கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 11, 2009

பெண்ணியமும் ஒரு கவிதையும்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் சாலையொன்றில் காலை பதினோரு மணியளவில் நடந்து கொண்டிருந்தேன், வழக்கமான நெரிசல் மிகுந்த நாள், நடைபாதை மேடையில் வேலை நடந்து கொண்டிருந்தது, சிதிலமடைந்த நடைபாதை மேடைகளைச் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது, ஒரு பெயர்ப்பலகையின் பின்புறமாக இரண்டு பெண்கள் உடலைக் குறுக்கி ஒளிந்தது போல அமர்ந்திருந்தார்கள், ஒரு பெண்ணின் கையில் குழந்தை, அருகில் இருக்கும் மரத்தின் தாழ்வான கிளையில் தொட்டிலொன்று, நின்று கவனித்தேன், அவர்கள் உரையாடலை உள்வாங்கிய போது, காலை ஆறு மணியில் இருந்து தொடர்ந்து வேலை செய்கிறார்கள் என்பதும், பதினோரு மணிவரை அவர்கள் ஓய்வெடுப்பதை மேற்பார்வையாளர் அனுமதிக்கவில்லை என்பதும், குழந்தைக்குப் பாலூட்ட அந்தப் பெண் பெயர்ப்பலகைக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதும் எனக்கு உரைத்த போது கடும் மன உளைச்சல் பற்றிக் கொண்டது மட்டுமின்றி பெண்ணியம் குறித்த சிந்தனைகளில், செயல்பாடுகளில் எந்த அளவிற்கு சமூகம் பின் தங்கி இருக்கிறது என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டு விட்டது.

பெண்ணியம் குறித்த கட்டுரை எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை? ஏனெனில் குடும்பத்தில், அலுவலகத்தில், இன்னும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எனக்குள் விதைக்கப் பட்டிருக்கிற ஆணாதிக்க மனப்போக்கு இன்னும் முழுமையாக என்னிலிருந்து விடை பெறவில்லை என்பதையும், என்னையும் அறியாமல் வாழ்வின் பல தருணங்களில் ஆணாதிக்க மனப்போக்கினை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்து தலை குனிகிறேன், ஆனால், இந்த மனநிலையில் இருந்து விடுபட வேண்டும் என்கிற எண்ணமும், குற்ற உணர்வும் இருப்பதையே பெண்ணியம் குறித்து எழுதுவதற்கான தகுதியாகவும் உணர்கிறேன்.

நான் சந்தித்த முதல் பெண்ணியவாதி என்னுடைய தாயார், இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இடையே ஒரு பெண் குழந்தையை முழுமையான வாய்ப்புகளோடு அவர் வளர்த்தார், ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளும் பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்து பட்ட புரிதலோடு அவர் இருந்தது எனக்குள் வளரும் காலத்தில் வியப்பைக் கொடுத்தாலும், ஒரு வெற்றிகரமான பெண்ணாக எனது சகோதரியை மாற்றியதில் அவருடைய பங்கு முழுமையாக இருந்தது. பெண்ணியம் குறித்த எனது சிந்தனைகளை மீள்பார்வை செய்யவும், மாற்றிக் கொள்ளவும் அவரது அந்த அடிப்படைச் செயல்களே இன்றளவும் காரணமாக இருக்கிறது.

பெண்ணியம் குறித்த விவாதங்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன், பல்வேறு தளங்களில் இயங்கும் பெண்ணியவாதிகளுடன் உரையாடி இருக்கிறேன், அவர்களின் நிலைப்பாடுகளை அவதானித்திருக்கிறேன், ஆனால், பெண்ணியம் குறித்த சரியான பார்வையோடும், முதிர்ந்த கருத்தோடும் இயங்குகிறவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிகிறது. ஏனைய பெண்ணியவாதிகள் ஒரு போலியான கற்பிதம் செய்யப்பட்ட பெண்ணிய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். அல்லது உடலியல் ரீதியிலான குறியீட்டு விமர்சனங்களில் மூழ்கிப் போயிருந்தார்கள், தங்கள் உடலமைப்பு தங்கள் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கும் ஒரு புறக்காரணி என்று சுய அனுதாபம் தேடினார்கள்.

உடலியல் பெண்ணியத்தோடு எந்த வகையில் தொடர்பு கொள்கிறது என்று பார்ப்பதற்கு முன்னாள், பெண்ணியம் குறித்த எனது புரிதலை நான் உங்களுக்குச் சொல்லி விட வேண்டும், " வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்" இது தான் பெண்ணுரிமை குறித்து நான் உள்வாங்கியிருக்கிற புரிந்துணர்வு. இந்த அடைப்புக்குள் நீங்கள் எந்த ஒரு சமூகக் கூறுகளையும் இட்டு நிரப்பலாம், உணவுமுறை, உடைகள், மொழி, கல்வி, வேலை வாய்ப்புகள், அரசியல் உரிமைகள், சமூக மதிப்பீடுகள், காதல், திருமணம், குழந்தைப்பேறு, இலக்கியம், பொழுது போக்குகள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

சரி, உடலியலுக்கும், பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், உடலியலுக்கும், பெண்ணியத்திற்குமான தொடர்பு என்பது பிறப்பிற்கும் சாதிக்கும் இடையிலான தொடர்பைப் போல அருவருப்பானது. பாலின வேறுபாடுகளைக் கொண்டு அறிவையும், ஆற்றலையும் அளப்பது என்பது பிறப்பை வைத்து மனிதனை அளப்பது போலவே வெகு நுட்பமாக மதங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வேதங்களால் வழி நடத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, மத நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது மத அடிப்படைவாதிகள் பெண்ணியம் குறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தகுதியற்றவர்கள் என்பதை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். இன்று பெண்ணியம் குறித்துப் பேசுபவர்களில், எழுதுபவர்களில் பலர் அசைக்க முடியாத மத நம்பிக்கைகள் கொண்டிருப்பதை மேட்டுக்குடியின் பொழுதுபோக்குப் பெண்ணியமாகத் தான் பார்க்க முடிகிறதே தவிர உண்மையில் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு எள்ளளவும் பயனற்ற ஒன்றாகவே என்னால் காண முடிகிறது.
பெண்ணியம் குறித்த சிந்தனைகள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் இன்று நிலை கொண்டிருக்கிறது, ஒன்று மேட்டுக்குடியினரின் பொழுதுபோக்குப் பெண்ணியம், இன்னொன்று சாலையோரங்களில், வயற்காடுகளில், குடும்ப அடுப்புகளில் வெந்து கருகி, அழுவதற்கும் வாய்ப்பற்ற அடிமை நிலைகளில் வாழும் பெண்களின் நிலை குறித்த பெண்ணியம்,

இந்த இரண்டாம் நிலைப் பெண்ணியம் முறையான உணவுத் தேவைகள், ஊட்டச்சத்து, குழந்தை வளர்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் விழிப்புணர்வு, சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றில் உறைந்து கிடக்கிறது. இவற்றை தவிர்த்து கலை, இலக்கியத் தளங்களில் பெண்ணியம் சார்ந்து இயங்கும் பல்வேறு படைப்பாளிகள், பாலினக் குறியீட்டு இலக்கியங்களை எழுதிக் குவிக்கிறார்கள், அது தான் பெண்ணியம் என்று சிற்றிதழ்களும், இலக்கிய முதலாளிகளும் அவர்களுக்கு முத்திரை வேறு குத்தி விடுகிறார்கள், உடல் நமக்கு இயற்கையால் வழங்கப்பட்டிருக்கிற கொடை, இந்த உடலை அடிப்படையாக வைத்தே உளவியல் இயக்கம் துவங்குகிறது, பாலின வேறுபாடு என்கிற அடிப்படையில் இருக்கும் உறுப்புகளை மையமாக வைத்து அல்லது காட்சிப்பொருளாக்கி படைக்கப்படும் படைப்புகள் உண்மையில் கடும் மனச் சோர்வையும், உளவியல் ரீதியிலான அழுத்தங்களையும் வளரும் இளைய தலைமுறைப் பெண்களிடையே உருவாக்கி விடுமோ என்கிற அச்சம் பிறக்கிறது. சமீப காலங்களில் இது மாதிரியான காட்சிப் பொருளாக்கப்படும் கவிதைகள் அதிகரித்துக் காணப்படுவது பெண்ணியத்தின் பாதையை திசை திருப்பும் அல்லது முடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அப்படியென்றால், உடலியல் ரீதியிலான அழுத்தங்கள் அல்லது குறியீட்டு அடையாளங்கள் பெண்களின் மீது வாரி இறைக்கப்படுவதும், நாள்தோறும் உடலியல் ரீதியிலான பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் பெண்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா என்று நீங்கள் எழுப்பும் கேள்விகள் எனக்குக் கேட்கிறது, உங்களோடு முழுமையாக நான் உடன்படுகிறேன், உலகின் அத்தனை பகுதிகளிலும் பெண்கள் உடலியல் ரீதியாக அழுத்தப்படுகிறார்கள், புவிப்பந்தின் அத்தனை திசைகளிலும் ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்கிற வெறியில் பெண்களின் மீதான அடக்குமுறை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், அதற்காக ஒரு ஆண் என்கிற வகையில் வெட்கம் அடைகிறேன்.

இவற்றிற்கான மூல காரணங்களை அழிப்பதில் வெற்றி கொண்டால் மட்டுமே இத்தகைய உடலியல் சார்ந்த அழுத்தங்களில் இருந்து பெண்களைக் காக்க இயலுமே தவிர, குறியீட்டு இலக்கியங்களைப் படைப்பதனால் அல்ல என்று கருதுகிறேன்.

பெண்களைப் பற்றிய எண்ணங்களை, அடிப்படை வடிவங்களை இன்றைக்கு நிர்ணயம் செய்யும் காரணிகள் இரண்டு மட்டுமே, ஒன்று மதங்கள், இன்னொன்று ஊடகங்கள். மதங்களில் காணப்படும் அடிப்படைத் தத்துவங்களை அழித்தொழிக்காமல் பெண் விடுதலை பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது, இன்றும் இந்தியாவின் பல்வேறு ஆலயங்களில் பெண்கள் நுழையக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள், இவற்றை அகற்றக் கோரும் பெண்ணிய அமைப்புகளையோ, எதிர்ப்புக் காட்டும் பெண்ணியவாதிகளையோ அரிதாகவே காண முடிவது பெண்ணியத்தின் மிகப் பெரிய குறைபாடு.

அடுத்தது ஊடகங்கள், அச்சு ஊடகமாகட்டும், காட்சி ஊடகமாகட்டும் இன்று பெண்களை இழிவு செய்யும் பல்வேறு வழக்கங்களை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள், இந்தக் கூட்டங்களில் இணைந்து பணியாற்றும் பெண்களும் எதிர்ப்புகள் இன்றி அமைதியாகவே காலம் கழிக்கிறார்கள்.பெண்ணிய இயக்கங்கள் இதுபோன்ற சமூகத் தாக்கம் உருவாக்கும் எல்லைகளில் இயங்க மறுக்கின்றன, “ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு இவர்களின் இயங்கு எல்லை முடிந்து போய் விடுகிறதா?” என்ற கேள்வியும் தொடர்ந்து வருகிறது.

பெண்ணியம் தனது இயங்கு எல்லைகளை அடைய முடியாத இந்தியக் கிராமங்களின் எல்லைக் கோடுகளை அடையும் வரையில் அழுகிப் போன மதக் குப்பைகளில் வாழ்ந்து கொண்டு ஆரோக்கிய வாழ்வைப் பற்றி வகுப்பெடுப்பது போலவே பெண்ணியம் இந்தியாவில் இருக்கும் போலத் தெரிகிறது.

இத்துடன் ஒரு கவிதையை இணைக்கிறேன், இந்தக் கவிதை எனக்குள் மிகுந்த தாக்கம் விளைவித்தது என்பதில் மாற்றமில்லை, தோழி லீனா மணிமேகலையின் கவிதை அது, “இத்தகைய இலக்கிய வடிவங்கள், தன்னெழுச்சியான நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதற்கு மாறாக எதிர்மறை அழுத்தங்களை பெண்களிடத்தில் உருவாக்குமோ என்று அஞ்சுகிறேன்”,இந்தக் கவிதையில் தெறிக்கும் ஒருவித அச்சம் கலந்த அழுத்தம் என் தலைமுறைப் பெண்களுக்கு வரக்கூடாது என்பதிலும், இந்த அழுத்தத்தைப் பெண்கள் மீது திணிப்பதும் கூட ஒரு வகையில் முறைகேடான வன்முறை என்றும் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?????

“என் முலைகளைப்
பிரித்து வைத்தவளைத்
தேடி கொண்டிருக்கிறேன்
நீ தானா அவள்
உன் இரண்டு கைகளுக்கும்
வேலை வேண்டுமென்றா செய்தாய்
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா
இரு குன்றுகளுக்கிடையே
தூளி கட்டி விளையாடுவது
உன் சிறுவயது கனவு
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு
பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?
உன் பிள்ளைக்கு அறிவில்லை,
அது பால் அல்ல, தேன்
என்று வேறு சொல்கிறாய்
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை,
தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி
என்று தினம் ஒரு பெயரிட்டு
அழைத்து மயக்குகிறாய்
விரட்டவும் முடியவில்லை
உன் நாக்கின் வெப்பத்திற்கு
என் காம்புகள் கருவாச்சி தளிர்கள்
போல துளிர்க்கின்றன.
பல் தடங்கள் இணைத்து நீ வரையும்
சித்திரங்கள் பருவந்தோறும்
உயிர் பெறுகின்றன
அவற்றை ஒவ்வொரு நாளும்
ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து
வாங்கி செல்கிறான்.
நீ கிழித்து வைத்திருக்கும்
ரவிக்கைகளை என்னடி செய்வது?

* * * * * * * * * * *


Responses

 1. Excellent article frd Keep it up………..

 2. this poem is beautifully exposed nature of women.

 3. very very super. kavithai is very beautiful.

 4. கொஞ்சு மொழி பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி,வஞ்சகரை எதிர்த்திடவே வாளும் ஏந்த வேணுமடி. பழைய திரைப் பாடல். எவ்வளவு பொருத்தம்…தங்கள் கவிதை வரிகளுக்கும்,துப்பாக்கி ஏந்திய பெண் படத்திற்கும்.தங்கள் கட்டுரைக்கும்,லீனாவின் கவிதை வரிகளுக்கும் நன்றிகள் பல,பல.

 5. ஆழ்ந்த வெளிப்பாடுகள்.

 6. nice deep thoughts

 7. பெண்ணியம் என்று சொல்லி சிலர் தங்கள் மேதாவி தனத்தை காட்ட ,பறந்து விரிந்த சிந்தனை உள்ளவர்கள் போல் தங்களை அடையாளப்படுத்த ஆண் குறிகளையும்,பெண்குறி களையும் பற்றி அழுத்தமாக சொல்லி, அறிவுமுதிர்ச்சி யுள்ளவர்களாக இனம்காட்ட முயற்சிகிறார்கள்..அதற்கு ஆமாம் சாமி போடவும் ஒரு கூட்டத்தை உருவாக்கியிருப்பது அவர்களது சாமார்த்தியம்.இப்படி ஆண்குறி,பெண்குறி பற்றி ஒரு ஆண் அழுத்தமாக எழுதினால் பெண்ணடிமைத்தனம்..அதுபற்றி பெண்கள் எழுதலாம்..அதை பற்றி எழுத தெரிந்த பெண்கள் மட்டுமே அறிவு ஜீவிகள்.பெண்ணியவாதிகள்.குறிகளை பற்றி எழுதி பெண்களின் விடுதலைக்கு பாடுபடுகிறார்கள் அண்ணா..அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கும்,என்னை போன்றோர்க்கும் தான் அறிவு வளர வில்லை அண்ணா..!!

 8. தங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதே..இதை விட குறிகள் அதிகம் கொண்ட அவரின் அடுத்த கவிதையையும் பாருங்கள்…

 9. அன்புள்ள அறிவழகன்,

  பெண்ணியம் குறித்த உங்கள் பார்வை, நன்றாக, அழுத்தந்திருத்தமானதாக இருக்கிறது. ஆனால், பெண்ணியம் குறித்த கவிதை, சமூக மாற்றத்திற்குப் பயன்படுவதாக இருக்கிறதா? கவிஞர்கள் உண்மையான உந்துதலோடு கவிதை படைக்கிறார்களா என்பதையெல்லாம் நாம் ஆராய்வது தேவையானதாகப்படவில்லை. பெண் கவிஞர்கள் மனம்போல எழுதட்டும்… காட்டருவியா? கானல் நீரா? என்பதை தீர்மானிக்க நாம் யார்?!

  பாரதியைப்போல, வாழும்போது முகவரியற்று வாழ, இப்போதுள்ள பெரும்பாலான கவிஞர்கள் விரும்புவதில்லை. எனவே முகவரி தேடும் முயற்சியில், தனக்கான அடையாளத்தைச் செதுக்குவதில் உடைத்துப் பேசுவதில் ஆர்வங்காட்டுகிறார்கள். நீங்கள் சொல்லும் சிற்றிதழ்களும் இம்மாதிரியான அடையாளந்தேடும் முயற்சியில் அடங்கக்கூடியவையே! இம்மாதிரி, பாலியல் உறுப்புகள் சார்ந்த கவிதைகளை ஆண் கவிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். லீனாவின் கவிதையை முன்னிறுத்தி நீங்கள் கட்டுரை எழுதியிருப்பது சற்று முரண்பட்டதாக இருக்கிறது. உங்களைப்போல அவரும் பெரியாரிசம் பேசுபவர்தான்…

  மொத்தத்தில் இவ்விவாதமே பெரியாரிசம் பேசுபவர்களுக்கிடயே தான் நடக்கிறது என்பதை, பெரியாரிசத்தின் தாக்கமென்றும் என்னால் உணர முடிகிறது!

 10. மிக நன்றாகவும், அக்கறையோடும், பொறுப்போடும் எழுதப்பட்டிருக்கிற கட்டுரை. நன்றி.

 11. பெண்ணியம் குறித்த கட்டுரை எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை? ஏனெனில் குடும்பத்தில், அலுவலகத்தில், இன்னும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எனக்குள் விதைக்கப் பட்டிருக்கிற ஆணாதிக்க மனப்போக்கு இன்னும் முழுமையாக என்னிலிருந்து விடை பெறவில்லை என்பதையும், என்னையும் அறியாமல் வாழ்வின் பல தருணங்களில் ஆணாதிக்க மனப்போக்கினை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்து தலை குனிகிறேன், ஆனால், இந்த மனநிலையில் இருந்து விடுபட வேண்டும் என்கிற எண்ணமும், குற்ற உணர்வும் இருப்பதையே பெண்ணியம் குறித்து எழுதுவதற்கான தகுதியாகவும் உணர்கிறேன் என்ற உங்களின் கருத்து என்னை பிரதிபலிப்பதகவே உணர்கிறேன்.தோழி லீனாவின் கவிதை குறித்த உங்கள் பார்வையில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை……..

 12. அந்த லீனா கவிதைக்கு கொஞ்சம் விளக்கம் சொன்னிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்..

 13. hi dear
  keep write we need more write to letter to freedom woman also want understand woman

  thanks
  gani

 14. ” வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்” உங்களின் பெண்ணியம் தொடர்பான பார்வையோடு நானும் உடன்படுகிறேன். இருந்தும் லீனா மணிமேகலையின் கவிதையின் ஒரு பகுதியினை இதில் மீள் பதிவு செய்துதான் உங்கள் கருத்தை சொல்லவேண்டும் என்றில்லை.( சில பதிவர்கள் பாலியல் ரீதியாக உணர்வுகளை இரசிப்பவர்கள் அந்தக் கவிதைக்கே கருத்திடுகிறார்கள்)

 15. ஆணாதிக்கம், குடும்பம் என்கிற அமைப்பில் ஆணிற்கு பெண்ணைப் போல(குழந்தைகள் என்கிற) தீர்மானமான உடைமை / சொத்து இல்லாததன் பாதுகாப்பின்மை உணர்வின் விளைவாக எழுந்தது என்று நினைக்கிறேன். அந்தப் பாதுகாப்பின்மையின் தொடர்ச்சியாக, தனிச் சொத்துக்கள் தோன்றிய காலத்தில் ஆண் குடும்பத்துடன், சொத்துக்களையும் தனது கைக்குள் வைத்துக் கொண்டான். பின் அரசுகள்.. எனவே ஆணாதிக்கம் இல்லாத சமூகத்தில் குடும்பம் என்கிற உறவு இருக்க இயலாது. அப்போது தான் பெண்கள் விடுதலையடைவர். அதுவரை ஆண்கள் பெண்களைக் கூர்ந்து கவனிக்கும் சமூகம் இருக்கத் தான் செய்யும்.
  இது எனது கருத்து.

 16. Osai Chellavin intha kavithaithaan njaapakam varukirathu

  “மிக நீண்ட குறுக்கு வழி”

  காரல் மார்க்ஸ் படிக்கவேண்டும்…
  உபரி மதிப்பு விளங்க வேண்டும்…
  உலகத்தொழிலாளர்கள் போராட்டத்தை புரிந்துகொள்ளவேண்டும்… சே, பிடல், ரால்.. மறுவாசிப்பு செய்யவேண்டும் ..
  எதுக்குடா இவ்வளவு “சிவப்பு” ஆசை என்றான் நண்பன்…

  ”உலகின் அழகிய முதல் பெண்ணை புணரவேண்டுமென்றால். இதெல்லா…ம் தெரிந்து..தான் தொலை.க்கவேண்டியிருக்கிறது, என்ன செய்ய?”

  – ஓசை செல்லா (முகநூலில் எழுதிய பகடி)

 17. // ” வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்” இது தான் பெண்ணுரிமை குறித்து நான் உள்வாங்கியிருக்கிற புரிந்துணர்வு. இந்த அடைப்புக்குள் நீங்கள் எந்த ஒரு சமூகக் கூறுகளையும் இட்டு நிரப்பலாம், உணவுமுறை, உடைகள், மொழி, கல்வி, வேலை வாய்ப்புகள், அரசியல் உரிமைகள், சமூக மதிப்பீடுகள், காதல், திருமணம், குழந்தைப்பேறு, இலக்கியம், பொழுது போக்குகள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.//

  unmaileye solluren, innakithan penniyam na ennanu vilangiyathu.
  thanks.

 18. ” வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்” இது சரியல்ல என்று தோன்றுகிறது.

  இதிலும் அவர்கள் விருப்பத்தை அறிந்து அது கிடைக்க நாம் கூட முயல்வதே சரியான பெண்ணியம் என்பது என் தாழ்மையான கருத்து

 19. very nice and good explanation


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: