கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 29, 2008

செல்வகணபதியும், ஜெமினி சர்க்கஸும்

 

தமிழக அரசியலில் அடிக்கடி நடக்கும் கூத்துகளில் ஒன்று, படை பட்டாளங்களுடன் மாற்றுக் கட்சிகளில் இணைந்து, அதுவரை விழுந்து கிடந்த கால்களின் பாவங்களை இன்னொரு பாதம் கழுவி தீர்த்து விடுவது. அப்படி ஒரு நகைச்சுவைக் காட்சியின் அருகாமை நாயகன் திருவாளர் செல்வகணபதி. இதுவரை தான் விழுந்து கிடந்த கால்களை ஏதோ ஒரு காரணத்துக்காக வாரிவிட்டு புனிதராகிவிட்டார்.

வழக்கம் போல தமிழக மக்கள் இன்னொரு தேநீர்க்கடை செய்தியாக இதனை படித்து விட்டு, மறந்து விடுவார்கள், மறக்க முடியாத வேதனை நிரம்பிய வலி நம்மைப் போல இனமானம் பேசும் தமிழர்களைப் பிடித்து ஆட்டும். மானமற்ற அரசியல் தலைவர்கள் இதற்கு ஒரு விழா எடுத்து தங்கள் பெருமைகளைப் பீற்றிக் கொண்டு அடுத்த தேர்தலுக்குத் தயாராவார்கள்.நாம் தான் வெட்கித் தலைகுனிந்து வேதனையில் இது போலக் கட்டுரைகள் எழுதி ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டும்.

 

செல்வகணபதியின் நகைச்சுவை விளையாட்டு.

 

“அதிமுக என்ற கட்சியை பிரைவேட் லிமிடெட் போல சசிகலாவும் அவரது உறவினர்களும் நடத்துகின்றனர்.” (செல்வகணபதி)

அதே கட்சியில் இருந்து கொண்டோ, இல்லை கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் சேராமல் இருந்து இந்த கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன வசனங்களை நீங்கள் சொல்லியிருந்தால், உங்கள் அரசியல் வரலாற்றில் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருக்கும். குறைந்த பட்சம் உங்கள் மீசையையாவது மழித்து விடுங்கள் செல்வம் ஐயா. மானமுள்ளவர்கள் வைத்துக் கொள்வது அது.

 

“அதிமுகவில் எம்ஜிஆரும் புறக்கணிக்கப்படுகிறார்” (செல்வகணபதி)

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு செல்வம் ஐயா, இந்தக் கண்டுபிடிப்புக்காக உங்களுக்கு வருகிற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கூடப் பரிசாகக் கொடுக்கப்படும், இல்லை, எப்படியும் ஒரு டம்மி அமைச்சர் பதவியாவது உங்களுக்குக் கிடைத்து விடும் வருகிற சட்டமன்றத் தேர்தலில்!!!!! பாவம் வழக்கம் போல வஞ்சிக்கப்படுவது மானமற்ற தமிழினம் தான். உங்கள் ஈனப் புளுகுகள் அல்ல.

 

“ஆனால் குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள், குனியக் குனிய குட்டுபவனும் முட்டாள். அதிமுகவில் உழைப்பவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இடமில்லை” (செல்வகணபதி)

நீங்கள் பல்வேறு மேடைகளில் குனிந்து குனிந்து உங்களுக்கு வந்த முதுகு வலியும், அதற்க்கு நீங்கள் எடுத்துக்கொண்ட மருத்துவமும், உங்களுக்கு முதுகெலும்பே இல்லை என்று சொன்ன பிறகும், நீங்கள் இங்கு வந்து குனிபவர்களையும் குட்டுபவர்களையும் பேசுவது கண்டு ஒரு புதிய வடிவேல் படம் பார்த்த நிறைவு எங்களுக்கு.

 

தமிழக அரசியல்வாதிகளே, உங்களுக்கு சுயமரியாதையே இல்லையா?

உங்களுக்குப் பெயர் மக்கள் பணியாளர்கள், அரசியல் என்பது மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கின்ற ஒரு சமூக அலுவலகம். இங்கு நுழையும் போதே உங்கள் பண ஆசையும், பதவி வெறியும் உங்களை காலில் விழுந்து மானமிழக்கச் செய்கிறது. உங்கள் செல்வாக்கும், பணம் பண்ணும் மந்திரமும் செயலிழக்கத் துவங்கி விட்டால், உங்களுக்கு எம்.ஜி.ஆரின் புகழ் மறைக்கப் படுவதும், சிலைகள் திறக்கப் படாததும் நினைவுக்கு வந்து விடுகிறது.

ஒரு புதிய தலைமுறைத் தமிழர்கள், உங்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம், வழக்கம் போல உங்கள் அந்தர் பல்டிகளும், பம்மாத்து அரசியலும் இனி செல்லாது. ஐயா நல்லக்கண்ணு போன்ற தலைவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள், உங்களைப் போல ஈனப் பிறவிகளும் இன்னும் திராவிடம் என்னும் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியலில் கிருமிகளைப் போல உலா வருகிறீர்கள். கிருமிக் கொல்லிகளைத் தான் இனி நாங்கள் கையாள வேண்டியிருக்கும், இல்லையென்றால் வியாதி எங்களுக்குத் தானே.

 

வரும் காலங்களில் இதையும் எதிர்பார்க்கிறோம்…..

 

மருத்துவர் ஐயாவும், தமிழினத் தலைவரும் தங்கள் தலைமுறையை வளப்படுத்த இனி ஒரே மேடையில் தரிசனம் கொடுப்பார்கள்.

அன்புச் சகோதரியும், மருத்துவர் ஐயாவும், தமிழர்களுக்கு பட்டை சாற்ற மேடைகளில் பாட்டுப் பாடுவார்கள்.

கண்சிவந்த காப்டனும், கழிசடை புரட்சியும் ஒரே மேடையில் அண்ணா நாமம் பாடுவார்கள் அல்லது தோட்டத்து வீடுகளில் தண்ணி அடிப்பார்கள்.

சிக்கியவர் எல்லாம் கூட்டணி என்று பாரதீய ஜனதா விஜய டி ராஜேந்தருடன் உலக மகாக் கூட்டணி வைக்கும்.

ரஜினி வருகிறார் என்று ஆர்.எம்.வீரப்பன் காங்கிரசில் சேருவார்.

திருமாவும், சுப்ரீமும் தமிழால் இணைவார்கள்

கார்த்திக் புறப்பட்டு தமிழினத்தை காக்க முலாயம் சிங்கோடு கூட்டணி வைப்பார்.

நடக்காத ஒன்றாக வரும் தேர்தலில் புரட்சித் தலைவியும், தமிழினத் தலைவரும் ஒரே மேடையில் உறுதிமொழி ஏற்று நமக்கெல்லாம் உருண்டை கொடுப்பார்கள்.

 

முட்டாள் தமிழர்கள் வழக்கம் போல மின்சாரம் இல்லாமல், வியர்வையில் வெந்து இவற்றையெல்லாம் செய்திகளில் படித்துப் பொழுது போக்குவார்கள்.

 

வாழ்க தமிழ், வெல்க தமிழினம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: