கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 4, 2010

அநாதை அகதிப் பயலுகளா………..

10

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது  உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை??? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத் தமிழ் மக்கள் மீது காட்டும் பரிவும் பாசமும்.

வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச்  சுமந்து  திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது.

இந்த  தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், உங்கள் குற்றங்களை எங்கள் தேசிய மலக்கிடங்கில் மறைத்து சிதம்பரம் ஐயாவின் வேட்டியைப் போட்டு மறைத்து விடுவோம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது, இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.

tblSambavamnews_27233523131

அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.

நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

tblSambavamnews_66121637822

நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் அல்லக்கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப் பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க????

இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உரிமையுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு?? உலகெங்கும் ஒடுக்குமுறையைச் சந்திக்கும் நமக்கு இன்னும் விஜய் படம் ஓட வேண்டுமா? அஜித் படம் ஓட வேண்டுமா என்பது பற்றித் தானே அதிக அக்கறை.

8_2

முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களே, இனி உங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது, போராட்டமெல்லாம் வேறு இனத்தவர்களுக்கு, தமிழர்களுக்கு இருக்கும் ஒரே வழி அண்டிப் பிழைப்பது, உங்கள் முகாமுக்கு அருகில் வாழும் ஆளுங்கட்சியின் செல்வாக்குப் பெற்ற தலைவரைப் பிடித்து முதலில் மாலை போடுங்கள், பிறகு மனுக்கொடுங்கள், ஐயாவின் ஆட்சியோ, இல்லை அம்மாவின் ஆட்சியோ தான் இந்த உலகின் தலை சிறந்த ஆட்சி என்று யாராவது ஒரு பத்திரிக்கையாளரைக் கூப்பிட்டு குனிந்து காதிலாவது சொல்லி வையுங்கள், குறைந்த பட்சம் அடி வாங்குவதில் இருந்தாவது தப்பிக்க வழி கிடைக்கும்.

22438_104492972904786_100000322504057_111203_6965342_n

யாரையும்  குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி

பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது 

பயன் தரும்.   புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின்  பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும்   போலி வேடதாரிகளைப் பல லட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து  இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.

செய்வார்களா புலம் பெயர் உறவுகள்??

Advertisements

Responses

  1. ரத்தக்கண்ணீர் வடிகிறது.இதயம் கனக்கிறது.என்று மாறும் இந்த இழிநிலை? ஆத்திரம் பீறிடுகிறது.ஆனால், அதனால் என்ன பயன் விளைந்து விடப்போகிறது.அழுது ஆற்றிக் கொள்ளக்கூட உரிமை இல்லை. உடல் நலனைக் கெடுத்துக்கொள்கிறாய் என்று அம்மாவும்,இணையரும் சேர்ந்தே கண்டிக்கிறார்கள்.தொப்பிள்க்கொடி உறவுகளைப் போல் நம்நிலையும் பரிதாபத்திற்கு உரியதே.

  2. […] அகதிப் பயலுகளா……….. அநாதை அகதிப் பயலுகளா………..பெப்ரவரி 5, 2010 பதிக்கப்பட்டது […]

  3. […] அநாதை அகதிப் பயலுகளா……….. அநாதை அகதிப் பயலுகளா………..பெப்ரவரி 5, 2010 பதிக்கப்பட்டது கட்டுரைகள் 1 Comment […]

  4. தமிழகத்தை ஆட்சி செய்யும் கொலைஞரின் ஏவலிற் கூட இது நடந்திருக்கலாம். உண்ணாவிரத‌ம் இருப்பது தப்பா? இது காந்திஜி வாழ்ந்த புண்ணிய பூமியா? நெஞ்சு பொறுக்குதில்லை…..இந்த நிலைகெட்ட…..?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: