கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 7, 2010

முத்துச்சாமி ஐயாவும், சில நினைவுகளும்

0

"கற்பித்தல் என்னும் தொழில் உலகின் எல்லாத் தொழில்களையும் நமக்குக் கற்றுத் தருகிறது".

யாரோ ஒரு பெயர் தெரியாத அறிஞரின் கூற்று இது.

மாரிமுத்து தான் சொன்னான், முத்துசாமி ஐயா இனி பிழைக்க மாட்டாருடா அறிவு, வயசும் ஆயிருச்சு, பக்கவாதம் வந்து படுத்திருக்கிறார் என்று, மாரிமுத்து என்னுடைய வகுப்புத் தோழன், அவன் சொன்னதில் இருந்தே மனது கனமாக இருந்தது, ஏனோ அவரைப் பார்க்க வேண்டும் போலவே இருந்தது, காரைக்குடியின் செஞ்சைப் பகுதியில் ஒரு குறுகலான வீதி அது, அந்த வீதியின் பெயர் குறித்த எந்த அக்கறையும் நகரத்துக்குக் கிடையாது, அந்த வீதியில் வாழும் எளிய மக்களைப் போலவே இருக்கிறது அதன் தோற்றமும், சிதைவுகளும். சில புதிய வீடுகள் தென்படுகிறது, தவிர அதே மரங்கள், ஓலை வேயப்பட்ட வீடுகள் என்று பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வருவது மாதிரியே இருக்கிறது அந்த நிமிடங்கள், அந்த வீதியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என்னை முத்துச்சாமி வாத்தியாரின் வீடு எங்கே என்று கேட்டுக் கொண்டே தான் செல்ல வைக்கிறது, ஒரு வழியாய் அந்த வீடு என் கண்களில் மீண்டும் பட்டு விடுகிறது.

வாசலில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், எல்லாக் குழந்தைகளையும் போலவே மிரட்சியோடு பார்த்துப் பின்வாங்கி உள்ளோடி வீட்டில் இருப்பவர்களுக்கு என்னுடைய வருகையை அவர்கள் சொல்லி இருக்க வேண்டும், கண்ணாடி அணிந்த அந்த மனிதர் வந்து "யாரு?" என்கிறார், நான் முத்துச்சாமி வாத்தியாரின் மாணவன் அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் “உள்ளே வாங்க சார்” என்கிறார் அவர், "யாரு முகிலா?" என்று ஒரு குரல் நடுக்கத்தோடு கேட்கிறது உள்ளிருந்து எனக்கு, என் இளம் வயதில் எனக்குள் தமிழை அள்ளி வீசி வகுப்பறை எங்கும் தமிழ் மணம் பரப்பிய அதே குரல், பழைய தெளிவும், கம்பீரமும் இல்லையென்றால் கூட அந்தக் குரல் இன்னும் தனது பொலிவை இழந்து விடவில்லை, "யாரோ உங்களோட ஸ்டுடென்ட்டாம், அப்பா" என்று அவர் கொஞ்சம் உரக்கச் சொல்கிறார், படுக்கையில் இருந்து எழுந்து அமர முயற்சி செய்கிறார் அந்த மனிதர், தலை அணைக்கு அருகில் இருக்கும் தனது மூக்குக் கண்ணாடியை அவர் தேடி எடுத்து அணிந்து கொள்கிறார், "ஐயா வணக்கம்" என்று அவர் காலடியைத் தொட்டு வணங்குகிறேன் நான், அவர் என்னை வாழ்த்துகிறார், தனது தோளோடு அணைத்துக் கொள்கிறார், யாருப்பா பேரு என்ன? ஐயா அறிவழகன், உங்களிடம் ஆறு, ஏழு வகுப்புகளில் தமிழ் படித்தேனே என்கிறேன் நான், அவருக்கு நினைவு வரவில்லை, அவர் என்னை மாதிரியே ஆயிரம் மாணவர்களோடு கலந்து பழகி இருக்கிறார், என்னை மாதிரியே தோற்றம் கொண்ட பல மாணவர்களை அவர் தொடர்ந்து கடந்து வந்திருக்கிறார், பிறகு, "ஐயா, மனோ இளங்கோவனின் மருமகன் நான்" என்கிறேன் அவரிடம், "இளங்கோ அக்கா கலாவின் மகனா நீ?"  என்று உடனே நினைவு கூர்கிறார், மாமாவும் அந்தப் பகுதியில் தீவிரமாகக் கட்சிப் பணிகள் ஆற்றுபவர் என்பதால் அவரை நினைவில் வைத்திருக்கிறார் அவர். 

Teacher

அவரோடு அருகில் அமர்ந்திருந்த அந்தத் தருணங்களில், "முதல் வரிசையில் இருந்து எச்சியில் முட்டை விட்டதற்காக அடி வாங்கினேனே!!!", "செய்யுள்களை ஒப்புவித்து விட்டுப் பக்கத்துக்கு மாணவனோடு பேசிக் கொண்டிருந்ததற்க்காக உங்களிடம் எப்போதும் பிரம்படி வாங்குவேனே"!!!   "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டத்தை" நீங்கள் நடத்தாத போதும் பொருளோடு  ஆய்வாளரிடம் சொல்லி உங்களை அசத்தினேனே" அந்த அறிவழகன் ஐயா,  என்று என்னவெல்லாமோ சொல்ல நினைக்கிறேன் நான், அந்த நிமிடங்களில், பேச்சு வரவில்லை, அவருடைய உடல் நிலை அத்தனை வலிவற்றதாய் இருந்ததாலும், அவருடைய பேச்சு நசிந்து அவர் பேச முடியாதவராயும் இருப்பதால் அவரைத் தொல்லை செய்ய ஏனோ மணம் வரவில்லை,  மேலும் அவருடைய நினைவும் அத்தனை சிறப்பாய் இல்லை என்பதை அவருடைய மகன் எனக்குச் சொல்கிறார், தேநீர் தயாரித்துக் கொடுக்கச் சொல்லி தன்னுடைய மகனிடம் சைகையில் சொல்கிறார் தமிழாசிரியர் முத்துச்சாமி, அவரது காலடியில் அமர்ந்து இருக்கிறேன் நான், "நீ என்ன பண்ற?" என்று அதே பழைய உரிமையோடு என்னைக் கேட்கிறார் அவர், "நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறேன் ஐயா" என்கிறேன் நான், "என்கிட்டே படிச்ச பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்கீங்கடா", என்று கண் கலங்குகிறார் அவர், எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வருகிறது, தேநீரைக் குடித்து விட்டு அவருக்காக வாங்கி வந்திருந்த பழங்களை அவர் கையில் கொடுக்கிறேன் நான், ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவர் கைகளில் வைத்தேன், "எதுக்குப்பா இதெல்லாம்?" என்கிறார் அவர் நடுக்கத்தோடு, "பிள்ளைகள் எல்லாம் எனக்கு ஒரு குறையும் இல்லாமல் கவனிக்கிறார்கள், எனக்கு எதுக்கு தம்பி காசு" என்று மறுக்கிறார், "நானும் உங்கள் பிள்ளை தானே ஐயா" என்று அவர் கையைத் தடுத்து விரல் இடுக்குகளில் திணிக்கிறேன் நான். புன்னகைக்கிறார் முத்துச்சாமி ஐயா, உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா என்று அவரிடம் இருந்து விடை பெறுகிறேன் நான். மனது நிறைவாக இருக்கிறது, பிள்ளைகள் ஒரு குறையும் இல்லாமல் கவனித்துக் கொள்கிறார்கள் என்கிற அவரது குரலில்…….

classroom

ஆசிரியர்கள் ஏறத்தாழ நம் வீட்டு உறவுகளைப் போலவே இருக்கிறார்கள், அவர்கள் நமது வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கிறார்கள், நமக்கு இந்த உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நல்ல செய்திகளை அவர்கள் வாயிலாகத்தான் நாம் அறிகிறோம், தங்களுக்கு அருகில் இருக்கும் சமூகத்தை அவர்கள் தான் கட்டி அமைக்கிறார்கள், நல்லாசிரியர்கள் இந்தச் சமூகத்தின் ஐந்தாவது தூண்கள் எல்லாம் இல்லை, எல்லாத் தூண்களையும் தாங்கும் அடித்தளமே அவர்கள் தான், ஆசிரியர்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார்கள், ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் தழைக்காது. ஒரு ஆசிரியர் செய்யும் வேலை மிக வியப்பளிக்கக் கூடியது, அவர் ஒருவரே தனது தேவையை சமூகத்தில் இல்லாமல் செய்வதற்காக அல்லும் பகலுமாய் உழைக்கிறார். நமக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் தொடர்பு வாழ்க்கையின் பாதை முழுவதும் கட்டப்பட்டிருக்கும் தோரணம் போல நம்மைத் தொடர்ந்து வருகிறது, பல அறிஞர்களை, கல்வியாளர்களை, தம்மை ஆள்பவர்களை, அதற்கான தகுதிகளை சமூகத்திற்கு வழங்கியபடியே அவர்கள் பயணிக்கிறார்கள், அவர்களில் பலர் கற்றுக் கொடுத்தலை வெறும் தொழிலாகவும், சிலர் தங்கள் வாழ்க்கை அனுபவமாகவும் உணர்கிறார்கள், வகுப்பறைகளில் அவர்கள் இயங்கும் முறைகளை வைத்தே அவர்களை நாம் உணர்ந்து கொள்கிறோம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆசிரியர்களின் தாக்கம் நம்மைப் பின் தொடர்ந்து வருகிறது, சில நேரங்களில் அவர்களைப் போலவே வாழத் துவங்குகிறோம் அல்லது அல்லது அவர்களைப் போல நடித்துப் பார்க்கிறோம்.

ஒரு முறை வழக்கம் போல ஊருக்குச் சென்ற போது சாலையில் என்னுடைய ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன், அவர் தன்னுடைய துணைவியாரோடு நடந்து சென்று கொண்டிருந்தார், வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு அவரை நெருங்கி வணக்கம் சொன்னேன், அவருக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆயினும் அவர் தெரிந்தது போல பாவனை செய்தார், அது ஆசிரியர்களுக்கு இருக்கும் ஒரு பண்பு, அவர்கள் தங்கள் நினைவு கூர்மையாக இன்னும் இருப்பதாக நம்மிடம் சொல்ல விழைகிறார்கள், அவருக்கு வயதாகித் தளர்ந்து முகத்தில் சுருக்கங்கள் நிரம்பி இருக்கிறது, தன்னுடைய இள வயதில் அவர் ஒரு வியப்பூட்டும் ஆசிரியராக மட்டுமன்றி அச்சம் தருபவராகவும் இருந்தார், அவர் பெயர் புஷ்பராஜ், அவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட, அவருடைய ஓவியங்கள் இன்றைய ஊடகங்களில் வரையும் எந்த ஓவியருக்கும் குறைந்தது அல்ல, இருப்பினும் அவர் தன்னுடைய ஓவியங்களை பள்ளிச் சுவர்களுக்குள் மட்டுமே நிறுத்திக் கொண்டார். அவருடைய வகுப்புகள் பல மாணவர்களுக்கு ஒரு சிறைக்கூடம் போலக் காட்சி அளிக்கும், அவருடைய வருகை பல மாணவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும், காரணம் அவர் வழங்கும் தண்டனைகள், சிங்கப்பூரில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையைப் போல மாணவர்களைக் குனிய வைத்துத் தன் பிரம்புகளால் பின்புறத்தில் அவர் கொடுக்கும் அந்தத் தண்டனை பலரைப் படிக்க வைத்திருக்கிறது, அறிவியலில் சிறந்த மாணவர்களாக இன்று உருவாக்கி இருக்கிறது.

OG_1

அவரது வகுப்புகள் எனக்கு ஒரு வியப்பான மன நிலையை எப்போதும் தரும், வாழ்க்கையைக் கலந்து தான் அவர் பாடங்களை விளக்குவார். ஆற்றல், பளு, திசைவேகம் ஆகியவற்றை வைத்து நியூட்டனின் இரண்டாவது விதியை அவர் (ஆ)த்தா, (ப)ணியாரத்த, (தி)ண்ணாத்தா என்று அவர் விளக்கியது இன்று வரையில் எனக்கு நினைவில் இருக்கிறது, (ஆற்றல், பளு, திசைவேகம்) ஆகிய மூன்றையும் மாணவர்கள் நினைவில் வைத்து கொள்ளவே அவர் இந்த மூன்று சொற்களையும் கண்டு பிடித்திருந்தார். பாடங்களோடு அரசியல், சமூகம், திரைப்படம் எல்லாவற்றையும் அவர் கலந்து கொடுப்பார். மாணவர்களின் கருத்துக்களைக் கேட்பார், அவர்களோடு பலவற்றைப் பகிர்ந்து கொள்வார், வகுப்பறை ஒரு விவாதக் கூடம் போலவே இருக்கும், வகுப்பின் முடிவில் அவர் சில வீட்டுப் பயிற்சிகளைக் கொடுப்பார், மறுநாள் அவற்றைச் செய்து கொண்டு வராத மாணவர்களுக்குத்தான் மேற்படி சிங்கப்பூர் பாணியிலான தண்டனை.

இவரைத் தவிர்த்து மனதில் நிற்கிற ஆசிரியர்  "ஸ்டீபன் சார்", அடிப்படை ஆங்கில ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர், ஏறக்குறைய ஒரு ஆசிரியர் மட்டுமன்றி முழுமையான மனிதரும் கூட, சிறப்பு ஆங்கில வகுப்புகள், நல்லொழுக்க வகுப்புகள், ஓவியப் பயிற்சி என்று ஒரு தீவிரமான ஆசிரியராக அவர் இருந்தார், மூன்று, நான்கு வகுப்புகளில் இருந்தே அவரை நான் கூர்ந்து கவனிக்கத் துவங்கி இருந்தேன், அவரோடு நான் நெருக்கமானது என்னுடைய எட்டாம் வகுப்பில் தான், அவரோடு ஏறக்குறைய நான் முட்டி மோதி இருக்கிறேன், நல்லொழுக்க வகுப்பொன்றில் "நற்கருணை வீரன்" என்கிற போதனை இதழைப் படிக்கச் சொன்னார், மறுநாள் நான் "கோகுலம்" மாத இதழை எடுத்துக் கொண்டு போய் வாசிக்கப் போக விழுந்தது அடி, இருப்பினும் அதில் தவறான செய்திகள் எதுவும் இல்லை என்று இறுதி வரை அவரோடு சண்டை பிடித்தேன், வடக்குக் காவல் நிலையத்தில் பணி புரியும் ஒரு காவலரின் மகன் செய்த சண்டித்தனங்களை "நாறுது, நாறுது" (NORTH) என்று கேலி செய்து அவனை வெறுப்பேற்றி அவனது தந்தையை பள்ளிக்கு வரவழைத்தது, போன்ற பல்வேறு எதிர்மறை நிகழ்வுகள் என்னிடத்தில் காணப்பட்டாலும் அவர் என்னை நேசித்தார், அவருடைய நேசம் தன்னுடைய பகல் உணவை என்னோடு பகிர்ந்து கொள்ளும் வரையில் அளவற்றுக் கிடந்தது, அவர் ஒரு சிறந்த பாடகர், அவர் ஒரு சிறந்த நடிகர், பள்ளி ஆண்டு விழாவுக்கு நாடங்களையும், பாடல்களையும் தயாரிக்கும் போது எனக்கு எப்போதும் சிறப்பான வேடங்களையும், வழிகாட்டுதலையும் தருவார். சிறுவர் மலர் கிறித்துவ ஆலயத்தின் உண்டியல் நிதியை எண்ணும் பணியில் இருந்து ஆசிரியர் வராத குழந்தை வகுப்புகளுக்கு என்னை அவர் அனுப்பியது வரையில் அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் இன்று வரையில் ஒரு வாழ்க்கை அனுபவமாகவும், நிறைவாகவும் இருக்கிறது.

Student%20in%20interaction%20with%20teacher%20about%20their%20lessons%20at%20class%20room-4

அவர் எனக்குக் கொடுத்த அந்த அன்பை பல வழிகளில் அவருக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறேன், பேச்சுப் போட்டிகளில் பரிசுகள், பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் என்று அவர் என்னை அழைத்துப் போகும் இடங்களில் எல்லாம் அவரை நான் பெருமைப்படுத்தி இருக்கிறேன். அவர் எங்கள் கூடவே வருவார், வேறு ஆசிரியர்களை அனுப்ப மாட்டார், எங்களுக்கு வழிகாட்டுவார், நாங்கள் பேசும் போது அவர் தானே கலந்து கொள்ளும் ஒரு சிறு குழந்தையைப் போலச் சைகைகள் காட்டுவார், தன்னுடைய முகங்களில் பல்வேறு கலவையான உணர்வுகளை அவர் வெளிப்படுத்துவார்.

ஆசிரியர்களுடனான எனது உறவு எப்போதும் ஒரு நீடித்த அன்போடு கூடிய தொடர்கதையாகவே இருக்கிறது, இல்ல விழாக்கள், வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை இன்னும் நான் ஒரு சில ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்கிறேன், தாத்தாவின் நண்பராய் இருந்து என்னுடைய குடல் வால் அறுவை சிகிச்சையின் போது கூடவே இருந்து கண்ணீர் வடித்த ஜோசப் சார், வீட்டு வேலைகளைச் செய்வதற்காகவே மாணவர்களைப் பயன்படுத்திக் கொண்ட பெயர் தெரியாத டீச்சர், காதுக்குள் வந்து ரகசியமாய் ட்யூஷனுக்கு அழைத்த சாலியா சார், வெள்ளைச் சட்டையும் கள்ள மனதுமாய் புரியாமல் கணிதம் நடத்திப் பின் புரிய வைக்க ட்யூஷனுக்கு அழைக்கும் அரசப்பன் ஐயா, பல்வேறு சமூகக் குற்றங்களை மாணவர்களுக்குப் பழக்கப்படுத்திய இன்னும் சில ஆசிரியர்கள் என்று பல ஆசிரியர்களை நாம் அனைவருமே கடந்து வந்திருக்கிறோம், ஆனாலும், சிலர் மட்டும் நம் மனதில் நீங்காத இடம் பெறுகிறார்கள். முத்துசாமி ஐயா, புஷ்பராஜ் சார், ஸ்டீபன் சாரைப் போல………

Students_Under_Tree

நமது சமூகத்தில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு நிறைவான பங்கும், மதிப்பும் இன்னும் இருக்கிறது, நாம் நம்முடைய ஆசிரியர்களை மிக விரைவில் மறந்து விடுகிறோம், நமக்குப் பாடம் எடுப்பது அவர்களின் கடமை என்றும், அந்தக் கடமை முடிந்ததும் நாம் அவர்களை மறந்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறோம், வெகு சில மாணவர்களைத் தவிர தங்களின் ஆசிரியர்களின் வாழ்நிலை குறித்த அக்கறை நம்மில் பலருக்குக் கிடையாது, ஒரு சடங்கைப் போல ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, அடுத்த முறை ஆசிரியர் தினத்தை என்னுடைய ஒரு பழைய ஆசிரியரின் இல்லத்தில் கொண்டாடுவது என்று முடிவு செய்திருக்கிறேன், நாம் அவர்களைத் தேடித் பிடித்தாவது நமது அன்பையும், நன்றியையும் வழங்கி விட வேண்டும், நமது தமிழ்ச் சமூகம் அறிவிலும், பண்பிலும் தழைத்து ஓங்கிச் சிறப்பதற்கு ஆசிரியர்களை சிறப்பிப்பதும், அவர்களைப் போற்றுவதும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது என்பதை நமது இளைய தலைமுறை உணர்ந்தாக வேண்டும். நடிகர்களின் பதாகைகளுக்குப் பாலூற்றிக் கொண்டும், கிரிக்கெட் மட்டைகளில் எல்லா விளையாட்டுக்களையும் தொலைத்துக் கொண்டும் இன்னும் திரிகிற நமது சமூகத்து இளைஞர்களின் மனநிலையை மாற்றி அமைக்கிற தேவையும் கூட அது……..

************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: