கை.அறிவழகன் எழுதியவை | மே 10, 2010

“தலித் திரைப்படங்கள்”-வரும் ஆனா வராது……..!!!

Children_Dalit_India-09ae5

தலித் இலக்கியங்கள் என்கிற வகை கிடையாது, இலக்கியத்தை அப்படி எல்லாம் கூறு போட முடியாது என்று அடிப்படைவாதிகள் குரல் எழுப்பிக் கொண்டிருந்த கால கட்டத்தைக் கடந்து இன்று தலித் இலக்கியங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கின்றன. தலித் என்கிற சொல்லாடல் மிகுந்த வேதனை தரக்கூடிய, சமூகத்தின் புரையோடிப் போன ஒரு குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, மனிதர்கள் வாழும் சமூகத்தில் அவர்களுக்கிடையிலான வர்ணப் பிரிவுகளை அடிப்படையாக வைத்து இலக்கியங்களைப் படைக்க வேண்டும் அல்லது திரைப்படங்களைப் படைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு சமூகத்தில் வாழ்வதற்காக நான் வெட்கமும் வேதனையும் அடைகிறேன். அதே நேரத்தில் வர்ணப் பிரிவுகளை நீக்க வேண்டும் அல்லது அவற்றை முற்றிலும் களைய வேண்டும் என்றால் அந்தப் பிரிவுகளில் அடங்கி இருக்கும் வலிகளை, வலிகளுக்கான காரணிகளை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நான் இத்தகைய திரைப்படங்களை அல்லது இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என்று சொல்வதற்கான முழு முதற்க் காரணம்.

நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனின் நோய் பற்றிய அந்த நோய் உருவாக்கும் விளைவுகள் குறித்த அறிவும், போதிய ஆய்வுக் குறிப்புகளும் இருந்தால் மட்டுமே அந்த நோய்க்கான மருந்தை ஒரு மருத்துவரால் நோயாளிக்குக் கொடுக்க இயலும், இந்தச் சமூகம் ஒரு சம நீதியற்ற நோய் வாய்ப்பட்ட சமூகம், இந்தச் சமூகத்தில் பிறக்கும் போதே மனிதன் அடையாளங்களோடு உயர்வாகவும்,தாழ்வாகவும் பிறக்கிறான், இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டுமென்றால் சமூகத்தைப் பீடித்திருக்கும் இந்த சாதிய நோய் குறித்த அது உருவாக்கும் விளைவுகள் குறித்த அறிவு பரவலாக மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அதற்க்கான ஒரு வாய்ப்பே தலித் இலக்கியங்கள் அல்லது தலித் திரைப்படங்கள்.

heroes_causes_Dalit-2

"தலித் திரைப்படங்களா?", தமிழ்த் திரையுலகம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய பல்வேறு நிகழ்வுகளை காட்சியாக்கி இருக்கிறது, ஆனால் அத்தகைய காட்சிகளில் உண்மையான வலிகளை விடவும், அலங்கரிக்கப்பட்ட வலிகளின் சுவடுகள் தான் அதிகமிருக்கும், இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பூணூலைக் கழற்றி எரியும் பார்ப்பனரை மிகப் பெரிய புரட்சியாளராகவும், தேவர் காலடி மண்ணைப் போற்றிப் பாடும் தேவர்களைக் கழுத்தறுக்கும் கட்டை மீசைக் காரர்களாகவும் சித்தரித்துப் பழகிப் போயிருக்கிற நமது திரைப்பட உலகம் தலித் திரைப்படங்களை ஏற்றுக் கொண்டு செரித்து விடுமா என்கிற கேள்விதான் நான் அதிர்ந்து போனதற்கான காரணம். ஏனைய துறைகளைப் போலவே திரைப்படத் துறையும் கருத்தியல் அடிமைத்தனங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் ஒரு கால கட்டத்தில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட எல்லா முகாந்திரங்களும் இருக்கிறது.

tamil

தமிழகத்தின் அன்றாட வாழ்வியலும், வரலாற்று இயங்கியலும் எப்படி இருக்கிறது என்கிற ஒரு பொதுவான நிலையை அறிந்த பின்னர் நாம் இத்தகைய கூர்மையான தளத்திற்குச் செல்வது இந்த விவாதக் களத்தை இன்னும் செம்மையாக்கும் என்று கருதுகிறேன், நகர்ப்புறக் கூட்டத்தில்  மறைத்து வைக்கப்பட்டு இல்லாமல் போனதாக அறிவு ஜீவிகளால் கட்டவிழ்த்து விடப்படும் சாதீய மனப்போக்கு இன்றையத் தமிழகக் கிராமங்கள் அனைத்திலும் ஒளிவு மறைவின்றியே விரவிக் கிடக்கிறது, தலித் மக்களின் திருமண விழாக்களுக்கு சொந்த ஊரில் இருக்கும் சாதி இந்துக்களோ அல்லது ஏனைய சாதியினரோ கலந்து கொள்வதில்லை, அப்படியே கலந்து கொண்டாலும் "கலர்" குடித்து விட்டு மொய் எழுதிச் செல்லும்  பழக்கம்  நீண்ட நெடுங்காலமாகவே  காணக் கிடைக்கிறது, பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்று சமூக அடையாளத்தோடு இருக்கிற தலித் மக்களின் திருமண விழாக்களுக்குக் கூட இந்த எழுதப்படாத விதி பொருந்தும், இரட்டைக் குவளை முறையில் தேநீர் வழங்கும் பெரும்பான்மை தமிழகக் கிராமங்கள் வடக்கு, தெற்கு வேறுபாடுகள் இன்றிப் பரவிக் கிடக்கிறது, செருப்பைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நடக்கும் மனிதர்கள் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாத சாதி இந்துக்களின் தெருக்களைத் தினந்தோறும் கடந்து தான் வேலைக்குப் போகிறார்கள், ஒருமையில் அழைக்கப்படும் வயது முதிர்ந்த பெரியவர்களை சிவகங்கை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் பல முறை கையாலாகாமல் கடந்து போயிருக்கிறேன், இருபத்து ஐந்து ஆண்டுகளாக ஒரு கல்லூரியில் மாணவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட முடியாத, அதற்குத் தகுதி வழங்கப்படாத சமூகத்தின் பார்வையாளராக என்னைப் போலவே மூன்றாயிரம் பேர் படித்துக் கொண்டிருந்தோம், தள்ளி வைக்கப்படுகிற கொடுமைகள், குடிப்பதற்கான நீரைத் தான் வாழும் கிராமத்திலிருந்து பெற முடியாமல் வேறொரு கிராமத்திற்குப் பயணப்படுகிற பெண்களை, பள்ளிகளில் இன்னும் தனியாக அமர வைக்கப்படும் குழந்தைகளை, போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதற்குத் தகுதி இல்லாத குழந்தைகளை, அந்தக் குழந்தைகளின் மீது குத்தப்பட்டிருக்கும் அழியாத சாதி முத்திரைகளை, இன்னும் சொல்ல முடியாத வலி நிரம்பிய தலித் மக்களின் வாழ்வை இன்றைய தமிழ்  சினிமாவுக்குள்  கொண்டு வருவது  சாத்தியமா  என்கிற  விடை  காண  முடியாத  கேள்வி இங்கிருந்து தான் வெடித்துக் கிளம்புகிறது.

Reezu_2171

சரி, இப்படியான “தலித் திரைப்படங்கள்” என்கிற கருத்துருவாக்கம் ஏன் வெற்றி அடைய முடியவில்லை? அதற்கான காரணங்கள் என்ன?

மிக  எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், நமது தமிழ்த் திரைப்பட உலகில் திரைப்படங்களைத் தயாரிப்பவர்களும், நிதி உதவி செய்பவர்களும் பெரும்பாலும் உயர் சாதி இந்துக்கள், குறிப்பாக முக்குலத்தோர், முதலியார், ரெட்டியார், செட்டியார், வன்னியர், கவுண்டர், நாயுடு மற்றும் பார்ப்பனர்கள் என்று மேல் சாதியின் தளத்திலேயே நம்மால் இவர்களை அடையாளம் காண முடியும், ஒரு தயாரிப்பாளரின் மன நிலைக்கு எதிரான திரைப்படங்களை எடுக்கும் அளவில் நமது சமூகம் படைப்பாளிகளை உருவாக்கவில்லை, இந்தப் பட்டியலில் பார்ப்பனர்களை நான் கடைசியாகச் சேர்த்ததன் காரணம் அவர்களின் நேரடி முதலீடு, திரைப்படம் போன்ற ஒரு உறுதியற்ற வணிகத் தளங்களில் மிகக் குறைவு என்பதால் மட்டுமே, மேலும் பார்ப்பனர்களின் பங்கு மிக அதிகமாக கருத்தியல் திணிப்பிலும், நுண்ணிய அறிவுப் புலத்திலும் தங்கி விட்டதால் நேரடித் திரைப்படத் தயாரிப்பில் அவர்கள் ஈடுபடுவது இன்றளவில் குறைந்திருக்கிறது, ஆனால், பார்ப்பன மன நிலையில் இருந்து செய்யப்படும் அனைத்து வர்க்க முரண்பாட்டு யுத்திகளும் தொடர்ச்சியாக வெற்றிகரமாகவே திரைப்படத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தத் தயாரிப்பு உலகம் முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிரானது, தங்கள் பிறப்புரிமையான வருண தர்மத்தால் விளையும் சமூகப் பொருளாதார நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் இத்தகைய தயாரிப்பாளர்களை அவர்களின் ஆதிக்க மனபோக்கை எதிர்த்து எத்தகைய முற்போக்கு இயக்கத்தில் இருந்து வருகிற படைப்பாளியாலும் செயல்பட முடியாது என்பது தான் தலித் திரைப்படங்கள் என்கிற கனவை அடைத்து வைத்திருக்கிற சிறைச்சாலைகள்.wasis5

நமது  கருத்தியல் வெளிகள் முழுமையும் ஒரு போலியான சித்தரிக்கப்பட்ட கருத்துப் பரவலால் கொள்ளை அடிக்கப்பட்டு, எந்த ஒரு நிகழ்வையும், உள்ளீட்டையும் தன்னளவில் ஆய்வு செய்து பார்க்கும் மன வலிமையை இழக்க வைத்திருக்கிறது, பிறக்கும் போதே நமது சமூகம் பிளவுகளைக் கற்றுக் கொடுத்து விடுகிறது, பிறந்த அடுத்த வினாடியில் இந்தியக் குழந்தைகளுக்கு சாதிப்  பெயர் சூட்டப்பட்டு விடுகிறது, பிறக்கும் போதே குழந்தைகள் தரவரிசைப் படுத்தப்பட்டு நான்கு வர்ணங்களில் அடைக்கப்பட்டு விடுகிறார்கள், தர வரிசைகளில் இருந்து தப்பிப் பிழைத்த குழந்தைகள் கூட ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது சமூக அடையாளத்தைத் தானாகவே அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக இன்னும் வலிமையோடு இந்தச் சமூகம் சாதி என்கிற அப்பட்டமான உண்மையை  வலியுறுத்துகிறது, வலிந்து உட்செலுத்துகிறது.

தமிழ்த் திரைப்படமோ அல்லது இந்தியத் திரைப்படங்களோ மிகுந்த எச்சரிக்கையோடு தலித் மக்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் கடந்து போய் விடுவது இன்னொரு உண்மை, இந்த உண்மைக்குப் பின்னால் தமக்குத் தெரியாத ஒரு களத்தை கற்பனையில் கட்டமைக்க முடியாத ஒரு இயலாமையும், தெரிந்த உண்மையை காலடியில் போட்டு நசுக்கி விட்டுப் பொது மனித சிந்தனையில் கரைந்து போகும் படைப்பாளரின் நீர்ப்பும் காரணமாகி இருக்கிறது, தலித் இலக்கியங்களை எப்படி தலித் அல்லாத ஒரு மனிதரால் படைக்க இயலாதோ அதே போலவே காலம் காலமாக ஒடுக்கப்பட்டு சிதைந்து கிடக்கும் தலித் மக்களின் வாழ்வியலை, உண்மையான அவர்களின் பண்பாட்டுத் தளத்தை அதற்குள் ஒளிந்து கிடக்கும் வலியைக் காட்சிப் படுத்தும் ஒரு படைப்பாளியை நம்மால் இப்போது இருக்கிற வடிவமைக்கப்பட்ட, பொய்யாக உருவகம் செய்யப்பட்ட திரைப்பட உலகத்தில்   இருந்து பெறுவது கேள்விக்குரியது.

IMG_2375

ஆனால், இத்தகைய தலித் திரைப்படங்களை உருவாக்க வேண்டிய தலித் மக்களுக்கான ஊடகங்களைக் கட்டமைக்க வேண்டிய தலையாய கடமை இன்றைய தலித் அரசியல் இயக்கங்களுக்கு இருக்கிறது, லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைச் சுவர் விளம்பரங்களுக்கும், விளம்பரத் தட்டிகளுக்கும் செலவிடும் தலித் அரசியல் இயக்கங்களும், அவற்றின் தலைவர்களும் தலித் திரைப்படங்களைப் பற்றிச் சிந்திக்கும் சரியான நேரம் இது, ஒரு மாத காலத்தில் சென்னையில் மட்டுமே தலித் இயக்கங்களுக்கான  சுவர் விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்படும் பணத்தை வைத்து தலித் திரைப்படமொன்றை எழுச்சியோடு இயக்கிக் கொடுக்குக் காத்திருக்கும் இயக்குனர்களை எனக்குத் தெரியும், ஆனால், எடுத்து முடிக்கப்பட்டுக் கடந்த ஐந்து ஆண்டுகளாய் அரங்குகளுக்கு வர இயலாத "அண்ணல் அம்பேத்கரின்" வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்க முடியாத இந்தத் தலைவர்களா நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைக்க வழி கண்டுபிடிப்பார்கள்? கொஞ்சம் கடினமான ஆனால், விடை அவசியம் விடை காணப்பட வேண்டிய கேள்வி இது.

_44655858_cinema_512

நமது கடந்த ஐம்பதாண்டு காலத் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அலசிப் பார்த்தால் வரலாற்றுப் புராண காலத்தில் இருந்து தோற்றமெடுத்து, பார்ப்பனர்களின் கர்நாடக இசையை அரங்கேற்றும் தளமாக உருமாற்றம் அடைந்து, மத வழியிலான ஆன்மீகத் தளங்களில் நிலை பெற்று, குடும்பக் கதைகளில் ஆதிக்க சாதி இந்துக்களின் மொழியை வளர்த்துப் பின்னர் அரசியல் அடையாளங்களுக்கான, அரசியல் வெற்றிகளை இலக்காகக் கொண்ட நாயகர்களின் வெற்றுப் புரட்சி ஆக்கங்களில் தேங்கி, இடைவெளியில் மன்வாசனைகளின் பெயரில் இடைச்சாதி அடையாளங்கள் வரையிலும் வந்து  நின்று விடுகிறது, தமிழக் கிராமங்களில் கொஞ்ச காலம் தஞ்சம் அடைந்த திரைப்படங்கள் கிராமங்களில் நிகழும் பஞ்சாயத்துக்கள், பொதுவாக ஆதிக்க சாதிக் குடும்ப அமைப்புகளில் நிகழும் தொகுப்பான சமூக எல்லைகள் வரை தங்கள் களங்களை அமைத்துக் கொண்டு விடை பெற்று விடுகின்றன.

dalitVillagers

தலித் மக்கள் என்று நாம் குறிப்பிடுகிற பறை அடிப்பவர்களும், பிணம் எரிப்பவர்களும், செருப்புத் தைக்கும் தொழிலாளிகளும், கழிவகற்றும் பணிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் மக்களும், ஆதிக்க சாதி இந்துக்களின் நிலங்களில் இன்னும் பண்ணை அடிமையாய் வாழும், சமூக அடையாளமற்ற, பொருளாதார, உளவியல் அழுத்தங்கள் நிரம்பிய விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை, அவர்களின் அன்றாட நிகழ்வுகளை, அவர்களின் அழுத்தப்பட்ட கனவுகளை, அவர்களின் கலைகளை, பண்பாட்டு வெளிகளை இன்னும் இந்த மண்ணெங்கும் நிரம்பி இருக்கும் அவர்களின் ஓய்வற்ற சுரண்டப்படுகிற உழைப்பை திரைப்படங்களில் காண்பது நமது வாழ்நாள் காலங்களில் ஒரு கனவாகவே போய் விடாது.

கதாநாயகர்களால் சேரிகளுக்குள் நுழைந்து கட்டியணைக்கப்படுகிற, கதாநாயகர்களின் கட்டியணைப்பை ஒரு வரமாகக் கருதுகிற அல்லது அப்படிக் கருதுவதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிற,  இந்நிலத்தின் மக்களைப் பற்றிய, அவர்களின் ஒளிவு மறைவற்ற, சாயங்கள் பூசப்படாத வாழ்க்கையை வெள்ளித் திரைகளில் பார்ப்பதற்கு இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், காத்திருப்போம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சமூக இருப்பில் சமநீதி பெறுவதற்குக் காத்திருந்த தலித் மக்களின் காத்திருப்பில் இது மிகக் குறுகிய காலம் தான்.

jean-luc-godard-2

அந்தக் குறுகிய காலம் வரையில் "ஜீன் லுக் கோடர்ட்" என்கிற பிரெஞ்சு திரைப்பட இயக்குனரின் கீழ்க்கண்ட இந்த வரிகள் உண்மையாக இருக்கக் கூடாது என்று நான் வேண்டுகிறேன்.

"சினிமா – உலகின் மிக அழகிய மோசடி"

*************

Advertisements

Responses

 1. Its also one of our dream. Asusual we have to wait.
  in Veerapandiya Kattapomman film, the Veeran Sundaralingam character had been created as an ordinary comedian.
  they made the Vellaiyathevan character as brave one.

  Yes the Financiers are from the Upper Caste,they never ever like us.

  after a long time,we had have a hope by Two peoples,
  Thiruma & Dr.Krishnasamy.

  Already i (we) lost the hope that they will work for us & bring us to forward.

  Not only in Cinema,we have to participate in every stage of our society, education,Business,arts,Politics,Govt jobs( civil services & powerful posts).then we have to give-up our neighbour hoods( its quite tough,but we hve to make further more awareness in our generation.. The way is a big Question mArk……?

 2. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சமூக இருப்பில் சமநீதி பெறுவதற்குக் காத்திருந்த தலித் மக்களின் காத்திருப்பில் இது மிகக் குறுகிய காலம் தான். ////

  Fine…. We have to work Hard to make the above statement true…

 3. அண்ணன் அறிவழகன் அவர்களுக்கு,
  இது மிக முக்கியமாக விவாதிக்க வேண்டிய ஒன்று. சமீபத்திய மாத்தி யோசி என்ற படம் பார்த்தீர்களா? என்ன தோன்றியது?

 4. உங்கள் கருத்துக்களோடு முற்றிலும் உடன்படுகிறேன் மருதன் செந்தில் அவர்களே, நாம் பயணிக்க வேண்டிய இலக்குகள் மிக நீளமானவை மட்டுமன்றிக் மிகக் கடினமானவையும் கூட. இருப்பினும் நாம் தொடர்ச்சியாக இலக்குகளை நோக்கிப் பயணித்து ஒரு ஏற்ற தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 5. உறுதியாக நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நம்மால் யாவற்றையும் வெல்ல முடியும். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு ரவிக்குமார்.

 6. ஆம் தம்பி, ஜெயப்ரகாஷ் வேல், முன்னிலை விவாதத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டிய தலித் திரைப்படங்கள், தலைப்பைக் கண்டவுடனேயே அழுத்தம் கொடுக்கம் பட்டு நீக்கம் செய்ய வேண்டுகோள் விடப்படும் அளவுக்கு தாக்கம் விழைவிக்கின்றன. “மாத்தி யோசி” பார்க்கவில்லை, இருப்பினும் பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தியத் திரைப்படங்களிலும் தலித் உடல் அல்லது மனம் என்பது தியாகம் சார்ந்ததாகக் காட்டப்படும் இழிவான நிலை தான் காணப்படுகிறது, சமீபத்திய உதாரணம் “வெண்ணிலா கபடிக் குழு”. பண்ணைகளுக்கு அல்லது சொல்லாமல் சொல்லப்படும் உயர் சாதி இந்துக்களுக்கு அடிமைகளாய் இருந்து அவர்களுக்காகப் பல அரிய தியாகங்களைப் புரியும் உடலாகவே தலித் உடல் வெகுமக்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.

  இவற்றை எல்லாம் மாற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டதாகவே நான் உணர்கிறேன். நாமும் முடிந்த அளவு நம்மால் இயன்றவற்றைச் செய்வோம்.

  உங்கள் அன்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 7. தயவு செய்து மத்திய அரசு உயர் ஆராச்சி நிலையங்களில் வந்து பாருங்கள். நவ பார்ப்பனியத்தின் உச்சத்தையும், அவர்கள் மற்ற சனநாயக சக்திகளைகளை எவ்வாறு ஒடுக்குகிரார்கலேன்று. அவர்கள் நடவடிக்கை. குணநலன்களின் அடிப்படையில், காரணத்தின் அடிப்படையில் எதிரிகளை அடயலங்கனுவதில்லை. தனக்கு பிடிக்காத சனநாயக சக்திகளை எதிரி என தீர்மானித்து, காரணங்களை தேடி அழிந்து, சட்டம், நிர்வாகம் அதரவு செயல்களால் சனநாயகத்தை அளித்து விடுகிறார்கள் பல நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. தலித் தலைவர்கள் நல்ல கோட்பாட்டு முறைகளை கற்பிக்கவேண்டும். அதற்கு மாறாக, ஜன பாண்டியன் போன்றோரை கொண்டு உளியர்களை திர்த்து கட்டும் போக்கு அதிகமாகிவிட்டது. கட்ட மீசை தேவரை இப்ப கொடுமை அதிகமாகிவிட்டது. நானும் அவ்வாறு பாதிக்க பட்ட தலித் ஆதரவாளன்தான்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: