கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 13, 2010

நிலக்கரிப் புகையில் மலர்ந்த பூக்கள்.

India-Train-tours2

சென்னைக்குச் செல்ல வேண்டும், பெங்களுர் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன், ரயில் நிலையத்தின் கலவையான இரைச்சல் மிகுந்த ஒலி எனக்கு எப்போதும் ஒரு கிளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது, பல வண்ண மனிதர்களை மட்டுமன்றிக் கடந்து போகிற ரயில்கள், புறப்பட்ட பின்னும் சாளரங்களின் ஓரமாக எப்போதும் நடந்தும், ஓடியும் வழி அனுப்புகிற மனிதர்கள், சில நேரங்களில் பிள்ளைகளை வழி அனுப்பும் பெற்றோர், பெற்றோரை வழி அனுப்பும் பிள்ளைகள், நண்பர்கள், கணவனை விட்டுப் பிரியும் இளம் பெண்கள் என்று அன்பு வழியும் இடம், அது, வழி அனுப்பிய பிறகு சில நிமிடங்கள் ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியைப் பார்த்தபடி கண்கலங்குகிற எத்தனையோ மனிதர்களை நான் கவனத்திருக்கிறேன்.

மனிதர்களின் அடிநாதமாகிய அன்பு ரயில் நிலையங்களின் கலவையான ஒலியில் ஒளிந்து கிடக்கிறது, பிரிந்தவர்களைச் சந்திக்கப் போகிற மனிதர்கள் தங்கள் பெட்டிபடுக்கைகளோடு காத்திருக்கும் போது அவர்களின் கண்கள் சென்று அடையப் போகும் நிலையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது, ரயிலில் பயணம் செய்வதையும், ரயிலுக்காகக் காத்திருப்பதையும் நான் நேசிக்கிறேன், ரயில் நெருங்கிய ஒரு உறவைப் போலவே என்னோடு அருகில் இருக்கிறது, ரயில்கள் இல்லாத அல்லது ரயில் நிலையங்கள் இல்லாத ஊர்களை நான் கற்பனையிலும் விரும்புவதில்லை, குறைந்தது, குறுக்கே போகிற ஒரு தண்டவாளமாவது இருக்கும் ஊர் உண்மையில் பேறு பெற்றது. ரயில் வண்டியில் பயணம் செய்வதை விடவும் கடந்து போகிற ரயில் வண்டிகளைப் பார்ப்பது அழகானது, அதிலும் புகை கக்கிக் கொண்டே ஒரு விதமான இரைச்சலோடு பயணிக்கும் பதின் ஆண்டுகளுக்கு முந்தைய ரயில் வண்டிகள் இன்னும் அழகானவை, சின்னச் சின்னச் சதுரங்களாய்த் தெரியும் சாளரங்கள், அவற்றில் தென்படும் அடையாளம் தெரியாத மனிதர்கள். வளைவுப் பாதைகளில் பயணிக்கிற தூரத்து ரயில் வண்டிகள் ஒரு மலைப்பாம்பைப் போலவே நெளிந்து கொண்டிருப்பதாகத் தோன்றும்.

GrandTrunkRailwayStation4

ரயில் வண்டிகளும், ரயில் பயணங்களும் குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியவை, குழந்தைகள் ரயில் வண்டியைக் கண்டவுடன் அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதை நான் ஒரு குழந்தையாக இருந்தபோதே உணர்ந்திருக்கிறேன், அப்போது எங்கள் குடும்பம் சிவகங்கைக்குக் குடியேறி இருந்தது, சிவகங்கையின் அரசு அலுவலர் குடியிருப்பு இருக்கும் பகுதியை ஆவாரங்காடு என்று அழைப்பார்கள், வேப்ப மரங்களும், இன்னும் பல பெயர் தெரியாத மரங்களும் உயர்ந்து அந்தக் குடியிருப்பை மூடியிருக்கும், கோடைக் காலங்களில் கூட ஒரு குளுமையான பகுதியில் வசிப்பதைப் போல உணர முடியும் அளவுக்கு மரங்கள் அடர்த்தியாய் ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் நிழல் பரப்பி இருக்கும், மரங்களை அண்டிப் பிழைக்கும் பறவைகள், அணில்கள் எப்போதும் சாளரங்களின் வழியே தென்படும், சில நேரங்களில் பாம்புகள் கூட, அத்தகைய ஒரு சூழலில் வாழ்வது குழந்தைகளுக்கு மன நிறைவை அளிக்கிறது, அப்படி ஒரு வீட்டுக்கு நாங்கள் குடி வந்ததில் எனக்கு உள்ளூர மகிழ்ச்சி, குடியிருப்பின் எதிர்புறம் ஒரு அறுபது அடி தொலைவில் சிவகங்கையின் ரயில் நிலையம் இருந்தது தான் இதில் கூடுதல் மகிழ்ச்சி. நாங்கள் குடியேறிய ஐந்தாறு நாட்களில் என்னால் ஒரு ரயிலையும் பார்க்க முடியவில்லை, ரயில் வண்டி கடந்து போகிற ஒலியும், ரயில் நிலைய மணி ஓசையும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும், பிறகு கடைசியாய் கீழ் வீட்டில் இருந்த மொட்டை என்ற சுரேஷ் என்னை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றான்.

ஆவாரம்பூக்கள், நிறைந்து கிடக்கும் செம்மண் புழுதி கண்களில் படிய ஒற்றையடிப் பாதை வழியாக நாங்கள் நடந்து அந்த ரயில் நிலையத்தின் பின்புறத்தை அடைந்தோம், நிலக்கரியால் இயங்கும் அன்றைய ரயில் நிலையங்களில் நிலக்கரி சில இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும், குவிந்து கிடக்கும் நிலக்கரி, நிலையத்தைச் சுற்றி இருக்கும் ஆலமரங்கள், அவற்றின் விழுதுகளில் ஆடும் சில சிறுவர்கள், மரத்தால் செய்யப்பட நீளமான நாற்காலிகள், இரண்டு மூன்று இருப்புப் பாதைகள், அவற்றின் பின்னே இருந்த கருங்கல் கட்டிடம், நாங்கள் நிலையத்தின் நடை மேடையில் ஏறி நின்று கொள்கிறோம், ஏதோ ஒரு ரயில் வருவதற்கான அறிகுறிகள் நிலையத்தில் தெரிந்தது, முதல் நாள் ரயிலை மிக நெருக்கத்தில் பார்க்கிற ஒரு மகிழ்ச்சி என் முகத்தில் பரவிக் கிடந்ததையும், சுரேஷிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு நச்சரித்ததையும் அவன் அனேகமாக ரசித்திருக்க வேண்டும், பதில்களைத் தாமதப் படுத்துவதில் அவனது முன் அனுபவம் ஒளிந்து கிடந்து என்னை நையாண்டி செய்தது.

26_2

தூரத்தில் ரயில் வரும் ஓசை நிலையத்தில் கேட்கத் துவங்குகிறது, பணியாளர் ஒருவர் மரத்தில் கட்டி இருந்த உடைந்த தண்டவாளத் துண்டில் இரும்புக் கம்பியை வைத்து ஓசை எழுப்புகிறார், அது ரயில் வருவதை அறிவிக்கும் ஓசை, அறிவிப்பு ஒலிபெருக்கிகள் இல்லாத காலத்தின் தொடர்பு வசதி அது. அமர்ந்திருந்த பயணிகள் எழுந்து நடைமேடைக்கு வருகிறார்கள், கரும்புகை முன்னிரம்ப, எனது வாழ்க்கையின் முதல் ரயில் வருகிறது, நான் நடைமேடையை, இருப்புப் பாதைகளை, ரயில் என்ஜினை மாறி மாறிப் பார்க்கிறேன், நடை மேடையில் இப்போது ஒரு காக்கி உடையணிந்த பணியாளர் கையில் ஒரு மரக்குச்சியால் ஆன வளையம் போன்ற ஒன்றைச் சுமந்து நிற்கிறார், ரயில் எஞ்சினின் அருகில் நெருங்கி வருகையில் எஞ்சினின் உள்ளிருந்து ஒரு பணியாளர் கதவருகில் வந்து நிற்கிறார், அவர் கையிலும் அதே போன்ற ஒரு வளையம், அதுதான் ரயிலின் சாவி என்று சுரேஷ் என்னிடம் சொல்கிறான், கடக்கும் தருணத்தில் சுரேஷால் சொல்லப்பட்ட அந்தச் சாவி லாவகமாகக் கை மாற்றப்படுகிறது. வியப்போடு நான் அதைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன், ரயில் நின்று இளைப்பாறுகிறது, இன்று வரையில் அதுதான் ரயில் சாவியா என்று சரிபார்த்துக் கொள்ள இயலாது, ஏனெனில் சுரேஷ் என்கிற நண்பன் வாழ்க்கை ஓட்டத்தில் காணாமல் போயிருந்தான், அவன் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு அவனிடத்தில் எனக்கான எதுவும் இப்போது இல்லை, பயணிகள் சிலர் இறங்கிப் போகிறார்கள், சிலர் ஏறி அமர்கிறார்கள், ரயில் வண்டியின் அருகில் சிறுவர்கள் சென்றால் நிலையக் காவலர்கள் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்று சுரேஷ் முன்னரே சொல்லி இருந்ததால் ரயில் வண்டிக்கு அருகில் செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன், சில நிமிடங்களுக்குப் பின்னால் ரயில் வண்டி புறப்பட்டுச் செல்கிறது, நடைமேடை அதிர்ந்து ரயில் வண்டிக்கு விடை கொடுக்கிறது, ரயில் வண்டிக்குப் பின்னால் தொற்றிக் கொண்டு ஓடும் குழந்தை மனத்தைக் கட்டி இழுத்துக் கொஞ்ச நேரம் ஆலமர விழுதுகளில் ஆடிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்புகிறோம் நானும் சுரேஷும்.

பிறகு ரயில் வண்டிப் பயணங்கள் வழக்கமாகிறது, அலுவலகப் பணிகள் காரணமாக வெளியூர்களுக்குச் செல்கிற தந்தையார் வரும் ரயில் வண்டிகளை நோக்கியபடி சில நேரங்களில் ரயில் நிலையத்தில் காத்திருந்த பொழுதுகள், சுரேஷும் நானும் இரும்புத் துண்டுகளை காந்தமாக மாற்றும் ஆற்றல் ரயில் சக்கரங்களுக்கு இருப்பதாக நம்பியபடி தண்டவாளங்களில் அமர்ந்திருந்த பொழுதுகள் இவற்றை எல்லாம் விழுங்கியபடி விரைகிறது காலம்.

Inside the train station in Zurich

நீண்ட தூர ரயில் பயணங்களில் இடைப்படும் இதுவரை பார்த்திராத மலைக்குன்றுகள், இரவுகளில் தூரத்தில் தெரியும் கிராமங்களின் விளக்குகள், கையசைக்கும் குழந்தைகள், அரிதாய்ச் சிரிக்கும் இளம்பெண்கள், குறுக்கிடும் ஆறுகளை மெதுவாய்க் கடக்கும் முன் பெட்டிகள், காலுக்குக் கீழே ஓவென்று இரைச்சலோடு பயணிக்கும் நீர், துணிகளைத் துவைக்கும் மனிதர்கள், இறக்கங்களில் மேயும் மாடுகள், விளைந்து கிடக்கும் வயல்வெளிகள்,டர்பன் கட்டிய விவசாயிகள், உடல் முழுவதும் அணிகலன்களை அணிந்து கொண்டு நடந்து செல்லும் பெண்கள், பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் எதிர்த் திசை ரயில்கள், அவற்றின் பெட்டிகளில் இருந்து இறங்கி நடக்கும் இளைஞர்கள், நிறுத்தங்களில் விற்கப்படும் பழங்கள், அவற்றை விற்கும் சிறுமிகளின் சிரிப்பு என்று ரயில் பயணங்களில் காணக் கிடைக்கும் வாழ்க்கை மிகத் தளர்வானதாய் இருக்கிறது, ரயில் பயணங்களில் ஒவ்வொரு வினாடி வாழ்க்கையையும் நம்மால் உணர முடிகிறது, பொருள் தேடும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களை அவர்களின் அவசரத்தை ரயிலும், ரயில் பயணங்களும் கொஞ்சம் நிறுத்தி விடுவதாகவே நான் உணர்கிறேன்.

பல்வேறு மொழிகளைக் கடந்து, பல்வேறு கலாச்சார மையங்களைக் கடந்து ரயில்கள் பயணம் செய்கின்றன, ரயில் பயணங்களில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கிறார்கள், இரண்டு நாட்கள் சில குழந்தைகள் நம்மோடு ஒட்டிக் கொண்டு விடுகிறார்கள், அரசியல் குறித்த விவாதங்களைப் பல நேரங்களில் ரயில் பயணங்களே துவக்கி வைப்பதாக நான் நம்புகிறேன், உலக அரசியல், இலக்கியம், பொருளாதாரம் என்று பலவற்றை மனிதர்கள் ரயில் பயணங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள், இருக்கைகளுக்காச் சண்டை போடுகிறார்கள், ரயில் சென்றடையும் நேரம் குறித்து அறிந்தவர்களும், அடுத்து வருகிற நிலையங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் ரயில் பயணங்களில் ஒருவிதமான செருக்கோடு பயணிக்கிறார்கள், வாழ்க்கையில் அது ஒரு கூடுதல் தகுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும், நெருங்கிய உறவினர்கள் போலப் பழகிப் பயணம் செய்தவர்கள் சில நேரங்களில் சொல்லிக் கொள்ளாமல் விடைபெறுகிறார்கள், ஒருவேளை பிரிவின் வலி குறித்து அறிந்தவர்களாய் இருக்கலாம் அவர்கள்.

17_train_crossing_rivere

உலகெங்கும் ரயில் வண்டிகள் வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு வண்ணங்களில் ஓடிக் கொண்டே இருக்கின்றன, அவை மலைகளைக் கடந்து செல்கின்றன, அவை சில நேரங்களில் கடலின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களில் பயணிக்கின்றன, அவை வேறு வேறு வண்ணங்களில் இருக்கின்றன, அவற்றில் அமர்ந்திருக்கும் மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள், வெவ்வேறு உணவுகளை உண்கிறார்கள், விதவிதமான அடைகளை அணிகிறார்கள், ஆயினும் இவர்கள் அனைவரும் தங்கள் அன்பானவர்களையும், அன்பையும் தேடியே பயணிக்கிறார்கள், எல்லா ரயில் வண்டிகளின் பயணமும் மனிதர்களின் எல்லை இல்லாத அன்பு நிலையத்தில் தான் முற்றுப் பெறுகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

cfiles43396

நான் ஏறிச் செல்ல வேண்டிய ரயில் வண்டி வந்து கொண்டிருப்பதாக ஒரு பெண் அறிவிப்புச் செய்கிறார், அந்த இரும்புப் பெட்டிகள் பல்வேறு மனிதர்களைச் சுமந்தபடி வந்து சிலரை இறக்கி விடுகிறது. பலரை ஏற்றிக் கொள்கிறது, எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையை அடைந்து பயணச் சுமைகளை இறக்கி வைத்து விட்டு அமர்கிறேன், குளிரூட்டப்பட்ட அந்தப் பெட்டி புழுக்கமாய் இருப்பதை உணர்கிறேன் நான். இந்தப் பெட்டியின் சாளரங்கள் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றன. இவற்றின் வழியே கையசைக்கிற குழந்தைகளை என்னால் காண முடியாது, வயல் வெளிகளின் பசுமையை, ஆறுகளின் மணல்வெளியை என்னால் காண முடியாது. நான் திறந்த சாளரங்களை உடைய பெட்டிகளிலேயே பயணம் செய்ய விரும்புகிறேன். அவற்றின் வழியே உலகம் எனக்கு நெருக்கமாய் இருப்பதை எப்போதும் என்னால் உணர முடிகிறது.

****************

Advertisements

Responses

  1. I really enjoyed your post which came from your heart and just displayed the emotions of every person who would be undergoing such emotions in day to day life.I do have experienced such emotions

  2. mikavum nalla pathivu. thotarka unkal pani. nantri, vanakkam.

  3. நன்றி சுந்தர், உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.

  4. நன்றி சுந்தரராஜ் தயாளன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: