கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 6, 2010

மருத்துவமனை – சில குறிப்புகள்.

hospital

நெடுநாளைக்குப் பிறகு ஒரு இரவு முழுவதும் மருத்துவமனை ஒன்றில் கழிக்கும் படியாய் ஆனது, வழக்கமாய்த் தன்னுடைய அலைபேசியில் வரும் தொடர்ச்சியான தவறிய அழைப்புகளுக்கு மொட்டை மாடியில் சென்று பதிலளிக்கும் தம்பியின் மாலைப் பொழுது என்னவோ காய்ச்சலில் அவன் கூடவே படுத்திருந்தது, அருகில் இருந்த மருத்துவமனையின் மருத்துவர் அன்று இரவு முழுவதும் அங்கேயே இருக்க வேண்டும் என்று சொன்னதும், வழக்கமான மருத்துவமனைகளின் நவீனக் கொள்ளைகளை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இணைப்பாகக் கொசுக்கடியும். எப்படி இருப்பினும் நாம் இன்னும் மருத்துவமனைகளை நம்புகிறோம், பாதுகாப்பான அடுத்த நாளை நமக்கு மருத்துவமனைகள் வழங்கும் என்று முழுமையாகவோ, அரைகுறையாகவோ நம்புகிறோம்,

மருத்துவமனைகளின் வரவேற்பறைகளில் இறுக்கமாய் அமர்ந்திருக்கும் நோயாளிகளின் துயரமும், வலியும் மருத்துவரின் அறைகளுக்குள் புகுந்தவுடன் பாதியாகக் குறைகிறது, நம்பிக்கையின் கைகளால் துயரங்கள் தளர்த்தப்படுகின்றன, மருத்துவர்களின் கரங்கள் நோயாளிகளின் துயரங்களைக் களையும் என்று மனிதர்கள் தொடர்ச்சியாக நம்புகிறார்கள், அந்த நம்பிக்கையே பெரும்பாலான மருத்துவர்களின் பொருள் பற்றிய துயரங்களைக் களைகிறது. மருத்துவர்களின் நம்பிக்கையான வார்த்தைகள் மருந்துகளின் வீரியத்தை விழுங்கி அவற்றின் துணையின்றியே பல நோயாளிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் நிரம்பியவை. அத்தகைய மருத்துவர்களைப் பற்றி நாம் இனி வருங்காலங்களில் வரலாற்றில் படிக்கலாமோ என்னவோ?

Hospital_corridor_2 உறவுகளுக்கு உடல் நலமில்லை என்றால் வீட்டுச் சூழலில் கூட உறக்கம் அத்தனை எளிதானது அல்ல, என்னைப் போலன்றி, எல்லா உறவுகளும் நலமுடன் இருந்தும் ஒரு சின்னஞ் சிறிய பெண் பொருளீட்டளின் தேவையில் செவிலியாய் உருவெடுத்து என் எதிரில் அமர்ந்து இருக்கிறாள், தன் உறக்கத்தை தான் அன்பு செலுத்தும் யாருக்காகவேனும் அவள் துறந்திருக்க வேண்டும், வழக்கமான தனது மாத்திரை மருந்துகளுடனான கணக்கு வழக்குகளில் மூழ்கியும், இடையிடையில் செய்தித் தாளொன்றின் வாசித்த வரிகளையே மீண்டும் வாசித்த களைப்பு கண்களில் தெரிய, அந்தப் சின்னஞ்சிறு பெண் நோயாளிகளின் வலியைத் தன் கையில் இருக்கும் பஞ்சுகளால் துடைக்கிறாள், அனேகமாக அந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கு மருத்துவமனைகளில் உலவும் துயரங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம், அப்படியே இருக்கட்டும், அன்றைய இரவை எப்படியாவது துரத்தி விட வேண்டும் என்கிற முயற்சிகளில் தன்னுடைய அலைபேசியில் பல்வேறு மொழிப் பாடல்களைக் கேட்டபடி அவ்வப்போது உறங்குகிறாள், மொழிகளுக்கு இரவு, பகல், துயரம், மகிழ்ச்சி என்ற எந்த வேறுபாடுகளும் இருப்பதில்லை, இரவுகளுக்கும், துயரங்களுக்கும் மொழி ஒரு சிக்கலாக இருப்பதுமில்லை, எல்லா மொழிக்காரர்களும் சிரிக்கும் பொழுதும், அழும்பொழுதும் மட்டும் மொழிகளை எளிதாகக் கடந்து விடுகிறார்கள், உயிருக்கு நெருக்கமாகி விடுகிறார்கள்,
hospital_corridor_750

நகர வாழ்க்கையின் நெருக்கடிகளில் சில நேரம் அன்பும், நேசமும் ரயிலில் கூட வரும் வழிப்பயணிகளைப் போலச் சொல்லாமல் கிளம்பி விடுகிறது, நீண்ட நேரம் உறவுகளைப் போல உரையாடிக் கொண்டிருந்து விட்டு நாம் உறங்கிக் கொண்டிருக்கையில் வந்து விடுகிற அவர்களின் ஊரில் இறங்கிக் காணாமல் போகும் அந்தப் பயணிகளைப் போலவே அன்பையும், நேசத்தையும் நாம் தொலைத்து விடுகிறோம், நகரமோ, கிராமமோ அன்புக்கான அளவுகோல் ஒன்றுதான், அருகில் இருக்கும் உயிர்களையும், அவர்களின் இயக்கத்தையும் அறிதல்.உயிர்களின் இயக்கத்தை உன்னிப்பாகக் கவனிப்பவன் அவற்றைத் துன்புறுத்துவதில்லை, வலியைப் பற்றி அதிகம் அறிந்தவன் யாருக்கும் வலி கொடுப்பதில்லை. ஒரு அன்பான மனிதனுக்கு அருகில் வளரும் செடிகள் மற்ற செடிகளை விட வேகமாகவும், செழிப்பாகவும் வளர்கின்றன என்று எங்கேயோ படித்த நினைவு, அன்பின் தாக்கம் அத்தனை வலிமையானது.

நோயாளிகளின் உலகம் மருத்துவமனைகளைச் சுற்றியே இயங்குகிறது, மனிதனின் துயரமான காலங்களின் வெம்மை நிரம்பிய மூச்சுக் காற்று மருத்துவமனைகளின் படுக்கைகளில், அதன் சுவர்களில் என்று பேதங்கள் இன்றி வலிகளோடு உலவிக் கொண்டே இருக்கிறது, மருத்துவமனைகளின் இரவுகள் மிக நீளமானவை, அண்டார்ட்டிக்காவின் ஆறுமாத இரவை விடவும் அவை நீளமாய் இருப்பது போலத் தோன்றும், மருத்துவமனை வளாகங்களில் சில நேரம் மின்விசிறியின் இரைச்சல் மனித இனத்தை அழிக்க வரும் ஆழிப் பேரலையின் இரைச்சலாகவும், அமைதியை உருட்டி வந்து நம் உயிர்ப் பாறைகளில் மோதும் அகண்ட அருவியின் இரைச்சலாகவோ கூடத் தோன்றும், அது நீங்கள் அங்கு இருக்கும் பொழுதைப் பிடித்துத் தொங்கிச் சுழன்றபடி, உங்கள் மனப் புழுக்கத்தை நீக்குவதற்கு வழி தெரியாமலும் தன் வழியில் சுற்றிக் கொண்டே இருக்கும்.
doctor_bigger

அன்றைய மருத்துவமனை இரவு இன்னொரு மருத்துவமனை நினைவுகளுக்குள் என்னைத் திணிக்கிறது, நினைவுகள் கடந்த காலத்திற்குள் விரைந்து பயணிக்கும் வல்லமை பொருந்தியவை, சில நேரங்களில் எதிர் காலத்தைக் கூட நாம் பயணிக்கும் வாகனங்களை விடவும் வேகமாய்க் கடந்து சென்று விடும் நினைவுகள், மன வேகத்திற்கு இணையாகப் பயணம் செய்து பழக்கப்பட்டிருக்கும் நினைவுக் குதிரைகள் அன்று முழுவதும் மருத்துவமனைகளைச் சுற்றியே என்னை இழுத்துச் சென்றபடி இருந்தன.

மருத்துவமனைகளைப் பற்றிய என் நினைவுகள் அதிகம் இல்லை என்றாலும், சில மருத்துவமனை நினைவுகள் என் உயிருடன் ஒட்டிக் கொண்டு விட்டதை அத்தனை எளிதில் துடைக்க முடியாது, ஏழாம் வகுப்புப் படிக்கும் போது செய்யப்பட்ட குடல்வால் அறுவை சிகிச்சையின் ஒரு நீண்ட இரவில் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் என்ன மாதிரியான மனநிலை இருந்திருக்கும் என்று ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பு தான் என்னால் முழுமையாக உணர முடிகிறது, பெற்றவர்களின் அன்பு நோயின் காலங்களில் அழுகையாய்ப் பெருக்கெடுக்கிறது, அலைமோதுகிறது, "அன்பின் வழியது உயிர்நிலை" என்று இலக்கியம் படைக்கிறது, மனித வாழ்வை மேன்மையுறச் செய்கிறது, நாகரீகத்தை நோக்கி நம்மை அழைத்து வந்திருக்கிறது.

மும்பையின் மருத்துவமனையொன்றில் கழிந்த இரண்டு இரவுகள் என்னால் மறக்க இயலாதவை, பக்கத்துக்கு ஊரின் முதியவர் ஒருவர், வேலை செய்ய இயலாத வயதில் தனக்காகவோ, இல்லை யாருக்காகவோ இரவுக் காவலாளியாக வேலை செய்து கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டார், உறவினர் என்று இருந்த ஓரிருவரும் அன்று இரவில் காணாமல் போயிருந்தார்கள், நலமாய் இருக்கையில் எப்போதும் கூடவே இருந்த இன்னொரு முதியவரை முதல் முறையாக அன்று அவருடன் பார்க்க முடியவில்லை, அனேகமாக அவருக்கு அன்று மிக முக்கியமான ஏதாவது வேலையாக இருக்கலாம், அல்லது இவரைப் போலவே அவரும் நோய் வாய்ப்பட்டிருக்கலாம்.

Pr in hospital corridor - cruched

முதல் நாள் முழுவதும் நம்பிக்கை தருவதாய் இருந்த அந்தப் பெரியவரது நிலை இரண்டாவது நாளில் கவலைக்கிடமானது, அன்றைய பொழுதில் அவரது தேவை அன்பையும், நம்பிக்கையையும் வழங்கும் வார்த்தைகள் மட்டுமே என்பது அவரது கண்களை உற்று நோக்கியபோது தெரிந்தது, வாழ்வியலின் நெருக்கடிகளை எல்லாம் கடந்து அவருடன் நான் இருக்கிறேன் என்று கண்களாலேயே உணர்த்தினேன், மொழிகள் செயலற்றுப் போகும்போது கண்கள் புதிய பரிமாணத்தை அடைகின்றன, அவை எல்லா மொழிகளையும் மிக எளிதாகப் பேசுகின்றன, கைகளைப் பிடித்து விளையாடுகின்றன, இசையின் கட்டுக்குள் வர முடியாத பாடல்களைப் பாடுகின்றன,

தனது நோய் மிகுந்த துயரமான நாட்களில் நாட்களில் தன் மீது அன்பு செலுத்தவும், தனக்குப் பணிவிடை செய்யவும் யாரோ ஒருவர் இருக்கிறார் என்கிற மனநிலை உலகில் எல்லாச் செல்வங்களையும் குவித்து முன் கிடத்தும் மகிழ்ச்சியை எல்லாம் விடச் சிறந்ததாக இருக்க வேண்டும், அந்தப் பெரியவரின் கண்களில் வழிந்த கண்ணீர் என் கைகளில் இருந்து அன்றே கழுவப்பட்டிருந்தாலும், அழிக்க முடியாத கோடுகளாய் வாழ்க்கையின் முழுமையை, மனிதத்தின் நிறைவை என் இதயத்தில் வரைந்து விட்டுத் தான் சென்றன, மரணத்தின் வலி தெரியாமல் அவர் மரணத்தை எதிர் கொள்ள நான் அவருக்கு உதவினேன்.
bears-mom39

என் வாழ்க்கையில் எந்தப் பகுதியிலும் தொடர்பு இல்லாத அந்த மனிதர் என் தோள்களில் தன்னுயிரை விடுத்தார், தனது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் பங்கு பெற்றிருந்த எந்த மனிதரையும் அவர் தனது கடைசி நிமிடங்களில் சந்திக்க விரும்பவுமில்லை, சந்திக்கவுமில்லை. மரணம் பற்றிய அச்சம் மிகுந்திருந்த என் இளவயது மனநிலையை அவரது மரணம் எனக்குள் இருந்து முற்றிலுமாகத் துடைத்து விட்டிருந்தது, அவர் கடைசியாக விட்டுச் சென்ற வார்த்தைகள் கால காலத்திற்கும், அவற்றைக் கடந்தும் எனக்கு மறக்கப் போவதில்லை. அவர் கடைசியாய்ச் சொன்னது இந்த வார்த்தைகளைத் தான், "தம்பி, நீ நல்லா இருப்பே". ஆம், நான் நன்றாகவே இருக்கிறேன், ஏனென்றால்,நான் நன்றாகவே வளர்க்கப்பட்டேன்.

இரவு முழுவதும் விழித்திருந்த என்னுடைய அன்பு அநேகமாகத் தம்பியின் காய்ச்சலை துரத்தியிருக்கலாம், அந்தப் பெரியவர் பற்றிய நினைவுகளின் தாக்கத்தில் இருந்து நானும், காய்ச்சலின் இரவில் இருந்து தம்பியும் விழிக்கச் சரியாய் கதிரவன் சாளரங்களின் வழியாக இன்னொரு விடியலை உள் நுழைக்கிறான்,
50_baby_elephant_hiding_und

எனக்கு வழங்கப்பட்டிருக்கிற, வழங்கப்படவிருக்கிற எல்லா வாழ்த்துகளையும் விட வலிமை மிகுந்த, வீரியம் மிகுந்த வாழ்த்து அந்தப் பெரியவரின் கண்ணீர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும், உங்களுக்கும் தெரிய வேண்டுமா?? வழியில் கடந்து போகிறவர்களின் வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொள்ளும் மனிதர்களாய் இருங்கள், கொஞ்சம் கடினமாக இருக்கிறதா?? குறைந்த பட்சம் அருகில் இருக்கும் உறவுகளின் வாழ்க்கையை, அவர்களின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

"அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின் மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்"

“அன்பின் வழியதுயிர் நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.”

thiruvalluvar

என்று ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி விட்டுச் சென்ற வள்ளுவனின் வழியில் வந்தவர்கள், பொருளீட்டளின் பாதையில், நெருக்கடியில் அதே வழியில் செல்கிறோமா???

*************

Advertisements

Responses

 1. eppu sugama irukia? enra siru munangal muulam en appatha elupia pothu unarntha negilvu entha article mulam marubadium unerthan. nanri arivalzhaga.

 2. வாழ்க்கையின் வகுப்புகளில் அன்பும் அறனும் போதிக்கப்பட்டிருந்தாலும், ஆசை சுயநலம் சந்தப்பம் இவை மனிதனை வெறும் தோலின் மேல் போர்த்திய உடம்பாகத்தான் வைத்திருகிறது. எல்லாவற்றுக்குமே சமூகத்தின் மீது பழியைபோடும் தனிமனிதம் தன்னை தன்னமல்லவனாய் மாற்றிக்கொள்ள ஒரு முறையேனும் முயற்ச்சித்ததுண்டா…

  //உங்களுக்கும் தெரிய வேண்டுமா?? வழியில் கடந்து போகிறவர்களின் வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொள்ளும் மனிதர்களாய் இருங்கள், கொஞ்சம் கடினமாக இருக்கிறதா?? குறைந்த பட்சம் அருகில் இருக்கும் உறவுகளின் வாழ்க்கையை, அவர்களின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

  அறிவழகன் அவர்களே.. உங்களது சிந்தனைகள், எழுச்சி கருத்துக்கள் அனைத்தும் நம் இளைஞர் சமுதாயத்தை வளம்பெறச்செய்யட்டும்.. தொடரட்டும் உங்கள் பணி.. நன்றி.

  க. சுரேந்திரன்.

 3. மருத்துவ மனை – சில குறிப்புகள்.
  என் வாழ்க்கையில் எந்தப் பகுதியிலும் தொடர்பு இல்லாத அந்த மனிதர் என் தோள்களில் தன்னுயிரை விடுத்தார், தனது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் பங்கு பெற்றிருந்த எந்த மனிதரையும் அவர் தனது கடைசி நிமிடங்களில் சந்திக்க விரும்பவுமில்லை, சந்திக்கவுமில்லை. மரணம் பற்றிய அச்சம் மிகுந்திருந்த என் இளவயது மனநிலையை அவரது மரணம் எனக்குள் இருந்து முற்றிலுமாகத் துடைத்து விட்டிருந்தது, அவர் கடைசியாக விட்டுச் சென்ற வார்த்தைகள் கால காலத்திற்கும், அவற்றைக் கடந்தும் எனக்கு மறக்கப் போவதில்லை. அவர் கடைசியாய்ச் சொன்னது இந்த வார்த்தைகளைத் தான், “தம்பி, நீ நல்லா இருப்பே”. ஆம், நான் நன்றாகவே இருக்கிறேன், ஏனென்றால்,நான் நன்றாகவே வளர்க்கப்பட்டேன்.

  நெகிழ வைக்கும் கருத்துகள், பதிவு.
  நாங்களும் பார்க்கிறோம் மருத்துவமனை, அந்த சூழலை. நீங்களும் பார்க்கிறீர்கள். வித்தியாசமான பார்வை, மனித நேய மிக்க கருத்துகள்.
  அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
  நன்றி & வாழ்த்துகள் திரு கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: