கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 20, 2009

பொங்கல் சில நினைவுகள்……….

umesh002

பொங்கல் விடுமுறைக்கு சென்று வந்த பிறகு எப்போதும் சில பசுமையான நினைவுகள் எனக்குள் ஆர்ப்பரிக்கும்,  இருபது வருடங்களுக்கு முன்னாள் சென்று நினைவுகளை மனத்திரையில் ஒருமுறை அசைபோடுவது கூட இந்தத் தமிழர் திருநாளின் சிறப்பை எனக்குள் அள்ளித் தெளித்து பெருமிதம் கொள்ள வைக்கும்.

பொங்கலின் வரவு எப்போதும் தேர்வுகள் நெருங்கும் காலமாக இருக்கும், இந்தியக் கல்வி முறையின் மனப்பாடக் கல்வி தரும் உளைச்சலில் இருந்து விடுபடக் கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாகவும் எனக்கான பொங்கல் இருக்கும், அரசுப் பணியில் இருந்ததால் தந்தையார் பத்து நாட்களுக்கு முன்னரே புத்தாடை எடுக்கும் நிகழ்வைத் தாயாருடன் கலந்து பேசி முடிவு செய்து ஒரு வாரம் முன்னதாய் எங்களையும் அழைத்துக் கொண்டு வாழும் நகரங்களில் துணி எடுக்கும் படலத்தில் இருந்து பொங்கலைத் துவக்குவார்.

pongal6-250_14012008

வண்ண வண்ணக் கனவுகளில் எங்களுக்கான ஆடைகள் எடுக்கப்பட்டு தையலகங்களில் கொடுக்கப்படும். பொங்கல் விழாவுக்கு மட்டும் ஒரு சிறப்பு அனுமதி உண்டு எனக்கு, தைக்கும் ஆடைகள் விரும்பும் வண்ணம் இருக்கலாம், இடுப்பில் நட்சத்திர ஓட்டைகள் வைத்து, எழுத்துக்களால் அலங்கரித்து நான் நடத்திய கோமாளித் தனங்கள் எல்லாம் இப்போது எனக்குள் நகைச்சுவையாய்த் தெரிந்தாலும், அந்த நேரத்தில் அவை கொடுத்த மகிழ்ச்சியின் விலை மதிக்க முடியாதது. இன்றைய ஆயத்த ஆடைகளின் விலைகளில் இருக்கும் உயரம் கூட அந்தக் கோமாளி ஆடைகளின் முன்னாள் கொஞ்சம் குறுகிப் போகும்.

79714577fj9

வாழ்த்து அட்டைகள் வாங்கி அவற்றை உறவினர்க்கும், நண்பர்க்கும் அனுப்பும் வழக்கத்தை ஒரு கடமையாகவே அப்பா கருதியது இன்றளவும் எனக்குள் வியப்பைத் தரும், வாழ்த்து அட்டைகளின் அணிவகுப்பில் குடும்பமே அமர்ந்து முகவரி எழுதுவது தான் எங்களைப் பொறுத்த வரை பொங்கலின் வருகையை உறுதிப்படுத்தும், முன்னிரவில் அப்பாவுடன் அமர்ந்து முகவரி எழுதும் பணி எங்களுக்குக் கொடுக்கப்படும், அப்பாவின் கவிதையும், அம்மாவின் விமர்சனங்களும் கொண்டு எழுதப்படும் வாழ்த்து அட்டைகள் திருக்குறளின் மேன்மையுடன் நிறைவுற்று அனுப்புதலுக்கு தயாராகும். வாழ்த்தின் உண்மையும் கூட அட்டைகளுடன் அனுப்பப்பட்டது அப்போது தான். ஒரு நாளைக்கு இருபது அலுவல் சார்ந்த கடிதங்கள் எழுதும் என்னால் கூட, அன்றைக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதங்களின் உள்ளடக்கமான உயரிய தமிழினத்தின் அன்பை ஒரு கடிதத்திலும் இப்போது காண முடிவதில்லை. கடிதம் எழுதும் பழக்கமே மறந்து போன ஒரு மின்னஞ்சல் தலைமுறை இன்றைக்கு ” நலமாக இருக்கிறீர்களா” என்பதை ” hw r u?” என்று சுருக்கி விட்டது.

DSCN0190

அப்போதெல்லாம், இரண்டு நாட்களுக்கு முன்னரே கிராமத்திற்குச் சென்று விடும் எங்களுக்கு இதயத்தின் தேங்கிய அன்பெல்லாம் சேர்த்துக் கிடைக்கும், ஐயாவும், அப்பத்தாவும், பெரியப்பாக்களும், பெரியம்மாக்களும் எங்களை வரவேற்று உபசரிக்கும் காலம் இனி வரவே இயலாத அளவிற்கு குடும்பங்களும், உறவுகளும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன. கண்மாய் நண்டுகளும், ஆராக்கீரைகளும் உணர்த்திய உறவுகளின் வெம்மை பொங்கல் காலங்களின் பின்பனி இரவுகளை எளிமையாக்கும். மலையடிக்குக் குளிக்கப் போவதற்காகவே விரைவில் எழுந்து விடுவோம், போகிற வழியில் படர்ந்திருக்கும் காந்தள் மலரின் ஆங்கிலப் பெயரை ஐயாவுக்குச் சொன்னபோது ஏதோ ஆல்வா எடிசனின் மின்சாரக் கண்டுபிடிப்பைப் போல மகிழ்ந்து என்னை தூக்கி மடியில் வைத்துக் கொள்வார் அந்தப் பெரியவர்.

tbltnsplnews_88045465947

“அட்டைகளுக்கு ஆயிரம் கால்கள் இருக்குமா?” என்று கொஞ்சம் பயந்து கொண்டே நான் கேட்கும் போது ஒரு குச்சியில் எடுத்து அதனை எண்ண முயன்ற அவரது அன்பு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு எனக்குள் நிறைந்திருக்கும், சூரம்பழம், காரம்பழம், புளியங்காய், கோவைப்பழம், கற்றாழம் பழம் என்று எங்கள் சிற்றுண்டி குளித்து முடிந்து வரும்போதே கிட்டத்தட்ட முடிந்து விடும். எங்கள் பிஞ்சையில் (புன்செய்க் காடு) விழையும் முருங்கைக்கு உலகச் சந்தையில் போட்டியிடும் சுவை இருப்பதாக அவர் சொல்லும் போது நானும் நம்பித்தான் இருந்தேன்.

kolam1

இரவு முழுவதும் கோலம் போடும் அம்மாவும், அப்பத்தாவும் அவ்வப்போது கோலத்துடன் கலந்து சண்டையும் போடுவார்கள், பெண்களின் நுண்ணிய அறிவும், செயல்திறனும் அவர்கள் போடும் கோலங்களில் வெளிப்படுவதை அப்போது நான் பிரமிப்புடன் மட்டும் பார்த்திருப்பேன்.

பொங்கலுக்கான நேரமும் வந்து விடும், பொங்கல் நாள் காலை என்பது மிகவும் இன்றியமையாத நாளாகும், அதிகாலை எழுந்து அரைத் தூக்கத்தில் குளிக்க வேண்டும், குளத்து நீரில் முழுகி எழும் போதே புத்துணர்ச்சி பொங்கிப் பெருகி விடும், கண்மாயின் இருமருங்கும் நெடிதுயர்ந்த புளியமரங்கள், பொங்கலைக் கொண்டாடவோ என்னவோ விரைவில் கரையத் துவங்கும் காக்கைகள், எப்போதும் கூவிக் கொண்டே திரியும் எங்கள் ஊர்க் குயில்கள், நீண்ட நாளைக்குப் பிறகு குளிக்கும் காளைகள், வீடுகளுக்கு வெளியே புதிதாக முளைக்கும் விளக்குகள், வருட இடைவெளிக்குப் பிறகு வெளியே வரும் இட்டலிப் பாத்திரங்கள், மெல்ல  வெள்ளையாய்த் தரை இறங்கும் மார்கழி இரவின் கடைசிப் பனி, வழியெங்கும் சாலைகளில் கதிர் அடிக்கப் பரப்பப்பட்டிருக்கும் நெல்மணிகளின் வாசம். இப்போதெல்லாம் கிடைக்கப்பெறாத அந்த நாட்களின் நினைவுகள் இழந்த காதலின் வலியைப் போல சுகமும் சோகமும் கலந்து களைந்து போனவை.

untitled

பொங்கல் அடுப்புகளை வீட்டு வாசலில் மண் பரப்பி அதன் மேல் அமர்த்தும் பணியில் அப்பத்தா, பானைக்குக் கோலமிடும் பணியில் அம்மா, பானைகளின் கழுத்தில் பொங்கல் கண் பூழைப் பூவையும், ஆவாரம் பூவையும் சேர்த்துக் கட்டி, மஞ்சளைக் கொத்தாகத் தொங்க விடும் அய்யாவின் அந்த செம்மை இப்போது யாருக்கும் வருவதில்லை. பால் பொங்கும் போது சங்கு ஊதும் பணி எனக்கே எனக்கானது. ஓலைகளையும், சுள்ளிகளையும் வைத்து கண்களில் நீர் வழிய பொங்கலின் பாலை வெளியில் வடிக்க அவர்கள் எடுக்கும் முயற்சி கடைசியில் வெற்றியில் முடியும்,ஐயா அப்பத்தாவின் காலடியில் மொத்தக் குடும்பமும் விழுந்து வணங்கி மரியாதை என்கிற வார்த்தைக்கு மீண்டும் தமிழரின் அகராதியில் அழுத்தமான பொருள் கொடுக்கும் நினைவுகள். ஊரெங்கும் ஒன்று கூடி ” திட்டி” சுற்றி மகிழும் போது உருவாகும் ” பொங்கலோ பொங்கல்” என்னும் ஓசையில் கரைந்து போகும் பகைமைகள்.

image

சங்கு நீண்ட நேரம் முழங்கி தமிழினத்தின் திருநாளை முரசம் கொட்டி உலகெங்கும் ஒலிக்கும்.

அத்தை குடும்பங்களும், முறைப் பிள்ளைகளும் வந்து கூடும் அன்றைய மாலைப் பொழுதுகள் தான் பிறப்பின் முழுமையான மகிழ்ச்சியை எனக்குள் வாரி வழங்கி இருக்கிறது, உயரக் கட்டிய வீடுகளின் உள்ளே அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் நெல் மூட்டைகளின் மேலமர்ந்து சண்டையிடும் எங்கள் அன்பு பொருள் தேடும் வழியில் தொலைந்து போனது ஒரு மீட்க முடியாத இழப்பென்றே இன்னும் நினைக்கிறேன், கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்து கதை பேசும் உறவுகளுக்குள் அடைக்கலம் புகும் எங்கள் விளையாட்டுப் பஞ்சாயத்துக்கள் அவர்கள் மடிகளில் முடிந்து விடும்.

pongal1

வந்த வேகத்தில் முடியப் போகும் பொங்கலின் மகிழ்ச்சி நிறைந்த அந்த நாட்கள் நம்மை விட்டு நீண்ட தூரம் சென்றது போல இருந்தாலும், அடுத்த தலைமுறை ஒன்று இடைவெளியை நிரப்ப உணர்வோடு வரும் என்கிற நம்பிக்கை இன்னும் நிறையவே இருக்கிறது நமக்குள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தரணி எங்கும் கொண்டாடி மகிழவும், சாதியற்ற, மதமற்ற தமிழர்கள் ஒன்றாய் நின்று புத்தரிசிப் பொங்கலைப் போல பொங்கி வழியவும் பொங்கலைப் போற்றுவோம். வரும் தலைமுறைகள் வழமை போலத் தைத் திங்கள் முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாய் போற்றி வணங்கட்டும். உலகெங்கும் தமிழினத்தின் துன்பங்கள் உடையட்டும், ஈழத் தமிழர் தம் அடுத்த பொங்கலாவது விடுதலைப் பொங்கலாய் மலரட்டும்.

eezamoj8

“எங்கள் சமுதாயம் ஏழாயிரமாண்டு திங்கள்போல் வாழ்ந்து செங்கதிர்போல் ஒளிவீசும் மங்காத போர்க்களத்தும் மாளாத வீரர்படை கங்குல் அகமென்றும் காலைப் புறமென்றும் பொங்கி விளையாடிப் புகழேட்டிற் குடியேறித் தங்கி நிலைத்துத் தழைத்திருக்கும் காட்சிதனைக் கண்காண வந்த கலைவடிவே நித்திலமே! பொங்கற்பால் பொங்கிப் பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!”

Advertisements

Responses

  1. ////உயரக் கட்டிய வீடுகளின் உள்ளே அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் நெல் மூட்டைகளின் மேலமர்ந்து சண்டையிடும் எங்கள் அன்பு பொருள் தேடும் வழியில் தொலைந்து போனது ஒரு மீட்க முடியாத இழப்பென்றே இன்னும் நினைக்கிறேன், ////

    நானும் எனது பொங்கலை தொலைத்துவிட்டேன் அண்ணா

  2. நானும் எனது மலரும் நினைவுகளில் சிறுவயது {எழுபதுகளுக்கு]
    பொங்கலுக்கு சென்று வந்தேன்.கடந்த பொங்கல் நம்பிக்கை பொங்கலாக இருந்ததும் இன்று அனைத்து நம்பிக்கைகளையும் இழந்த நிலையில் வரும் பொங்கலை வரவேற்பதற்குரிய மனநிலையும் இல்லை.ஆனால் தமிழரின் ஒரே அடையாளமான பொங்கல் விழாவை தவிர்ப்பதற்கு மனமுமில்லாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் நிலைமை ஆகிவிட்டது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: