கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 7, 2010

ஒரு புகைப்படக்காரரும், பசியும்

281783121_632055f393_o“பசி" மனித வாழ்க்கையின் முழுமை, உலக இயக்கத்தின் அச்சாணி, பொருளாதாரத்தின் திறவு கோல், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பசி என்கிற உணர்வு ஆற்றி இருக்கிற பணிகள் அளவிட இயலாதவை, பசி என்கிற உணர்வு தான் விவசாயத்தை, சக்கரங்களை, கருவிகளை இன்னும் வணிகத்தை, பொருள் உலகைக் கட்டி அமைத்த மிகப் பெரிய ஆற்றல், பசியால் கண்டறியப்பட்ட உணவுதான் நாகரீகத்தின், இலக்கியங்களின், கல்வியின், வணிகத்தின், மேம்பட்ட இன்றைய உலகின் தந்தை, பசி இவை எல்லாவற்றையும் பெற்றெடுக்கும் தாய்.

 
பசி குறித்த அடிப்படைச் சிந்தனை தான் நமது முழு வாழ்க்கையின் அடையாளமாக இருக்கிறது, பசியை மையமாக வைத்தே இலக்குகளும், எல்லைகளும் முடிவு செய்யப்படுகின்றன. பஞ்சடைத்த கண்களோடும், ஒட்டிய வயிற்றோடும் நாம் வாழும் உலகில் எண்ணற்ற மனிதர்கள் உணவைத் தேடி அலைகிறார்கள், சுவை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கிறது என்று உணவின் மீது நீரூற்றி எளிமையாய்க் கை கழுவி விடும் நமது வாழ்க்கையின் நாட்களைப் போல இல்லாமல் நீரையே உணவாகக் கொண்டு உயிர் வாழும் எண்ணற்ற மனித உயிர்கள் இந்த உலகில் இறைந்து கிடக்கிறார்கள், நாம் அவர்களைக் கடந்து விடுகிறோம் அல்லது கடத்தப்படுகிறோம்.

 
பசி இந்த உலகை ஒரு பாவத்தைப் போலவே தொடர்ந்து விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. பசி பற்றிய ஒரு சுய பரிந்துணர்வை என்னை விட்டுப் பல மைல் தூரத்திற்கு விரட்டியது ஒரு புகைப்படம், இணையத்தில் இந்தப் புகைப்படத்தைப் ஒரு நாள் பார்த்த பிறகு பசி என்னை விட்டுப் பறந்தோடி விட்டது, உலகின் கொண்டாட்டங்கள் நிறைந்த முதலாளித்துவ நாடுகளின் கண்களில் இருந்து தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் பசி மறைக்கப்பட்டிருக்கிறது, உலகின் பசி மிகுந்த இடம் என்று ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டிருக்கும் தெற்கு சூடான் இன்று பசியின் பிறப்பிடம், ஒரு காலத்தில் மனித இனத்தின் பிறப்பிடம். நூறு அமெரிக்க டாலர்கள் இருந்தாலும் வாங்குவதற்கு எதுவும் இல்லை இந்த நாட்டில், 4.3 மில்லியன் மனிதர்கள் ஒருவேளை உணவு சாப்பிடுகிறார்கள், வாரம் மூன்று நாட்கள் மட்டுமே இவர்களின் சராசரி உணவு.

carter2_545x588x300dpi

சூடானில் குடியிருந்த அப்படி ஒரு பசியைக் "கெவின் கார்ட்டர்" என்கிற புகைப்படக்காரர் தனது புகைப்படக் கருவிக்குள் அடைத்த போது இந்த உலகம் நின்று விடவில்லை, பசியால் நலிந்த நடக்கவும் தவழவும் இயலாத அந்தக் குழந்தையை மரணமும் கழுகும் துரத்திக் கொண்டிருப்பதை கெவின் கார்ட்டர் பார்த்த போது அவரது உள்ளத்தில் என்ன இருந்தது என்பதைக் கண்டறிய நடந்த போராட்டத்தில் அவரே இறந்து போனார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார். பசி அந்தக் குழந்தையைத் துரத்தியது, பசி அந்தக் கழுகைத் துரத்தியது, பசி இந்த உலகைத் துரத்துகிறது, பசியின் கோரப் பிடிகளில் இருந்த அந்தக் குழந்தையின் கரங்களைப் பற்றி உணவளித்திருக்க வேண்டிய அந்தப் புகைப்படக்காரரின் தொலைந்த மனித நேயம் இந்த உலகின் மனசாட்சி, அது ஒரு தனி மனிதனின் தவறல்ல, சமூகத்தின் இன்னொரு முகம். உணவில் உப்புக் குறைவாக இருக்கிறது என்றும் சமைக்கத் தெரியவில்லை என்றும் சண்டை பிடிக்கும் சமூகத்தில் தான் இத்தகைய புகைப்படம் வாழ்கிறது, அந்தக் குழந்தையும், கெவின் கார்ட்டரும் மரணித்திருக்கலாம், அவர்கள் இவ்வுலகில் விட்டுப் போன உணர்வுகள் கேள்விகளாகச் சுற்றி அலைந்து கொண்டிருக்கின்றன.

Poor-Children

பசியை வெல்லும் ஆற்றலும், பசியற்ற மனித இனத்தை வடிவமைக்கும் திறனும் நம்மிடம் இருந்தும் நாம் அவற்றை அசைய விடாமல் இருக்கக் கட்டி வைத்து இருக்கிறோம், தன்னலம் என்கிற மிகப் பெரிய கயிற்றினால் கட்டப்பட்ட அத்தகைய ஒரு ஆற்றலை முதலாளித்துவம் அவிழ்ந்து விடாமல் காக்கும் அளப்பரிய பணியைக் காலம் காலமாய் செய்து வருவதை வேடிக்கை பார்த்தவாறே நாம் பிணங்களின் மீது ஏறிப் பயணிக்கிறோம்.

வரலாற்றுப் பக்கங்களின் பசியற்ற சமூகத்தில் பிறந்தாலும், பல மனிதர்களின் பசி எனைத் துரத்தி வருகிறது, என்றோ ஒரு நாள் சாலை ஓரங்களில் அமர்ந்து அழுது கொண்டிருந்த தம்பியின் வயதை ஒத்த இளைஞனின் பசி, அலுவலக முதலாளிகளுடன் பர்கர் சாப்பிட்டு வெளியே வருகிற போது தாயின் தோளில் தொங்கியபடி கையை நீட்டும் குழந்தையின் பசி, முள்வேலி முகாம்களில் அடைபட்டு வெளியேற முடியாத எம்மினத்துச் இளஞ்சிறார்களின் கொடுமையான பசி என்று விதவிதமான மனிதர்களின் பசியை இப்போது என்னால் அடையாளம் காண முடிகிறது, உணவு கைக்கெட்டும் தொலைவில் இருந்த எனது இளமைக்கால பசியின் வரலாறு முழுமையும், உணவே இல்லாத குழந்தைகளின் பசியின் முன்பு தோற்றுப் போய் விடுகிறது. பசியை நான் வெற்றி கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது, பசியை எதிர்த்து நான் கண்டு கொண்ட வெற்றி வாழ்க்கையை மிக எளிமையானதாகவும், அமைதியானதாகவும் மாற்றி இருக்கிறது. உணவைப் பற்றிய அதிகபட்சக் கவலைகள் இன்றி செயலாற்றும் ஆற்றலை பசி கற்றுக் கொடுத்திருக்கிறது.

கல்லூரி காலம் முடிந்து வேலை தேடும் படலத்தில் கழிந்த பெருநகர வாழ்க்கை பசி குறித்த புரிதல்களை அள்ளி வழங்கி இருக்கிறது, நண்பன் பாண்டியனின் திருப்போரூர் அறையில் காலையில் இருந்து மாலை வரையில் தண்ணீரைக் குடித்துக் கொண்டு கழித்த பொழுதுகளில் வானொலியில் இருந்து வரும் பாடல்கள் தான் பகல் உணவு, இரவு உணவு வேலையை நோக்கித் தவம் கிடக்கும் ஐம்புலன்களும் கடிகார முட்களைக் கண்களால் நகர்த்த முயன்று தோற்றுப் போகும், ஆனாலும் காலம் அதன் வேகத்தில் தான் உணவைக் கொண்டு வரும், உணவின் ஒவ்வொரு துளியையும், மதிப்பையும் அந்த நாட்கள் கற்றுக் கொடுத்து விட்டன, எனது வாழ்க்கையின் மதிப்பு மிக்க நாட்களாக என்னால் அவற்றைச் சொல்ல முடியும், இன்றும் ஒவ்வொரு வெற்றி பெறுகிற மகிழ்வான தருணத்தையும் நண்பன் பாண்டியனோடு பகிர்ந்து கொள்கிற மன நிலையை அனேகமாக அந்த நாட்கள் தான் உருவாக்கி இருக்க வேண்டும். பசியை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற வேட்கையும், வெற்றி பெற வேண்டும் என்கிற தீராத வெறியும் இருக்கிற மனிதர்கள் அநேகமாகத் தோற்றுப் போவதில்லை. இன்னும் குறிப்பாக அவர்கள் மற்றவர்களின் பசியை வேடிக்கை பார்ப்பதில்லை.

child_labour_indian_child_labourer_12

இந்த பூமியில் ஒவ்வொரு நாளும் பசியோடு படுக்கைக்குப் போகும் பாதிக் குழந்தைகள் எட்டே தேசங்களில் குவிந்து கிடக்கிறார்கள், அவற்றில் ஒரு தேசம் பார்ப்பன பனியாக்கள் கொட்டமடிக்கும் பெருமைக்குரிய நவ "இந்தியா", (கொட்டமடிக்காத மனித நேயமிக்க பார்ப்பன,பனியா நண்பர்கள் மன்னிக்கவும்)மற்றவை ஆப்கானிஸ்த்தான், பங்களாதேஷ், காங்கோ, கென்யா, சூடான் மற்றும் வியட்நாம். அச்சு ஊடகங்களில், காட்சி ஊடகங்களில் கோட்டு சூட்டுப் போட்டு மினுக்கிக் கொண்டு ஒரு கேவலமான வர்க்கப் போரை நடத்திக் கொண்டிருக்கும் ஒளிரும் இந்தியாவுக்கும், உண்மையான இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு இதுதான். அரசுகள் என்ற பெயரில் நடக்கும் தீவிரக் கொள்ளைகளும், முதலாளிகளின் உழைப்புச் சுரண்டலும் வெகு விரைவில் இந்தியாவின் பல சமூகங்களை தெற்கு சூடானாக்கி விடும் நிலையை இன்றைய அரசியலும் சமூகமும் புரிந்து கொண்டது போலத் தெரியவில்லை.
77-percent-poor-in-india_26

பசி மனித குலம் முழுமைக்கும் பொதுவான உணர்வு, உடல் உழைப்புக்கும், மூளை உழைப்பிற்குமான மதிப்பீட்டு இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க உணவுக்கான போராட்டம் உடல் உழைப்பின் மீது திணிக்கப்படுகிறது, மூளை உழைப்பில் ஈடுபடும் மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தரிக்கும் முதலாளித்துவ உலகம் பசியை பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்தின் நிலையான சொத்தாக மாற்றி விட்டு ஒரு முற்றிலும் புறம்பான உலகில் இயங்கிக் கொண்டிருக்கிறது, இத்தகைய வேறுபாடுகள் வெடித்துச் சிதறிய தகவல் தொழில் நுட்பப் பொருளாதாரம் போலவே ஒரு நாளில் வெடித்துச் சிதறி உலகின் சமநிலையை மாற்றி அமைக்க முயலலாம், அதுவரையில் நாமும் சமூகமும் மாறுவதைப் போலத் தெரியவில்லை, உணவகங்களில் தேவைக்கு அதிகமாக வாங்கி வீணடிக்கும் பிள்ளைகளை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம், உணவகங்களுக்கு வெகு தொலைவில் பசியோடு உயிருக்குப் போராடும் பிள்ளைகளை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்யவில்லை, உணவின் மதிப்பையும், பசியின் ஆற்றலையும் அவர்களுக்கு நாம் கற்றுக் கொடுப்பதில்லை.

சூடான் குழந்தைகளின் பசி, ஈழக் குழந்தைகளின் பசி, இந்திய அரச பயங்கரவாதிகளால் வீதிக்குத் துரத்தி அடிக்கப்பட்ட மலை வாழ் மக்களின் பசி, தெருவோரக் குழந்தைகளின் கண்களில் தெரியும் அளவற்ற பசி, விவசாய நிலங்களைப் பெரு வணிகர்களிடம் பறிகொடுத்த ஏழை விவசாயிகளின் பசி, இப்படி எண்ணற்ற நிறங்களில் பசி தொடர்ந்து என்னையும் உங்களையும் துரத்திக் கொண்டே தான் இருக்கிறது, நான் நிறைந்த உணவுடன் சுக வாழ்வு வாழ்வதாக இந்தச் சமூகம் சொல்லி மகிழ்கிறது, அப்படியே சொல்லட்டும், ஆயினும் நண்பர்களே, நான் பசியோடு வாழ்கிறேன், என் குழந்தையைப் பசியோடு வளர்க்கிறேன்,பசிதான் இந்த உலகையும், அதற்குத் தேவைப்படும் உணவையும் கற்றுக் கொடுக்கிறது, பசி உணர்வு தான் மற்றவர்களின் பசியை நாமும் நமது குழந்தைகளும் உணர்ந்து கொண்டு உணவளிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

345362339_8d1e6f2268

தேவைக்கு அதிகமான பொருள் சேர்க்கும் நிலை வந்த பிறகில் இருந்து இன்று வரையில் குறைந்த பட்சம், பத்துக் குழந்தைகளின் ஒரு நாள் பசியை ஒரு மாதத்தில் வெற்றி கொள்ள வேண்டும் என்கிற தீவிர இலக்கோடு பயணம் செய்கிறேன், நான் உணவளிக்கும் குழந்தைகளின் முகம் மலர்ச்சியாய் ஒரு நாளில் சிரிப்பதில் முடிந்து விடுகிறது என் வாழ்க்கையின் பொருள். அந்தச் சிரிப்பில் கரைந்து காணாமல் போய் விடுகிறது என் இளமைப் பசியும், உணவுத் தேடலும்.

என்னால் பசியற்ற உலகைப் படைக்க இயலாது என்பதை நான் நன்கறிவேன், எனது மரணத்துக்குப் பின்னால் என்றாவது ஒரு நாள் மனித குலம் பசியற்ற குழந்தைகளோடு மகிழும் ஒரு சமநிலையான உலகைப் படைக்கும் என்கிற நம்பிக்கை மட்டும் நிரம்பி வழிகிறது அந்தக் குழந்தைகளின் சிரிப்போடு…………

******************

Advertisements

Responses

  1. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்” என்றான் பாரதி.

    அண்ணா உங்கள் வார்த்தைகள் யோசிக்க வைக்கிறது. மாற்றம் நிச்சயம் வரும்.

  2. உங்களைப் போலவே நானும் நம்புகிறேன் ஜெகன்னாதன். நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: