கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 29, 2010

இன்னொரு கிருத்திகாவின் இழவுக்கு வாருங்கள்…….

IN13_KARUNANIDHI_17361f

கரடி பொம்மைகளோடு பேசுவது, கடற்கரையில் அலைகளோடு ஆடிக் களிப்பது, அப்பாவின் முதுகில் அவ்வப்போது ஆடுவது என்று எல்லாக் குழந்தைகளையும் போலவே அந்தக் குழந்தையும் இந்த உலகின் குற்றங்களை எல்லாம் அறியாமல் மழலையாய்த் தன் பெற்றோரின் மடியில் தவழ்ந்தது, பாடல்களை இசைத்தது, முதலாளித்துவத்தின் கொடிய வீச்சு அந்த அழகான "கிருத்திகா" என்ற சின்னக் குழந்தையின் உயிரைக் குடித்து விட்டு இன்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறது, இந்தியாவில் முதலாளித்துவத்தின் பேராசை அதனைப் போற்றிப் பாதுகாக்கும் அரசு மற்றும் அரச பயங்கரவாதிகளிடம் ஒளிந்து கிடக்கிறது, போலியாக தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மருந்துகளும், காலாவதியான மருந்துகளின் ஏகபோக விற்பனையும் "பானை சோற்றில் ஒரு பருக்கை" என்று தான் தோன்றுகிறது, மக்கள் நல்வாழ்வுத் துறையும், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் தமிழகத்தில் அனேகமாக இலவசத் தொலைக்காட்சி வழங்கும் துறைக்கு மடை மாற்றி விடப்பட்டிருக்கலாம்.

இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்கள் தங்கள் மருத்துவர்களாகக் கருதுவது பெரும்பாலும் மருந்துக் கடையில் பணிபுரியும் ஊழியர்களைத் தான், தலை வலிக்கிறது என்றும், குழந்தைக்கு வயிற்றுக்குப் போகிறது என்றும் மருந்துக் கடைகளின் வாசலில் நிற்கும் இந்திய தேசத்தின் எண்ணற்ற பெற்றோர்களும் அவர்களின் கிழிந்த சட்டைப் பைகளில் இருக்கும் வியர்வை படிந்த ரூபாய் நோட்டுக்களும் தான் இந்திய மருந்து மாபியாக்களின் மூலதனம். இந்த மாபியாக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும், அவர்களின் பிழைப்புக்குப் படி அளப்பதும் முதலாளிகள் போடும் எச்சிப் பருக்கைகளில் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் சில அரசியல்வாதிகளும், அந்த அரசியல்வாதிகளின் காலனிகளுக்குப் போலிஷ் போட்டுப் பிழைக்கும் அரசு அதிகாரிகளும், இப்படியான கேவலமான வேலைகளைச் செய்வதற்கு இவர்களுக்கு I A S, I P S படிப்பு வேறு ஒரு கேடு.

இந்தியா முழுவதும் இயங்கும் அரசு மருத்துவமனைகள் சரியாகச் செயல்படுமேயானால் இத்தகைய கொடுங்கோலர்களின் கரங்களில் இருந்து எளிய மக்களைக் காக்க முடியும், அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் தான் இத்தகைய நிகழ்வுகளுக்கு முதல் காரணி, கடவுளால் நியமிக்கப்பட்ட தூதர்கள் இவர்கள், நோய் என்னவென்று கேட்க்காமலேயே சீட்டில் மருந்து எழுதும் வல்லமை பெற்ற சூப்பர் மருத்துவர்கள் இவர்கள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்களுக்கு ஊரகப் பகுதிகளில் இருக்கும் ஏழை மக்கள் என்றால் ஏளனம், “நீ, போ, வா” என்று வயது முதிர்ந்தவர்களைக் கூட மரியாதை இல்லாமல் அழைக்கும் அரசு மருத்துவர்கள் இந்தியக் கல்விக் கூடங்களில் அப்படி என்ன படித்தார்கள், அல்லது இவர்களின் ஆசிரியர்கள் இவர்களுக்கு என்னதான் சொல்லிக் கொடுத்தார்கள் என்று பல நேரங்களில் எனக்குக் குழப்பம் வரும். அடிப்படை மனித நேயம் இல்லாத இந்த மருத்துவ மூதேவிகளிடம் நோய் தீரும் என்று நம்பிக் கால் கடுக்கக் காத்துக் கிடக்கும் நம் மக்களின் அறியாமையும், ஏழ்மையும் தான் இந்த மருத்துவ மூதேவிகளின் ஊழல் செயல்பாடுகளுக்குக் காரணம்.
genital_warts_medicine

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு என்று ஏறத்தாழ ஐந்து IAS அதிகாரிகள் இருக்கிறார்கள், ஒவ்வொரு மாவட்டத் தலை நகரிலும் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார், மருந்துக் கடைகளில் ஆய்வு செய்வதற்கென்றே சிறப்பு ஆய்வாளர்கள் மாநிலம் முழுவதும் இருக்கிறார்கள், இவர்களின் வேலை அனேகமாக போலியாகத் தயார் செய்யப்பட்ட மருந்துகள் உண்மையான மருந்துகளைப் போலவே இருக்கிறதா என்று ஆய்வு செய்வதும், மாதம் தோறும் வழங்கப்படும் மருந்துக் கடைகளின் சிறப்புப் படிகளைப் பெற்றுக் கொள்ளச் சுற்றுப் பயணம் செய்வதும் மட்டும்தான்.

விட்டமின் மாத்திரைகள், இருமல் மருந்துகள், கர்ப்ப கால மாத்திரைகள் மற்றும் அனைத்து விதமான மருந்துகளுக்கும் போலிகள் உள்ளூரிலேயே இருக்கிறார்கள், பெரு நகரங்களைத் தவிர்த்து, ஊரகப் பகுதிகளில் இருக்கும் எல்லா நகரங்கள் மற்றும் சிற்றூர்களிலும் போலிகளின் முகவர்கள் ஊடுருவி இருக்கிறார்கள், ஒவ்வொரு மருந்துக் கடைகளின் அடுக்குகளிலும் போலியான அல்லது காலாவதியான மருந்துகள் உறுதியாக இருக்கின்றன, இதற்கெல்லாம் காரணம் மருந்து ஆய்வாளர்கள் சரியான அளவில் இல்லாததுதான் என்று துறையின் செயலர் சுப்புராஜ் போகிற போக்கில் ஒரு குண்டு போட்டிருக்கிறார், இலவசத் தொலைக்காட்சி வழங்குவதற்கு மற்றும், முதல்வரின் விழாக்களுக்கு செலவழிக்கப்படும் அரசுப் பணத்தை மிச்சம் பிடித்தால் ஒவ்வொரு மருந்துக் கடைக்கும் ஒரு மருந்து ஆய்வாளரை நியமிக்க முடியும் என்று முதல்வருக்கு ஒரு குறிப்பு வரையுங்கள் சுப்புராஜ் சார், ஏழை எளிய மக்களின் வயிற்று எரிச்சலை நீக்கிய புண்ணியமாவது உங்களுக்குக் கிடைக்கும், ரஜினி வீட்டு திருமண விழாக்களுக்குக் குடும்ப சகிதம் சென்று வரும் மாண்புமிகு முதல்வரை கிருத்திகா வீட்டு இழவுக்கு இழுத்துப் போயிருக்க வேண்டும், ஏழை மக்களின் கண்ணீர் எத்தனை விலை மதிப்பில்லாதது இந்த தேசத்தில் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

Phone-Scam5-723081

மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் தமிழகமெங்கும் ஊழலில் திளைக்கும் மற்றொரு துறை, ஒவ்வொரு மருந்துக் கடையும் இவ்வளவு கப்பம் கட்ட வேண்டும், அந்தக் கப்பம் வசூல் செய்யப்பட்டு அமைச்சர்கள் வரை சரியாகப் பகிர்வு செய்யப்படும், அமைச்சர்கள் வரை அடிக்கப்படும் இந்தக் கொள்ளை முதல்வருக்கும், மக்கள் நல வாழ்வுத் துறை செயலருக்கும் தெரியாதா என்ன? அதனால் தான் செயலர் சுப்புராஜ், மருந்துக் கடைக்காரர்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை என்று ஒரு சமிக்ஞை கொடுத்திருக்கிறார். தமிழகத்தின் மருந்துக் கடைகள் நவீனக் கொள்ளையிடங்கள், எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடம் இவர்கள் கொடுப்பது தான் மருந்து, காரைக்குடியில் ஒரு மருந்துக் கடையில் காலிக் காப்சூல்களில் தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கிப் பல்வேறு நோய்களுக்குக் கொடுக்கிற மருந்துக் கடை மாமேதைகளை எனக்குத் தெரியும், நான் கொடுத்த புகாரின் வாய்ப்பில் அந்தப் பகுதி மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி தன் மகனுக்கு ஒரு புதிய இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொண்டார் அவ்வளவுதான். இது தான் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலை செய்யும் நிலை.

ஏறத்தாழ 25 % முதல் 30 % வரை காலாவதியான மருந்துகளும், போலி மருந்துகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உலவுகின்றன, ஒரு தனியார் மருத்துவரிடமோ, அரசு மருத்துவமனைக்கோ செல்ல இயலாத குடும்பங்களில் இருமல், காய்ச்சல் போன்ற சிறிய உடல் நலக் குறைவு வரும்போது இவர்கள் உடனடியாக நாடுவது அருகில் இருக்கும் மருந்துக் கடையைத் தான், இப்படியான மக்களின் உயிரும், நோயும் தான் மருந்து மாபியாக்களின் உயர் மூலதனம். இந்த கேட்பதற்கு யாருமற்ற மக்களின் நோய்க்கு மருந்துகள் மருந்து ஆய்வாளர்களிடம் இருந்தே வருகிறது என்பது தான் இன்னும் கொடுமையான செய்தி. ஆம், ஏறத்தாழ ஒவ்வொரு மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளரும் தனியாக மருந்து மொத்த விற்பனை நிலையங்கள் வைத்திருக்கிறார்கள், இவர்களின் பினாமிகள் பெயரில் அல்லது மனைவியர் பெயர்களில் இயங்கும் இந்த நிலையங்கள் தான் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து பொங்கி வரும் போலி மருந்துகளின் பிறப்பிடம்.

tblfpnnews_3390139342

ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் கூட இதுபோன்ற குற்றங்களில் பங்கு இருக்கிறது, ஊழல் அமைச்சர்களை தனது அவையில் வைத்து அழகு பார்க்கும் முதல்வர்களும் குற்றவாளிகள் தான், எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவங்கி துறைச் செயலர் சுப்புராஜ் வரையில் அனைவரும் குற்றவாளிகளே, ஏனெனில் ஒவ்வொரு ஊரிலும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் மாமூல் கொடுக்கவென்றே ஊரில் இருக்கும் ஒரு மருந்துக் கடை அதிபர் தேர்வு செய்யப்படுவார், எல்லாக் கடைக்காரர்களும் இந்த தேர்வு செய்யப்பட்ட முதலாளியிடம் கப்பம் கட்டி விட வேண்டும், அவர் மாதந்தோறும் அலுவலருக்குக் கொண்டு போய் சேர்ப்பார், இதில் இத்தனை சதவீதம் மாவட்ட அதிகாரிக்கு, மாவட்ட அதிகாரி மாதந்தோறும் மாநில உயர் அதிகாரிகளுக்கு, இயக்குனர்களுக்கு, செயலர்களுக்கு, துறைச் செயலருக்கு, துறை அமைச்சருக்கு, இப்படியாக இந்தப் படிநிலை குடியரசுத் தலைவர் வரையில் கூடப் போகலாம்…….

தெரிந்து மரணித்த ஒரு "கிருத்திகா" தனது மரணத்தின் மூலம் ஒரு சில மருந்து மாபியாக்களையாவது காட்டிக் கொடுத்திருக்கிறாள், தெரியாமலேயே மரணிக்கும் பல கிருத்திகாக்கள் இந்திய தேசியத்தின் இறையாண்மையில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள், பெரும்பாலும் அம்பானிகளின் தோட்டத்துச் செடிகளுக்கும், டாட்டா வீட்டு கார்களுக்கும் பாதிப்பு நிகழாமல் வரிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்திய தேசத்தின் கொள்ளைக்கார மந்திரிகளுக்கும், சொந்த மக்களின் அழிவுக்கு ஆயுதம் அனுப்பிக் கொண்டிருக்கும் கருணாநிதிகளுக்கும்
இது பற்றியெல்லாம் அத்தனை அக்கறையில்லை. ஸ்டாலினை எப்படி முடிசூட்டுவது, அழகிரியை எப்படி சமாளிப்பது என்றும், இடையில் இலவசங்களால் எப்படி மக்களின் அறிவை மழுங்கடிப்பது என்றும் சிந்தனை செய்யும் நமது முதல்வர் போலி மருந்துகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எப்படி?????

dsc00015_Main

குழந்தைக்கு இருமல் வந்தால் அதன் கழுத்தில் ஏறி மிதி என்று குறி சொல்லும் சாமியார்களின் பின்னால் செல்லும் இந்த தேசத்தில், இலவசத் தொலைக்காட்சிகளும், ஒரு ரூபாய் அரிசியும், கல்வியையும், அடிப்படை அறிவையும் வழங்கி, அடுத்த தலைமுறையை அறிவுசார் சமூகமாக மாற்ற இயலாது. அடிப்படை சுகாதாரமும், அடிப்படைக் கல்வியும் ஊழலில் திளைத்து ஊறிக் கிடக்கும் தமிழகத்தின் ஒவ்வொரு மருந்துக் கடைகளின் உள்ளடக்கத்திலும் புதைந்து போன ஒரு ஏழையின் உயிர் அழுது கொண்டிருக்கும். மாட மாளிகைகளிலும், கூட கோபுரங்களிலும் இந்த ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொள்ளை அடித்து வாழும் மருந்து மாபியாக்கள் தொடர்ந்து வாழ்வாங்கு வாழ்வார்கள். நாம் கட்டுரை எழுதுவேன், நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள், அதை விடவும் பெரிதாக எதையும் பிடுங்கி விட முடியாது இந்ததேசத்தில்……இன்னொரு கிருத்திகாவின் இழவுக்கு வரட்டும் மாநில முதல்வர்களும், அவர்களின் மந்திரி பிரதானிகளும்……
Bill_DangerSwineFluShot

வாழிய பாரத மணித்திருநாடும், அதன் அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்களும்.

***************

Advertisements

Responses

  1. its true anna


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: