கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 14, 2010

காற்றே என் கல்லறை நிரப்பிடு………………

rice_paddy

ஒரு பூவின் இதழில் இருந்து நீ இறங்கிப்
போனதை என் புத்தம் புதிய கண்களால்
பார்த்த போது அத்தனை மலைப்பாய் இருந்தது,

  பனை ஓலைகளைக் கிழித்து நடுவில் துளையிட்டு
நான் செய்த காற்றாடியின் வேகத்தைக் கூட்டினாய்
விளைந்த சிரிப்பை வீடெங்கும் அள்ளித் தெளித்தாய்,

பிறகு நீ ஒரு பட்டாம்பூச்சியின் சிறகில்
அமர்ந்தபடி அத்தனை அழகாய் பறந்தாய்,
அப்பத்தாவின் மடியில் ஆடிக் களித்தபடி
வளர்ந்த போது நீ வயல்வெளி நாற்றுகளில்
வளைகோடுகளை வரைந்து கொண்டிருந்தாய்,

  மல்லிகைப் பூக்களை மலர்த்திப் பின் உதிர்த்து அதன்
மனம் பிரித்து என் நாசிக் குழிகளில் நட்டு வைத்தாய்,
புதைந்து மண்ணான கலைஞனின் விரலில் என்றோ
பிறந்த இசையை மீட்டெடுத்து என் காதுகளுக்குள்
திணித்தாய், அவன் சிரிப்பை எனக்குள் நிரப்பினாய்.

  பின்னொரு கொடுநாளில் முட்கம்பி வேலியில் முண்டியடித்து முழங்கால் கிழிந்த என் மக்களின் மடியில் விழுந்து புரண்டாய், பசியால் அழுத குழந்தையின் குரலைச் சுமந்து, வாழ்ந்த வீதியில் அலைந்தாய், என் இதயச் சுவர்களில் கீறலாய் வெடித்தாய்,

கடைசியாய் ஒருநாள் என் கண்களை மூடி, எனக்குள் இருந்தும் விடைபெறுவாய் நீ காற்றே,

போகும் முன்னொரு வரம் கொடு….,

விடுதலை பெற்ற எம் தேசக் குழந்தைகள் சிந்திடும் சிரிப்பொலி அள்ளி எடுத்து என் கல்லறை நிரப்பிடு,

காற்றே, என் கல்லறை நிரப்பிடு….

aaee7d5ee17c879d1883ff8e3e00cd6c

 

யாரோ வரைந்த ஒற்றைச் சூரியன்……..

Night_Sky_by_EPICHTEKILL

வீட்டுக்குள் நுழைவதற்கு சற்று முன்னதாய்
உச்சி மரத்தில் உட்கார்ந்து ஒத்திகை பார்க்கிறது
மேகப்பொதிகளில் ஒளிந்திருந்த இரவொன்று,

முன்பகலில் திருடிய வெளிச்சக் கீற்றை
உமிழ்ந்தபடி எரியத் துவங்கும் விளக்கைக்
கண்டவுடன் விடைபெறுகிறது ஜன்னலை
ஒட்டிக் கிடந்த வானத்தின் நீலச் சதுரமொன்று,

ஒளிக்கற்றை விழுதுகளின் வழியே முற்றத்தில்
இறங்கி யாருக்கும் தெரியாமல் வாளிக் குளத்தில்
ஆடிக் குளிக்கிறது பாதி உடைந்த வெண்ணிலா,

மேசையில் கிடந்த உன் புகைப்படச் சிரிப்பில்
உயிரும் உறக்கமும் அடைந்து கொள்ள இரவு
பற்றிய ஒரு கவிதை எழுதியபடி விழித்து
எழுகிறது நான் எனப்படுகிற வெற்றுடல்,

அத்தனையும் பார்த்தபடி அசையாமல் கிடக்கிறது
விட்டத்தில் யாரோ வரைந்த ஒற்றைச் சூரியன்…

pain-ineye

*********

Advertisements

Responses

  1. “விடுதலை பெற்ற எம் தேசக் குழந்தைகள் சிந்திடும் சிரிப்பொலி அள்ளி எடுத்து என் கல்லறை நிரப்பிடு,

    காற்றே, என் கல்லறை நிரப்பிடு”

    –Very good lines…You are giving the depth and pain of the whole in these two lines….

  2. பின்னொரு கொடுநாளில் முட்கம்பி வேலியில் முண்டியடித்து முழங்கால் கிழிந்த என் மக்களின் மடியில் விழுந்து புரண்டாய், பசியால் அழுத குழந்தையின் குரலைச் சுமந்து, வாழ்ந்த வீதியில் அலைந்தாய், என் இதயச் சுவர்களில் கீறலாய் வெடித்தாய்……………………………………………………………………,

    மிக ஆழமானவரிகள் , இன்னும் ஆழமாக இருந்தால் , இன்றைய ஈழந்தமிழனின் நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியை இந்த கவிதை இருந்திருக்குமே

  3. நன்றி சிவா. உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும்.

  4. இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன் வேலு பிரபாகரன். நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: