கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 13, 2010

இலக்கியம் VS தலித் இலக்கியம்

candle "இலக்கியம் மனித நாகரீகத்தைச் சுமந்து செல்லும் ஊர்தி" என்று  வரலாற்று ஆய்வாளரும், இலக்கியவாதியுமான பார்பரா டக்மன் கூறுவார், இலக்கியம் மனிதக் கூட்டத்தின் மொழியையும், வாழ்வையும் எதிரொலிக்கும் கண்ணாடி, அழிந்து போன பல மனித இனங்களின் வாழ்க்கை முறைகளை, அதன் பண்புகளை இனம் கண்டு கொள்வதற்கு இலக்கியம் துணை புரிந்து புவிப்பந்தில் அந்த மனிதக் கூட்டத்தின் இருப்பைப்  பறை சாற்றி இருக்கிறது, உலகெங்கிலும் கட்டிடக் கலை ஒரு மனிதக் கூட்டத்தின் புற வெளிகளை அகழ்ந்து ஆய்ந்து அறிந்து கொள்ள எப்படி உதவியதோ அதைப் போலவே  மாண்டு மடிந்து போன பல்வேறு மனித இனக் குழுக்களை, இனங்களை, அவர்களின் உணர்வுகளை, அக வெளிகளைக் கண்டறிய இலக்கியங்கள் காலவெளியில் தொலைந்து போன மனிதர்களைக் கண்டறியும் முகவரியாக இருந்தன.இருக்கின்றன.

மொழியை மட்டுமன்றி இலக்கியங்கள், வாழ்வியலையும் தனக்குள் புதைத்து அடைகாதுத்  தலைமுறைகளைத் தாண்டி எடுத்துச் செல்வதால் இலக்கியங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவது மட்டுமன்றி சமூகத்தின் தேவையாகவும் மாறி விட்டிருக்கிறது. இந்த நிலையில் தலித் இலக்கியம் குறித்த புரிதல் மற்றும் அதற்கான தேவை குறித்த அறிவு இன்றைய புதிய தலைமுறை இலக்கியவாதிகளுக்கு அவசியமாகிறது, அதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமுமாகிறது.

இலக்கியத்திற்கும், தலித் இலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? இலக்கியத்தை இவ்வாறு கூறுகள் போடுவது எந்த வகையில் பயன் தரும், அல்லது பயன் தந்தது? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்குள் எழுந்திருந்தால் வாருங்கள் நீங்களும் இலக்கியவாதிதான், தொடர்ந்து பயணிப்போம்.
Literature_1_Large_by_james119

இலக்கியம் ஒரு மனிதனின் வாழ்க்கை நடைமுறையாகவும், நடைமுறை தழுவிய அரைப் புனைவாகவும், புறச்சூழல்கள் உருவாக்கிய தாக்கங்களின் அடிப்படையில் முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட புனைவாகவும் அல்லது இவை எல்லாம் கலந்த கலவையாகவும் இருக்க முடியும், இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளும் இத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருக்க முடியும். ஆனால் தலித் இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் வாழ்க்கை நெறியாகவும், அழுகுரலாகவும், மகிழ்ச்சியின் போது வெடித்துக் கிளம்பும் ஒலியாகவும், நிலமும் மனித உடலும் கொண்ட உறவாகவும், முழுக்க முழுக்க வாழ்க்கை அனுபவங்களால் வரையப்படும் குறியீடு என்பது தான் வேறுபாடு. என்னால் தலித் இலக்கியத்தை இன்னும் எளிமையாக இப்படிப் புரிந்து கொள்ள முடியும், "மைய இலக்கியம்", "பொது இலக்கியம்", இயற்கையோடு இயைந்து பேரண்டம் முழுதும் பரவிக் கிடக்கிற "உழைப்பின் இலக்கியம்". உழைப்பையும், வியர்வையையும் மூலதனமாய்க் கொண்டு பொழுது போக்கிற்காக இல்லாமல் தன்னியல்பாய் வெளிப்படும் இத்தகைய அழுகுரலோ,மகிழ்ச்சியோ தான் உண்மையான நாகரீகத்தைச் சுமந்து செல்லும் ஊர்தியாக இருக்க முடியுமே தவிர புனைவுகளால்  அடுக்கிக் கட்டப்பட்ட வரையரைகளால் அல்ல. ஆகவே தலித் இலக்கியம் என்கிற இந்தக் கோட்பாடு மைய இலக்கியமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டுமே தவிர இலக்கியத்தின் ஒரு பிரிவாக அல்ல, ஏனைய புனைவுகள் வேண்டுமானால் இந்த மைய இலக்கியத்தின் பிரிவுகளாகப் புரிந்து கொள்ளப்படலாம். ஒடுக்கப்பட்ட தளங்களில் இருந்து எழுத வரும் இளையோர் அனைவரும் தங்களின் எழுத்தை மைய இலக்கியமாகவே கருத வேண்டுமே ஒழிய தலித் இலக்கியம் என்ற வரையறைக்குள் அடைபட்டு நிழலாய்த் தொடர்ந்து வரும் அடையாள அணிவகுப்பில் கரைந்து போய்விடக் கூடாது.

மொழியின் சாரமும், மனித மனத்தின் அகவெளியும் இணைந்து செயல்படுகிற இலக்கியத்தின் வடிவங்கள் காலத்தின் காப்புரைக்குள் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது, ஒன்றோடொன்று இணைந்தே பயணிக்கும் இவ்விரண்டில் ஒன்றில் குறைபாடு இருப்பினும் அது இலக்கிய வெளிகளில் உட்புக முடியாமல் நீர்த்துப் போய் விடும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது, ஆகவே மொழியின் படர் தளத்தில் காலூன்றும் கலையைக் கற்றுக் கொண்ட பிறகு மைய இலக்கியத்தின் மனித மன அகவெளியை அடைவது சிறப்பானதாக இருக்கக் கூடும். தலித் இலக்கியம் என்று சொல்லப்படுகிற இந்த மைய இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும் குறித்த எண்ணற்ற கேள்விகள் இலக்கிய வெளிகளில் விடைகள் இன்றி உலவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் மொழியின் பாதையில் இத்தகைய மைய இலக்கியம் ஊடகங்களில் மறுதலிக்கப்பட்ட அல்லது முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட இலக்கிய வகையாகவே இருப்பதற்கான காரணம் மிக எளிமையானது, வர்க்க முரண்களாலும், நில அடிமை முறைமைகளாலும் சிதைக்கப்பட்ட உழைக்கும் மக்களின் பொருளாதாரமும், அவர்களின் முடக்கப்பட்ட வாழ்வியலும் தான் அத்தகைய புறக்கணிப்பிற்கு அடிப்படை. இட ஒதுக்கீட்டைப் பொதுமைப் படுத்தும் அல்லது திறமைகளின் இழப்பாகக் கருதும் அதே பார்ப்பன அரசியல் தன்மை இங்கு இலக்கியத்திற்கும் பொருந்தும்.

pic37_dalit_madonna

முழு நேரமாகவே நெகிழ்வாக அமர்ந்து புனையப்படுகிற இலக்கிய வகைகள் ஊடக வெளிகளில் ஆளுமை செலுத்துவதும், வாழ்வின் போக்கில் அழுத்தப்படுகிற ஏற்ற, தாழ்வுகள் அதன் தாக்கங்கள் குறித்த உணர்வுக் குவியல்கள் பதிவு செய்யப்படாமல் போவதும் இத்தகைய பொருளாதார வாழ்வியல் சார்ந்ததாகவே இருக்கிறது, குரல்வளை நெரிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியம் இன்றைய காலச் சூழலில் கூட ஊடகங்களில் முனகலாக வெளிப்படுவதை ஒடுக்கும் வர்க்கத்தின் வெற்றியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் தோல்வியாகவுமே நம்மால் புரிந்து கொள்ள முடியும், இருப்பினும், இத்தகைய தோல்விகளில் இருந்து மைய இலக்கியம் பாடங்களைக் கற்றுக் கொள்வதே இல்லையோ என்கிற அச்சம் நிலவுவதும் உண்மை, பெரும்பான்மையாக வாழும் சமூகக் குழுக்களின் ஒருங்கிணைந்த குரல், அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் சிதைந்து காணாமல் போவதும் இதற்கான காரணியாக இருக்கலாம்.

தமிழகத்தில் தலித் இலக்கியம், தலித் அரசியல் என்று சொல்லப்படுகிற மைய இலக்கியமும், மைய அரசியலும் எண்பதுகளின் இறுதியில் துவங்கி இன்று வரை கடந்து வந்த பாதையில் துவக்கத்தில் இருந்த வீச்சு திசை மாறி, ஒரு மாயையான இலக்கிய மற்றும் அரசியல் வெளிகளுக்குள் தஞ்சம் புகுந்து கிடப்பதை மைய இலக்கியத்தின் தந்தையர் என்றும் தலித் அரசியலின் தாய் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்கிற  எவரும் கண்டு கொள்வது போலத் தெரியவில்லை, தலித் மக்களின் அரசியல் என்று சொல்லப்படுகிற மைய அரசியல் திராவிடக் கட்சிகளின் முதுகில் அமர்வதையே குறிக்கோளாகக் கொண்டு விட்டது, தலித் மக்களின் இலக்கியம் என்று சொல்லப்படுகிற மைய இலக்கியம் வெகுமக்களின் ஊடகங்கள் என்று போலியாக நம்பப்படுகிற சில இலக்கிய வெளிகளை நோக்கியே பயணம் செய்வது வரலாற்றுப் பிழை.

dalit

தலித் இலக்கியம் என்று குறியீடு செய்யப்படும் இலக்கியம் இன்றைய நவீன சமூகக் கட்டமைப்பில் கீழ்க்கண்ட  தாக்கங்களை உருவாக்கி இருக்க வேண்டும், அவை முறையே:

முதலாவதாக தலித் இலக்கியங்கள் என்று குறியீடு செய்யப்படும் மைய இலக்கியங்கள் தங்கள் முழுப் பரிமாணத்தையும், இலக்கிய வீச்சின்  முழு ஆற்றலையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கையாளப்பட்ட, படுகிற வன்முறை மற்றும் அடக்குமுறைகளை நோக்கி செலுத்தி இருக்க வேண்டும், இவ்வாறான இலக்கிய வீச்சு அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் எதிரொலிக்கும் வண்ணம் இந்த மைய இலக்கியங்களைக் கையாள்பவர்கள் அவற்றை மடை மாற்றி இருப்பார்களேயானால் இன்று காணப்படும் பரந்துபட்ட முழுமையான படைப்புச் சுதந்திரம், சமூக அவலங்களுக்கு எதிரானதாகவோ, ஒடுக்குதலுக்கு எதிரானதாகவோ திசை மாறி இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முந்தைய தலைமுறை மைய இலக்கிய வாதிகள் தங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட வாய்ப்பை அடுத்த தலைமுறைக்கு கையளிக்கத் தவறி விட்டார்கள், இந்தத் தவறுதலால் ஒரு புதிய தலைமுறை தங்கள் தலித் அடையாளங்களோடு அவற்றை நீக்கப் போராடுவதற்குப் பதிலாக தங்களை அடையாள படுத்திக் கொள்ளவே தயங்கி இலக்கியத்தின் புனைவு வெளிகளில் தங்களைத் திணித்துக் கொண்டு விட்டார்கள். மொழி செழுமையோடு ஒரு புதிய திசையில் பயணிக்கும் பொழுதும் தலித் இலக்கியம் என்று குறியீடு செய்யப்படுகிற மைய இலக்கியம் தனது பாதைகளை அடைத்துக் கொண்டு சுணங்கி விட்டது என்பதே உண்மை.

இரண்டாவதாக மாற்று மொழிகளில் வீச்சுடன் இருந்த, இருக்கிற இத்தகைய மைய இலக்கியத்தின் பதிவுகளை அதன் ஒற்றுமைகளை, மாறுபாடுகளை மொழிமாற்றம் வாயிலாக அறிமுகம் செய்வதில் இருந்து நாம் தவறி இருக்கிறோம், வெவ்வேறு மொழிகளில் பதிவு செய்யப்பட்ட இத்தகைய குரல்களில் பெரும்பாலும் மொழி வேறுபாடுகளைத் தவிர குரலிலும் அதில் காணப்படும் வழியிலும் வேறுபாடுகள் ஒன்றும் இல்லை, நமது இளைய தலைமுறைக்கு இந்த வெற்றி பெற்ற மாற்று மொழி மைய இலக்கியம் அறிமுகம் செய்யப்படாமல், அவர்களை முற்றிலும் பொழுதுபோக்கு இலக்கியங்கள் என்று சொல்லப்படும் புனைவு இலக்கியங்களுக்குள் சிறை வைத்திருக்கிறோம்.

art_angel_palmLHartley

தலித் இலக்கியம் என்று பொருள் கொள்ளப்படுகிற மைய இலக்கியம் எவ்வாறு இன்றைய இலக்கிய வகைகளில் இருந்து மாறுபடுகிறது அல்லது முரண்படுகிறது என்பது உணர்த்தப்படாமலே இலக்கிய வெளிகளில் ஒரு போலியான இலக்கிய வரையறை செய்யப்பட்டு இருக்கிறது, இந்த இலக்கிய வரையறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நம்பிக்கைகள் மற்றும் கற்பிதங்களின் அடிப்படையில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது உணர்த்தப்படவே இல்லை, மாறாக வெகு மக்கள் ஊடகங்களில் அல்லது அவ்வாறு நம்பப்படுகிற ஊடகங்களின் தொடர் கட்டமைப்புகளாலும் நீண்ட காலமாகவே இத்தகைய வரையறை எளிதாகக் கையாளப்பட்டு வெற்றிகரமாக ஒரு பொதுக் கருத்தியல் வெளியை உருவாக்க முடிந்திருக்கிறது, இந்தக் கட்டமைப்பை உடைக்கும் வல்லமை பெற்ற மைய இலக்கியவாதிகள் அனைவரும் அதே கட்டமைப்புக்குள் அடைபட்டுப் போனதும் மைய இலக்கியத்தின் (தலித் இலக்கியத்தின்)  உண்மையான முகத்தை இளைய தலைமுறைப் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய முடியாமல் போனதற்கான காரணம் என்று சொல்ல முடியும்.

பன்முகத் தன்மை கொண்ட ஒரு சமூகத்தின் கூட்டியல்பு வாழ்க்கையை, இயற்கையோடு இணைந்து பின்னப்பட்டிருந்த இவர்களின் கூடுகளை, பிறப்பு, இறப்பு, மணவாழ்க்கை, பயிரிடுதலின் போதான மகிழ்ச்சி, அறுவடைக்கான மகிழ்ச்சி, நவீன வாழ்க்கை முறைகள் உருவாக்கும் தாக்கம், நகரச் சூழலுக்கு இடம் பெயர்ந்து கூட்டுக் குடும்ப முறைகளில் இருந்து தனித்து விடப்படும் தனி மனிதனின் அகப்போராட்டங்கள், கல்வியை அடைவதற்கான தடைகள், பொருளாதாரக் காரணங்களால் காணாமல் போன விளை நிலங்கள், பிறப்பால் தாழ்ந்தவன் என்ற குறியீடுகளில் அடைக்கப்பட்டதன் வலி, இவற்றின் ஊடே வாழ்க்கையை எதிர் கொள்ளும் நம்பிக்கைகள் என்று பரந்து பேரண்டமாய்க் காணப்படும் இந்த மைய இலக்கியத்தின் இயங்கு எல்லைகள், இன்று எப்போதாகிலும் அரிதாகக் காணக் கிடைக்கிற கவிதைகள், மிக அரிதாகக் காணக் கிடைக்கிற சிறுகதைகள், நாவல்கள் என்று தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு விட்டது. அவ்வாறு வெளியாகிற சில படைப்புகளும் கூட முன்னரே தோற்றம் கொண்ட ஒரே மாதிரியான வகை சார்ந்தவை.

Re-imagining%20Dalit%20Theology

தலித் இலக்கியம் என்று சொல்லப்படுகிற மைய இலக்கியத்தின் இன்றைய அவசரத் தேவை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளுதல், புதிய அதன் தலைமுறையை வழிநடத்துதல், தலித் இலக்கியம் என்ற கையாடலை மைய இலக்கியமாக மாற்றுதல், இத்தகைய மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் மாற்று ஊடக வெளிகளைக் கட்டமைக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மைய இலக்கியத்தின் முன்னோடிகளுக்கு இருக்கிறது, அரசியல் சித்தாந்த வெளிகளில் சிதறிக் கிடக்கும் இவர்களை ஒருங்கிணைப்பதும், தலித் அரசியல் என்று குறியீடு செய்யப்படுகிற மைய அரசியல் இத்தகைய இலக்கியப் பணிகளில் கவனம் செலுத்துவதும், அதன் இளைய உறுப்பினர்களை இலக்கியப் புரிந்துணர்வு மற்றும் தெளிவு கொண்டவர்களாக மாற்றுவதிலும் அடங்கி இருக்கிறது, இலக்கிய அறிமுகங்களை வழங்குவது, நூலகங்களை நிறுவுவது, பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது என்று இயக்கங்களில் நிலை கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், இலக்கிய முன்னோடிகளும் செயல்படத் துவங்கினால் தமிழின் உண்மையான மைய இலக்கியப்  படைப்புகள் வருங்காலங்களில் தோன்றுவதற்கான வாய்ப்பும், நம்பிக்கையும் தொடர்ந்து நீடிக்கும்.

அடக்குமுறை வெறிக்கு எதிரான உணர்வுகளும், மதத்தின் பெயரால், பிறப்பின் பெயரால் வாழ்க்கையின் பரப்பில் விளிம்பில் அடிப்படை வசதிகளற்று இருபத்தியோராம் நூற்றாண்டின் இணையப் பக்கங்களிலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும் சரியாகப் பதிவு செய்யப்படாமல் போவது அடுத்த தலைமுறையையும் அதே சிக்கல்களுக்குள் மாட்டி விடும் என்பதையும், பார்ப்பனீய எதிர்ப்பு அல்லது மார்க்சிய விவாதங்கள் என்கிற வலைகளுக்குள் படைப்பாளிகளை மாட்டி விடும் பேராபத்தையும் நாம் எப்போது உணர்வோம்???? 

DalitWoes_234230501

********* *********

Advertisements

Responses

 1. திரு. அறிவழகன்..

  எந்த மையப்பொருளப்பற்றி நாம் கட்டுரை எழுதுகிறோமோ அத்னோடு கட்டுரையாளனுக்கு ஈடுபாடும் புரிதலும் இருக்கவேண்டும். இல்லையெனில் கட்டுரையாளரின் வரிநிரப்பும் வேலையை வாசகன் மிகஎளிதாக கண்டுக்கொள்வான்.

  உங்களின் தலித் இலக்கியம் பற்றிய கட்டுரை வரிநிரப்பு வேலையைத்தான் சரியாக செய்துள்ளது. அம்பேத்கார் நூற்றாண்டிலிருந்து வெடித்துகிளம்பிய தமிழ் இலக்கிய தலித் எழுத்தின் தொடக்கம் குறித்தோ அதன் போக்கு குறித்தோ அது கையாண்ட வடிவம் குறித்தோ உங்கள் கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. மேலும் அப்போது காத்திரமாக இயங்கிய படைப்பாளிகள் குறித்தும் படைப்புகள் குறித்தும் ஒரு வரிகூட இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. அழகியபெரியவன், ஆதவன் தீட்சண்யா, பாமா,கே.ஏ.குணசேகரன், ரவிகுமார், ராஜ்கெளதமன், சிவகாமி, சுகிர்தராணி, என்.டி ராஜ்குமார், ம‌.ம‌திவ‌ண்ண‌ன், க‌ம்பீர‌ன், பாப்லோ அறிவுகுயில், அன்பாத‌வ‌ன், த‌ய். க‌ந்த‌சாமி, அர‌ங்க‌ ம‌ல்லிகா, அம்ம‌ணி,சிறித‌ர‌ க‌ணேச‌ன்,இமைய‌ம், சோ.த‌ர்ம‌ன்,அர‌ச‌முருகுபாண்டிய‌ன் என‌ த‌மிழில் இன்றுவ‌ரை த‌லித் இல‌க்கிய‌த்தை முன்னெடுத்துச்செல்லும் ப‌டைப்பாளிக‌ளையும் அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக‌ளையும் சொல்லிக்கொண்டே செல்ல‌லாம்.

  இவ‌ர்க‌ளின் ப‌டைப்புக‌ள் பேசும் அர‌சிய‌ல், பேசும் வ‌டிவ‌ம், உத்தி இன்ன‌பிற வ‌ற்றை உள்வாங்கிய‌ப்பின்ன‌ரே த‌லித் இல‌க்கிய‌த்தின் போக்கையும், இள‌ம் த‌லித் ப‌டைப்பாளிக்கான‌ அறிவுரையும் நீங்க‌ள் தொட‌ங்கியிருக்க‌வேண்டும். சிறுக‌தையாள‌ர் அம்ம‌ணியின் சொப்பு சிறுக‌தை தொகுப்பிற‌கான‌ முன்னுரையில் த‌லித் இல‌க்கிய‌ம் ந‌க‌வேண்டிய‌ திசையையும் உத்தியையும் மிக‌ எளிமையாக‌ ந‌ண்ப‌ர் அழ‌கிய‌பெரிய‌வ‌ன் குறிப்பிட்டிப்பார். த‌லித் இல‌க்கிய‌ மூத்த‌ ப‌டைப்பாளிக‌ள் இள‌ம் த‌லைமுறையின‌ருக்கு ச‌ரியான‌ வ‌ழிகாட்டியாக‌வே இருக்கிறார்க‌ள். போகிற‌ போக்கில் அத‌ன் மீது சேற‌ள்ளி வீசிவிடாதீர்.

  மேலும் தலித் இல‌க்கிய‌ம் மைய‌ இல‌க்கிய‌ம் எனும் வெற்றுச்சொல்லாட‌ல்க‌ளை வைத்துக்கொண்டு க‌ட்டுரையை நிர‌ப்புவ‌தையும் த‌விருங்க‌ள்.

 2. அன்புக்குரிய சகோதரர் சரவணன் வணக்கம்,

  உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, உங்கள் கருத்துக்களில் தெரியும் ஆதங்கம் மற்றும் தார்மீகக் கோபம் உங்களின் தலித் இலக்கியம் பற்றிய ஆர்வத்தையும், இலக்கியவாதிகள் மேலிருக்கும் அன்பையும் காட்டுகிறது. அதற்காக ஒரு சக தோழனாக மகிழ்கிறேன். ஆனால் உங்கள் குற்றச்சாட்டுகளில் இருக்கும் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

  ////எந்த மையப்பொருளப்பற்றி நாம் கட்டுரை எழுதுகிறோமோ அத்னோடு கட்டுரையாளனுக்கு ஈடுபாடும் புரிதலும் இருக்கவேண்டும். இல்லையெனில் கட்டுரையாளரின் வரிநிரப்பும் வேலையை வாசகன் மிகஎளிதாக கண்டுக்கொள்வான்.////

  ஆக, இந்த மையப்போருளைப் பற்றி எனக்கு ஈடுபாடும் புரிதலும் இல்லை என்று நீங்களாகவே முடிவுக்கு வருகிறீர்கள், அப்படி உங்களுக்கு யார் உணர்த்தியது, எனது ஈடுபாட்டை நான் மட்டுமே உணர்த்த முடியும், உணர்த்தியும் வருகிறேன், என்னுடைய மூன்று கட்டுரைகளில் ஒன்று தலித் மக்களின் வாழ்வியலை ஒரு பத்தியிலாவது சொல்ல முயற்சி செய்யும், எனது பல்வேறு கட்டுரைகளில் அம்பேத்கர் என்னும் சகாப்தம் உருவாக்கிய தாக்கம் வெளிப்பட்டே இருக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களின் மனித உரிமை அமைப்பின் சார்பில் மத்தியப் பல்கலைக்கழகத்தின் சென்ற ஆண்டிற்கான இளம் எழுத்தாளர் விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பது முழுக்க என்னுடைய ஈடுபாட்டையும், புரிதலையும் அடிப்படையாகக் கொண்டதே. வரி நிரப்பும் வேலையை நீங்களும் படித்து அதற்கு நீண்ட பதிலுரை அளிப்பது அனேகமாக இந்தக் கட்டுரை உங்களிடம் உருவாக்கி இருக்கும் தாக்கத்தின் அடிப்படையிலேயே என்று நான் மட்டும் அல்ல, இதனை வாசிப்பவர்களும் புரிந்து கொள்வது எளிது.

  ////அம்பேத்கார் நூற்றாண்டிலிருந்து வெடித்துகிளம்பிய தமிழ் இலக்கிய தலித் எழுத்தின் தொடக்கம் குறித்தோ அதன் போக்கு குறித்தோ அது கையாண்ட வடிவம் குறித்தோ உங்கள் கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. மேலும் அப்போது காத்திரமாக இயங்கிய படைப்பாளிகள் குறித்தும் படைப்புகள் குறித்தும் ஒரு வரிகூட இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது.////

  தமிழ் இலக்கிய தலித் எழுத்தின் முழுமையான விமர்சனக் கட்டுரை என்று எந்த இடத்திலும் இந்தக் கட்டுரையைக் குறிப்பிடவில்லை, மாறாக இலக்கியத்திற்கும், தலித் இலக்கியத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியை இளம் தலைமுறை பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. அதனைக் கட்டுரையின் இரண்டாவது பத்தியில் நானே குறிப்பிட்டிருக்கிறேன், தொடர்ந்து எழுதும் அடுத்த கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிட்ட குறைபாடுகளை நீக்கி இன்னும் சிறப்பாக ஒரு ஆய்வுக் கட்டுரையை வழங்க முயற்சி செய்கிறேன்.

  ////அழகியபெரியவன், ஆதவன் தீட்சண்யா, பாமா,கே.ஏ.குணசேகரன், ரவிகுமார், ராஜ்கெளதமன், சிவகாமி, சுகிர்தராணி, என்.டி ராஜ்குமார், ம‌.ம‌திவ‌ண்ண‌ன், க‌ம்பீர‌ன், பாப்லோ அறிவுகுயில், அன்பாத‌வ‌ன், த‌ய். க‌ந்த‌சாமி, அர‌ங்க‌ ம‌ல்லிகா, அம்ம‌ணி,சிறித‌ர‌ க‌ணேச‌ன்,இமைய‌ம், சோ.த‌ர்ம‌ன்,அர‌ச‌முருகுபாண்டிய‌ன் என‌ த‌மிழில் இன்றுவ‌ரை த‌லித் இல‌க்கிய‌த்தை முன்னெடுத்துச்செல்லும் ப‌டைப்பாளிக‌ளையும் அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக‌ளையும் சொல்லிக்கொண்டே செல்ல‌லாம்.//////

  நீங்கள் குறிப்பிடுகின்ற பட்டியலில் இருந்து விடுபட்ட பெயர்களை இன்னும் ஒரு பக்கத்திற்கு என்னால் தொடரவும், பெயர்களைப் பற்றிய ஒரு நீண்ட தர்க்கம் புரியவும் இயன்றாலும், அது என்னுடைய நோக்கம் அல்ல, பொதுவாகக் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் ஒரு படைப்பியல் நீட்சியை நான் முன்னோடிகளின் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இவை பற்றி நாம் ஒரு வெளிப்படையான விவாதம் செய்யலாம்.

  //////த‌லித் இல‌க்கிய‌ மூத்த‌ ப‌டைப்பாளிக‌ள் இள‌ம் த‌லைமுறையின‌ருக்கு ச‌ரியான‌ வ‌ழிகாட்டியாக‌வே இருக்கிறார்க‌ள். போகிற‌ போக்கில் அத‌ன் மீது சேற‌ள்ளி வீசிவிடாதீர்./////

  இன்னும் சிறப்பான ஒரு களத்தை கட்டமைக்க வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை நீங்கள் சேறு அள்ளி வீசும் கட்டுரையாகப் புரிந்து கொள்வீர்களேயானால், உங்கள் மன பிம்பங்களில் அறிவழகன் என்கிற தனி மனிதனைப் பற்றிய எதிர்க் கருத்தியல் கொண்டிருக்கிறீர்கள் என்றே அது புரிந்து கொள்ளப்படும், சேறு அள்ளி வீசுவதும், நீர் அள்ளி வீசுவதும் அல்ல ஒரு படைப்பாளியின் நோக்கம், மாறாக அகவெளிகளில் பொங்கும் உணர்வுகளை நெறிப்படுத்தி சிலருக்கேனும் பயன்படும் வகையில் வழங்குவது.

  ////மேலும் தலித் இல‌க்கிய‌ம் மைய‌ இல‌க்கிய‌ம் எனும் வெற்றுச்சொல்லாட‌ல்க‌ளை வைத்துக்கொண்டு க‌ட்டுரையை நிர‌ப்புவ‌தையும் த‌விருங்க‌ள்.////

  தலித் இலக்கியத்தை என்னுடைய வரையறைகளில் மைய இலக்கியம் என்றே காண்கிறேன், தலித் இலக்கியம் என்கிற சொல்லாடலில் கலந்திருக்கும் தாழ்வான கட்டமைக்கப்பட்ட இலக்கிய வடிவை உடைத்து என்னளவில் இதனை மைய இலக்கியம் என்றே பொருள் கொள்வேன், வெற்றுச் சொல்லாடல்கள் என்று நீங்கள் சொல்ல முனைவது நான் முன்னிலைப்படுத்துகிற மைய இலக்கியத்தையா இல்லை தலித் இலக்கியத்தையா என்பதை நீங்கள் விளக்க வேண்டும்.

  இறுதியாக ஒரு மனிதனைப் பற்றிய புற அடையாளங்களை அல்லது உருவாக்கப்பட்ட புற அடையாளங்களை மனதில் இருத்தி எந்த ஒரு படைப்பையும் அணுகாதீர்கள், அதில் படைப்பைப் பற்றிய விமர்சனங்கள் குறைந்து மனிதனைப் பற்றிய விமர்சனங்கள் படைப்பின் மீதான விமர்சனமாக வெளிவரும் வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி உங்கள் கருத்துக்களை நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன், இத்தகைய ஒரு விவாதம் தான் என்னுடைய நோக்கம், அதனை இந்தக் கட்டுரை நிறைவு செய்ததில் இருந்து இது ஒரு வெற்றி பெற்ற கட்டுரை என்று புரிந்து கொள்வேன்.

  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது அன்பு.

  தோழமையுடன்

  கை.அறிவழகன்

 3. வணக்கம் தோழர்!

  ஏனென்று தெரியவில்லை இந்த கட்டுரையில் வாசிப்பவன் இந்த கட்டுரை எதை நோக்கி நகர்கிறது என்ற ஐயத்தோடு வாசிக்கவேண்டிய அனுபவத்தை கொடுத்து விடுகிறது. ஒரு பத்தி கொடுத்த அனுபவம் அடுத்த பத்தி படிக்கும் பொழுது மறந்து போய்விடுகிறது. முதல்வரி முதல் இறுதிவரை வாசிப்பவனை தனது கட்டுரையில் கட்டிப்போடும் பதிவரான அறிவழகனின் எழுத்துக்களில் நேரெதிர் மாற்றத்தை இந்த கட்டுரையில் காணமுடிகிறது.

  தலித் இலக்கியம் தவறவிட்ட பாதை. இனிவரும் தலித் பதிவர்கள் செல்லவேண்டிய பாதை பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளமுடிகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக மொழியை எழுதவோ வாசிக்கவோ வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த இளம் தலைமுறை முதல்முதலாக வாசிப்பனுவபம் கொள்ளும்பொழுது தமக்கான இலக்கிய சுவடுகள் எங்குமே காணோம் என்ற உண்மை அறிந்து. இதுவரை வெளிவந்த அனைத்து இலக்கியங்களும் தம்மின மக்களின் வாழ்கையை பதிவு செய்யவில்லையே என்ற கோபத்தில் எழுந்ததுதான் தலித் இலக்கியங்கள். தலித் இலக்கியங்கள் தடுமாற்றம் கண்டுள்ளது என்பதைவிட இலக்கிய சூழலில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. தலித் மக்களை மையப்படுத்துவதாக கூறி பின்னர் பிழைப்புவாத அரசியலை கையிலெடுத்த தலித் அரசியல் அமைப்புகளின் தோல்விகளை தலித் இலக்கியத்தோடு பொருத்தி பார்ப்பதால் இது போன்ற கருத்தாக்கத்தை நீங்கள் முன்வைத்துள்ளீர்களோ? என்று எண்ணத்தோன்றுகிறது.

  மேலும் விஷ்ணுபுரம் கூறிய எழுத்தாளர்கள் பெயர்களை நீங்கள் எழுதவில்லை என்ற குற்றச்சாட்டு தேவையற்றது. இந்த கட்டுரைக்கு இது அவசியமும் அற்றது. தலித் அரசியல் தோல்விகளை தலித் இலக்கியத்தோல்வியாக நீங்கள் பார்க்கிறீர்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  இலக்கியம் பற்றிய கட்டுரை என்பதால் கட்டுரையின் நடையை இப்படி மாற்றி விட்டீர்களோ என்று தோன்றுகிறது.

  தமிழன்பன்

 4. அன்புமிக்க அறிவழகன்.

  நட்பு கருதியும் அதன் தொடர்ச்சியின் விருப்பத்தின் பேராலும் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்திக்கொண்டுவிடுகிறேன்.
  நான் எந்த உரையாடலிலும் நபருக்கான முக்கியத்துவத்தை முன்னிருத்துவது இல்லை. அதனாலேயே நாம் ஆர்குட் உரையாடல்களில் மோதிக்கொண்டாலும் உங்களின் ஜெயராம் பிரச்சினை குறித்த கட்டுரையில் அந்த கட்டுரையின் சாரத்தின் ஆதரவாக இருந்தேன் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். மேலும் உங்களுக்கு கிடைத்த மத்தியப் பல்கலைகழகம் சாந்து கிடைத்த விருதுக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  எழுதும் கருப்பொருளின் ஈடுபாடு என்பது நீங்கள் குறிப்பிட்டது போல நீங்கள் சொல்லித்தான் வாசகனுக்கு தெரியும். அதையேதான் நானும் சொல்கிறேன். இந்த கட்டுரையில் அந்த ஈடுபாடு துளியும் தெரியவில்லை எனும் என் கருத்தில் மாற்றமேதுமில்லை.

  தலைப்பி இலக்கியம் vs தலித் இலக்கியம் என்று வைக்கும்போது இலக்கியம் எனும் கருத்தாக்கத்தை இத்தமிழ்ச்சூழ்ல் எவ்விதம் கற்பிதம் செய்துவைத்திருக்கிறது அதில் தலித் இலக்கியம் எவ்விதம் ஊடாடி பேசியது: கலகம் விளவித்தது எனும் வெளிப்படையான முன்னூட்டம் தேவையாகிறது. அதில் தலித் படைப்பாளிகளின் வினை என்ன வினையற்ற வேளை எது? என்று இன்னும் ஆய்வியல் நோக்கில் பேசியிருக்கவேண்டும். அதன் பின்பே அவர்கள் இளம்தலைமுறையினருக்கு கைமாற்றிக்கொடுக்காதது என நீங்கள் கருதுவதை குறிப்பிடவேண்டும்.. இந்த வரைமுறை எல்லாம் நீ என்னடா வகுத்துக்கொடுப்பது என நீங்கள் என்னை கேட்கலாம் சரிதான் ஆனால் தலைப்பு கொடுக்கப்பட்டவிதமும் தொடர்ந்து ஆய்வு முறையிலான கட்டுரைகளையும் ஆய்வு நண்பர்களோடு உரையாடுக்கொண்டிருப்பவன் என்கிற முறையில் இதை நானெதிர்ப்பார்பதையும் அது இல்லாமல் போவதையும் பதிவு செய்வதையும் எனக்கான கடமையாக செய்யமுயன்றுவருகிறேன்.

  அடுத்து .. என் பட்டியல் எனக்கு இவ்வளவு தலித் படைப்பாளர்களை தெரியும் என்பதை உங்களுக்கு காட்ட அல்ல என்பதை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். இவர்களின் பங்களிப்பு பற்றியும் அதன் வீச்சினைப்பற்றியும் தலித் இலக்கிய கட்டுரை எழுதுவது என்பது அது சரியான தலித் இலக்கிய கட்டிரையாகாது என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். [ தலித் அரசியல் கட்டுரையை நான் குறிப்பிட வில்லை.. தலித் இலக்கியம் சார்ந்த பார்வையையே பகிர்ந்துக்கொள்ளவிழைகிறேன்.] இவர்கள் எவ்விதம் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றலை சரியாக செய்யவில்லை எனும் விதமாக கட்டுரை அமைந்திருந்தால் கூட நான் அதனை அதன் நோக்கில் எதிர்க்கொண்டிருப்பேன்.. பலர் தலித் இலக்கியத்தை பற்றி மேலோட்டமாக எழுதுவதுபோல உங்களின் பதிவே என்னை மறுவினையாற்றத்தூண்டியது.

  இறுதியாக .. தலித் இலக்கியத்தை ஒருபோதும் வெற்றுச்சொல்லாடலில் குறிப்பிடமாட்டேன். இத்தனை படைப்பாளிகளின் படைப்புகளோடும் பட்டியலிலிருக்கும் பெரும்பாண்மையோரோடு தோழமை உறவு வைத்திருக்கும் என்னிடம் அவ்விதமான போக்கை என்றும் எதிர்பார்க்காதீர்கள். தலித் இலக்கியத்தை எவ்விதம் மைய இலக்கியமாக நீங்கள் சொல்ல அல்ல்து நிறுவ முயலுவதற்கான எந்தவிதமான தர்க்கத்தை முன்வைக்காமல் அதனை உங்களின் முடிவாக சொல்லுமிடத்தில்தான் கேள்விகள் எழவே செய்கின்றன. அவை வெற்றுச்சொல்லாடல்களா என்று..

  தோழமையுடன்.

  விஷ்ணுபுரம் சரவணன்

 5. அன்பின் தமிழன்பன் வணக்கம்,

  ஒருவேளை தொடர்பும், ஆர்வமும் நிரம்பிய தலைப்பின் கீழ் இந்தக் கட்டுரை இடம் பெறாதது காரணமாக இருக்கலாம், (அதாவது வாசிப்பவரின் தொடர்பு), இருப்பினும், வழமையான வார்த்தைக் கட்டுகளுக்குள் இத்தகைய ஒரு இக்கட்டான பதிவைக் கொண்டு வருவது கடினம் தான். குறைகளைக் களைய முயற்சி செய்கிறேன்.

  அரசியலும் இலக்கியமும் வெவ்வேறு கூறுகளைக் கொண்டிருந்தாலும், ஒன்றோடு ஒன்று நேரடித் தொடர்பையும் உடையது, ஆகவே தலித் அரசியல் இயக்கங்களின் தோல்வி உறுதியாக மைய இலக்கியத்தின் (தலித் இலக்கியம்) வீச்சில் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. தலித் அரசியல் இயக்கங்களின் தோல்வி தலித் இலக்கியத்தின் தோல்வியாகவும் அறியப்படுகிறது.

  உங்கள் கருத்துரைகளுக்கும், அன்புக்கும் நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 6. அன்புக்குரிய சரவணன்,

  நீங்கள் குறிப்பிடும் குறைபாடுகள் இந்தக் கட்டுரையில் இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், தமிழ் இலக்கியச் சூழலில் இலக்கியம் என்பதற்கான வரையறை எவ்வாறு கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி இருக்க வேண்டும், ஆனால், இலக்கியம் எப்படிப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது அல்லது கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்று ஆய்வு செய்யும் அளவில் முழுமையான வாசிப்பு எனக்கு இல்லை, அப்படியான ஒரு வாசிப்பு நிகழ்ந்து முடிந்த பின்னர் வரையறைகளை நோக்கி நம்மால் பயணப்பட முடியும் என்று நம்புகிறேன்.

  இந்தக் கட்டுரை இன்று பல்வேறு ஊடக தளங்களில் எழுத முனைந்திருக்கும் புதிய தலைமுறைக்கான சிறிய அறிமுகம் என்ற அளவில் கட்டுரையின் சுருக்கம் கருதி நீங்கள் குறிப்பிடும் பல்வேறு குறைகளை உள்ளடக்குகிறது, நீண்ட ஆய்வு நோக்கிலான ஒரு கட்டுரையை நோக்கி உங்கள் பின்னூட்டங்கள் என்னை நகர்த்துகிறது.

  உங்கள் நேர்மை பற்றி நான் அறிவேன், பறை தொடுதலில் நிலவிய ஒரு தீண்டாமை அனுபவத்தை ஒப்புக் கொண்டு அதனை மனதளவில் சரி செய்வதாக நீங்கள் விவாதத்தின் முடிவில் சொல்லிய பொழுதிலேயே உங்கள் நேர்மை நெஞ்சில் நிலை பெற்று வளர்ந்திருக்கிறது, இருப்பினும், தலித் இலக்கியத்தின் அல்லது இலக்கியவாதிகள் மீதான சேறு பூசுதல் என்கிற உங்கள் சொல்லாடல் உள்ளார்ந்த தாக்கம் விளைவித்ததன் எதிரொலியே அத்தகைய ஒரு கருத்தியலை எனக்குள் விதைத்தது. உங்கள் கருத்துரைகள் மற்றும் பின்னூட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியவை.

  உங்கள் எழுத்துக்களுக்கான வாழ்த்துக்களுடன்
  கை.அறிவழகன்

 7. அன்புமிக்க அறிவழகன்..

  தமிழன்பன் சொல்வதைப்போல படைப்பாளிகளை குறிப்பிடாதது குற்றச்சாட்டாக நான் வைக்கவில்லை.

  தலித் அரசியல் பற்றி கட்டுரை எழுதினால் அதில் தலித் அரசியல்வாதிகளின் நிலைப்பாடி அவர்கள் செயலாற்றிய களங்கள், அல்லது செயலாற்றத்தவறிய களங்கள் அதை எவ்விதம் நேர்மையாக அல்லது நேர்மையற்று பயன்படுத்தினார்கள் என குறிப்பிடுவீர்களோ அதே போல தலித் இலக்கியம் குறித்து எழுதும்போதும் இத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என்பது என் விருப்பம் அல்ல பொதுவான விசயம்தான். தலித் இலக்கியம் என்பது நா. தர்மராஜன் குறிப்பிடுவதுபோல ஒருவரின் வாழ்வுகுறித்த பதிவுகள் அவரின் வாழ்வியலுக்கானது மட்டுமல்ல என்பதாக அதன் மையம் ஓரிடத்திலில்லாது அதாவது ஒற்றை மையத்திலிலில்லாது சுழலும் தன்மையுடையது.

  தலித் அரசியல்வாதிகள் பின்னெடுப்பு தலித் இலக்கியத்தின் வீழ்ச்சியாகாது, இச்சூழலில்தான் தலித் படைப்பாளிகள் முன்னெப்போதுமில்லாத இயங்குத்தன்மையோடு இயங்கவேண்டிய தருணமாக பார்க்கவேண்டியதாயிள்ளது.

  நிறப்பிரிகை இதழிலிருந்து தொடர்ந்து தலித் அரசியல் உரையாடல் நிகழ்ந்துவருகிறது, நிறப்ப்பிரிகை காலத்தில் தலித் அரசியலுக்கான இடம் வெற்றிடமாய்த்தானிருந்தது. அதன் முன்னெடுப்புகள் எப்படி தலித் அரசியலின் வெற்றியின் ஒரு கூறு ஆகாதோ அதே போல இக்கால தலித் அரசியலின் பின்னெடுப்பு கூறுகள் தலித் இலக்கியத்தின் பின்னெடுப்பாக [ கவனிக்க தோல்வி அல்ல பின்னெடுப்பாக] கருதுதல் ஆரோகியமன்று.

  தோழமையுடன்..

  விஷ்ணுபுரம் சரவணன்

 8. அன்புமிக்க அறிவழகன்..

  நான் வேறொரு தளத்திலிருந்து இருந்ததால் உங்களின் பின்னூட்டத்தை படிக்கவில்லை. சேறள்ளீ பூசுவது எனும் சொற்பிரயோகம் ஏதோ ஒரு வேகத்தில் வந்துவிட்டது. நிச்சயமாக உங்களை சங்கபடுத்த அல்ல..தோழமையுடன் அதனை இனங்கண்டமைக்கு நன்றி..

  விஷ்ணுபுரம் சரவணன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: