கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 30, 2008

பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி = மகிழ்ச்சி

300px-NASDAQ_times_square_display

உலகெங்கும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைகின்றன, பொருளாதாரம் நெருக்கடியான காலகட்டத்தை அடைந்திருக்கிறது, கச்சா எண்ணையின் விலை 26 ஆண்டு காலக் குறைந்த அளவை எட்டுகிறது, நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.வளர்ச்சி நிலைகளில் இருந்த உலகப் பொருளாதாரம், திடீரென்று அதல பாதாளம் சென்றதன் கதை மிக எளிதானது, புரிந்து கொள்ள ஏதுவானது, இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால், நம்மைச் சுற்றி இருக்கும் சாமானிய மக்களின் மகிழ்ச்சிக்குரியது.

 _01FDB977_1A8C_4798_9E3F_74595EA2088B_

இதன் காரணங்களை, நாம் அறிய முற்படும் முன்னர், உலகில் நிலவும் ஒரு சமச் சீரற்ற வணிகச் சூழலையும், தொழிற்கொள்கைகளின் ஏற்ற தாழ்வுகளையும் அறிந்து கொள்ள வேண்டும், உலகின் பல்வேறு நாடுகளில் செல்வம் கொழிக்கிறது, ஏனைய பல்வேறு நாடுகளில் ஏழ்மை தலைவிரித்து ஆடுகிறது. கடும் உணவுப் பஞ்சம் ஏழை ஆப்பிரிக்க நாடுகளை வாட்டி வதைப்பது மட்டுமன்றி, மனிதர்களை மனிதர் கொன்று தின்னும் அளவிற்கு ஆட்டிப் படைக்கிறது.

“The poorest 40 percent of the world’s population accounts for 5 percent of global income. The richest 20 percent accounts for three-quarters of world income”.

world_bank

உலக வங்கியின் மேற்கண்ட சொற்றொடர்கள், உலகில் வாழும் மக்களில் 40 % பேர் இரண்டு வேளை உணவிற்கு படாத பாடு படுகிறார்கள் என்பதையும், மீதமிருக்கும் மக்களில் 20 % தங்கள் தேவைக்கு அதிகமான உணவை கையாள்வதுடன், ஒட்டு மொத்த உலகின் உணவுத் தேவையில் 13.2 % உணவுப் பொருட்களை வீணடிக்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது, உணவின்றி மடியும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நடுவே ஒரு சாரார் உணவுத் திருவிழாக்களை நடத்துகிறார்கள். இந்த வேறுபாடுகளின் தொடர்ச்சிதான் இன்றைய பொருளாதார வீழ்ச்சி.

untitled

உழைப்பும், அதன் மதிப்பும் பொருளாதாரத்தை உறுதி செய்கிற காரணிகளில் மிக இன்றியமையாதன. உழைப்பில் இருவேறு பக்கங்களாய் உடல் சார்ந்த உழைப்பும், மனம் சார்ந்த மூளை உழைப்பும் திகழ்கின்றன. பொருளாதாரக் கோட்பாடுகளில், சித்தாந்தங்களில் சொல்லப்படுவதைப் போல உடல் உழைப்பிற்கும், மூளை உழைப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, இவை இரண்டுக்குமான சமநிலையில் மட்டுமே உலகம் இயங்க முடியும், மூளை உழைப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை முன்னெடுக்க உடல் உழைப்பும், உடல் உழைப்பின் சிரமங்களைக் குறைக்க மூளை உழைப்பின் தேவையும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்க முடியும்.. ஆனால், பொருளாதார உலகமயமாக்கலில் இவ்விரு உழைப்பிற்குமான மதிப்பில் மிகப் பெரிய வேறுபாடு உருவாக்கப்பட்டது. அதாவது மூளை உழைப்பாளர்களின் மதிப்பு, உடல் உழைப்பாளர்களின் மதிப்பை எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு உயரத்தில் கொண்டு வைத்தது.

poverty_wideweb__430x387

இந்த வேறுபாடுதான், இன்றைக்கு வெடித்துச் சிதறியது, எடுத்துக்காட்டாக, கணிப்பொறி அறிவியல், பங்கு வர்த்தகம், இணைய வணிகம், வங்கிகளின் கடன் வழங்கல் திட்டங்கள், நில உடைமை சார்ந்த துறைகள், கட்டுமானத் துறை இவை நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை, கொள்ளை லாபங்களை ஈட்டத் துவங்கின. இதற்கு முற்றிலும் மாறாக விவசாயம், உற்பத்தி, அடிப்படைக் கல்விக் கட்டமைப்புத் துறைகள் மற்றும் முறைசார் உடல்நலம் சார்ந்த துறைகள் சீண்டுவாரற்று நலிவடைந்தன. அடாவடியான இந்த அடிப்படை வேறுபாடு உலகின் புதிய தலைமுறையை சமநிலையற்ற பொருளாதாரக் கோட்பாடுகளை நோக்கித் தள்ளியது. பெரும்பான்மை ஏழை மக்களின் உடல் உழைப்பில் சுரண்டப்பட்ட பொருளின் மதிப்பு, சிறுபான்மை பணக்காரர்களின் கல்லாக்களில் கட்டப்பட்டது. வளர்ச்சியின் எல்லைக் கோட்டை அடைந்த துறைகள் வீக்கமடைந்து அடுத்த படிநிலைகள் இல்லாமல் வெடித்துச் சிதறின. முறையற்ற நில உடைமையின்  மீது பணயம் வைக்கப்பட்ட அமெரிக்க வங்கிகளின் பொருள், நிலங்கள் மற்றும் கட்டுமானத் துறையில் தேக்கம் அடைந்தது மட்டுமல்ல, அள்ளி வீசப்பட்ட கடன்களை வராக்கடன்களின் பட்டியலில் நிரந்தரமாக வைத்தது. உலகப் பொருளாதாரம் முற்றிலும் குழம்பிப் போய் முதலீடுகளை முடக்கியது, பணப் பரிவர்த்தனைகளை நிறுத்திக் கொண்டது. பிறகென்ன, நீங்களும் நானும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமே உலகப் பொருளாதாரம் என்று போலியாகக் கற்பிதம் செய்யப்பட்ட பங்குச் சந்தைகள் அனைத்தும் வீழ்ந்ததன் காரணம் விளங்க???

sensexETFBanner

அருகாமை வீழ்ச்சி, மறைமுகமாக ஒரு மகிழ்ச்சியான செய்தியை உலகின் உழைக்கும் மக்களுக்குச் சொல்லியது. அது, வேறொன்றுமில்லை, வெறும் மூளை உழைப்பு சார்ந்த, உடல் உழைப்பை முற்றிலும் மறுதலிக்கிற துறைகளின் வளர்ச்சி சமநிலையற்றது, மேலும் தனது முழுமையை அடைந்து நீர்த்துப் போனது, முறையற்ற வளர்ச்சியால் வெடித்துச் சிதறியது. வரும் காலங்களில், இது போன்ற முறையற்ற வளர்ச்சி அடையும் துறைகளின் மீதான மோகம் மட்டுறுத்தப்படுவதுடன், விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளின் மீதான அரசு மற்றும் தனி மனித நம்பிக்கைகளை, கோட்பாடுகளை, கொள்கை வகுப்பாக்கங்களை மாற்றும், இது காலத்தின் கட்டாயம் மட்டுமன்றி, பொருளாதார வணிகச் சூழலில் இயற்கையாக நிகழ வேண்டிய ஒரு தேவையுமாகும்.

20070515_reading_the_future_trends_world_economy

ஆதலால், இந்தப் பொருளாதார வீழ்ச்சி என்று சொல்லப் படுகிற ஒரு போலியான, கற்பிதம் செய்யப்பட்ட சாமான்ய மக்களின் உடல் உழைப்பின் மதிப்பை துச்சம் செய்து வடிவமைக்கப்பட்ட பங்குச் சந்தைகள் வீழ்ந்தன.இதில்  நீங்களும் நானும் மகிழ்வதற்கான காரணங்கள் அதிகமாக இருப்பதுடன், இயற்கையின் திருவிளையாடல்களில், சமநிலைப் படுத்துகின்ற ஒரு வரவேற்பிற்குரிய மாற்றமும் வீழ்ச்சியுமேயாகும்.


மறுவினைகள்

  1. மிக நல்ல தகவல்கள்… கேட்க மகிழ்ச்சியாக இருக்கும் தகவல்கள்……

  2. சுருங்கச் சொன்னாலும், ‘சுர்’ரென்றிருந்தது. இப்பதிவை தங்கள் அனுமதியுடன் ‘2009 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளுக்கான’ எனது மின்னஞ்சலுடன் இணைத்து நண்பர்களுக்கு அனுப்ப விழைகிறேன்!

  3. மகிழ்ச்சி. ஆனால் தற்காலிகமானதே என்பதுதான் என் வருத்தம். என்ன செய்ய?


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்