கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 3, 2010

அருந்ததி ராயும், தமிழ் எழுத்தாளர்களும்

aru

அருந்ததிராயைப் போலத்  தீவிரமாக இயங்குகிற எழுத்தாளர்கள் தமிழில் யாரேனும் உண்டா? என்றொரு கேள்வியை நண்பர் அதீஷா எழுப்பி இருக்கிறார், அந்தக் கேள்வி ஒரு தீவிரமான எழுத்து பற்றிய சிந்தனையை நமக்குள் உருவாக்குகிறது, எழுத்து ஒரு மிகப் ஆற்றல்  வாய்ந்த கருவியாக இருக்கிறது, தொழில் நுட்பம் செழித்து வளர்ந்து மடிக்கணினி, அக்குள் கணினி என்று இன்னும் என்னவெல்லாமோ வந்து விட்ட போதும், மொழியும் அதன் நுட்பங்களும் மட்டுமே அவற்றை இயங்க வைக்கிற ஆற்றலாக இருக்கிறது.

வீரியமாக இயங்குகிற எந்த மொழியின் எழுத்தாளர்களுக்கும்  தேவையும், சூழலும்  ஒரு இன்றியமையாத காரணியாக இருக்க வேண்டும். தமிழ் உலகம் முழுக்க இலவசங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருண்மிய நிலைகளில் மூழ்கித், திறன் இழந்த, இலக்கியச் செறிவுக்கும், மேன்மைக்கும் பழக்கப்படாத புதிய தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கும்

போது தமிழகத்தில் அருந்ததி ராயைப் போல தீவிர இலக்கியத்திலும், எழுத்துத் துறையிலும் இயங்கும் எழுத்தாளர்களை அடையாளம் காண்பது அத்தனை எளிதில் நிகழ்ந்து விடும் நிகழ்வல்ல. வரலாற்றில் ஏதாவது அழுத்தங்கள் அல்லது கடும் நெருக்கடிகள் தோன்றும் போது எழுத்து மட்டுமன்றி எல்லாக் கலை வடிவங்களும் ஒரு புதிய வடிவத்தை அல்லது பாதையைத் தேர்வு செய்வதற்குத் தூண்டப்படுகின்றன, ஈழப் போராட்டம் அத்தகைய ஒரு நெருக்கடியில் ஈழ எழுத்தாளர்களை மிகுந்த வீரியத்தோடு எழுதும் படி செய்தது, மற்றபடி தமிழ்நாட்டில் தீவிர எழுத்துக்கான தேவை மிகக் குறைந்து மலினம் செய்யப்பட பொழுதுபோக்கு சார்ந்த இலக்கியங்களில் தேங்கி விட்டது. அவற்றையும் தாண்டி எப்போதாகிலும் மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் வெளியாகும் படைப்புகள் அவற்றைக் கொண்டு வரும் எழுத்தாளர்கள் இருந்தாலும், அவர்களை வெகுமக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான இடை ஊடகங்கள் முற்றிலும் வர்க்கம் அல்லது வர்ணத்தின் மேல் அடுக்குகளில் இருக்கிறபடியால் நிகழும் புறக்கணிப்புகளில் இத்தகைய இலக்கியங்களும், இலக்கியவாதிகளும் காணாமல் போய் விடுகிறார்களோ என்று ஒரு ஐயப்பாடும் இருக்கிறது.

brain-think-tank

எழுதுபவர்களைப் பற்றியும், கருத்துலகில் இயங்குபவர்களைப் பற்றியும் ஒரு தவறான கண்ணோட்டமும், சமூகப் பார்வையும் அமைப்பு அல்லது இயக்கம் சார்ந்த சமூக உறுப்பினர்களாலும், தனி மனிதர்களாலும் எழுப்பப்படுவது  இணையத்தின் வருகைக்குப் பின்னர் மிக எளிதான ஒரு செயலாகிவிட்டது. தமிழ் எழுத்து என்கிற உள்ளடக்கத்தில் நுழையும் முன்னர் எழுத்து எப்படி விளைகிறது, எப்படிப் பயணிக்கிறது, என்ன தாக்கங்களை விளைவிக்கிறது என்பது குறித்து நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

கருத்துலகம், அரசியல் உலகம், பொருண்மிய உலகம் என்று பிரித்தறியப்படும் மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய உலகங்களில் முதலும் துவக்கமுமாக இருப்பது கருத்துலகம், இருப்பை உணர்ந்த பின்பு மனித மனம் செயல்படும் பல்வேறு இயக்கங்களைக்  கட்டமைப்பதும், செயல்பாடுகளை தோற்றுவிப்பதும் கருத்துலகம் என்றால் அது மிகையாகாது, தனது அடிப்படைத் தேவைகளை நோக்கிய பயணத்தில் எழும் எண்ண வடிவங்களை மனிதன் ஒலிக்குறிப்புகளாக்கிய காலம் முடிந்து, அவற்றின் பதிவுகளை குகைகளில் வரி வடிவங்களாக  மாற்றிய போது துவங்கிய மனிதனின் எழுத்துப் பயணம்  இன்றைய நவ உலகின் போக்கை முடிவு செய்யும் அல்லது மாற்றும் அளவுக்கு மாறி இருக்கிறது, அடிப்படைத் தேவைகள் முடிந்து துவங்கும் மேம்பாட்டுக்கான போராட்டம் புதிய எழுத்துக்களைத் தோற்றுவிக்கிறது, ஆதிக்கத்திற்கு எதிரான மனித மனதின் போராட்டம் முற்றிலும் மாறுபட்ட எழுத்து வடிவங்களை உண்டாக்குகிறது, அறிவியலின் தேவைகள் சமூகத்திற்கு வழங்கும் எழுத்து வடிவங்கள் வேறு, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் புரட்சிகரமான எழுத்துக்களை உற்பத்தி செய்கிறது.

writer

அமைதியான, சலனமற்ற மனித மனத்தின் எண்ண அலைகள் மேலே சொன்ன அனைத்தையும்  இணைக்கும்  எழுத்துக்களை மனித சமூகத்திற்கு வழங்கினாலும், அவை வெவ்வேறு அடுக்குகளில் வைக்கப்பட்டு அப்போதைய தேவைகளின் அடிப்படையில் வாசிக்கப்படுகின்றன, புரிந்து கொள்ளப்படுகின்றன, ஆயினும், எழுத்தை உள்ளடக்கிய கருத்துலகே அது இயங்கும் சமூகத்தின் அரசியலை முடிவு செய்கிறது, அத்தகைய கருத்துலகின் மேல் கட்டப்பட்ட அரசியல் உலகமே அச்சமூகத்தின் பொருண்மிய வடிவங்களை முடிவு செய்கிறது, ஆக பேச்சும், எழுத்தும் ஒரு மனித சமூகத்தின் தனது அரசியலைத் தேர்வு செய்யும் வலிமையை உண்டாக்குகிறது, அத்தகைய வலிமையான அரசியலால் இயக்கப்படுகிற பொருண்மியமே மேம்பட்ட மனித வாழ்க்கையை நோக்கித் தொடர்ந்து பயணம் செய்யும் மனித குல வரலாற்றை வடிவமைக்கிறது.

படைப்பிலக்கியம் அல்லது எழுத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இலக்கிய வகைகள் தான் இத்தகைய கருத்துலகை ஆளுமை செய்யும் உறுப்புகள், மனிதனின் தேவைகளை, மனிதனின் போராட்டங்களை, மனிதனின் வலிகளை வரலாற்றில் பதிவு செய்து அவற்றால் பாடம் கற்கவும், இன்னும் மேம்பட்ட சமூகத்தை வழிநடத்துவதிலும் இத்தகைய தீவிர இலக்கியத்தின் பங்கு அளப்பரியது, எல்லா மொழியிலும் இலக்கியங்கள் அல்லது எழுத்துக்கள் மனித வாழ்வின் மேம்பட்ட பயணத்தை நோக்கியே எழுதப்பட்டன, மொழி இலக்கியத்தின் தரத்தை நிர்ணயம் செய்கிற கருவியா என்று பார்த்தால் பொருண்மியம் இடையில் குறுக்கிட்டு விடுகிறது, ஆங்கில மொழியில் எழுதப்படும் இலக்கியங்கள் ஏன் புகழடைகின்றன அல்லது வியந்து பார்க்கப்படுகின்றன என்று ஆய்வு செய்யும் போது ஆங்கிலேயேர்களின் உலகளாவிய பயணமும், உலகம் முழுவதிலும் வாழ்ந்த உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டிய ஒரு அரசியல் வெற்றியும், அதற்குப் பின்னான பொருண்மிய விடுதலையும் காரணிகளாக இருப்பதை நம்மால் உணர முடியும், ஆங்கிலேயர்களால், அவர்கள் கருத்துலகின் மீது கட்டமைத்த அரசியலால், வணிக மயமாக்கப்பட்ட ஆங்கில மொழி உலகின் சமூக மற்றும் பொருளாதார இயங்கியலில் தனது ஆளுமையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது, அதிலும், காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய மூன்றாம் உலக நாடுகளில் இத்தகைய தாக்கம் மிகப்பெரும் அளவில் ஊடுருவி இருப்பது திண்ணம்.

great-writer

தற்போதைய முதலாளித்துவ உலகும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு மொழியைத் தேடுகிற தேவை இன்றி, ஆங்கிலத்தை மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்கிற நிலையில் ஆங்கிலத்தில் இலக்கியம் படைத்தல் என்கிற ஒரு புற உலக அழுத்தம் எழுதும் ஆர்வம் இருப்பவர்கள் அனைவருக்கும் இயற்கையாகவே எழுந்து விடுவது வியப்பானதில்லை. இத்தகைய முதலாளித்துவப் பொருள் உலகின் அழுத்தம் பல்வேறு மண்டல மொழிகளின் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் ஒரு மிகப் பெரிய காரணி என்பதை நாம் இந்த இடத்தில மறந்து விடக்கூடாது. 

முறைப்படுத்தப்பட்ட பதிப்பு அல்லது எழுத்துக்கான பொதுவான ஒரு அமைப்பு இருக்கும் நிலையில் பல்வேறு சிறந்த நுண்ணிய கருத்தியல் உலகின் உறுப்பினர்களை நம்மால் இனம் காண முடியும், இங்கேயும் வர்ண மற்றும் வர்க்க பேதங்களின் தொடர்ச்சிதான் இவற்றைத் தடை செய்யும் காரணிகள், இன்றும் வெகு மக்கள் ஊடகங்கள் என்று நம்ப வைக்கப்படுகிற தமிழ் ஊடகங்கள் நமது பண்பாட்டுக்கான, மொழிக்கான தீவிர இலக்கியத்தை அல்லது இலக்கியவாதிகளை அடையாளம் காண்பதையோ, அத்தகைய படைப்புகளை அறிமுகம் செய்வதையோ பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. (எடுத்துக்காட்டுக்கு தலித் இலக்கியம்)

english

நமக்கான ஊடகங்களைக் கட்டமைப்பத்தின் மூலமும், ஊடகத் துறையை தகுதியான தமிழ் இளைஞர்கள் கையகப்படுத்துவதன் மூலமும் இத்தகைய ஒரு வெற்றிடத்தை நம்மால் நிரப்ப இயலும், நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம், பன்னாட்டு இலக்கியங்களை அல்லது இலக்கியவாதிகளை தமிழை நோக்கிப் பயணம் செய்ய ஒரு பாதை அமைப்போம், பன்னாட்டளவில் வெற்றி பெரும் எழுத்தாளர்கள் அல்லது ஆங்கில இலக்கியங்கள் இன்றைய முதலாளித்துவக் கட்டமைப்பில் மூன்றாம் உலக நாடுகளால் உருவகம் செய்யப்பட்ட ஒரு தோற்றப் பிழையே அன்றி, உண்மை அல்ல, தனது சொந்த மக்களின் நல்வாழ்விற்கும், மேன்மைக்கும் பயன்படும் இலக்கியமே உலகின் ஒப்பற்ற பன்னாட்டு இலக்கியம். ஆங்கிலத்தில் எழுதப்படும் நவீன எழுத்து வகைகளில் மொழியின் நுட்பமும் உயிர்ப்பும்  இருக்குமா என்பது தான் நம் முன் இருக்கிற கேள்வி.

ஆங்கிலத்தின் மீதான மயக்கம் தான் இது போன்ற கேள்விகளை இன்னும் நமக்குள் எழுப்பிக் கொண்டிருக்கிறது என்று உறுதியாக நான் நம்புகிறேன். தனது மொழிக்காகவும், தனது மக்களுக்காகவும் எழுதிய "பாரதிதாசன்" இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயத்தில் வீற்றிருக்கிறார், ஆங்கிலம் பற்றிய அறிவே இல்லாத “திருவள்ளுவரை” ஆங்கிலம் அடையாளம் கண்டது எப்படி?

fumagalli_mother_tongue

காலமும், படைக்கப்பட்ட மொழியின் மக்களுமே இலக்கியத்தின் தரத்தை முழுமை செய்யும் காரணிகள், நாம் நமது மொழியை இன்னும் வளம் மிகுந்ததாய் மாற்றுவோம், ஏனெனில் அதுதான் கருத்துலகை ஆளுமை செய்து நமக்கான அரசியலைக் கட்டமைக்கிறது, நமக்கான அரசியல் தான் பொருண்மிய விடுதலையை மனித வாழ்க்கைக்கு வழங்குகிற ஒரே காரணியாக இருக்கிறது.

*************

Advertisements

Responses

 1. //நமக்கான ஊடகங்களைக் கட்டமைப்பத்தின் மூலமும், ஊடகத் துறையை தகுதியான தமிழ் இளைஞர்கள் கையகப்படுத்துவதன் மூலமும் இத்தகைய ஒரு வெற்றிடத்தை நம்மால் நிரப்ப இயலும், நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம், பன்னாட்டு இலக்கியங்களை அல்லது இலக்கியவாதிகளை தமிழை நோக்கிப் பயணம் செய்ய ஒரு பாதை அமைப்போம்//

  //காலமும், படைக்கப்பட்ட மொழியின் மக்களுமே இலக்கியத்தின் தரத்தை முழுமை செய்யும் காரணிகள், நாம் நமது மொழியை இன்னும் வளம் மிகுந்ததாய் மாற்றுவோம், ஏனெனில் அதுதான் கருத்துலகை ஆளுமை செய்து நமக்கான அரசியலைக் கட்டமைக்கிறது, நமக்கான அரசியல் தான் பொருண்மிய விடுதலையை மனித வாழ்க்கைக்கு வழங்குகிற ஒரே காரணியாக இருக்கிறது//

  படைப்பாளிகளும்.. பதிப்பாளர்களும்.. வார இதழ் ஆசிரியர்களும் படிக்க வேண்டிய பதிவு. மாற்றங்களை நம் கையில் வைத்துக் கொண்டு பிறரிடம் கேட்கும் இளைய சமுதாயத்திற்கு சிந்திக்க வைக்கும் ஒரு நீள விளக்கக் கட்டுரையிது. நிறைய இடங்கள் குறிப்பிட்டுக் காட்ட உள்ளன, இருந்தும் பொறுமை கொண்டு முழுதுமாக படிக்க வேண்டிய பதிவென்பதால் இறுதி கொள்கிறேன்.. மிக்க நன்றிகளுடன்..

  வித்யாசாகர்

 2. அன்பின் வித்யாசாகர்,

  உங்கள் சொற்கள் நிறைய ஊக்கத்தை வழங்குகிறது, தொடர்ந்து நாம் பயணிப்போம், நமக்கான கடமைகளை நிறைவேற்றியபடியே……..

  தோழமையுடன்
  கை.அறிவழகன்

 3. muyalvom….aakkangal thara…..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: