கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 19, 2010

இலக்கியத் தேடலும், அகப்படும் கோமாளிகளும்

(முன்குறிப்பு : "ஞா", "ஜெ" மற்றும் "சா" வில் துவங்கும் எந்த இலக்கியவாதியின் பெயரும் இந்தக் கட்டுரைக்குப் பொருந்தாது)

 untitled
தற்கால இலக்கியம் அல்லது இலக்கியவாதிகள் குறித்த தேடலின் போது பல தவிர்க்கவே இயலாத விபத்துக்கள் நிகழ்கிறது, பொதுவாக இந்த விபத்துகளில் காயம் அடைவது வாசகராகவே இருக்கும், "அது என்ன இலக்கியம் குறித்த தேடல் என்கிறீர்களா? "மொழியின் மேலான பல வண்ணங்களைக் கண்டடைதல்" என்பதைத் தான் இலக்கியம் குறித்த தேடல் என்று வரையறை செய்து கொள்கிறேன் நான், என்னுடைய எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் பிறந்ததில் இருந்து, எனக்குள் இந்தத் தேடல் தன்னுடைய பயணத்தைத் துவக்கியது என்று சொல்லலாம்.

 
சமகாலத்தில் எழுதுகிற ஆளுமைகளை, அவர்களின் படைப்புகளைக் கடக்கும் பொழுதுகளில் தான் இத்தகைய விபத்துக்கள் அதிகமாய் நிகழ்கிறது, அதுவும் மொழி, இணையத்தின் மூலம் பரவலாக்கப்பட்டதில் இருந்து இத்தகைய விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது, இலக்கியம் பொருளில் இருந்து பொருளுக்கு மாறி விட்டதோ என்கிற ஒரு நெருடல் இந்தப் பயணம் எங்கும் தனது ஐயப்பாடுகளை அள்ளி எறிகிறது, நூல்களைத் தேடி அடைந்து வகைப்படுத்தி இலக்கிய வடிவங்களை அடையாளம் காணுகிற ஒரு எளிமையான இலக்கியத் தேடல் இன்றைய நமது இளைஞர்களுக்கு வாய்க்கவில்லை, தேடல் இயந்திரங்கள் இன்றைய இளைஞர்களுக்கான முதல் இலக்கியத்தை அவற்றின் வசதிக்கு ஏற்ப வாரி வழங்குகின்றன அல்லது அறிமுகம் செய்கின்றன, இந்த அறிமுகங்களில் "வக்காள ஓளி" "கோத்தா" போன்ற அரிய இலக்கியச் சொல்லாடல்களை கையாளவும், மதுவைப்,பெண்களைக், கடவுளரை நேசிப்பதை இலக்கியவாதியின் அடையாளம் என்று பொருள் கொள்ளவுமாய் ஏராளமான இலக்கிய மேதைகள் நிரம்பிக் கிடக்கிறார்கள், மேலும், இவர்கள் தங்களை மொழியின் தூதுவர்களாகக் கருதி எழுதிக் குவிக்கிறார்கள்.

literature1

தங்கள் படைப்புகளை இலக்கியம் என்று உறுதிப்படுத்தவே இலக்கியங்களை விடவும் அதிகப் பக்கங்கள் எழுதும் இத்தகைய இலக்கிய மேதைகளிடம் சிக்கிக் கொண்ட தமிழ் இலக்கிய வெளியை மீட்டெடுக்கும், ஒரு இலக்கிய அரசியல் இயக்கத்தை மேல் குறிப்பிட்ட இலக்கியவாதிகள் யாரேனும் துவங்காமல் இருந்தால், அதனைத் துவக்குவது பற்றி நாம் இப்போது சிந்திக்கத் துவங்கலாம், பூச்செண்டுகளைப் பற்றியும், கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது பற்றியுமான தங்கள் இலக்கியங்களை இன்றைய இலக்கியவாதிகள் இலக்கிய மேடைகளிலும், வார இதழ்களிலும் எழுதிக் குவிக்கிறார்கள் அல்லது மேடைகளில் முழங்குகிறார்கள், இந்த முழக்கங்களுக்கு எதிரான தங்கள் இலக்கியக் கட்டுரைகளை தமிழ் இலக்கியத்தின் அடுத்த தலைமுறை வரிசையில் அடுக்கி வைப்பதற்காக இணையத்தில் பலர் அழுது வடிகிறார்கள். படைத்த இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கும் போது படைப்பாளியின் உடற்கூறுகளை விமர்சனம் செய்யும் தரமான இலக்கிய தாகத்தை மேடைகளில் வெளிப்படுத்தும் மேதாவிகளைச் சுற்றி வரும் நமது ஊடகங்களை இலக்கியத் தேடலின் சாளரங்கள் என்பதா அல்லது முற்றுப்புள்ளி என்பதா??

istock_writing

சக எழுத்தாளரைக் "குருவி மண்டையர்" என்று சொல்கிற அறிவிற் சிறந்த இலக்கியவாதிகள் சமூக நீதிக்குப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றிக் காழ்ப்புணர்வு இன்றி எழுதி இருப்பார்கள் என்று நம்புவதற்கு இன்னும் பல வாசகர்கள் காத்துக் கிடக்கிறார்கள், இவர்களின் இலக்கியங்களையும் கடந்தே நமக்கான இலக்கியங்களை நாம் அடைய வேண்டியிருக்கிறது, கலப்புகள் நிரம்பிய, மொழி வடிவங்களைச் சிதைக்கிற மிகப்பெரிய ஆபத்துகளைக் கடந்தும், இலக்கிய அரசியல் நடத்தும் இன்றைய எழுத்து வணிகர்களின் பரப்புகளைக் கடந்துமாய்த் தொடர்ந்து மொழியின் வண்ணங்களை நமக்குள் அள்ளித் தெளிக்கும் இலக்கியங்களும், இலக்கியவாதிகளும் தென்படுவதே நமது பயணத்தின் வசந்த காலம்.

தன்னைத் தானே இலக்கியவாதி என்று ஒரு மேடையிலும் முழங்காத "பிரமிளின் கவிதைகளைப் போலவும்", இலக்கிய வணிகம் செய்யாத "புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் போலவும்" தமிழ் இலக்கியத்தின் கண்கள் காலத்தின் மீது ஒளிந்து கொண்டு இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் தேடிக் கண்டுபிடித்தவாறு நம்மோடு பயணிக்கிறது, ஒரு மொழியின் இலக்கியத்தை காலம் தன் போக்கில் தேர்வு செய்து அடுத்த தலைமுறைக்கு வழங்கும் கடமையை மிகச் சரியாகவே செய்கிறது,
banned

கற்பனை வெளிகளை அகலப்படுத்துகிற, மொழியின் தன்மையை, அதன் ஆளுமையைப் புதிய தளங்களில் படம் பிடிக்கிற இலக்கியங்களை, இலக்கியக் கோமாளிகளின் விளம்பர இலக்கியங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் தேடலைத் தான் இலக்கியத் தேடல் என்று நான் முடிவு செய்து கொள்கிறேன்.

இலக்கியம் படைப்பாளியின் அடையாளங்கள் இல்லாதவையாகவும், தன் மக்களுக்கான மகிழ்வை, வலிகளைப் பகிரக் கூடியதாகவும், பண்பாட்டை வளப்படுத்தி, வாசிப்பவனுக்கு நம்பிக்கையும், மன வலிமையையும் தரும் வகையில் பயணப்படும் போது வரலாறு தன்னையும் அறியாமல் தனது பக்கங்களில் இத்தகைய இலக்கியங்களை நிரப்பிக் கொள்கிறது, அதுவரையில், பெருமழை வரும் வரையில் படிந்திருக்கும் தூசிகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள அவசியம் இல்லை என்றே நானும், நீங்களும் கருத வேண்டும்.

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: