கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 28, 2010

சாதியோடு புழங்காதிருத்தல்………

Jeyamohan

அன்புக்குரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், அளவற்ற உங்கள் எழுத்தின் மீதான காதலுக்கு வணக்கம், எழுத்து, கருத்துக்கள், உரையாடல்கள், பணிகள் இடையில் எப்போதும் முண்டியடிக்கும் புழுதித் தூற்றல்கள் இவற்றுக்கு இடையிலும் விடாமல் தொடர்ந்து எழுதுவது ஒரு வகையான தவம் என்று நினைக்கிறேன், அந்தத் தவம் உங்களுக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது, குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும்……

முன்பொருமுறை "பெரியார் – ஒரு கடிதத்தில்" உங்களோடு உரையாடி இருக்கிறேன், ஒன்றோடொன்று உரசிக் கொள்ளாத சில கருத்துக்களோடு என்னுடையதை நானும், உங்களுடையதை நீங்களும் விடாமல் பிடித்தவாறே விவாதம் செய்தோம் என்று நினைவு, இன்று அதை விடவும் சற்று மேலான முதிர்ச்சியோடு உங்களின் சாதியோடு புழங்குதலில் காணக் கிடைத்த முரண்களைப் பேச வேண்டும் என்று தோன்றியது, அதற்காகவே இந்தக் கடிதம்.

சாதி குறித்த தன்னுணர்வின் எழுச்சியே சாதியை இன்று வரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே காரணி, சாதி குறித்த தன்னுணர்வு இச்சமூகத்தின் எல்லா இடங்களிலும் நீக்கமுற நிறைந்திருக்கிறது, சமூகத்தில் வேரூன்றி இருக்கிற ஒரு நச்சுச் சிந்தனையை அறவே இல்லாதொழிப்பது அது பற்றிய தன்னுணர்வை இல்லாமல் ஒழிப்பதில் இருந்தே துவங்குகிறது, சாதி குறித்த தன்னுணர்வை ஒழிக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிற நவீன உலகின் தனி மனிதன் அப்படியான உணர்வு உற்பத்தி ஆகும் மூலத்தை அழிப்பதும், அதன் மீதான நம்பிக்கைகளை முற்றிலும் புறக்கணிப்பதுமே சாதிக் கட்டுக்குள் இருந்து அவனை விடுவிக்க உதவும். அந்த ஒற்றை அச்சில் இருந்து உங்கள் கட்டுரையில் நீங்கள் விலகி இருக்கிறீர்கள். சாதி ஒரு கற்பிதம், மதம் அதன் தாய், கடவுள் இவற்றை இயக்கும் உயிர், அறிவியல் உயிர்களின் புதிரைக் கண்டறிந்து கடவுளின் தேவையைக் குறைத்துக் கொண்டு வரும் ஒரு நவீன உலகின் எழுத்தாளர் நீங்கள், சாதியைப் புழங்குதலில் குறுகி விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது, 

imaginative

இந்திய சமூகத்தில் மதமே சாதியைக் கட்டமைக்கும் ஒற்றை மூலம், மதம் குறித்த நம்பிக்கைகளை, உணர்வுகளைக் கொண்ட மனிதனால், சாதி குறித்த தன்னுணர்வை அழிப்பது என்பது இயலாத ஒன்றாக மட்டுமன்றி, நகைப்புக்குரியதாகவும் நவீன உலகில் பொருள் கொள்ளப்படலாம். நீங்கள் இன்னும் மதங்களை உயர்த்திப் பிடிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பமாகவும், கட்டுக்கடங்காத தனி மனித சுதந்திரமாகவும் இருக்கலாம், ஆயினும் உங்கள் எழுத்துக்கள் பொது வெளிகளில் உலவும் அளவுக்கு வலிமை பெற்றவை என்பதை நான் அறிவேன், பொது வெளியில் எல்லா மதத்தின் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள், பொது வெளியில் மதங்களற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நான் சொல்வேன். இந்திய சமூகத்தில் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்று எல்லா மனிதர்களும் செலுத்தும் வரிகளில் உருவாகிற விண்கலங்களின் மாதிரிகள் கூட இந்துக் கடவுளர்களின் காலடியில் மட்டுமே ஆசிகளைப் பெற்றுப் பறந்து விடும் வல்லமை கொண்டவை. தொடர்ந்து இதைப் போல ஒரு மதச் சார்பற்ற நாடாகவே இருக்க எல்லா மதங்களின் கடவுளர்களையும் நான் உங்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.

இந்து மதம், இந்திய சமூகத்தில் வேறெந்த மதத்தையும் விட அதிகமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் சாதியக் கட்டமைப்பை வெகு சிரத்தையோடு கட்டி அமைத்திருக்கின்றன, வருணாசிரமக் கொள்கைகள், இன்றைய அனைத்து மாற்றுக் கருத்தியலுக்கும் ஒரு வலிமையான மாற்றாக இயங்கியதன்  காரணமாகவே நான்கு அடுக்கிலான சாதிய அமைப்பு முறை வடிவம் பெற்றுப் பின் பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்தது. நாகரீக மனிதன் இனக்குழு அடையாளங்களை மறப்பது எப்படி ஒரு மிக அடிப்படையான தேவையாக இருக்கிறதோ, அதைப் போலவே நேர்மையாக ஒரு மனிதன் மதத்தையும் அது குறித்த தன்னுணர்வையும் மறக்க வேண்டியது தேவைகளின் நீட்சியாகும். சாதி சமூகத்தில் உள்ளீடு செய்யப்படும் ஒரு புறக்காரணியாக இருந்து, பொது மனிதனின் உளவியலாக மாறுகிற அறிவியலை மறைமுகமாக இயக்குவது மதம். மதம் குறித்த புரிதலை வடிவமைக்கப்பட்ட கருத்தியலின் தாக்கமாக உணர முடியாதவர்களால் சாதியுடன் புழங்குதல் குறித்தும், வாழ்வது குறித்தும் சரியான பாதையில் சிந்திக்க இயலாது. அது உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நம்புமிடத்தில் தான் இந்தக் கடிதத்தின் முதல் எழுத்துப் பிறந்தது.

Hinduism-Sign-OAM

நவீன உலகில் நிகழும் சாதி குறித்த சிந்தனைகள், விவாதங்கள், சாதி ஒழிப்பு அரசியல் ஆகிய அனைத்தும் சமநிலை என்கிற புள்ளியை நோக்கி விரையும் போது சாதியோடு புழங்கும் அவலநிலை மாறக் கூடும், ஆயினும், கீழ்நிலையாகக் கட்டமைக்கப்பட்டவர்களின் ஒரு காலத்தைய உயர்வையும், உயரிய வரம் பெற்றவர்களின் தொடர்ச்சியையும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்கிற, நாமம் போட்டுக் கொண்ட, குடும்பி வைத்துக் கொண்ட எந்த ஒரு மனிதரிடத்திலும்   கண்டுபிடிக்க முடியும், அவர்கள் உங்கள் மொழியில் வைணவ அறிஞர்கள், எனக்கும் ஒரு குடும்பி வைத்துக் கொண்ட, நாமம் போட்டுக் கொண்ட மனிதரைத் தெரியும், அவரை நான் அண்ணன் என்றும், என்னை அவர் தம்பி என்றும் அன்போடு அழைப்போம். இருவரும் "ஹோமோ செப்பியன்ஸ்" குடும்பத்தைச் சார்ந்தவர்கள்  என்கிற அளவற்ற அறிவியல் நம்பிக்கை அது.

சாதியைப் பொது வெளியில் பேசிக் கொள்ளவும், பழகிக் கொள்ளவும் சில தகுதிகள் உண்டு, அவற்றில் ஏதேனும் ஒரு தகுதியை உங்கள் மதம் உங்களுக்கு வழங்கி இருக்கலாம், இது மனித உளவியல் குறித்த மென்மையான தளம், இதில் மேலிருப்பவர் எவரும் காயம் அடைவதில்லை, மதம் வழங்கி இருக்கும் பிறவிக் காப்புரைகள் அவர்களை பாதுகாக்கும் வல்லமை பெற்றவை, கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் நிலை அப்படி இல்லை, அவர்களின் இன்றைய சமூகப் பொருளாதார வாழ்நிலை சார்ந்தது, அது, பெருநகரங்களில் கூட இன்னும் வீடுகள் உயர்குடியினருக்கு எனப் பலகை அடித்து வைத்திருக்கும் சமூகத்தில் சாதியைப் புழங்கி, அதை அன்றாட வாழ்வில் அதை ஆய்வு செய்து வீடு பேறு அடைவதெல்லாம் உங்களின் இன்னொரு புனைவு மாதிரித் தான் எனக்குத் தோன்றுகிறது, “நான் சாதி குறித்த சிந்தனை அற்றவன், பொது வெளியில் சாதியோடு நான் புழங்குவதில்லை” என்று குறைந்த பட்சம் சொல்பவர்களைத் தான் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக ஒரு நவீன மனித குலத்து தலித்துக்களின் மனநிலையால் ஏற்றுக் கொள்ளவும் அவனோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. அது, குற்ற உணர்வல்ல, திட்டமிட்டு அவன் மீது சுமத்தப்பட்ட வலி, அந்த வலியை மீண்டும் மீண்டும் உணரும் மனநிலையில் அவன் இல்லை. நீங்கள் அவன் வலியைச் சுமப்பதையே தீர்வென்று சொல்கிறீர்கள்.  சாதியைப் புழங்கும் இந்தத் தீர்வுகளும், ஆய்வுகளும் பிறவிக் கவசம் கொண்டவர்களுக்கு மிக எளிமையானவை, இழப்பதற்கு ஒன்றும் அற்றவை, வலி என்னவோ பிறவிக் கவசம் இல்லாத உங்கள் இந்துக்களுக்கு மட்டும்தான்.  சாதியைப் புழங்குவதின் வலி என்னவென்று இந்துப் பண்பாட்டின் நிலைச் சக்திகளுக்கு ஒருபோதும் தெரியாது. அந்த நிலைச் சக்திகளால்  உருவாக்கப்பட்ட கடைச் சக்திகள் தான் இப்படியான ஆய்வு நிலைச் சாதிப் புழங்குதலையும் எதிர் கொள்ள வேண்டும் என்பது தான் இதில் உள்ளடங்கி இருக்கிற சிக்கல்.

நகர்புறத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும் பொதுவான வெளியில் தான் அடித்து விரட்டப்பட்டவன் பொருள் தேடுகிறான், தன்னுடைய புதிய பண்பாடுகளை அவன் இங்கு தான் தேடிக் கொண்டிருக்கிறான், அவன் தேடி வைத்திருந்த பழைய பண்பாட்டைப் பிடுங்கிக் கொண்ட மதம் அவனையே பண்பாடுகள் அற்றவன் என்றும், பண்பாடுகளில் இருந்து தொலைவில் இருப்பவன் என்றும் சொல்லி எள்ளி நகையாடியது. ஒரு தனி மனிதனால் அழிந்து போன எத்தனையோ குடும்பங்கள் உண்டு, ஒரு தனி மனிதனால் மட்டுமே உயர்ந்து செழித்து மிகப்பெரும் விருட்சமான குடும்பங்களும் உண்டு. குழுக்கள் பண்பாட்டை உருவாக்குவதில்லை, மாறாகத் தனி மனிதன் குழுக்களையும், பண்பாட்டையும் சேர்த்தே உருவாக்குகிறான். ஒவ்வொரு காலகட்டத்திலும் பண்பாடு தனி மனிதர்களின் பங்களிப்பிலேயே வளர்ந்து வந்திருக்கிறது.

இந்திய சமூகத்தின் ஊழல் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் அவற்றில் உயர்குடி அடையாளங்களைச் சுமந்தவர்களின் பங்கு மகத்தானது என்பதை எளிமையாக அறிய முடியும், அப்படியென்றால் உயர் குடியினர் ஊழல் பண்பாட்டை வளர்த்தார்கள் என்று நீங்களும் நானும் சொல்ல முடியுமா?
4-Vaishnava

பண்பாடு இனக் குழுக்கள் அல்லது சமூகக் குழுக்களால் அளவீடு செய்யப்படுவதைத் தான் காலம் காலமாக இந்து மதமும் அதன் கோட்பாடுகளும் திட்டமிட்டுக் கட்டி அமைத்தன, இந்த அளவீடுகளால் இயங்கிய உலகம் பொருளைக் களவாடுவதற்காகவும், களவாடிய பொருளால் பேரின்பப் பெருவாழ்வு வாழவும், கடவுளைக் கட்டி அமைத்து கடவுளின் கீழாகச் சாதியையும் கட்டி அமைத்தது, பண்பாட்டுக் கூறுகளை குழுக்களில் அடைத்து ஒன்று வேறொன்றைத் தொட்டு விடாமல் பாதுகாக்கும் பணியைச் செய்தது. உங்கள் வரையில் பண்பாடு என்கிற மனித வரலாற்றின் பக்கங்களை சாதிக் கண்ணாடியின் துணை கொண்டே அது ஆய்வு செய்ய நினைக்கிறது. மதங்களைச் சுமக்கிற யாருக்கும் நிகழ்கிற காட்சிப் பிழை உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

தனி மனிதனின் உளவியல் கட்டமைக்கும் கருத்தியலே சமூகத்தின் உளவியல், சமூகத்தின் உளவியல் பழக்கமே வரலாறு, வரலாற்றை எந்தச் சாதியும் திருத்தி எழுதி இருப்பதாக நான் அறியவில்லை, வரலாறு மீண்டும் மீண்டும் தனி மனிதர்களின் உறுதியான தொடர்ச்சியான சிந்தனைகளின் வாயிலாகவே திருத்தி எழுதப்படுகிறது, சாதியை மறுத்தல் என்பது திருத்தி எழுதப்பட வேண்டிய வரலாறு, சாதியோடு புழங்குவதால் அது சாத்தியப்படும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் நம்பிக்கை உண்மையாகட்டும்.

இந்துச் சமூக மரபின் உயர்வாக ஒன்றைக் கோடிடும் போதே உங்கள் சமூகம் குறித்த தெளிதல் புலனாகி விடுகிறது, வேறெவரையும் விடவும் நீங்கள் தலைப்பிட்ட பின்னரான கட்டுரைகளை எழுதுகிறீர்கள், உங்கள் ஆழ்மனக் கட்டுமானத்தில் இறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்து மதம் குறித்த உயரிய சிந்தனைகள் ஏதேனும் ஒரு வரியிலாவது உங்களையும் அறியாமல் வெளியில் குதித்து விடுகிறது. அப்படி நிகழாமல் உங்களால் எழுதப்படுகிற சாதி குறித்த ஒரு கட்டுரையை, அடையாளங்களை வலுவாக மறுக்கிற மருத்துவ அறிவியலின் படி வெறும் மனிதனாக மட்டுமே உணர்கிற மருத்துவர்களுக்கும் நான் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன்.

"ஒரு நாகரீக மனிதன் தன்னை எந்த ஒரு இனக்குழு அடையாளங்களுடனும் பொருத்திக்கொண்டு அதன் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்க மாட்டான்."

ஒரு மிகப் பெரிய உண்மையைச் சொல்ல வந்திருப்பதற்கு முதல் பத்தியிலேயே நீங்கள் இப்படிச் சொல்லி இருப்பதை உங்களுக்கு நீங்களே குத்திய உள்குத்து என்று நான் புரிந்து கொள்ளலாமா???

"……………………………….. இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள். இந்துப் பண்பாடு அதன் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து என உணரும் எவரும் கடமைப்பட்டிருக்கிறார்."

இறுதியாக இரண்டு கேள்விகள் மட்டுமே என்னிடம் மிஞ்சி இருக்கிறது, இதற்கான நேர்மையான பதிலில் தான் நான் உங்களைப் புரிந்து கொள்வது உள்ளடங்கி இருக்கிறது,

v0_master

கேள்வி ஒன்று
சாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா?

கேள்வி இரண்டு:
மதம் குறித்த “கட்டமைக்கப்பட்ட உங்கள் மனநிலை” அதை உண்மையிலேயே அனுமதிக்குமா?

*************

Advertisements

Responses

 1. அருமையான கருத்து – எழுத்து. ஆனால் படித்த உயர்குடியோத்த தாழ்த்தப்பட்ட மனிதர்களைகளின் மனங்களை நீங்கள் சொல்லவில்லை குறிப்பிட வில்லை தொடருட்டும் உமது சிந்தனைகள், எழுத்துக்கள்

 2. இந்தியாவின் ஆழமான அவமானம் சாதி. இதற்கு எதிரான போராட்டம், இதை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டும. மற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடையே சாதி உணர்வு குறித்த அருவறுப்பு உணர்வை ஏற்படுத்தும கருத்துப் பரப்பல் இயக்கம் அனைத்து மட்டங்களிலும் நடைபெற்றாக வேண்டும்.

  இந்தியாவின் ஆன்மீகப் புனிதமாக இந்துத்துவப் பண்பாடுகளைப் பற்றி மேலை நாடுகளில் ஒரு மயக்கப் பிரச்சாரம் நடந்து வந்திருக்கிறது. அங்கேயிருந்து இங்கே வந்து காவி கட்டிக்கொண்டு ஹரே ஹரே என்று முணகிக்கொண்டிருக்கிற மனநோயாளிகளை நிறையப் பார்க்கலாம். அது போன்ற தாக்கம் இங்கே உள்ளவர்களிடையேயும் இருக்கிறது. எளிய மக்களைப் பொறுத்த வரையில் பரம்பரையாக நம்புகிற, காரணங்களை ஆராயாத ஒரு பழக்கம். செயமோகன் போன்ற, பல கோணங்களிலும் யோசித்து எழுதக்கூடியவர்களைப் பொறுத்தவரையில் இந்து தர்மம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை, இன்றைய பகுத்தறிவாளர்களிடமிருந்தும் அறிவியல் கண்ணோட்டம் உடையவர்களிடமிருநதும், சமத்துவ நாட்டம் உடையவர்களிடமிருநதும் காப்பதற்கான முயற்சி. இலகுவாக எவரையும் மயக்கி ஈர்க்கும் எழுத்துத்திறமையை, ஒட்டுமொத்த மனிதத்தையே போதை மயக்கத்தில் ஆழ்த்தும் மதவாத வக்காலத்துக்குப் படையல் செய்துகொண்டவர்கள் இவர்கள்.

  இந்து மதம்தான் சாதியை உருவாக்கியதா? இந்து என்ற பெயரே ஆஙுகிலேய ஆட்சியால் சூட்டப்பட்டதுதான் என்ற வரலாற்றுப் புரிதலோடு இக்கேள்வியை அணுகலாம். அப்படி அணுகினால், சாதிக் கட்டுமானத்தையும் பாகுபாட்டையும் கட்டிக்காக்கவே புராணங்களையும் இதிகாசங்களையும் இன்ன பிற சங்கதிகளையும் உருவாக்கினார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தத்துவத் தளத்தில் சாதிப் பாகுபாட்டை சமுதாயம் ஏற்க வைப்பதற்காக பகவத் கீதையைச் செய்தார்கள். அரசியல் தளத்தில் மக்களை ஏற்கவைப்பதற்காக அர்த்த சாத்திரத்தைச் செய்தார்கள். அவையே பின்னர் இந்து மதக் கட்டுமானத்திற்கு அடிப்படையாகின.

  ஆகவேதான் இங்கே ஒருவர் மதம் மாறிவிட முடிகிறது, ஆனால் சாதி மாற முடிவதில்லை.

 3. உண்மை தான் தோழரே …

  ஆனால் இந்தியாவில் இனி சாதியை ஒழிப்பது என்பது சந்தியம் மிக குறைவு …,

 4. hai your writing to reach in youngster to approach story.
  Thanking you,
  R.M.MURUGAN

 5. நீங்கள் சொல்லுவது போல் மதம் உருவாக்கி வைத்தது இல்ல சாதி .பல பழங்குடிகள் தான் இப்போது சாதி யாக மாற்றம் பெற்றது .இந்து மதம் என்பதே பல தர பட்ட நம்பிக்கையின் கலவை தான் .

  நமது நாட்டின் உண்மையான வரலாறு என்பது சாதி அடிப்படையில் தான் இருக்கும் .சாதிகள் இல்லாமல் நமது சமுதாயம் எப்போதும் இருந்தது இல்லை .இதை உறுதி செய்யும் வண்ணமே தற்போதைய மரபணு சோதனையில் தெரிய வந்து உள்ளது .

  ஒருவரின் மரபை சொல்லவோ அல்லது அவரின் பண்பாடு என்ன என்று தெரிந்து அதை உபயோக படுத்தவோ சாதிகள் இருக்கு என்று தான் நினைக்கிறேன் .

  ஒரு மதத்தின் திருமணம் இப்படிதான் இருக்கும் என்று சொல்ல முடியும் .அனால் இந்து மதத்தின் திருமண முறை இப்படிதான் இருக்கும் என்று யாரும் சொல்ல முடியாது .சாதிக்கு சாதி வேறு படுகிறது .

  இந்து மதம் என்று நீங்கள் சொல்லும் மதம் எந்த பழங்குடிகளையும் அழித்தது இல்லை .அனால் மற்ற மதங்கள் அவர்களின் வரலாறுகளை அழித்திருக்கிறது.

  அதனால் தான் இன்றும் மரபணு சோதனை செய்யும் பொது இவர்கள் இந்த பழங்குடிகள் என்று சொல்ல முடிகிறது .

  சாதியை வைத்து அவர்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம் மட்டுமே கண்டிக்க தக்கது .

  குழுக்கள் இல்லாமல் எந்த ஒரு முலையிலும் மனிதன் வாழமுடியாது .

 6. நன்றி சமநீதி, உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்வளிக்கிறது.

 7. ஐயா, குமரேசன், உங்கள் ஆழமான கருத்துக்கள் பயனுள்ளவை. உங்கள் வருகைக்கு நன்றி.

 8. நன்றி முருகன்.

 9. அன்புக்குரிய குணா, உங்கள் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை. ஜெயமோகனுக்கு இரண்டாம் முறை நான் எழுதிய விளக்கக் கடிதத்தை ஒரு முறை படியுங்கள். இயன்றால் பிறகு விவாதிக்கலாம், உங்களுடைய அலைபேசி எண் இருந்தால் அறியத் தாருங்கள், உரையாடலாம். நன்றி.

 10. நன்றி அறிவழகன்

  விவாதம் செய்யும் அளவுக்கு நான் அதிகம் படித்தது இல்லை .சமிபித்திய ஆய்வு கூட இதை உறுதி செய்வதால் சொல்ல்கிரீன் .உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் அந்த ஆய்வு பற்றி .அவர்கள் சொன்னது எழுபதாயிரம் வருடங்களாக இந்தியர்கள் குழுக்களாக வாழ்ந்து வந்து இருக்கிறார்கள் என்பது .அதனால் தான் ஒருவரின் மரபணு அந்த குழுக்குள் அடங்கிவிடுகிறது என்பது அவர்களின் முடிவு .

  இதில் தெரிந்த இன்னொரு முடிவு தென் இந்தியர்களே இந்தியாவின் பூர்விக குடிகள் என்பதும் .சாதியை மதமும் எடுத்து கொண்டது என்று நினைக்கிறேன் .

  நீங்கள் எழுதிய கடிதம் மற்றும் அதன் பதிலையும் படிதீன் .அவர் சொல்லுவதும் உண்மைதான் தமிழகத்தில் ஆய்வுகள் என்பது இப்போது மட்டு பட்டு போய்விட்டது .இதற்க்கு சாதி எதிர்ப்பும் ஒரு காரணம் என்கிறார் ,இதனால் நமது வரலாறு மறைக்க நாம் உதவுகிறோம் என்பது தான் உண்மை .


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: