கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 4, 2010

தேவசி சாரின் மரணம்.

flowers_grave

தேவசி சார் இனி இவ்வுலகில் இல்லை என்பதை என்னால் நம்ப இயலவில்லை, தேவசி சாரின் புன்னகை என் கண்களில் தேங்கிக் கிடக்கிறது,  தேவசி சாரின் மெல்லிய குரல் என் செவிகளில் சில்லிட்டுக் கிடக்கிறது, அவரது எளிமை என் இதயச் சுவர்களில் ஒரு திரைச்சீலையைப்  போலவே  படிந்து ஒட்டிக் கிடக்கிறது. நேற்றுக் காலையில் அலுவலகத்தின் கீழே ஒரு மரத்தடியில் அவரை நான் பார்த்தேன், அவரோடு உரையாடினேன், அவர் எனக்காக நீண்ட நேரம் அலுவலகத்தில் காத்திருந்ததாகச் சொன்னபோது, அவரிடம் என் தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். அவர் எல்லாவற்றையும் தன் வழக்கமான வெள்ளைப் புன்னகையால் எதிர்கொண்டு விடைபெற்றார். அதுதான், அவருடனான கடைசிச் சந்திப்பு என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு மனிதருடனான கடைசிச் சந்திப்பை நம்மில் யாருமே விரும்புவதில்லை, மரணம் ஒரு உறுதியான நிகழ்வாக இருப்பினும் நாம் மரணத்தைக் கடந்து செல்லவே விரும்புகிறோம். மரணித்த மனிதர்களுடனோ, மரணம் புழங்குகிற இடங்களிலோ நாம் நீண்ட நேரம் இருக்க விரும்புவதில்லை. ஏனெனில், அது நமது மரணத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது அல்லது நமக்கு அன்பானவர்களின் மரணத்தை நினைவுபடுத்துகிறது. வாழ்க்கையின் சில உண்மைகளை நாம் உணர்வதில்லை, அல்லது உணர விரும்புவதில்லை. மரணம் அப்படி ஒரு உண்மை.

மேலாண்மைத் துறையில் அலுவலக ரீதியாகப் பல்வேறு தங்கும் விடுதி முகவர்கள், போக்குவரத்து நிறுவன முகவர்கள் என்று தொடர்ச்சியாகப் பலரை நான் சந்தித்தாக வேண்டும், நவநாகரீக உடையணிந்து, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நம்மைப் போன்ற முதலாளித்துவத்தின் கூலி முகவர்கள், விளம்பர உலகின் நண்பர்கள், அட்டைப்பூசிகளைப் போல ஊரெங்கும் உழைக்கும் மக்களின் உதிரம் உறிஞ்சும் சில தனியார் வங்கிகளின் விற்பனைப் பிரிவு மேலாளர்கள் என்று அணிவகுக்கும் மனிதர்களிடையே தேவசி சார் வெள்ளை நிற அரைக்கைச் சட்டையும், ஒரு தோல் பையுமாய் எனக்கு அறிமுகமானார். ரெக்ஸின் செருப்பு, மையூற்றுப் பேனா என்று நகரத்திற்குப் பொருந்தாத அல்லது நகரம் பொருத்திக் கொள்ளாத தோற்றம் அவருடையது. அறிமுக அட்டையைக் கையில் கொடுக்கும் போது அச்சிடப்பட்டிருந்த "தேவசி தாமஸ்" என்கிற பெயரும், " சார், தமிழாளோ" என்கிற கொஞ்சலான மலையாளம் கலந்த அவரது தமிழும் அவரை ஒரு மலையாளி என்று சொல்லாமல் சொன்னது. அவர் ஒரு மூன்று நட்சத்திரத் தங்கும் விடுதியின் முகவர். வழக்கமான புரட்டுகள், வாக்குறுதிகள் எதுவுமின்றி, " சாரோட, கெஸ்ட்களுக்கு, நானாக்கும் பொறுப்பு, ஒரு ஆள அனுப்பி சார் சோதிக்கும், பின்ன பிசினஸ் கொடுத்தாலும் சரி, விட்டாலும் சரி" என்று வெள்ளந்தியாகப் பேசினார். வழக்கமான பத்து நிமிட உரையாடலுக்குப் பின்னர் தேவசி சார் விடைபெற்றார்.

போலித்தனமான வணிக முகவர்களின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அவரது அணுகுமுறை எனக்குள் ஆழமான தாக்கம் உண்டாக்கி இருந்தது. மலையாளிகள் என்றால் கொஞ்சம் சுயநலவாதிகள், வணிக மயமானவர்கள் என்று எனது மூளையின் நினைவுச் செல்களில் வரையப்பட்டிருந்த ஒரு பழைய வரைபடத்தை ஒரு தனிமனிதனாக, அதுவும் ஒரே ஒரு சந்திப்பில் அவர் அழித்து விட்டிருந்தார். "மொழிகளுக்கும், மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் துளியும் தொடர்பில்லை" என்கிற ஒரு தத்துவத்தை எந்த நூலையும் படிக்காமல் அவரது புன்னகையால் விளக்கி இருந்தார் தேவசி சார். அவர் விடைபெறும் போது ஒரு கேள்வி கேட்டேன், " தேவசி சார், நீங்கள் இப்படி உடையணிந்து செல்வதை உங்கள் நிறுவனம் அனுமதிக்கிறதா?", சிரித்துக் கொண்டே பதிலுரைத்தார், " நாம பிசினஸ் கொடுத்தாப் போதுமல்லே சார், கம்பனிக்குத் துணி இல்லாமப் போனாலும் பரவாயில்லை". முதலாளித்துவத்தின் சூத்திரத்தை அறிந்து கொண்டவரின் ஆழமான பதில் அது. சில இடங்களுக்குத் தான் வேட்டியுடன் செல்வதாகப்  பின்னொரு நாளில் தேவசி சார் சொன்னபோது அவரது துணிச்சல் என்னைப் பயங்கொள்ள வைத்தது. நமது பண்பாட்டு வழியான உடைகளை நாம் அணிவது இவ்வுலகில் மறுதலிக்கப்படுகிறது என்கிற உண்மையும், நாம் விரும்பியோ, விரும்பாமலோ முதலாளிகளின் விருப்பத்தைத் தான் நமது ஆடைகளாகச் சுமந்து திரிகிறோம் என்பதும் என் முகத்தில் அறைந்தது.

தன்னுடைய சேவையைப் பார்த்து எனக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்று அவர் சொன்னதும், வழக்கமாய் முகவர்கள் சொல்கிற " உங்கள் பங்குத் தொகை மாதந்தோறும் வழங்கப்படும்" போன்ற குறுக்கு வழியை அவர் நாடாததும் அவருடைய விடுதியை நான் என் நிறுவனத்துக்காகத் தேர்வு செய்யப் போதுமானதாக இருந்தது. அன்று தொடங்கியது எங்கள் அலுவல் வழியான நட்பு, கடும் சவால்கள் நிறைந்த நகரங்களின் தங்கும் விடுதி வணிகத்தை இரண்டொரு புன்னகைகளாலும், கள்ளமற்ற தனது உள்ளத்தாலும் வென்று விட்ட மனிதர் தேவசி சார்.

3296110759_62fcf645d6

மரணம் உடல் இயக்கங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் இடையில் ஏற்படும் தொடர்பு இழப்பு, ஏதோ ஒரு புள்ளியில் மூளை தன் இயக்கத்தை முழுமையாக நிறுத்திக் கொள்ளுதல் என்று மருத்துவ உலகம் எளிமையாகச் சொல்லி விடுகிறது, ஆனால், ஒவ்வொரு மனிதனின் சிரிப்புக்கும், அழுகைக்கும் பின்னே கிடக்கும் ஆயிரமாயிரம் நுட்பமான உணர்வுகளை மருத்துவ உலகால் அத்தனை எளிதில் விளக்கி விட இயலாது. மரணம் ஏறத்தாழ மரத்துப் போய் விட்டது, மரணத்தின் அத்தனை வடிவங்களையும் ஈழப்போர் எனக்கு விளக்கி விட்டிருக்கிறது, முதியவர்களின் மரணம், குழந்தைகளின் மரணம், கர்ப்பிணிப் பெண்களின் மரணம் என்று சொல்ல முடியாத துயரத்தை ஓராண்டுகளுக்கு முன்னாள் எனக்குள் விதைத்த முள்ளி வாய்க்காலின் ஆயிரக்கணக்கான மரணங்கள், மரணம் குறித்த ஒரு மரத்துப் போதலை வழங்கிய  பிறகு முதன் முறையாக ஒரு மரணம் இதயச் சுவர்களை உடைத்து உள்ளே பாய்கிறது.

தேவசி சார் எளிமையாக இருந்தாலும் வலிமை மிகுந்த ஆளுமைத் திறன் கொண்டவர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை, என்னுடைய நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரை முதன் முறையாக தேவசியின் விடுதியில் தங்க வைத்த மறுநாள் முழுதும் தேவசியின் பெயரை நான்கைந்து முறை சொன்னதில் தெரிந்தது அவரது உழைப்பும், வெற்றியும். மற்றொரு முறை தொழிற்சாலை ஒன்றின் மேலாளரை  அவரது விடுதியில் தங்கவைத்து மறுநாள் அதிகாலையில் அவரை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்தேன், தேவசி சார் அந்த விடுதியிலேயே தான் தங்கி இருந்தார், அவருடைய குடும்பம் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கிறது, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர், தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து உயரிய பணிகளில் நிலை நிறுத்தி இருந்தார், மூத்த மகன் ஒரு இரண்டாம் நிலை அரசு அதிகாரி, அவரது மகன் டில்லியில் தன்னுடன் வந்து இருக்குமாறு பல முறை சொல்லியும் தேவசி சார் ஒப்புக் கொள்ளவில்லை, " அவனுக்குச் சிரமம் சாரே, அப்பப்போ போயிப் பாத்துட்டு வந்தாப் போதுமல்லே" என்பார்.தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதிலும், கடைசி வரை யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்பதிலும் அவர் எப்போதும் பெருமை கொண்டிருந்தார்.  வரவேற்பறையில் இருந்தவரிடம் " தேவசி சார் எங்கே?" என்று கேட்டேன், அவர் கீழே குளிக்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள், பத்து நிமிடம் இருக்கும், ஈர வேஷ்டியோடும், மஞ்சள் துண்டோடும் எதிர் வந்து நின்றார் தேவசி சார், " சார், வந்தது இப்பத்தான் செக்யூரிட்டி சொன்னது" என்றார் பதட்டமாய், எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பலர் வரக்கூடிய அறை, அது குறித்தெல்லாம் அவர் கவலை கொண்டதாய்த் தெரியவில்லை, " பரவாயில்லை சார், நீங்கள் சென்று மெதுவாக உடை மாற்றிக் கொண்டு வாருங்கள், நான் காத்திருக்கிறேன், நாம் இருவரும் சேர்ந்து சிற்றுண்டி சாப்பிடலாம்" என்றேன், "ஒரு நிமிஷம் சாரே, இப்ப வந்துறேன்". ஓட்டமும் நடையுமாக விரைந்த காலடிகளில் விருந்தோம்பல் என்கிற உயர்ந்த பண்பு நிழலாடியது.

மிகப்பெரிய ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் பணியாளர் என்கிற எண்ணமோ, நாகரிக உலகின் போலித்தனங்களோ, உடை மாற்றி ஒப்பனை செய்து கொண்டு வருகிற சடங்குகளோ இல்லாத வெள்ளைச் சிரிப்பும், அன்பும் மட்டுமே அவரிடம் அந்தக் கணங்களில் நிறைந்து இருந்தது. உடை மாற்றிக் கொண்டு வந்து பணியாளர்கள் சிலருக்குக் கட்டளைகள் வழங்கினார், பின்னர் என்னை அழைத்துக் கொண்டு தங்கும் விடுதியின் உணவகத்தில் அமர வைத்தார், அவர் என்னோடு அமரவில்லை, அடுப்படிப் பக்கம் சென்றார், வரும்போது இரண்டு கைகளில் தட்டுக்களை ஏந்தியபடி சொன்னார், " பையனுங்க ரொம்ப லேட்  பண்ணுது சாரே", மறக்க இயலாத அந்தக் காலை உணவை அப்படித்தான் வழங்கினார் தேவசி சார், வெளியேறும் போது உணவுக்கான தொகை எவ்வளவு என்று கேட்டது நான் செய்த மிகப் பெரிய தவறு. " சார், என்னை அவமானம் செயதல்லே" என்றும், "சார் வீட்டுக்கு நாங்கள் வரும்போதில் பில் கொடுக்குமோ" என்றும் புலம்பினார். நானே சற்றுக் கூச்சமாக உணரும் வரையில் தேவசி அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். " தெரியாமல் கேட்டு விட்டேன் சார், மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்ன பிறகு தான் அந்தப் பேச்சை விடுத்தார்.

peonie_with_grave_(small) மனிதப் பண்புகள் அருகிப் போய், சீருடை மனப்பான்மை பெருகி வரும் நகரச் சூழலில் தேவசியைப் போல மனிதர்கள் மிகக் குறைவு. தப்பித் தவறி இருந்தாலும் நகரம் கொஞ்ச நாட்களில் இப்படியானவர்களை உள்வாங்கிக் கொண்டு விடுகிறது, அல்லது தனது எல்லைகளை விட்டே துரத்தி விடுகிறது, பதிலாக இரண்டு மூன்று சீருடை மனப்பாங்கு உள்ளவர்களை இறக்குமதி செய்து கொள்கிறது. யாரையும் பற்றிக் கவலை கொள்ளாத, தன்னளவில் நேர்மையான பணி செய்கிற ஒரு பணியாளரைப் பெற்றது அந்த விடுதியின் பெருமை.

நேற்று முன்தினம் ஏழு மணியளவில் தேவசி தலைசுற்றிக் கீழே விழுந்திருக்கிறார், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒன்பது மணியளவில் நினைவு திரும்பாமலேயே தேவசி சார் மறைந்து போனார், வழக்கமான இன்னொரு உயர் அதிகாரியின் வருகைக்காக நேற்று மாலை  அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக பதிவுக் குரல் கேட்டது. இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு போதும் அவரது அலைபேசி அவ்வாறு சொன்னதில்லை, பிறகு விடுதிக்குத் தொடர்பு கொண்டேன், "தேவசி சாருக்குக்  கொடுங்கள்" என்றதும், மறுமுனையில் " நீங்கள் யார்" என்று கேள்வி வந்தது, ஒருபோதும் அந்த விடுதியில் உள்ளவர்கள் அப்படிக் கேட்டதில்லை, நான் இன்னார் என்றதும், " தேவசி இஸ் நோ மோர்" என்ற அந்த இளைஞனின் குரலில் நடுக்கத்தை உணர முடிந்தது. "விலகி விட்டாரா" என்றேன் நான், " ஆம், இந்த உலகை விட்டே விலகி விட்டார், அவர் நேற்று மாலை மரணமடைந்தார்" என்று பதில் சொன்ன அந்த இளைஞனின் குரல் உடைந்து குழைந்திருந்தது. எனக்குக் குரலே இல்லாமல் போனது.

தேவசி சார் யாரென்று எனக்குத் தெரியாது, அவர் நான் சான்றிதழில் குறிக்கிற மதத்தைச் சேர்ந்தவர் இல்லை, என்னுடைய மொழியைப் பேசுகிற மனிதரோ அல்லது என்னுடைய உறவுக்காரரோ  இல்லை, ஆயினும் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசுக்கு எதிராக பெங்களூரில் நாங்கள் நடத்திய போராட்டத்தில் தேவசி கலந்து கொண்டார், இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருநாள் போராட்டம் குறித்து நான் அவருக்குச் சொன்னேன், அவர் அப்போது ஒன்றும் பேசவில்லை, போராட்ட நாளன்று காலையில் எனக்கு முன்னதாக அவர் பெங்களூர் காந்தி சிலைக்கு அருகில் நின்றிருந்தார், அதிகம்  பேசவில்லை என்றாலும், அவருடைய இறுக்கமான முகம் அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டிகளை நோக்கியிருந்தது, கடைசி வரையில் கூட்டத்தின் ஒரு மூலையில் அவர் அமர்ந்திருந்ததை நான் பார்த்தேன், விடைபெறும் போது, "இண்டியா, இதுக்கெல்லாம் உதவி செய்யுது அல்லே சார்" என்று உடைந்த குரலில் சொன்னார். அன்றைய தினத்தில் இருந்து தேவசி சார் ஒரு உயர்ந்த இடத்தில் எனக்குள் அமர்ந்திருந்தார், அந்தப் போராட்டத்தில் அவர் பங்கு பெற வேண்டுமேன்றோ, ஏன் பங்கு பெறவில்லை என்றோ யாரும் கேட்கப் போவதில்லை, ஆயினும், மனித இனத்தின் வலியை அவர் பகிர விரும்பினார். தேவசி சார் ஏதோ ஒரு புள்ளியில் தன்னுடைய தொழில் தொடர்பாக என்னைச் சந்தித்தவர், எல்லாவற்றையும் தாண்டி ஒரு சக மனிதராக, உயிராக என்னிடத்தில் அன்பு செலுத்தினார், இன்று ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினரின் பிரிவைப் போலவே அவரது மரணம் என்னை வாட்டி வதைக்கிறது. முதலாளித்துவ உலகின் நவீன மனிதனாக அவர் வெற்றி பெறவில்லை என்று அவரது விடுதியில் யாரோ அவர் குறித்து முன்னர் சொல்லி இருந்தார்கள், அவர் ஒரு மனிதராக ஈட்டிய மாபெரும் வெற்றியை என்னுடைய கண்ணீர்த்துளிகள் அவர்களுக்கு பதிலாகச் சொல்லும்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மனிதர்கள் யாவரும் அடுத்த முறை நம்மைச் சந்திப்பார்கள் என்கிற உறுதியற்ற ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம் நண்பர்களே, நமது புன்சிரிப்பையும், அன்பையும் அவர்களிடம் இயன்றவரை நிறையவே வழங்கி விடுங்கள், ஏனென்றால் அடுத்த முறை ஒன்று கொடுப்பதற்கு நாம் இல்லாமல் போகலாம், அல்லது பெறுவதற்கு அவர்கள் இல்லாமலும் போகலாம்.

flower-photo-by-adam-cathro1

கடைசியாக தேவசி சார் என்னைச் சந்தித்த போது அடுத்த மாதம் அவரது விடுதியில் நடைபெற இருக்கும் ஒரு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார், நானும் வருவதாக ஒப்புக்குத் தலையாட்டினேன், ஆனால், அந்த விழாவை அடையாளம் கண்டு அன்றைய தினம் நான் செல்வேன், ஏனென்றால் அது தேவசி சாருக்கு நான் செலுத்தும் இறுதி மரியாதை. அன்று தேவசி சாரும்  வருவார், தனது வெள்ளைச் சிரிப்போடு என்னை வரவேற்க………….

*************


Responses

 1. தங்களுக்கு மறுமொழி எழுதுவதற்கு முன் சற்று யோசிக்கிறேன். நம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். நெஞ்சில் நிற்பவர் சிலரே… திரு. தேவசி தாமஸ் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறேன். நான் அவரை பார்த்ததில்லை ஆனாலும் இனி என் மனதில் மலையாளிகள் என்றவுடன் நினைவுக்கு வருபவர்களில் இவரும் இருப்பார்.

  எளிமை மற்றும் வெளி வேஷம் இல்லாமையும் இவரிடம் இருந்து கற்று கொள்கிறேன்.

  நன்றி அண்ணா.

 2. திரு. தேவசி தாமஸ் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறேன்.

 3. //அந்த விழாவை அடையாளம் கண்டு அன்றைய தினம் நான் செல்வேன், ஏனென்றால் அது தேவசி சாருக்கு நான் செலுத்தும் இறுதி மரியாதை. அன்று தேவசி சாரும் வருவார், தனது வெள்ளைச் சிரிப்போடு என்னை வரவேற்க………….//

  நிச்சயம் வருவார்..

  நல்ல மனிதர்களோடு நட்புகொள்வதற்க்கும் உறவாடுவதற்க்கும் எல்லோருக்கும் வாய்த்திருக்காது.. அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.. அவரின் நினைவுகளோடு பணியைத்தொடருங்கள் நண்பரே..

 4. தேவசி…

  இந்த மனிதரின் முகம் உங்கள் நினைவேந்தலின் வழியாக எனக்குள் மிகவும் வாசமிக்க பூவாக மலர்ந்து சிரிக்கிறது…புன்னகைக்கும் அந்த எளிய மனிதன் என்னை வசீகரிக்கிறார்… வாழ்வின் உன்னதங்களை எளிமையான ஆனால் வலிமையான அன்பினால் தொட்டிருக்கிறார்…அவருடன் பழகியதற்கு நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள் அறிவு…

  அவரின் பெயரை உச்சரிக்கும் பொழுதே ஒருவித நெகிழ்வும் வசீகரமும் அன்பும் பெருக்கெடுக்கிறது…

  தேவசி சார் மரணமடைந்து விட்டார் என்று யார் சொன்னது? அன்பை விரும்பும் மனிதர்களிடத்து அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்….

 5. […] பதிவு என்னை மிகவும் பாதித்தது.  தேவசி சாரின் மரணம். என்ற பதிவில் ஒரு தனிமனிதனுடைய உயரிய […]

 6. தம்பி ஜெகன்னாதன், தேவசி சார் உங்கள் இதயத்திலும் புகுந்து கொண்டார் பாருங்கள் அதுதான் அவர் வாழ்க்கையின் வெற்றி. உங்கள் அன்புக்கும், ஆறுதலுக்கும் நன்றி.

 7. உங்கள் ஆறுதலுக்கும், அன்புக்கும் நன்றி திரு ரவிகுமார்.

 8. உண்மைதான் தம்பி சுரேந்திரன், நல்ல மனிதர்களை நம் வாழ்க்கைக்கு அருகில் காண்பது ஒரு நல்வாய்ப்பு. நம்முடைய நற்பண்புகளும் அவர்களை நமக்கு வழங்குகின்றன என்பது கூடுதல் பெருமை.

  உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

 9. நன்றி சரவணன். உங்கள் பின்னூட்டங்கள் அவரது வாழ்வை இன்னும் முழுமையடைய வைக்கின்றன.

 10. திரு. தேவசி தாமஸ் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறேன். நான் அவரை பார்த்ததில்லை ஆனாலும் இனி என் மனதில் மலையாளிகள் என்றவுடன் நினைவுக்கு வருபவர்களில் இவரும் இருப்பார்

 11. நன்றி பாலா.

 12. Dear! அறிவு!

  நெஞ்சத்தை கொள்ளைகொண்டாய்!
  நானும் வாழ்வில் ஒருமுறை கூட சந்தித்திறாத, இனிமேலும் சந்திக்க இயலாத தேவசி சாருக்காக கண்ணிர் அஞ்சலி செலுத்துகிறேன்! மனிதர்கள் இறக்கிறார்கள், மனிதமல்ல என்று உணர்த்திய இருவருக்கும் நன்றிகள்! அவரின் ஆண்ன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: