பில்லி, சூனியம், மாயம், மாந்தரீகம் என்று உழைக்கும் பணத்தை மதவாத மடையர்களிடம் ஒப்படைத்து விட்டு  தொடர்ந்து ஏழ்மையிலேயே சீரழியும் மராட்டிய மக்களை மதத்தின், வழிபாட்டின் பிடியில் இருந்து மீட்கப் போராடிய "நரேந்திர டபால்கர்" இதே போல சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது பணிகளைத் தொடருமாறு வேண்டுகோள் விடுத்த கம்யூனிஸ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், எழுத்தாளருமான "கோவிந்த் பன்சாரே" பிறகு கொல்லப்பட்டார், நாடு முழுவதும் இந்துத்துவ எதிர்ப்பு முற்போக்கு முகங்களுக்கு அச்சுறுத்தல்  தொடர்கிறது.

இப்படியான படுகொலைகள் நிகழும் போதெல்லாம் சில அறிவு ஜீவிகள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை நீங்கள் எல்லாம் ஏன் எதிர்ப்பதில்லை என்று ஒரு ரெடிமேட் கேள்வியை எழுப்புகிறார்கள், ஆனால், இஸ்லாமியத் தீவிரவாதத்தை விடப் பன்மடங்கு இந்துத்துவா ஆற்றல்கள் அழிவு சக்தி கொண்டவை, இந்துத்துவத் தத்துவங்களே மனித வாழ்க்கையை இழிவு செய்கின்றன, பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற கோட்பாட்டை முன்னெடுக்கிற இந்துமதம் எல்லாவற்றையும் விட மானுட மதிப்பீடுகளுக்கு எதிரானது, ஆபத்தானது. அது தனது சொந்த மக்களை ஒரே ஊருக்குள் வெவ்வேறு பிறவிக் குறியீடுகளோடு அலைக்கழித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. ஏனெனில் போரில் கொல்லப்படுவதை விடக் கொடுமையானது ஒரு மனிதனை பொதுச் சாலையில் அனுமதிக்க மறுப்பதும், அவனை இழிவு செய்வதும்.

"கல்புர்கி"க்களின் படுகொலைகளால் இந்துத்துவத்தின் புனிதம் பாதுக்காக்கப்பட மாட்டாது, மாறாக அதன் அழுகிய நாற்றமெடுத்த ஆணிவேர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். கல்புர்கி ஒரு மாவீரனைப் போல மடிந்திருக்கிறார், தனது மானுடத்தின் மீதான அன்புக்காக அவர் துப்பாக்கிக் குண்டுகளை தழுவிக் கொண்டிருக்கிறார், மரணம் அவரை அவரது சிந்தனைகளை இன்னுமொருபடி மேலேற்றி விட்டிருக்கிறது, தென் கனராவில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான வலுவான ஒரு களம் அவரது மாணவர்களால் உருவாக்கப்படும். மூட நம்பிக்கைகளை எதிர்த்து உயிரிழக்கத் தயாராய் இருக்கும் முற்போக்கு முகங்களையும், எழுத்தாளர்களையும் தடுத்து நிறுத்த எந்தக் கடவுளும் வரமாட்டார்கள். இந்துத்துவத் தீவிரவாதத்துக்கு எதிராக எழுதும், இயங்கும் தோழர்கள் அனைவருக்கும் கல்புர்கியின் படுகொலை ஒரூ எழுச்சியை உருவாக்கி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், அப்படிச் சொல்வது தான் கல்புர்கிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

***************

கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 29, 2015

ஸ்டார்ட் தி மியூசிக்……..1

27th_Vaiko_-Thi_27_2525070f

வை.கோ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டணி சேர்ந்து ம.தி.மு.கவுக்கு இருந்த குறைந்த அளவிலான வாக்கு வங்கியை பாரதீய ஜனதாக் கட்சி தனது புள்ளிவிவரக் கணக்கில் வரவில் வைத்துக் கொள்ள உதவினார், அது அவருடைய சொந்த விருப்பம், ஆனாலும், திராவிடம், தமிழ்த் தேசியம் என்றெல்லாம் பேசுகிற அவரது அந்த நேரத்துக் கூட்டணியும், இன்று வரையில் இந்துத்துவ அடிப்படைவாதிகளுடனான அவரது கூட்டும் அடிப்படைக் கோட்பாடுகளை ஐயம் கொள்ள வைக்கின்றன, எந்த நோக்கத்துக்காக யாரை எதிர்த்து ஒரு கட்சியைத் துவக்கினாரோ அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்து பார்வையாளர்களையும், கட்சித் தொண்டர்களையும் வியப்பில் ஆழ்த்தினார் வைகோ. பல சமூக, அரசியல் சிக்கல்களுக்கு அவர் முன்னின்று குரல் கொடுப்பவர் தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் பாரதீய ஜனதாக் கட்சியுடனான அவரது நெருக்கம் ஒரு நெருடலாகவே இருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகள் தமிழக அரசியலைப் பொருத்தவரை அ.தி.மு.க வோடு ஒரு "சாப்ட் கார்னர்" நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள், அ.தி.மு.க வை எதிர்த்து மிகப்பெரிய அளவில் அவர்கள் இயங்குவார்கள்  என்று நம்புவதற்கில்லை, விடுதலைச் சிறுத்தைகள் இந்தக் கூட்டணியில் வைகோவோடு சேர்ந்து இயங்குவதை இந்துத்துவ எதிர்ப்புக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட அறிவார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் விரும்ப மாட்டார்கள், இஸ்லாமிய வாக்கு வங்கியிலும் கணிசமான சரிவையே அது சிறுத்தைகளுக்கு உருவாக்கும், ஒருவேளை கடைசி நேரத்தில் ஜெயலலிதா பாரதீய ஜனதாக் கட்சியை இணைத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால் பாரதீய ஜனதாகக் கட்சிக்கு வேறு சில மாற்று வழிகள் தேவைப்படும், இப்போதைக்கு தி.மு.க வோடு இணைந்து செயலாற்றும் நிலையில் அந்தக் கட்சி இல்லை, அதனை ஆர்.எஸ்.எஸ் களவாணிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

பா.ம.க எப்போதும் வேறு யாருடைய அஜெண்டாவிலும் சிக்கிக் கொள்வதில்லை, குடுமிகளையே கூடப் பயன்படுத்தித் தான் எப்படி அரசியல் லாபம் அடைவது என்பதில் கைதேர்ந்தவர்கள் மருத்துவர்கள். அரசியல் வணிகத்திலும், பேரங்களிலும் பா.ம.க பழுத்த வயதான நரி. தொடர்ந்து நிகழ்வுகளை கவனிக்கும் போது ஆர்.எஸ்.எஸ் களவாணிகளின் ஒரு மறைமுகத் திட்டமாகவே இது தோன்றுகிறது. ஓரளவு கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகளை இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளை நோக்கி நகர விடாமல் தேங்கி நிற்க வைத்திருக்கிறது. மிகக் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், மற்றும் சில உதிரிக் கட்சிகள் நகர்ந்து விடக் கூடாது என்கிற குடுமிகளின் மறைமுக அஜெண்டாவில் இவர்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள், வை.கோ ஒரு அரசியல் தரகராக இந்த அஜெண்டாவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார், கடந்த மாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியது கூட அந்த மறைமுக அஜெண்டாவின் ஒரு துவக்கப் பகுதிதான்.

தே.மு.தி.க எந்தக் கொள்கை கோட்பாடுகளும் இல்லாத தனது வழக்கமான அரசியல் பேர அரசியலை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நிகழ்த்தும். கனமான பெட்டிகள் எங்கே தரப்படுகிறதோ அங்கேயே அது நிற்கும். புதிய தமிழகம் தி.மு.க வோடு இணைந்திருப்பது என்கிற உறுதியான முடிவை எடுத்திருப்பது நிச்சயமாக அந்தக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பலனளிக்கும்.  விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடே இப்போது ஊசலில் இருக்கிறது, அரசியலில் ஒரு நம்பிக்கையான கூட்டாளி என்கிற பெயரையும் இழந்து, தனது வாக்கு வங்கியையும் இந்துத்துவத்தின் கூட்டாளிகளிடம் அடகு வைத்து விட்டு தோல்வி அடைவதற்குப் பதிலாக விடுதலைச் சிறுத்தைகள் தனித்தே போட்டியிடலாம். அது அவர்களை ஒரு மதிப்பு மிக்க அடுத்த படிநிலையை நோக்கி நகர்த்தும்,

பல்வேறு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நிகழ்வுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமில்லாமல், சிறுபான்மையின மக்கள், ஓரளவுக்கு அரசியலை நன்கு புரிந்து கொண்ட மாற்று சமூக மக்களும் திருமாவளவன் மீது ஒரு மதிப்பான அடையாளத்தை வைத்திருக்கிறார்கள், அந்த அடையாளம் சிதைந்து விடாமல் இருக்க மட்டுமன்றி விடுதலைச் சிறுத்தைகளே தங்கள் சொந்த வாக்குவங்கி பலத்தை அறிந்து கொள்ளவும் ஒருவேளை தனித்து நிற்பது உதவக்கூடும். மேலும், அமைப்பு ரீதியாக கட்சியை வலிமைப்படுத்தவும், மாற்று சமூகங்களின் நம்பிக்கையை அடையவும் தனித்துத் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது ஒரு வாய்ப்பாக இருக்கக் கூடும். ஏனெனில் மிக முக்கியமாக இந்த ஐவர் கூட்டணி ஒன்று நேரடியாக தி.மு.க வின் வாக்குகளைச் சிதறடிக்க ஜெயலலிதாவுக்கு உதவும் அல்லது இந்துத்துவத்தின் பிடி தமிழ் மண்ணில் இன்னும் இறுக்கமாகப் படர வழி வகுக்கும்.

***************

கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 28, 2015

ஆப் கி பார் “ஆர்.எஸ்.எஸ்” சர்க்கார்….

Modi

இந்தியாவில் பல முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான "ஆர்.எஸ்.எஸ்" தலைமை இடமான நாக்பூர் அலுவலகத்துக்கு பிரதமர் ஐயா மோடி தொழிற் பாதுகாப்புப் படையின் உயர் அடுக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கிறார், சுமார் 300 இந்திய ராணுவ வீரர்கள் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் காவிப் பண்டாரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.  "எங்கெங்கெ குண்டு வச்சு நாட்ல கலவரத்தைத் தூண்டலாம்?" என்று ஆர்.எஸ். எஸ் காவிகள் உள்ளுக்குள்ள ஆலோசனை நடத்த குப்பனும் சுப்பனும் வரிக் கட்டி நடத்தப்படுகிற தொழிற் பாதுகாப்புப் படை வெளில நின்னு வாயில் காக்கணும். ஏற்கனவே இந்தியாவின் ஆகச்சிறந்த அகிம்சாவாதியும், சமூக விஞ்ஞானியுமான மோகன் பகத்துக்கு "இசெட் பிளஸ்" பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கூட்டுச் சமூக வளங்களில் பலவற்றை திருட்டுத்தனமாக முதலாளிகளுக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்தாயிற்று, அதானியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மின்சார உற்பத்தியாளர் ஆக்கியாயிற்று, நிலங்களை எல்லாம் பிடுங்கி அம்பானிக்கும், அதானிக்கும் பட்டாப் போட நாடாளுமன்றத்தை மறுபடியும் கூட்டுவதற்கு ஐயா வெங்கையா நாயுடு தலைகீழா நிக்கிறாரு, அதிகாரப்பூர்வமான இந்திய தேசத்தால் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு எல்லா விதத்திலும் குடை பிடித்து விட்டு "உலக மகா யோக்கியம் வேடம்" போடுகிற சுரங்கக் களவாணி ரெட்டிகளின் அம்மா சுஷ்மாவை குற்றமே செய்யாத சொக்கத்தங்கம் சான்றிதழ் கொடுத்தாயிற்று, வளர்ச்சி விகிதம் அதல பாதாளத்தில், தொழில் வளர்ச்சி குப்புற வீழ்ச்சி.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.15 க்கு வீழ்ச்சி. பங்குச் சந்தையில் ஒரே நாளில் ஏறத்தாழ 7 லட்சம் கோடி முழுகிப் போனது, உள்கட்டமைப்பு குறித்த எந்தச் சிந்தனைகளும் கிடையாது. ஆங்காங்கே இந்துப் பெண்களோடு பேசினார் என்றெல்லாம் சொல்லி இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடிக்கத் துவங்கியாயிற்று. ஐந்து வருடம் முடியும் போது அமீத் ஷா ஊர் ஊருக்கா போயி குட்டிக்கலகம் பண்ணி பக்காவான ஒரு இந்து தேசியத்தை வடிவமைத்து, சமஸ்க்ருதத்தை நாடு முழுவதும் எடுத்துச் சென்று (அதுக்குள்ளே எவ்வளவு படுகொலைகள் செய்வான்களோ காவிகள் தெரியாது), மாநிலக் கட்சிகள் பலவற்றை சி.பி.ஐ மாதிரியான ஏவல் துறைகளைப் பயன்படுத்தி இப்போதே அச்சுறுத்தத் துவங்கியாயிற்று.

வர்ணமும், வர்க்கமும் நீடிக்கவும், சாதியப் படிநிலைகளைப் பாதுகாக்கவும் பக்காவான பல திட்டங்களைக் காவிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள், அதெல்லாம் பரவாயில்லை, ஏறக்குறைய இந்தியாவின் எஞ்சி இருக்கிற இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் மோடியின் தலைமையிலான மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் அரசு சுரண்டிக் கொள்ளையடித்து முதலாளிகளுக்கு விற்று விட்டுத் தான் இடத்தைக் காலி செய்வார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கையும், பிடிமானமுமாக இருக்கிற கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்கிற வளர்ச்சியின் கருவியையும் அழித்துத் துடைத்து மாணவர்களை வேதம் ஓத வைத்து அழிவை நோக்கித் தள்ளுவார்கள். காங்கிரஸ் களவாணிகள் கொஞ்சம் "கர்ட்டசி" பார்த்து தண்ணி ஊத்தி வலிக்காம மக்களை மொட்டையடிப்பார்கள், ஆனால், பாரதீய ஜனதா என்கிற பார்ப்பனீயக் காவிப் பண்டாரங்கள் ஒவ்வொரு முடியாப் புடுங்குவான், அப்படித்தாண்டா பிடுங்குவேன், முடிஞ்சதப் பாருடா என்று ரத்தம் வழிய வழிய மொட்டையடிப்பான்.

பார்ப்பனீயத்தின் அதிகாரப் பூர்வ இரண்டு அரசியல் பெஞ்ச்களில் ஒன்றான (இன்னொன்று காங்கிரஸ்) பாரதீய ஜனதாக் கட்சியின் தேசக் கொள்ளைப் பட்டியலில் சில:-

1)   Operation west end Scam
2)   Phukan Commission Scam
3)   Kargil Coffin Scam
4)   Kargil Cess Misuse
5)   The First Ever 2 G SCAM – Arun Shourie & Pramod Mahajan
6)   Bailout Package to Private Prayers
7)   UTI Scam
8)   Cyber Space Infosys Ltd Scam
9)   Petrol Pumps & Gas Agency Allocating Scam
10) Judeo Scam
11) Delhi Land allotment Scam
12) HUDCO Scam by Ananthkumar
13) Land Scams in Rajasthan
14) Bellary Mining Scam – Reddy Bros & Sushma Swaraj
15) Kushabha Thakkarey Trust Scam
16) Land Allotment Scam – Karnataka
17) Punjab Bribery Scam
18) Hydel Power Scam
19) Chattisgarh Mine Scams
20) Pune Land Scam
21) Nitin Gadkari – Adarsh Scam
22) Gas Based Power Plant Scam
23) Fake Pilot Scam
24) CWG – Scam
25) VSNL Disinvestment Scam by Arun Shourie
26) Arvind Johri – Vajpayee IT Park Scam
27) Delhi Plot Allotment Scam
28) Medical Procurement Scam
29) BALCO Disinvestment Scam
30) Jain – Hawala Scam by L K Advani
31) Tata Motors Plant Scam
32) Adhani Group Land Scam
33) Upper Bhadra Project Scam
34) Vyapam Recruitment Scam
35) Lalit Gate Scam

ஊழலற்ற இந்தியாவை காவிகள் இப்படித்தான் உருவாக்குவார்கள், ஐத்தலக்கடி கும்மாவா, காவிங்கன்னா சும்மாவா…உங்க கிட்னியப் பிடுங்கி விக்கிற வரைக்கும் காவிங்க தூங்க மாட்டானுங்க, உங்க ரத்தத்தை எல்லாம் எதாவது அமெரிக்கக் கம்பெனி கிட்ட விக்க ஒப்பந்தம் போடுவானுக, இன்னொரு முறை சொல்லுங்க ஆப் கி பார் மோடி சர்க்கார்…..

 

**************

கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 28, 2015

"இன்செஸ்ட்" ஊடகங்கள்.

_85214379_fecc0ab3-b285-43f2-80e9-31106ead137a

மனித மனம் அடிப்படையில் பசியாலும், காமத்தாலும் நிரப்பப்பட்டிருக்கிறது, பசி காலப்போக்கில் உழைப்பை உருவாக்கியது, காமம் பிற்பாடு காதலை உருவாக்கியது, உழைப்பு நாகரீகத்தை உருவாக்கியது, காதல் பண்பாட்டை உருவாக்கியது, உழைப்பு பொருளாதாரத்தையும், நில உடமைச் சமூகத்தையும் உருவாக்கியது, உணவு தானியங்களைப் பயிரிட்டு மானுடம் வாழ்க்கையைக் கொஞ்சம் நெகிழ்வாக வாழ வழி செய்தது, காதல் குடும்ப அமைப்பை உருவாக்கி சிக்கல்களற்ற உளச் சூழலை வழங்கியது, இருப்பினும் பசியும், காமமும் எப்போதும் புரிந்து கொள்ள இயலாத ஒரு அடர்த்தியான இருட்டில் ஆழ்மனதில் இன்னுமும் மனிதனை ஆதி விலங்காகவே வைத்திருக்கிறது, பழக்கங்களும், தொடர் இயக்கங்களும் குடும்ப உறவுமுறைகளின் மீது ஆளுமை செலுத்தும் காரணியாக இருந்தாலும் ஆண், பெண் என்கிற அடிப்படைப் பாலுணர்வை முழுமையாக வெற்றி கொண்டு விட்டன என்று சொல்ல இயலாத பல நிகழ்வுகளை நமது கண்முன்னே நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன.

மும்பையில் தாயால் படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் "ஷீனா போரா" மற்றும் "ராகுல் முகர்ஜி"யின் காதலை மையமாக வைத்துத் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கும் ஊடகங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை, அவர் இவரோடு இருந்தார், இவர் அவரைத் திருமணம் செய்து கொண்டார், முறையற்ற உறவுகள், "Family Revealed", "The Other pages of Sheena", "Exposed Secrets" என்றெல்லாம் தொடர்ந்து மின்னல் செய்திகளை வழங்கும் ஆங்கில செய்தி ஊடகங்களை ஒரு மஞ்சள் ஊடகங்களைப் போலத் தான் பார்க்க முடிகிறது. ஷீனாவும், ராகுலும் உடற்கூறியல் வழியாக சகோதர உறவு முறை கொண்டவர்கள் அல்ல, அவர்களுக்கிடையில் காதல் மலர்வதற்கான எல்லா வாய்ப்புகளும், உரிமையும் உண்டு, வேறு ஏதோ வகையில் இந்த உறவு இந்திராணிக்கோ இந்தக் கொலையில் தொடர்பு உள்ள மற்றொருவருக்கோ சிக்கலையும், கடும் கோபத்தையும் உருவாக்கி இருக்க வேண்டும்.

ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு முடித்து வைக்கப்பட்டு விட்டது. ஆனாலும், தொடர்ந்து பல்வேறு புகைப்படங்கள், வீடியோக் காட்சிகள் என்று ஆங்கிலக் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கின்றன, இவர்களின் இந்த அளவிட முடியாத ஆர்வம் தேங்கி இருக்கிற இடம் மிக ஆபத்தான இந்திய மனநிலையை அடையாளம் காட்டுகிறது, "அண்ணன், தங்கை உறவுமுறை கொண்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டார்கள்" என்கிற ஒற்றை “இன்செஸ்ட்” வரியைச் சுற்றியே இந்த ஊடகங்கள் கூவிக் கொண்டிருக்கின்றன, இயல்பாக தேசமெங்கும் நடக்கிற ஒரு சாதிப் படுகொலையையோ, தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நடக்கும் வரதட்சனைப் படுகொலைகளையோ இன்றைய காட்சி ஊடகங்கள் அவ்வளவாகக் கண்டு கொள்வதோ கூக்குரல் எழுப்புவதோ இல்லை.

இந்திராணியின் மறுபக்கத்தைப் புலனாய்வு செய்து நீதியை நிலை நாட்டுவது அல்ல நமது ஊடகங்களின் நோக்கம், கவர் ஸ்டோரி செய்வதற்கு ஏற்ற மாநகரக் கதைக் களம், ஆங்கிலம் பேசும் வாய்ப்பு உள்ள மேல்தட்டு வர்க்க அடையாளங்கள், விளம்பரங்களைப் பெருக்கிக் கொள்ள உதவும் "இன்செஸ்ட்" முடிச்சுகள் கொண்ட காதல், காமம் மற்றும் கொலைவெறிப் பின்னணி கொண்ட கதை என்பதால் தான் இத்தனை ஆர்வம், நினைவு கொள்ளுங்கள், முன்னர் ஒருமுறை "ஆருஷி" என்கிற மாணவியின் கொலை வழக்கிலும் நமது ஆங்கில ஊடகங்களின் ஆர்வம் மெச்சத்தகுந்த  வகையில் இருந்ததை மறந்து விடாதீர்கள்.

இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு ஒடுக்கப்பட்ட பெண் தாக்கப்படுகிறாள், அவமானப்படுத்தப்படுகிறாள், ஐந்தாறு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு தலித் ஒடுக்கப்பட்ட ஆண் அடிவாங்குகிறான், இதே மகாராஷ்டிர மாநிலத்தில் ஆதிக்க சமூகத்துப் பெண்ணோடு இளைஞன் ஒருவன் பேசினான் என்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள், அவர்களது உடல் உறுப்புகளை வயல் வெளிகளில் வீசி எறிந்து விட்டு இன்று வரையில் சட்டத்தின் கண்களுக்கு  போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் குற்றவாளிகளைக் குறித்து "கவர் ஸ்டோரி" எல்லாம் வேண்டாம், ஒருநாள் கூட முக்க மாட்டார்கள் கோஸ்வாமிகளும், பாண்டேக்களும், ஏனென்றால் அது இயல்பாக நடக்கக் கூடிய நடக்க வேண்டிய வர்ணச் சடங்கு, அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.

இந்தச் சூழலில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, குழந்தைகளை அல்லது இளைஞர்களை பெரிதாகக் கண்டு கொள்ளாத தங்களது சமூக வெளிச்சம் நிரம்பிய ஆடம்பர வாழ்க்கையை என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிற மேல்தட்டு வர்க்கச் சிந்தனைகளை முதலீட்டியம் தொடர்ந்து வழிநடத்துகிறது. ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த சிக்கலான பல்வேறு முடிச்சுகளை தாங்கள் புலனாய்வு செய்வதாக எண்ணி தொடர்புடைய எண்ணற்ற வேறு மனித உயிர்களையும் வதைக்கும் ஒரு வன்மம் நிரம்பிய பாதையை நோக்கி நமது ஊடகங்கள் சென்று கொண்டிருக்கின்றன, தலைக்கு மேலே போகிற வெள்ளமாய் தேசமெங்கும் இன்னும் எழுச்சியோடு கிளம்பிக் கொண்டிருக்கும் சாதியப் படுகொலைகள், மதவெறியர்களின் அதிகாரத்தில் சிக்குண்டு சீரழியப் போகிற மானுடம் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தனி மனித வழக்குகளிலும், வழிபாடுகளிலும் இத்தனை குவியத்தை காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து வழங்கி வருவது ஒருபோதும் யாருக்கும் நன்மைகளை வழங்கப் போவதில்லை.

இறந்து போன உயிர்களைத் தாண்டி உயிர்ப்பான வாழ்க்கையும், எதிர்காலக் கனவுகளும் கொண்ட பலர் அந்த இறப்போடு தொடர்பு கொண்டவர்களாய் இருக்கிறார்கள், நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள் என்று ஒரு மிகப்பெரிய வட்டத்தை இந்த ஊடக வெளிச்சம் அடித்து விளையாடக் கூடும், அர்னாப் கோஸ்வாமிகளுக்கு ஒவ்வொரு நாளும் இன்னொரு "நியூஸ் ஹவர் டிபேட்" கிடைத்து விடும், மனமொடிந்த ஷீனா போராவின் தோழியாகவோ, தோழனாகவோ நமது ஊடகங்களில் கோடிடப்பட்ட மனித மனங்களின் வீழ்ச்சியை அத்தனை எளிதாக தூக்கி நிறுத்தி விட இயலாது. தனி மனித வழக்குகளின் போக்கைப் படம் பிடிக்கிற அல்லது ஒளிபரப்புகிற ஊடகங்களின் கட்டுப்பாடற்ற உரிமைகளைக் குறித்து மனித வள மேம்பாட்டுத் துறையும், தகவல் ஒளிபரப்புத் துறையும் கவனம் கொள்ள வேண்டிய நேரமிது.

*************

கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 23, 2015

எம்பூட்டு சொத்து……..

a-raja1

விடுதலை பெற்ற இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறை ஒரு பொன்முட்டை இடுகிற வாத்து, இந்தியாவின் இயற்கை வளங்களையும், பொருளாதார, சமூக வளங்களையும் நெடுங்காலமாகக் கொள்ளையடித்துச் சுரண்டிக் கொழுக்கும் பார்ப்பனீய, பனியாக் கும்பல் பல காலமாக இந்தத் துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்தியாவின் பொது மனிதனை ஏமாற்றி முதலாளிகளுக்கும், ஆட்சியதிகாரத்திலும் இருக்கும் பொருளாதாரத் தரகர்களுக்கும் பயனுள்ள வகையில் பல சித்து வேலைகளைச் செய்து அதிகாரப்பூர்வக் கொள்ளையடித்தார்கள்,    இதன் உண்மையான பொருளாதார வளத்தைக் கண்டறிந்து முதன் முறையாக பெரிய அளவில் ஊழலைத் துவங்கி வைத்தவர் பாரதீய ஜனதாக் கட்சியின் மறைந்த பிரமோத் மகாஜன்.

தொலைத் தொடர்புத் துறையில் 2 ஜி. 3 ஜி, 4 ஜி என்று எல்லா ஜீயிலும் உண்மையில் இன்று வரையில் மிகப்பெரிய அளவில் பயனடைந்தவர்கள்  ரிலையன்ஸ் அம்பானிகள், பார்தி ஏர்டெல் மிட்டல்கள், டாட்டாக்கள் மற்றும் சில முதலாளித்துவ இந்தியாவின் பார்ப்பன பனியாக் கும்பலின் கொள்ளைக் கூட்டத் தலைவர்களே அன்றி வேறு யாருமல்ல. இந்திய அரசையே அவர்கள் ஏமாற்றினார்கள் இன்னமும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், ராணுவத்துக்கு என்று ஒதுக்கப்படும் அலைக்கற்றை எங்கே பயன்படுத்தப்படுகிறது, யாருக்குப் போகிறது என்கிற கேள்விக்கு இன்று வரையில் விடை இல்லவே இல்லை. வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளைப் போலக் கணக்குக் காட்டி அம்பானிகள் அடித்த கொள்ளை தொழில்நுட்ப ரீதியாகப் பார்ப்பன, பனியாக்கள் அடிக்கிற கொள்ளைக்கு ஒரு சோற்றுப் பதம்.        

ஆ. ராசா உண்மையில் இந்த நெடுநாள் கொள்ளையின் அடிமடியில் கை வைத்தார், வழக்கமான லாபி முறைகள், நன்கொடை விவகாரங்கள் மாதிரியான சில நீதிக்குப் புறம்பான தவறுகள் ஆ.ராசா காலத்திலும் நடந்திருக்கலாம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தெல்லாம் கிடையாது, ஊழலற்ற நேர்மையான அமைச்சராக இந்தியாவின் எந்த அரசமைப்பிலும் யாரும் வேலை செய்ய இயலாது என்பதுதான் அடிப்படையான உண்மை, அப்படி இருக்க விடமாட்டார்கள். ஆனால், ஆ.ராசா உண்மையில் வெகுமக்களுக்கு தொலைத் தொடர்புத் துறையின் பயன்களை மடை மாற்ற இதயப் பூர்வமாகப் பணியாற்றினார், குறிப்பிட்ட நான்கைந்து நிறுவனங்களின் நிலைத்த மறைமுகக் கூட்டை உடைத்தார், ஆ.ராசாவின் மீதான வழக்குகளில் இன்றுவரை வலுவான எந்த முன்னேற்றமும் இல்லாமல் சி.பி.ஐ தடுமாறிக் கொண்டிருப்பதை ஒரு ஜூனியர் வழக்கறிஞர் ஏன் ஒரு சட்டக் கல்லூரி மாணவர் கூட எளிதாக அடையாளம் கண்டு விடுவார்.

முதலாளிகளின் கூட்டணி  சி ஏ ஜி யின் அறிக்கையைப் பயன்படுத்தி அல்லது சி ஏ ஜியையே பயன்படுத்தி ஆ.ராசாவுக்குக் குடைச்சல் கொடுத்தது, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் பெரும் விளம்பர வருமானத்தை அடைந்து வந்த ஊடக வல்லரசுகளும் ஆ.ராசாவுக்கு எதிராகக் களத்தில் குதிக்க இந்தியாவின் மிகப்பெரிய குற்றவாளியைப் போல சித்தரிக்கப்பட்டார் ஆ.ராசா, ஆனால், தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்துத் தனது நிலைப்பாடுகளையும், தனது நியாயங்களையும் அவர் தொடர்ந்து பேசினார், நேர்மையோடு எதிர்கொண்டார், இந்தச் சூழலை காங்கிரஸ் களவாணிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வலிமையை வலுவிழக்கச் செய்யும் ஒரு அரசியல் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தினார்கள், சோனியாவும், மன்மோகனும், ஏனைய காங்கிரஸ் பெருச்சாளிகளும் இந்த விஷயத்தில் கள்ள மௌனம் காத்தார்கள். தி.மு.க ஒரு அரசியல் சிக்கல் நிரம்பிய இந்தியப் பார்ப்பனீயத்தின் சுரண்டலும், முதலாளித்துவ பனியாக்களும் பின் நின்ற இந்த வழக்கை முறையாக எதிர்கொள்ளத் தவறியது, காங்கிரஸ் களவாணிகளின் உண்மை முகத்தை காட்டிக் கொடுக்க மறுத்துப் பம்மியது, இதன் பலனாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயன்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் ஊழலின் பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டது.

இப்போது ஆ.ராசா என்கிற பெயர் இந்திய அரசியலில் பார்ப்பனீயத்துக்கு மிகுந்த வெறுப்பான ஒரு வழக்கமான எதிர்க் கோட்பாட்டுக் கருவி, காங்கிரஸ் ஆகட்டும், பாரதிய ஜனதா ஆகட்டும், முன்பு பெரியாரை எப்படி ஒரு கோட்பாட்டு எதிர்ப்புணர்வாகவும், சமூகப் பழக்கங்களில் படிந்திருக்கும் தங்கள் பொருத்தமற்ற உயர்வுக்கு விழுந்த சாட்டையடியாகவும்  எண்ணித் தூற்றியதோ அதே போல இப்போது அரசியல் பொருளாதாரத் தளங்களில் தங்கள் கோட்பாட்டு எதிர்ப்புக்கு இந்தப் பெயரை மிகத் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள், சுற்றிச் சுற்றி வலை கட்டுகிறார்கள். இப்போது கட்டிய வலை சிலந்தி விலையை விட வலிமையற்றது என்றாலும் கூச்சமில்லாமல் சொல்கிறார்கள், ஆ. ராசாவின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர் பங்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து 27 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று, அதாவது ஏறத்தாழ 170 வருமான வரிப் பட்டியல் வரிசையில் இருந்து 27 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று…….அதாவது ஆ.ராசா, அவரது நிறுவனங்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒவ்வொருவரும் 15 லட்சம் சேர்த்திருக்கிறார்கள்.

அடேங்கப்பா……குடுமிய மறைக்க மறந்துட்டீங்களே……. 

 

*************

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்

%d bloggers like this: