கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 23, 2014

பிரேசிலின் "சேம் சைடு கோல்".

bRASIL

கடந்த சனிக்கிழமை பிரேசில் நாட்டின் "மினிஜ்ரு" (Mineirão) நகரில் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டிருக்கும் கால்பந்து விளையாட்டரங்கம் ஆர்ப்பரிக்கிறது, உலகெங்கிலும் இருந்து பல கோடி ரூபாய்கள் செலவழித்து மில்லியனர்கள் பலர் அங்கே முகாம் இட்டிருக்கிறார்கள், வண்ண விளக்குகளும், தோரணங்களும் நிரம்பிய அந்த விளையாட்டரங்கில் அர்ஜென்ட்டினாவும் ஈரானும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன,

கால்பந்து விளையாட்டின் அரசன் என்று அழைக்கப்படும் அர்ஜென்ட்டினாவின் கனவை முடக்கி ஆசியாவின் ஒரே அணியாக அங்கே களத்தில் இருக்கும் ஈரான் போராடிக் கொண்டிருக்கிறது, போட்டி ஏறத்தாழ முடிந்து விட்டது என்று ரசிகர்கள் எழுந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அந்தக் கடைசி நிமிடத்தில் ஈரானின் வீரர்கள் அனைவரையும் தாண்டி நிலைகுலைய வைத்து விட்டு உலகக் கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகன் "லியோனல் மெஸ்ஸி" தனது அணியின் வெற்றிக்கான கோலைப் போடுகிறார். அரங்கம் மீண்டும் ஆர்ப்பரிக்கிறது.

மேற்கண்ட காட்சி நீங்களும், நானும் செய்மதித் தொலைக்காட்சியின் உதவியோடு கண்டு களித்த காட்சி, ஆனால், அதே நாளில் அதே அரங்கத்தில் நிகழ்ந்த இன்னொரு காட்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.   க்லெய்ட்டொன் சோயர்ஸ் என்கிற 23 வயது இளைஞன் அந்த அரங்கின் வாயிலைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான், அவன் ஒரு ராணுவ வீரன், தீவிரக் கால்பந்து ரசிகன், இந்த அரங்கின் உள்ளே நடக்கிற போட்டிக்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்பதைப் போல சக ராணுவ வீரனோடு ரியோடி ஜெனிரோ நகரத்துக்கு வெளியே கால்பந்து விளையாடும் பெயர் தெரியாத ஒரு அணியைக் குறித்து அவன் உரையாடிக் கொண்டிருக்கிறான். "மக்கள் கோப்பை" என்ற பெயரில் "FIFA 2014" உலகக் கோப்பையை எதிர்த்து தனியாக ஒரு கோப்பையை அறிவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் கால்பந்தை தங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் பிரேசில் நாட்டு மக்கள்.

க்லெய்ட்டொன் சோயர்ஸ் மட்டுமில்லை, பிரேசில் நாட்டின் உழைக்கும் எளிய மக்கள் யாரும் இந்த FIFA 2014 உலகக் கோப்பையை அத்தனை ஆர்வமாக ரசிக்கவில்லை, க்லெய்ட்டொன் சோயர்சின் தந்தை ஒரு நடைபாதை வணிகர், மினிஜ்ரு விளையாட்டரங்கில் இருந்து ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் இவரையும், குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறது பிரேசில் அரசு, அவரைப் போலவே உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடக்கும் அரங்கத்தின் அருகிலிருந்த  பல ஏழைக் குடும்பங்களும், சிறு வணிகர்களும் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள், இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் பிரேசில் அணியை உயிருக்கு உயிராக நேசிப்பவர்கள், தங்கள் நாட்டின் தேசிய கால்பந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று வழிபாடு செய்பவர்கள்.

உலகின் மிகப்பெரும் திருவிழாவான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டின் ஒரு எளிய உழைக்கும் மனிதன் இந்த அரங்குகளுக்குள் நுழைய இயலாதபடி பெரும்பணக்கார முதலாளிகளும், நிறுவனங்களும் நுழைவுச் சீட்டுகளை முடக்கிக் கொண்டார்கள், தங்களுக்கு மிக அருகில் உலகக் கோப்பையை விளையாடும் கனவு நாயகர்களை பிரேசில் நாட்டின் மாணவர்களும், இளைஞர்களும் நேரில் கண்டு ரசிக்க முடியாது, ஒரு மாதம் முழுக்க அவர்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு அந்த அரங்கங்களுக்குள் நுழைய இயலாதபடி பணக்கார விளையாட்டாய் மாறிப் போன அந்த வலியையும், துயரத்தையும் அவர்கள் போராட்டங்களின் மூலமாகவும், மக்கள் கோப்பை என்கிற மாற்று விளையாட்டை நிகழ்த்துவதன் மூலமும் கோபமாய் வெளிக்காட்டினார்கள்.

இன்றைக்கு கால்பந்தாட்ட அரங்குகளில் நாம் காணும் மஞ்சள் வண்ண உடையணிந்து பன்னாட்டுக் குளிர் பானங்களைக் கையிலேந்தியபடி ஆடும் கொளுத்த பிரேசில் இளைஞர்களைக் கடந்து இன்னொரு பிரேசில் இருக்கிறது.

1024px-1_rocinha_favela_closeup

முக்கிய நகரங்களைச் சுற்றி இருக்கும் "பவேலா"க்கள் (Favela) பிரேசில் நாட்டின் வறுமையை வெளிச்சம் போடுகிற கொடுஞ்சிறைக் கூடங்கள், இங்கிருக்கும் வீடுகள் பெரும்பாலும் குப்பைகளால் கட்டப்பட்டவை, இந்தக் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் உலகின் ஏழ்மைக்கு எல்லா வகையிலும் எடுத்துக்காட்டானவர்கள். பிரேசில் அரசின் பள்ளிக்கூடங்கள் எதுவும் இங்கே இல்லை, தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் இல்லை, அரசு வழங்கும் மின்சாரம் இல்லை, பெரும்பணக்காரர்களின் குடியிருப்புகளுக்குச் செல்லும் மின்னிணைப்பைத் திருடியே இங்கிருக்கும் மக்கள் நெடுங்காலமாக வாழ்கிறார்கள்.

போதை மருந்துகளும் ஆயுதங்களும் குழந்தைகளுக்குக் கூடக் கிடைக்கும் அளவுக்கு இங்கே சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து கிடக்கிறது, உலகின் மிகக் கவர்ச்சிகரமான பெண்கள் பிரேசிலில் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உலகம் குறித்த கவலையோடு எழுதிக் குவிக்கும் ஊடகங்கள் இந்த பவேலாக்களுக்குள் ஒருபோதும் நுழைவதில்லை, அங்கிருக்கும் ஏழைக் குழந்தைகளின் ஒட்டிய கன்னங்களை ஒருபோதும் அவை தங்கள் அட்டைப்படங்களாக வெளியிடுவதில்லை.

"ரியோடி ஜெனிரோ" மற்றும் "சா பாவ்லா" நகரங்களைச் சுற்றி அரச அமைப்பால் நெடுங்காலமாகக் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிற இந்த அவலமான மக்கள் திரளுக்கும், உலகின் மிக அழகிய ரியோடி ஜெனிரோ கடற்கரையில் கவலைகளை மறந்து ஆடிக் களிக்கிற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் அதே உலகம் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. பிரேசிலின் அதிகார அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டம் எப்போதும் இந்த பவேல்லாக்களில் தங்கள் சட்டப்புறம்பான ஒரு உலகை நடத்தியபடி இருக்கின்றன. நேர்மையான, பிரேசில் மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசியல்வாதிகளையும் இங்கே நுழைய விடுவதில்லை. நீதியின் பால் நின்று தட்டிக் கேட்கிற பல இளைஞர்கள் பவெல்லாக்கலில் விரட்டி விரட்டி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பிரேசில் என்றில்லை, கால்பந்து என்றில்லை உலகின் பல்வேறு நிலைகளில் எளிய உழைக்கும் மக்களின் வாழ்நிலை இப்படித்தான் எந்த வேர்களும் இல்லாமல் முதலாளிகளின் கைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது,  இந்தியாவின் பல நகரங்களில் வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூக்குரலிடும் முதலாளித்துவ ஊடகங்கள் எப்படி "சோப்டா" க்களைக் கண்டு கொள்வதில்லையோ அதைப் போலவே இன்றைக்கு பிரேசில் பாவேல்லாக்கள் புறக்கணிக்கப்பட்டு சமூக விரோதக் கூடங்களாகக் காட்சி தருகின்றன. ஏறத்தாழ 20 – 20 கிரிக்கெட் போட்டியை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடும் இந்திய தேசத்துக்கும், பிரேசிலுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. வறுமையில் வாடும் உழைக்கும் மக்கள் அனைவரும் நாடு, மொழி, இனம், மதம் என்று எல்லாம் கடந்து ஒரே வரிசையில் உபரி மனிதர்களாய் நிறுத்தப்படுவார்கள்.

1_rocinha_favela_panorama_2010

இனி ஒரு உலகக் கோப்பைப் போட்டியை நீங்கள் பார்த்து மகிழ்கிற போது பாவேல்லாகளில் இருந்து மீள முடியாத ஒரு ஏழைக் குழந்தையின் அழுகுரல் பின்னணி இசையாய் உங்கள் செவிப்பறையை அடையக் கூடும். ஊடகங்களில் நாம் காணும் உலகுக்கு அப்பால் எப்போதும் ஒரு இருண்ட துயரம் நிரம்பிய ஏழ்மையின் உலகம் நிழலாடிக் கொண்டே இருக்கிறது என்கிற உண்மையை நாம் விழுங்கிச் செரிக்கத்தான் வேண்டும்.

 

***************

Advertisements
கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 21, 2014

மோடியும், தமிழும்.

untitled

நிறைமொழியின் ஒரு ஆங்கில வழிப் பள்ளியில் தான் படிக்கிறாள், அவளுக்கு வேறு வழியில்லை, ஆனால், அவளுக்கு ஒரு தமிழ் வழிப் பள்ளியை வீட்டில் நானும் துணைவியாரும் நடத்திக் கொண்டிருக்கிறோம்., இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ஒரு முன்னாய்வுக் கூட்டத்தைப் பள்ளியில் நடத்தினார்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டோம். பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்கள், ஒரு கட்டத்தில் மொழி குறித்த விவாதம் வந்தது, நிறைமொழி வேறு சில குழந்தைகளோடு ஒப்பீட்டளவில் ஆங்கிலம் பேசுவதில் பின்தங்கி இருக்கிறாள் என்று சொன்னார்கள், நான் அவர்களிடம் நேரடியாகவும், தெளிவாகவும் இப்படிச் சொன்னேன்.

எங்கள் வீட்டில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை, ஆங்கிலத்தை மிக முக்கியமானது என்று குழந்தைப் பருவத்தில் அவளுக்குச் சொல்ல வேண்டிய எந்தத் தேவைகளும் இல்லை, அது ஒரு குறைபாடு என்று நான் கருதவில்லை, அவள் தனது தாய்மொழியில் சிறப்பாகப் பேசுகிறாள், கற்கிறாள். ஆகவே இது குறித்து அவளிடம் நீங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுவதைத் தவிருங்கள், தமிழ் பேசத் தெரிந்த ஆசிரியைகள் உங்கள் பள்ளியில் இருக்கிறார்கள், இயன்றால் அவர்கள் அவளுக்குத் தமிழில் சொல்லிக் கொடுக்கட்டும், அவள் ஆங்கிலத்தை இயல்பாகக் கற்றுக் கொள்ளும் வரை தாய்மொழியின் சிறப்பியல்புகளை ஆங்கிலத்தில் உள்ளீடு செய்து கற்றுக் கொள்ளும் காலம் வரை அவளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்."

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை எனது சொற்களைப் புரிந்து கொண்டார்,

"உங்கள் குழந்தையின் மீது நாங்கள் சிறப்புக் கவனம் கொள்கிறோம். இயன்றவரை தமிழில் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கிறோம்" என்று மறுமொழி உரைத்தார்.

தாய் மொழியை முழுமையாக உணர்ந்து கற்றுக் கொள்கிற காலத்தில் ஆங்கிலத்தை மட்டுமல்ல எந்த மாற்று மொழிகளையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தும் கலையை அவள் கற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஏனெனில் கல்லூரிக் காலம் வரை நான் தமிழ் வழிக் கல்வியையே கற்றேன், ஆனாலும், பெங்களூரின் IIM இல் கல்வி பயின்று என்னோடு பணிபுரிகிற சக நண்பனின் ஆங்கில அறிவுக்கு எந்த வகையிலும் என்னுடையது இப்போது குறைவானதாக இல்லை. ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பன்மொழிகளில் இப்போது என்னால் சிறப்பாகப் பேச முடியும். பன்மொழிகளைக் கற்றுக் கொள்கிற அவற்றைச் சிறப்பாகக் கையாளுகிற திறனை எனக்கு வழங்கியது தாய்மொழி குறித்த எனது புரிதலும், நேசமும் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதுவே மறுக்க முடியாத உண்மையும் கூட.

தாய் மொழியைக் குறித்த எந்த அடிப்படை நேசமும், புரிதலும் தமிழ்ச் சமூகத்தில் இல்லை, நமது பெரும்பாலான குடும்பங்களில் இன்று அடிப்படைக் கல்வியைக் குழந்தைகள் ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வதே நாகரீகம் என்றும், பெருமை என்றும் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம், நமது உயர் மற்றும் நடுத்தரக் குழந்தைகள் இரண்டாம் மொழி குறித்த எந்தச் சிந்தனைகளும் இல்லாத பருவத்திலேயே அவர்களது அடிப்படைக் கல்வியை ஆங்கிலத்தில் அவர்கள் மீது திணிக்கிறோம், சிந்தனைகள், தொடர்பு மற்றும் தேவைகளுக்கான எல்லாவற்றையும் தாய் மொழியில் அவர்கள் பழக்கம் செய்து கொண்டிருக்கும் இளம்பருவத்தில் அவர்களை அவர்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு வணிக மொழியில் கல்வி பயில வேண்டும் என்று அவர்கள் மீது வன்முறையை ஏவுகிறோம். இந்தத் தொடர் வன்முறையின் மற்றும் திணிப்பின் காரணமாக அவர்கள் புரிதல் நிலையிலிருந்து வெகு தொலைவு தள்ளப்பட்டு மனப்பாடம் செய்தே தேர்வுகளை எதிர்கொள்ளும் அவல நிலைக்கு ஆளாகிறார்கள், அவர்களின் அறிவு மட்டுமல்ல, ஆங்கிலம் நமக்கு வராது என்கிற ஒரு குற்ற உணர்வோடு மன உளைச்சல், உளவியல் அழுத்தம் போன்ற சுமைகளோடு வளர்கிறார்கள், ஆங்கிலம் சிறப்பாகப் பேசுகிற, எழுதுகிற குழந்தைகளை கல்வியிலும், அறிவிலும் சிறப்பானவர்கள் என்று அவர்கள் நம்பத் துவங்குகிறார்கள் அல்லது அப்படி நம்புவதற்கு அவர்களை நாம் பழக்கப்படுத்துகிறோம்.

பொதுச் சமூகமும், அரசுகளும் தாய்மொழி வழிக் கல்வியையும், தாய்மொழியின் முக்கியத்துவத்தையும் நமது குழந்தைகளுக்கு உணர்த்துவதில் இருந்து தவறும் அடிப்படைத் தவற்றை நாமே செய்கிறோம். விளைவு அவர்கள் அறிவை அடகு வைத்து மதிப்பெண்களை நோக்கி ஓடும் வணிக எந்திரங்களாக மாறி இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து இளைஞர்கள் ஆன பிறகு அவர்களிடம் இருக்கும் ஒரே வாய்ப்பு இத்தகைய அழுத்தங்களை எல்லாம் தாண்டி தமிழின் எல்லைகளற்ற சிறப்பையும், வளமான இலக்கியங்களையும் அவர்களாகவே தேடித் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது அரைகுறை ஆங்கிலத்தைப் பேசிக்  கொண்டு மொழி குறித்த எந்த அறிவும் இல்லாமல் அதே பொதுச் சமூகத்திடம் இருந்து "இன்றைய இளைஞர்கள் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்கள், தமிழில் பேசுவதில்லை, தமிழ் இலக்கிய உலகம் தேங்கிக் கிடக்கிறது, எழுத்தாளனைக் கொண்டாட எவனும் இல்லை என்றெல்லாம் ஊடகங்களில் வசைகளைப் பரிசாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று ஒருப்பக்கம் கூப்பாடு போட்டபடியே நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலத்தை நமது குழந்தைகளின் மீது திணித்துக் கொண்டிருக்கிறோம். தனது தாய் மொழியை நேசிக்கிற அல்லது அதன் மதிப்புகளை உணர்ந்த எந்த மனிதனையும் மீறி இன்னொரு மொழியை அவன் மீது எந்தச் சட்டங்களாலும், அரசுகளாலும் திணித்து விட முடியாது என்பதே உண்மை. அதற்காக அத்தகைய திணிப்புகளுக்கு நமது கடுமையான எதிர்ப்புத் தெரிவிப்பதையும், போராடுவதையும் ஒருபோதும் நான் விமர்சனம் செய்ய மாட்டேன். ஏனெனில் அத்தகைய போராட்டங்களின் மூலமாகவே நாம் பல்வேறு அடிப்படை உரிமைகளை இழக்காமல் இன்னமும் நமது மொழியை உயிர்ப்போடு வைத்திருக்கிறோம்.

என்னுடைய கேள்வி, தீவிரமாக அரசியல் களங்களில் இத்தகைய எதிர்ப்புகளையும், மொழி உணர்வையும் காட்டும் நமது அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் ஆட்சி அதிகாரமும், மாற்றங்களுக்கான வாய்ப்பும் இருக்கும் போது மொழியை வளர்க்கிற அல்லது அழியாமல் காக்கிற தாய்மொழிக் கல்வியையும், அதற்கான முன்னெடுப்புகளையும் ஏன் தீவிரமாக செயல்படுத்துவதில்லை என்பதுதான்.

பல்வேறு காலகட்டங்களில் திராவிடக் கட்சிகள் மட்டுமன்றி பல்வேறு அமைப்புகள், தனி மனிதர்கள் தீவிரமாக இதுபோன்ற மொழித் திணிப்பு முயற்சிகளை போராடி முறியடித்திருக்கிறார்கள். நமது தமிழ்த் தேசிய இளைஞர்கள் போடுகிற "கணக்குப்படி" ஆங்கிலேயரான கால்டுவெல், கன்னடரான பெரியார், மலையாளியான எம்,ஜி.ஆர், தெலுங்கரான கருணாநிதி, மீண்டும் கன்னடரான ஜெயலலிதா மட்டுமில்லை பார்ப்பனரான உ.வே. சுவாமிநாத ஐயர், பறையரான அயோத்திதாசர் என்று பல வண்ண மனிதர்கள் பல்வேறு தளங்களில் தமிழுக்கான சிறப்புகளை, மகுடங்களை சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு மொழியை தனது தாய் மொழியாக ஏற்றுக் கொள்கிறவன், அந்த மொழிக்கான வளர்ச்சியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு கொள்கிறவன் எவனுமே அந்த மொழிக்காரன் தான். பூர்வீக ஆய்வுகளை மேற்கொண்டு யாரையும் தனிமைப்படுத்தும் செயல்பாடுகளுக்கு மாற்றாக ஆக்கப்பூர்வமாக நமது மொழிக்கான வளர்ச்சிப் பணிகளில் எப்படி அவர்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்று சிந்தித்து அத்தகைய பாதையில் ஒற்றுமையோடு பயணிப்பதே இந்துத்துவ மோடி அரசுகளின் மொழி குறித்த மடத்தனமான கொள்கைகளை எதிர்கொள்ளும் ஆயுதம்.

வெகுநுட்பமாக தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலத்தை ஒவ்வொரு தமிழ்க் குழந்தைகளின் மீதும் நாமே திணிக்கும் வன்முறையைக் களைவது மோடிக்களின் அரசு செய்யும் மொழித்திணிப்பு அரசியலை விட மிக முக்கியமானது என்பதை நாம் உணர்ந்தாலே போதும், நமது மொழியை எவனாலும் நெருங்க முடியாது.

 

***********

கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 21, 2014

பெண்களும், இலக்கியமும்.

imagesCA73Z0O0

எனக்கு ஒரு தோழி இருந்தாள், நானும் அவளும் மேல்நிலைக் கல்வியை ஒன்றாகப் படித்தோம், நுண்கலைகள், ஓவியம், இலக்கியம், இசை, பேச்சு என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கக் கூடியவள், அவளோடு பள்ளியின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன், சில நேரங்களில் நானும், பல நேரங்களில் அவளும் பரிசுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறோம்.

இன்னும் திறந்த மனதோடு சொல்ல வேண்டுமானால் அவளைக் கண்டு நான் அஞ்சினேன், அவளது குரல் எப்போதும் காட்டருவி ஒன்றின் கட்டுங்கடங்காத வெள்ளமாய் என்னை அச்சுறுத்தியது, பல இடங்களில் அந்தப் பெண்ணை வெல்ல வேண்டும் என்பதற்காக நான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, அப்படி உழைத்த காலங்களிலும் எளிதாக மிகப்பெரிய தயாரிப்புகள் ஏதும் இல்லாமல் அவளால் வெற்றி பெற முடிந்தது.

காலத்தின் சுழற்காற்றில் பிறகு வெவ்வேறு கல்லூரிகளுக்குப் போன பின்பு அந்தப் பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்புப் பிறகு வரவேயில்லை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் சமூக இணையத்தளமொன்றில் வேறொரு நண்பன் மூலமாக அவளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழக்கமான உரையாடல்களுக்குப் பிறகு நான் அவளிடம் கேட்டேன்,

"உங்கள் கலை, இலக்கியம் சார்ந்த ஈடுபாடு எப்படி இருக்கிறது?"

"வெகு இயல்பாக அவள் சொன்னாள்,

"கலை, இலக்கியமெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு பெண்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுவதில்லை அறிவு, எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள், பணிச்சுமைகளும், சமூக மதிப்பீடுகளும் நிரம்பிய ஒரு ஆணின் உணவுத் தேவைகளையும், உடை மற்றும் பயணத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிற பெரும் பொறுப்பு என்னிடம் இருக்கிறது, எதையாவது படிப்பதற்கான நேரம் கூட இப்போது என்னிடம் இல்லை."

அவள் சொன்னது ஒரு எளிய உண்மை, பெரிய வியப்புக்குரியதொன்றும் இல்லை, பெண்களின் உடலும், மனமும் இப்படித்தான் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பெண்ணின் உடல் மற்றும் மன விருப்பு வெறுப்புகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிற ஒரு அழுகிய முடைநாற்றமெடுக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எளிமையான உணவுப் பொருட்களைத் தேர்வு செய்வதில் இருந்து, வெகு ஆழமான தாக்கங்களை விளைவிக்கிற பாலியல் விருப்பங்களைத் தேர்வு செய்வது வரையில் நமது பெரும்பாலான குடும்பங்கள் பெண்களின் விருப்பங்கள் குறித்து அறிந்து கொண்டதுமில்லை, அறிய விரும்பியதுமில்லை. பெண்ணின் உடலும், மனமும் ஆண்களின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது, அப்படிச் செயல்படுவதே பெருமைக்குரிய நமது பண்பாடென்று சொல்கிற நிலைக்கு நமது பெண்களே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்கான, உடலும், மனமும் தனித்தன்மை வாய்ந்ததென்று அவர்களுக்குப் புரிய வைப்பதற்கே இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்படும் ஒரு சமூகத்தில் ஆண்களுக்கு இணையான இலக்கியங்களைப் பெண்கள் படைக்கவில்லை என்று கள்ள ஆட்டம் ஆடுவது நீதிக்குப் புறம்பானது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நமது சமூகத்தில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளும், விருப்பங்களும் தடை செய்யப்பட்டிருந்தது, இப்போதுதான் பெண்ணின் மனம் என்கிற கூண்டுப் பறவை விடுதலை குறித்த கனவுகளையே காணத் துவங்கி இருக்கிறது. அந்தப் பறவைக்கு இனி மேல்தான் சிறகுகள் முளைக்க வேண்டும். பிறகு, ஆண்களால் திரும்பத் திரும்ப உறுதியாகவும், வன்மத்தோடும் கட்டப்பட்டிருக்கிற கூண்டுகளை உடைத்து வெளியேறி அதற்கான வாழிடங்களையும், நிலப்பரப்பையும் தேடி, தனக்கான இலக்கியத்தை அடையாளம் கண்டு, அவற்றைப் படித்துக் கரையேறி பிறகு எழுதத் துவங்க வேண்டும்.

குற்றங்குறை சொல்கிற ஆண் எழுத்தாள சமூகங்களுக்கு அப்படியான மனத்தடைகள் ஏதும் இங்கே விதிக்கப்படவில்லை, பெரும்பான்மையாக தம்மைச் சுற்றி வாழ்கிற ஆண்களின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இயல்பான ஒரு மனித உடலாக இருப்பதே தடை செய்யப்பட்டிருக்கும் அடிமைகளைப் பார்த்து "நீ என்ன சாதனைகள் செய்திருக்கிறாய்?" என்று கேட்பது அழுகுணி ஆட்டம் மட்டுமில்லை, எந்த வகையிலும் பெண்ணுடலையும், மனத்தையும் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாதது.

இன்றைக்கு நமது சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற பெண் இலக்கியவாதிகள் பலரை நான் உணர்ந்திருக்கிறேன், அவர்களில் பலர் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள், அவர்கள் இலக்கியத்தையோ, நுண் கலைகளையோ தங்கள் துறையாகத் தேர்வு செய்து இயங்கத் துவங்கும் போது குடும்ப அமைப்பு அவர்களை நிராகரிக்கத் துவங்குகிறது, அவர்களை அவமானம் செய்கிறது, வெகு நுட்பமாக ஏதோ ஒரு ஆணின் மனம் அவள் வாசிப்பதையோ, எழுதுவதையோ கேலி செய்து கொண்டே இருக்கிறது, அந்த அவமானங்களில் இருந்தெல்லாம் மீண்டு அவள் இலக்கியத்தை நோக்கிப் பயணிப்பது புயற்காற்றில் ஓட்டைப் படகு செலுத்தும் ஒழுங்கீனமான சூழல்.

குடும்ப அமைப்பை நிராகரித்து விட்டு, தனியாக இயங்குகிற பெண்களை நோக்கி ஆணின் வன்மம் இப்போது உடல் வழியாகச் செயல்படத் துவங்குகிறது. தனியாகக் குடும்ப அமைப்பில் இல்லாத பெண் ஒழுங்கீனமானவள் என்று கடித்துக் குதறுகிறது. வெற்றிகரமான இலக்கியப் பெண்களே இத்தகைய கொடுமையான மன அழுத்தங்களில் கிடந்தது உழல்வதைப் பல நேரங்களில் ஒரு பார்வையாளனாகக் கடந்து போக வேண்டியிருக்கிறது.

இலக்கியம் மனித நாகரீகத்தின் படிக்கட்டுகளில் மலர்கிற குறிஞ்சி மலரைப் போன்றது, இலக்கியம் பண்பட்ட ஒரு மனிதனின் மொழியில் இருந்து பெருகி வழிகிற வாழ்க்கையின் பொருள் போன்றது, இலக்கியம் உயிர் வாழ்க்கையின் அகப்பொருளை அடையாளம் காணுகிற தொடர் பயிற்சியின் விளைபொருள். வாய்ப்பும், பயிற்சியும், மனதடைகளற்ற சூழலும் வாய்க்கும் மனிதனுக்கு இலக்கியம் சாத்தியமாகிறது.

பல ஆயிரம் வருடங்களாய் தன் விருப்பங்களைக் கூடத் தேர்வு செய்ய இயலாமல் வெற்றுடலாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை நோக்கி "இவ்வளவு காலமாக என்ன எழுதிக் கிழித்தீர்கள்?" என்று கேள்வி கேட்பதற்கு எந்த ஆணுக்கு அருகதை இருக்கிறது இங்கே?

ஆனாலும், இந்தக் குறுகிய காலத்தில் சிறகுகள் முளைக்கத் துவங்கிய குழந்தைப் பருவத்தில் ஆண்கள் எழுதிக் கிழித்த இலக்கியங்களை விட வலிமையான, மூடிக்கிடக்கிற இந்த சமூகத்தின் கூட்டு மன அகக் கதவுகளைத் திறக்கிற, திணற வைக்கிற பேரிலக்கியங்களைப் பெண்கள் படைத்திருக்கிறார்கள். இன்னும் படைப்பார்கள்.

கல்வியாளர்களும், சமூக ஆய்வாளர்கள் என்று சொல்லப்படுபவர்களும் கூட இன்னமும் பெண்ணுடலையும், பெண்ணின் மனத்தையும் புரிந்து கொள்ள இயலாத ஒரு சமூகச் சூழலில் நமது எழுத்தாளர்கள் மட்டும் அவற்றைப் புரிந்து கொண்டு அத்தனை எளிதாக நூற்றாண்டுகளின் பிறப்புரிமையை, நூற்றாண்டுகளின் அடிமைகளை விட்டு விடுவார்களா என்ன???

 

************

கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 13, 2014

பொள்ளாச்சி, தமிழனின் பண்பாட்டு வீழ்ச்சி.

imagesCA8UAEWQ

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறது, ஐந்து வயதுக் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளை உருவாக்கும் சமூகம் எந்த வகையிலும் மேம்பட்டது அல்ல, தமிழ் இளைஞர்களின் மனநிலை எந்த விதமான அடிப்படை ஒழுக்கம் சார்ந்த வளர்ச்சியில் இல்லை.

பள்ளிகள் அறம் சார்ந்த வாழ்க்கையைக் குறித்துச் சிந்தித்த காலம் முடிந்து மாணவர்களை வணிக ரீதியில் வெற்றி பெற உதவுகிற வெறும் நிறுவனங்களாக அவற்றை மாற்றி விட்டோம், சாதியக் கட்டமைப்பு இன்னும் இன்னும் மெருகேற்றப் படுகிறது, விருந்தோம்பல் என்பது குடியும் குடி சார்ந்த உணவும் என்று எல்லா விழாக்களிலும் புரிந்து கொள்ளப்படுகிறது.

விழாக்காலங்களில் வயது ரகசியங்களைப் போல நடைபெற்ற மது விருந்துகள் இன்று வயது வேறுபாடு ஏதுமின்றி தனிப்பட்ட குடும்ப விழாக்களில் கூட முகம் சுழிக்க வைக்கிறது, பொது இடங்களில் மாணவர்களும், இளைஞர்களும் நடந்து கொள்கிற விதம் அருவருக்கத்தக்க வகையில் மாறிக் கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்களில் துவங்கி, கல்லூரி மாணவர்கள் வரையில் பெண்களைக் குறித்த மதிப்பீடுகள் வெறும் உடல் அளவில் சுருங்கி உளவியல் நாற்றமெடுக்க வைக்கிறது.

பன்னாட்டு நுகர்வுக் கலாச்சாரத்தின் நெடி நொடிக்கு நொடி விளம்பரங்களாக அச்சு ஊடகங்களில் இருந்து காட்சி ஊடகங்கள் வரையிலும் பெண்களை வெறும் நுகர்வுப் பண்டமாகச் சுருக்கி இருக்கின்றன, இது குறித்த எந்த விழிப்பு நிலையம், எதிர்ப்புணர்வும் தீவிரமான பெண்ணியம் குறித்த உரையாடல்களில் இருப்பதாகச் சொல்லப்படும் பெண்களிடத்தில் கூட வற்றிப் போயிருப்பது உண்மையில் அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

அடிப்படைக் கல்வித் திட்டத்தில் பாலியல் தொடர்பான உளவியல் புரிதலை உண்டாக்கும் செயல்திட்டங்களை முன்னெடுக்கும் அல்லது பரிந்துரைக்கும் அறிஞர் பெருமக்களை கண்ணுக்கெட்டிய தொலைவு வரை காண முடியவில்லை, அறம் சார்ந்த அடிப்படைக் கல்வியை ஒரு மாநிலத்தின் கல்வித் திட்டமாக வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லாத நிலையில் ஒரு பெண் முதல்வரைக் கொண்டிருக்கிற நமது மாநிலம் அதற்கான முழு முயற்சியில் ஈடுபடலாம்.

பெண்ணின் உடல் குறித்த விழிப்புணர்வு முற்றிலும் தளர்ந்து போயிருக்கும் சூழலில் பல்வேறு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மூலமாக பாலியல் விழிப்புணர்வு தொடர்பான பட்டறைகளை தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரச அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். குருதிக் கொடை முகாம் மற்றும் நீரிழிவு நோய்ச் சோதனை முகாம்களைப் போல பாலியல் விழிப்புணர்வு முகாம்களை காவல்துறையோடு சேர்ந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்த வேண்டிய ஒரு காலகட்டத்தில் நமது சமூகம் நின்று கொண்டிருக்கிறது.

கலவரக் காலங்களில் நிகழும் காவல்துறை கொடி அணிவகுப்புகளைப் போல பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நிகழும் இடங்களில் விழிப்புணர்வுக் கொடி அணிவகுப்புகளை நடத்த வேண்டும், மாதம் ஒருமுறை காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் உயரதிகாரிகள் பங்குபெறும் குறை கேட்பு முகாம்களை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தோறும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல்வேறு அரசியல் கட்சிகளிலும், கம்யூனிச இயக்கங்களிலும், அமைப்புகளிலும் இருக்கும் களப்பணியாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க உதவும் பல்வேறு தீவிரப் பரப்புரைத் திட்டங்களையும், பயிற்சிப் பட்டறைகளையும் முன்னெடுக்க வேண்டும். பெண்ணிய செயல்பாட்டாளர்களும், ஏனைய சமூக ஆர்வலர்களும் பெண்களுக்கு எதிரான நுகர்வுக் கலாச்சாரப் போக்கினை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், தாங்கள் சார்ந்திருக்கும் ஊடக நிறுவனங்களில் அத்தகைய போக்குகள் நிலவும் பட்சத்தில் அடிப்படை எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்யும் மனவலிமையைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியிருக்கிறது.

கல்வி நிறுவனங்கள், குடும்ப அமைப்புகள், அரசு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக நலன் மற்றும் மேம்பாடு சார்ந்த துணை அமைப்புகள், சமூக உளவியல் தொடர்பான துணை அமைப்புகள் என்று பல்வேறு நிலைகளில் உண்டாகி இருக்கிற சறுக்கல்கள் தமிழ்ச் சமூகத்தின் மனநிலையைப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எந்த அக விழிப்புணர்வும் இல்லாமல் செய்யும் மனிதர்களை / பாலியல் எந்திரங்களை உருவாக்கும் அமைப்பாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

சமூகத்தின் கூட்டு மனநிலை என்பது ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர், எந்த அமைப்புகளும், தனி மனிதர்களும் இந்தத் தேரை வெற்றிகரமாக முன்னகர்த்த இயலாது. அச்சமும், மனச்சிதைவும் கொண்ட பெண்களைக் கொண்ட எந்த சமூக அமைப்பும் எந்த வகையிலும் முன்னேற்றங்களை நோக்கிச் செல்ல முடியாது, தேசிய விடுதலை, அரசியல் அதிகாரக் கைப்பற்றல் போன்ற தொலைதூரச் செயல்திட்டங்களை விடுத்து உடனடியாக நாம் அனைவரும் பங்கு பெற வேண்டிய அடிப்படை ஒழுக்கம் குறித்த செயல்திட்டங்களை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் இது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தெருவெங்கும் கேட்கத் துவங்கி தமிழ்ச் சமூகத்தின் முற்போக்கு வரலாற்றை பல நூறாண்டுகள் பின்னிழுத்துச் செல்கிற நிலை கண்கூடாக இருக்கிற போது அது குறித்து ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை விட அடிப்படைத் தீர்வுகளை நோக்கியும், எளிமையான விழிப்புணர்வு நிலைகளை நோக்கியும் நகர வேண்டியிருக்கிறது.

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதிகார அமைப்பில் இருக்கும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகார மையங்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் எல்லா வகை செயல்திட்டங்களையும் முறைப்படுத்தி, அலட்சியப் போக்கைக் கடைபிடிக்கும் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளையும், பெண்களையும் போற்றித் தாய் வழி உறவு நிலையில் அரசமைப்பை வழங்கிய தமிழ்ச் சமூகம் இன்று ஐந்து வயதுக் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் நிலைக்கு வந்திருப்பது உண்மையில் திராவிடத் தமிழன், தேசியத் தமிழன் என்று எந்த வேறுபாடுமின்றி வெட்கித் தலைகுனிய வேண்டிய சீரழிவு.

இழந்த தமிழ்க் குடியின் பண்பாட்டையும், உயர் மதிப்பீடுகளையும் மீட்குமா நமது உள்ளுணர்வு???

**********

கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 5, 2014

இரவின் நெடுங்குரல்…….

imagesCA47U0IG

இப்போதிருக்கும் வீட்டுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மழைக்காலத்தில் குடியேறினேன், அமைதியான நகரத்தின் சாயல்கள் இல்லாத ஒரு புதிய குடியிருப்புப் பகுதி, மழைநீர்க் கொடிக்கால்களின் தடங்களில் நூலிழை போல் வடிந்தோடும் வெள்ளிய நீரும், இடையே தும்பைப் பூக்களும் சில்லென்று பூத்துக் கிடக்க தட்டான்களும், பட்டாம்பூச்சிகளும் உலகை இன்னும் அழகானதென்று என்னை நம்ப வைக்கப் போதுமானதாய் இருந்தன.

தள்ளித்தள்ளிக் கட்டப்பட்டிருந்த வீடுகளைத் தவிர மண் தரையையும், மரங்களையும் பார்க்க முடிகிற வாய்ப்பே அரிதாய் இருந்த பொழுதில் தும்பைச் செடிகளையும், சோற்றுக் கற்றாழையையும் நகர வீட்டுக்குப் பக்கத்தில் பார்ப்பது வாய்ப்பல்ல, பெரும்பேறு என்று நினைக்கிறேன், ஊருணிக் கரைகளிலும், கண்மாய்க் கரைகளிலும் ஆட்டம் போட்ட மனம் நியூயார்க்கின் அகண்ட வீதிகளுக்குப் போனாலும் பனைமரங்களையும், புளியம்பழங்களையும் தான் தேடும் அதிசயமாய் இருக்கிறது.

பக்கத்து இடங்கள் காலியாகக் கிடந்தவை, யாருக்குச் சொந்தம் என்று குறியீடு செய்யப்படாத ஊரக நிலங்களைப் போல அவற்றில் மரங்களும், அடர்ந்த செடிகளும் நிலை கொண்டிருந்தன. பனிக்காலத்தின் சில காலை வேளைகளில் அடர்ந்து கிடக்கிற கிளைகளில் இருந்து செந்நிறப் பூக்களைப் தெருவில் தெளித்தபடி இருக்கும் பெயர் தெரியாத மரத்தின் கிளைகளில் இருந்து வெண்சிறகு விரிக்கும் சில நாரைகளைப் பார்ப்பேன், பறப்பதும், பிறகு கூடி அமர்ந்து ஓய்வு கொள்வதுமாய் அவற்றின் வாழ்க்கை பொறாமை கொள்ள வைக்கிற அற்புத அனுபவம்.

அந்த நாரைகளின், பின்மாலைப் பொழுதின் நெடுங்குரலும், இரவுச் சிறகடிப்புகளும் எனக்குள் இருக்கிற ஒரு பழங்குடி மனிதனை அமைதியாய் உறங்கச் செய்யும் தாலாட்டாய் இருந்தன. பின்னொரு கோடையின் புதிய நாளில் சூரியனுக்கு முன்னாள் சில எந்திரங்கள் விழித்துக் கவனமாய் எந்தப் பிசிறுகளும் இல்லாமல் அந்த நிலத்தை வழித்துப் பொட்டல் காடாய் மாற்றிச் சென்றன, இனம் புரியாத வலியும், உறக்கமற்ற இரவுகளுமாய் சில நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. பிறகு அவ்விடத்தில் ஒரு நெடிய கட்டிடத்தைக் கட்டி வண்ண விளக்குகளைத் தொங்க விட்டு விழாவெடுத்து புதிது புதிதாய் மனிதர்கள் குடியேறி விட்டிருந்தார்கள்.

மனித வாழ்க்கையின் உயர்ந்தெழுந்த ஆர்ப்பரிப்பின் குரல்களுக்கு இடையே நானும் கரைந்து பத்தில் ஒன்றாய் உறங்கப் போயிருந்தேன், நள்ளிரவில் விழிப்புத்தட்ட தோளில் ஒட்டிக் கிடந்த குழந்தையின் கைகளை மெல்ல விலக்கி எழுந்து வாசலுக்கு வந்தால் உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து அதே நெடுங்குரல் இம்முறை இன்னும் உரக்கக் கேட்கிறது, தங்கள் பழைய வீடுகளைத் தேடி அவை வந்திருக்கக் கூடும், சிறகடிப்பின் ஓசை இம்முறை தாலாட்டாய் இல்லை, உயிரைப் பிசையும் ஓலமாய் இருக்கிறது, சில நாரைகள் கட்டிடங்களின் மேலே அமர்ந்திருக்க, சில சுற்றிலும் பறந்து வட்டமடிக்கின்றன.

கதவைச் சாத்தி விட்டுப் புரண்டு புரண்டு பார்க்கிறேன், உறக்கத்தின் சுவடுகள் வெண் சிறகு நாரைகளின் கூடவே புறப்பட்டிருக்க வேண்டும், எல்லாம் இருந்தும் எதையோ இழந்ததைப் போல விட்டத்தை வெறித்தபடி உடல் படுத்திருக்கிறது. கட்டிடக் காடுகள், நிஜக் காடுகளை அழித்து ஏறத்தாழ ஓராண்டுகளுக்கு மேலாக இப்போதும் நள்ளிரவு தாண்டி ஒரு முறை அந்த நாரைகள் தவறாமல் அங்கே வருகின்றன, கேட்க முடியாத இரைச்சலோடு சில நேரங்களில் அவை அங்கேயே நிலை கொண்டு படபடக்கின்றன.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற போதும் சில நாட்களில் அந்தப் பறவைகளின் குரல் எனது ஆன்மத்தை உலுக்கும் இறப்பின் அழுகுரலாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவை எனது கனவுகளையும், உறக்கத்தையும் துரத்தும் ஊழிப் பேரலையாய் மழையின் கொடிக்கால்களையும், தும்பைப் பூக்களையும், தட்டான்களையும், பட்டாம்பூச்சிகளையும் விழுங்கியபடி நிலைத்திருக்கிறது.

இன்னும் எத்தனை காலம் அந்தப் பறவைகள் தங்கள் பழைய வீடுகளைத் தேடி அங்கு வருமோ எனக்குத் தெரியாது, ஆனால், அந்தப் பறவைகளுக்கு அங்கொரு வீடிருந்ததென்றும், அந்த வீட்டில் ஒரு குட்டி நாரை பிறந்து வளர்ந்து பின்னொருநாளில் வீடிழந்தது என்றும் உயிரிருக்கும் வரை எனக்குத் தெரியும்.

 

*************

கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 4, 2014

கலைஞர் 91 – போற்றலும், தூற்றலும்.

10274047_779207362091471_946245191804996542_n

இந்தக் கட்டுரையை ஒரு நாள் பின்னதாகவே எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன், முன்னதாக நமது சமூகத்தின் மனநிலையை, நமது இளைஞர்களின் உண்மையான அரசியல் புரிந்துணர்வை அறிவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. சில அதிமுக நண்பர்கள் அந்த மனிதரை எல்லாப் பகையுணர்வையும் தாண்டி வாழ்த்தி இருந்தார்கள், சில வயதில் மூத்த பார்ப்பன நண்பர்கள் என்ன இருந்தாலும் அவரது இருப்பையும், உழைப்பையும் நிராகரிக்க முடியாது தானே என்று காழ்ப்பை மறந்து போற்றி இருந்தார்கள், வழக்கம் போலவே உயிரினும் மேலான உடன்பிறப்புகள் தங்கள் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருந்தார்கள்.

சித்தாந்த வழியிலான அவரது எதிரிகள் கூட அவரது இருப்பையும், வயதையும் எள்ளி நகையாடி மகிழும் வேலையைச் செய்யவில்லை, ஆனால், குறிப்பிட்ட இருதரப்பு மட்டும் அவரது இருப்பையும், வயதையும், அவரது மரணம் குறித்த தங்கள் அடங்காத ஆசைகளையும் பேசித்தீர்த்துத் தங்கள் மன அரிப்பைப் போக்கிக் கொண்டது. அதில் முன்னது தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் குழாயடி அரசியல் செய்யும் ஒரு புத்தம் புதிய இணைய அரசியல் தலைமுறை, இன்னொன்று அடங்காத பார்ப்பனத் திமிரும், சாதிய வெறியும் கொண்ட பூணூல் தலைமுறை.

"அவரது படத்துக்கு மாலையணிவிக்க வேண்டும்", மாதிரியான நேரடி வன்மம் நிரம்பிய தூற்றல்கள், "காலம் தான் எத்தனை கொடியது அவரை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது"  மாதிரியான இலக்கிய வாசனை நிரம்பிய வன்மம், ஞோ, ஞா, கோ, கொம், %$#^$^%#%&&%%$&&% மாதிரியான ஏக வசன வன்மம் என்று பலதரப்பு அடிப்படை நாகரீகமற்ற வன்மங்களை அவரவர் பிறவித் தகுதிகளுக்கு ஏற்ப அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருந்த பொழுதில் அவர்கள் ஒரு உண்மையை மறந்து விட்டிருந்தார்கள். தூற்றளுக்கான சொற்களை இவர்கள் தேடித் தட்டச்சு செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் பல லட்சக்கணக்கான தமிழ்ச் சமூகத்து இளைஞர்களும், மூத்தவர்களும் வயது வேறுபாடுகள் இல்லாமல் அந்த 91 வயது நிரம்பிய முத்துவேலர் கருணாநிதியை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள், ஒவ்வொருவரின் வாழ்த்துக்குப் பின்னரும் வெவ்வேறு காரணங்கள் இருந்தன.

ஒருவன் தனது முதல் தலைமுறையைக் கோவணத்தில் இருந்து வேட்டிக்கு மாறியதற்காக அவரை வாழ்த்திக் கொண்டிருந்தான், ஒருவன் தனது தலைமுறை முதன்முதலாகக் கல்லூரிக்குப் போக உதவிய ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளைச் சட்ட வடிவமாக்கியதற்காக அவரை வாழ்த்திக் கொண்டிருந்தான். ஒருவன் மதராஸ் என்கிற புரியாத பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றியதற்காகவும், தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டுமே மாநில ஆட்சி மொழியாக மாற்றிச் சட்டம் கொண்டு வைத்ததற்காக ஒருவன், கையால் இழுக்கப்பட்ட ரிக்சா வண்டிக் கொடுமையில் இருந்து தனது தந்தையைக் காப்பாற்றியதற்காக ஒருவன், பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வியைப் பெற்றதற்காக ஒருவன்.

imagesCAEPAOA6

மண் வீடுகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மழைக்கு ஒழுகாத கான்க்ரீட் வீடுகளுக்குக் குடியமர்த்தியதற்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அமைச்சகத்தை முதன் முதலில் உருவாக்கியதற்காக, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு விழுக்காட்டை 25 இல் இருந்து 28 ஆக மாற்றியதற்காக ஒருவன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 16 இல் இருந்து பதினெட்டாக உய்ரத்தியதற்காக ஒருவன், தமிழகத்தின் முதல் விவசாயப் பல்கலைக் கழகத்தை உண்டாக்கி அதில் கல்வியை வழங்கியதற்காக ஒருவன், சேலம் இரும்பு உருக்காலையை உருவாக்கி அதில் வேலை வாய்ப்புக் கொடுத்ததற்காக இன்னொருவன், இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக, ஏழைக் குழந்தைகளுக்கான அரசுக் கல்வித் திட்டம், ஏழை இளம்பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், விதவைகளுக்கான திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவித் திட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் உள்ளடக்கிய ஐந்து புதிய பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சமச்சீர் கல்வி என்று  இன்னும் பக்கங்கள் தீராத மக்களுக்கான திட்டங்களை வழங்கியதற்காக பல லட்சம் தமிழ்ச் சமூக மக்கள் அவரை நேரிலும், அவரவர் வாழிடங்களிலும், ஊடகங்களிலும், சமூக இணைய தளங்களிலும் வாழ்த்தினார்கள்.

அவரைத் தெலுங்கர் என்றும் வந்தேறி என்றும் குற்றம் சாட்டுகிற அறிவுக் கொழுந்துகள், பத்துத் திருக்குறளை ஒரே நேரத்தில் சொல்லத் தெரியாத மொழி குறித்த அடிப்படை அறிவில்லாத அடி மடையர்கள், தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு அவர் உரை எழுதவில்லை மூடர்களே, திருக்குறளுக்குத் தான் அவர் உரை எழுதினார், பரிமேழகர் உரைக்கும், பரிதிமாற்க் கலைஞர் உரைக்கும் அடுத்து இலக்கிய வரலாற்றில் கலைஞர் தான் திருக்குறளுக்கு உரை எழுதிய மூத்த தமிழறிஞர். புறநானூறு, அகநானூறு என்றெல்லாம் வாய்க்குள் நுழையாத சிக்கலான பழந்தமிழ்ப் பாடல்களுக்கு சங்கத்தமிழில் மொழி சமைத்து எளிய தமிழ் மக்களின் கைகளில் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்த மாபெரும் அறிஞன் அந்த மனிதர், இன்னும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத இணையக் கும்மிப் பண்டாரங்கள் சில அவரது இருப்பைக் குறித்துக் கிண்டல் செய்வது  தான் நகைச்சுவையின் உச்சம்.

ஒரு மனிதரைக் குறித்தும் அவரது அரசியல் செயல்பாடுகள் அல்லது சமூக செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதற்கு முன்னாள் அதற்கான குறைந்த பட்சத் தகுதி ஏதாவது நமக்கு இருக்கிறதா என்கிற சுயவிமர்சனத்தை இந்த இணையக் குஞ்சுகள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி இருக்கலாம், அவர் இன்னும் தீவிரமாக தனது ஆதரவை விலக்கிக் கொண்டு நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தில் மடிந்து போன எமது பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்குப் போராடி இருக்கலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை நான் இன்னும் தீவிரமாகவே வைத்திருக்கிறேன், ஆனால், மக்களும், அவர்தம் எண்ணங்களுமே அரசு என்பதை மறந்து விடாதீர்கள், நீங்கள் என்ன செய்தீர்களோ அதையே அரசுகள் செய்தன, நீங்கள் என்ன செய்ய மறந்தீர்களோ அதையே அரசுகளும் செய்ய மறந்தன.  நீங்கள் வீதிக்கு வருவதற்கும், போராடுவதற்கும் தயாராக இல்லை, நீங்கள் உங்கள் தொலைக்காட்சித் தொடர்களையும், திரைப்பட அரங்குகளையும் விட்டு வெளியேறவில்லை, நீங்கள் மொழி குறித்தும், இனம் குறித்தும் ஏதுமறியாத அப்பாவிகளைப் போல வாளாயிருந்தீர்கள், அரசுகளும் அப்படியே இருந்தன.

அரசியல், விமர்சனங்களைத் தாண்டி அவரது சமூகத்துக்கான உழைப்பு இன்னும் தீர்ந்த பாடில்லை, அவரிடம் பணமும், புகழும், பெருமைகளும் இன்னும் வாழ்க்கையின் எல்லாத் தேவைகளும், தேடல்களும் நிரம்பிக் கிடக்கின்றன, அவர் உலகின் உல்லாச நகரங்களுக்குச் சென்று இயற்கையை ரசித்தபடி ஓய்வெடுக்கலாம், அவர் வாழ்வின் இன்பங்களைத் துய்த்துமகிழலாம், ஆனாலும், இணையப் பிணந்தின்னிகளே, அவர் இந்த மண்ணை விட்டு எங்கும் சென்றதில்லை, இந்தத் தமிழ் மக்களின் வாழ்க்கையும், வரலாறும் சிதறிக் கிடக்கிற ஏதாவது ஒரு வீதியில் இன்னமும் அவர் வாழ்க்கை, இலக்கியம், சமூகம், அரசியல், இளைஞர்கள், பண்பாடு, கலாச்சாரம் என்று ஏதோ ஒன்றைப் புலம்பியபடி நிலைத்திருக்கிறார். வெற்றி, தோல்வி, அதிகாரம், பதவி, பாதுகாப்பு என்று எல்லாக் காலத்திலும் அவர் இந்த மொழியையும், இந்த மக்களையும், இந்த மாநிலத்தையும் குறித்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார், ஒரு நிலைத்தகவலையோ, ஒரு பின்னூட்டத்தையோ கூடச் சொற்பிழைகளின்றி எழுதத் தெரியாத குருட்டுக் க….னாக்களும், மு…..னாக்களும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக குறைந்தது நான்கு பக்கங்களில் தூய தமிழில் கடித இலக்கியம் எழுதிக் கொண்டிருக்கிற ஒரு மூத்த மனிதரைச் சாகச் சொல்கின்றன.

untitled

இன்னும் ஊழலற்ற, இன்னும் தீவிரமான இனத்துக்கான அரசியலை அவர் செய்திருக்கலாம், இவர் செய்திருக்கலாம், கருவறுப்போம், மயிரைப் பிடுங்கிக் கயிறாய்த் திரிப்போம் என்றெல்லாம் இணையத்தில் வக்கனையாய் வாய் வலிக்கப் பேசுகிற எழுதுகிற களவாணிகள் யாரும் அவர் இதே மாநிலத்தின் மக்களால் பல முறை தேர்வு செய்யப்பட முதல்வர் என்பதையும், இந்திய அரசியலின் வரலாற்றில் அளப்பரிய பங்காற்றிய வயதில் மூத்த ஒரு தலைவர் என்பதையும், எந்த ஆணியும் பிடுங்காத இந்த வாய்ச்சொல்  வீரர்களின் செம்மொழியான தமிழுக்கு பல மகுடங்களைச் சூட்டிய தமிழின் மூத்த எழுத்தாளர் என்பதையும் வசதியாக மறந்து விடுகிறார்கள், அவர்களைப் பொருத்தவரை வரலாறு தெரியாமல், வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் மனமில்லாமல் கருணாநிதியை ஏக வசனத்தில் தூற்றி அவரது பிறந்த நாளில் அவரது மரணத்தை எதிர் நோக்குவதாகச் சொல்வது தான் புரட்சி.

அவரது உழைப்புக்காகவும், அவரது அளப்பரிய அரசியல் பங்களிப்புக்காகவும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சட்ட வழியாக அவர் செய்து காட்டிய சமூக நீதிக்காகவும், பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்கான அவரது இலக்கியப் பங்களிப்புக்காகவும் அவரை வரலாறு முழுக்க வாழ்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், தூற்றுபவனின் பிள்ளைகளும் நாளை பள்ளியில் அமர்ந்து இதே கருணாநிதியைத்தான் முன்னாள் முதல்வர் என்று வாசிக்க வேண்டியிருக்கும்.

காலம் கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எம்மினத்தின் மூத்தவரே, உங்கள் தமிழ் தேமதுரமாக எங்களுக்கும், காய்ச்சிய ஈயமாக உங்களைத் தூற்றும் மொழியறியாத மூடர்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கட்டும்.

*************

 

கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 2, 2014

இளையராஜா – பேரண்டம் பிழிந்த இசைச்சாறு.

untitled

விடுமுறைக் காலமொன்றில் தாழ்ந்த வேலிக்கருவை மரங்கள் வோட்டு வீட்டின் தாழ்வாரங்களில் உரசி வினோதமான ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும், நானும் அத்தை மகன்களும் செங்கற்களை உரசித் தேய்த்து வண்டிகள் செய்து வீடுகட்டக் கொட்டப்பட்டிருந்த மணல் வெளிகளில் விளையாடிக் கொண்டிருப்போம், சுற்றிலும் பசுமையான வயற்காடுகள், முட்டி ஐயாவின் தென்னந்தோப்பில் இருந்து சிற்றருவியைப் போலக் கொட்டிக் கொண்டிருக்கும், அப்போதைக்குப் பருந்து பிடிக்கிற நரிக்குறவர்களான காசியும், எமிலியும் பேசுகிற மொழி என்னவென்று இன்றுவரை எனக்குத் தெரியாது, ஆனால், அவர்கள் வைத்திருக்கிற தோல்பை உறை அணிவிக்கப்பட்ட வானொலியிலிருந்து

“ஏதோ மோகம், ஏதோ தாகம், நேத்துவரை நினைக்கலையே, ஆசை விதை முளைக்கலையே………”

என்று பரந்த ஏகாந்த வெளியில் தெளித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைக் குறித்த அளப்பரிய கற்பனைகள் நிலை கொண்டிருந்தன.

மாலை நேர அடுப்புகள் வெண்புகையோடு மனித வாழ்க்கையின் அற்புதமான கணங்களைச் சமைத்துக் கொண்டிருக்கும் போது தங்கமணி திரையரங்கத்தின் “ரிகார்ட் குழாய்கள்” ஒலிக்கத் துவங்கும், இருள் சூழத்துவங்கும் இன்னொரு நாளில் மேற்கிலிருந்து செங்கதிர் செலுத்தும் ஒளிக்கதிர் ஒரு சரிந்த தூணைப் போல சாளரத்தின் வழியே பரவி நெருக்கமான மனிதர்கள் வசிக்கிற அந்த வீட்டில் எங்கள் அன்பு சுற்றி இருக்கிற நெற்பயிராய் விட செழிப்பாய் வளர்ந்து கிடக்கும், நான் சாளரங்களின் அருகே அமர்ந்து கொண்டு உரையாடலின் ஊடே தங்கமணி திரையரங்கின் ரிகார்ட் குழாய்களில் இருந்து ஏற்ற இரக்கமாய்க் காதில் சேரும் பாடல்களைக் கேட்பதில் கவனமாய் இருப்பேன், அப்படி ஒரு மழைக்கால மாலையில் சாளரங்களில் இருந்து மலையடிவாரத்தில் தன்னிச்சையாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக் குளம்படிகளைப் போல டக் டக் டக் டக் டக் என்கிற ஓசைக்குப் பின்னே அந்தப் பாடல் ஒலிக்கத் துவங்கும்,

“பருவமே, புதிய பாடல் பாடு………..இளமையின்………….”

என்ன கருவிகள் என்றெல்லாம் தெரியாத இசையை அறிவோடு கலந்து குழப்பி ரசிக்கத் தெரியாத ஒரு ரசனையின் வளர்பிறைக் காலம் அது. அந்த மாலையை அத்தனை அழகான ஒரு மாலையாக மாற்றிக் காட்டிய மனிதன் அவன். எனக்கென்றில்லை, தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனின் மறக்க முடியாத மாலைக்குள்ளும் இளையராஜா என்கிற அந்த மனிதனின் செரித்து விட முடியாத இசை உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது.

1970 களுக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகத்திலிருந்து இளையராஜாவின் இசையை நீக்கி விட்டால் எப்படி இருக்கும் என்று ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். மிகக்கொடுமையான தனிமைச் சிறை குறித்த கற்பனை அது. நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்று ஒவ்வொரு நொடியின் வெறுமைக்குள்ளும் அவனது இசை ஊடுருவி இருக்கிறது.

மெலிதாக மீசை அரும்புவதற்கு முன்னதாக பதின் பருவங்களில் படர்கிற தமிழக இளைஞர்களின் பெரும்பாலான காதல் கனவுகளை, ஏக்கங்களை, இழப்புகளை, மகிழ்ச்சியான தழுவல்களை, முத்தங்களை, உடலை, உயிரை இன்னும் எல்லாவற்றையும் ஆட்கொண்டு அமைதி கொள்ள வைக்கிற மிகப்பெரிய இசை வேள்வியை இளையராஜா செய்திருக்கிறார்.

இசையை முழுமையாக ஒரு இனக்குழுவுக்குச் சொந்தமானது என்று பலர் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் தான் நிகழ்ந்தது இளையராஜாவின் வரவு, உழவும், தொழிலுமாய், வியர்வையும், சேறுமாய் வாழ்ந்து கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களின் இசையை சபாக்களில் அமர்ந்து நீட்டி முழக்குகிற இலக்கணம் செறிந்த சில கனவான்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்த சிக்கலான காலத்தில், கன்னங்கள் ஒட்டி, சென்னையின் மாநகராட்சிக் குழாய்களில் நீரும், கோவில் பிரசாதங்களில் உணவுமாக வாழ்க்கையை எதிர் கொண்ட ஒரு அடிப்படை இசையறிவு இல்லாத இளைஞன் தனது மக்களுக்கான இசையைத் தன்னால் வழங்க முடியுமென்று நம்பினான். அன்னக்கிளியின் “ஆரிராரிராரோ………..மச்சானப் பாத்தீங்களா……..”

என்கிற அந்த நாட்டுப் புறப்பாடல் ஒலிப்பதிவு முடிந்து பேரண்ட வெளிகளில் வீசி எறியப்பட்டபோது இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு தமிழ்ச் சமூகத்தின் இசை வரலாற்றை நகர்த்தப் போகிறவன் இவன்தான் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

images

என்னுடைய கல்லூரிப் படிப்புக் காலம் என்று நினைக்கிறேன், பணம் கேட்டுக் கணவன் நடத்திய கொடுமைகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்க நினைத்துத் தீக்குளித்து மரணப் படுக்கையில் படுத்திருந்த ஒரு சகோதரியின் அருகிலிருக்கும் அவலம் கிடைத்தது, எண்பது விழுக்காட்டுத் தீக்காயம் இனிப் பிழைக்க வழியில்லை என்று மருத்துவர்கள் சொல்லி ஆறு நாட்கள் அவள் உயிரோடிருந்தாள்.

நெருப்பு தின்று மிச்சம் வைத்திருந்த அந்த முகத்தைக் காண உறவுகளும் அஞ்சிக் கிடந்த அந்த மூன்றாவது நாள் இரவில் வலியின் முனகலோடு

“அண்ணா” என்றவளின் அருகில் போனேன்,

“என்னம்மா?”

“கொஞ்சம் தண்ணி தரீங்களா?” கொடுத்தேன்.

“நாளைக்கு வரும்போது வீட்ல இருந்து டேப் ரெகார்டர் எடுத்துட்டு வரீங்களா? மறக்காம அந்த மெல்லத்திறந்தது கதவு கேசட்டும்…..”

அத்தனை வலியிலும், வேதனையிலும் மறுநாள் இரவில் “வா வெண்ணிலா, உன்னைத்தானே வானம் தேடுதே, மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போகுதே……..”

என்கிற பாடலை அந்தக் கருகிப் போன உடலுக்கு உள்ளிருந்த ஆன்மா கேட்டு ரசித்ததைப் பார்த்த போது உன்னதமான மனதை உருக்கும் இசை மரணத்தை வென்று நிற்கிற அதிசயத்தை ஒரு வாழ்கிற சாட்சியாய் என்னால் உணர முடிந்தது. அவளைப் போலவே வாழ்வின் அடக்குமுறைகளையும், வன்மம் தோய்ந்த சொற்களையும் எதிர் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ முடியாத ஊரகப் பெண்களின் ரணமாகிப் போன இதயச் சுவர்களில் இளையராஜா என்கிற கலைஞனின் மென்மையான சிறகுகள் அவர்கள் கண்டிராத அன்பையும், அரவணைப்பையும் காலகாலத்துக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரே வரியையோ அல்லது ஒரே ஒரு இசைக்கருவியின் துனுக்கையோ திரும்பத் திரும்பப் பல முறை கேட்க வைக்கிற மந்திரங்களை நான் இளையராஜாவிடம் கண்டிருக்கிறேன், சின்ன மாப்பிள்ளை படத்தில் வருகிற “வந்தாயே நீயோர் ஓவியப் பாவை” என்கிற ஒரு வரியை விட்டுக் கடந்து வருவதற்கு எனக்கு ஏறத்தாழ 15-20 நாட்களுக்கு மேலானது, அனேகமாக அந்த வரிகள் உண்டாக்கிய வெற்றிடத்தில் எனது உயிரை நிரப்பிக் கொண்டு பேரானந்த நிலைக்குச் சென்றேன் எனச் சொல்லலாம்.

பத்தாண்டுகளுக்கு மேலாக கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டு அதன் ஏற்ற இறக்கங்களை, நுட்பங்களை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்கிற காலகட்டத்தில் கூட இளையராஜா ஒரு பாடலின் ஒரே ஒரு வரியிலோ அல்லது ஒரு இசைத்துணுக்கிளோ அந்தப் பெருமித உணர்வைத் தூக்கிப் போட்டு உடைத்து விடுவார்.

“நானுனை நீங்க மாட்டேன்……..” என்று மெல்லிய கீற்றாகப் பின்புலத்தில் அவர் வழிய விடுகிற வயலின் பௌதீக வாழ்க்கையின் கணங்களை அடித்துச் செல்லும் வல்லமை கொண்டது. உலகின் பலவகையான இசை வடிவங்களைக் கேட்டுப் பழகியாயிற்று, இசைக் கருவிகள் சிலவற்றை வாசிக்கக் கற்றுக் கொண்டாயிற்று, இசையின் நுட்பங்களை அதன் இலக்கண வடிவங்களை இன்னும் எல்லாவற்றையும் கடந்து வந்தாயிற்று, ஆனாலும், இளையராஜாவின் இசை தாய்ப்பாலின் சுவையோடும், கதகதப்போடும் இன்று வரை நம்மைச் சுற்றி இருக்கிறது.

நமது மகிழ்ச்சியில், நமது துயரங்களில், நமது சராசரி நாட்களில் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அவரது இசை நம்மை மீட்டெடுக்கிற ஒரு தேவகானமாய் எங்காவது ஒழித்துக் கொண்டே இருக்கிறது.

தனது கட்டற்ற இசைக்குள் நமது மொழியைச் செலுத்தி நமது மொழிக்கு இசை மகுடங்களைச் சூட்டிய ஒரு அற்புதமான மனிதர் என்று அவரைச் சொல்லலாம்.

imagesCAH9UUI5

தமிழ்ச் சமூகத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனாய்ப் பிறந்து அனேகமாக உலக இசைக்கலைஞர்கள், இசை விமர்சகர்கள், வல்லுனர்கள், தலைவர்கள், ஆண்டைகள், அடிமைகள் என்று எந்த வேருபாடுமின்றித் தனது இசையை ரசிக்க வைக்க அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், அவரது “கடவுள்” மந்திரங்களை எல்லாம் மறந்து அவர் முன்னெடுத்த அந்த கற்றல் மற்றும் முயற்சி வடிவங்களை மட்டுமே இங்கு நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

உங்களால் சொல்ல முடியாத சொற்களையும், உங்களால் மறைக்கவே முடியாத மௌனத்தையும் அவரது இசை நீண்ட காலமாகப் பட்டிதொட்டியெங்கும் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.

நமது அறிவாற்றலையும், நமது தத்துவங்களையும் உடைத்து நொறுக்கி ஒரு எளிய மனித உயிராய் வாழ்க்கையை அழகியல் சார்ந்த அற்புத அனுபவமாக வாழ வைப்பதில் இசைக்கு அளப்பரிய பங்கிருக்கிறது என்று சொன்னால், இளையராஜா எனது வாழ்க்கையில், உயிரோடு கலந்திருக்கிற மிக நெருங்கிய உயிர் என்று சொல்வேன். அவரது இசை எனது ஏகாந்த வெளிகளை நிரப்பியபடி குருதி நாளங்கள் எங்கும் பயணித்தபடி இருக்கிறது.

காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுது………..மாதிரியான அவரது ஏதாவது ஒரு பாடல் வரியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது மரணம் நிகழுமேயானால் இயல்பாக இறப்பைச் சந்திக்கிற ஒரு பேறுபெற்ற மனிதனாக நான் மரணிப்பேன்.

எங்கள் வாழ்க்கையின் துயரங்களை, எங்கள் வாழ்க்கையின் கொண்டாட்டங்களை எல்லாம் உங்கள் இசையால் தோய்த்து இலகுவான ஒரு இருப்பை இன்னும் நீண்ட காலம் எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும் என்கிற சுயநலமான பேராசையைத் தவிர உங்கள் பிறந்த நாளில் பெரிதாய் என்ன கேட்டு விடப் போகிறோம்.

imagesCAVKUZO4

வாழ்க பல்லாண்டுகள், இசையே……..

(நீண்ட காலத்துக்குப் பிறகு இன்று என்னோடு உரையாடிய யாரோ ஒருவருக்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

மகிழ்ச்சி அவரது உயிரை எப்போதும் நனைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்)

 

 

 

 

 

கை.அறிவழகன் எழுதியவை | மே 31, 2014

யாருக்கும் தெரியாத என் முதல் குழந்தை.

images

 

மிருதுளா நன்றாக வளர்ந்து விட்டாள், அவள் ஒரு மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும் போது முதன் முதலாக அவளைப் பார்த்தேன், இப்போது அவளுக்கு 8 வயதாகிறது, ஒரு கருணை இல்லத்தில் உதவி தேவைப்படுகிற குழந்தையாகத்தான் அவளை நான் பார்த்தேன், நானும் சமூக உதவிகள் செய்யக்கூடிய பெருந்தன்மை கொண்ட மனிதன் என்கிற மேம்போக்கான ஆண்டைகளின் மனநிலைதான் அப்போது எனக்கு இருந்தது.

ஓரிரண்டு வேளைகள் உணவும் கொஞ்சம் பழைய துணிகளையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டு வாழ்க்கையையே தியாகம் செய்து விட்டதைப் போலப் பெருமிதத்தோடு அலைந்த அற்ப மனத்தை முற்றிலுமாக வேறொரு திசைக்கு மிருதுளா மாற்றினாள்.

ஒருமுறை அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும் போது யாரோ ஒரு குழந்தையில்லாத கணவன் மனைவி தத்தெடுக்கப் போவதாகச் சொல்லி வந்து நான்கைந்து முறை பார்த்திருக்கிறார்கள், இடையில் ஒருநாள் நான் அவளைப் பார்த்தேன், அவளுடைய கண்களில் எப்போதும் இல்லாத மெல்லிய துயரம் படிந்திருந்தது,

"மிருதுளா, ஏன் அமைதியாக இருக்கிறாய்?"

பதில் சொல்லவில்லை, இரண்டு மூன்று முறை கேட்டுப் பார்த்தேன், பிறகு இரவு உணவுக்கு முந்தைய அவர்களின் வழிபாட்டு நேரம் துவங்கி விட்டதால் முகப்புக்கு வந்தேன், கீதா அம்மையாரிடம்,

"மிருதுளாவுக்கு உடல் நலம் சரியில்லையா? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாள்?"

"தத்தெடுப்பவர்கள் ஒருவேளை சட்டவழியிலான ஒப்புதலைப் பெற்று அவளை அழைத்துச் சென்று விட்டால் எங்களை எல்லாம் பிரிய வேண்டுமே என்று கலங்கிப் போயிருக்கிறாள் போல"

என்று சொன்னார்கள். இருக்கக் கூடும் என்று நானும் அமைதியாக வீடு திரும்பினேன்.

மீண்டும் ஒரு நண்பன் தனது மகளின் பிறந்த நாளை கருணை இல்லத்தில் கொண்டாட வேண்டுமென்று சொன்னபோது ஒப்புக் கொண்டு கூடச் சென்றேன். உணவு வழங்கி முடித்தபோது அந்தக் குடும்பத்தின் மூத்த பெண்மணி குழந்தைகளை நோக்கி,

"வரிசையா வாங்க, எல்லாரும் போட்டோ எடுக்கணும்"

மிருதுளாவைப் பார்த்தேன், அவளுக்குப் புகைப்படம் எடுப்பதில் எப்போதுமே நாட்டம் இருந்ததில்லை மெதுவாக முகப்பை நோக்கி நகர்ந்த மிருதுளாவை ராஜம்மா,

"உனக்கு மட்டும் தனியாகச் சொல்ல வேண்டுமா, வா இங்கே"

என்று அதட்டியபோது ஒரு முறை உயிர் பதறிப் போனேன், தாயும் தந்தையும் அன்பும் அரவணைப்பும் இல்லாத குழந்தைகளை உணவு கொடுத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கிற அற்ப மனித உயிர்களாய்ப் போனோமே என்று தடுமாறினேன். ராஜம்மாவுக்கு அருகில் போய்,

"அம்மா, அவளுக்கு உடல் நிலை சரியில்லை போலிருக்கிறது, விடுங்கள் ஓய்வெடுக்கட்டும்."

ராஜம்மா முனகிக் கொண்டே போனது காதில் கேட்டது,

"இப்பன்னு இல்ல சார், எப்பவுமே போட்டோ எடுக்க யாராச்சும் டோனோர்ஸ் கூப்பிட்டால் இவள் இப்படித்தான் செய்கிறாள்."

மிருதுளாவுக்கு உணவுக்குப் பின் யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் பிடிக்காது என்பதும் அது தன்னை அவமானம் செய்வதாக அவள் உணர்வதையும் ராஜம்மா எப்போதுமே உணரப் போவதில்லை.

மிருதுளா ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது இயல்பாகச் சொன்னாள்,

"அங்க்கிள், நேற்று மூன்று டோனார்ஸ் வந்திருந்தார்கள், 10 மணியிலிருந்து 12 மணி வரை வழிபாட்டு அறையிலேயே நின்று கொண்டிருந்தோம், பிறகு மூன்று முறை வணங்கி அவர்கள் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டோம்."

என்ன கொடுத்தார்கள் மிருதுளா?

முதலாமவர், ஒரு பென்சில், ஒரு ரப்பர், ஒரு நோட்டுப் புத்தகம்.

இரண்டாவது மனிதர் கொஞ்சம் பொங்கல்,

மூன்றாவது மனிதர் உணவுத்தட்டு.

நான் அமைதியாகவே இருந்தேன், ஏதும் கொடுக்காமல் அவரவர் பாதையில் போகிற சாமான்ய மனிதர்கள், எதையாவது கொடுத்து விட்டுக் குழந்தைகளை இப்படி வதைக்கிறவர்களை விடப் பன்மடங்கு உயர்ந்தவர்களோ என்று தோன்றியது.

ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாகிய பிறகு மிருதுளாவின் மீதான அன்பு பன்மடங்கு பெருகி இருக்கிறது, ஒவ்வொரு முறையும் என் குழந்தை மடியில் புரள்கிற போது நான் மிருதுளாவின் தேங்கிய துயரத்தின் சாயலில் பார்வையை நினைத்துக் கொள்வேன்.

நேற்று இரவு ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது, எங்கோ இந்தப் புவிப்பந்தில், மனிதர்கள் வாழ்கிற நாட்டில், வீடுகள் இருக்கிற ஊரில் தேவதைகள் வசிக்கிற கருணை இல்லத்தில் வாழ்கிற குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்மங்கள் செய்து கடைசியில் மனிதக் கழிவையும் தின்ன வைத்திருக்கிறார்கள்.

காலையில் அலுவலகத்துக்கு வந்த பிறகு மிக இயல்பாகப் பேசுவதைப் போல கீதா அம்மையாரிடம் பேசினேன். வேறு ஏதேதோ பேசிவிட்டு

"குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்? மிருதுளா எப்படி இருக்கிறாள்?"

பதிலைக் கேட்டுக் கொண்டு அணிச்சையாய் தொலைபேசியை வைத்து விட்டு உடைந்து நொறுங்கிப் போன இதயத்தில் இருந்து பொங்கிப் பிரவாகம் எடுக்கிற கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மனமின்றி அமர்ந்திருக்கிறேன். எல்லாவற்றையும் இழந்து தனித்து விடப்பட்ட குழந்தைகளைக் கூடத் துன்புறுத்துகிற கொடுமையான மனதை பல்லாயிரம் ஆண்டுகளாய் அழிக்க முடியாத நோயாக வைத்துக் கொண்டு நாகரீகம் குறித்தும், பண்பாடு குறித்தும் பேசிக் கொண்டே இருக்கிறது இந்த சமூகம்.

மிருதுளா என் குழந்தையே, இந்தத் தந்தையின் உயிர் உனக்காகவாவது சில காலங்கள் கூடுதலாய் வாழ வேண்டும், உனது அன்பில் தோய்ந்த உதடுகள் கொடுக்கும் ஈர முத்தங்களை யுகங்கள் கடந்தும் என் கல்லறையில் அடை காப்பேன். நீ ஒரு போதும் உணவு வழங்கும் டோனார்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளாதே, உன் தந்தைக்கு அது ஒரு போதும் பிடிக்காது.

 

*************

imagesCAUO1R7F

அழுகுரலும், ஓலங்களும் நிறைந்த ஒரு ஓலைக் குடிசையில் இருந்து உலகை வெல்லும் ஓங்காரமான விடுதலைக் குரலை வழங்கி விடுவது ஒன்றும் அத்தனை எளிதான செயலல்ல, ஆனால், அப்படி ஒரு குரலைத் தனது சொற்களால் கட்டமைத்து புவிப்பந்தெங்கும் வழிய விட்ட ஒரு கவிதையை நாம் நேற்று இழந்து விட்டோம், இனி புதிதாக விடுதலை குறித்துச் சொல்வதற்கு அவரது பேனா முனைகள் இயங்கப் போவதில்லை. ஆனால், அவரது பழைய இயக்கத்தில் உருவான சொற்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இன்னும் ஓராயி…ரம் ஆண்டுகளுக்குப் பயணிக்கலாம்.

அவரது சொற்களில் படிந்திருக்கும் அறச்சீற்றம் முழுக்க முழுக்க அவரது சொந்த வாழ்க்கையின் துயரங்களில் இருந்து பெறப்பட்டது. வெள்ளைக்காரக் குடும்பம் ஒன்றுக்கு அடிமையாய் இருந்த பாட்டி, அதே குடும்ப உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார், கருத்தரிக்கிறார், பிறகு குழந்தை பெறுகிறார், பிறகு அதே குழந்தை இன்னொரு பார்த்திராத மனிதருக்குப் பிறந்தது என்று எழுதிக் கையெழுத்திடுகிறார், பாட்டியின் உடலும், உள்ளமும் கேட்பாரற்றுச் சீரழிக்கப்பட்ட கதைகளைக் கேட்டபடியே வளர்கிறார். தன்னுடைய ஏழு வயதில் அதே போன்றதொரு கதை தனக்கு நிகழும் போது ஒரு பாமரக் கறுப்பினப் பெண்ணாக அவர் எல்லாவற்றையும் இழந்து மனதளவில் ஒடுங்கி, இருத்தலுக்கான பயணத்தைச் செய்திருந்தால் இந்த உலகம் ஒப்பற்ற ஒரு கவிதைக்காரியை இழந்திருக்கும்.

தனது ஏழு வயதில் தாயின் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான போது குடும்பத்தினருடன் அழுகுரலோடு பகிர்ந்து கொண்டார் அந்தப் பெண், அடுத்த நான்கு நாட்களில் தாயின் காதலன் படுகொலை செய்யப்பட்டான், நியாயமாய் மகிழ வேண்டிய அந்தக் குட்டிப் பெண், அழுது புரண்டாள், தனது குரல் ஒரு மனிதனைக் கொன்று விட்டதை அவரால் சகிக்க முடியவில்லை, சக மனித உயிரைக் குடிக்கும் அளவுக்கு எனது குரலுக்கு வலிமையிருக்குமென்றால் நான் இனிக் குரல் எழுப்பவே விரும்பவில்லை என்று ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் தன்னுடைய சொற்களைப் புதைத்து விட்டார்,

ஆனால், காலமோ பல்வேறு வெவ்வேறு மனிதர்களின் சொற்களைத் தோண்டி எடுத்து அவர் கைகளில் கொடுத்தது, ஆம், அமைதியாய் இருந்த அந்த ஆறு ஆண்டுகளில் தீவிரமாகப் படித்தார், மிகப்பெரிய தேடலுடன் படிக்கத் துவங்கிய அந்தச் சின்னஞ் சிறு பெண்ணுக்கு சொற்கள் மனித குலத்தின் ஆன்மம் என்பது விளங்கத் துவங்கியது, அநீதிக்கு எதிராக சொற்களைக் கொண்டே போர் தொடுக்க வேண்டும் என்கிற உண்மையை அவர் உணர்ந்து கொண்ட போது அவருக்கு வயது பதினான்கு.

அந்த ஆறு ஆண்டுகால அமைதியும், வாசிப்பும் பதினேழு வயதில் உலகின் மனசாட்சியைப் புரட்டிப் போடுகிற ஒரு நூலை எழுதும் அளவுக்கு அவரை முதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

"I Know Why the Caged Bird Sings"

வன்கொடுமைகளுக்கு ஆளான ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட கறுப்பினப் பெண்களின் குரலாக அந்தப் பெண்ணின் தன் வரலாறாக 1969 இல் வெளியான போது உலகம் சினம் கொண்டது, ஆர்ப்பரித்தது, ஆனால், அவரோ அமைதியாகச் சொன்னார், "நான் வன்முறையையும், அடக்குமுறையையும், வன்கொடுமைகளையும் இலக்கியத்தால் எப்படி எதிர் கொள்ள முடியும் என்று எழுதிப் பார்த்தேன்" என்றார்.

ஒரு பெண் விடுதலைக் கவிஞராகவே அவரை இலக்கியம் எனக்கு அறிமுகம் செய்தது, ஆனால், அது தவறென்று அவர் தனது சொற்களால் எனக்கு உணர்த்தினார்,

"I Know Why the Caged Bird Sings"

நூலின் ஒற்றை வரி எனது இரும்பாலான இதயத்தின் சுவர்களைச் சுரண்டி வலி உண்டாக்கியது, அது பெண்ணுக்கான குரல் இல்லை, உலகெங்கும் ஒடுக்கப்படும் எந்த ஒரு உயிருக்குமான குரல் என்பதை நான் விரைவில் உணர்ந்து கொண்டேன்,

"குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும், கீழ்வானத்தில் எனது சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும், நான் எனது அலகைத் திறந்து பாட முயற்சிக்கிறேன், கூண்டுப் பறவை தான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை" என்று மெல்லிய சோகம் இழைந்தோட அவரது உயிர் தடவிய அந்தச் சொற்களில் இருந்து மரணம் கூட என்னைப் பிரித்து விட முடியாது.

உலகின் ஆற்றல் மிகுந்த மனிதரெனச் சொல்லப்படுகிற அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா இப்படிச் சொல்கிறார்,

"எனது எழுச்சி மிகுந்த ஒடுக்குமுறைக்கு எதிரான பயணத்தில் மாயாவின் சொற்கள் கலந்திருக்கின்றன".

ஒவ்வொரு விடுதலைக்குப் போராடுகிற ஒடுக்கப்பட்ட பெண்ணின், மனிதனின், உயிர்களின் குரலில் மாயாவின் சொற்கள் கலந்திருக்கின்றன. இதுவரை பார்த்திராத ஒரு மனிதரின் மரணம் முதன் முறையாக சொல்ல முடியாத துயரத்தைத் தருகிறது, இருப்பினும் அவர் உடலின் சுமையில் இருந்து விடுபட்டுத்தான் ஆக வேண்டும். குட் பை மாயா. உங்கள் கவிதைகளும், சொற்களும் உலகமிருக்கும் வரை விடுதலை குறித்த கனவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மாயா எஞ்சேலோ – பிறப்பு April 4 – 1928 – இறப்பு May 28 – 2014

***********

கை.அறிவழகன் எழுதியவை | மே 29, 2014

தனிமை எனும் நடைமேடை.

imagesCAHE6GNP

மாநகராட்சிக் கட்டிடத்துக்கும், அலுவலகத்தும் இடையிலான சாலையில் ஒரு நடைபாதை இருக்கிறது, அந்தப் பாதையில் நடப்பது, ஏறக்குறைய இந்தியாவின் பல ஊர்களுக்குச் செல்லும் பேரணுபவம். கொய்யாப்பழம் விற்கும் மிதிவண்டி மனிதர்களில் இருந்து துவங்கி சுற்றிலும் இருக்கும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் எந்தக் கவலைகளும் இல்லாமல் கூட்டமாகச் சேர்ந்து அடிக்கிற லூட்டி.

கிராமங்களில் இருந்து பல்வேறு வேலைகளுக்காக முதன்முறையாக பெங்களூர் வந்து துண்டுத்தாளில் எழுதப்பட்ட முகவரியைப் பதட்டத்தோடு கேட்கும் வயதானவர்கள், ஆட்டோக்களை நிறுத்தி விட்டு அரசியல் பேசுகிற ஓட்டுனர்கள், ரகளையான உதட்டுச் சாயங்களுடனும், வசீகரிக்கும் புன்னகையோடும், தொடர்பே இல்லாத உடைகளோடும் பல வண்ணங்களில் நண்பர்களுக்காகக் காத்திருக்கும் இளம்பெண்கள்.

பழுதடைந்த காரில் இருந்து இறங்கி அல்லது இறக்கி விடப்பட்டு நடைமேடையில் அமர்ந்து வேகமாகப் போகிற பேருந்தை வேடிக்கை பார்க்கிற ஆண்ட்டிகள், மர நிழலில் நின்று தம்மடிக்கிற அக்மார்க் சேல்ஸ் இளைஞர்கள் என்று வாழ்க்கையின் வண்ணங்களை வேடிக்கை பார்த்தபடி நடந்திருக்கிறேன். இடையில் குறுக்கிடும் சில குழந்தைப் பிச்சைக்காரர்கள், தள்ளுவண்டியில் வருகிற தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள், குழுவாய் வருகிற மூன்றாம் பாலின மனிதர்கள் என்று ஒரு கனத்த மௌனத்தையும் சுமையையும் கொடுக்கும் கனங்களைக் கடந்து அந்த நடை மேடை ஒரு வண்ண மலர்த்தோட்டம்.

அந்த நடைமேடையில் நான்காண்டுகளில் நான் சந்தித்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் தவிர்க்க இயலாத ஒரு கணவனும், மனைவியும் இருந்தார்கள். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக அந்தத் தாயை அவளது கணவரோடு சேர்த்து அறிவேன், அதே நடைமேடையில் தான் இரவு பகல் என்று அவர்களின் வாழ்க்கை நிலைத்திருக்கிறது. அவர்கள் இணை பிரியாத கணவனும் மனைவியும், பெரும்பாலான நேரங்களில் அந்தத் தாய் தேனீரோ, பழங்களோ சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

நெருக்கமாக அவரது உடலோடு ஒட்டியபடி பெரியவர் அமர்ந்து புகை விட்டுக் கொண்டிருப்பார். அனேகமாக நான் பார்த்த இந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான இணையாக இருந்தார்கள், காதலின் எல்லாச் சுவடுகளும் அவர்களிடம் தேங்கிக் கிடந்தது. ஏதோ ஒன்றைக் குறித்து அவர்கள் உரையாடிக் கொண்டே இருந்தார்கள்.

பொக்கைப் பற்களால் உணவுண்டபடி பெரியவரைப் பற்றிய கலவியின் பழைய நினைவுகளை அந்தக் கிழவி நினைவு கொண்டிருக்கக் கூடும். அவர்களுக்குச் சொந்தமான சில உடமைகளும், ஒற்றைப் படுக்கையும் அவர்கள் இளமையில் வாழ்ந்த வாழ்க்கையை மாநகருக்குக் காட்சிப் படுத்தியபடி அருகிலேயே கிடந்தன.
அவர்கள் வாழ்க்கையால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள் என்பது அடிப்படை உண்மை, ஆனால், ஒருபோதும் வாழ்க்கையின் மீது அவர்கள் காழ்ப்படைந்ததில்லை, ஒருவரின் குறைகளை இன்னொருவர் இட்டு நிரப்பி புன்சிரிப்போடும், புதிய நம்பிக்கைகளோடும் அவர்கள் நாட்களை எதிர் கொண்டார்கள், இருந்தால், என்னை விடவும் பெரியவனாய் மகனோ மகளோ இருக்கக் கூடும் அவர்களுக்கு, தாயும் தந்தையும் குறித்த எந்தப் உணர்ச்சிப் பிழம்புகளும் இல்லாத சராசரிக்கும் குறைவான மனித உயிர்களாக அவர்கள் இந்த மாநகரிலோ இல்லை வேறொரு மனிதர்களும், மரங்களும் ஒன்றாக வாழும் ஊரிலோ வாழக்கூடும்.

தேவையே இல்லாத சீப்புகளை எப்போதாவது அவர்களிடம் வாங்கி அவர்கள் வாழ்ந்த அற்புதமான காதல் வாழ்க்கையின் நினைவுகளை எனது வாழ்க்கையின் சுவடுகளில் நான் சேமித்து வைத்திருந்தேன். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவர்களின் சுருட்டி வைக்கப்பட்ட படுக்கை மட்டும் தனித்துக் கிடந்ததை ஒருவிதமான உறுத்தலோடு பார்த்தபடி கடந்து கொண்டிருந்தேன், கடைசியாகப் பார்த்த கிழவரின் வீங்கிப் போயிருந்த கண்களும், படுக்கையும் மரணம் குறித்த உலகின் அச்சமாய்ப் பரவிக் கிடந்தது, கடைசியில் அவர்களுக்கு அருகில் மாங்காய்க் கீற்றுகளை உப்புத் தடவி விற்கும் அந்த மனிதரிடம் சென்று கேட்டேன்.

"இங்கே பக்கத்தில் இருக்கும் வயதான கணவன், மனைவியின் கடை என்னவானது?"

கிழவனின் இறப்பு குறித்த பெருமூச்செறிந்த அறிவித்தலைச் ஓரிரு வரிகளில் சொல்லி விட்டு அவர் தன்னுடைய வேலைகளில் மூழ்கிப் போனார். அந்த நடைமேடையின் பாதியில் நின்று கொண்டிருக்கிறேன், ஆனால், கால்கள் ஏனோ நகர மறுக்கின்றன, உடல் ஒரு பெருத்த காற்றிழந்த பலூனைப் போல தரையில் தொய்வாய் கால்களை உரசியபடி அங்குலம் அங்குலமாய் நகர்கிறது, திரும்பத் திரும்ப அந்த வயதான பெண்ணைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்து கொண்டிருக்கிறேன். அந்தத் தாயின் கண்களில் தென்படுகிற உயிரின் ஒளி இப்போது இல்லையென்றாலும் அவளுடைய வாழ்க்கையைக் குறித்த நம்பிக்கை இன்னும் மிச்சமிருக்கிறது. சீப்பு, குழந்தைகளுக்கான வளையல், காதணிகள், கடவுளரின் படங்கள் என்று வழக்கமான அந்தத் துணியால் ஆன நடைபாதைக் கடையை சரி செய்தபடி அமர்ந்திருக்கிறாள் அந்தத் தாய்.

நடைமேடையை விட்டு இறங்கும் போது உடல் அனிச்சையாய் ஒரு முறை திரும்பி அந்தக் கிழவியைப் பார்க்கிறது, இனி அந்தக் கிழவி முதுமையின் கனத்த உடலோடும், பகிர முடியாத துயரத்தின் எஞ்சிய உயிரோடும் தனித்தே வாழ வேண்டும். நாளையும் நான் அதே நடை மேடையின் வழியாக நடக்கக் கூடும், குழந்தைகளும், இளம்பெண்களும் வழக்கம் போல வாழ்க்கையின் போக்கில் உரையாடிக் கொண்டே நடப்பார்கள்.

இன்னொரு கார் பழுதாகி நிற்கக் கூடும், மாங்காய்க் காலம் முடிந்து வெள்ளரிக்காயும், நாவல் பழங்களும் சுமந்த வண்டிகள் மாறக் கூடும். அந்தக் கிழவனை நானோ, கிழவியோ பார்க்க முடியாது என்கிற நிலைத்த உண்மையைத் தவிரப் பெரிதாக மாற்றங்கள் நிகழ்ந்து விடப் போவதில்லை. ஒருநாள் கிழவியும் காணாமல் போய் விடுவாள். புதிய மனிதர்களைச் சுமந்தபடி நடைமேடை அப்படியே தான் இருக்கும்.

ஆனாலும், அவர்கள் கடைசி வரை விடாப்பிடியாகக் காதலை அடைகாத்து நடைமேடையில் உலவ விட்டுச் சென்றிருக்கிறார்கள், கைகளைச் சேர்த்துப் பிடித்தபடி நடக்கும் ஒரு இளம் காதல் ஜோடியின் நெருக்கத்தில் கிழவனின் கண்கள் இறக்கும் வரை கொட்டித் தீர்த்த காதலும், அன்பும் சாவகாசமாய் நெடுங்காலம் வாழக்கூடும்.

***********

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்

%d bloggers like this: