கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 17, 2010

தாத்தாவின் நாட்குறிப்பில்………

one

மலை உச்சியில், கடல் காற்றின் ஊளையில்,
காதலியின் நினைவில் அல்லது கனவின் விழிப்பில்,
பரண் மீது கிடந்த தாத்தாவின் பழைய நாட்குறிப்பில்,
உருவமற்ற உலகின் காலம் உறைந்து கிடக்கும் ஊரின்
ஓரத்தில் இன்னும் இருக்கிறது உயரமாய் ஒரு கோட்டை,

துள்ளி எழும் அலைகளை அசைவற்றுப் பருகியபடி,
உயர்ந்த மதிலும், சுற்றிக் கட்டிய அகழியுமாய்,
கருங்கற்களால் பூமியை இருக்கக் கட்டியபடி,
வானத்தை வெறித்துக் கொண்டு காலம் காலமாய்
கொடிகளை மாற்றியபடி அது அங்கேயே கிடக்கிறது,

வருடக்கணக்கில் போர்த்துகீசியனின் மொழியால்
நிரம்பி இருந்தது கோட்டைக் காற்று,
பின்னொரு நாளில் ஒல்லாந்தன் வழங்கிய கட்டளைகள்
அகழி நீரின் வழியே மிதந்து வெளியேறி வந்தன,
ஆங்கிலக் கணவான்களின் கனவுகள் வியப்பான சில
செடிகளைத் வளர்த்தபடி பசுக்களின் இறைச்சி உண்டு
கோட்டைக்குள் பயங்கரமாய்ப் படுத்திருந்தன பலகாலம்.

யானைகள் அணிவகுத்துக் குதிரைகள் நடனமிட்டு
வண்ண விளக்குகளில் மின்னிய கோட்டையில் தான்
கண்ட பன்னாட்டுக் கொடிகளின் அற்புதங்களை எல்லாம்
அப்போது எழுதாத தாத்தா, அப்படி என்ன கண்டார்,

சுற்றி வாழ்ந்த பொடியன்களின் உயிர் வெடித்துக்
கொஞ்சகாலம் கோட்டையில் ஏற்றிய புலிக்கொடியில்?
பக்கம் பக்கமாய் எழுதி இருக்கிறார்……………………….

two

 

நாட்காட்டியைப் புதைத்தல்.

three

நாட்களில் புதைந்த நினைவுகள் குறித்த எந்தச்
சலனமும் நாட்காட்டிகளுக்கு இருப்பதில்லை,
அவை சொல்லித்தான் ஓராண்டு முடிவது பற்றி
நான் அறிந்து கொள்கிறேன், இருப்பினும், நாள்
முடிந்ததும் அவை மௌனித்து விடுகின்றன,

அழுகையும், சிரிப்பும் இன்றி அவை நாட்களைக்
கடப்பது குறித்து நான் வியந்திருக்கிறேன்,
ஆன்டன் இறந்த நாளையும், மாரிச்சாமி பிறந்த
நாளையும் எப்போதும் போலவே கிழிந்தபடியே
எனக்கு உணர்த்துகின்றன நாட்காட்டிகள்,

ஒரு நாளில் விரைவாகவும், சில நாட்களில்
மறந்து கிழிக்கப்படாமல் இருப்பினும் அவை
நம்மைப் போலவே யாதொன்றையும் நினைவில்
கொள்வதும், எதிர் நோக்குதலும் இல்லை போலும்,
வீட்டுக்குள் பரிமாறப்பட்ட முத்தங்களின்
ஓசையையும், கொத்துக் குண்டுகளில் இறந்த
குழந்தைகளின் துயரங்களையும் ஏதாவது ஒரு
எண்ணில் குறித்தபடி அடுத்த எண்ணுக்கு
விரைந்து விடுகின்றன நாட்காட்டியின் தாள்கள்.

இன்னொரு "மே" மாதத்தை எந்தச் சலனமும்
இன்றி அவை அமைதியாகவே எதிர் கொள்ளும்
போல் தெரிகிறது, நான் யாருக்கும் தெரியாமல்
என் வீட்டு நாட்காட்டியைப் புதைத்து விட்டேன்,
நாட்காட்டியில் இருந்து தப்பித்து எனைத் துரத்தும்
துயரங்களையும், அதன் நினைவுகளையும் எங்கே
புதைப்பது என்று யாராவது சொல்லுங்களேன்…….

four

 

விடைபெறாத ஓரிரவு………….

five

இருக்கப் பற்றிய உன் வண்ண விரல்களின்
வெற்றிடம் நிரப்பக் கோரிக் காதுகளில்
முணுமுணுக்கும் அலை விரட்டிய காற்று,
கடலுக்குள் குதித்த தன் பொன்னிற நிழலை
மேகங்களுக்கிடையில் நின்று தேடியலையும்
முகம் கருத்த முழு மஞ்சள் நிலவு,

மடியில் புதைந்த உன் காதலைக் கசிந்து பின்,
கலங்கிய கண்களின் ஓரத்தில் ஒளிவட்டமாய்
ஓடி மறையும் தூரத்துக் கப்பலின் விளக்குகள்,
நெருக்கத்தில் வழிந்த உன் அன்பை அள்ளிச்
சிமிட்டியபடி வேடிக்கை பார்த்த விண்மீன்கள்,

இரைகிற பல மனிதர்கள், ஆடிக்களித்த ஒரு குழந்தை
இவர்களின் சாட்சியாய்த் தலை கவிழ்ந்து மணலில்
என் பெயரெழுதிப் புன்னகையில் காதலைச் சொன்னாய்,

பின்னொரு நாளில் வெண்ணிறப் பறவைக்
கூட்டமொன்றுக்கு மேலே பறந்த விமானத்தில்
என் சிரிப்பையும் சுமந்து நீ பறந்த போதினில்
கடலுக்கும் உலகுக்கும் விடிந்திருக்க வேண்டும்.
விடைபெறாது அலைந்து எனைத் துரத்தி வருகிறது
அன்றைய இரவு, நான் எந்தக் கடற்கரைக்குப் போனாலும்…………

six************

Advertisements

Responses

 1. இன்னொரு “மே” மாதத்தை எந்தச் சலனமும்
  இன்றி அவை அமைதியாகவே எதிர் கொள்ளும்
  போல் தெரிகிறது, நான் யாருக்கும் தெரியாமல்
  என் வீட்டு நாட்காட்டியைப் புதைத்து விட்டேன்,
  நாட்காட்டியில் இருந்து தப்பித்து எனைத் துரத்தும்
  துயரங்களையும், அதன் நினைவுகளையும் எங்கே
  புதைப்பது என்று யாராவது சொல்லுங்களேன்…….///////

  ஈழம் வெல்லும்…. காலம் சொல்லும்….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: