கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 30, 2010

இந்தியத் தத்துவ மரபும், தந்தை பெரியாரும்

aaf

அன்புக்குரிய ஜெயமோகன், தங்களின் "சாதி பற்றி மீண்டும்" பதிவு இந்தியத் தத்துவ மரபின் தோற்றம், வளர்ச்சி, மதம் இந்திய சமூகத்தில் உண்டாக்கி இருக்கிற தாக்கம் இவை குறித்த பல்வேறு சிந்தனைகளைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. உங்கள் பதில் கடிதத்தில் கண்ட பல்வேறு கூற்றுக்களை நோக்கி என்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு முன்பாக சில அடிப்படை உண்மைகளை நீங்கள் அறியத் தருகிறேன்.

என்னுடைய சாதி குறித்த எண்ணங்கள், பெரியாரியத்தில் இருந்து துவங்குவதாக நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன், சாதி மட்டுமில்லை, கருத்துலகின் எல்லாவிதமான தோற்றுவாயும் "பெரியார்" என்கிற புள்ளியில் இருந்தே என்னில் துவங்கின என்பதை மகிழ்வோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், தொடர்ச்சியான பல்வேறு அழுத்தங்களும், காரணிகளும் கருத்துலகம் என்கிற வாழ்வின் மிக முக்கியமான பகுதியை நுகரும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு பின்புலம் என்னுடைய தலைமுறைகளுக்கு நிகழ்ந்தது. நீங்கள் சொல்கிற அல்லது விளக்க முனைகிற இந்தியத் தத்துவ மரபு குறித்தான எந்த அடிப்படை அறிவும் இன்றி நீர்த்துப் போயிருந்த ஒரு சமூக அமைப்பில் இருந்து துவங்கிய எனது தலைமுறையின் அறிவுலகப் பயணம், "பெரியார்" என்கிற நான்கெழுத்து வழியாகவே எழுச்சி பெற்றது, சமூக விழிப்புணர்வும், விடுதலையும் அற்றுப் போயிருந்த எனது தலைமுறையின் இருப்புச் சங்கிலி, இவ்விரண்டையும் கண்டடையக் காரணமாக இருந்தது "பெரியார்" என்கிற நான்கெழுத்து. ஆகவே அந்தப் புள்ளியில் இருந்து என்னுடைய கேள்விகள் புறப்படுவதை நான் எந்தக் காலகட்டத்திலும், மறுக்கவோ அல்லது மறைக்கவோ விரும்பவில்லை.

ஆயினும் "பெரியார்" என்கிற அந்த நான்கெழுத்தில் மட்டுமே என்னுடைய கருத்துலகச் சக்கரத்தின் அச்சு நிலை கொண்டிருப்பதாக நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. "பெரியார்" என்கிற அந்த நான்கெழுத்து, அறிவு சார்ந்த புற உலகிற்கும் எனக்குமான இடைவெளியை நிரப்பி விட்டு என்னை ஒரு அகண்ட உலகில் பயணம் செய்ய உதவிய கருவியே அன்றி என்னுடைய நிலையான வாழிடம் அல்ல."பெரியார்" என்கிற அந்த மகத்தான மனிதன் பல உண்மைகளைக் கண்டறிய என்னைப் போலவே பல மனிதர்களுக்கு உதவிய ஒரு கலங்கரை விளக்கமே அன்றி, பயணக்கப்பல் அல்ல. பெரியாருடைய எல்லாக் கருத்துகளையும் சமூகத்திற்கு முழுமையான நன்மைகளை வழங்கக் கூடிய தீர்வுகள் என்று நான் எப்போதும், யாரிடத்திலும் சொன்னதில்லை. அப்படிச் சொல்ல வேண்டும் என்று அவரும் ஒருபோதும் சொல்லவில்லை. தன்னுடைய வாழ்நாட்களின் போது அவரால் கண்டறியப்பட்ட பல்வேறு நீதிகளற்ற வாழ்க்கை முறையை மூர்க்கமாக எதிர் கொண்டு குறைந்த அளவேனும் நீதியைப் பெற முனைந்த ஒரு மேன்மையான மனிதனாகவே அவரை நான் பார்க்கிறேன், ஆகவே பெரியாரில் இருந்து துவங்கினாலும் பெரியாரை முன்னும் பின்னும்  கடந்து சிந்திக்கவே நான் விரும்புகிறேன், அதுதான் சரியானதும் கூட.

பெரியாருக்குப் பின்னால், அவரது கருத்து வடிவங்களுக்கு முட்டுக் கொடுத்து திராவிடத் தத்துவத்தை முன்னிறுத்திய எவரும் பெரியாரின் சிந்தனைகளில் ஊறிக் கிடந்த சமூக நலன்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, உணர்வு வயப்பட்ட உளவியலைக் கொஞ்சம் அதிகப்படியாகவே தமிழ்ச் சமூகத்தில் உள்ளீடு செய்திருக்கிறார்கள் என்கிற உங்கள் பெருமூச்சின் சாரத்தை என்னால் உணர முடிகிறது. ஏனெனில் நானும் ஒரு எல்லை வரை அதனை ஒப்புக் கொள்வேன்.

இனி உங்கள் கடிதத்தின் மையப் பொருளை நோக்கி வருகிறேன்,

20070828BizReligion_dm_500

1) சாதி ஒரு சமூகத்தீங்கு என்று மட்டுமே நான் எப்போதும் புரிந்து கொள்ளவில்லை, சாதி நமது சமூகத்தின் நுண்மனத்தில் படித்து கிடக்கிற ஒரு சிக்கலான அகவுணர்வு, அந்த அகவுணர்வு படிமம் பெறுவதற்கு பல நூறு ஆண்டுகள் தேவைப்பட்டன, அப்படியான ஒரு படிமத்தை வெறும் சமகால சிக்கலாகப் பார்ப்பது சிக்கலின் அடிநாதம் குறித்த எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் விவாதம் செய்வதற்குச் சமம்.

2) சாதியை மார்க்சியக் கோட்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பது அத்தனை கடினமானதாக எனக்கு எப்போதும் தோன்றவில்லை. "பொருளால் கிடைக்கக் கூடிய நன்மைகளை நோக்கிய மனிதனின் தேடலில், அவனது ஆழ்மனக் கண்டுபிடிப்புகளில் ஒன்றே சாதி" என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். மனித வரலாற்றின் பொருளியல் பயணத்தில் சாதி ஒரு உபரிப் பயிர் அல்லது களை. மார்க்சின், அறியாத ஒன்றைச் சரணடைந்து நிகழ் காலச் சிக்கல்களை அதன் காலடிகளில் ஒப்படைக்கும் சரணடைதல் (alienation) அல்லது ஒளிந்து கொள்ளுதல் எப்படி மதத்தின் தோற்றமாக விளக்கப்படுகிறதோ அதே போல, சாதி நேரடியாக மார்க்சினால் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும் கூட, சாதியை மார்க்சின் பல்வேறு கோட்பாடுகளோடு பொருத்திக் கொள்ள முடியும்.

3) மார்க்ஸ் "இதயமற்ற மனிதர்களின் இதயம்" என்று மதத்தை வர்ணித்தாலும், "சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களின் குறி" என்று மறக்காமல் குறிப்பிடுகிறார், மதம் ஒரு நோயல்ல, அது நோய்க்குறி என்று அவர் சரியாகவே கணித்திருக்கிறார். "மதம் ஒரு போதைப் பொருள்" என்கிறார் மார்க்ஸ். அந்தப் போதையில் திளைக்கும் போது வாழ்க்கையின் நிகழ்கால வலிகளை மனிதன் எளிதாகக் கடந்திருக்கிறான். எடுத்துக்காட்டாக "இறந்தவன் இறைவனை அடைகிறான்" என்று சொல்லித் தனக்கான பிரிவின் வலியை அவன் கடக்க முயல்கிறான், சமூகம் தனக்கான  இழப்புகளின் ஆறுதலைத் தேடிக் கொண்ட விதங்களின் தொகுப்பே மதம்.

4) உயர்வு தாழ்வுகளும், ஏற்ற இறக்கங்களும் இல்லாத வாழ்க்கை முறையை ஒரு சமூகத்தின் உயரிய இருப்புக்கான தீர்வாக நம்மால் பரிந்துரைக்க முடியாது, பேரண்டத்தின் உட்பொருட்கள் அப்படியான ஒரு நிலையை அடைவது அறிவியல் வழியிலும் சாத்தியமற்ற ஒரு நிகழ்வு என்பதை நான் அறிகிறேன், அதே நேரம், இத்தகைய உயர்வு தாழ்வுகளை இயற்கையின் விதிகளை மீறிக் கட்டி எழுப்பும் மனித சமூகத்தின் பொது மனத்தில் மாற்றத்தை உருவாக்கி பொதுச் சமூகத்தின் எல்லா உறுப்புகளுக்கும் ஒரு குறைந்த பட்சப் பாதுகாப்பை அல்லது உயர் இருப்பை நம்மால் வழங்க முடியும் என்று நம்புகிறேன்,

karl_marx

5) இந்தியத் தத்துவ மரபைப் பற்றி எனக்குப் பரந்த அளவில் அறிவு இல்லை, ஆயினும் தமிழ்ச் சமூகத்தின் தத்துவ மரபைப் பற்றிய ஓரளவு புரிதல் எனக்கு உண்டு, வேந்தர்கள், வேளிர்கள், கிழார்கள் என்று மூன்று அடுக்கில் ஆளுமை செய்யப்பட்ட தமிழ்ச் சமூக அமைப்பு, பல்வேறு இயற்கை வழிபாட்டு முறைகளைக் கையாண்டதில் இருந்து  மாறி சங்க காலத்திலேயே நிலை பெற்ற உருவ வழிபாட்டை வந்தடைகிறது, களப்பிரர்களின் காலத்தில் நிகழ்ந்த பௌத்த மதத்தின் பரவலாக்கல் திட்டத்தால் மிக வேகமான சமூக அழுத்தங்கள், உருவ வழிபாட்டின் இருப்பை உறுதி செய்து கொடுத்தன, வட இந்திய சமூகத்தில் இதே காலகட்டத்தில் அதாவது ஆறாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையில் தத்துவ மரபில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது, அது ஹர்ஷவர்தனின் காலத்தில் இருந்து துவங்குகிறது சூரிய வழிபாடு செய்யும் ஒரு இந்தியப் பழங்குடிகளின் மன்னன் சைவம், பௌத்தம் இரண்டிலும் நம்பிக்கை கொண்டு துவங்கி வைத்த இந்தத் தத்துவ மரபின் புதிய தோற்றம் பல்வேறு புறக் காரணிகளைக் கொண்டே அளவிடப்பட வேண்டும், இதே காலகட்டத்தில் கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், சாகர்கள், ரோமானியர்கள் போன்ற இன்னும் சில குடியேறிகளின் வாழ்க்கை முறையும், இந்திய சமூகத்தில் மதம் தொடர்பான அவர்களின் பங்களிப்பும் பெரிய அளவில் காணப்படுகிறது, நிறம் சார்ந்த அல்லது இருப்பிடம் சார்ந்த ஒரு தொகுப்பு அவர்களுக்குள் நிகழ்ந்து பின்னர் ஆரியத் தொகுப்பினமாகவே அவர்கள் மாற்றமடைகிறார்கள்,

6) டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி மனுஸ்மிரிதி புஷ்யமித்ரரின் காலகட்டத்தில் பிரிகுவினால் தொகுக்கப்பட்டது என்பதை முழுக்க ஏற்றுக் கொள்ளாவிடினும், மனுஸ்மிரிதியின் பல்வேறு உட்பொருட்களை இந்த வரலாற்றுக் காலகட்டம் உள்வாங்கி இருக்கக் கூடும் என்பதை அதே காலத்தில் பௌத்தம் மிக வேகமாகப் பரவியதை வைத்து அறிய முடியும், தொழில் அடையாளங்களை உடைத்து பிறப்பு அடையாளங்களை இந்தியத் தத்துவ மரபிற்குள் உள்நுழைத்த பெருமை நீங்கள் சொல்கிற நிலைச் சக்திகளுக்கு உரியது என்பதை நானும் ஒப்புக் கொள்வேன்.

7) அதற்கு முன்னதாகவே வளர்ந்து கடை பரப்பி இருந்த தமிழ்ச் சமூகத்தின் சமய நம்பிக்கைகள் இந்து மதமாக இப்போது அறியப்பட்டாலும் அந்தச் சொல்லடை மிக அருகில் உள்ளே புகுந்திருக்கிற சொல்லடை என்று நான் உறுதியாகச் சொல்வேன். முன்னதாகவே சைவம் தழைத்திருந்த தமிழ்ச் சமூகத்தின் தத்துவ மரபில் பௌத்தமும், சமணமும் சமய நம்பிக்கைகள் உருவ வழிபாட்டில் வேரூன்றி நிலைபெறக் காரணமாய் இருந்தன, தேவாரமும், திருவாசகமும் சைவத்தின் வளர்ச்சி நிலைகளைக் காட்டியது போலவே நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் வைணவத்தின் வளர்ச்சி நிலைகளை நமக்குக் காட்டுகிறது. ஆயினும், சமய இலக்கியங்களின் இருப்பும் வளர்ச்சியும் தமிழ்ச் சமூகத்தின் தத்துவ மரபில் படிந்து கிடக்கிற நீண்ட கால நம்பிக்கைகளின் வெளிப்பாடாகவே நம்மால் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதில் எனக்கு உங்களுடன் முரண்பாடு இல்லை.

8) இலக்கியச் செழுமையோடு கூடிய மனிதனின் தத்துவ மரபை அதாவது வாழ்க்கையின் சிக்கலான சில கேள்விகளின் விடையை சமய இலக்கியமாக நாம் அறிந்து கொள்ளலாம், அறிவியலும், சரியான வழிகாட்டுதலும் இல்லாத மனித மனத்தின் குழப்பங்களுக்கான தீர்வாக சொல்லப்படுகிற இத்தகைய தத்துவங்களை மார்க்சின் சரணடைதல் கோட்பாட்டில் பொருத்தும் போது எந்தக் குழப்பமும் நிகழாது. ஆனால், இவற்றின் முக்கியத்துவத்தை அல்லது இவற்றில் இருந்த மனிதர்களுக்கான சமநீதியைப் புறக்கணிக்கவும், புதிய விதிகளை உருவாக்கவும் சமய நம்பிக்கைகளை ஒரு கருவியாக நீங்கள் சொல்லும் அதே நிலைச் சக்திகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை எந்தக் காலகட்டத்திலும் நீங்கள் மறுக்க இயலாது.

buddha-statue-color443x386

9) ஆரியத் தொகுப்பாளர்கள் அல்லது இந்து மதத்தின் நிலைச் சக்திகள் என்று நீங்கள் கருதுகிற இந்த சமூகத்தின் கருத்தியல் தோற்றுவாயாக வெற்றி அடைந்திருக்கிறார்கள், ஆங்கில வருகைக்குப் பின்னர் நீங்கள் சொல்லும் இந்தியத் தத்துவ மரபின் அடையாளங்கள் முற்றிலும் ஒரு புதிய வடிவத்தை அடைகின்றன, ஆங்கிலேயர்களோடு ஒத்திசைவான மன நிலையை வடிவமைத்துக் கொண்ட ஆரியத் தொகுப்பினரின் அதிகார வர்க்கத்துக்கு அப்போதைய தேவை தத்துவங்களோ அதற்கான விளக்கங்களோ இல்லை, மாறாக யார் தலைமை ஏற்பது, இந்தியத் தத்துவ மரபின் உச்சத்தில் யார் அமர்வது என்கிற சிந்தனையும், எத்தகைய காரணிகளைக் கொண்டு பொருளாதார சமூக நலன்களைத் தம் கைகளில் வைத்துக் கொள்வது என்கிற ஆவலுமே அதிகமாய் இருந்தது. ஆங்கில அதிகார வர்க்கம் ஏறக்குறைய இதே மனநிலையில் இருந்தாலும், அவர்கள் நேரடியாக இந்தியப் பழங்குடி சமூகங்களின் பொருள் உலகைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் என்கிற தோற்றம் ஒரு ஒளி வட்டத்தைப் போல அவர்களைச் சுற்றித் தொங்க விடப்பட்டது.

10) இந்தியப் பழங்குடிகளின் அல்லது திராவிட சமூகங்களின் மத நம்பிக்கை அல்லது பண்பாட்டு வெளி முற்றிலும் மாறுபட்ட ஒரு தத்துவ மரபைக் கொண்டு அப்போது இயங்கிக் கொண்டிருந்தது. பெரும்பாலான தென் இந்திய சமூகங்களின் உள்ளடக்க இலக்கியங்களில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" மாதிரியான போது உடைமைத் தத்துவ மரபே சமயத் தத்துவமாகவும் காணக் கிடைக்கிறது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பொது உடைமைத் தத்துவ மரபின் நீட்சியாக வேர் பரப்பி இருந்த இந்தியப் பழங்குடிகளின் பண்பாட்டு வெளிகளும், தன்னலம் பேணுகிற அல்லது தன்னை முன்னிலைப் படுத்துகிற ஆரியத் தொகுப்புகளின் மோதலும் உருவாக்கிய இடைவெளிகளைத் தான் வர்ணத்தின் தாக்கம் என்று நான் அறிந்து கொள்கிறேன். மதத்தின் உட்பொருட்களைக் கொண்டு பொருளாதார நலன்களைச் சுரண்டும் தத்துவ மரபின் நீட்சியாகவே இந்து மதத்தின் பங்காற்றலை இந்திய சமூகத்தில் நான் உணர்கிறேன்.

11) தத்துவ மரபின் பல்வேறு தேர்வு செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு மன்னர்களைத் தனது பிடிக்குள் வைத்துக் கொண்ட ஒரு புதிய தத்துவ மரபின் மலர்ச்சி ஆறாம் நூற்றாண்டில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை இந்திய சமூகத்தில் செழித்து வளர்ந்தது. பதினேழு தொடக்கி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரையில் குலைந்து போயிருந்த மன்னராட்சி முறையின் நீர்ப்பு, அன்னியப் பொருளாதார மையங்களின் வடிவில் இந்திய சமூகத்தின் இருப்பில் நுழையத் துவங்குகிறது, ஆங்கில ஆதிக்கம் தனக்குச் சாதகமான எல்லாக் கருவிகளையும் கையில் எடுக்கத் துணிந்த போது அவர்களுக்குக் கிடைத்த வலுவான கருவியாக இந்திய சமூகத்தில் சாதியும், வர்ணத்தின் தாக்கமும் அடையாளம் காணப்பெறுகிறது. இந்திய சமூகத்தோடு இரண்டறக் கலந்திருந்த ஆரியத் தொகுப்பின் நோக்கம் தன்னைக் கூர்மைப்படுத்திக் கொண்டு அதிகார மையத்தின் அருகில் அமரும் வாய்ப்பாக இதனைக்கருதிய ஒரு காலகட்டத்தில் தான் தமிழ்ச் சமூகத்தில் பெரியாரின் வரவு நிகழ்கிறது.

moh_wam15

12) பல்வேறு சிக்கலான புறக்காரணிகள் குழுமி இருந்த இந்தக் காலகட்டத்தில், ஒரு புறம் நேரடிப் பொருளாதாரத் தாக்குதலான ஆங்கில ஆதிக்கம், அவர்களின் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆரியத் தொகுப்பினத்தின் உறுப்புகள் தொடுத்த சமூக அழுத்தம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் சமயத் தத்துவ மரபுகளை நீர்த்துப் போகச் செய்யும் புதிய இந்திய சமூகத்திற்கான பறந்து பட்ட ஒரு தத்துவ மரபின் தோற்றமாக இருந்தது, மொழிக் கருவிகளால் உண்டான பொருளாதாரத் தடைகள், விடுதலைப் போரில் கிடைத்த தனி மனித மற்றும் சமூக அடையாளங்கள் என்று ஒரு குழப்பம் நிலவிய காலகட்டத்தில் தோன்றிய தலைவராகவே நான் பெரியாரைக் காண்கிறேன். இத்தகைய குழப்பங்களுக்கு இடையிலும் தொடர்ந்து உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் தன வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மனிதர் அவர், தான் வாழும் காலத்திலேயே அவரது போராட்டத்தின் பயன்களை மக்கள் உணரத் தொடங்கியதே அவரது மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம். அவரை பல்வேறு கோணங்களில் நவீன தமிழ்ச் சமூகத்தால் புரிந்து கொள்ள முடியும்,

13) எல்லா நிலைகளிலும் சுழியில் இருந்து துவங்கி தத்துவ மரபுகள் அல்லது அறிவுலகின் முதல் பக்கத்தை அவரது வட்ட வடிவக் கண்ணாடியில் கண்டடைந்த எனக்கும், தத்துவ மரபுகள் என்று சொல்லப்படுகிற கருத்துலகின் பாதி தூரத்தை ஏற்கனவே கடந்து அவரைப் பாதி வழியில் சந்தித்த உங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் நிரப்ப இயலாத இடைவெளி கொண்டவை. அது மாற்றி அமைக்க முடியாததும் கூட, ஏனெனில் எனது தந்தையின் குண நலன்களை நானே விமர்சிப்பதற்கும், நீங்கள் விமர்சிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு போன்றது அது. அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும், ஏனெனில் இன்னும் அறிவுலகின் எத்தனை உயரங்களுக்கு என்னைப் போன்றவர்கள் பயணித்தாலும், அந்தப் பயணத்தின் துவக்கப் புள்ளி "தந்தை பெரியார்" என்பதை மறுக்க இயலாது, அப்படி மறுப்பது நீதியுமில்லை.

14) எந்த ஒரு சமூக அமைப்பும் உருவாக்கப்பட முடிந்தது அல்ல என்கிற உங்கள் கருத்தியலில் இருந்து நான் முரண்படுகிறேன், பொருளாதார இயக்கங்களின் போது தன்னிச்சையாக நிகழ்கிற மாற்றங்களைத் தொகுக்கும் போதோ திருத்தி அமைக்கும் போதோ நிகழும் சமூக ஒழுங்கின் போக்கை மாற்றம் நோக்கிப் பயணித்தல் என்றே நான் புரிந்து கொள்கிறேன், உருவாக்குதலும், திருத்தி அமைத்தலும் ஏறக்குறைய நெருங்கிய சொல்லடைகள், மாற்றம் என்கிற சொல்லின் அடிப்படைப் பொருள் புதிதாக ஒன்றை உருவாக்குதல் என்றே என்னளவில் புரிந்து கொள்ளப்படுகிறது. புதிய சமூகத்தின் உருவாக்கம் என்பது பொருண்மிய இயக்கத்தின் பாதை என்றாலும், பொருண்மியத்தின் பல்வேறு வடிவங்கள் தனி மனிதர்களாலும், குறிப்பிட்ட காலம் நிலைத்திருக்கும் மற்றொரு கோட்பாட்டில் இருந்தும் பெறப்படுகின்றன, தனி மனிதர்கள் இந்திய சமூகத்தில் மட்டுமன்றி உலகின் பல்வேறு வரலாற்றுத் தடத்தில் சமூக இயக்கத்தின், பொருளாதார இயக்கத்தின் பாதையை மாற்றி அமைத்திருக்கிறார்கள், புதிய சமூக ஒழுங்குகள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுகின்றன. அது மாறாத இயக்கம். சமூகங்களைத் தனி மனிதர்களின் சிந்தனைத் தொகுப்பே கட்டமைக்கிறது, கருத்தியல் உலகின் அலைகள் தனி மனிதனைத் தாக்கி அவனது உளவியல் கட்டுமானத்தை மாற்றி அமைக்கின்றன, தொடர்ச்சியான இத்தகைய உளவியல் மாற்றமே சமூக மனதைப் புரட்டிப் போட்டு ஒரு புதிய தத்துவ மரபை உள்வாங்குகிறது. அந்த உள்வாங்கல் தான் சமூகத்தின் இயல்பையும் இருப்பையும் மாற்றி அமைக்கிறது. புதிய அரசியல் சட்டங்களை இயற்றுவதில் பங்காற்றும் கருத்தியல் இருப்பின் தாக்கத்தையும், பொருளியல் மாற்றங்களையும் நாம் சமூகத்தின் புதிய ஒழுங்காகவே பார்க்க முடியும்.

identity

15) தத்துவ மரபு என்று உங்களால் சொல்லப்படும் பல்வேறு மேற்கோள்களை இந்து மதம் என்கிற புள்ளியில் இருந்து புரிந்து கொள்ள என்னால் இயலாது, ஏனெனில் இந்தியத் தத்துவ மரபு என்பது தொகுக்கப்பட்ட பல்வேறு பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் சார்ந்தது, ஒரு குறுகிய கால தேசத்தில் இப்படியான பொது மரபைக் கட்டமைப்பது இயக்க ரீதியான பின்புலம் கொண்டு விமர்சிக்கப்படலாம், பொதுவான வழிபாட்டு முறைகள் மற்றும் சமய நம்பிக்கைகள் இந்திய சமூகத்தின் நிலப்பரப்பில் காணப்பட்டாலும் அவை வரலாற்றுப் பயணத்தில் ஒரு குறுகிய கால தாக்கத்தால் விளைந்தவை என்று நான் நம்புவதற்கு பல்வேறு சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இந்தியத் தத்துவ மரபு என்பது வழமையான இந்திய தேசியத்திற்குள் புதைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்களின் புதைகுழி மண். புதைந்து கிடக்கும் அதன் சாரத்தை நாம் உணர வேண்டுமானால், இந்தக் குறுகிய இந்தியத் தத்துவ மரபு அல்லது இந்து மதத் தத்துவ மரபை விட்டு வெகு தூரம் விலகிச் செல்ல வேண்டும்.இந்து மதம் என்கிற இருட்டறைக்குள் பல்வேறு தேசிய இனக்குழுக்களின் தத்துவ மரபுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன, இந்த அடைப்பு ஒரு பொதுவான அதிகாரக் கையகப்படுத்தளுக்கான தேவையாகவே  என்னால் உணரப்படுகிறது. நுண்கலைகள், பேரிலக்கியங்கள், உயர் சிந்தனை வடிவங்கள் என்று செழித்து வளர்ந்திருந்த சொந்த மக்களின் மொழியையே இந்துத் தத்துவ மரபுகள் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

16) மதம் எல்லா மனிதக் குழுக்களின் தேவையாக இருந்தே வந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், மரணம், பிணி, மூப்பு போன்ற சிக்கலான மனித உடலின் இயங்கியல் குறித்த அறியாமையே மதங்களின் பிறப்பிடம், முழுமையாக அறிந்து கொள்ள முடிகிற அல்லது மனித அறிவுக்கு எட்டிய நிகழ்வுகளுக்கும், வாழ்க்கையின் சிக்கலான நிகழ்வுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை அடைத்து நிரப்பவே மனிதனுக்கு மதம் என்கிற பொதி தேவைப்படுகிறது, அறிவியல் அந்த இடைவெளியைக் கச்சிதமாக அடைத்து வரும் காலத்தில் மதத்தின் தேவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போகலாம், அல்லது நமது இந்திய சமூகத்தின் தத்துவ மரபில் ஊறியும் திளைக்கலாம், ஏனென்றால் அறிவியல் கொடுக்கும் நன்மைகளை விடவும், பல மடங்கு வலிமை நிரம்பிய உடனடிச் சமூகப் பொருளாதார நலன்களை மதங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு புதிய அரசியல், கருத்துலக சமூகம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது, அது நீங்கள் விளக்க முற்படும் தத்துவ மரபின் வேர்களை விடவும் ஆழமாகவும், வலிமையாகவும் தனது வேர்களை இந்திய சமூகத்தில் ஊன்றி இருக்கிறது.

Jeyamohan

உங்கள் கடிதத்தில் இருக்கும் சில ஆழமான உண்மைகளையும், அவற்றை நீங்கள் கையாளும் முறைகளையும் ஒரு மாணவனாக என்னால் எளிமையாக உணர முடியும், வேறுபாடுகள், முரண்கள் அவை குறித்த விவாதங்கள் இவை கூடத் தத்துவ மரபின் பழமையான கூறுகள் தான் என்பதையும் நான் அறிகிறேன், முரண்களில் இருக்கும் ஒற்றுமையைக் கண்டறியும் வரையில் தத்துவங்களும் அதன் நீண்ட மரபுகளும் தங்களின் இருப்பிடத்தில் இருந்தபடி மோதிக் கொண்டே தான் இருக்கின்றன, அந்த மோதலில் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது, விளைவது நன்மையாகவும், நீதியாகவும் இருக்கும் வரையில் தத்துவ மரபுகளின் கருவிகளாக நீங்களும் நானும் மோதிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அதில் தவறொன்றும் இல்லை அல்லவா????

தம்பி அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பும், வணக்கங்களும்.

அகலாத அன்புடன்

கை.அறிவழகன்

மூலக் கட்டுரைக்கான இணைப்பு:

http://www.jeyamohan.in/?p=7864

Advertisements

Responses

  1. You should understand the genetic basis of life.Also please understand Epigenetics where the environment influences the gene…Also read all the books by Richard Dawkins to expand your knowledge which already avilable researched by many.Indian culture is like octopus with random movement of tentacles but the basis is the “selfish gene”…..For any more dialogue write to me


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: