கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 15, 2010

கடலில் நடக்கச் சில மந்திரங்கள்.

mayor_island

நீண்ட காலங்களுக்கு முன்பு வழிபடுதல் குறித்த கதை ஒன்றை எங்கோ படித்தேன், மிகச் சிறிய கதை அது, ஆனால், அது சொல்லி முடிக்கும் செய்தியோ மிகப் பெரியது, இங்கிலாந்துக்கு அருகே கடல் சூழ்ந்த தீவொன்றில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள், கிறித்துவம் வலிமையோடு வளர்ந்து பல்வேறு நாடுகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய காலம் அது, அந்தத் தீவு மக்கள் மதங்களைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாதவர்கள், நாகரீக உலகம் அவர்களின் காலடியைச் சென்று அடையாத காலம் அது, அவர்களின் வழிபாட்டு முறை தொன்மையானதும், வரம்புகள் அற்றதுமாய் இருக்கிறது, அதே காலத்தில் இங்கிலாந்தில் இருந்து சில கிறித்துவப் பாதிரியார்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தங்கள் மதம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள், அவர்களின் குழு இந்தப் பழங்குடித் தீவையும் வந்தடைகிறது, சில காலம் தங்கி இருந்து பாதிரிமார்கள் அந்த மக்களுக்கு வழிபடுதல் பற்றி வகுப்பு எடுக்கிறார்கள், மந்திரங்களை ஜெபிப்பது, கடவுளை வணங்குவது இவை எல்லாம் குறித்து சில வரையறைகளையும், விதிகளையும் அந்தப் பழங்குடி மக்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள், அந்தப் பழங்குடி மக்களும் மிகுந்த கீழ்ப்படிதலோடு பாதிரியார்கள் சொன்னவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். ஓரளவு மனநிறைவு எட்டிய பிறகு பாதிரியார்களின் குழு தங்கள் கப்பலில் ஏறிப் பயணம் செய்யத் தயாராகிறார்கள், பழங்குடி மக்கள் அவர்களுக்குப் பல அரிய பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை வழி அனுப்புகிறார்கள், கப்பல் கரையிலிருந்து கொஞ்சத் தொலைவு செல்லும் போது கப்பலின் மேல் தளத்தில் இருந்து ஒரு பாதிரியார் தீவை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அப்போது  நான்கைந்து உருவங்கள் கரையிலிருந்து கப்பலை நோக்கி ஓடி வருவதை அவர் கண்ணுற்றார். அந்த உருவங்கள் கடல் நீரில் தரையில் ஓடுவதைப் போலவே ஓடி வருவதைக் கண்டு அச்சமடைகிறார் அவர்.

கப்பலின் மாலுமியிடத்தில் தகவல் கொடுத்துப் பேய்களோ பிசாசுகளோ கப்பலை நோக்கி ஓடி வருவதாக அவர் சொன்னார். கப்பலை நிறுத்தி விட்டு அனைவரும் மேல் தளத்திற்கு வந்து பார்க்கிறார்கள், உருவங்கள் அருகே வரும் போது அந்தத் தீவின் பழங்குடி இளைஞர்கள் சிலரே அப்படி ஓடி வந்ததை அவர்கள் உணர்கிறார்கள், ஏதோ சில புரியாத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு அவர்கள் கடல் நீரின் மீது ஓடி வருகிறார்கள், கப்பலின் அருகே நின்று மேல்தளத்தில் இருக்கும் பாதிரிமார்களைப் பார்த்து " ஐயா, நீங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்தின் ஐந்தாம் பாகத்தை நாங்கள் மறந்து விட்டோம், எங்களில் யாருக்கும் அது நினைவில்லை, அதை ஒரு முறை கேட்டுத் தெரிந்து கொள்ளவே ஓடி வந்தோம்" என்று மிக அமைதியாகச் சொன்னார்கள். பாதிரியார்களுக்கு நடுக்கம் எடுக்கத் துவங்கியது. அவர்கள் அந்த இளைஞர்களிடம் கேட்டார்கள், " நீங்கள் எப்படிக் கடலின் மீது ஓடி வர முடிகிறது, கடல் நீரில் ஓரடி கூட எங்களால் எடுத்து வைக்க முடியாதே, நீங்கள் இத்தனை தூரம் ஓடி வந்திருக்கிறீர்களே?" என்று வியப்போடு கேட்டார்கள். அதற்கு அந்த இளைஞர்கள் சொன்னார்கள், "ஐயா, அது எங்கள் பழைய மந்திரத்தின் பயன்", அதை நாங்கள் உச்சரித்தால் எங்களால் கடலில் நடக்க முடியும்" என்று சொல்லிக் கண்ணை மூடிக் கொண்டு, காட்டுக் கூச்சலில் அந்த மந்திரத்தை உச்சரிக்கத் துவங்கினார்கள், தங்கள் புறச்சூழலை மறந்து அவர்கள் ஒரு புதிய உலகில் இருப்பது போல இருந்தார்கள், அவர்களால் வானத்தில் பறக்கவும், கடலில் நடக்கவும் முடியும் என்பது போல ஒரு நம்பிக்கையோடு இருந்த அவர்களின் கண்களில் ஒளி நிரம்பி இருந்தது. பாதிரியார்கள் கப்பலைத் திருப்பி அந்தத் தீவுக்கே வந்து வழிபடுதல் மற்றும் பிரார்த்தனை செய்தல் குறித்து அந்தப் பழங்குடி மக்களின் இடத்தில் பாடம் கற்றுக் கொண்டு திரும்பினார்கள்.

Walk on Water - The Red Sea

இந்தக் கதை ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதைதான், இருப்பினும் இந்தக் கதையின் பின்னால் வாழ்க்கையின் அரிய பாடம் ஒன்று ஒளிந்து கிடக்கிறது, ஈடுபாட்டுடனும், நம்பிக்கையுடனும் செய்யப்படும் எந்தச் செயலும் வேதங்களை ஓதுவதை விடவும், மந்திரங்களை ஜெபிப்பதை விடவும் வலிமை வாய்ந்தது. மனித மனதிலிருந்து தோன்றும் தன்னலமற்ற மற்ற உயிர்களின் மீதான அன்புக்கு எந்தக் கோவிலை விடவும் அதிக ஆற்றல் இருக்கிறது. எந்த மந்திரத்தை விடவும் அதிகப் பலன் இருக்கிறது.தன்னலமற்ற அன்போடு வருடிக் கொடுக்கிற எந்தக் கைகளும் தூய்மையானவை. அந்தக் கைகளின் கட்டுக்குள் காலம் அடங்கிப் போய் விடுகிறது. அன்னை தெரசாவின் கைகள் அப்படித்தான் தன்னைச் சுற்றி இருந்த உலகத்தை வருடிக் கொண்டே இருந்தன. ஒரு முறை அவர் தொழுநோயாளிகளுக்காகவும், அனாதைக் குழந்தைகளுக்காகவும் நிதி சேகரித்துக் கொண்டிருந்தார், கலகக் கும்பல் ஒன்று அவர் மீது மலத்தை அள்ளி வீசியது, அவர் முகத்தில் வழிந்த மலத்தைத் துடைத்தவாறே அவர்களிடத்தில் சொன்னார், " இது எனக்கு நீங்கள் வழங்கிய பரிசு, அந்தக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இதை நீங்கள் வழங்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், அவர்களுக்கு ஏதாவது தாருங்கள்" என்று கெஞ்சினார், கலகக் கும்பல் கண்ணீர் சிந்தி அன்னைக்கு அள்ளி வழங்கியது. இதுதான் அந்த அன்னையின் வெற்றி, அவர் தன்னலமற்ற அன்பை தன்னைச் சுற்றி இருப்பவர்களிடத்தில் அள்ளிக் கொடுத்தார்.

இப்படிப்பட்ட மனிதர்கள் நம்மைச் சுற்றி எப்போதும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தங்கள் அடையாளங்களைக் கோருவதில்லை, தாங்கள் இப்படிச் செய்து கொண்டிருப்பதாக அவர்கள் யாரிடத்திலும் சொல்லிக் கொள்வதில்லை, எனக்குத் தெரிந்த இரண்டு கால்களும் செயல் இழந்த நண்பன் ஒருவன் இருக்கிறான், அவன் பெயர் மஞ்சுநாத், அவன் மாதம் ஒருமுறை எங்கள் அலுவலகத்துக்கு வருவான். கொடுக்கப்படும் நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பான், அவனுடைய கண்களில், அவனுடைய செயல்பாடுகளில் அவனது இரண்டு கால்களும் செயல்படாத அடையாளத்தை ஒருநாளும் நான் கண்டதில்லை. இரண்டாவது தளத்தில் இருக்கும் எங்கள் அலுவலகத்தை அவன் அடைவதே ஒரு பெரிய சவால், அவன் அலுவலகத்தை அடையும் போது அவனுடைய அத்தனை தூய்மையான கால்களில் மாடிப்படிகளின் அழுக்கு முழுதும் அப்பிக் கிடக்கும், சில நேரங்களில் ஈரம், அது பல்கலைகழகங்களில் படித்த சில விலங்குகள் படிக்கட்டுகளில் காறித் துப்பிய எச்சிலாய் இருக்கலாம், அவன் ஒரு அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகத்தை நடத்துகிறான், அந்தக் காப்பகத்தில் ஏறக்குறைய நாற்பது குழந்தைகள் இருக்கிறார்கள், ஒரு நாளில் இப்படியாகப் பல படிக்கட்டுகளில் அவன் ஏறித்தான் அந்த யாருமற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கிறான், கல்வி அளிக்கிறான், கண்ணும் கருத்துமாய் அவர்களைக் காக்கிறான், ஒருபோதும் இந்த உலகம் குறித்த குறைகளையோ, தனது உடலில் இருக்கும் குறைகளையோ பற்றி அவன் பேசி நான் பார்த்ததில்லை, கர்நாடக மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்தும், சமூகம் குறித்தும், நேற்று நடந்த விளையாட்டுப் போட்டிகள் குறித்தும் அவன் உற்சாகமாகப் பேசுவான், தனது இலக்குகளை விரைவில் அடைய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாய் இருப்பான் அவன், இந்த மாதம் நன்கொடை வரவில் கொஞ்சம் தொய்வு இருப்பதாகச் சொல்லி விரைந்து செயலாற்றப் போவதாக அவன் சொல்வதைக் கேட்கும் போது எனது அன்றாடப் பணிகளில் எதுவும் இத்தனை சவால்கள் மிகுந்ததாக இருப்பதில்லை என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கும்.

Prayer

எந்த உடற்குறையும் இல்லாத மனிதர்கள் வாகனங்களில் பயணம் செய்து இப்படி அலுத்துக் கொள்வார்கள், " என்ன போக்குவரத்து சார், எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை" என்று அங்கலாய்ப்பார்கள். என்னுடைய அலுவலகத்தில் இருந்து அந்த நண்பனின் காப்பகம் ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவு இருக்கும், காப்பகத்தில் இருந்து முக்கியச் சாலைக்கு வர இருபது நிமிடங்கள் அவன் தவழ்ந்து தான் வர வேண்டும், பேருந்துகளில் முண்டி அடித்து அவனால் எப்படிப் பயணம் செய்ய முடிகிறது என்பதை என்னால் இன்று வரை புரிந்து கொள்ள முடிவதில்லை. இருப்பினும் அவன் நம்பிக்கையோடு நடக்கத் துவங்குகிறான், அவனது நம்பிக்கை ஏறத்தாழ முதல் கதையில் கடலில் நடந்து வந்த பழங்குடி இளைஞர்களின் வலிமையை விடவும் பல மடங்கு சிறந்தது. நம்முடைய வலிமையான உயர்ந்த கால்களின் உயரம் அத்தனை உயரங்களை அடைவது மிகக் கடினமானது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் வழிபடுதல் குறித்த அந்தக் கதை என் நினைவில் வந்து விடும், அவன் தவழ்ந்து செல்வதைப் பார்க்கும் போது கடலில் அவன் நடப்பது போலவும், வானத்தில் அவன் பறப்பது போலவும் எனக்குத் தோன்றும். அவன் இந்த உலகத்தை நம்புகிறான், அவனது கால்கள் மிகுந்த நம்பிக்கையோடு இந்த ஈரம் மிகுந்த பூமியின் மேல் படிந்திருக்கும் மண்ணை வருடுகின்றன. அவன் தவழ்ந்து செல்கிற பாதைகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவநம்பிக்கையை அல்லது தொய்வடைந்த மனநிலையை ஒருநாளும் அவனிடத்தில் நான் பார்த்ததில்லை, அவன் மிகுந்த உற்சாகமுடனும், நம்பிக்கையுடனும் கண்களில் ஒளி நிரப்பிக் கொண்டு உயரமான கட்டிடங்களின் மாடிப்படிகளைக் கடக்கிறான். அவனுடைய உடல் மொழிகள், யாரும் அவனை அவமதிக்க அனுமதிப்பதே இல்லை.

நம்பிக்கையும், ஈடுபாடும் உள்ளவர்களே இந்த உலகத்தில் வெற்றி பெறுகிறார்கள், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவற்றை ஈடுபாட்டோடும், நம்பிக்கையோடும் தொடர்ச்சியாய்   செய்யுங்கள், வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கான ஒரே வழி அதுதான். வெற்றி அடைவதற்கு வேறு எந்தக் குறுக்கு வழிகளும் கிடையாது, நம்பிக்கையோடு உழைப்பதைத் தவிர. மஞ்சுநாத் கர்நாடகத்தின் வேறு ஒரு நகரத்திலும் தனது காப்பகத்தின் கிளையைத் துவங்க வேண்டும் என்று விரும்புகிறான், அதற்கான கால இலக்காக அவன் இரண்டு ஆண்டுகளை வைத்திருக்கிறான், அந்த இலக்கை அவன் அதற்கு முன்னதாகவே அடைந்து விடுவான் என்று நான் நம்புகிறேன். அதற்கான மூலதனமாக நம்பிக்கை கலந்த புன்னகை அவனிடத்தில் கொட்டிக் கிடக்கிறது.

i-want-confidence

கடைசியாகக் கடந்த மாதம் அலுவலகத்துக்கு வரும் போது அடுத்த முறை காப்பகத்துக்கு வரும் போது என்னுடன் நீங்கள் சதுரங்கம் ஆட வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தான் மஞ்சுநாத், ஆகஸ்ட் மாதத்தில் தான் அவன் சதுரங்கத்தைக் கற்றுக் கொண்டான், ஒரு மாத கால இடைவெளியில் மற்றவர்களுக்குச் சவால் விட வேண்டும் என்கிற அவனது ஆழ்மனதில் இருக்கிற வேட்டைக்காரனை நான் உணர்ந்தேன்.

மஞ்சுநாத்தைப் போன்ற மனிதர்கள் பழங்குடி மனிதர்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்கள், ஈடுபாடும், நம்பிக்கையும் கலந்த அவர்களின் வழிபாடுகளை இந்தப் பேரண்டம் செவி சாய்த்துக் கேட்கிறது, நம்மில் பலர் மந்திரங்களை வெறும் சொற்களில் மட்டுமே அளவிடுகிறோம், மந்திரங்கள் மனித மனங்களில் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன, மனிதர்களே மந்திரங்களைக் கண்டறிந்த கடவுளர்கள். அறியாத புதிர்களையும், தெரியாத கற்பிதங்களையும் நோக்கிச் செய்யப்படும் நமது வழிபாடுகள் முதல் கதையின் பாதிரியார்களைப் போலவே கரையை நோக்கித் திரும்பி விடுகின்றன. நம்பிக்கையோடும், உள்ளார்ந்த அன்போடும், ஈடுபாட்டோடும் உலக உயிர்களை நோக்கிச் சொல்லப்படும் எந்தச் சொற்களும் அந்தப் பழங்குடி இளைஞர்களின் கூச்சல் மிகுந்த வழிபாட்டைப் போலவே கடலில் நடக்கவும், சிறகுகள் இன்றிப் பறக்கவும் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. இரண்டு கால்களும் செயலின்றி அத்தனை உயரமாய் நடக்கும் மஞ்சுநாத்தைப் போல……….

177337_1203551840_182097

*************

Advertisements

Responses

  1. அருமை அருமை. ஈடுபாட்டோடு செய்யும் எந்தச் செயலும் மந்திரங்களைவிட மகத்துவமானதுதான். நன்றி அறிவழகன். வாழ்த்துகள்.

  2. ithu thannambikkai pattriyatha arivu? appo namellam waste aaah? manjunath munnale?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: