கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 24, 2010

உடல் மொழிக் கவிதைகள்

women-power_18

பெண்ணுரிமை குறித்த விவாதங்களும், கவிதைகளில் இடம் பெறும் உடல் மொழியும் இன்றைக்கு தமிழ் இலக்கியச் சூழலில் பெருமளவில் தாக்கம் விளைவித்திருக்கிறது, இலக்கியங்களில் இருந்த அழகியல் குறித்த ஒரு மாயையும், பொது மனித மனநிலையும் மாற்றமடைந்து இவ்வாறான கூர்மையான தளங்களில் பயணிக்க ஏதுவான ஒரு இலக்கியச் சூழலை வழங்கியதற்காக சில படைப்பாளிகளுக்கு நாம் நன்றி சொல்லத் தான் வேண்டும். இலக்கிய மனநிலை என்கிற ஒரு அகவெளியை படைப்பாளியைச் சுற்றி இருக்கும் புறச் சூழலும், அந்தப் படைப்பாளிக்குள் இயங்கும் அகச் சூழலும் கட்டமைக்கின்றன, அவ்வாறான கட்டமைத்தலில் படைப்பு ஏதோ ஒன்றைச் சார்ந்தே வெளியாக வேண்டிய நெருக்கடிக்குள் வீழ்கிறது, ஒவ்வொரு படைப்பாளியும் ஏதோ ஒன்றைச் சார்ந்தே தனது படைப்புகளை வழங்குகிறார்கள். உடல் மொழி சார்ந்த கவிதைகள் அல்லது குறியீட்டு இலக்கியங்கள் ஒரு படைப்பாளியின் அகப் போராட்டங்களைச் சார்ந்து அமைவதால் இதனை ஒரு “முரண்பட்ட உளவியல் வெளிப்பாடு” என்று அடையாளம் காண இயலும்.

பெண்களின் வாழ்க்கையைப் போலவே இலக்கியங்களும், இதில் எந்த மாதிரியான விடுதலை பெற்ற இலக்கிய வெளிகளைப் பெண்கள் எதிர் நோக்க முடியும் என்று எனக்கு விளங்கவில்லை, பெரும்பாலான பெண்கள் பால் உறவுகள் குறித்த தங்கள் விருப்பங்களையே வெளியிட முடியாத ஒரு சிக்கலான சமூகத்தில், உடல் மொழிகளின் மூலம் முரண்களைச் சொல்ல விழையும் படைப்புகள் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லாத அவர்களின் வாழ்க்கையைப் போலவே முடக்கப்படுகிறது, கடுமையாக எதிர்க்கப்படுகிறது, பெண்களின் இலக்கியம் ஒடுக்கப்பட்ட இலக்கியம், ஆண்களின் மனவெளியில் இருந்து பிறக்கும் இலக்கியத் தூண்டுதலுக்கும், பெண்களின் மனவெளிகளில் இருந்து தோன்றும் இலக்கியத் தூண்டுதலுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.

1251829147_feminism_1020230

ஒரு பெண் உடல் மொழிகளால் இலக்கியம் செய்கிறாள், அல்லது செய்ய முனைகிறாள் என்று வைத்துக் கொள்வோம், அப்படி ஒரு முடிவை அவள் எடுப்பதற்காகவே நீண்ட பயிற்சியையும், மன உளைச்சலையும் எதிர் கொண்டிருக்க வேண்டும், புனிதம் என்றும், மறைபொருள் என்றும் போற்றி வைக்கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட வேண்டும் என்கிற ஒரு தார்மீக வெறி அந்தக் கவிதையைச் சுற்றி மறைந்திருப்பதை எத்தகைய முதிர்ச்சியான ஆணாலும் புரிந்து கொள்ளவும், தீர்வு சொல்லவும் இயலாது, அப்படியே புரிந்து கொண்டதாக அவர் சொன்னாலும், தீர்வு சொல்ல முயன்றாலும் அவர் ஆணாதிக்க சமூகத்தின் பொது வெளியில் அகப்பட்டுக் கொண்டார் என்றே கருத இயலும், தலித் இலக்கியத்தை பொது வெளியில் இயங்கும் ஒரு ஆதிக்க சாதிக்காரரால் எப்படி எழுதவும், வலி உணரவும் இயலாதோ, அதைப் போலவே பெண்களின் உடல் மொழி சார்ந்த வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள அந்த இடத்தில நீங்கள் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். இருந்தே ஆக வேண்டும்.

இலக்கியப் படைப்புகளில் முதன்மை ஆண் சமூகத்தின் படைப்புகள், இரண்டாம் நிலைப் பெண்ணியப் படைப்புகள் என்று தன்னிச்சையாகவே காலம் காலமாய் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் இழிவிற்கான காரணிகளைக் கண்டு பிடித்து அழிக்கும் காலம் வரை பெண்ணியம் ஒரு வீட்டுக்கு அடங்காத பிள்ளையைப் போலவே சித்தரிக்கப்படும் அல்லது கருதப்படும். பெண்ணியக் கவிதைகளை ஆதரிக்கும் குழுவாகட்டும், எதிர்க்கும் குழுவாகட்டும் ஏதாவது ஒரு முனையில் தாங்கள் சொல்வதை மற்றவர் ஏற்க வேண்டும் என்கிற மன நிலையில் இருந்து விடுபடும் நிலையில் இல்லை, எல்லாப் பெண் கவிஞர்களுக்கும் அவர்களது படைப்புகளை விமர்சனம் செய்து சான்றிதழ் வழங்குவதற்கு ஒரு ஆண் இலக்கியவாதி தனது மொழித் திறன்களை பட்டை தீட்டியபடியும், நாட்டாமை செய்த படியும் நூல்களின் முகவுரையிலோ, முன்னுரையிலோ அமர்ந்திருப்பார், தங்களையும் அறியாமல் தாங்கள் சார்ந்திருக்கிற ஒரு முதன்மை ஆண் முதலாளித்துவ அமைப்பின் முகத்தை இவர்கள் யாவரும் எதிரொலித்து விடுகிறார்கள், “ஆண்களின் நலன் சார் நோக்கில் இருந்து கட்டப்பட்டது நமது மொழி” என்று யாராவது சொன்னால் அவர்கள் அப்படித் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்று பெண்கள் விரும்புவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

BCRW-FeminismControversiesChallengesActions169

முதன்மை ஆண்களின் கோட்டையைத் தகர்க்கும் இத்தகைய உடல் மொழி இலக்கியங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் அடைபட்டிருக்கும் பெண்களின் ஒரு புதிய ஆயுதம் என்று உணரலாம், ஏனென்றால், அவர்களிடம் கடைசியாய் இருக்கும் ஆயுதம் அவர்களின் உடல், அந்த ஆயுதத்தை அவர்கள் உடல் மொழிப் படைப்புகளின் வழியாக இலக்கியங்களுக்குள் பயன்படுத்துகிறார்கள், கோட்டையைத் தகர்க்க முடிகிறதோ இல்லையோ, கோட்டையைத் தகர்க்கும் பணியைத் துவங்கி விட்டார்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் அழுகிறாள் என்றால் அது உங்களுடனான மோதலில் அவள் பயன்படுத்தும் கடைசி ஆயுதம். அப்படியான ஒரு அழுகையைப் போலவே உடல் மொழி சார்ந்த இலக்கியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உளவியல் சிக்கல்கள் இப்படியான படைப்புகளாக தடம் புரளும் போது உடைக்கப்படும் சமூக வரையறைகளை படைப்பாளிகள் தாண்டி விட்டதாகவும், பண்பாட்டுச் சிதைவை முன்னெடுப்பதாகவும் அடிப்படை மதவாதிகளும், போலிப் பண்பாட்டுக் காவலர்களும் குரல் எழுப்புகிறார்கள், ஆனால், இந்தக் குரலை எதிர்த்துப் போரிடுவதை விடவும் இதற்கான அடிப்படைக் காரணிகளை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்று சிந்திப்பதே பெண்ணியப் படைப்பாளிகளின் சரியான தேர்வாக இருக்கும்.

நமது சமூகத்தில் மதம் என்கிற காரணி பெண்களை இரண்டாம் நிலையில் வைப்பதற்கு மிகப் பெரிய பங்களிக்கிறது. ஏறத்தாழ எல்லா மதங்களும் பெண்களின் சமூக நிலைப்பாட்டினை இரண்டாம் இடத்தில் இருத்துவதற்கும், குடும்பம் சார்ந்த உழைப்பில் முழுமையான பங்காற்றுவதற்கும் வெளிப்படையான திட்டங்களை வைத்திருக்கிறது, மத நம்பிக்கைகளும், புராணங்கள் என்று சொல்லப்படுகிற சமூகக் குப்பைகளும் பெண்களின் விடுதலையை மிகப் பெரிய அழுத்தத்தில் வீழ்த்துகின்றன.

psychology-image

உடல் மொழி சார்ந்த படைப்புகளில் அதி தீவிரம் காட்டும் படைப்பாளிகள் கடைசியாக அவற்றை ஆண்கள் கைகளில் ஒப்படைத்துப் பாதுகாப்புக் கோரிச் சரணடைவது அல்லது முகவுரை எழுதிக் கொள்வது போன்றதான போராட்டங்கள், பெண் விடுதலையின் பயணத்தில் ஆண்களை இன்னும் நாட்டாமை நிலையிலே வைத்திருக்க மட்டுமே உதவுமே தவிர, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. பெண்ணிய இயக்கங்கள் அல்லது பெண்களை முழுமையாக உள்ளடக்கிய இலக்கிய அமைப்புகள் மூலமாக இத்தகைய போராட்டங்களை எடுத்துச் சென்றிருந்தால் முதன்மை ஆண்களின் குறுக்கீடுகள் இல்லாத ஒரு விமர்சன தளத்திற்கு உடல் மொழிக் கவிதைகளை, அவை சொல்ல விழைகிற சமூக முரண்களை எடுத்துச் சென்றிருக்க முடியும்.

பாலினக் குறியீட்டு இலக்கியங்களைப் படைப்பவர்கள் சமூகத்தின் மன நிலையைக் கேள்விக்குரியதாக்கி தங்கள் அழுத்தப்பட்ட முரண்களை அதே சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறார்கள், அது இலக்கிய சமூகமாகட்டும், பொது மனித உளவியல் வெளியாகட்டும் இத்தகைய படைப்புகளின் மூலத்தை நோக்கி பயணிக்கும் போது ஒழுங்கற்ற பாலின வேறுபாடுகளும், அழுத்தங்களும் வெளிச்சத்திற்கு வரும் வாய்ப்புகள் இருக்கிறது, பெண்களின் பால் விருப்பங்கள் பெரும்பாலும் முதன்மை ஆண் சமூகத்தால் புறக்கணிக்கப் படுவதும், வரம்பற்ற, ஒழுங்கற்ற பால் விருப்பங்கள் பெண்களின் மீது அவர்களின் விருப்பின்றிச் சுமத்தப்படுவதும் உடல் மொழிக் கவிதைகளாகவோ, படைப்புகளாகவோ பிறக்கக் காரணமாகின்றன. அவ்வாறு அவை வெளியேற்றம் அடையும் போது பெண்ணைத் தனக்கான உரிமைப் பொருள் என்று கற்பிதம் செய்யப்பட்டிருக்கும் முதன்மை ஆண் சமூகம் விழிப்படைந்து பல்வேறு குற்றங்களை இத்தகைய படைப்புகளின் மீது சுமத்துகிறது, பண்பாட்டுச் சீரழிவு ஏற்பட்டு விட்டதாகவும், மஞ்சள் கவிதைகள் என்றும் அது இத்தகைய படைப்புகளை எதிர் கொள்கிறது.

பல்வேறு புற, அகக் காரணிகளால் உளவியல் சிதைவிற்கு ஆளாகும் பெண்களின் மன நிலை எவ்வாறு இத்தகைய கவிதைகளை எதிர் கொள்ளும்?

இலக்கியங்களை நுகர்வதற்கும், படைப்பிலக்கிய வரிசையில் காலடி வைப்பதற்கும் அனுமதி மறுக்கப்படும் பெண்கள், குறிப்பாக இளைய தலைமுறைப் பெண்கள் இத்தகைய உடல் மொழிக் கவிதைகளைக் கண்டு அச்சம் அடைகிறார்கள், அல்லது மருண்டு விடுகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை, என்னுடைய சமூக வட்டத்தில் இருக்கும் பெண்கள் அனைவரிடத்திலும் இத்தகைய கவிதைகள் என்ன விளைவை உருவாக்கி இருக்கிறது என்று ஒரு சோதனை செய்ததில் முதன்மை ஆண்களின் மறைமுக வெறுப்பை விடவும் ஒரு படி மேலே நேரடி வெறுப்பாகவும், அருவருப்பாகவும் அடையாளம் காணப்பட்டதை பெண்களின் மனநிலையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, கட்டமைக்கப்பட்ட சமூக அடுக்கின் நிழலாகத் தான் அந்த வெறுப்பை நான் புரிந்து கொண்டேன். அப்படியானால் உடல் மொழிக் கவிதைகள் சொல்ல முனையும் அடிப்படை முரண்களை எவ்வாறு காட்சிக்கு வைக்க முடியும் என்கிற மிகப் பெரிய கேள்வி ஒளிந்திருக்கும் இடம், மத நம்பிக்கைகள் மற்றும் தொடர்ச்சியாகக் கையாளப்படுகிற பண்பாட்டுக் காவல் என்னும் புரளி.

2789051508_6b02d83ffd

இத்தகைய மதக் குட்டிச் சுவர்களை இலக்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி உடைக்க முயலும் படைப்பாளிகளின் வரிசை ஏறத்தாழ இன்னும் வெற்றிடமாகவும், வலிமையற்றும் கிடப்பதை வேடிக்கை பார்க்கும் பெண்ணியப் புரட்சியாளர்களின் எத்தகைய போராட்டங்களும் சரியான திசையில் பயணிப்பதாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, எந்தப் பெண்ணிய அமைப்புகளும், இயக்கங்களும் மத நம்பிக்கைகளுக்கு எதிரான அல்லது மதங்களில் காணப்படும் அடிப்படை பெண்ணடிமைத் தத்துவங்களுக்கு எதிராகக் களம் இறங்கியதாக் தெரியவில்லை, இதுவரையில் பெண்களை உள்ளே விட மறுக்கிற கோவில்களின் கட்டுக்களை உடைக்கவும், பெண்களை இழிவு செய்யும் பெரும்பாலான திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் எதிர்க்கும் எந்த ஒரு புரட்சிப் பெண்ணிய இலக்கியவாதியையும் சந்திக்க முடியவில்லை.

பெண்களின் விடுதலை என்பது ஆண்களுக்கு எதிரானதாகவே பெரும்பாலான அறிவுசார் பெண்களால் புரிந்து கொள்ளப்படுகிறது, ஆனால், அது நுண்ணிய சமூக கட்டமைப்பிற்கு எதிரானதாக இருக்க வேண்டும், மதங்களில் விரவி இருக்கும் மிக நுட்பமான உளவியலின் சாரங்களை உடைப்பதாக இருக்க வேண்டும். பெண்ணும், ஆணும் சார்பு உயிர்ப் பொருளாகவே இயக்கம் பெரும் வகையில் இயற்கை அவர்களை வடிவமைத்திருக்கிறது, ஆண்களுக்கு எதிரான பெண்ணியம் என்பது முற்றிலும் திசை மாறிச் செல்கிற, முரண்பாடுகளை வளர்க்கும் ஒரு கருத்தியலாகப் புரிந்து கொள்ளப்படலாம், மாறாக சமூக கட்டமைப்பிற்கு எதிரான பெண்களின் விடுதலை என்பது ஆண்களையும் உள்ளடக்கிய மனநிலை மாற்றம் என்கிற திசையில் பயணிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
literature_main

பெண்ணியத்தின் மனநிலையை சிக்மண்ட் பிராய்ட் "ஆண்குறி இழப்பு" (penis envy) என்று குறிப்பிடுகிறார், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இவ்வாறான ஒரு கோட்பாட்டை அவர் மருத்துவ உலகில் அறிமுகம் செய்தார், இதற்கு எதிரான ஒரு "கருப்பை இழப்பு" (womb envy) என்கிற கோட்பாட்டை கரேன் ஹோர்னே என்னும் உளவியல் அறிஞர் உருவாக்கினார், பெண்கள், தங்களுக்கு ஆண்குறி இல்லை என்று உள்ளுக்குள் பொருமுவதையும், ஆண்கள் தங்களுக்குக் கருப்பை இல்லை என்று உள்ளுக்குள் பொருமுவதையும் மனித இனத்தின் மருத்துவ உளவியலாகப் புரிந்து கொள்ளப்படும் வேளையில், உடல் மொழி கவிதைகள் அல்லது இலக்கியம் என்பது ஒருவகையான உளவியல் முரண்பாட்டின் வாயிலாகவே நிகழ்கிறது என்பதை நம்மால் எளிதாக உணர முடியும்,

பெண்களுக்கு எதிராக ஆண்களோ, ஆண்களுக்கு எதிராகப் பெண்களோ வெற்றி பெற முடியும் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, மனிதனின் உளவியல் என்பது அவனுக்குள் உருவாகும் எண்ண அலைகளுக்கும், சமூகக் கட்டமைப்புகளால் அழுத்தப்பட்டு வெளிப்படும் அவற்றின் அளவிற்கும் உள்ள தொடர்பாகும், உடல் மொழிக் கவிதைகளும் இலக்கியங்களும் கூட சமூகக் கட்டமைப்புடன் தொடர்பு கொண்டதாகவே இருக்க இயலும், அப்படி இருக்கும் சூழலில் இத்தகைய கவிதைகள் அல்லது படைப்புகள் சமூகக் கட்டமைப்பைத் திருத்தி அமைக்கும் பணியில் இருப்பதை நம்மால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க இயலாது. ஆனால், அதன் தொடர்ச்சியாக மன எழுச்சியையும், புத்துயிரையும் பெற வேண்டிய பெண்கள் மன அழுத்தம் அடைவதையோ, சோர்வடைவதையோ தவிர்த்து எவ்வாறு வலிமையோடு சமூக அமைப்பை மாற்ற முடியும் என்கிற கோணத்தில் பெண்ணியத்தை உடல் மொழிக் கவிதைகளுக்குள் கொண்டு வருபவர்கள் சிந்திக்கத் துவங்க வேண்டும், அத்தகைய ஒரு வலிமையான களத்தை அமைத்துக் கொண்ட பிறகு படைக்கப்படும் இத்தகைய படைப்புகள் பெரிதான எதிர்ப்பையோ, வியப்பையோ சந்திக்காது.
06_feminism

மருத்துவ உளவியல் வழியாகவே பெண்களும், ஆண்களும் வெவ்வேறான சிந்தனைகளையும், மன நிலையையும் கொண்டிருக்கிறார்கள், பெண்கள் உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்துபவர்களாகவும், கவலை, மகிழ்ச்சி, அச்சம், வியப்பு இவற்றைச் சார்ந்தவர்களாகவும் வாழ்கிறார்கள், மாறாக ஆண்களோ கோபம், ஆளுமை செய்தல் போன்ற உணர்வுகளில் விஞ்சி இருக்கிறார்கள், ஆண்கள் ஏன் உடல் மொழிக் கவிதைகளை எழுதுவதில்லை என்கிற கேள்வியையும், பெண்கள் ஏன் இத்தகைய கவிதைகளை எழுதுகிறார்கள் என்பதையும் உளவியல் வழியாக மட்டுமே எதிர் கொள்ள இயலும். ஏனெனில் இலக்கியம் என்பது மிக நுட்பமான அழகியல் சார்ந்த உளவியலின் ஒரு பிரிவு.

கீழ்க்கண்ட "கரோல் ஹாபெர்லே" என்ற கவிஞரின்  கவிதை பாலியல் வன்முறையை எதிர்க்கிறது, சின்னஞ்சிறு பெண்களின் மீதான பாலியல் வன்முறையை இலக்கிய வலிமையோடு எதிர்க்கிறது, வன்மையாகக் கண்டிக்கிறது, வலியை உண்டாக்குகிறது, இந்தக் கவிதை யாரையும் குற்றம் சுமத்தவில்லை, மாறாகக் குற்றம் இழைத்த சமூகத்திடமே அதற்கான தீர்வைத் தருமாறு அழுத்தம் செய்கிறது,

ஒரு நாள் அவள் ஆடிப்பாடுவாள்,
அவள் கவலைகளை எடுத்துச் செல்லுங்கள்,
அவள் வலியை எடுத்துச் செல்லுங்கள்,
அவளை ஒரு புல்வெளியில் ஆடச் சொல்லுங்கள்,
அங்கே தன் தொலைந்த சிரிப்பை அவள் கண்டு பிடிப்பாள்,
மீண்டும் ஆடிப் பாடி ஓடி விளையாடுவாள்,
அவளது நாளைய பொழுதில் விளக்கேற்றுங்கள்,
நீண்ட நாட்களாய் அவள் உறங்குகிறாள்,
அவள் கனவுகள் இருட்டில் புதைந்தன,
அவளது வலியை எடுத்துச் செல்லுங்கள்,
அவளது ஒளியை திரும்பக் கொடுங்கள்,
அவளையும் அழைத்துக் கொண்டு,
ஒரு ஆற்றின் வழியாக பயணம் செல்லுங்கள்
அங்கு வாத்துகளை நீந்த விடுங்கள்,
ஆட்டுக் குட்டிகளை மேய விடுங்கள்,
அவள் ஒரு குழந்தை, தூய்மையின் வடிவம்,
அவள் ஒன்பது வயதில் இருக்கும் போது "அவன்" திருடிச்
சென்ற குழந்தையை அவளுக்குத் திரும்பக் கொடுங்கள்.

women

இந்தக் கவிதையில் குறிகள் இல்லை, யோனிகள் இல்லை, ஆனால் அவை தரும் வலிகள் இருக்கிறது, இலக்கியத்தின் அழகும், மென்மையும் ஆழ்கடலின் அமைதியைப் போல அழுத்தமாய்ப் பதிகிறது, ஆணோ, பெண்ணோ இதனைப் படிப்பவர்களின் மனதை மெல்லிய ஊசியைக் கொண்டு குத்திக் கிழிக்கிறது. பாலியல் வன்முறையை மனதளவில் கேலிக்குறியதாக்கி ஒரு மீள முடியாத தாக்கத்தை வாசிப்பவரின் மன வெளியில் கீறிப் பின் மருந்திடப்பட்ட பஞ்சுக் கற்றையாய் மாறி அழுக்கைத் துடைக்கிறது. ஆகவே இது இலக்கியமாகிறது, இலக்கியத்தையும் தாண்டி அழகாகிறது, ஆண், பெண் என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி அந்தக் கவிஞரின் மீது அளப்பற்ற நேசத்தை அள்ளி எரிகிறது.

**********

Advertisements

Responses

 1. அருமையானக் கட்டுரை அண்ணா.. என் விழிகளை திறந்தது…

 2. அறிவு தோழருக்கு வணக்கம்…
  உங்கள் கட்டுரையின் நோக்கம் மிக மிக அருமை…
  உங்களுடைய தோழமை கருத்துக்கள் ஆழமாகவும், சிந்திக்கும் திறன் உடையவர்களுக்கு வலுவுடையதாக அமைந்து இருக்கிறது. எப்போவும் போல் உங்க கட்டுரைக்கு தகுந்தாற் போல் இந்த கட்டுரைகளிலும் சொல் படங்கள்(WORD IMAGE) அமைத்து இருப்பது நன்று .வாழ்த்துக்கள்…. எளிய நடையில் உளவியல் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மறுபடியும் உளமார வாழ்த்துகிறேன்..

 3. எழுச்சியையும், புத்துயிரையும் பெற வேண்டிய பெண்கள் மன அழுத்தம் அடைவதையோ, சோர்வடைவதையோ தவிர்த்து எவ்வாறு வலிமையோடு சமூக அமைப்பை மாற்ற முடியும் என்கிற கோணத்தில் பெண்ணியத்தை உடல் மொழிக் கவிதைகளுக்குள் கொண்டு வருபவர்கள் சிந்திக்கத் துவங்க வேண்டும், அத்தகைய ஒரு வலிமையான களத்தை அமைத்துக் கொண்ட பிறகு படைக்கப்படும் இத்தகைய படைப்புகள் பெரிதான எதிர்ப்பையோ, வியப்பையோ சந்திக்காது.///

  உங்களின் இந்த கருத்துக்கள் பரிமாற்றத்துக்கு கீழே
  இந்த WORD ரொம்ப பொருத்தமான அறிவான பதிவு…

 4. நன்றி திரு.படைப்பாளி. உங்கள் பெயரே இதுதானா இல்லை, புனைப்பெயரா???

 5. அன்புக்குரிய C L K,

  உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: