கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 18, 2010

மாங்கொம்பு மலையும், நானும்

1

தங்கமணி சித்தப்பா வீட்டுக்குப் போகப் போகிறோம் என்று அத்தை சொன்னபோது மேகங்களை முட்டிக் கொண்டு சீனத் துறவியைப் போல அமர்ந்திருக்கும் மாங்கொம்பு மலை மனதில் வந்து நிழலாடியது, , பிற்பகலில் நான் அத்தை, ராஜா, மணி நான்கு பேரும் பேருந்தை விட்டிறங்கி ஆறு மைல் தொலைவை நடந்தே கடந்து தங்கமணி சித்தப்பாவின் ஊருக்குள் நுழைகிறோம், களைப்பின் மிச்சம் இன்னும் எங்கள் கால்களில் புழுதியோடு அப்பிக் கிடக்கிறது, தங்கமணி சித்தப்பா ஊருக்கு இரண்டாவது படிக்கும் போது ஒருமுறை வந்திருக்கிறேன், கம்பீரமாய் வீற்றிருக்கும் மாங்கொம்பு மலைக்குன்றின் கீழே சதுர வயல்களின் வரப்புகளை ஒட்டி இருக்கும் சின்ன வீடுகள் பயணத்தின் இடையே பேருந்தின் ஜன்னலில் பச்சையாய்த் தெரிந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

இது இரண்டாவது முறை, முன்னிலும் கம்பீரமாகவும், வியப்பாகவும் அந்த மலை மாற்றங்கள் இன்றி என் கண்களை அகல விரிக்கிறது, வீட்டிலிருந்து இருபது மைலில் இருந்தாலும் ஏதோ தேசங்களைக் கடந்த வந்ததாய் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிற வயது, வந்ததும் வராததுமாய் மொட்டை மாடிக்கு வந்து நின்று கொண்டு ஒய்யாரமாய்ப் படுத்திருக்கும் அந்த மலையை ஆசை தீரப் பார்க்கிறேன், நடந்து வருகையில் கடந்த பனை மரங்கள், ஈச்சம் பழச் செடிகள், குன்றிமணிக் கொடிகள் இவை எல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. நாங்கள் ஏதோ ஒரு விழாவிற்கு வந்திருந்தோம், என்ன விழா என்று முழுமையாக நினைவில்லை, ஒருபக்கம் வீட்டுப் பெண்கள் சமையலில் மும்முரமாக இருந்தார்கள், ஒரு பக்கம் அரசியல் பேசிக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் பெரியவர்கள், உடைந்த பலூனின் மிச்சப் பரப்பில் கைவிரல் நுழைத்து யாரோ செய்து கொடுத்த முட்டைகளை நெற்றியில் உடைத்துக் கூட்டமாய்ச் சிரிக்கும் குழந்தைகள், வைக்கோலை அசைபோட்டபடி இவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மாடுகள் என்று வீடு களை கட்டி இருந்தது.

4

நானும் ராஜாவும் இந்தக் குழுக்களில் எதிலும் சேர முடியாது, எங்கள் உலகம் முழுக்க மாறுபட்டது, நாங்கள் யாரும் கண்டறியாதவற்றைத் தேடியே பயணித்தோம் அல்லது நாங்கள் கண்டவற்றை யாரும் காணவில்லையென்று நம்பினோம், தங்கமணி சித்தப்பாவின் ஊரில் இறங்கியதில் இருந்தே மாங்கொம்பு மலைக் குன்றின் அழகு மற்ற எல்லாவற்றையும் மறைத்துத் தன் பக்கமாய் என்னை ஈர்த்துக் கொண்டு விட்டது, ஒற்றையடிப் பாதையில் நடந்து வரும் போதே ராஜாவிடம் மாங்கொம்பு மலைக்குப் போக வேண்டும் என்று சொல்லி வைத்து விட்டேன், அவனும் சரி என்று அவசரத்திற்கு தலை ஆட்டி இருந்தான், இப்போது கொஞ்சம் அருகில் தெரிந்தது மலை, மாடியில் நின்று பார்க்கும் போதெல்லாம் மேலே ஏறி வா, வா என்று என்னை அழைப்பது போலவே இருந்தது, அப்பத்தாவிடம் போய் இரண்டு முறை "அந்த மலையில் என்ன இருக்கிறது" என்று கேட்டிருந்தேன், அந்த மலையில் ஒரு அய்யனார் கோவில் இருப்பதாகவும், கோவிலுக்கு அருகில் தேன்கனிச் சுனை ஒன்று இருப்பதாகவும் அப்பத்தா சொல்லியது வேறு மலையைப் பற்றிய ஆவலை அதிகரிக்கச் செய்து விட்டது.

முன்பகலில் கொஞ்சமாய் வற்றிக் கிடந்த கண்மாயில் குளிக்கப் போனோம், கண்மாய்க்கு மிக அருகில் மலையடிவாரம், சீக்கிரமே குளித்துக் கரையேறி மலையையே பார்த்துக் கொண்டிருந்தேன், ஊர்ச் சிறுவன் ஒருவன் அருகில் போய், "டேய், அந்த மலைக்கு நீ போயிருக்கியா" என்று கேட்டு வைத்தேன், "நாங்க லீவுல மலைக்குப் போய் விளாங்காய் புடிங்கித் திம்போம்டா" என்று அவன் சொன்னதும், "விளாங்காய் எப்படி இருக்கும்? என்று அவனிடமே கேட்டேன், கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு மாதிரி என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு விளாங்காயை எனக்கு விளக்கத் தெரியாமல் டவுசரை மடித்து அருணாக் கயிற்றில் சொருக ஆரம்பித்தான் ஊர்ச் சிறுவன், இன்னமும் குளித்துக் கொண்டிருந்த ராஜாவிடம் வந்து விளாங்காய் எப்படி இருக்கும்? என்று நச்சரித்தேன், அப்பறமா உனக்குக் காட்டுறேண்டா என்று சொல்லி விட்டு முங்கு நீச்சலில் போய் விட்டான் ராஜா, ஒரு வழியாய்க் குளித்து வீடு வந்து சேரும் வரையிலும் என் கண்கள் கூடவே நகர்ந்து வந்த மலையின் மீதே இருந்தது.

அடுத்த நாள் மாலை வீட்டு விழாவின் சடங்குகளில் மும்முரமாய் இருந்த அத்தை எங்கள் இருவருக்கும் கொஞ்சம் விடுதலை கொடுத்த மாதிரி இருந்தது, என் மனம் பரபரப்பாய் மலையேறும் திட்டத்தை தீவிரப்படுத்த, ராஜாவின் மனதில் மலை ஏறும் எண்ணமெல்லாம் இல்லை, நான்தான் அவனைத் தூண்டியவாறே அழைத்து முன்னாள் நடக்க ஆரம்பித்தேன், ஒரு வழியாய் அவனும் மலை ஏற ஒப்புக் கொண்டு கூட நடக்கத் துவங்கினான், மேற்கில் மெல்ல மறைவதற்கு நகர்ந்த சூரியனோடு துவங்கி எங்கள் பயணம் வேகமெடுத்தது, ரொம்பவும் அருகில் இருப்பது போலத் தோன்றிய மலையடி நீண்டு கொண்டே போனது, இடையில் ஒருமுறை ராஜா "நாளைக்கு வருவோம்டா" என்று பம்மினான், “இவ்வளவு தூரம் வந்துட்டோம்ல, வா ராஜா போயிட்டு வந்துருவோம்” என்று நான் முன்னே நடக்கவும், அவனும் வேறு வழியின்றித் தொடர வேண்டியதாயிற்று, இடையில் குறுக்கிட்ட காது வளத்த கிழவியின் " யாரு வூட்டுப் பயலுகடா" என்ற கேள்விக்கு "மாங்கொம்பாரு பேரனுக பாட்டி" என்ற பதிலைச் சொல்லி முன்னேறினோம்.

2

ஒரு வழியாய் மலையின் அடிவாரம் வந்து விட்டது, உடைத்து செதுக்கப்பட்ட கருப்பு நிறப் பாறைகளின் திட்டுக்கள், மழை நீர் வடிந்து ஒழுகிய தடங்கள், பெருத்த தண்டுகளோடு கூடிய விளாமரங்கள், கோவிலுக்குப் போகவென்று வெட்டப்பட்டு வெள்ளையடிக்கப்பட்ட படிக்கட்டுகள் என்று மலை நான் நினைத்ததை விடவும் அழகாகவே இருந்தது, கொஞ்ச தூரம் கடந்தவுடன் அடிவாரத்தின் தரையிலிருந்து பாறைகளில் பரவிக் கிடந்த விளாங்காய்களும் , சிவந்த மாமரக் கொழுந்துகளும் மாலையின் மஞ்சள் வெய்யிலில் பட்டு கண்ணைக் கவர்ந்தது, ராஜா, பாறை இடுக்கொன்றில் ஏறி மறுபுறத்தில் தொங்கிக் கொண்டிருந்த விளாங்காய்களில் இரண்டைப் பறித்துக் கைகளில் கொடுத்தான், வெள்ளை ஓடுகளோடு கனத்துக் கிடந்த விளாங்காயை முதல் முறையாகப் பார்த்து வியந்தவாறு, "எப்படித் திங்குறது ராஜா" என்றேன், "உடைச்சு உள்ள இருக்குறதச் சாப்பிடனும்டா" என்றான், விளாங்காய் தின்பதை விடவும் மலைக்கோவிலுக்குப் போய் விட வேண்டும், தேன்கனிச் சுனையைப் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை அதிகம் இருந்ததால் சட்டையில் முடிச்சிட்டு விளாங்காயை வயிற்றுக்குள் பதுக்கியவாறு மேலே ஏறத் துவங்கினோம்.

இருட்டும் மெதுவாய் எங்களைத் துரத்திக் கொண்டே படி ஏறுவதை உணராமல், பாதி மலைக்கு வந்தாயிற்று, பாதி மலையில் வெள்ளை நிறத்தில் காவிக் கோடுகள் வரையப்பட்ட மண்டபம் ஒன்று கண்ணில் பட்டது, மண்டபத்தில் இரண்டு மூன்று தலைகள் வேறு தெரியவும் கொஞ்சம் பயம் வந்தது, முன்னேறிய எங்கள் பயணம் காத்து வளத்த கிழவி கேட்ட அதே கேள்வியில் தடைபட்டது, "யாரு வீட்டுப் பயலுகடா" "இந்நேரத்துல எங்க போறீக?" குரலில் கொஞ்சம் அதட்டல் கூடுதலாய் இருந்தது, ராஜா நாங்கள் மாங்கொம்பு ஐயாவின் பேரன்கள் என்றும், மலைக் கோவிலுக்குப் போவதாகவும் அவர்களிடம் சொன்னான், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு மேலேறும் பாதையை அடைத்தபடி நிற்க, தொங்கு மீசை வைத்திருந்த ஒருவன் "கோயில்ல காப்புக் கட்டியிருக்கு, உங்க ஆளுக யாரும் மேலே போகக் கூடாது," என்று எங்களைத் திருப்பி அனுப்புவதில் மும்முரமானான், எனக்கு ஒரு பக்கம் மலைக் கோவிலைப் பார்க்க முடியாத கோபம், ஒரு பக்கம் உங்க ஆளுகன்னா யாரு என்கிற குழப்பம் , "போயிட்டு ஒடனே ஓடியாந்துருவம்னே" என்று ராஜா தொங்கு மீசைக்காரனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான், தொங்கு மீசைக்காரன் ராஜாவின் கெஞ்சலுக்கு மசிவதாயில்லை, முடிவில் மெதுவாய் என்னைப் பார்த்தவாறு இறங்கச் சொல்லிச் சைகை காட்டினான் ராஜா, நானும் பின்னாலே இறங்க ஆரம்பித்தேன்.

இறங்கும் போதெல்லாம் உங்க ஆளுகன்னா யாரு என்ற கேள்வி எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது, ராஜாவிடம் கேட்டுப் பார்த்தேன், ஒன்றும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாய் கீழே இறங்குவதில் மும்மரமாய் இருந்தான். திரும்ப நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள் இருட்டி விட்டிருந்தது, ஊருக்குள் நுழையும் போதே வள்ளி பெரியம்மா "இந்தப் பயலுக ரெண்டு பேரும் மலையடியில் இருந்து வாறாங்கே" என்று அக்காவிடம் சொல்லியது அனேகமாக சித்தப்பாவுக்குக் கேட்டிருக்கும், வீட்டு வாசலில் நின்றிருந்த வரவேற்புக் குழுவில் தங்கமணி சித்தப்பா சுள்ளிக் கம்போடு நின்று கொண்டிருந்தார், கிடைத்த அடிகளை வாங்கிக் கொண்டு வருடிக் கொடுக்கத் தயாராக இருந்த மடிகளையும் தேடி அடைந்து கொண்டோம் நானும் ராஜாவும்.
தூங்கப் போவதற்கு முன்னாள் தொங்கு மீசைக்காரன் சொன்ன "உங்க ஆளுக" யாரென்று தெரிந்து கொள்ள ஆவல் வந்தது, பக்கத்தில் படுத்திருந்த அப்பத்தாவிடம் "உங்க ஆளுகன்னா யாரு அப்பத்தா," என்று கேட்டதற்கு அப்பத்தாவிடம் இருந்து பதில் இல்லை. மலைக்கோவிலுக்குப் போக முடியாத ஏமாற்றமும், நீண்ட தொலைவு நடந்த களைப்பும் சேர்ந்து கொள்ள ராஜா உறங்கிப் போனான்.

3

நான் மெல்ல எழுந்து மொட்டை மாடிக்கு வந்து நின்று மலையை ஒருவித ஏக்கத்தோடு பார்த்தேன், எல்லா ஆட்களுக்கும் பொதுவான நிலவின் ஒளியில் மாங்கொம்பு மலை இன்னும் அழகாய் என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, எப்படியும் ஒருநாள் மலைக்கோவிலுக்குப் போய் விட வேண்டும் என்கிற ஆசையை நெஞ்சில் நிறைத்தபடி மாடிப்படிகளில் இறங்கினேன், கண்களில் இருந்து மெல்ல மறைகிறது எங்க ஆட்களை மட்டும் மேலே ஏற்ற முடியாத மாங்கொம்பு மலை.

*@@@@@@@@@*

(இது என்னுடைய முதல் சிறுகதை, தொடர்ச்சியாக எழுதுவதற்கும், படைப்பிலக்கிய வரிசைகளில் உள் நுழைவதற்கும் ஒரு தேர்வாகவே இந்தச் சிறுகதை எழுதப்பட்டது, சிறுகதைகள் குறும்படங்களைப் போல உணர்வுகளை அழகாகச் சொல்லி விட்டு விடைபெற்றாலும் வாசிப்பவரின் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்குமேயானால், படைப்பு முழுமை பெற்று விடுகிறது, வாழ்வின் இழந்த தருணங்கள், உறவுகளின் நெருக்கம், விழாக்களின் தன்மை, இயற்கையின் மீதான நமது காதல், சாதீய நெருக்கடிகள் உருவாக்கும் உளவியல் எனப் பல்வேறு கூறுகளைச் சொல்ல முயலும் ஒரு சின்னக் கதை. உங்கள் பின்னூட்டங்களை, விமர்சனங்களை எதிர் நோக்குகிறேன்.)

Advertisements

Responses

 1. நண்பா, அப்படியே ஊருக்குப் போய் வந்த மாதிரி இருக்கு, இது மாதிரி நிறைய நிறைய எழுதுங்க, மனசு நிறைஞ்சு இருக்கும்.

 2. The story just impressed my Memories like anything, LOve your Writing, Keep writing Kudos to you.

  Jincy
  Paris

 3. சிறுகதை இலக்கியத்திற்குள் காலடி வைத்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள், வழக்கம் போலவே முதல் படியில் சாதியைக் கிழித்திருக்கிறீர்கள், உங்கள் தமிழ்ப் பணிகள் தொடரட்டும்.

  உங்கள் தோழன்
  ராஜன் சந்திரசேகர்

 4. வாழ்த்துக்கள் அண்ணா. சிறப்பான பழைய நினைவுகளைத் தூண்டும் கதை.

 5. நண்பா, அப்படியே ஊருக்குப் போய் வந்த மாதிரி இருக்கு, இது மாதிரி நிறைய நிறைய எழுதுங்க, மனசு நிறைஞ்சு இருக்கும்.

 6. இது என்ன‌ அந்த‌ இட‌ம். ப‌ழைய‌ கால‌த்து ப‌ழ‌ங்க‌தை. ப‌டி. ப‌டி. முன்னேறு. ச‌மூக‌த்தை, உன் சாதி க‌ட‌ந்த‌ சிந்த‌னையை உன‌து குறிக்கோளில் வை. யாருடைய‌ ப‌ச்சாத்த‌மும், இர‌க்க‌மும் உன‌க்கு வேண்டாம். உன்னை ம‌லையேர‌ த‌டுத்த‌வ‌ன், பாம‌ர‌ன், ஏவ‌லாள், அவ‌னும் கூலிக்கார‌ந்தான். அவ‌னை அவ்வாறு சொல்ல் வைத்த‌வ‌ன், சொல்வ‌து ஒரு பார்ப்ப‌னிய‌ த‌த்துவ‌ம். அதை புரிந்து கொல். உண்மையான‌ எதிரி மேலே ம‌த‌ம் என்ற‌ பெய‌ரில் இருக்கிறான். அவ‌னை, அத‌ன் த‌ல‌வைனை, அந்த‌ ச‌மூக‌த்தை அடையாள்ங்க‌ண்டு, அம்ப‌ல‌ ப‌டுத்து, அவ‌னை எதிர்த்து போர்க்க‌ள‌ம் புகு. சும்மா உன்ன மாதிரி கூலிக்கார‌னை குறை சொல்ல‌தே, பாதை மாறி செல்ல‌தே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: