கை.அறிவழகன் எழுதியவை | மே 15, 2010

இறந்து போன இசங்களும், இனப்படுகொலையும்.

soviet

நிகழ்வுகளின் தொகுப்பாகும் உலக இயங்கியலில் முரண்பாடுகள் எழுவதும், அவற்றைக் களைய நிகழும் போராட்டங்களுமே வரலாறாகிறது, எண்ண அலைகள் தடைகளற்று உற்பத்தியாவதும், அவற்றை நெறிமுறைப்படுத்தும் சமூகக் கட்டமைப்புகளும் மனித உளவியளாகி உலக நாகரீகத்தை அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நகர்த்திக் கொண்டே இருக்கிறது, பொருள், மனித சமூகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் காரணியாக சிலரால் அறியப்படுகிறது, பொருளைத் தாண்டி அதனை நோக்கி மனிதனை உந்தும் இயல்புணர்ச்சிகள் இந்த மனித சமூகத்தை ஆளுமை செய்கிறது என்று சொல்பவர்களும் அதற்கான தங்கள் அழுத்தமான காரணங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள், மனித இயல்புணர்வுகளும், பொருளும் இன்பங்களையும், துன்பங்களையும் வழங்கும் இன்றியமையாத காரணிகள் என்பதை இருசாரரும் ஒப்புக் கொள்கிறார்கள். மார்க்சியம் பொருளை மையப்படுத்துகிறது, ஹேகலின் உணர்வுகளால் கட்டமைக்கப்படும் கோட்பாடுகள் பொருளை இரண்டாம் நிலையிலும், மனித இயல்புணர்வுகளை முதலாவதாகவும் சித்தரிக்க முயல்கிறது.

தத்துவங்களைக் கண்டறிய இயலாத, கோட்பாடுகளின் உட்பொருளை விளங்கிக் கொள்ள இயலாத தனிப் பொருளாக வாழ்க்கை சிலருக்கு அச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கிறது, அப்படித்தான் காரணங்கள் தெரியாமல் எதற்காக மரணிக்கிறோம் என்பது தெரியாமல் இந்த நாகரீக உலகில் குழந்தைகள்  இறந்து போகிறார்கள், குழந்தைகளின் இறப்பிலும் தத்துவங்களைத் தேடி அல்லது கோட்பாடுகளை உள்ளீடு செய்து நம்மைப் போன்றவர்களின் உலகம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. காரணங்கள் எதுவும் தேவைப்படாத கள்ளமற்ற சிரிப்பையும், தாயின் மடிப் பாலுக்கு அழுகையையும் மட்டுமே அறிந்த குழந்தைகள் உலக அரசியலுக்காக, இனங்களின் வெற்றி முழக்கதிற்காக, நிலப்பரப்புகளின் எல்லை விரிவாக்கத்திற்காக, அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் அடங்கி இருக்கும் மதிப்புக்காகக் கொல்லப்படுகிறார்கள், அவர்களின் கொலை நிலங்களின் மீது கட்டமைக்கப்படும் கல்லறைகளில் எந்த வெட்கமும் இன்றி மனிதர்கள் பல நிறக் கொடிகளை நட்டு வைத்து நடனமாடுகிறார்கள், நாகரீகம் தழைத்து வாழ்கிறது என்று மேடைகளில் உலகத் தலைவர்கள் முழக்கமிடுகிறார்கள், முடிவில் ஆயுதங்களை வாங்குவதும், விற்பதுமான தங்கள் உயர் நாகரீகச் சந்தைகளை அறிமுகம் செய்வதற்கும், அவற்றில் நிகழும் மோதல்களைச் சரி செய்வதற்குமான  உடன்பாடுகளின் பெயரில் சபைகளை அமைக்கிறார்கள்.

marxism ஒரு கடல் சூழ்ந்த தீவுப்பரப்பில் நீண்ட காலமாய் தோன்றி வளர்ந்த எம்மக்கள் தங்களின் உரிமைகளை இன்னொருவர் பறிக்க முயல்கிறார் என்று முறையிட்டார்கள், தங்கள் மொழியும், இனமும் புறக்கணிக்கப் படுவதாயும், நசுக்கப்படுவதாயும் ஓலமிட்டார்கள், ஆயினும், அதில் விரவிக் கிடந்த ஏக்கத்தையும், இயல்புணர்வுகளையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு நாகரீகமடையாத இன்னொரு பேரினம் அவர்களின் அழுகுரலைக் காலம் காலமாகப் புறக்கணித்து அவர்களை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்குக் கொண்டு வந்தது, ஆயுதங்கள் இன்னும் பல புதிய ஆயுதங்களை உருவாக்கியது, அன்பைத் தங்களோடு நீண்ட காலமாய் வசிக்கும் மற்றோர் இனத்தின் மீது வலிமையோடு பயன்படுத்தத் தேவையான  நாகரீகத்தை நாம் வாழும் உலகின் அரசுகள் இன்னும் அடையவில்லை போலும், முதலாளித்துவத்தின் காவல் அரண்கள் அன்பை வலிமையோடு பயன்படுத்தும் எந்த ஆற்றலையும் அழித்து விடுவதற்குத் தங்களால்  ஆன எல்லாவற்றையும் செய்து விடுகிறார்கள், அடிப்படை அன்பினால் உற்பத்தியாகும் எந்த விளைபொருளும் அரச வணிக நிறுவனங்களை நட்டத்தில் நிறுத்தி விடுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

கண்ணெதிரில் கொல்லப்படும் குழந்தைகளைக் காப்பாற்றும் அக்கறையும், அன்பும் இந்தப் பொருள் உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை என்பதை உணரும் தருணங்கள் உலகின் பாதுகாப்பற்ற மனித வாழ்க்கையைப் பறை சாற்றுகின்றன, வழியில் தென்படும் கிராமங்களை அழிக்கும் வலியே இல்லாமல், உலகெங்கிலும் நாகரீக உலகின் மக்கள் நகரங்களைக் கட்டிக் குடி போகிறார்கள், உலகெங்கும் மனிதர்கள் கல்வி கற்கிறார்கள், உயர்தரமான ஆடைகளை அணிந்து கொண்டு இலக்கியம் படிக்கிறார்கள், மருத்துவம் படிக்கிறார்கள், பொறியியல் படிக்கிறார்கள், இவற்றுக்கான இலக்கணம் சொல்லிக் கொடுக்கிறார்கள், ஆயினும் வாழ்வின் அடிப்படை இலக்கணமான சக மனிதனின் மீது அன்பு செலுத்துவது எப்படி என்று  அச்சிடப்பட்டிருக்கும் இதயப் புத்தகங்களின் பக்கங்களை வேண்டுமென்றே கிழித்து விடுகிறார்கள். பொருள் தேடுவது எப்படி என்றும், தேடிய பொருளைப் பாதுகாத்து மென்மேலும் பெருக்குவது எப்படி என்கிற பாடங்களை வெட்கமின்றி நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கப் பள்ளிகளைக் கட்டி இருக்கும் சமூகத்தை உயர் நாகரீக சமூகம் என்று எப்படி நானும் நீங்களும் சொல்ல முடியும்?

fingerpaint

ஒரு கொடுமையான இனப்படுகொலையை, குழந்தைகளின் மீதான, பெண்களின் மீதான, முதியவர்களின் மீதான கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய இவ்வுலக வாழ்வை என்னால் சரிவரப் புரிந்த கொள்ள இயலவில்லை, வாழ்க்கையும், அது சொல்லித் தரும் எல்லாவிதமான கோட்பாடுகளும் எந்தப் பாவமும் அறியாத ஒரு குழந்தையின் வெடிகுண்டுகளுக்கு எதிரான அழுகுரலில் இறந்து போய் விடுகிறது, தான் வாழும் தேசம் ஒரு பண்பாட்டு வழியான, அன்பை வழங்குகிற தேசம் என்று எனது இளவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்கள் எல்லாம் மஞ்சள் புத்தகங்களாய் மாறிப் பரண்களில் ஒளிந்து கொள்கிறது. இந்த நாகரீக உலகில் இன்னொரு மகிழ்ச்சியான குடும்பத்தின் குழந்தைகளைப், பெண்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை நமது வரிப்பணம் உற்பத்தி செய்கிறது, அதிகப்பட்சமாக நாம் இப்போது தான் கற்காலத்தின் குகைகளைப் பாராளுமன்றங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

மரணத்தை நோக்கித் துரத்தப்படும்  குழந்தைகளின் அழுகுரலும், வெடிகுண்டுகளால் பறிக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கையும் மனித சமூகத்தை  மட்டுமன்றி மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லாக் கருத்தியல் உலகையும் ஒரு கணத்தில் குலைத்து விடுகிறது, குருதி கொட்டியபடி அவர்கள் மரணிக்க ஓடுவதைப் பார்ப்பதற்காக நாம் தொழில் நுட்பங்களைத்,  தொலைக்காட்சியை இன்னும் எல்லாவற்றையும் படைத்து  வைத்திருக்கிறோம், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், வேதியல் வல்லுனர்களின் உழைப்பு இவை எல்லாவற்றையும் மனிதர்கள் கடைசியாக ஒரு உயிரை வதைப்பதில் சோதனை செய்து வெற்றி பெறுகிறார்கள், மனித சமூகம் அடுத்த கட்ட நாகரீகத்தை நோக்கி விரைந்து தனது பயணத்தைத் துவக்கி விடுகிறது.

satellite-image-of-sri-lanka

இப்படித்தான் எமது மக்களும், குழந்தைகளும் உலக வல்லாதிக்க வல்லூறுகளால் கடந்த ஆண்டில் வேட்டையாடப்பட்டார்கள், காந்தியின் அகிம்சையைப் பள்ளிகள் தோறும் பாடமாய் வைத்திருந்த இந்திய தேசம், புத்தனின் முற்றும் துறந்த அன்பை அடிப்படையாகக் கொண்ட சீன தேசம் இவை எல்லாம் சேர்ந்து குறுகிய நிலப்பரப்புக்குள் அடைக்கப்பட்ட எம் ஆயிரம் ஆயிரம் மக்களை, அவர்களின் குழந்தைகளை, கருவைத் தாங்கியபடி மரித்துப் போன எம் மொழி பேசுகிற  பெண்களைத் தீவிரவாதத்திற்கு எதிரான  போர் என்கிற பெயரில் கொன்று புதைத்தார்கள், அவர்களின் அழுகுரலை நாகரீக உலகின் ஆயுதங்கள் எழுப்பிய ஓசை அள்ளி விழுங்கி விட்டு வெற்றிக் களிப்பில் ஆழ்ந்தது. 

எமது மக்கள் நிலங்களைக் கொள்ளையிட்டு எல்லைகளை விரிவு செய்ய வேண்டும் என்று ஒருபோதும் போரிடவில்லை, எமது மக்கள் மாற்று இனத்தாரின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை இயற்றவில்லை, எமது மக்கள் உனது மொழி தடை செய்யப்படுகிறது என்று யாரிடத்திலும் சொல்லவில்லை, அவர்கள் தங்களின் மொழி, கலை மற்றும் பண்பாட்டு வழியிலான அடிப்படை உரிமைகளை வேண்டி அமைதியாகத் தங்கள் குரலை உயர்த்தினார்கள், ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் அகிம்சைவழியில் போராடினார்கள், தங்களின் மறுக்கப்பட்ட நியாயங்களுக்காக அவர்கள் நிகழ்காலத்தை இழந்தார்கள், எதிர் காலத்தை நோக்கிய கனவுகளோடு ஊர்வலம் போனார்கள், ஆயினும் எமது மக்களின் குரல், குரல்வளை நெரிக்கப்பட்ட ஒரு முனகலாக மாற்றப்பட்டது, அரசியல் தீர்வுகளை நோக்கி அலைபாய்ந்தார்கள்   எம்மக்கள், நேசக்கரம் நீட்டி இறைஞ்சினார்கள், ஆயினும் ஆதிக்க மனங்களும், அரசக் கனவுகளும் அவர்களின் குரலைக் கேட்க மறுத்து அவர்களை ஏளனம் செய்தார்கள், வீதிகளில் கொன்று குவித்தார்கள், கூட்டம் கூட்டமாக எரித்தார்கள், புதைத்தார்கள், எங்கள் நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக் கொண்டே அவர்களைப் பாலியல் வல்லுறவு கொண்டார்கள்.

06_03_09_maur_03

தான் வாழும் சமூகத்தின் மீது இப்படிக் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை எதிர் கொள்ள இவ்வுலகின் எல்லா இளைஞர்களும் கைக்கொள்கிற வழிமுறையை எமது இளைஞர்களும் பின்பற்றினார்கள், தனது குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்முறையை எதிர் கொள்ள அல்லது தற்காத்துக் கொள்ள எடுக்கப்பட்ட ஆயுதங்களுக்குப் பெயர் தீவிரவாதிகளின் துப்பாக்கியாகவும், குழந்தைகளின், பெண்களின் மீது ஏவப்பட்ட வன்முறைக்குப் பெயர் இறையான்மையாகவும் பொருளுரைக்கப்  படுவதை எத்தகைய கோட்பாடுகளால் எதிர் கொள்வது. அரசியல் வழிமுறைகளின் பெயரால், இசங்களின் பெயரால், கோட்பாடுகளின் பெயரால் மனித உணர்வுகளை எப்போதும் யாராலும் புரிந்து கொள்வது இயலாது என்கிற ஒரே ஒரு உண்மையைத் தான் இத்தகைய முரண்பாடுகள் உணர்த்துகின்றன, கோட்பாடுகளை மீறிய, கோட்பாடுகளை உடைக்கிற ஆற்றலாக எஞ்சி இருக்கும் மனித மனமும் அதன் எல்லையில்லாத ஆற்றலும் தான் பேரண்டத்தின் உள்ளடக்கமாக நிறைந்து கிடக்கிறது.

முரண்பாடுகளின் மொத்த வடிவமாக உலகெங்கும் பரவிக் கிடக்கும் கோட்பாடுகள், அவற்றால் உருவான அரசுகள், இப்படி எல்லாமே  மனித உயிர்களைக் கடைசியில் எள்ளி நகையாடும் ஒரு கீழான தத்துவக் கட்டமைப்பால் பின்னப்பட்டிருப்பதை முதிர்வான பண்பட்ட ஒரு உலகைத் தேடும் மனித மனத்தால் ஏற்றுக் கொள்ளவே இயலாத நிலையில், அத்தகைய ஒரு மிகக் கொடுமையான அடக்குமுறைக்கு ஆளான இனத்தின் கடைசி உறுப்பினன் என்ற வகையில் நாம் இத்தகைய இழிவான அரச கலாச்சார மரபுகளில் இருந்து எம் இளைய தலைமுறையைப் பாதுகாப்போம், எத்தகைய சூழலிலும் நாம் எமது எதிரிகளின் குழந்தைகளை நாகரீகத்தின் ஆயுதங்களால் தாக்கவோ, அவர்களைத் துன்புறுத்தவோ மாட்டோம், எமக்கு அருகில் காயம்பட்டுக் கிடக்கிற   எந்த ஒரு இனத்தின் மனிதனையும்  நாங்கள் மருந்திட்டுக் காப்பதற்கு எம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

GWCD_Rememb_10_87239_445

ஆயினும்,  நாங்கள் போராடுவதை நிறுத்துவதாய் இல்லை, போராடாத எந்த இனமும் விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது என்று நாங்கள் அறிவோம், போராடாத எந்த இனமும் பெற்ற வாழ்க்கை அத்தனை இனிமையாய் இருக்க இயலாது என்பதை நாங்கள் உணர்கிறோம், போராட்டம் தான் வாழ்க்கையின் முழுமையை எமக்கு உணர்த்துகிறது, போராட்டங்கள் தான் மனிதனின் தேவைகளை, மனித இனத்தின் வரலாற்றுப் பாதை எங்கும் நிரம்பி இருக்கிறது, வாழ்க்கை என்பதே வாழ்வதற்கான போராட்டம் என்று தான் பொருள் கொள்ளப்படுகிறது, அக மனிதனுக்கும், புறச் சூழல்களுக்கும் இடைப்பட்ட போராட்டம் தான் வாழ்க்கையாக மனிதனால் உணரப்படுகிறது. எமது விடுதலை என்பது சிறைகளை உடைத்து வெளியேறுவதில் இல்லை, எமது விடுதலை என்பது சிறைகளே இல்லாத தூய்மையான சமூகத்தைக் கட்டமைப்பது என்று நாங்கள் அறிவோம், எங்கள் அடிப்படை உரிமைகள் யாரும் எங்களுக்கு  வழங்கும் யாசகம் அல்ல என்பதையும், நாங்களே உருவாக்கிக் கொள்கிற மானம் நிரம்பிய எமது தேவைக்கான மனநிலை என்பதையும் நாங்கள் அறிவோம்.

ltteNewsImage

எமது இருப்பும், எமது மொழியின் இருப்பும் நாங்கள் சந்திக்கிற முரண்பாடுகளையும், வலிகளையும் கடந்து எங்களால் உருவாக்கப்படுகிற ஒரு மகிழ்வான, ஏற்றதாழ்வுகள் இல்லாத சமூகத்தின் கைகளில் தான் அடங்கி இருக்கிறது, அந்த மேம்பட்ட உயிர் வாழ்க்கையை நேசிக்கிற ஒரு வாழ்க்கைக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம், போர்க்களத்தில் நின்று களமாடிய எங்கள் இனத்தின் தலைவர்களும், போராளிகளும் கூட இத்தகைய ஒரு சமூகத்தைக் கட்டமைத்து அதன் பரப்புகளில் நின்றே இந்தப் பொருள் உலகோடு போராடினார்கள் என்பதை நாங்கள் எல்லோரையும் விட நன்கறிவோம், ஆம், கடைசியாய் எங்களிடம் இருந்த இரண்டு விமானங்களால் உங்கள் குழந்தைகளின் மீதும் அவர்களின் வாழிடங்களின் மீதும் குண்டுகளை எறிந்திருக்க முடியும், ஆயினும் எங்கள் எதிரிகளே, நாங்கள் உங்கள் படைகளை மட்டுமே குறி வைத்து மடிந்து போனோம். அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.

நினைவு கொள்கிறோம், எங்கள் மீதான உங்கள் வெறிகொண்ட தாக்குதலை ஒற்றைச் சொல்லால் மட்டுமே எப்போதும்…….

 

powerful_1

“தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.”

 

***********

Advertisements

Responses

 1. அருமை அண்ணா, நம் தாகம் என்றும் இருக்கும் தமிழீழம் மலரும்

 2. arumai natpe

 3. //கண்ணெதிரில் கொல்லப்படும் குழந்தைகளைக் காப்பாற்றும் அக்கறையும், அன்பும் இந்தப் பொருள் உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை என்பதை உணரும் தருணங்கள் உலகின் பாதுகாப்பற்ற மனித வாழ்க்கையைப் பறை சாற்றுகின்றன,//

  என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பித்தான் நிற்கிறார்கள். எதிர்காலம் கேள்வியாயிருக்கிறது. எதிரில் நடக்கும் அட்டூழியத்தை தட்டிக் கேட்பது கூட கேலியாகிப் போனது மார்கஸிஸ்டுகளுக்கு.

  எல்லோரும் அரசை அண்டிப் போய், கெஞ்சிக் கூத்தாடி இலங்கை மக்களுக்கு சோறு வாங்கிக் கொடுக்கத்தான் கலைஞன் முதல் தாஸன் வரை லாயக்கு. சோறு தின்று விக்கிச் சாகட்டும் தமிழன். இனப் பெருமை பேச நான் விரும்பவில்லை. எந்த இனமாயினும் அது இவ்வளவு கேவலமாக அழியக்கூடாது. அதற்கு உதவுபவர்கள் ‘யாராயினும் அவர்கள் புழுத்துப் போய்தான் சாவார்கள்’ என்று புலம்புவது மட்டுமே தற்போது முடிகிறது.

 4. நண்பரே ,

  குகைவாழ் மனிதனிடம் பௌத்தமும்
  பெருசாளியின் உணவாய் மார்சியமும்
  பல்லிடுக்கில் தொங்கும்
  சதை துணுக்குகளாய்
  மனிதாபிமானமும்
  ஊன் வடிய வழிகிறது.

  இசங்கள் மானுடத்தின் மனிதாபிமான
  தேடல்கள்.

  உலக நிலம் உலக கொள்ளையர்களால் ஆளப்படுகிறது.

  ”உலக நிலம்
  உலக மக்களால்
  உழப்பட வேண்டும் ” – கண்புசியஸ் .

 5. நல்ல பதிப்பு நண்பரே…
  எல்லோரும் இப்படி கருத்துக்களாக எழுதுகுறோம் .நம் மன அழுதர்திக்கு ஒரு ஆறுதல் .”முதலாளித்துவமே வெற்றிபெறும் “என்பது நாம் இதுவரை கண்ட உண்மை.கம்யுனிச நாடு என்று சொல்லப்படும் சீனா -வில் தியாமின் சதுக்க நிகழ்வு உங்களுக்கு நியாபகம் இருக்கலாம் ,பிறகு எங்கே உள்ளது கம்யுனிசம்.
  அரசியல் தீர்வு இல்லாத போராட்டம் இன்னும் நம் மக்களை கொன்றுகொண்டு இருக்கிறது.தீர்வு என்ன இதுவரை யாராலும் சொல்லமுடியவில்லை .


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: