கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 24, 2008

ஈழத்தமிழ் விருந்தினர் கட்டுரை – திரு.குயின்ரஸ் துரைசிங்கம்

Karunanidhi

பிடில் வாசிக்கும் கலைஞர்

ஈழம் எரிகிறது, தினமும் பட்டப்பகலில் படுகொலைகள் தொடர்கின்றன. சிங்கள இனவெறி இராணுவமும், அதனுடன் இணைந்து செயற்படும் கூலிப்படைகளும், அரச அங்கீகாரத்துடன் தமிழின அழிப்பைத் தொடர்கிறார்கள். வரலாற்றுத் தொன்மை மிக்க தமிழ் நாகாPகமும் விழுமியங்களும் தமிழியலும் தமிழினமும் ஒட்டுமொத்த இனச் சுத்திகரிப்பில் கரைந்து கொண்டிருக்கிறது.

திராவிடத் தமிழ் இனத்தின் காவலன் என்று 50 வருடங்களுக்கும் மேலாக மேடைகளில் மார்தட்டி, தமிழினத்தின் வாக்குகளைப் பெற்று கறுப்புக் கண்ணாடியும் வெழுத்த சால்வையுமாய் ஆட்சியில் அமர்ந்து இறுமாப்படையும் கலைஞர், தனது சொந்த இனம் அழிக்கப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறாரா அல்லது அவரது தோல் சுத்தமாய் மரத்து விட்டதா என்று தொப்புள் கொடி உறவுகள் வேதனைப் படுகின்றன.

ltteNewsImage

தினமும் கொன்றழிக்கப்படும் தமிழர்களின் இரத்தம் ஆறாய் ஓடுகிறது. புரட்சித் தலைவர் மக்கள் திலகம் தற்போது உயிருடன் இருந்தால் இந்த தமிழின அழிப்பைப் பார்த்துக் கொண்டிருப்பாரா? என்று தமிழினம் அழுகிறது. உங்களைக் காக்க நான் இருக்கிறேன் என்று, தமிழகத்தின் தலைமை ஓடிவரும் என்று ஈழத் தமிழினம் நம்பிக்கையோடு காத்திருப்பது உண்மைதான். ஆனால், சொந்த சோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத கலைஞர், தன் இலக்கிய இரசத்தை மட்டும் எழுத்திலும் மேடையிலும் சிலேடையாகப் பேசிப்பேசி காலத்தைக் கடத்தி, காசையும் புகழையும் மட்டுமே நிறைத்து வருவது அநாகரிகமாகத் தெரிகிறது. நேசத்தையும் பாசத்தையும் கொஞ்சமாவது கிள்ளித் தருவார் கலைஞர் என்று, பாவம் இந்த ஈழத் தமிழர்கள் கானல் நீரை நோக்கி ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறார்கள். ஊடகங்கள் கேட்கும் போதெல்லாம், செயற்கையான ஒற்றைவரிப் பதில்கலை தனக்கே உரிய தனியான பாணியில் கூறிக்கொண்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று, தமிழினத்தை உதாசீனம் செய்வது ஈழவரை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

திரைக்கதையில் உரிமை மறுக்கப்படும் அத்தனை பேருக்கும் உணர்வையும் விடுதலையையும் ஊட்டிய கலைஞரின் பேனா, நிஜமாக அதே இனம் கொன்றழிக்கப்படும்போது, சத்தமின்றி மேசை மூலையில் மையின்றிக் கிடப்பது வியப்பாக இருக்கிறது. மை வேண்டாம், ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் தொட்டாவது, ஓரிரு வரிகளைத் தெளிவாக வரைவாரா கலைஞர் என்று, அவரது உணர்வில் வளர்ந்த தமிழினம் ஏங்கிக் கிடக்கிறது. 60களிலிருந்து 90கள் வரை, கலைஞர் கைதானபோதெல்லாம், கலைஞர் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம், கலைஞர் ஆட்சி பறிக்கப்பட்ட போதெல்லாம், அதி உச்சமாய்க் குரலெழுப்பி, ஆவேசமாய் ஆத்திரப்பட்டு, கலைஞரை எதிர்ப்பவரை அடிதடி மூலம் சந்தித்து அதிகமாய் காயப்பட்ட ஈழத்தழிர்கள் ஏராளம். கலைஞருக்காக தீக்குளித்தவர்களும் கலைஞருக்காக காவடி எடுத்தவர்களும் கலைஞருக்காக மொட்டை அடித்தவர்களும், ஏன், கலைஞரின் திரைப்படம் வெளிவந்தால் அது வெற்றிபெற வேண்டுமென்று தங்கள் தலையையும் உயிரையும் நேத்தி வைத்தவர்களும் மிக அதிகம். இது கலைஞரின் பேனா மீதும், கலைஞரின் மேடைப்பேச்சு மீதும், கலைஞரின் தமிழ் உணர்வு மீதும் ஈழத்தமிழர்கள் வைத்திருந்த சொல்லொணாப் பாசமும் வேகமும் தான். இருந்தும் என்ன, அத்தனை அன்புக்கும் பதிலாய் கலைஞரிடமிருந்து கிடைப்பது, கலையாத மௌனம் தான்.

ainthu

ஒவ்வொரு தடவையும் தமிழர் தரப்பின் மனஉறுதியையும் பலத்தையும் விடுதலைப் புலிகள் நிரூபிக்கும்போது, சிங்கள அரசின் பயங்கரவாதத்தை பரிகரித்து, போஷித்து, ஆதரித்து சிறுபான்மைத் தமிழினத்தின் படிக்கட்டுகளில் தடைக்கற்களாக இருப்பதாக தொடர்ச்சியாக இனம்காணப்பட்டிருப்பது இந்திய வல்லாதிக்க புலனாய்வு சக்திகள் தான். அவ்வப்போது விடுதலைப் புலிகளின் பலம் நிரூபிக்கப்படும்போதெல்லாம், ஏதாவது ஒரு ரூபத்தில் உள்நுழைந்து, தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்துவதில் பாரதம் வெற்றிகண்டே வருகிறது.

ஆசியாவில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்படும் ஈழத்தமிழ் சிறுபான்மை இனத்திற்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவது, இந்தியாவுக்கு ஒரு ஜனநாயக கௌரவத்தை ஆசியப் பிராந்தியத்தில் உருவாக்கும் என்ற யதார்த்தத்தை, இந்திய ஆதிக்க சக்திகள் புரிந்துகொள்ள மறுப்பது முட்டாள்தனமானது.

irandu

ஈழத் தமிழினத்தை சிறீலங்கா அரசு திட்டமிட்டு அழிப்பதை உணர்ந்துகொண்டு, அதற்கு ஆயுதப் போராட்டம் மூலமே மாற்றுத்தீர்வைக் கொண்டுவரலாம் என்று இலவம் காட்டில் சில இளைஞர்கள் விவாதித்து முடிவெடுத்தபோது, அதற்கு செயல்வடிவம் கொடுத்து, புகலிடம், பயிற்சி, பாசறை, கருவிகள் என்று அனைத்தையும் வழங்கி முத்தாய்ப்பு வைத்து கப்பலேற்றி அனுப்பி வைத்தது இந்தியா தான். அந்த உண்மையைப் புரிந்துகொண்டு, இன்று மட்டுமல்ல, என்றும் தமிழர் தரப்பு, இந்தியாவுக்கு ஒரு நேசக்கரமாக செயற்படும் என்பதை அந்நாடு ஏற்றுக்கொள்வது அவசியம். சேதுசமுத்திரத் திட்டம் உட்பட, இந்தியாவின் அனைத்து அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் தமிழீழம் என்ற தனிநாடு, ஒரு திடமான இராஜாங்க செயற்பாட்டுக்கான இணைந்த களமாக விளங்கும் என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ பாக்கிஸ்தான் பிரிந்துசெல்வதற்கு இந்தியா பச்சைக் கொடி காட்டியது. இழுத்துவைத்துக்கொண்டு, இணைப்பாட்சியிலோ இறைமையிலோ சமஷ்டியிலோ காலம்தள்ள முயலவில்லை. பின்னர் பங்களாதேஷ், அதற்கும் அதே தீர்ப்புத்தான். கிழக்குப் பாக்கிஸ்தானில் கிளர்ச்சி உச்சக்கட்டத்தைத் தொட்டபோது, ஓடிச்சென்று தனிநாடாகப் பிரித்துக்கொடுத்ததும் இந்தியாதான். ஆக, இனங்கள் ஒன்றுபட முடியாத அளவுக்கு பெரும்பான்மையின் இனவெறி தாண்டவமாடினால், பிரிந்து வளர்வதுதான் மேல் என்று கொள்கையளவில் மட்டுமல்ல, செயலிலும் காட்டிநின்ற இந்திய அரசு, ஈழத்தமிழர் விடயத்திலும் அதே முடிவை எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. குறிப்பாக, ஈழத் தமிழர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள், தனது வாழ்க்கை வரலாற்றின் இறுதிப் பகுதியைக் கரைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது காலத்தில் ஈழத்தமிழரின் நிரந்தரத் தீர்;வுக்காகக் குரல்கொடுப்பதும், ஆக்கபூர்வமான செயற்பாட்டில் நேரடியாக இறங்குவதும் இன்றியமையாத தேவையாக உள்ளது. ஈழத்தில் செதுக்கப்படும் தந்தை செல்வா, தேசியத் தலைமை போன்றவர்களின் சிலைகளுக்கு நடுவே, கலைஞரின் சிலையும் பெருவிருட்சமாய் எழுந்து நிற்பது ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரவே செய்யும்.

xin_4620805032009359229075

ஈழப் பிரச்சனையை முற்றுமுழுதாக 50களிலிருந்து தெளிவாக அறிந்துவைத்திருக்கும் ஒரு பழுத்த அரசியல்வாதி என்று பார்த்தால், இந்தியாவில் மட்டுமல்ல, ஈழத்திலும் அகில உலகத்திலும் கூட, கலைஞர் கருணாநிதியைவிட அதிகம் அறிந்தவர் யாரும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் கலைஞர் உத்வேகமாக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால், நிறையவே செய்யலாம் என்பதும், நிரந்தரத் தீர்வைக்கூட கொண்டுவரலாம் என்பதும், ஒட்டுமொத்த ஈழத் தமிழருக்கும் தெரியும். திராவிட நாட்டின் தலைவர் என்று பெருமைகொள்ளும் கலைஞரை, ஈழத் தமிழர்களும் தங்கள் நெஞ்சில் என்றும் பூஷித்து மகிழும் வகையில், நிரந்தர தாயகமொன்றை தமிழினத்திற்கு வழங்குவதற்கு, மத்திய அரசினூடாக பரிந்துரை செய்வது மட்டுமல்லாது, நிபந்தனையும் காலஎல்லையும் கொண்ட அழுத்தங்களை பகிரங்கமாக அறிவிப்பதும், காலத்தின் கட்டாய தேவையாக, கலைஞரின் இறுதி முன்னெடுப்பாக விரிந்து கிடக்கிறது.

Thamilchelvan_AL

70களில் கலைஞர் தனது சொந்த வார்த்தைகளில் பகிரங்கமாகக் கூறியதை அவ்வளவு எளிதாக மறந்து போயிருக்க வாய்ப்பில்லை. இலங்கையில் இரு இனங்கள் சேர்ந்துவாழ வாய்ப்பில்லை என்ற சூழ்நிலை தெரிகிறது. இரு இனங்கள் இணைந்து வாழ முடியாவிட்டால், செக்கோசெலவாக்கியா தீர்வு போன்று, இரு நாடுகளாக பிரிந்துவிடுவதே சரியானது என்று கலைஞர் அப்போது கூறியிருந்தார். அதன்பின்னரும்கூட, ஈழத்தமிழர்கள் பலதடவை சமாதானமாக இனப்பிரச்சனையை இலங்கை அரசு தீர்த்து வைக்குமென்ற நம்பிக்கையுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்கள். விளைவு, இலங்கை அரசு தமிழினத்தை ஒட்டுமொத்தமாக ஏமாற்றி, தனது வழியில் பௌத்த சிங்கள நாடாக சிறீலங்காவை உருவாக்குவதில் வெற்றி கண்டு வருகிறது. சிங்களவர்களுக்கு, தனியான பௌத்த சிங்கள நாடு வேண்டும் என்று அவர்களாகவே கேட்கும் சூழ்நிலை தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதால், அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சிங்கள நாட்டையும், தமிழர்களுக்கு ஈழத்தையும் பிரித்துக்கொடுப்பது இந்தியாவுக்கு உள்ள ஏக தெரிவாக முன்நிற்கிறது.

 

AABT002592-7815 ஈழத்தமிழர்கள் விடுதலைபெற்று வாழ்வதற்கான பரிநாண் கயிற்றைத் தன்கையில் வைத்திருக்கும் இந்தியா, மனம் வைத்தால் நிட்சயம் இலங்கைப் பிரச்சனையில் தனது கொள்கையை சற்றே இளக்கிக் கொள்ளலாம்.

இலங்கைத் தலைமையில் பெரும் அரசியற் குழப்பம் ஏற்பட்டிருப்பதுடன், நிரந்தர சமாதானம் உருவாகக்கூடிய இறுதி வாய்ப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் இலங்கை அரசின் அராஜக வன்முறை அரசியலையும், அப்பாவி மக்களை அப்பட்டமாக அழித்தும் சிதைத்தும் வதைத்தும் வருவதுடன், தமிழர் தாயக மண்ணையும் சிங்கள குடியேற்றப் பிரதேசங்களாக மாற்றிக்கொண்டிருக்கும் சூழலையும், இந்தியா வாளாவென்று பார்த்துக் கொண்டிருப்பது அபத்தமானது. சர்வதேசத்திற்கு பல்வேறு புனைகதைகளையும் கூறிக்கொண்டிருக்கும் சிறீலங்காவின் ஹிட்லர் பாணியிலான மகிந்த அரசை, இந்தியா தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல், இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை பகிரங்கமாகக் கண்டிக்க முன்வருவதே காலத்தாற் செய்யும் உதவியாக, பாரதத்திடம் விரிந்து கிடக்கிறது.

title1

விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும் ஆலோசகருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் உட்பட, விடுதலைப் புலிகளின் பல முக்கிய உறுப்பினர்களும், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும், நேரடியாக பலதடவை கேட்டுக்கொண்டபடி, சிறீலங்கா அரசின் அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்க இந்தியா முன்வருவதே, இந்திய அரசின் அவசர அடுத்தகட்ட நகர்வாக இருக்க வேண்டும்.

1947 முதல், பல்வேறு சந்தர்ப்பத்திலும், அறவழிப் போராட்டங்கள் மூலம், அமைதி வழயில், ஜனநாயக முறையில், சத்தியாக்கிரக போராட்டங்கள் உட்பட, கௌரவம் குறையாமல் எதிர்ப்பைக் காட்டியவர்கள் தமிழர் தரப்பினர். ஆனால், அப்போதிருந்தே சிறீலங்கா இராணுவத்தை ஒரு பக்கமும், சிங்களக் காடையர்களை இன்னுமொரு பக்கமும் வைத்துக்கொண்டு, இத்தகைய அமைதிவழிப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கி தமிழர்களை நலினப்படுத்த, சிங்கள அரசு கையிலெடுத்தது ஆயுத வன்முறையும் ஆயுதக் கலாச்சாரமும்.

610x

சிங்களக் காடையர்களுக்கு கத்தி, கோடரி, வாள், குண்டாந்தடிகள், குடிக்க சாராயம், இத்தனை பேரை வெட்டினால் இவ்வளவு சம்பளம் என்று ஒருபக்கம் வன்முறைகளுக்கு தூபம். யார் யாரைக் கொல்ல வேண்டும், எந்தெந்த வீடுகளைக் கொழுத்த வேண்டும், எங்கெல்லாம் ஊடகயவியலாளரைத் தட்ட வேண்டும், எப்போது யாரையெல்லாம் கடத்த வேண்டும், எவ்வளவு கப்பம் கோர வேண்டும் என்று விரிவான அட்டவணைகளைத் தயாரித்து, தனது படைகளிடமும், இணைந்து தொழிற்படும் ஒட்டுப் படைகளிடமும் வழங்கிவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிறது சிறீலங்கா இனவெறி அரசு.

அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டம், ஊடகச் சட்டம், கல்வித்தராதரப் படுத்தல் சட்டமூலம், அரசசாசன சீர்திருத்தம் என்ற பெயரில், சிறுபான்மையினத்தை நசுக்குதல், உணவுத்தடை, செய்தித் தடை, மருந்துத்தடை, பிரயாணத் தடை, உயர் பாதுகாப்பு வலயங்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், சிங்களம் மட்டும், பௌத்த நாடு, ஒற்றையாட்சி என்பது போன்ற அத்தனை போர்க் கோஷங்களையும் ஊதிக்கொண்டு ஆயுதக் கலாச்சாரத்தையும் ஆயத வன்முறையையும் கையிலெடுத்தது சிறீலங்கா அரசுதான். ஆக, பயங்கரவாதத்தை சிறீலங்கா அரசுதான் பயன்படுத்தியிருக்கிறது, பயன்படுத்துகிறது. தமிழர்களையும் பயன்படுத்தத் தூண்டியுள்ளது.

mannu

1960ல் சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யே கூறினார். தனது நாடான சிங்கப்பூர், ஆசியாவில் தன்னிறைவுள்ள வெற்றிபெற்ற நாடான சிலோன் போன்று, வளர்ச்சிபெறவேண்டுமென்பதே தனது கனவும் ஆசையும் என்று. தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறிய அத்தனை சிங்கள ஆட்சியாளர்களும், அழகான கற்பகத் தீவை, சூறையாடி, சின்னாபின்னப்படுத்தி, தங்கள் பணப்பைகளை நிறைத்துக்கொண்டு, நிர்க்கதியாய் தவிக்கவிட்டு தப்பிச்சென்று விட்டார்கள். இப்போது மகிந்த கூட்டுக் குடும்பம், மிச்சம் மீதியைச் சூறையாட இரத்தவெறியோடு அலைகிறது.

வன்முறைகள் கருக்கட்டினால், வன்முறைகள் தான் பிரசவிக்கும். இதுதான் யதார்த்தம். ஜனநாயகம் என்பது, தன்னிறைவு கொண்ட அறநெறி முறைமையல்ல, (ழெவ ளநடக ளரககiஉநைவெ அழசயட ளலளவநஅ) அதாவது ஜனநாயக முறைமைகளைப் பயன்படுத்துகையில் தீர்வுகள் தானாக வந்துவிடும், புரையோடிய பிரச்சினைகள் மறைந்துவிடும் என்று நம்புவதற்கில்லை என்கிறார் ஒரு அறிஞர். நீதியான நியாயமான மனித உரிமைகளை மதிக்கும் வகையிலான மனிதாபிமானமுள்ள முடிவுகள் தான் அவசியம் என்கிறது அவரது வாதம்.

ltteblacktigersanurathapura

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, சிங்களவர்களை ஒழிக்க வேண்டும், சிங்களப் பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டுமென்று தமிழர்கள் நினைக்கவில்லை, புலிகள் அந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. சிங்கள மக்களின் எந்தப் பகுதியும், தமிழர்களுக்குத் தேவையானதுமல்ல. தமிழர் தரப்பிற்கு ஆகக்குறைந்த வாழ்வியல் இருப்புக்கான நியாயம் கொடுங்கள் என்பதுதான் கோரிக்கை. திராவிடத் தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் மௌனம் கலைப்பாரா?

elec1

தமிழ் மொழியில், மிகத் தெளிவாக, இரத்தினச் சுருக்கமாக, நெத்தியடியாகப் பேசுவதற்கு எம்மால் முடியாது. எம்மால் மட்டுமல்ல எவராலும் முடியாது. தன்மானத் தமிழன் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்ற ஒரேயொரு தமிழறிஞரால் மட்டுமே அது இயலும். அவரது பாணியில் நேரடியாகவே தமிழினம் வேண்டுகோள் விடுக்கிறது:

இலங்கையிலுள்ள இரு இனங்களும் தனித்தனியாகப் பிரிந்துசென்று, அவரவர் வழியில் வாழ வளர, நடுவண் அரசு மூலம், தங்கள் காலத்திலேயே வழி ஏற்படுத்துங்கள்!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 12.8)

விளக்கம்: ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும் (கலைஞர் உரை).

 

கட்டுரையாளர் – திரு.குயின்ரஸ் துரைசிங்கம்


மறுவினைகள்

  1. ஐயா துரைசிங்கம்
    உங்கள் கட்டுரை வாசித்தேன். தலைநரையரை ஒரு பிடி பிடித்தீர்கள் பதவி வெறிபிடித்து அலைபவர்களுக்கு இனமானமென்றால் கிலோ என்னவிலை என்று கேட்பார்கள்.இவர்களுக்காக நீண்ட ஒரு விரிவுரையா?இரண்டுவரியில்நறுக்கென உறைக்கக்கேளுங்கள்.புரிந்தால் புரியட்டும். இல்லையென்றால் விடட்டும்.

    நன்றி
    கணபதி

  2. அன்புக்குரிய ஐயா கணபதி அவர்களே,

    என்ன செய்வது, வைது வைத்தாலும் பிறகு ஒரு பக்கம், மூத்த குடியின் கடைசித் தமிழறிஞர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராம் கலைஞரை வெறுக்க மனம் மறுக்கிறதே, தவறுகள் இழைத்தாலும், தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்கிற பழமொழிக்கேற்ப ஒருநாள் நம் அழியும் ஈழத் தமிழரைக் காக்க வெகுண்டு எழ மாட்டாரா என்கிற ஒரு நப்பாசை மனசுக்குள் கிடந்தது அடிக்கிறது.

    தமிழைப் பேசவும், துணிந்து திராவிடத்தின் பெருமைகளை உரக்கக் கூவவும் வாய்ப்புப் பெற்ற அந்த நரித் தலையரால் முடியவில்லை என்றால், இனி காலத்தில் யாராலும் தாய்த் தமிழகத்தில் முடியாது என்பதே உண்மை. உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி.

    தோழமையுடன்
    கை.அறிவழகன்

  3. நன்றி கணபதி அவர்களே.

    என்ன செய்வது, நறுக்கெனக் கேட்டாலும் உறைப்பதாக இல்லை, விளக்கம் கொடுத்தாலும் புரிவதாகத் தெரியவில்லை.

    சொந்த இனம் சாவதைப் பொறுக்காமல் குரல் கொடுத்த சீமான் அமிர் போன்றவர்களைக் கூட, உள்ளே போடுகின்ற அளவில்தான் தமிழ்நாட்டுத் தலைமை இருக்கிறது.

    மத்திய அரசு நினைத்தால், காலக்கெடு கொண்ட திகதியை அறிவித்து, வானிலிருந்து குண்டு போட்டு மனித அவலத்தை உருவாக்கி வரும் நாசகார பயங்கரவாத மகிந்த அரசை எச்சரிப்பதுடன், டர்பாரில் செய்திருப்பது போன்று, மக்கள் குடியிருப்புக்கள் அமைந்த வன்னிப் பிரதேசத்தை வான்குண்டுத் தாக்குதல் நடத்த முடியாத சமாதான வலயமாக அறிவிக்க முடியும்.

    கலைஞருக்குத் தெரியாத சூத்திரங்களா? இதெல்லாம் தமிழர் தலையெழுத்து!!

  4. Very good article with histrorical proofs.

  5. துரைசிங்கம் அவர்களே ! இப்போது இலங்கையில் நடந்து வருவது, இந்தியா சிங்களக் கூலிப்பட்டாளத்தை வைத்து நடத்துகின்ற ஒரு யுத்தம். இந்தியாவின் இரத்த தாகம் கொண்ட லாபவெறி மூலதனத்திற்காக சந்தைபிடிப்பதற்காக நடக்கின்ற யுத்தம்.

    ஆக, இந்திரா உதவி செய்தார், இந்தியா செய்ய வேண்டும் எனக் கூறுவது எல்லாம், வெற்றுக் கூச்சல்கள்.

    கருணாநிதி இப்போது, தமிழகத்தின் தலைவர் அல்ல, ஆசியாவின் 5-ஆவது பெரிய மூலதனவாதி. அவர் எப்படி வெத்து மனிதர்களான இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பார் ! ஸ்டாலின்,அழகிரி, ஸ்டாலினின் வாரிசுகள், அழகிரியின் வாரிசுகள்,

  6. //திரைக்கதையில் உரிமை மறுக்கப்படும் அத்தனை பேருக்கும் உணர்வையும் விடுதலையையும் ஊட்டிய கலைஞரின் பேனா, நிஜமாக அதே இனம் கொன்றழிக்கப்படும்போது, சத்தமின்றி மேசை மூலையில் மையின்றிக் கிடப்பது வியப்பாக இருக்கிறது. மை வேண்டாம், ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் தொட்டாவது, ஓரிரு வரிகளைத் தெளிவாக வரைவாரா கலைஞர் என்று, அவரது உணர்வில் வளர்ந்த தமிழினம் ஏங்கிக் கிடக்கிறது.//

    உலகத்தமிழரின் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் கருணாநிதி தனது பதவி வெறிக்காக ஈழத்தமிழனின் அழிவிற்கு துணை நிற்கின்றார். இனியும் இவரது வாய்ப் பேச்சுக்களை நம்ப தயாரில்லை.


கை.அறிவழகன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

பிரிவுகள்