கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 1, 2010

ஒரு இறந்த நகரத்தின் நிழல்.

185802,xcitefun-mohenjo-daro-1

கராச்சியில் இருந்து ரயிலில் லர்க்கானா செல்வது என்று முடிவாகி விட்டது, ஏறக்குறைய 330 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும், ஆறு மணி நேரப் பயணம், அது ஒரு அவசரமான, திடீரென்று முடிவு செய்யப்பட்ட பயணம் தான், ஆனால், எனக்கு மிகவும் தேவைப்படுகிற ஒரு பயணமாக இருந்தது, நாகரீகங்களைப் பற்றியும் பண்பாட்டு வெளிகளைப் பற்றியும் நூல்களில் படித்துக் கற்பனை செய்வதே ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கிற போதில் அவற்றை நேரில் கண்டு அறிகிற மகிழ்ச்சியை நான் இழக்க விரும்பவில்லை, அங்கே ஒன்றும் இல்லை, உனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப் போகிறது என்கிற எதிர்மறை உரையாடல்களைக் கடப்பதை விட லார்க்கானவுக்குச் செல்வது எனக்குப் பெரிய தடையாக இல்லை. ரயிலில் ஏறி அமர்கிறேன், கராச்சி கண்டோன்மென்ட் ரயில் நிலையம் மிகப் பழையது, அநேகமாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கல் மண்டபம் போலவே இருக்கிறது, வட இந்தியாவின் பல்வேறு இன்றைய ரயில் நிலையங்களைப் போலவே அது இருக்கிறது, குட்கா எச்சியை கம்பிகளில் துப்பி வடிய விடும் மகிழுந்து ஓட்டுனர்கள், குர்தா அணிந்த பாகிஸ்தானியர்கள் என்று கூச்சல் நிறைந்த அந்த நிலையம் இன்னொரு நாட்டில் இருக்கும் நினைவை எனக்கு வழங்கவில்லை, தின்பண்டங்களைக் கேட்டுப் பெற்றோரை நச்சரிக்கும் குழந்தைகள், பயணச் சுமைகளைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் பயணிகள், ஏதாவது ஒரு வார இதழைப் புரட்டியபடி இளம்பெண்களை வாசிக்கும் இளைஞர்கள் என்று இன்னொரு இந்திய மாநிலமாகவே கராச்சி ரயில் நிலையம் எனக்குக் காட்சி அளிக்கிறது. ரயில் புறப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன, கடைசி நேரத்தில் உள்நுழைந்து தனது இருக்கையைத் தேடும் குடும்பங்கள், சில பிச்சைக்காரர்கள் என்று இன்னொரு பயணம் துவங்குகிறது, ஆயினும், இந்தப் பயணம் ஒரு அளப்பரிய மகிழ்ச்சியைத் தேடித் புறப்பட்ட பயணம்.

இந்தப் பயணம் உலகின் தொன்மையான நகரொன்றைக் காணுவதற்காக நிகழ்கிறது. பள்ளத்தாக்குகள், பசுமை நிரம்பிய வயல் வெளிகள், செம்மண் புழுதிகளைத் தூவியபடி கடக்கும் ஊர்திகள் என்று பெரும்பாலான இந்திய ரயில் பயணங்களைப் போலவே இருக்கிறது. அறை மணி நேரப் பயணத்தில், இரண்டு வயல்களுக்கு இடையில் குறுகிக் கிடக்கும் ஒரு மேட்டுப் பாதையில் தனது சிவப்புச் சதாரை இழுத்து விட்டபடி ரயிலின் சாளரங்களைக் கடக்கிறாள் ஒரு இளம்பெண், அவளது கண்களில்  சூரிய ஒளிபட்டு எதிரொலிக்கிறது, அவளது நிழல் வயலில் கிடக்கும் நீரில் விழுந்து ஆடுகிறது, பயிர்கள் ஒரு முறை சிலிர்த்துக் கொள்கின்றன. அதே மாதிரியான ஒரு அழகுப் பொம்மை உலகின் தொன்மையான நகரின் இடிபாடுகளில் இருந்து கிடைத்திருக்கிறது, அந்த இடிபாடுகளைத் தரிசிக்கவே நான் பயணிக்கிறேன்.

mysteriesofworldslostcinw1

லர்க்கானா ரயில் நிலையத்தை அடையும் போது இரவு நெருங்கி விட்டிருந்தது, "பாரிஸ் இன்" தங்கும் விடுதியில் ஒரு பாகிஸ்தானிய நண்பனின் உதவியோடு நான் ஏற்கனவே அறை முன்பதிவு செய்து விட்டிருந்தேன், நீள நீளமாக வரையப்பட்ட படகுகளைப் போலிருக்கும் அவர்களின் மொழியைத் தவிர வேறொன்றும் பெரிதாக என்னைக் கலவரம் செய்யவில்லை, ஹிந்தி மொழியை அங்கிருக்கும் அனைவரும் பேசுகிறார்கள், நானும் கூட. நெருப்பில் வாட்டப்பட்ட கோதுமை ரொட்டியும், அரிசிச் சோறும் பருப்பும் தாராளமாகக் கிடைக்கிறது, கூடவே அந்த மக்களின் அன்பும். அன்றைய இரவு வேகமாகக் கடந்து விட வேண்டும் என்று மனம் ஆவல் கொள்கிறது, புகைப்படக் கருவியைச் சரிபார்த்து அதன் மின்கலத்தை மீண்டும் ஒருமுறை மின்னேற்றம் செய்யப் பொருத்தி விட்டு படுக்கையில் சரிகிறேன் நான். நகருக்கு வெகுதூரத்தில் ஒரு மேட்டில் இருந்து வெளிச்சப் புள்ளிகள் சாளரங்களில் பதிகிறது, உறக்கம் இரவை விழுங்கிக் கொள்கிறது.

Biot576PhotoN

காக்கைகளும், சில குருவிகளும் உலகின் பொதுவான பறவைகளாய் இருக்க வேண்டும், அவை எல்லா இடங்களிலும் நமக்குக் காலைப் பொழுதை நினைவு படுத்துகின்றன, காகங்களின் ஓசையற்ற ஒரு காலைப் பொழுதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை, மின்கம்பங்களில் அல்லது மரங்களில் அமர்ந்து அவை தங்கள் நாளைத் துவக்கி விடுகின்றன. வழக்கமான காலைப் பணிகள் முடிந்து உலகின் மிகப் பழமையான ஒரு நகரத்தை நோக்கி என் கால்கள் நடக்கத் துவங்குகின்றன. அந்த நகரம் அழிந்து போயிருக்கிறது, ஆயினும், அழிவின் சுவடுகளில் தனது பெருமையை பொருத்திக் கொண்டு மனிதர்களின் வரலாற்றுக்குப் பொருள் சேர்த்திருக்கிறது அந்த நகரம். மலையேறப் பயன்படும் ஒரு அகலமான மகிழுந்தில் பயணித்து அந்த நகரத்தின் வாசலில் இறக்கி விடப்படுகிறேன் நான். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் துறை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை ஆங்கிலத்திலும், உருதுவிலும் "முகன்ஜ் சதாரோ" என்று நீல நிறத்தில் என்னையும் இன்னும் சில ஜப்பான் சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்கிறது.

உள்ளே நுழைவதற்காக உள்ளூர் நிர்வாகத்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்களோடு பயணித்த ஒரு குர்தா அணிந்த லர்க்கானா இளைஞர் வழிகாட்டியாக மாறி விடுகிறார், அதற்காக அவருக்கு நாங்கள் ஒவ்வொருவரும் ஐம்பது ரூபாய்களைக் கொடுக்க வேண்டும். உலகின் மிகத் தொன்மையான ஒரு நகரைச் சுற்றிக் காட்டுவதற்கு அது மிகக் குறைந்த கட்டணமாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அந்த நகரின் வயது நம்மால் கற்பனை செய்ய முடியாதது, கிறிஸ்து வின் பிறப்பிற்குப் முன்னர் ஏறத்தாழ மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரத்தின் மிச்சம் அது என்கிற உணர்வே ஒரு நடுக்கத்தைக் கொடுக்கிறது, அந்தக் காற்றில் மிதக்கும் ஒரு விதமான ஓசை எனக்கு அங்கு வாழ்ந்திருந்த மக்களின் உரையாடலை நினைவு படுத்துகிறது, அந்த சிவப்பும், மஞ்சளும் கலந்த மண்மேடுகள் அவர்கள் சொல்ல மறந்த ஏதோ ஒரு கதையின் மிச்சத்தை எனக்கு நினைவு படுத்துகின்றன, உள்ளே நுழைகிற வழியில் ஒரு தொல்பொருள் கண்காட்சியகம் இருக்கிறது, அது இன்னும் திறக்கப்படவில்லை, திரும்பி வரும்போது அதைப் பார்வையிடலாம் என்று வாயிலருகே அமர்ந்திருக்கும் பெரியவர் சொல்கிறார், தொடர்ந்து ஒரு ஆய்வுக் கூடம், தொல்லியல் ஆய்வாளர்களின் ஓய்வறை என்று அவை கூடச் சிதிலமடைந்த அந்த நகரத்தின் பகுதிகளாகவே மாறி விட்டிருக்கிறது.

உள்ளே நுழைந்தவுடன் கண்ணில் படுவது காந்தாரக் கலை வடிவோடு கூடிய ஒரு உயரமான ஸ்தூபி, அது ஒரு பிற்சேர்க்கை என்று சொல்கிறார் அந்த வழிகாட்டும் இளைஞர், ஆனால், அங்கிருந்து பார்க்கும் போது தோண்டி எடுக்கப்பட்ட அந்த நகரத்தின் தோற்றத்தை முழுமையாகப் பார்க்க முடியும் என்கிறார் அவர். வெறும் ஆயிரத்து அறநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்தூபி அது, சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு சிதிலமாய் எதிர்பரவி இருக்கும் அந்த நகரத்தோடு அந்தச் ஸ்தூபியும் ஒட்டிக் கொண்டு விட்டது,

74440-050-BFEC7F4A

நாங்கள் மலை ஏறுவதைப் போலவே அந்தப் பாதை மீது பயணித்துக் கொண்டிருக்கிறோம், வழிகாட்டும் இளைஞர் பார்த்து நிதானமாகக் காலடி வைக்குமாறு அறிவுறுத்துகிறார், அங்கிருக்கும் மண் மிகுந்த நெகிழ்வானது, பல்வேறு காலகட்டங்களில் தோண்டப்பட்டுக் குவிக்கப்பட்டிருக்கும் அந்த மண் உலகின் மூத்த நாகரீகங்களில் தழைத்திருந்த மனிதர்களுக்குச் சொந்தமானது, அவர்களின் குழந்தைகள் அந்த மண்ணில் விளையாடி இருக்கிறார்கள், அந்த மண்ணில் அவர்கள் கூடிக் கலவி செய்து பெருகி வாழ்ந்திருக்கிறார்கள், அவர்கள் அங்குதான் உண்டும் உறங்கியும் இறந்து போயிருக்கிறார்கள், நான் காலடி வைத்திருக்கும் இதே மண்ணை ஒரு குழந்தை தனது கைகளில் அள்ளித் திண்ண முயன்றிருக்கும், தனது வீட்டின் தோட்டங்களில் வளரும் செடிகளுக்கு இந்த மண்ணை யாரோ ஒரு இளைஞன் முட்டுக் கொடுத்திருப்பான்.வழியில் தென்படும் சில கட்டிடங்களைக் காட்டி இதுதான் வெந்நீர் பயன்படுத்தப்பட்ட குளியலறை என்றும், அதன் கீழே அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர்ப் பாதையையும் வழிகாட்டி சுட்டிக் காட்டுகிறார், இன்றைய குழாய்த் தொழில் நுட்பங்கள் யாவற்றுக்கும் கொஞ்சமும் சளைக்காத ஒரு பதிப்பு முறையை வெட்டுப்பட்ட சில சிதிலங்களில் இன்றும் காண முடிகிறது, நாம் மற்றொரு பேரண்டத்தின் சுற்றில் இருக்கிறோமோ என்கிற ஐயம் எனக்கு எழுந்ததை நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்,

ஆம், அது ஒரு நாகரீகத்தின் உச்சத்தை அடைந்திருந்த நகரத்தின் சிதிலம் போலவே கிடக்கிறது, அதன் சுவர்கள் உயரமான கட்டிடங்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றன. அதன் வீதிகளில் விளக்குக் கம்பங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன, அன்றைய இரவுகளில் விளக்குகள் வழங்கிய ஒளியின் மிச்சத்தை இன்றைய இரவுகளும் எதிரொலிப்பதாக அந்த இளைஞர் சொன்னதில் மனிதனின் வியப்பு மேலோங்கி இருந்தது, மனிதர்கள் அழிந்து போன அடையாளங்களைக் காணும் போது நடுங்குகிறார்கள், அது அவர்களுக்கு அழிவை நினைவுபடுத்தும் என்று நினைக்கிறேன், ஒரே மாதிரியான சுட்ட கற்களை அவர் எங்களுக்குக் கையில் எடுத்துக் காட்டினார், அந்த நிலத்தின் வயதை பழுப்பேறிய அந்தப் பழைய கல் சுமந்து கொண்டு அவர் கைகளில் ஒன்றும் அறியாது நிலை கொண்டிருந்தது  . அந்த வழிகாட்டியைச் சேர்த்து ஒரு புகைப்படம் எடுக்க நான் முயன்ற போது அவர் படக்கென்று விலகினார், "இங்கே புகைப்படம் எடுப்பது ஆபத்தானது" என்றும், "இங்கு உலவும் ஆவிகள் அந்தப் புகைப்படம் இருக்கும் இடங்களைத் தேடி வரும்" என்றும் அவர் கலவரத்தோடு சொன்னார், அவரது நம்பிக்கையோடு போராடுவதை அந்த நேரத்தில் நான் விரும்பவில்லை.

mohenjo-daro-ruins-285685-sw

ஸ்தூபியின் உச்சியில் இருந்து பார்க்கும் போது சுற்றிலும் பசுமையான மரங்களும், வயல் வெளிகளும் நிரம்பி இருக்கிறது, இந்த இடத்தில இருந்து இருபது அடி தூரம் விலகிச் சென்று விட்டால் ஒரு வழக்கமான சமகாலச் சூழல் நிரம்பி வழிகிறது, ஆயினும், இந்த மண் மேடுகளுக்குள்  மறைந்து கிடக்கும் திராவிடர்களின் உயரிய நகரம் என்கிற அடையாளம் அங்கு வீசும் காற்றில் கூட ஒரு மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது, காற்று வழக்கத்தை விடவும் அழுத்தமாகவும், அடர்த்தியாகவும் முகத்தில் அறைகிறது, ஒருவேளை அது ஆழ்மனத்தின் நடுக்கத்தைக் கண்டு கொண்டதாய் இருக்க வேண்டும்.

சில ஜப்பானியர்களும், அராபியர்களும் அவ்வப்போது தென்படுகிறார்கள், அவர்களில் ஜப்பானிய மாணவர்களும் அடங்கும், தங்களின் ஆய்வுக் கட்டுரைகளுக்காக அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது, வேறு சிலர் பறவைகளை வேட்டையாடுகிறார்கள், நமது ஊரில் சிறுவர்கள் வைத்து விளையாடும் "கவட்டா பில்"லைப் போலவே கொஞ்சம் நீளமான ஒரு கருவியைக் கையில் வைத்துக் கொண்டு நீள வாலோடு பறக்கும் குருவிகளைக் குறி வைக்கிறார்கள், கீழிறங்கி அந்த நகரின் இடிபாடுகளின் மீதேறி நாங்கள் நடக்கத் துவங்குகிறோம், சட்டென்று குறுக்கிடும் ஒரு அகலமான சாலையைப் போன்ற தெருவுக்குள் நுழைகிறோம், இரு பக்கமும் மிக உயரமான கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் வெயிலைப் படிய வைத்தபடி வியக்க வைக்கிறது, அதன் வீதிகள் இன்றைய நகரங்களின் உயர் கட்டுமானத்திற்கு ஒப்பாய் பளபளக்கின்றன, அதன் செங்கல் கற்களைத் தடவியபடி எனது எண்ணங்கள் பின்னோக்கிப் பயணிக்கின்றன, இந்த வீதியில் என்றாவது ஒருநாள் ஒரு தாய் தன குழந்தைகளுக்கான உணவை வாங்கிக் கொண்டு நடந்திருப்பாள், இந்த வீதியில் ஒரு வணிகன் தனது பொருட்களைக் கூவிக் கூவி விற்றிருப்பான், இந்த வீதியில் இரண்டு சிறுவர்கள் கட்டிப் புரண்டு சண்டையிட்டிருப்பார்கள், இந்த வீதியில் இரண்டு உழைக்கும் மனிதர்கள் தங்கள் கூலி உயர்வைக் குறித்து உரையாடி இருப்பார்கள், இருட்டிய பிறகான இந்த வீதியில் இரண்டு காதலர்கள் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள், வாழ்க்கை ஒரு ஆறு போலவே இந்த வீதிகளில் வழிந்து ஓடி இருக்கும், அந்த ஆறு திசை மாறி விட்டிருக்கிறது, என்ன காரணத்தாலோ இந்த நகரத்தின் வாழ்க்கை நின்று போய் விட்டது, என்ன காரணத்தாலோ இந்த வீதியின் இயக்கம் நின்று போய் இருக்கிறது.

இங்கே அலையும் மனிதர்களில் யாரும் ஒரு நாள் இரவில் இங்கு தங்குவதற்கு ஒப்ப மாட்டார்கள், இறந்த ஒரு நகரத்தின் நிழலில் வாழ்வதற்கு மனிதர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள், அன்று இரவு இந்த வீதியில் நடக்க வேண்டும் என்று ஒரு ஆசை பிறக்கிறது எனக்கு, வாழ்க்கை இடம் மாறி இருந்த ஒரு தொன்மையான நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரிவது கிடைக்க இயலாத ஒரு வாய்ப்பு, ஆயினும், அது அனுமதிக்கப்படுவதில்லை என்று அந்த வழிகாட்டி என் ஆசையை முடித்து வைக்கிறார்.

92923534

மெல்லக் கீழிறங்கி அவர் காட்டிய அந்த மிகப்பெரிய வியப்பை நோக்குகிறேன் நான், அது ஒரு குளம், பொதுக் குளம், அந்தக் குளம் பூமியை உடைத்துக் கட்டியது போல நீண்ட பள்ளத்தில் கிடக்கிறது, இரண்டு புறங்களில் படிக்கட்டுகள் சிதைந்து கிடக்கிறது, சோழ மன்னர்களின் குளக்கரைகளை நினைவுபடுத்தும் அந்தக் குளம் நகரத்து மக்களின் பயன்பாட்டில் இருந்ததை அந்த வழிகாட்டி எனக்குச் சொல்கிறார், அந்தக் குளத்தைச் சுற்றிலும் குளியலறைகள் நிறைந்து கிடக்கிறது, எதிர்ப்புறத்தில் ஆறு குளியலறைகள், முறையான நீர் வெளியேற்று வசதிகள் நிறைந்த அந்த அறைகளில் ஒன்றில் நுழைகிறேன் நான், உலகின் வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு அமைதி அங்கு குடி கொண்டிருந்தது, அந்த அமைதி மறைந்து போன அந்த நகரத்து மக்களின் ஆசைகளை அடைத்துக் கொண்ட ஒரு அறையின் கதை. அலை அலையான எண்ணங்கள் அந்த அறைக்குள் இருந்து புறப்படுகிறது, அந்த அறையின் கதகதப்பில் ஒரு இளம்பெண் ஆடைகளை மாற்றி இருக்கலாம், அந்த அறையின் சுவர்கள் இன்னொரு மனிதனின் நிர்வாணத்தைக் கண்டிருக்கலாம். அந்த அறையில் தனது கனவுகளை யாரோ ஒரு மனிதன் புதைத்திருக்கலாம், அந்தக் குளியல் அறைகளின் கற்கள் அந்த ரகசியங்களை தனக்குள் புதைத்தபடி நின்று கொண்டிருக்கின்றன. எனது வாழ்நாட்களில் இறங்கி நிற்கிற மிகப் பழமையான குளம் அதுவாகத் தானிருக்கும், இந்தக் குளத்தில் மனிதர்கள் ஒன்றாகவே குளித்திருக்க வேண்டும், இன்றைய இந்தியாவின் பல கிராமங்களில் இருக்கும் குளங்களைப் போல அவை சாதிக்கு ஒரு படித்துறையைக் கொண்டதாக இருந்திருக்காது என்று நம்புகிறேன்.

moh_wam13

திராவிடர்களின் உயர் நாகரீகத் தொட்டில் என்று உலக வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் அந்த அழிந்த நகரம் என் கண்களை விட்டு அகல மறுக்கிறது, ஆயினும், நான் விடை பெற வேண்டும், அதற்கான நேரம் நெருங்கி விட்டது, எதிலும் அடைக்க முடியாத அந்த நகரத்தின் சுவடுகளைச் சில புகைப்படக் கருவிகளில் அடைத்துக் கொண்டு நான் குளத்தில் இருந்து மேலே ஏறுகிறேன், என்னைச் சுற்றி அந்த நகரத்தின் சொந்தக் காரர்கள் சிலர் குளித்துக் கரை ஏறுவதைப் போலவே தோன்றுகிறது. அவர்களின் எண்ணங்கள், அவர்களின் கனவுகள், அவர்களின் அசைவுகள் எல்லாம் நான் நின்று கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டே இருக்கலாம், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவை ஒரு உயர் பண்பாட்டு மக்களின் கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கும். அறைக்குத் திரும்புகிறேன், உடலெங்கும் புழுதி ஒட்டிக் கிடக்கும் அந்த நகரத்தின் சுவடுகளை குளித்து அழிக்க விரும்பவில்லை என் மனம், திரும்பத் திரும்ப அந்த மண் மேடுகளுக்குள் என்னைக் கொண்டு சேர்க்கிறது நினைவுகள், மீண்டும் ரயில் நிலையத்தின் கூச்சலுக்குள் கரைகிறது அந்த அழிந்து போன நகரம் குறித்த என் நினைவுகள், ரயில் நிலையத்தில் அதே வெளுத்துப் போன சிவப்புச் சதாரோடு வெள்ளி நிறத்தில் மணிகள் கட்டி இருக்கும் சேலை அணிந்த இளம் பெண் ஒருத்தி என்னை கடக்கிறாள், அவளது செம்பழுப்பு நிறக் கூந்தல் கொஞ்சம் விலகி இருக்கிறது, ஒரு சின்னப் புன்னகையைத் துவக்கி முடிக்காமல் லர்க்கானா ரயில் நிலைய மக்கள் வெள்ளத்தில் கரைகிறாள் அவள், எனக்கு பள்ளிக் கூடங்களில் படித்த சிந்துச் சமவெளி நாகரீகத்தின் ஆடும் பெண் பொம்மையைப் பார்த்தது போலவே இருக்கிறது. கரும்புகையைக் கக்கியபடி நான் ஏறிய ரயில் கராச்சியை நோக்கிப் பயணிக்கிறது.

185795,xcitefun-mohenjo-daro-8

*************

Advertisements

Responses

  1. நிச்சயம் மிக அருமையான பதிவு. உனது பயணக் கட்டுரை மட்டுமில்லை இது, இது ஒரு தொன்மையான நாகரீகத்தின் வாசலில் இருந்து எழுத முற்பட்டிருக்கும் ஒர் முன்னுரை.

    எழுத்து நயம் மிகவும் அருமை. என்னையும் உன்னோடு பயணமிடச் செய்தது, உன் கண்களில் நான் கண்ட காட்சிகள் எனை மேலும் காண ஆவலிட்டது. பணி மற்றும் உடல் நிலை காரணத்தால் சற்று தாமதமாகலாம்…

    வாழ்த்துக்கள்…

  2. எழுத்து நயம் மிகவும் அருமை…..

  3. நன்றி சங்கர், உனது வாழ்த்துக்கள் எனது எழுத்துக்களை இன்னும் செம்மைப் படுத்தும்.

  4. நன்றி திரு.ரவிக்குமார்.

  5. GREAT..PLEASE VISIT SRILANKA ,MALDIVES TOO…WRITE MORE!!!

  6. Sure, I will do that sir. Desire to see that landscape of both Srilanka and Maldives.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: