கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 26, 2010

டீலா? நோ டீலா?

child-watching-television-silhouette

கடந்த நூற்றாண்டுகளின் மிக அறிய கண்டுபிடிப்பாகவும், பல்வேறு நலன்களைக் கொடுக்கும் ஒரு ஊடகமாகவும் வர்ணிக்கப்படுகிற தொலைக்காட்சியைக் கண்டாலே எனக்கு ஒருவிதமான நடுக்கமும், மன அழுத்தமும் உருவாகி விடுகிறது, தமிழ்த் தொலைக்காட்சிகள் முற்றிலுமாக திரைப்படங்கள் அல்லது திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள் என்ற வரையறைக்குள் வந்து நெடுங்காலமாகிறது, இப்போது செய்திகளின் போதும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்ற பெயரில் தங்கள் திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் செய்யும் கொடுமையெல்லாம் நிகழ்கிறது, மிக அரிதாகவே தொலைக்காட்சியின் உண்மையான பயனை மக்களுக்கு அளிக்கும் நிகழ்வுகள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் இடம் பெறுகிறது.

சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த தேசத்தில் அதே சூதாட்டத்தை பெட்டிகளுக்குள் அடைத்து டீலா? நோ டீலா? என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு தொலைக்காட்சி. இதில் என்ன சூதாட்டம் என்கிறீர்களா? இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் தெரிந்தே அடிக்கப்படும் கொள்ளை ஒன்று அடங்கி இருக்கிறது, தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒவ்வொரு குறுஞ்செய்தியின் பின்னாலும் உழைக்கும் மக்களின் பொருள் சுரண்டப்படுகிறது, தனது பொருளீட்டலில் ஒரு பெரும்பகுதியை நடுத்தர மற்றும் உழைக்கும் மக்கள் இத்தகைய நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் நடத்தப்படும் ஏமாற்றுப் போட்டிகளில் தொலைத்து விடுகிறார்கள், ஏறத்தாழ இது வீட்டுக்குள் நுழைந்து இனிக்க இனிக்கப் பேசி உங்கள் பொருளைப் பிடுங்கும் முதலாளித்துவக் கொள்ளை என்பதை விளங்க வைக்க நானும் நீங்களும் பொருளாதாரம் எல்லாம் படித்திருக்க வேண்டியதில்லை.

child_tv_watch_Medium

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குப் பயன் தருகிற எந்த ஒரு நிகழ்வையும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகளில் நான் பார்த்ததில்லை, கல்வி கற்கிற  நமது  மாணவர்களுக்குப் பயன் தருகிற அவர்கள் பாடங்கள் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகளில் நான் பார்த்ததில்லை, தொலைக்காட்சிகளை மட்டும் குற்றம் சாட்டுவது என்னுடைய நோக்கம் அல்ல, இதற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிற சமூக மன நிலையைத் தான் இதற்குக் காரணமாகக் கொள்ள முடியும். பார்வையாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படும் "T R P"- (Target rating Point) புள்ளிகள் தான் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையையும், நிகழ்வையும் தீர்வு செய்கிற காரணி, நாம் எத்தகைய நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறோமோ அதே மாதிரியான  நிகழ்வுகளை மட்டுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரிக்க விரும்புகின்றன, விளம்பரதாரர்கள் அத்தகைய நிகழ்வுகளுக்கு மட்டுமே தங்கள் விளம்பரங்களைக் கொடுக்க இசைகிறார்கள். அப்படியானால் பயன் தரும் நிகழ்வுகளை நாம் பார்க்க முன்வருவதில்லை, தொலைக்காட்சிகள் வழங்குவதில்லை என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

girls%20watch%20tv%20i%20stock

நமது சமூகம் திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளையே அதிகம் பார்க்க விரும்புகிறது, திரைப்பட நடிகர்களின் அல்லது நடிகைகளின் நடவடிக்கைகளும், அறிக்கை அக்கப்போர்களும், மேடைப் பேச்சுக்களும் நமது சமூகத்தின் மிக இன்றியமையாத செய்திகளாக மாறி விட்டது, தொடர்ந்து நாம் திரைப்பட நடிகர்களை மையமாக வைத்தே இயங்கிக் கொண்டிருக்கிறோம். நமது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இவற்றையே காண்பதற்கு நாம் விரும்புகிறோம். ஜெயராமைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி முடித்த கையோடு அஜீத்தின் அடாவடியை எதிர்க்கும் போராட்டங்களை எதிர் நோக்கி இருக்கிறோம், அதற்கு ரஜினியின் கைதட்டலையும் துணைக்கு அழைக்கிறோம், நமக்கான செய்திகளை மழுங்கடித்து, நாம் அரசியல் வழியாக வீறு கொள்ள வேண்டிய பல்வேறு காரணிகளைப் புறம் தள்ளி இப்படியான நிகழ்வுகளில் மிகுந்த கவனம் செலுத்தி நமது ஆற்றலை வீணடிக்கிறோம்.

ஒவ்வொரு நெடுந்தொடரின் துவக்கத்திலும் மிகப்பெரிய சமூக அழிவிற்குப் பின்னால் வீதிகளுக்குத் துரத்தப்பட்டிருக்கும் நமது எண்ணற்ற குழந்தைகளை நாம் மறந்து விட்டோம், ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் முடிவிலும்  ஈழத் தமிழ் பேசிக்கொண்டே யாழின் சாலைகளில் பிச்சை எடுக்கும் நமது இனத்தின் இளங்குருத்துக்களை நாம் கை கழுவி விட்டோம். காது கிழியப் பேசும் யாரும் இந்தக் குழந்தைகளைப் பற்றிய கவலை கொண்டதாகத் தெரியவில்லை. எமது தேசிய இனம், எமது மக்கள் என்று  முழக்கம் இடும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கை பற்றி வாய் திறப்பதே இல்லை. நாமும் யாரையும் வாய் திறக்கச் சொல்லிக் கேட்பதில்லை, திரைப்படங்களும், தொலைக்காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக நமது மன நுட்பங்களை, அழகியல் உணர்வுகளை, குடும்ப உறவுகளை, அரசியல் விழிப்புணர்வை, பண்பாட்டு விழாக்களை, அரிய கலை வடிவங்களை விழுங்கி ஏப்பம் விட்டவாறு நமது வரவேற்பறைகளில் ஏதோ ஒரு நெடுந்தொடரை ஒளிபரப்பிக் கொண்டு ஒய்யாரமாக வீற்றிருக்கிறது. குற்ற உணர்வின்றி குடும்பம் முழுவதுமாய்க் கூடிக் களிக்கிறது.

Pakistan-Daily-Life_dc71_photo

நமது தமிழ்த் தொலைக்காட்சிகள் தான் இப்படி என்று ஆங்கிலச் செய்தி ஊடகங்களை பார்க்கப் போனால், நிலைமை இன்னும் மோசம், ஆங்கிலச் செய்தி  ஊடகங்கள் தொடர்ந்து பாகிஸ்தான் என்கிற அண்டை நாட்டுக்கு எதிரான அனைத்து செய்திகளையும் தொடர்ந்து இரவு பகலாக ஒளிபரப்புகின்றன, இடைப்பட்ட நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டின் விடுபட்ட புள்ளிவிவரங்களை வழங்குகின்றன, ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மனப்போக்கில் பாகிஸ்தான் எதிர்ப்பு என்பது உள்ளூரில் வசிக்கும் இஸ்லாமிய மக்களையும் சேர்த்துத் தான் போலிருக்கிறது, ஊடகங்களின் இத்தகைய போக்கினால் இந்தத் தலைமுறை இளையவர்களிடம் உளவியல் வழியான சிதைவு உருவாக்கப்பட்டிருக்கிறது, இஸ்லாமிய மக்கள் அனைவரும் குற்றவாளிகள் போன்ற ஒரு மாயையை இந்த ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன, ஒவ்வொரு சகோதர இஸ்லாமியக் குடி மகனும் உளவியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறான். இதற்குப் பின்னால் இயங்குகிற ஆற்றல் மையங்களை ஆய்வு செய்யும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லையென்றாலும், இவற்றுக்குப் பின்னால் சில ஆற்றல் மையங்கள் உள்ளன என்பதை அறியும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். காவி அணிந்த சங்கராச்சாரிகள் கொலை செய்யும் ஒரு தேசத்தில் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய முத்திரை குத்தும் இத்தகைய ஊடகங்களை எதிர் கொள்வது ஒரு கடினமான சவால்.

muslim_kids_praying

நம்மைப் போலவே எண்ணற்ற கனவுகளோடு வாழ்க்கைப் பயணம் செய்யும் ஒரு தேசத்தின் மக்களை ஒட்டுமொத்தமாகத் தீவிரவாதிகளாக நமது ஊடகங்கள் கயிறு திரித்துக் கொண்டே உணர்வு வணிகம் செய்து வருகின்றன, உழுது பயிர் செய்யும் எண்ணற்ற விவசாயிகளும், அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் எண்ணற்ற ஏழைகளும், முற்றங்களில் சிரித்து விளையாடும் எண்ணற்ற குழந்தைகளும் தான் ஒரு தேசத்தின் உண்மையான உள்ளடக்கம், அவர்களின் மீது அன்பு செலுத்தும் பயிற்சியை நமது ஊடகங்கள் நமக்கு வழங்கவில்லை, அந்தப் பயிற்சியை நாம் விரும்புவதுமில்லை.ஒரு இந்தியனாக நீங்கள்  தொடர்ந்து ஆங்கிலச் செய்தி ஊடகங்களை பார்க்கத் துவங்கினால், ஒன்று நீங்கள் ஒரு பாகிஸ்தான் எதிர்ப்பு தேசியவாதியாக மாறி விடுவீர்கள், அல்லது உங்கள் தொலைக்காட்சியை விற்று விடுவீர்கள்.

Pakistan-Daily-Life_8c11_photo

ஊடகங்களைக் கையாள்வதும், பயன்படுத்துவதும் எப்படி என்று நம் குழந்தைகளுக்கு யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை????

*********

Advertisements

Responses

  1. \\ஒரு இந்தியனாக நீங்கள் தொடர்ந்து ஆங்கிலச் செய்தி ஊடகங்களை பார்க்கத் துவங்கினால், ஒன்று நீங்கள் ஒரு பாகிஸ்தான் எதிர்ப்பு தேசியவாதியாக மாறி விடுவீர்கள், அல்லது உங்கள் தொலைக்காட்சியை விற்று விடுவீர்கள்\\

    உண்மைதான் நண்பரே. நேற்றுக்கூட உலக ஹாக்கிபோட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது என்னமோ பைனலில் இந்தியா வென்று விட்டது போல இங்கே ஊடகங்களால் காண்பிக்கப்படுகிறது. இதில் ஜனாதிபதியின் வாழ்த்துரை மற்றும் பொற்கிழி வேறு. இப்போது தெரிகிறதா யார் பிரினையை தூண்டுபவர்கள் என்று… நல்ல பதிவு.. உறைக்கவேண்டியவர்களுக்கு உறைக்கவேண்டுமே..

  2. உண்மைதான்..அறிவழகன்..இந்தச்சூழல் என்று மாறுமோ என்று பலமுறை நினைப்பதுண்டு.நம்மைப்போன்றோருக்கு இப்போது வடிகாலாக முகப்புத்தகம் உத்வுகிறது…ஒரு வேளை வருங்காலத்தில் இந்நிலை படிப்படியாக குறையும் எனக் கருதுகிறேன்.அன்றுதான் தமிழ் இளம் பிஞ்சுகளின் இதயம் வெம்பாமல் இருக்கும்.உங்களின் இந்த அரிய கட்டுரை முகப்புத்தகத்தில் மட்டும் முடங்கிவிடாமல்…எங்கும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என விழைகிறேன்.

  3. தங்களின் கூற்றுகள் உண்மைதான். ஆனால் இதே முறைகளில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் துவேஷத்தையும், மத உணர்வுகளையும் அதிகப்படுத்தி வருவதனை குறிக்கோளாகவே கொண்டிருப்பதனை அறிவீர்களா நண்பரே??????.

  4. \\ஒரு இந்தியனாக நீங்கள் தொடர்ந்து ஆங்கிலச் செய்தி ஊடகங்களை பார்க்கத் துவங்கினால், ஒன்று நீங்கள் ஒரு பாகிஸ்தான் எதிர்ப்பு தேசியவாதியாக மாறி விடுவீர்கள், அல்லது உங்கள் தொலைக்காட்சியை விற்று விடுவீர்கள்\\
    இதைதானே குறிப்பாக வட இந்திய ஊடகங்கள் செய்கின்றன்.இந்தியா எனும் போலியான ஏற்பாடு விரைவில் உடையும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: