கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 28, 2010

விடுதலைப்போரின் களத்தில் இருக்கிறோம்.

liberty

களத்தில் இருக்கிறோம் என்பது மனித வாழ்க்கையை நினைவுபடுத்தும் ஒரு சொல்லாடல், புறவெளிகளில் நிகழ்கிற மாற்றங்களை, முரண்களைத் தனி மனிதனின் அகவெளியோ அல்லது சமூகத்தின் அகவெளியோ எப்படி எதிர்கொள்கிறது, தனது கட்டமைக்கப்பட்ட மனநிலையை மாற்றமடையச் செய்யும் சூழலை எப்படி எதிர் கொள்கிறது என்பதை நாம் களத்தில் இருத்தல் என்று புரிந்து கொள்ளலாம், போராட்டம் ஆதிமனிதனின் காலம் தொட்டு மட்டுமன்றி உயிர் வாழ்க்கையின் துவக்கம் முதலாகவே தொடர்ச்சியான மாற்றங்களுக்கான உலக இயங்கியலாக இருந்து வருகிறது, உயிர்ப்பெருக்கம் கடும் நெருக்கடியை கடலுக்குள் விளைவித்த காலத்தில் அத்தகைய சூழலை எதிர் கொள்ள வெளியேறிய சில உயிரிகள் நிலத்தில் வாழும் தகவமைப்பைத் தங்கள் உடலில் உருவாக்கிக் கொண்டு விட்டன, வாழ்க்கை நெருக்கடிகளில் இருந்து தப்பிப் பிழைக்க எதுவாக அவை போராடிப் பெற்றுக் கொண்ட கொடை  அது.

மனித வாழ்க்கையின் போராட்டங்களும் இப்படித்தான் துவங்குகின்றன, தனி மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்காகத் துவங்குகிற வாழ்க்கைப் போராட்டம் குடும்பத்தின் தேவைகள், சமூகத்தின் தேவைகள், இனத்தின் தேவைகள் என்று விரிவடைத்து கொண்டே வந்திருக்கிறது, தேவைகளை மனிதன் கருத்தியல் வழியாகவும், கருத்தியலால் வடிவமைக்கப்பட்ட அரசியல் வழியாகவும், அரசியல் மாற்றங்களால் நிகழும் பொருண்மிய நெகிழ்வு அல்லது பொருளாதார விடுதலை வழியாகவும் பெற்றுக் கொள்கிறான், முந்தைய நிலையிலிருந்து ஒரு மேம்பட்ட நிலைக்குப் போராட்டங்கள் மனிதனை எடுத்துச் செல்லும், சென்றிருக்கின்றன என்பதே வரலாறு, அத்தகைய நம்பிக்கையின் விளைவாகவே உலகெங்கும் தொடர்ந்து போராட்டங்கள் நிகழ்கின்றன. போராட்டங்களைப் பற்றிய புரிதலை இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் தனது இளைய தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசரம் மிகுந்த தேவையாக இருக்கிறது.

நமது சமூகம் தொடர்ச்சியாக ஒரு நிலப்பரப்பில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கொண்டே இருக்கிறது, அதன் நீட்சியாக உலகமெங்கும் வாழ்கிற தமிழ் மக்களும், இளைஞர்களும் போராட வேண்டிய ஒரு அழுத்தத்தில் இருக்கிறார்கள், ஒரு புதிய தலைமுறை போராட்டத்தின் வடிவங்களை முதல் முறையாகத் தங்கள் வாழ்வில் சந்திக்கிறார்கள், போராட்டம் இவர்களின் அகவெளியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது, பல்வேறு புதிய சிந்தனைகளை உள்ளீடு செய்கிறது, கருத்தியலை உருவாக்கும் திடமான மனநிலையைப் போராட்டங்கள் வழங்குகிறது, கருத்துலகம் உருவாக்கும் வழிமுறைகளைக் கொண்டு தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு மிகப் பெரிய பொது வெளிக்குள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ தள்ளப்படுகிறார்கள், இந்தப் பொது வெளியில் நிகழும் இவர்களது செயல்பாடுகள் மற்றும் திட்டங்களே மேம்பட்ட பொருண்மிய பண்பாட்டு வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கும் என்பது திண்ணம்.

Freedom_Yellow_Bird_in_Hands

நமது போராட்டங்களும் அவற்றைக் குறுக்கிடும் ஆற்றல்களும்:

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தான் தமிழ்ச் சமூகம் ஆசிய நிலப்பரப்பில் எதிர் கொண்ட மிகப் பெரிய போராட்டமாக  இருந்தது, ஆயினும் இந்த இரண்டு நூற்றாண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மற்றொரு வர்க்கப் போரை நாம் அடையாளம் காண்பதும் போராட்டங்களின் வகைகளை நாம் அறிவதற்குத்  துணை  இருக்கும். உள்ளோட்டமாக நடைபெறும் முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிரான உழைக்கும் மக்களின் அகப்போராட்டங்களும், பண்பாட்டு வழியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் வருணக் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அக மற்றும் புறப் போராட்டங்களும் வெளிப்படுத்தப்பட்ட இன விடுதலைப் போராட்டத்திற்கு இணையானவை என்பதையும், இத்தகைய முரண்பாடுகளால் உருவான இடைவெளிகள் இன வழியான, மொழி வழியான ஒற்றுமையைத் தேவையான நேரங்களில் நமக்கு வழங்கவில்லை என்பதும், பிளவுண்ட நமது சமூகம் அதற்கான பயன்களை ஒரு மிகப் பெரிய அழிவின் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தது தான் வரலாறு நமக்கு வழங்கிய பாடம்.

இன்றைய உலகம் பொருண்மியத்தின் மீது கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது, பல்வேறு அறிஞர்களின் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் தோல்வி அடைந்து முதலாளித்துவம் தனது கிளைகளை உலகெங்கும் பரப்பி வைத்திருக்கிறது, கம்யூனிசச் சிந்தனைகளைக் கூட முதலாளித்துவம் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது, மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பிய சமூகம் இன்னுமும் முதலாளித்துவத்தின் மிகப் பெரிய காவல் அரணாக இருக்கிறது, மதப் பண்பாட்டு வழியாக கிருத்துவம் உலகின் மேன்மையடைந்த ஒரு சமூகத்தை வழங்கவல்லது என்று மேற்குலக சக்திகள் நம்புகின்றன, இஸ்லாமிய மற்றும் மாற்றுப் பண்பாட்டு வழிகளை தனது அடக்குமுறைகளால், தீவிரப் பரப்புரைகளால் நசுக்கி அது மேழெழும்பப் போராடுகிறது. அமெரிக்காவும், பிரிட்டனும் இன்றளவும் உலகின் பல்வேறு கொள்கைகளை, தேசிய வடிவங்களை, இனக்குழுக்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலாக இருக்கின்றன. இவற்றின் ஊடாக வளர்ந்து வந்த சோவியத் யூனியன் என்கிற கம்யூனிச ஆற்றல் மாந்தர்களின் தேவை உலகம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தேக்கமடைவதை விரும்பாமல் தன்னுடைய ஆற்றலின் அடிப்படையிலும், தன்னுடைய செயல்பாட்டின் அடிப்படையிலும் பொருண்மிய உலகை சீராக்க முயன்றது, ஆனால் கம்யூனிசச் சூழலிலும் ஆட்சி அதிகாரம் போன்ற முதலாளித்துவத்தின் நச்சு வேர்கள் ஊடுருவியது, பொருளின் மதிப்பை உற்பத்தி ஆற்றலின் மதிப்பு ஈடு செய்ய முடியாமை, அமெரிக்க அரசுகளின் மறைமுகமான பனிப்போர்  போன்ற பல்வேறு காரணிகளால் தொழில் மயமாக்கப்பட்ட கூட்டமைப்பு உணவின் தேவைக்காக முதலாளித்துவத்திடம் அல்லது முதலாளித்துவ அரசுகளுடன் பணிந்து கொள்ள வேண்டிய ஒரு சூழல் உருவானது, இதற்குப் பின்புலமாக இருந்த கொள்கைப் பிறழ்வுகள் மற்றும் அரசியல் தவறுகள் சோவியத் யூனியனில் கம்யூனிசத்திற்கு ஒரு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்து முதலாளித்துவத்திடம் தற்காலிகமாகச் சரண் அடைந்தன.

449950478_72e858f294

சோவியத் யூனியனுக்கு இணையாகவே கம்யூனிச வழிச் சிந்தனைகளோடு அரசை அமைத்துக் கொண்ட சீனம் இன்று மேற்குலகுக்கு எதிரான ஒரு மிகப் பெரிய ஆற்றல் மையமாக உருவெடுத்திருப்பது ஆசிய அரசியலில் மிகுந்த தாக்கம் விளைவிக்கிறது என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும், சீனம் வரலாற்று நிகழ்வுகளில் பாடம் கற்றுக் கொண்டு தனது அரசியல் மற்றும் பொருண்மியக் கொள்கைகளை இன்றைய நவீன உலகிற்கு ஏற்ற அளவில் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது, உலகச் சந்தையில் மிகப் பெரும்  நுகர்வோரைப்  பெற்றிருக்கும் சீனம், தனது மக்கள் வெறும் நுகர்வோராய் இல்லாமல் தனது உற்பத்திப்  பொருட்களை விற்று முதலாக்கும் உத்திகளை மடைதிறந்து விட்டிருக்கிறது, சந்தைப் பொருளாதாரத்தின் நன்மைகளை சீரிய முறையில் அறுவடை செய்து கொள்ளும் முதலாளித்துவத்தின் அடிநாதத்தை தனது பொருண்மியக் கொள்கையாகக் கொண்ட சீனம் ஒரு புதிய எழுச்சியான ஆற்றலாக உலக அரங்கில் உருவாக்கம் பெற்றுள்ளது.

சீனம் தனது மதப் பண்பாட்டு வழியாக இலங்கையுடன் ஒத்திசைவோடு செயல்படுகிறது, கூடவே தெற்காசியாவில் அமெரிக்காவின் நிழல் படிவதை இலங்கைக்கு உதவுவதன் மூலம் தடுக்க முனைகிறது, இந்தியாவின் தலையீட்டைத் தடை செய்து ஆசியாவின் மிகப்பெரிய ஆளுமையாகத் தன்னை உறுதி செய்து கொள்ள வழி காண்கிறது, இந்திய தேசியம் சீனத்தின் மறைமுக ஊடுருவலைத் தவிர்க்கவும் இந்தியப் பெருங்கடல் வளாகத்தில் தன்னை ஒரு ஆளுமையாக நிலை நிறுத்திக் கொள்ளவும் இலங்கையின் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் துணை செய்கிறது, இனப் படுகொலைக்கு ஆயுதங்களை வழங்குகிறது, இலங்கையின் ஆட்சியாளர்களோடு கொஞ்சிக் குழவி மகிழ்கிறது, ஆயினும் ஒரு உண்மையை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும், இலங்கை என்கிற அமைப்பு கொள்கை வழியாகச் சிதைக்கப்பட்டுப் பன்னாட்டு ஆற்றல்களின் பொம்மையாக மாறி இருக்கிறது, உடனடித் தவைகள் மற்றும் கொள்கைகளுக்காக இந்தியாவையும், மதப் பண்பாட்டு வழியிலான தொடர்புகளுக்காக சீனத்தையும், பொருளாதார உதவிகளுக்காக மேற்குலகையும் நம்பித் தனது தனித்துவத்தை இலங்கையின் ஆட்சியாளர்கள் ஈழ விடுதலைப் போருக்கு விலையாகக் கொடுத்திருக்கிறார்கள்,

இது நமக்கான நேரம், இத்தகைய சூழலில் தான் நமது விடுதலைப் போராட்டம் நிகழ்கிறது, உலக அரங்கில் நீர்த்துப் போய் இருந்த தமிழ் இன, மொழி எழுச்சிக்கான காரணிகளை ஈழப் போராட்டம் தக்க தருணத்தில் உலக அரசியலுக்குள் உள்ளீடு செய்திருக்கிறது, இன்று நமது இளைஞர்கள் உலக அரசியலை நன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு இசைவாக நமது போராட்டத்தைத் திசை திருப்பும் காலம் நமக்கு முன்னே விரிந்து கிடக்கிறது, மொழி சார்ந்த ஒரு வலுவான ஒத்திசைவுப்  போக்கை  உலகத் தமிழர்களிடையே விதைத்து எதிர்கால சந்ததிக்கு ஒரு அரசியல் விழிப்புணர்வை ஈழப் போராட்டமே வழங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது, இன்று, தமிழக இளைஞர்களில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் அமெரிக்க அரசியலையும், பிரித்தானிய அரசியலையும், ஐக்கிய நாடுகள் அவையின் இயக்கங்களையும் ஆழமாக அறிந்து கொள்வதற்குக் கூட இந்த ஈழப் போராட்டமே பாதை அமைத்துக் கொடுத்தது.

future-of-freedom-4401

காலனி ஆதிக்கம் என்கிற முதலாளித்துவத்தின் கரங்கள் பல்வேறு தேசிய இனக் குழுக்களைப் பொருளாதார மற்றும் பண்பாட்டு வழியான சிக்கலுக்குள் ஆழ்த்தி விட்டுக் கிடைத்த பலன்களை தனது மேன்மைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு மலையேறி விட்டன, ஆசிய நிலப்பரப்பில் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்த பல்வேறு இனக்குழுக்கள் காலனி ஆதிக்கத்தின் பின்னரான மூன்றாம் உலக நாடுகளுக்குள் சிறை வைக்கப்பட்டன, இந்திய தேசியம் தனது எல்லைகளைப் பல்வேறு இனக்குழுக்களின் மேல் வரைந்து கொண்டது போலவே இலங்கைத் தீவில் இயங்கிக் கொண்டிருந்த இருவேறு சமூகங்கள் ஒற்றைக் குடையில் அடைக்கப்பட்டது, தமிழ்ச் சமூகம் சிங்களப் பேரினவாதத்தின் கீழாக நிறுத்தப்பட்டது, இருவேறு இனம் மற்றும் மொழி வழியான வேறுபாடுகளைக் களைவதற்கு என்று வரைமுறைகள் அல்லது விதிகள் அற்ற ஒரு நிலப்பரப்பில் பெரும்பான்மையாக வாழும் ஒரு இனத்தின் பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டிய நிலையில் இருந்த அன்றைய தமிழினம் போராடித் தனது நிலத்தை, மொழியை, பண்பாட்டைக் காத்துக் கொள்ள வேண்டிய ஒரு புறச்சூழல் உருவானது,

இப்படியான சூழல், வரலாற்றில் நீண்ட நெடிய போராட்டங்களைச் சந்தித்த தமிழ்ச் சமூகத்திற்கு இழப்புகளைத் தொடர்கதையாக்கின, அறவழியான போராட்டங்களை முன்னெடுத்த இலங்கைத் தீவின் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையும், அடக்குமுறைகளும் சிறுபான்மை இனத்தின் நம்பிக்கைகளைக் குலைத்தது மட்டுமன்றி, இணைந்து ஒரே அரசியல் கட்டமைப்பில் வாழும் நிலைப்பாட்டில் இருந்து தமிழர்களை உளவியல் ரீதியாக மாற்றி அமைத்தது, அடக்கு முறைகளை எதிர் கொள்ள ஆயுதங்களை எடுக்க வேண்டிய ஒரு நெருக்கடிக்குள் தள்ளியது, இத்தகைய ஒரு இனவிடுதலை நோக்கிய போராட்டங்களை எதிர் கொள்வது முதலாளித்துவச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவும், முதலாளித்துவத்தின் நன்மைகளைத் தொடர்ந்து அறுவடை செய்கிற வல்லாதிக்க ஆற்றல்களுக்கு ஒரு மிகப்பெரிய இடையூறாகவும் இருக்கிறது, அத்தகைய ஒரு சமூக நீதியை நோக்கிப் பயணப்பட்ட இனவிடுதலைப் போராட்டத்தை தமக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்துவது என்பதில் நிகழ்ந்த முரண்பாடுகளே இன அழிப்பாகவும், இனப் படுகொலையாகவும் நிலை கொண்டது,

தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கிறது என்று தொடர்ச்சியாக நம்பப்பட்ட இலங்கையின் இன விடுதலைப் போராட்டம் இந்திய தேசிய அதிகார மையங்களால் வளர்க்கப்பட்டதின் பின்புலமாக இருக்கும் பிரித்தாளும் தந்திரம் தனக்கு எதிராகவோ அல்லது தன்னுடைய ஒருங்கிணைவையோ பாதிக்கும் என்கிற நிலையில் நசுக்கப்பட்டதும், வல்லாதிக்க முதலாளித்துவ அரசியலின் தாக்கமே என்பதை யாரும் மறுக்க இயலாது. இலங்கைத் தீவின் இயற்கை வளம், மனித வளம் மற்றும் புவியியல் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீது தனது கொடிய வேர்களைப் பரப்புவதில் பல்வேறு ஆற்றல்கள் போட்டியிடுகின்றன, மேற்குலகம், சீனம் மற்றும் இந்திய வல்லாதிக்கம் ஆகியவற்றுக்கு இடையே நிகழ்ந்த ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் தேர்வு செய்து கொண்ட அல்லது காலத்துடன் பொருத்திக் கொண்ட ஆயுத வழியிலான மரபுசார் போர்முறைகள் கொள்கை வழியிலான அரசியல் தளத்திற்கு மாற்றம் பெற்றது பிற ஆற்றல்களால் தோல்வியாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும், நாம் செய்த தவறுகளின் பாடமாகவும் அறியப்பட வேண்டும், இத்தகைய ஒரு பேரழிவு மரபு சார்ந்த போராட்டங்களின் நிலையிலிருந்து அடுத்த படிநிலையை நமக்கு வழங்கி இருக்கிறது, இந்தப் பேரழிவு உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே அரசியல் குறித்த விழிப்புணர்வையும், போராட்டங்களின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்தி ஒரு புதிய பாதையில் நம்மைப் பயணிக்க உதவி செய்திருக்கிறது.

eelam1

எப்படி இருப்பினும் ஒரு இக்கட்டான சூழலில் பல்வேறு முரண்களும், மோதல்களும் குற்றங்களும் குறைகளும் எழுவது இயற்கையானதே, உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே நிலவும் முரண்களும் மோதல்களும் கூட இந்தப் போராட்டம் சரியானது அல்லது தவறானது என்ற ஒற்றை அச்சைச் சுற்றிச் சுழல்கின்றன, தமிழக அரசியல் மையங்கள் அல்லது ஈழ விடுதலைக்குக் குரல் கொடுப்பதாகச் சொல்லும் எந்த ஒரு அரசியல் ஆற்றலையும் நாம் இனியும் நம்பி ஏமாறுவது வரலாற்றில் மன்னிக்க முடியாத பிழையாகும், தமிழக அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை குறுகிய கால அரசியல் பிழைப்புவாதம் நோக்கியே தங்கள் இலக்கை வைத்திருக்கின்றன, ஈழ விடுதலை தொடர்பான போராட்டங்களின் மூலம் அறுவடை செய்து கொள்கிற இந்திய தேசிய முதலாளித்துவத்தின் கொள்ளைகளில் பெரும்பாலான பெரிய அரசியல் கட்சிகளுக்குத் தொடர்பு இருக்கிறது, சிறிய அரசியல் கட்சிகள் வருங்காலக் கொள்ளைகளில் ஈடுபடுவதற்கும், கொள்கை வழியிலான ஒரு நிலைத்தன்மை பெறுவதற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒரு கருவியாகப் பார்க்கின்றன,

தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிமையாகிப் போன ஒரு மன நோயோடு தங்கள் வாழ்நாட்களை வண்ணத்திரை மற்றும் சின்னத்திரையில் இழந்து வருகிறார்கள் என்பதே உண்மை. நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நமது இளைய தலைமுறை, புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் நமது இளைய தலைமுறை தான் ஈழப் போராட்டத்தின் அடுத்த படிநிலையை நமக்கு வழங்குகிற வரம். ஆகவே தலைவர்களைத் தேடுவதிலும், அண்ணன் வாழ்க, ஐயா வாழ்க போன்ற முழக்கங்களைக் கைவிட்டுத் தன்னிச்சையாக மேம்பட்ட அறிவோடு அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் நமது போராட்டத்தை  வீரியத்தோடு எடுத்துச் செல்வது ஒன்றே இத்தகைய குறுகிய காலப் பயனாளிகளை நீக்கி நமது விடுதலையை விரைந்து பெற்றுக் கொள்வதற்கான வழியாகும். யாரும் வந்து நமக்கு விடுதலையைத் தருவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் களத்தில் இறங்கிப் போராடும் மனவலிமையும், அறிவுக் கூர்மையும் மட்டுமே நம்மிடத்தில் இப்போது இருக்கும் ஒரே ஆயுதம், ஒன்றிணைந்து செயல்படுங்கள், உலக நாடுகளில் தீவிரமாகச் செயல்படும் பல்வேறு ஈழ விடுதலை இயக்கங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளில் யாரேனும் ஈடுபட்டால், அதன் மூலமாக நமது அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகளைத்  திட்டமிடும் ஒரு அளப்பரிய பணியைச் செய்ய முடியும், மன வலிமையையும், அறிவுக் கூர்மையும் தான் நமக்கான பொருளாதார அரசியல் மாற்றங்களைக் கொண்டு சேர்க்கும் ஆயுதம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் இருக்க வேண்டும். ஏனெனில் நமக்கான விடுதலையை நாம் மட்டுமே பெற முடியும்.

நமது இலக்கு நமது மொழிக்கும் இனத்திற்குமான விடுதலை, நமது இலக்கு ஒரு மேம்பட்ட வெற்றி அடைந்த சமூகம், இதற்குக் கீழான எந்த ஒரு சமரசத்தையும் நாம் புறக்கணிப்போம், நமது விடுதலைப் போரைத் தொடர்ந்து நிகழ்த்துவோம், வெற்றி பெறுவோம்.

ltteNewsImage

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம். 

************

Advertisements

Responses

 1. இன்று தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிமையாக ஆகிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகூட முழுமையானது அல்ல. நடக்கும் நாடுளுமன்ற தேர்தல் பாதையின் மீது பெரிய நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிப்பது இல்லை. அரைகுறை நம்பிக்கையும், அதுவும் எதிர்பார்ப்பும் வைத்து இந்த தேர்தல் முறையை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை வழிநடத்த பிறந்தவர்களாக தங்களை நினைப்பவர்கள் தான், சரியானமுறையில் அந்த மக்களை வழிநடத்த விவரம் இருக்கிறதா அல்லது அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் இங்கே பிரச்சனை. அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் முகம் தெரிந்த முன்னோடிகள் அல்லது தலைவர்கள் யாருமே எதற்க்கும் தயாரான சூழலில் தமிழனுக்காக போராட ஈடுபாடு உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க வில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கையும் அவர்கள் மீது இல்லை. ஆனால் இப்போது திட்டமிட வேண்டிய விசயமே வேறு. அதாவது ஆயுத போர் தற்காலிகமாக வெற்றியை அடையா நிலையை எட்டி இருந்தாலும், இன்று உலக அளவில் உலக தமிழர் என்ற ஒரு அடையாளம் அரசியல் அரங்கில் உருவாகி இருப்பது முக்கியமான செய்தி. அதனால் இனி சிந்திக்கவேண்டியது உலக தமிழர் என்ற மகத்தான தேசிய இனத்தை தட்டி எழுப்ப வேண்டிய பணியும் முதன்மை பெறுகிறது. அதற்கு தமிழ்நாட்டு தமிழர்கள் அதடையானவர்கள் அல்ல. அவர்கள் அதற்கு ஏற்ப்புடையவர்கல்தான். ஆனால் இன்று விவரம் இல்லாமல் இருக்கலாம். அல்லது விழுப்புணர்வு பெறாமல் இருக்கலாம். அதற்கு முக்கிய காரணம் இங்கே இருக்கும் நாடுளுமன்ற அரசியல்சக்திகள் அவர்களை கட்சி அரசியலுக்குள் இழுத்து, நீர்த்து போகச்செய்து அதை அவர்கள் மீதே பழியாக போட்டு வருகிறார்கள்.
  உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் அடிப்படையில் உள்நீரோட்டத்தில் ஆழமான தமிழ் உணர்வுடனே இருக்கிறார்கள். தஹ்ன்களால் முடிந்தால் நான் அண்டத்தும் பிளாக்கில் போடப்படும் கட்டுரைகளை படித்து அதற்கு மறுமொழி கருத்துக்களை அனுப்பவும். அவை www .maniblogcom.blogspot.com
  ————-மணி

 2. அண்ணா நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. தமிழ் இனம் யாரை நம்புவது… ஒன்று துரோக அல்லது இந்திய தேசியத்தில் அடிமையாகிவிட்ட சிலர் , ஒட்டு பொருக்கி அரசியலுக்க தமிழனை விக்கும் தலைவர்கள் என்று நமது போராட்டம் சிதைக்கப்பட்டு வருகிறது.

  இதில் என்னை போன்ற பல இளைஞர்கள் சிக்கி வழி தெரியாமல் விளித்து கொண்டு இருக்கறார்கள். தொடர்ந்து ஒருவரை துதி பாடும் கூட்டமாக தமிழன் இருக்கிறான். அல்லது விசில் அடித்தான் குஞ்சுகளா சுற்றுகிறார்கள். இப்படி செல்லும் என் போன்றவர்களுக்கு கிடைப்பதோ பிழைக்கத்தெரியாதவன் என்ற பட்டம். தமிழ்நாட்டு தமிழன் போராட்ட குணத்தை இழந்து ஐயா சொன்னதுபோல் செம்மறி ஆட்டு கூட்டமாக உள்ளான்.

  இதில் நமது இன விடுதலை என்பது முற்றில்லுமாக சிதைக்கப்பட்டு உள்ளது.

  ஆனால் நாங்கள் தோல்விகளை கண்டு துவளப் போவது இல்லை . உங்களை போன்றவர்களின் வழி காட்டுதல்களை எப்பொழுதும் எதிர் பார்க்கிறோம்.

  சாவிலும் மீண்டும் சரித்திரம் படைப்போம்

 3. நாம் இன்னமும் ஏற்றுக்கொள்ளாத, அல்லது வரலாறு தெரியாத , இளையவர்களுக்கு (இலங்கை இனப்படுகொலை, நாம் ஏன் குரல் கொடுக்கவேண்டும் போன்ற வாதங்களுடன் ) ஒரு கட்டுரை மூலமா தெரியப்படுத்தலாம்.

  முன்னுரை, சங்க காலங்களில் இலங்கை, பிரிட்டிஷ் காலத்தில் இலங்கை, சுதந்திர கால இலங்கை, பிரிட்டிஷ் சூழ்ச்சி, அமைதி போராட்டம், ஜேவிபி (JVP ) உருவாகுதல், JVP ஒழிக்க இந்திய ராணுவத்தின் பங்கு, 15000 சிங்கள ஜேவிபி மக்கள் கொலை, 1983 இனக்கலவரம், ஆயுதப்போராட்டத்தின் தேவை, போராளிகளுக்கு இந்தியா பயிற்சி, இந்திய இளவரசர் தவறாக வழிநடத்தப்படல், தவறான அமைதிப்படை , உளவாளிகளின் கயமைத்தனம் (1987 , K .V உன்னி கிருஷ்ணன் ) , துன்பியல் சம்பவம் (இடுப்பு பட்டை செய்து கொடுத்தது யார் ?) , அதன்பின் போர்நிறுத்தம், அமைதிப்பேச்சு வார்த்தை .. பின்னர் நடந்த இறுதியுத்தம்… கொடூரமான இனப்படுகொலை. அப்படியே இந்தியாவைச்சுற்றி சீனாவின் படைகள்.. இந்திய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை .. போன்ற கருத்துக்கள் இருக்க வேண்டும்.

  முன்னுரையில் மிகத்தெளிவாக சொல்ல வேண்டிய கருத்துக்கள். 1971 பாகிஸ்தான் – வங்கதேசப் போர் , ஏன் நடந்தது, எவ்வாறு இரண்டு மொழி பேசும், இரண்டு வெவ்வேறு இனங்கள் ஒரு அதிகாரத்தின் கீழ் குடி மக்களாக வாழ முடியாது ?

  ஒரே மதமாக (Islam) இருந்தாலும் வங்காளம் பேசும் வங்காள தேசிய இனம், உருது பேசும் தேசிய இனத்திற்கு அடிமையாக இருக்க முடியாது.
  இது போன்ற பல்வேறு தரவுகளுடன், சுருக்கமாகவும் (?) இருக்க வேண்டும், அதேவேளை அனைத்து கருத்துகளும் இடம்பெறவேண்டும். இந்த கட்டுரை 30 வயதிற்கு உட்பட்ட இளம் தலைமுறையினரை சென்று சேர வேண்டும்.

  இது தேவையா ? தேவை எனில் முயற்சி செய்வோமா ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: