கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 13, 2010

பழையூர்ப்பட்டியில் இருந்து புதுடில்லி வரை……..

Cheran9

மூன்று நாட்கள் விடுமுறையில் அனிச்சையாக நிகழ்ந்த ஒரு அற்புதம் "தவமாய்த் தவமிருந்து" திரைப்படத்தை இன்னும் ஒரு முறை பார்க்கக் கிடைத்த வாய்ப்பு என்று சொல்லலாம்,மாற்றுச் செய்திகளுக்காக மட்டுமே காண்கிற ஜெயா தொலைக்காட்சியில் வினாயகர் சதுர்த்தி சிறப்புப் படமாக இருக்க வேண்டும்,  சேரனின் திரைப்படங்கள், மழை பெய்யும் முன்னதாக நமது ஊரின் மரத்தடியில் நாசியைத் துளைக்கும் மண் வாசனையை அள்ளித் தெளிப்பது மாதிரியான ஒரு வல்லமை பெற்றவை, சேரன் நமது சமூகத்தின் கலைஞர்களில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வண்ணமயமான இயக்குனர். சேரனுடைய வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த ஒரு தொடர் விகடனில் நீண்ட நாட்களுக்கு முன்பு வெளியானது, அது  "டூரிங் டாக்கீஸ்" என்ற பெயரில் விகடன் பிரசுரத்தால் நூலாகவும் வெளிவந்திருக்கிறது, ஒரு திரைப்பட இயக்குனராக அவர் வெற்றி பெறுவதற்குக் கடந்த வந்த பாதை மிகக் கடினமானது மட்டுமில்லை, இன்றைய திரை உலகில் வெற்றி பெறுவதற்குப் போராடும் இளம் இயக்குனர்கள் அனைவருக்கும் அது ஒரு அரிச்சுவடி என்று சொல்லும் அளவுக்கு அதில் பாடங்கள் இருக்கிறது. சேரன் நமது மண்ணின் கலைக் கூறுகளைப்  படம் பிடித்த இயக்குனர், அவரது வாழ்க்கையில் ஒரு அன்றாட உழைக்கும் வர்க்கத்துத்  தமிழ் இளைஞனின் நிகழ்வுகள் அனைத்தும் இருக்கிறது, பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கத் துடிக்கும் ஒரு தகப்பனின் கைகளில் இழையோடியிருக்கும் உழைப்பின் சுவடுகள் அவரது கேமராவுக்குள் இருந்து குதித்து ஓடி வரும், உழைப்பை, இழப்பை, வறுமையை, வண்ணங்களை எல்லாம் திரையில் வார்த்தெடுக்கும் கலை தெரிந்த தமிழ் மண்ணின் சமகால இயக்குனர்கள் வரிசையில் சேரனுக்கு நான் முதலிடம் கொடுப்பேன், இவை எல்லாவற்றையும் விட சேரனின் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த ஒரே நிகழ்வு என்ன தெரியுமா?

இந்திய அரசின் மிகச்சிறந்த பொழுது போக்குத் திரைப்படத்துக்கான விருதை அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவருடைய "ஆட்டோகிராப்" திரைப்படத்துக்கு வழங்கிய போது அதைப் பெற்றுக் கொள்வதற்காக தனது தந்தையை அனுப்பி வைத்தார் அவர். அத்தகைய ஒரு பெருமை மிகுந்த விழாவில் தான் கலந்து கொள்ளாமல் அந்தப் பெருமை முழுதையும் தனது தந்தைக்கு வழங்கிய அந்த மனிதனின் பெற்றோர் மீதான அன்பை எந்த அடைமொழிகளுக்குள்ளும், பாராட்டுரைகளுக்குள்ளும் அடக்கி விட முடியாது. அது நமது மண்ணில் நாம் வழிய விட்டிருக்கும் அன்பின் துளிகளின் மிச்சம், நமது மண்ணில் பிள்ளைகளை வளர்க்கப் பெற்றோர் படும் துயரங்களுக்கு ஒரு விருது. அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சேரனின் தந்தை பாண்டியனுக்கு வழங்கப்பட்ட அந்த உயரிய இருக்கை, மதுரைப் பக்கத்தில் செம்மண் புழுதிகளில் புரண்டு உழைக்கும் எல்லாத் தகப்பனுக்கும் கொடுக்கப்பட்ட இருக்கையாகவே நான் கருதினேன்.

34991_1409950323105_1062885960_31031365_6270138_n

தமிழ்த் திரைப்படங்களின் இயக்குனர்களை பள்ளிக் காலத்தில் இருந்தே நான் நுட்பமாகக் கவனித்து வருகிறேன், பலர் சொல்லக் கேட்பதையும், நூல்களில் வரும் விமர்சனங்களையும் தாண்டி சில திரைப்படங்களும் அதன் இயக்குனர்களும் மனதில் தங்கி இருப்பார்கள், என்னுடைய இந்தத் திரைப்படக் கண்காணித்தலில் முதன் முதலில் உள்நுழைந்த இயக்குனர் மணிரத்னம், அவருடைய கதை சொல்லும் பாணியும், தொழில் நுட்பத்தை அவர் கையாளும் திறனும் அவருடைய அடிப்படைக் கருத்தியலை வீழ்த்தி என்னை ஆட்சி செய்து கொண்டிருந்தன, மிகுந்த ஆர்வத்தோடும், ஒன்றுதலோடும் அப்படிப் பார்த்த திரைப்படங்களின் வரிசையில் "நாயகன்" இன்றும் முதல் இடத்தில் இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகில் தொழில் நுட்பத்தின் அனைத்துப் பயன்களையும் தனது வெற்றிக்குப் பயன்படுத்திய ஒரு இயக்குனர் என்றால் அது மணிரத்னமாகத் இருக்க வேண்டும், காலப்போக்கில் அவருடைய உள்ளீடுகள், கருத்தியல் தெளிப்புகள் மற்றும் சமூக வாழ்நிலை குறித்த காட்சிப் படுத்தல்கள் எல்லாம் சேர்ந்து அவர் மீதான ஒரு எதிர்மறை உணர்வைத் தோற்றுவித்தது, அவரது மேட்டுக் குடிச்சிந்தனைகளும், மதம் குறித்த குழப்பங்களும் அவரது கலை நுணுக்கத்தை வீழ்த்தி அவருக்கு இருந்த இடத்தை நீக்கி விட்டிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் சேரனின் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் "பாரதி கண்ணம்மா". சாதி குறித்த சமூகத்தின் படிநிலைகளையும், அது காதலில் உருவாக்கும் தாக்கத்தையும் அத்தனை துணிச்சலாக ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் சொல்லி இருப்பதே அதன் தனிச்சிறப்பாக இருந்தாலும் பல்வேறு வணிகச் சமரசங்களுக்காக தனது முழுமையான உள்ளீடுகளை அவரால் அந்தத் திரைப்படத்தில் வழங்கி இருக்க முடியவில்லை, ஒரு பண்ணை வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், தேவர் சமூகத்துப் பண்ணையாரின் மகளுக்கும் இடையில் மலரும் காதலையும், அதன் உளச் சிக்கல்களையும் தனது முதல் படத்தில் கையாண்டு வெற்றி பெறுவது என்பது தமிழ்த் திரைச் சூழலில் ஒரு அதிசயம். தன்னுடைய அயராத உழைப்பாலும், வெற்றியை நோக்கிய வெறியாலும் சேரன் அதை நிகழ்த்திக் காட்டினார். வணிக ரீதியாகவும் இது ஒரு வெற்றிப் படமாக மாறியது.நீண்ட காலத்துக்குப் பிறகு இயக்குனர் ஒருவரின் பெயரை நினைவு வைத்துக் கொள்ளும் அளவு பார்வையாளர்களிடத்தில் அந்தத் திரைப்படம் ஒரு அளப்பரிய தாக்கம் விளைவித்திருந்தது. அதில் நானும் ஒருவன்.

37745_1427514482198_1062885960_31072289_5391855_n

அந்தத் தாக்கத்தின் தொடர்ச்சியாக அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "பொற்காலம்", தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இந்தத் திரைப்படத்தின் பாடலான "தஞ்சாவூரு மண்ணு எடுத்து" வின் வெற்றியே மண்ணோடு கலந்து கிடந்த தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கையாய் வெளியாகி இருந்தது, மாற்றுத் திறனாளிகளின் உலகம், அவர்களின் ஆசாபாசங்கள், ஒரு குடும்பத்தில் அவர்களின் நிலை என்று கொஞ்சம் கலந்து கட்டிய அந்தத் திரைப்படம் எதையோ பறிகொடுத்து விட்டு வெளியேறிய மாதிரி இருந்தது, முரளியின் அத்தனை வகையான நடிப்புத் திறனையும் சேரன் அந்தப் படத்தில் வெளிக் கொண்டு வந்திருப்பார். தமிழ்த் திரைப்படங்களில் நீண்ட நாளைக்குப் பிறகு ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும், அந்தச் செய்தி நம் சமூகத்துக்குப் பயனளிக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு இளம் இயக்குனராக சேரன் என்னைப் போலவே எண்ணற்ற இளைஞர்களின் நெஞ்சில் நிலை கொண்டிருந்தார். உழைக்கும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் கனவுகள், பொருளாதார, சமூகக் காரணிகள் அவர்களின் வாழ்க்கையில் உருவாக்கும் தாக்கம் என்று நமது மண்ணுக்கான அடையாளங்களை அவருடைய திரைப்படங்களில் காண முடிந்தது, வேப்பங்குச்சி ஒடித்துக் கைகளில் பிடித்தவாறு நடக்கும் நம்ம ஊருத் தாத்தாக்கள், தண்டை அணிந்தபடி பொரிந்து தள்ளும் கிழவிகள் என்று மண்ணின் தடயங்களை அவர் தனது முதல் இரண்டு படங்களிலும் பதிவு செய்து இருந்தது மட்டுமன்றி ஏதோ ஒரு சமூகக் காரணியைக் கையாண்டு அதன் நேர்மறைப் பயன்களைப் பார்வையாளர்களை நோக்கி மிக எளிதாகத் தள்ளி விட்டிருந்தது அவர் மீதான மதிப்பை உயர்த்தியது மட்டுமன்றி, எனக்குள் இருந்த ரசிகனின் மனநிலையில் வேறு சிலருக்கு இருந்த இடங்கள் பறிக்கப்பட்டும், வெற்றிடங்கள் நிரப்பப்பட்டும் சேரனை அமர வைத்ததற்கு ஒரு முக்கியமான காரணியாயிற்று. இரண்டாம் திரைப்படமும் வணிக ரீதியில்  மிகப்பெரிய வெற்றி.

இரண்டு மிகப் பெரிய வெற்றிகளுக்குப் பிறகு அவர் தேர்வு செய்த கதைக்களம் அரசியலை நோக்கி இருந்தது கொஞ்சம் வியப்பானது தான், பெரும்பாலும் சமகால அரசியலை விமர்சனம் செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கவில்லை, மிகைப்படுத்தப்பட்ட அரசியல் வாதிகளின் தோற்றமும், உரையாடல்களும் பார்வையாளனிடத்தில் ஒரு கவர்ச்சியை உருவாக்குவதில்லை போலும், அன்றைய முதல்வராயிருந்த கருணாநிதியின் தோற்றத்தை எதிரொலிக்கும் கறுப்புக் கண்ணாடியும், சில உரையாடல்களும் அரசியல் மையங்களிடையே ஒரு சலசலப்பை உருவாக்கியது, முதல்வரோ அல்லது அரசியல்வாதியோ சமூகத்தின் பிறிதொரு வர்க்கம் போலச் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், அவரை உழைக்கும் மக்களின் நிகழ்காலச் சிக்கல்களை அறிய வைப்பதற்காகச் சில இளைஞர்கள் கடத்திக் கொண்டு போய் கிராமத்தில் அவர்கள் எதிர் கொள்கிற சிக்கல்களை அறிய வைக்க முயல்வதாக இருக்கும், பெரும்பாலான தமிழகத்தின் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தும், அவர்களில் ஒருவராக இருந்துமே இத்தகைய மாற்றத்தை அடைகிறார்கள் என்கிற உண்மையையும், அதற்கு மிக முக்கியமான காரணம் தேர்வு செய்யப்படுபவர்களை அவதாரங்கள் போலக் கருதும் நமது மந்தை மனப்பான்மை என்பதும் திரைப்படத்தில் சுட்டிக் காட்டப்படவில்லை. கடுமையான விமர்சனங்களுக்கு நடுவில் வெளியான "தேசிய கீதம்" பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, சில பாடல்களும், காட்சிகளும் பேசப்பட்டாலும் சேரனின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய முட்டுக் கட்டையாய் அமைந்து விட்ட இந்தத் திரைப்படம் சரியான நேரத்தில் அவருக்குக் கிடைத்த பாடமாக இருக்க வேண்டும், ஒரு வேளை இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றிருந்தால் வழக்கமான தமிழ்த் திரையுலகின் சரணாகதி மனப்போக்கும், வணிகக் குறிக்கோள்களும் சேரன் என்னும் கலைஞனை வேறு பாதையில் பயணிக்க வைத்திருக்குமோ என்னவோ?

38369_1428462945909_1062885960_31074324_4188356_n

"வெற்றிக் கொடிகட்டு" தெற்கத்தி இளைஞர்களின் வெளிநாட்டுக் கனவை உணர்வுப் பூர்வமாய் வெளிப்படுத்திய ஒரு திரைப்படம், தனது குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை, தனது அக்கா, தங்கையரின் திருமணத்தை, தனது தாய் தந்தையரின் கனவுகளை எல்லாம் சுமக்க நினைக்கிற தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வறுமையை இந்தப் படத்தில் ஒரு கல்வெட்டுப் போலவே செதுக்கி இருந்தார் சேரன், வெளிநாட்டுக் கனவுகளோடு மனநிலை பிரண்டு விடுகிற ஒரு கதாபாத்திரத்தில் சார்லியை நடிக்க வைத்து அதே மாதிரியான பிறழ்வுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற எண்ணற்ற மனிதர்களின் மனநிலையை ஒரு இயக்குனராக வெளிக் கொண்டு வந்திருப்பார்  சேரன், நிலங்களை இழந்த மக்களின் கண்ணீர், நில உடமைச் சமூகம் உண்டாக்கி இருக்கிற நிகழ்காலத்தின் தாக்கம் என்று நுண்ணிய பொருளாதாரச் சிக்கல்களை இந்தப் படத்தில் மிக எளிமையாகச் சொல்லி இருந்தார் சேரன். பெண்களின் வாழ்க்கையில் திருமணங்கள் உண்டாக்கும் பிளவுகள், வரதட்சணையால் அல்லல்படுகிற பெண்களின் வாழ்க்கை, அந்த வாழ்க்கையோடு கலந்திருக்கிற மெல்லிய உறவுகள், ஆடு, மாடுகள் என்று சமகாலச் சூழலில் இன்றைய கிராமங்களைக் கண் முன்னே நிறுத்திக் காட்டிய அந்தத் திரைப்படம் தமிழ் மக்களின் உள்ளத்தில் அவர்களது வாழ்க்கையைப் படம் பிடித்தது மாதிரியான ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. வணிக ரீதியிலும் வெற்றிக் கொடி கட்டிய இந்தத் திரைப்படம், வழக்கமான காதல், கதாநாயகத் தோற்றம் போன்றவற்றை அடியோடு வீழ்த்தி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழுத்தமாக நிலை நிறுத்தியது. தமிழ்த் திரை உலகின் ஒரு புதிய சிந்தனை மரபுகளை உருவாக்கிய திரைப்படங்களின் வரிசையில் இந்தப் படத்தை இன்றும் குறிப்பிடலாம்.

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் நமது ஊர்ப்புறங்களில், அந்த மாதிரியான ஒரு கனவை கதைக் களம் ஆக்கி அவர் இயக்கிய "பாண்டவர் பூமி" வழமையான காதலோடு சமூகத்தின் முகங்களை காட்சிப்படுத்தியது, இரண்டு மாறுபட்ட சமூகங்களின் கலவையாக அவர் வெளிக் கொண்டு வரும் காதல் பல்வேறு உளவியல் பரிமாணங்களை உணர்த்தி நிற்கும் ஒரு திரைப்படம். வழக்கம் போலவே தனது பாத்திரத் தேர்வுகளில் மிகுந்த கவனம் செலுத்தும் சேரன், சமூகத்தின் இரண்டு மாறுபட்ட கோணங்களைக் காட்ட விஜயகுமாரையும், ராஜ்கிரனையும் தேர்வு செய்து அவர்களிடம் இருந்து சமூக மனங்களின் துளிகளைச் சேகரித்து இருப்பார், நமது சமூகக் குடும்ப அமைப்பில் நிலவும் பெண்களின் அச்சு வடிவமாய் மனோரமாவை நடிக்க வைத்துப் பெண்களின் மனநிலையை  காட்சிப் படுத்தி இருக்கும் சேரன். தனது அம்மாச்சியை நினைத்துக் கொண்டாரோ என்னவோ??? மனோரமாவால் வளர்க்கப்படும் அந்தப் பசுமாடும் சேரனின் அம்மாச்சியால் வளர்க்கப்பட்ட அந்தப் பசுமாடும் ஒன்றாகவே எனக்குத் தெரிந்தது. பாண்டவர் பூமி சில வணிக வழியிலான சமரசங்களால் சேரன் என்கிற கலைஞனின் முழுமையான உள்ளீடுகளை வழங்கவில்லை. ஆயினும் வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது இந்தத் திரைப்படம். வெற்றி ஒரு கலைஞனின் சோதனை முயற்சிகளுக்குக் களம் அமைக்கும் தளமாக இருக்கிறது, வெற்றிகளால் கிடைக்கும் பொருளியல் மற்றும் உளவியல் எழுச்சி ஒரு கலைஞனை அவனது கனவுகளை நோக்கிச் செலுத்துகிறது, அப்படியான ஒரு வெற்றியாகத்தான் பாண்டவர் பூமியின் வெற்றியை நான் புரிந்து கொள்வேன்.

Cheran-0312

ஆம், பாண்டவர் பூமியின் வெற்றி சேரனை ஒரு மிகப்பெரிய முயற்சிக்குள் தள்ளியது, "ஆட்டோகிராப்" காதலின் முதிர்ச்சியை, காதல் ஊடாகப் பயணிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைப் பல்வேறு நுட்பமான உணர்வுகளோடு நம் கண் முன்னாள் நிறுத்தியது. பள்ளிப் பருவத்தில் இருந்து நிகழும் பாலினக் கவர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களை கண் முன்னாள் நடமாட விட்டார் சேரன், ஏறக்குறைய இந்தியத் திரைப்பட உலகையே தனது நுட்பமான கலை உணர்வாலும், மாறுபட்ட சிந்தனை வடிவங்களாலும் திரும்பிப் பார்க்க வைத்தார் சேரன், வழக்கமாக எல்லா இயக்குனர்களும் கையாளும் காதலைத் தான் சேரனும் எடுத்துக் கொண்டார், இருப்பினும் அதை அவர் வழங்கிய விதமும், மண் வாசனையோடு காட்சிப் படுத்தி இருந்த வழங்கு திறனும் ஆட்டோகிராப் இன் எல்லாக் காதல் வரிசையையும் உயர்த்திப் பிடித்தது. வழக்கமாக இந்தியத் திரைப்படங்களில் சொல்லப்படும் அலங்கரிக்கப்பட்ட காதலைத் தாண்டி முந்தைய காதலியின் வாழ்க்கைக்குள்ளும் நுழைந்து ஒரு எளிய உழைக்கும் மனிதனுக்கு வாழ்க்கைப்பட்டுத் தனது கனவுகளைப் புதைத்து விட்டு வாழும் எண்ணற்ற எமது மண்ணின் பெண்களின் உண்மை நிலையை அத்தனை அழுத்தமாகச் சொல்லி இருந்தார் சேரன். காதலோடு பயணிக்கும் கிராமங்கள், கிராமங்களின் இதயத்தோடு கலந்து கிடக்கும் மனிதர்கள், மனிதர்களில் அலைபாயும் உணர்வுகள், நட்பு, பகை, மொழி என்று எல்லா விதத்திலும் ஒரு சிறந்த பொழுது போக்குத் திரைப்படத்தை வழங்கி இருந்தார் சேரன். யானைகள் முற்றத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கேரளத்தின் உள்ளார்ந்த அழகை அத்தனை செழுமையோடு தமிழுக்கு அறிமுகம் செய்தவர் சேரனாகத்தான் இருக்க வேண்டும். அழகியலோடு காதலை அதன் பல்வேறு பரிமாணங்களை காட்சிப்படுத்திய அந்தத் திரைப்படம் சேரனைப் பெற்ற பாண்டியரின் கைகளில் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கைகளால் விருது வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. வணிக ரீதியாக ஆட்டோகிராப் இன்று வரையில் ஒரு வெற்றிப்படம் தான். இன்றும் ஊரகப் பகுதிகளில் மீள் திரையிடுதலில் வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது இந்தத் திரைப்படம்." இத்திரைப்படத்தின் பாடலான "ஒவ்வொரு பூக்களுமே" இன்று வரையில் பல பள்ளிகளில் ஒலிபரப்பப்படும் அளவுக்குப் புகழ் பெற்றது மட்டுமன்றி திரைப்படப் பாடல் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. இசைக்குயில் சித்ராவுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. பா.விஜய்க்கு சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றுக் கொடுத்தது.

இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து சேரன் இயக்கிய மூன்று திரைப்படங்களும் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். "தவமாய்த் தவமிருந்து" சமகாலத்தின் திரைப்படங்களில் நான் கண்டு ரசித்த அருமையான ஒரு திரைப்படம், நாயகனுக்குப் பிறகு ரசித்து ஒன்றிப் போய் பார்த்த பல்சுவைப் படங்களில் "தவமாய்த் தவமிருந்து" ஒரு உச்சகட்டத் திரைப்படம் என்று சொல்வேன், தமிழகக் கிராமப் புறங்களில் உழைத்து ஓடாய்த் தேய்ந்து தங்கள் பிள்ளைகளைக் கரை சேர்க்கிற ஒவ்வொரு தந்தைமாரின் கதை அது, ராஜ்கிரண் தனது பிள்ளைகளை மிதிவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு திருக்குறள் சொல்லித் தருகிற அந்த நுண்ணிய காட்சிகளில் ஒவ்வொரு தமிழகக் கிராமத்தின் கதையும் கொஞ்சம் ஒட்டிக் கிடந்தது. தாயின் வலியை மேலோட்டமாகச் சொல்லிய பல திரைப்படங்கள் நம்மிடத்தில் உண்டு, ஒரு தகப்பனின் பொருள் தேடும் உலகின் வலியை, பண்டிகைக் காலங்களில் தங்களைக் கரைத்து அவர்கள் மனைவி மக்களை மகிழ்ச்சிப் படுத்துகிற வெகு நுட்பமான வலியை ராஜ்கிரனின் வாழ்க்கையின் மூலமாக எளிமையாகவும், வலிமையாகவும் காட்சிப் படுத்தி இருந்தார் சேரன், இரவெல்லாம் திரைப்படச் சுவரொட்டிகளை ஒட்டி நள்ளிரவில் துணிகளை வாங்கிக் கொண்டு அதிகாலையில் வீடு திரும்பி தனது குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்ந்தபடி விழித்திருக்க முடியாமல் அவர் உறங்கும் காட்சியில் திரையரங்கில் இருந்த மாதிரியான உணர்வே இன்றி திரைக்குள் கிடந்தது உள்ளம். ஏனெனில் அது எமது மக்களின் வாழ்க்கை, எமது சமூகத்தின் அடையாளம், எனதும் உங்களுதுமான குடும்பங்களின் எதிரொளி. குடும்ப உறவுகளின் பிணைப்பு, திருமண வாழ்க்கை குடும்ப உறவுகளில் உண்டாக்கும் தாக்கம், பொறுப்பற்ற பிள்ளைகளால் குடும்பங்களில் நிகழும் சிக்கல்கள் என்று ஒரு குடும்பத்தின் அத்தனை உணர்ச்சிகளையும் திரையில் கொட்டி திரைப்படம் போன்ற ஒரு கலை மனித மனதில் உண்டாக்கும் தாக்கத்தை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து முடிப்பார் சேரன். சேரனின் படைப்புகளைப் பற்றிய ஆர்வத்தையும், அவரது நுண்மனத்தில் படிந்து கிடக்கும் அழகியல் உணர்ச்சிகளையும் எனக்குத் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது  "தவமாய்த் தவமிருந்து" திரைப்படம் தான். வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றியாக இல்லையென்றாலும் இந்தத் திரைப்படம் தோல்வி அடையாதது ஒரு மிகப்பெரிய நிறைவைக் கொடுத்தது. ஒரு தகப்பனின் கதையாகவே படம் பிடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தாயின் வலியைக் கொஞ்சம் குறைவாகக் காட்டியதற்குக் காரணம் படத்தின் நீளம் என்று நினைக்கிறேன். நமது சமூகத்தில் ஒரு தந்தைக்கு இணையாக ஒரு தாயும் உழைக்கிறாள், குடும்பத்தில் அவள் ஆற்றும் பணிகள், குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு, உணவுத் தேவைகள் போன்ற எல்லாவற்றிலும் விரவிக் கிடக்கிறது, அது இன்னும் உறுதியாக வெளிப்படாமல் போனது இந்தப் படத்தின் சிறிய குறை என்று நான் உரிமையோடு சொல்வேன்.

36458_1399705346987_1062885960_31007322_3856432_n

"மாயக்கண்ணாடி" ஒரு வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம் என்பதில் சேரன் இன்னும் உறுதியாய் இருக்கிறார், ஊரகப் பகுதியில் இருந்து வழக்கமான கனவுகளோடு நகரத்துக்கு வரும் ஒரு இளைஞன் மற்றும் அதே மாதிரியான கனவுகளோடு இருக்கும் இளம்பெண்ணைப் பற்றிய கதை, கதை சொல்லும் பாணியில் இருந்த அவரது முந்தைய படங்களின் சாயலை நினைவு படுத்தியதே இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறாததற்குக் காரணம் என்று நான் சொல்வேன், சேரன் என்கிற நடிகனும், சேரன் என்கிற இயக்குனரும் ஒருவரை ஒருவர் ஆட்கொள்ள நினைத்த இந்தத் திரைப்படத்தின் இடைவெளியில் சேரன் என்கிற இயக்குனர் தோற்றுப் போயிருந்தாரோ என்கிற ஐயமும் எனக்குள் இன்னும் இருக்கிறது, கதை நிகழும் களம் இன்றைய இயக்குனர்கள் யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு இடம் தான். திரைப்படம் முழுக்க இழையோடும் மெல்லிய சோகம், அவ்வப்போது பின்னணியில்  ஒலிக்கும் இளையராஜாவின் இசை என்று எத்தனையோ சாதகமான பண்புகள் இருந்தாலும் இந்தப் படத்தின் தோல்வி ஒரு இயக்குனராக சேரனை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கலாம், படத்தில் ஒற்றை நாயகத் தோற்றமும், சாகசங்களும் இல்லாமல் போனது கூட ஒருவேளை இந்தப் படத்தின் காரணமாக இருக்கலாம், இவை அனைத்திலும் மேலாக சேரனின் படத்தில் காணப்படும் ஒரு உயிர்ப்பு, மண்ணின் மக்களையும், அதன் வளத்தையும் அவர் காட்டும் எழுச்சியான காட்சிப்படுத்தலின் இழப்பினால் உண்டாகி இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. திரையில் காணப்படும் தனிமை ஒருவகையில் ரசிகனையும் ஆட்கொண்டு ஒரு விரக்தி மனநிலைக்குச் கொண்டு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

கடைசியாக சேரன் இயக்கத்தில் வெளியான பொக்கிஷம் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, கிளின்ட் ஈஸ்ட்வுட் (CLINT EASTWOOD) இயக்கிய "தி பிரிட்ஜஸ் ஒப் மாரிசன்" (THE BRIDGES OF MARRISON) என்ற திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று சொல்லப்படுகிற இந்தத் திரைப்படம் தமிழ்த் திரைப்பட உலகில் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியது  என்பது பற்றி எனக்குத் தெரியாது, இந்தத் திரைப்படத்தையும் பார்த்த பிறகே சேரனின் திரைப்படங்களைப் பற்றிய எனது பார்வை முழுமையாகும், அந்தத் திரைப்படத்தை விரைவில் பார்ப்பதற்கு முயற்சி செய்வேன்.

16941_1235032990281_1062885960_30642296_7308856_n

சமகாலத்தில் மிகுந்த தாக்கம் உண்டாக்கிய இயக்குனர்களின் வரிசையில் சேரனுக்கு இருக்கும் இடம் மகத்தானது, இந்த இடத்தை அவர் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் யாராலும் அடைந்து விட முடியாது, அவரிடம் இருந்து ஒரு உலகத்தரமான திரைப்படத்தை, அதாவது எமது மண்ணின் மணத்தையும், அதன் பண்புகளையும் உலகிற்குக் காட்டும் திரைப்படத்தை இன்னமும் எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம், கிடைக்கிற இடைவெளியில் அவர் ஒரு நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு விட்டார், கலையின் புதிய பரிமாணங்களும், தாகமும் இன்னமும் சேரன் என்கிற அந்தக் கலைஞனின் உள்ளத்தில் கனன்று கொண்டு தான் இருக்கும், அந்தக் கனலை கலை வடிவத்தின் நெருப்பாக மாற்றும் வல்லமை அவனை அங்கீகரிக்கும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு ரசிகனுக்கும் உரிய கடமை. சேரன் நமது மண்ணைப் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான கலைஞன். அந்தக் கலைஞனின் படைப்புக்களால் நமது திரையுலகம் ஒரு புதிய எழுச்சியுறட்டும்.

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: