கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 23, 2010

கடல் – சில நினைவுகள்

The-Skillion-IMG_20070107_5801

அலுவல் காரணமான சென்னைப் பயணம், சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் கடற்கரைக்குச் சென்று கொஞ்ச நேரமேனும் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன், கடல் மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் அடித்துச் சென்று விடும் அளவுக்கு ஆற்றல் மிகுந்தது, தொடர்ந்து அலைபாயும் ஈழம் தொடர்பான சிந்தனைகள், கொத்துக் கொத்தாய்க் கொல்லப்பட்ட எமது மக்களின் அழுகுரல், எமது குழந்தைகளின் கள்ளமற்ற வெள்ளைச் சிரிப்பு, தொடர்ச்சியான அவர்களைப் பற்றிய சிந்தனைகள், போராட்டங்கள், இந்தியா என்னும் கொள்ளையர்களின் கூடாரத்தில் நிகழும் மதவாத வன்முறைகள், சாதீய ஒடுக்குமுறைகள், ஒட்டுமொத்த இந்தியாவின் உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள், அரசியல்வாதிகள், இவை பற்றிய எந்த ஒரு எண்ணமும் இன்றி வழக்கம் போலத் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கி இருக்கும் எமது மக்கள், அனேகமாக இது ஒரு மனநோயாக மாறி என்னை அழைக்கழிக்கும் நிலையை, இயற்கையோடு நெருங்கி இருக்கிற நேரங்கள் கொஞ்சமாவது மாற்றி அமைக்கின்றன, இப்படியான சிந்தனைகளில் இருந்து கொஞ்ச நேரம் விடுபட்டு மனம் கடல் காற்றோடு கொஞ்ச நேரம் நடை பழகி எஞ்சிய நாட்களின் பணிகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஒரு வலுவைக் கொடுக்கிறது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோவிலுக்குச் செல்வதைப் போலவே என்னுடைய இந்தப் பழக்கம்  மாறி விட்டிருக்கிறது.

கொஞ்ச தூரத்தில் இரண்டு குழந்தைகள் கடல் அலையில் கால் பதித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், ஒருவனுக்கு வயது ஒன்பது இருக்கும், இன்னொரு பெண்குழந்தை ஆறு வயது இருக்கலாம், பெற்றோர் இருவரும் சென்னைவாசிகளாக இருக்க வேண்டும், கொஞ்சம் தள்ளியே நிற்கிறார்கள், ஆடைகள் நனையக் கூடாது என்கிற காரணமாக இருக்கலாம், பெரிய பையன் ஒரு கையளவு ஈர மணலை அள்ளி கடலுக்குள் வீசுவதற்கு ஒரு சுற்றுச் சுற்றித் தடுமாறுகையில் மணல் முழுதும் அமர்ந்திருந்த அவனது தந்தையின் சட்டையில் விழுந்து சிதறுகிறது, நான் கண்களைக் கூர்மையாகிக் கொண்டு அடுத்த நிகழ்வை உற்று நோக்கத் துவங்கினேன், அனேகமாக அடி விழும் என்பது என்னுடைய கணிப்பு, அல்லது விளையாட்டு தடை செய்யப்படலாம், குழந்தைகளை நோக்கி விரைந்த அந்தத் தந்தை சட்டென்று தனது சட்டையைக் கழற்றி மனைவியிடம் கொடுத்து விட்டு மகனின் மீது கொஞ்சம் மணலை அள்ளி எரியத் துவங்கினார், மகன் மணலை அள்ளி வீச, தந்தையும் ஒரு குழந்தையாகி மணலை அள்ளி முன்னிலும் வேகமாக வீசத் துவங்கத், தங்கை அண்ணனுக்கு உதவி புரியத் துவங்கினாள், இவர்களின் ஆட்டம் வேகமெடுக்க எடுக்க மேட்டில் அமர்ந்திருந்த தாயும் கடலை நோக்கி நடக்கத் துவங்கினாள், என்னுடைய கணிப்பு முற்றிலும் சிதறிப் போய் விட்டிருந்ததைப் பார்த்துக் கடல் கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்தது, நான் தோல்வியை ஒப்புக் கொண்டு கடலைப் பார்த்துச் சிரித்தேன். கடல் ஒரு அலையை முன்னிலும் வேகமாக என்னை நோக்கி விரட்டியது.

Ethereal-Ocean-1-1280x1024

கடல் இயற்கையின் எல்லாவற்றையும் விட மிகவும் அழகானதாகவும், பிரமிப்பைத் தரக்கூடியதாகவும் மனித வாழ்க்கையில் நிலை கொண்டிருக்கிறது, கடலை எங்கு கண்டாலும் ஒரு நெருக்கமான உறவினரை விரும்பிச் சென்று பார்ப்பதைப் போலவே நான் உணர்ந்திருக்கிறேன், கடற்கரைக்குச் சென்றவுடன் பூமியின் விளிம்பில் நின்று கொண்டு ஒரு மிகச்சிறிய பேரண்டத்தின் பொருளாக மனிதர்கள் மாறுவதை உணர்ந்திருக்கிறேன், மனிதனுடைய மனக் கவலைகள் அனைத்தையும் கடலும், கடல் காற்றும் உள்வாங்கிக் கொண்டு தனது அலைகளால் அவற்றை அடித்துச் சென்று விடுகின்றன, காற்று தனக்கே உரிய அளப்பரிய கம்பீரத்துடனும், அழகுடனும் கடற்கரைகளில் உலா வருகிறது, கட்டிடக் காடுகளுக்கிடையே முழுச் சுதந்திரம் கிடைக்காத அமைதியான குழந்தையைப் போல அது மரங்களிலும் பூங்காக்களிலும் அடைபட்டுக் கிடக்கிறது, கடற்கரைகளில் நம்  தலைமுடியைக் கலைத்தும், முகத்தில் உப்புக் கலந்த ஈரத்தை அள்ளித் தெளித்தும் தனது அளவற்ற ஆற்றலைக் காற்று நமக்கு உணர்த்துகிறது, கடல் காற்று நம்மை எளிமையான ஒரு உயிராகப் புரிய வைப்பதில் வெற்றி அடைகிறது.

கடலைப் பெரும்பாலும் புகைப்படங்களில் மட்டுமே பார்த்துப் பழகி இருந்த எனக்கு நான்காம் வகுப்புப் படிக்கும் போது தான் அது முறையாக அறிமுகம் ஆனது, அது தொண்டிக்குப் பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இன்பச் சுற்றுலா, நான் கற்பனை செய்து வைத்திருந்த கடலின் அலைகளும், சீற்றமும் முதன் முதலில் பார்த்த தொண்டிக் கடலுக்கு இருக்கவில்லை, அது எங்கள் ஊர்க் கண்மாயைப் போலக் கொஞ்சம் பெரிதாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது, சலனமற்ற கலங்கிய நீருடன் கூடிய தொண்டிக் கடலின் இருப்பு என்னைப் பெரிதாகக் கவர்ந்து விடவில்லை, ஒரு ஏமாற்றத்துடனேயே அந்தச் சுற்றுலா முடிந்து போனதாக நினைத்தேன்.

tiruchendur-le-abluzioni

குறுகிய கால இடைவெளியில் ஒருநாள் கடலைத் தேடி எங்கள் குடும்பம் முழுவதும் புறப்பட்டது, மீசை வைத்த அச்சம் வரவழைக்கிற பெரியப்பா, அதிகம் பேசாத அத்தை ஆகியோருடன் திருச்செந்தூர் செந்தில் முருகன் கோவிலுக்குச் சென்றோம் என்று நினைவு, அப்பாவும், அண்ணன்களும் பெரியாரோடு வெளியே நிற்கப், பெண்களும் மற்றவர்களும் கோவிலுக்கு உள்ளே போனது தனிக் கதை, கொள்கைகளும், கோட்பாடுகளும் உள்ளீடு செய்யப்படாத குழந்தைகள் கோவிலுக்குள் செல்லத் தடை இல்லை என்பதால் நானும் கோவிலுக்குள் நுழைந்தேன். தொண்டியில் மேலேறிச் சென்று கடலைப் பார்த்தது போலிருந்த நிலை மாறி இங்கே கடைசி வரை கடல் கண்களில் படவேயில்லை, கொஞ்ச தூரம் நடந்து கல்லினால் கட்டப்பட்ட படிகளில் இறங்கி நிமிர்கையில் திடீரென்று ஓவென்று கூச்சலிடும் காற்றோடு கடல் மிகப் பிரம்மாண்டமாய்க் காட்சி அளித்தது,

நான் கற்பனை செய்து வைத்திருந்த அத்தனை பிம்பங்களையும் உள்ளடக்கி இருந்த திருசெந்தூரின் கடல் அளவில்லாத மகிழ்ச்சியை அள்ளி வழங்கியது, நான் பெரியப்பாவைப் பின்தொடர்ந்தேன், பின்வாங்கி ஓடுவதும், முன்னேறுவதுமாய் இருந்த பெரியப்பா ஒரு கட்டத்தில் முழுவதுமாய் நனைந்து விட்டிருந்தார், பின்னர் முழுதும் உள்ளிறங்கிக் குளிக்கத் துவங்கிய பெரியப்பா என்னையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டார், பெரியப்பாவின் உயர்ந்த மீசையைக் கடல் கீழிறக்கி விட்டிருந்தது, அது சித்திரப் புத்தகங்களில் வரும் நகைச்சுவைக் கதாபாத்திரம் போல அவரை மாற்றி விட்டிருந்தது, அப்படி ஒரு பெரியப்பாவை முதன் முறையாகப் பார்த்த எனக்குக் கடல் தான் அவரை அப்படி மாற்றி விட்டிருந்தது என்பதில் இப்போதும் முழு நம்பிக்கை, கடல் தன்னுடைய அலைகளைக் கொண்டு மனித உயிர்களைக் குழந்தைகளாக்குகிறது. நான் என்கிற அகந்தையில் இருந்து அவர்களை விடுவித்துப் பேரண்டத்தின் பொருட்கள் என்று அவர்களை அடையாளம் செய்கிறது, ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலான அன்றையக் கடல் உடனான விளையாட்டு வாழ்க்கையின் மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களில் ஒன்று, வேறு உடைகளை மாற்றிக் கொண்டு நாங்கள் கடலிடம் இருந்து விடை பெற்றபோது திரும்பித் திரும்பிக் கடலைப் பார்த்தவாறே வேறு வழியின்றித் தான் போக முடிந்தது.

கடல் காலடியில் கிடக்கும் ஊர்களில் இருப்பவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள், அவர்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளக் கடல் எப்போதும் தயாராக இருக்கிறது, அவர்களின் மகிழ்ச்சி நிரம்பிய மூச்சுக்காற்றை, கவலைகளை வெளித்தள்ளும் பெருமூச்சைக் கடல் உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அமைதியைப் பரிசளிக்கிறது.

ஆறு அல்லது ஏழாம் வகுப்பு என்று நினைவு, தந்தையாரோடு விடுமுறையில் அவர் பணியாற்றிய ஊருக்குச் செல்லும் வாய்ப்பு, எல்லாவற்றையும் விட அந்த ஊரில்  கடல் இருக்கிறது என்பது தான் நான் பிடிவாதமாகத் தந்தையாருடன் பயணம் செய்யக் காரணம்,  தொண்டிக்கு அருகே திருப்பாலக்குடி என்னும் ஊரில் மீனவர்களின் கூட்டுறவுச் சங்கங்களுக்கான சிறப்பு அலுவலராகப் அப்பா ஓராண்டுக்கு முன்னர் பொறுப்பேற்றிருந்தார், மீனவர்களுக்கான கூட்டுறவுக் கடன்கள், படகு, மீன்பிடி வலை ஆகியவற்றுக்கான காப்பீடு இவற்றை மேலாண்மை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் அரசுச் சிறப்பு அலுவலரின் பணிகள், ஒரு நேர்மையான அரசு அலுவலராகத் தந்தையார் மீனவ மக்களின் மனதில் இடம் பெற்று இருந்தார் என்பதை நான் அங்கு சென்ற போது அவர்கள் என் மீது காட்டிய  அன்பின் மூலம் உணர முடிந்தது. ஆயினும் திருப்பாலக்குடியின் கடல் அத்தனை ஆர்வம் தரக் கூடியதாய் இல்லை, தொண்டிக் கடலைப் போலவே அமைதியின் வடிவமாய்க் காட்சி அளித்த கடலின் ஆளுமை எனது மனநிலையில் கொஞ்சம் தொய்வைக் கொடுத்திருந்தது, இருப்பினும், கடற்கரை ஓரங்களில் வாழும் உயிரிகளைப் பார்ப்பதிலும், அவற்றோடு விளையாடுவதிலும் எனது பொழுதுகள் நகரத் துவங்கின,

இடையில் ஒருநாள் மாலை இரண்டு மணியளவில் இரண்டு மூன்று பேர் வந்து மூன்று நாட்களாக ஒரு விசைப் படகைக் காணவில்லை என்றும், அதில் இருந்த ஆறு உறவுகளின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அப்பாவோடு பேசிக் கொண்டிருந்தார்கள், அப்பா உடனடியாக இன்னொரு படகைத் தயார் செய்து புறப்பட வேண்டும் என்று சொல்லி விட்டுப் பணிகளைத் தொடர்ந்தார், நான்கு மணியளவில் அப்பாவும் அவர்களோடு கிளம்புவதைப் பார்த்தவுட,ன் எனக்குள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியது, அப்பா, என்னை அழைத்துச் செல்வதாய் இல்லை, அருகில் இருந்த சிலரிடம் அவர்களின் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லுமாறு அப்பா சொல்லவும், நான் அழத் துவங்கினேன், எப்படியோ ஒரு வழியாய்ப் பிடிவாதம் செய்து அப்பாவோடு கடல் பயணம் செய்யும் வாய்ப்பை உறுதி செய்து கொண்டேன்,

22586ocean_blue

துவங்கியது எனது முதல் கடல் பயணம், கழுத்து வரை ஆழத்தில் நடந்து சென்று நிறுத்தப்பட்டிருந்த பெரிய பாய்மரப் படகில் ஏற்றப்பட்டேன், என்னுடைய வருகையை ஏற்றுக் கொண்டு படகு ஒருமுறை மேலும் கீழுமாக ஆடியது, ஒரு வழியாய் அனைவரும் தயாராகிவிடப் படகு கிளம்பியது, அகண்ட கனமான துணிகளால் காற்றை உள்வாங்கியபடி அந்தப் படகு மெல்ல நகரத் துவங்கியது, அமைதியாய் ஒரு குழந்தையைப் போலப் படுத்துறங்கிய திருப்பாலக்குடியின் கடல் கொஞ்சம் கொஞ்சமாய் தனது தோற்றம் இழந்து ஒரு புதிய பிரம்மாண்டத் தோற்றத்தை எனக்குக் காட்டத் துவங்கியது, இரண்டு மூன்று அடி உயரத்திற்கு எழும்பும் அலைகளை எள்ளி நகையாடியபடி படகு மேலும் கீழுமாய் பயணிக்கிறது, படகின் குறுக்கே கட்டப்பட்ட நீளமான கம்புகள் படகின் பரப்பில் இருந்து இருபுறமும் வெளியே இருக்கிறது, அதன் மீது நின்றவாறு பயணிக்கும் மீனவர்கள், அனேகமாக ஒவ்வொருமுறை படகு மேலேறி இறங்குகையில் கடலுக்குள் மூழ்கி வெளியே வருகிறார்கள், நீண்ட தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த கரைகளும், கட்டப்பட்டிருந்த படகுகளும் கண்ணிலிருந்து மறையத் துவங்கப் படகு முன்னிலும் வேகமெடுக்கிறது, சுற்றி எங்கு பார்த்தாலும் நீர், சுழலாய்ச் சுழல்வதும், நீரை வாரி இறைப்பதுமாய் விஸ்வரூபம் எடுக்கிறது கடல், தாழ்ந்து வழி விடுகிறது, பின்னர் உயர்ந்து வழியை அடைக்கிறது, கடல்  தாழும்போது படகு கீழிறங்கி மூழ்கப் போவதாய்ப் பயம் காட்டுகிறது, கடல் உயர்ந்து வழியை அடைக்கும் போது படகின் மேலிருந்த காற்று சீற்றம் கொண்டு நீரை உடைத்துப் படகைச் செலுத்துகிறது,

காற்றுக்கும் நீருக்குமான ஒரு போர் அது, இயற்கையின் இரண்டு மிகப் பெரிய உறுப்பினர்களின் போரில் மனிதர்கள் மீன்களைப் போல ஒடுங்கிக் கிடக்கிறார்கள், தற்காலிகமாக அவர்கள் காற்றை ஆதரிக்கிறார்கள், காற்று அவர்களின் பயணத்தை வழி நடத்துகிறது, நான் உருக்குலைந்து படகின் ஒரு மூலையில் ஒண்டி இருந்தேன், கடல் இத்தனை வலிமையானதாகவும், அச்சம் தருவதாகவும் இருக்கும் என்று நான் கற்பனை செய்திருக்கவில்லை, வயிற்றுக்குள் நான்கைந்து பந்துகளை உருட்டி யாரோ விளையாடுவது போலிருந்தது, நண்பகலில் சாப்பிட்ட அனைத்தையும் கடல் பிடுங்கிக் கொண்டது, பயம் பகலை இருட்டாக்கியது, நான் கண்களை மூடிக் கொண்டு திரும்பிப் போக வேண்டும் என்று அழ ஆரம்பித்திருந்தேன், திரும்பிப் போவது இயலாது என்றும், வேடிக்கை பார்க்கத் துவங்கினால் எல்லாம் சரியாகி விடும் என்றும் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார், பிறகு கடலை வேடிக்கை பார்க்கத் துவங்கினேன், படகின் போக்கு, கடல் அலைகளின் இடைவிடாத ஆட்டம், காற்றை உள்வாங்கி உப்பிப் பருத்திருந்த பாய்மரங்கள், அவற்றின் திசைகளை மாற்றுகின்ற மீனவர்கள், பாய்மரத்தின் கட்டுக்களை மேலேறி அவிழ்க்கிற சிறுவர்கள், இடையிடையில் படகுக்குள் துள்ளிக் குதிக்கிற வெள்ளி மீன்கள், படகுக்குள் வருகிற கடல் நீர் அவற்றைக் கிண்ணங்களில் அள்ளி ஊற்றுகிற பெரியவர்.

கடல் சார்ந்த வாழ்க்கை அத்தனை எளிதானதில்லை நண்பர்களே, எந்த அலை எப்படிப் போகும் என்பதைக் கூடக் கணிக்க முடியாத படகுகள், உணவுக்காகவும், பொருளுக்காகவும் வாழ்க்கையை முற்றிலும் பணயம் வைத்து ஆழ்கடலில் மீன்பிடிக்கும் எந்த மனிதரும், நம்மில் யாருக்கும் குறைந்தவர் அல்லர், இன்னும் சொன்னால் அவர்கள் நம்மை விடவும் உயர் பணி செய்கிறார்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து தேசங்களின் கடல் வளம் சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டமைக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும், அவர்களின் உயிரை, உழைப்பைக் கொள்ளையிடும் அண்டை நாட்டவரை, அவர்களின் செயல்களை, ஆதரிக்கும் ஒரு தேசத்தில் நாம் வாழ்வது வெட்கக் கேடானது  மட்டுமில்லை, மோசமான விளைவுகளைக் கொடுக்கக் கூடியது என்பதை ஆட்சியாளர்கள் விரைவில் உணர்வார்கள்.

ஒருவழியாகத் தொலைந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது, நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, யாரோ வலைகளை அறுத்துக் கொண்டு போய் விட்டார்கள், வலையைத் தேடுவதில் சில மணிநேரம் அதிகமானதில் எரிபொருள் தீர்ந்து அவர்கள் நீரின் போக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள், எரிபொருள் தீர்ந்து நடுக்கடலில் சிக்கிக் கொள்வது மரணத்தின் அருகில் ஒருமுறை சென்று வருவதைப் போல என்பதை அந்தப் படகில் இருந்த மனிதர்களின் முகங்கள் சொல்லாமல் எனக்குச் சொல்லின. பாய்மரப் படகில் கொண்டு செல்லப்பட்ட எரிபொருளை நிரப்பி அந்த விசைப்படகின் இயக்கம் முடுக்கி விடப்பட்டது, பாய்மரப் படகில் இருந்த நான்கைந்து பேருடன் நானும் அப்பாவும் விசைப் படகுக்கு மாற்றப்பட்டோம். விசைப் படகுப் பயணம் பாய்மரப் படகின் அளவுக்கு மிகுந்த அச்சம் தரவில்லை என்றாலும், அதன் வேகம் அச்சம் கொடுத்தது, இதற்கிடையில் தொடர்ச்சியான பயணம் ஓரளவு தெளிவைக் கொடுத்ததும் கொஞ்சம் புத்துணர்வுடன் கரையை நோக்கி எங்களைப் பயணிக்க வைத்தது.

sunsetshadowsblog

பயணம் பாதி வழியில் இருக்கையில் படகின் இயக்கம் நிறுத்தப்பட்டது, படகில் இருந்தவர்கள் "ஆவுலியா" " ஆவுலியா" என்று சொல்லிக் கொண்டே வேடிக்கை பார்க்கத் துவங்கினார்கள், அவர்கள் பார்த்த திசையில் நானும் பார்க்கத் துவங்கினேன், நாற்பது அடிகள் இடைவெளியில் எருமை மாட்டை விடவும் கொஞ்சம் பெரிதான உருண்டையான ஒன்று நீந்திக் கொண்டிருந்தது, அனேகமாக மீன் வகைகளில் பெரிய ஒன்றாக  இருக்கலாம், அது எங்களைக் கடந்து நீண்ட தொலைவு சென்ற பிறகே படகு மீண்டும் இயக்கம் பெற்றது, இது மாதிரியான உயிர்கள் விசைப்  படகுகளையே கவிழ்த்து விடும் அளவுக்கு வலிமை வாய்ந்தவை என்பதால் படகு நிறுத்தப்பட்டதாக மீனவர்கள் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்,இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை "ஆவுலியா" என்பது என்ன வகையான கடல் உயிர் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை என்பது வேறு விஷயம்.

தொலைவில் கரைகளும், படகுகளும் மீண்டும் தென்படத் துவங்குகிறது, மறக்க முடியாத ஒரு மிகப் பெரிய பயணம் முடிவுக்கு வருவதை உணரத் துவங்குகையில் கொஞ்சம் ஏமாற்றமும், மகிழ்ச்சியும் கலந்திருந்ததை உணர முடிந்தது. ஆழம் கொஞ்சம் குறைந்த பகுதியில் இறங்கிக் கடலில் நடக்கிறேன், கரையில் ஒன்றுமே அறியாத குழந்தையைப் போலவே சில நட்சத்திர மீன்களோடும், கடற்பாசிகளோடும் கடல் விளையாடிக் கொண்டிருக்கிறது, எதிர்த் திசையில் பகலவன் தனது நெருப்புருண்டையைக் கொஞ்சம் குளிர்விக்கக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறான். அப்பாவின் கைகளை இறுக்கப் பற்றியபடி உலகின் எல்லாக் குழந்தைகளையும் போலவே நானும் நடக்கிறேன்.

ocean-current-1

நினைவுகள் திரும்பி சென்னைக் கடற்கரையின் ஓசைக்குள் விழுகிறது, மணலை எறிந்து விளையாடிக் கொண்டிருந்த குடும்பம் அனேகமாக கிளம்பி இருக்க வேண்டும், இன்னொரு குடும்பம் அதே இடத்தில் கால்களை மட்டும் நனைத்துக் கொண்டிருந்தது, சில காதலர்கள் படகு மறைவுகளை நோக்கியே நடக்கிறார்கள், அவர்களை நச்சரித்தேனும் சுண்டலை விற்று விடுவதற்குச் சிறுவர்கள் மணல் அப்பிய கால்களோடு அவர்களைப் பின்தொடர்ந்து நடக்கிறார்கள், கடல் அனைவரையும் பார்த்தபடி ஆர்ப்பரிக்கிறது, கால்களை மட்டுமே நனைத்துக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தை தனக்குள் இழுப்பதற்காகவும் அவர்களோடு விளையாடுவதற்காகவும் அனேகமாக அது சிந்தித்துக் கொண்டிருக்கலாம், கடல் எனது கவலைகளையும், உணர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு வெள்ளையாய் நுரைத்துப் பொங்கும் தனது அலைகளால் எனக்குக் கையசைக்கிறது. நான் புன்னகைத்தபடியே விடை பெறுகிறேன், இன்னொரு நாளில் வருவதாய் முணுமுணுத்தபடி…………..

***************

Advertisements

Responses

  1. வணக்கம் அண்ணன் அறிவழகன்,
    இந்த உலகத்தின் அனைத்து காட்சிகளையும் மறந்து கடல் அண்ணையின் மடியில் அமர்ந்திருப்பது, சொல்லவியலாத பேரமதியை கொடுக்கும என்பதை நானும் பலமுறை உணர்ந்திருக்கேன்….அது எனக்கு மிகவும் பிடித்தது. நீங்கள் பகிர்ந்துகொண்ட உங்கள் கடல் அனுபவம் மிகவும் அருமை……

    அன்புடன்
    அருள்

  2. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கடலுடன் பயணித்த உணர்வு, அருமை அண்ணா, வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி.

  3. அண்ணனைப் போலவே தானும் தம்பியும் இருப்பான் என்பதைத் தான் நினைவு கூறுகிறேன். நன்றி அருள்.

  4. என் அன்புத் தங்கையே தாட்சா, உனது அன்புக்கு நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: