கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 2, 2010

இது அங்காடித் தெரு விமர்சனம் அல்ல……

vasanthabalan

திரைப்படங்களை விரும்பிப் பார்க்கிற வகையில்லை நான், அல்லது நான் விரும்பிப் பார்க்கிற திரைப்படங்களை யாரும் எடுப்பதில்லை என்று நீங்கள் பொருள் கொண்டாலும் பரவாயில்லை, என்னைப் போன்றவர்களை நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு திரைப்படத்தை விரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் வசந்தபாலனுக்கு (வசந்த பாலனின் facebook இணைப்பு) நன்றி, திரைப்படம் பார்த்தாலும் விமர்சனம் எல்லாம் எழுதும் அளவிற்கு அவற்றில் ஒன்றும் செய்திகள் இல்லை என்று இருந்த என்னுடைய மனநிலையில், விமர்சனமாக இல்லையென்றாலும் இன்னும் சிலரைப் பார்க்க வைக்கிற முயற்சியாக "அங்காடித் தெரு" பற்றி ஒரு பதிவு எழுதி விட வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன், காரணம் இதே மாதிரியான ஒரு அங்காடித் தெருவில் அடைபட்ட என்னுடைய வாழ்க்கையும் அதற்குள் இருந்தது ஒன்று, இன்னொன்று, மனதைக் கொள்ளை கொண்ட இசை.

"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" "உன் பேரைச் சொல்லும் போதே" என்று இரண்டு பாடல்களை எனக்கு facebook இல் தோழி ஜென்னி (ஜென்னியின் facebook இணைப்பு) அறிமுகம் செய்தார், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதிலும், குரலிலும் இடம் பிடித்துக் கொண்டன பாடல்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த இரண்டு பாடல்களையும் கூடவே "கதைகளைப் பேசும்" பாடலையும் சேர்த்தே கேட்கத் துவங்கி இருந்தேன், வீட்டில் எந்நேரமும் தன்னையும் அறியாமல் இந்தப் பாடல் வரிகளை முணுமுணுக்க மனைவி கொஞ்சம் சந்தேகமாகப் பார்த்தார், (அருகாமையில் எந்தத் தமிழ்ப் பாடல்களையும் நான் முணுமுணுக்கவில்லை என்பது மட்டுமே காரணமாக இருக்கலாம்). அப்போதில் இருந்தே துவங்கியது "அங்காடித் தெரு" மீதான ஒரு ஈர்ப்பு,

அங்காடித் தெரு மீதான ஈர்ப்புக்கு மறைமுகக் காரணம் ஒன்றும் இருக்கிறது, அது இயக்குனர் செல்வகுமாரின் (இயக்குனர் செல்வாவின் facebook இணைப்பு) "அவர்" திரைப்படத்திற்கு முன்னரான ஒரு இசைக் கோர்வையில் (எங்கள் வரிகளில் தவழும் இசைக்கான இணைப்பு) நாங்கள் நண்பர்களாகச் சிலர் பங்கு பெற்றதும், ஒரு அழகான இசை வடிவில் நமது வரிகள் அமரும் போது உருவாகும் திரை இசை குறித்த பெருத்த வியப்பும் தான் அந்த மறைமுகக் காரணம்.

angadi1

தன் மகள் "சாஷா ஸ்பீல்பர்க்" நான்கு வயது இருக்கும் பொழுதில் ஒரு தொலைக்காட்சி நிகழ்வை "ஸ்டீவென் ஸ்பீல்பர்க்" பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாராம், அப்போது அந்த நிகழ்வின் பல்வேறு கதாபாத்திரங்களை மாற்றி மாற்றி "அவர் தான் நான்", "இவர் தான் நான்" என்று அந்தக் குழந்தை சொல்லிக் கொண்டிருந்ததாம், காட்சி ஊடகங்கள் ஒரு மனிதனின் மன வெளிகளை மிகுந்த தீவிரத் தன்மையோடு ஆளுமை செய்வதை அன்றுதான் தான் உணர்ந்ததாக ஸ்பீல்பர்க் சொல்கிறார், அப்படித்தான் திரைப்படங்களும் அவற்றில் வரும் பாத்திரங்களும், திரைகளில் நகரும் மனிதர்கள் நமது உணர்வுகளை மிக எளிதாக ஆட்சி செய்கிறார்கள், பிறகு அதுவே அவர்கள் நம்மை ஆட்சி செய்வதற்குக் கூட வழி வகுக்கிறதோ என்னவோ?

"அண்ணா, அங்காடித் தெரு நன்றாக வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்", திரைப்படத் துறையில் இணை இயக்குனராக இருக்கிற தம்பி மாரிமுத்து கோவிந்தன் (தம்பி மாரிமுத்துவின் facebook இணைப்பு) ஒரு இரவில் இப்படிச் சொன்னார். அவர் ஒரு புதிய திரைப்படத்திற்கு வேலை செய்கிறார், அவர் என்னிடம் ஒரு கதை சொல்லி அதை முழுமையாக மாற்ற உதவ வேண்டும் என்று கேட்டு இருந்தார், ஒரு திறமையான இளம் இணை இயக்குனர் அவர், நானும் அவரும் கதை பற்றிய விவாதத்தின் ஆரம்பப் பகுதிகளில் இருக்கிறோம், அவர் அங்காடித் தெரு பற்றிச் சொன்னபோது ஈர்ப்பு இன்னும் அதிகமானது, சரி இந்தத் திரைப்படத்தில் ஏதோ ஒரு மாற்று இருக்கிறது, வழக்கமான மரம் சுற்றி ஆடும் பாடல்களையும், ஒரே பறப்பில் நான்கைந்து மனிதர்களைத் துவைத்து எடுக்கிற "ஆதி"த் திரைக்கடலின் "சுறா"க்களுக்கு மத்தியில் ஏதோ ஒரு ஐரை மீனோ கெழுத்தி மீனோ "பருத்தி வீரன்"கள் சுற்றி அலையும் "வெயில்" காட்டுக் குடிசையின் விருந்தாக இருக்கும் என்று உறுதியானது.

2007100759250301

இயற்கையாகவே ஈர்ப்பு அதிகமானதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது, அது தமிழ் மீது கொண்ட மாறாத காதலால் விழைந்த ஈர்ப்பு. "அங்காடித் தெரு" அழகான தமிழில் துணிந்து வைக்கப்பட்ட திரைப்படத்தின் பெயர். இந்த ஒற்றைக் காரணமே போதுமானது மற்ற திரைப்பட இயக்குனர்களிடம் இருந்து மாறுபட்ட ஒருவரால் வழங்கப்படுகிற படைப்பு என்று சொல்லாமல் சொல்வதற்கு. ஏனென்றால் நமது இன்றைய திரை இயக்குனர்களில் பலருக்கு தன மீதும் தனது திறமைகளின் மீதும் இருக்கும் நம்பிக்கையை விட துறையின் பாரம்பரிய நம்பிக்கைகளிலும், எண் கணித விளையாட்டுகளிலும் தான் நம்பிக்கை அதிகம்.

படம் முழுக்க என்னைத் துரத்தி வந்த பழைய நினைவுகளின் தாக்கம் உண்மைக்கும், நிழலுக்கும் இடையிலான இடைவெளியில் என்னைத் தள்ளி விட்டு மூன்று மணி நேரத்தில் முற்றுப் பெற்றுவிட்டது. கல்லூரி முடித்துப் பொருள் தேட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வந்தபோது நான் மும்பைக்கு ரயில் ஏறி இருந்தேன், விக்டோரியா ரயில் நிலையத்தில் இறங்கிய போது தென்பட்ட சக மனிதக் கூட்டத்தில் நான் மட்டும் தனித்திருந்தேன், ஆயிரம் பல்லாயிரம் மனிதர்களிடையே நான் மட்டும் ரயில் நிலையக் கூடாரத்தின் மீது நடந்து போவது போல ஒரு வியப்பும், அச்சமும் கலந்த மனநிலை, "சிம்லா ஹவுஸ்" என்றழைக்கப்படும் மும்பையின் ஒரு குடிசைப் பகுதி, ஏதாவது ஒரு பகுதியில் உடைந்து பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் பெட்டிகளோடு வரும் எண்ணற்ற தமிழர்களில் என்னையும் ஒருவனாக ஏற்றுக் கொண்டு விட்டது, கம்பிகள் மட்டும் இல்லாத புறாக்கூண்டு போல இருந்த ஒரு அறைக்குள் அந்த அதிகாலையில் நான் திணிக்கப்பட்டேன், ஆம், ஏற்கனவே ஐந்து பேர் இருந்த அந்த 6" x 6" அறைக்குள் ஆறாவதாக நான்.

mumbai_night_shot

மாநகரத்தின் மொழி எனக்குத் தெரியாது, என்னுடைய மொழி அந்த நகரத்திற்குத் தெரியாது. இரண்டொரு நாட்களில் அறை நண்பர்கள் என்னை வேலை தேடச் சொல்லி வெளியேற்றியபோது வாழ்க்கையின் வலி முதல் முறையாக உணரப்பட்டது, கையில் இருக்கும் பணம் என்று சொன்னால் முப்பது ரூபாயும் சில்லறைக் காசுகளும், நகரை ஒரு சுற்றுச் சுற்றி விடுவது என்று முடிவு செய்தேன், மும்பையின் சாலைகளை “மரைன் டிரைவில்” துவங்கி ஜோகேஷ்வர் வரைக்கும் நடந்தே சுற்றிய வலி இன்னும் அரபிக் கடலின் கரைகளின் காற்றாய் உலவிக் கொண்டு தான் இருக்கும்.
கடைசியாக ஒரு பல்பொருள் அங்காடியில் என்னை வேலைக்குச் சேர்த்துப் பெருமை தேடிக் கொண்டார் ஒரு உறவினர். என்னுடைய வாழ்வின் "அங்காடித் தெரு" இப்படித்தான் தொடங்கியது, இந்தத் திரைப்படம் பற்றிய செய்திகளை படிக்கும் போதெல்லாம் "அட நம்ம இருந்த மும்பையின் "அங்காடித் தெருவுக்கும்", இந்தத் தி நகரின் "அங்காடித் தெருவுக்கும்" என்ன வேறுபாடு என்று பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
_45512593_india_512

அது ஒரு தனியான உலகம் பாஸ், கொடுமையானதும் கூட, கண்ணுக்கெதிரில் அழகான ஒரு குடும்பம் நின்று வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் கையில் இருக்கும் குளிர் பானத்தில் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும், நாமும் அந்தக் குடும்பத்தின் நடுவில் உள்ளே நுழைந்து விட மாட்டோமா என்று ஒரு ஏக்கம் வரும், நாமும் நம் குடும்பமும் இப்படி சிற்றுலாச் சென்று விட மாட்டோமா என்று மனம் தவியாய்த் தவிக்கும் பாருங்கள், நீங்கள் அனுபவித்ததில்லையா??? அங்காடித் தெரு பார்த்து விடுங்கள் பாஸ், நிச்சயம் அனுபவிப்பீர்கள், நம்மைச் சுற்றிலும் கடலும், கடற்காற்றும், மணலும், பூங்காக்களும் உள்ளுக்குள் நிறைந்த மனிதர்கள் நகர்ந்து கொண்டே இருப்பார்கள், நாம் மட்டும் நின்று கொண்டே இருக்க வேண்டும், அம்மாவும், அப்பாவும் எழுதும் கடிதங்கள் தினமும் வந்து விடாதா என்று மனம் அஞ்சல்காரரின் வருகையை நோக்கியே குவிந்து கிடக்கும், எப்போதாவது வருகிற அவர்களின் கடிதம் எப்போதும் என்னுடன் இருக்கும், இப்போதும் இருக்கிறது, என் கண்கள் உரசி உரசி அந்தக் கடிதங்களின் எழுத்துக்கள் தேய்ந்து போயிருந்தாலும், அவை எனக்கு உணர்த்திய மனித உறவுகளின் உன்னதம் இன்னும் பல்லாண்டு காலங்கள் வெளியிடப்படாத இலக்கியமாய் கிழிந்த அந்தக் கடிதங்களில் படிந்து கிடக்கட்டும்.

angadi-theru-tamil-movie-9-725298

பணி முடிந்து திரும்பும் வழியில் இருக்கும் பூங்காவின் படிக்கட்டுகளில் வழியும் தென்றலின் வாசத்தை ஒருநாளாவது இங்கு வருகிற சுற்றுலாப் பயணிகளைப் போல அமர்ந்து நுகர்ந்து விட வேண்டும் என்கிற என் கனவு பெரும்பாலும் இரவின் சக்கரங்களில் உருண்டு போய் விட்டிருக்கும், அழுக்குச் சட்டையும், வியர்வை நாற்றமும் மட்டும் நம்மோடு கூடவே அறை வரைக்கும் வந்து அங்காடித் தெருவை என்னிலிருந்து அகற்றி வழி அனுப்பும், அந்த அழுக்கும், வியர்வை நாற்றமும் கலந்த என்னுடைய வாழ்க்கையை, அந்த அழுக்கும், வியர்வை நாற்றமும் நிரம்பிய என் ஆயிரம் ஆயிரம் சகோதரர்களின் வாழ்க்கையை வெகு மக்களுக்கு முன்னாள் வெள்ளித் திரைகளில் வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி வசந்தபாலன்.

பல்பொருள் அங்காடிகளுக்குப் போகும் போதெல்லாம் அங்கு வேலை செய்யும் சகோதர சகோதரிகளிடம் மிகுந்த அன்போடும் பரிவோடும் பேசும் என்னுடைய வழக்கத்திற்குப் பின்னால் ஒரு "அங்காடித் தெரு" இருப்பது அனேகமாக என் மனைவிக்கும் (மனைவியின் facebook இணைப்பு) தெரியாது, அதிலும் "தம்பி, உன் பெயர் என்ன?" "நீங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்" "அம்மா இந்தப் பொருளின் விலை என்ன?" "இது இருக்கிறதா அம்மா" என்று அவர்களிடம் மிகுந்த நெருக்கமான அன்போடும், நட்போடும் பேசும்போது அவர்களின் கண்களில் வழியும் அந்த அன்பையும், ஏக்கத்தையும் பார்த்துப் பூரிப்பேன், அவர்கள் அத்தகைய அன்பையும், நேசத்தையும் எதிர் நோக்கிக் கிடக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் அத்தகைய அன்புக்காக, சக மனிதர்களின் அன்பான ஒற்றை வார்த்தைகளுக்காய் நானும் தவம் கிடந்திருக்கிறேன். உங்களில் யாரேனும் கூடக் கிடந்திருக்கலாம்,

2470339802_f91d51d9f8

வசந்தபாலனின் "அங்காடித் தெரு" பற்றிய விமர்சனம் எல்லாம் பல பேர் எழுதி விட்டார்கள், அதன் நிறை குறைகளைப் பற்றியெல்லாம் விவாதிக்க எனக்கு மனமில்லை, ஏனென்றால், என்னைப் போலவே பல தமிழ் இளைஞர்களை அவர்களின் கனவுகளை உள்ளடக்கிய ஒரு காலச்சுவடு இந்தத் திரைப்படம், இந்த வாழ்க்கையைப் படம் பிடிக்க வேண்டும் என்கிற உந்துதலே தமிழ் திரைப்படச் சூழலில் ஒரு மாற்றத்தின் விதையாகத் தான் இருக்கும், இத்தகைய தெருக்களில் வாழ்ந்து வெற்றியின் சிகரங்களில் ஏறி இருக்கும் நம்பிக்கையை, உழைப்பின் மகத்துவத்தை இனி வரும் படங்களில் பலர் திரைச் சுருளில் ஏற்றுவார்கள், அந்தச் திரைச் சுருள்கள் உலகத் திரைப்படங்களின் வரலாற்றில் வசந்தபாலனுக்கு என்று ஒரு இடத்தை வருங்காலங்களில் வழங்கலாம், ஏனென்றால் வெறும் கனவுகளோடு எளிய மக்களின் வாழ்க்கையையும் இவர் படம் பிடித்திருக்கிறார்.
Angadi-Theru-Stills-6

ஒரு முறை பாருங்கள், எளிய மக்களின் வாழ்க்கையை விழுங்கும் முதலாளித்துவத்தின் தாக்கத்தை நீங்களும் உணர்வீர்கள், பொருளாதாரச் சமன்பாடுகளைப் பற்றி அறிஞர்கள் ஏன் இத்தனை தீவிரமாகப் பேசுகிறார்கள் என்று உங்களுக்கும் புரியலாம்,
வாழ்த்துக்கள் வசந்தபாலன், தி.நகர் மட்டுமல்ல, உலகெங்கும் அங்காடித் தெருக்களின் விளக்கொளிகளில் கரைந்து காணாமல் போகும் உழைப்பாளிகளுக்காக ஒரு படம் எடுத்ததற்காகவும், அதற்குள் நீண்ட நாட்களுக்கு முன்னாள் தொலைந்து போன என் வாழ்க்கையின் "அங்காடித் தெரு" ஒன்றின் நினைவுகளை மீட்டெடுத்து என்னிடம் மீண்டும் கொடுத்ததற்காகவும்……………………

(கை.அறிவழகன் இன் facebook இணைப்பு.)

***************

 

Advertisements

Responses

 1. அய்யா வ‌ண‌க்க‌ம்,

  உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் ப‌டித்தேன்,உங்க‌ளுக்கு பின் இத்துனை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருப்ப‌து ஆச்சிரிய‌த்தை த‌ந்த‌து.ஒவ்வொரு ம‌னித‌ருக்குள்ளும் எத்த‌தை எத்த‌னை அனுப‌வ‌ங்க‌ள். நேற்று மாலை தான் அப்பட‌த்தை பார்க்க‌ நேர்ந்த‌து.என்னை ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை யோச‌னை செய்ய‌வும் ,சிந்திக்க‌வும் வைத்துள்ள‌து இப்ப‌ட‌ம். ப‌ல‌ ஆயிர‌ம் முறை ர‌ங்க‌நாத‌ன் தெருவை க‌டந்து சென்றுள்ளேன், அங்குள்ள‌ ம‌க்க‌ளை பார்க்கையில் ஒரு வ‌ருத்த‌ம் இருக்கும், ஆனால் அது சாதார‌ன‌ நிக‌ழ்வாக‌த்தான் இருக்கும்(ம‌ற்ற‌ ஏழ்மை நிலையில் உள்ள‌ ம‌க்க‌ளை பார்க்கும் போது ஏற்ப‌டும் நிக‌ழ்வாக‌த்தான் இருக்கும்). ஆனால் அங்குள்ள‌ ம‌க்க‌ளின் வாழ்க்கை எத்த‌கைய‌ பின்ன‌னியில் உள்ள‌து என்ப‌தை ஆழ‌மாக‌ சொல்லிய‌ ப‌ட‌ம் “அங்காடி தெரு”. இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ யாவ‌ரும் இனி அவ்வ‌ழி க‌ட‌க்கையில் அங்குள்ள‌ ம‌க்க‌ளின் பாதிப்பை உள்வாங்கியே செல்வ‌ர். அத‌ற்கு வ‌ச‌ந்த‌ பால‌ன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றியை சொல்ல‌வேண்டும்.

  நேற்று ப‌ட‌ம் பார்த்து விட்டு, இர‌வு நித்திரை கொள்ள‌ வெகு நேர‌ம் ஆகிவிட்ட‌து. ச‌மூக‌த்தில் மாற்ற‌த்தை ப‌டைக்க‌ வேண்டும் என‌ எண்ணும் என்போன்றோர்க்கு நல்ல‌ ப‌ல‌ த‌க‌வ‌ல்களையும்,ம‌றைந்து கிட‌க்கும் ப‌ல‌ உண்மை நிக‌ழ்வுக‌ளையும் ப‌திவுசெய்துள்ளார் இய‌க்குன‌ர். நான் ப‌ணி புரியும் நோக்கியா தொழிற்சாலையில் ஆப்பிரேட்ட‌ர்க‌ளாக‌ ப‌ணிபுரியும் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளின் நிலையும் அப்ப‌டித்தான்.ர‌ங்க‌ நாத‌ன் தெருவில் உள்ள பாதிப்பு அள‌வுக்கு இல்லை எனினும் நோக்கியா ம‌க்க‌ளும் பாதிப்புள்ளான‌வ‌ர்க‌ளே, திரையில் அந்த‌ ம‌க்க‌ளை தான் நான் பார்த்தேன்.அவ‌ர்க‌ளுடைய‌ பாதிப்புக‌ளை ப‌திவு செய்ய‌ வேண்டும் என்ற‌ முய‌ற்சியில் வெகுநாட்க‌ளாகா இருக்கும் நேர‌த்தில் தான் “அங்காடி தெரு” அத்த‌கைய‌ நிக‌ழ்வை ப‌திவு செய்துள்ள‌து.எனினும் இந்த‌ நோக்கியா தொழிற்சாலையில் உள்ள‌ ம‌க்க‌ளின் பாதிப்புகளை நிச்ச‌ய‌ம் ப‌திவு செய்வேன்.
  +2 முடித்து மேற்கொண்டு ப‌டிக்க‌ இய‌லாம‌ல்,குடும்ப‌ சூழ‌ல் கார‌ண‌மாக‌ ப‌ணிபுரியும் என் தோழ‌ர்க‌ளுக்கு விடிய‌ல் நிச்ச‌ய‌ம் ஏற்ப‌டும்.

  ப‌ல‌ சிந்த‌னைக‌ளை த‌ட்டிவிட்டு சென்ற‌ “அங்காடி தெரு” வ‌ச‌ந்த‌ பால‌னுக்கும்,இதை ப‌திவுசெய்ய‌ தூண்டிய‌ கை.அறிவழகன் அவ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள்…

 2. அண்ணா,

  விமர்சனம் செய்யாமல் கதைக்கும் நம் வாழ்விற்கும் ஒப்பீடு எழுதியதற்கு நன்றி.

 3. அன்புக்குரிய இரா.பிரவீன்,

  எனக்குள் என்றில்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற திரைப்படங்களும், நாவல்களும் வெளியிடப்படாமல் புதைந்து கிடக்கிறது, எழுத்து எனக்கு வாய்த்திருப்பதால் இத்தகைய சில நிகழ்வுகள் வெளியாகிறது. இல்லையென்றால் பல ஆயிரம் நிகழ்வுகளைப் போலப் புதைந்து போயிருக்கும்.

  உங்கள் நோக்கியா தொடர்பான பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், தொடர்ந்து சமூகப் பணிகளை விடாது செய்யுங்கள்.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 4. அன்பு ஜகன் நாதன்,

  கதைகள் கூட வாழ்வியலுக்குப் பயன் தரும் காலங்களில் அவற்றை ஒப்பீட்டு நோக்கில் உரமூட்டுவதும், ஊக்கமூட்டுவதும் நம் அனைவரின் கடமை தானே.

  உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. nandri nanbare , im also impressed with this movie, director has more courage to take this type of movie, But it should come before 10 years, because right now there is a lot of shortage of manpower in all industries. so if the owners going to treat badly the employees (like the movie) means nobody will come for job for whatever they going to pay as salary…… this is the current trend or situation………….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: