இலக்கியத்தில் மரபுசார் இலக்கியம் என்று, வரையறுக்கப்பட்ட இலக்கணக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வகைகளைச் சொல்வார்கள்.தமிழ் இலக்கியத்தில் காணப்படும் செய்யுள் வடிவங்கள், அவற்றுக்கான இலக்கணம், சீர், தொடை, சந்தம், தளை, மாத்திரை அளவுகள் என்று அத்தகைய இலக்கியம் இன்றளவும் நம்மிடம் தங்கி இருக்கிறது, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நம் மொழியில் இத்தகைய மரபிலக்கியங்கள் உள்ளடங்கி இருப்பதில் வியப்பொன்றும் இல்லை, குறிப்பாகச் சங்கப் பாடல்களில் வருகிற தொகுப்பு நிகழ்வுகளில் ஒவ்வொன்றும் இன்றளவும் ஒரு திரைப்படம் எடுக்கத் தேவையான அளவு பொதிவுகளைச் சுமந்து கொண்டிருக்கிறது. மிக நுட்பமாகச் சொல்லப்படுகிற அகத்திணை உணர்வுகள் காதலை, ஊடலை, புணர்தலை இன்னும் மனித உணர்வுகள் அத்தனையும் அள்ளிக் கொட்டி விட்டு அடங்கி இருக்கிறது.
"உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின்றாகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஊட்ட"
"அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச
திருந்து இழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிறை வளை ஊருந் தோள் என
உரையோடு செல்லும் அன்பினர் பெறினே"
இது ஒரு அகநானூற்றுப் பாடல், இந்தப் பாடலை இயற்றியவர் "மதுரை மருதன் இளநாகனார்" இந்த ஒரு பாடலை வைத்துக் கொண்டு "டைட்டானிக்" மாதிரி ஒரு காதல் காவியம் படைத்து விடலாம், தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனைத் தலைவியின் மனநிலையில் இருந்து விவரிக்கிறான் கவிஞன், உலகமே அதிரும் அளவு ஒரு மிகப்பெரிய கப்பலில் தலைவியைப் பிரிந்து செல்கிறான் தலைவன், அவனுக்குக் கலங்கரை விளக்குகள் வழி காட்டுகின்றன, அவன் மனதில் பொருளீட்டும் எண்ணம் மிகுந்து கிடக்கிறது, கடல் நீரில் அலைகளைக் கிழித்து அவனுடைய அந்த "நாவாய்" எனப்படும் மிகப்பெரிய கப்பல் மிதந்து தொலைவில் செல்கிறது, இரவும், காற்றும் அரண்களை எல்லாம் தாண்டி இங்கே நினைவுகளாய் என்னிடத்தில் நுழைகிறது, நான் அணிந்திருக்கிற அணிகலன்கள் நழுவிக் கீழே விழுகிறது, எனது இந்த மன நிலையை என் தலைவனிடம் சொல்லக்கூடிய அன்பு நிறை மனிதர்கள் யாரும் என்னருகில் இல்லையே என்று வருந்திப் பாடுகிறாள் தலைவி. இந்தப் பாடல் சொல்கிற அக உணர்வுகள் பிரிவின் உணர்வுகளை ஒரு கப்பலைப் போலவும், இரவைப் போலவும், காற்றைப் போலவும் கடந்து போகிற எல்லாவற்றையும் போலவும் சொல்லித் தவிக்கிறது. சங்கத் தமிழைப் படிக்கும் போதெல்லாம் அதில் படிந்து கிடக்கிற மிக நுட்பமான மனித உணர்வுகளை நம்மால் அடையாளம் காண முடியும், உலகில் இத்தனை நுண்ணிய உணர்வுகளை வைத்துக் கொண்டு பாக்களை இயற்றியவன் தமிழனாகத்தான் இருப்பானோ என்று செருக்கு நிறைந்த ஐயம் என்னைப் போலவே பலருக்கு வந்திருக்கலாம்.
சங்கத் தமிழில் இன்னுமொரு பாடல் வருகிறது, அந்தப் பாடல் எனக்கு இப்போதைக்கு நினைவில் வரவில்லை, அந்தப் பாடலில் ஒரு தலைவனும் தலைவியும் ஊடல் கொள்வதற்கு என்று கானகத்தில் காத்திருக்கிறார்கள், தலைவன் ஒரு வேட்டுவன், அவன் வேட்டையாடிய களைப்பில் ஒரு மரத்தினடியில் உறங்கிக் கொண்டிருக்கிறான், தலைவி அவனைக் கண்டு கொள்கிறாள், அப்போது ஒரு புதரின் அருகே நெடு கொம்புகளைக் கொண்ட மான்கள் இரண்டு கலவியில் இருக்கிறது, காதலோடு கூடிக் கலந்து கிடக்கிற அந்த மான்களைப் பார்த்து விடுகிறாள் தலைவி, தலைவனை தனது காற்சலங்கை ஒலியால் எழுப்ப வேண்டும் என்று நினைக்கிற அந்தத் தலைவி ஒலி எழுப்ப இயலாதும், மறுத்துமாய் மறுகிக் கொண்டு அங்கேயே நிற்கிறாள், தலைவனின் உறக்கத்தில் உயர்ந்து நிற்கிற தோள்கள் தலைவிக்குக் கொடுக்கிற அந்த உணர்வுகள், மான்களின் ஊடலைக் கலைக்க விரும்பாத தலைவியின் மன நிலை என்று அத்தனை நுட்பமான உணர்வுக் குவியலின் இலக்கியத்தை எம் மொழியில் கண்டு திளைக்கிற போது தமிழின் மீதும், தமிழரின் மீதும் நாம் கொண்டிருக்கிற காதல் மனிதத்தின் வழி வழியாய் ஊறிக் கிடந்தது என்பதை அறிய முடிகிறது. மொழி வெறும் தொடர்பு கொள்ளும் கருவி என்று சொல்கிற நண்பர்களின் மீது ஒரு பரிதாபம் பரவியது.
மரபு இலக்கியங்கள் காலப்போக்கில் தனது சுவடுகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு விட்டுச் சென்றிருந்தாலும், இன்றைக்கு நாம் கண்டுணர்கிற அல்லது நுகர்கிற இலக்கியங்கள் யாவும் மரபு இலக்கியங்கள் இல்லை, அது கால ஓட்டத்தில் கருக்களை, நினைவுகளை மட்டும் நம்மிடையே விடுத்துச் சென்று விட்டது, இனி வருங்காலத்திலும் மரபிலக்கியங்களை நமது மொழி படைக்குமா அல்லது படைக்க இயலுமா? என்கிற கேள்வியை உங்கள் முன்னரே நான் விட்டு விடுகிறேன், தனித் தமிழில், அழகுச் சொற்களைக் கொண்டு கவிதைச் சரம் தொடுக்கிற இளையவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள், நான் கேட்கிற கேள்வி அத்தகைய இலக்கியத்தை வெகு மக்களின் இலக்கியமாகக் கொண்டு செல்ல இயலுமா என்பது?
அப்படி என்றால் வெகு மக்களின் இலக்கியம் என்பது என்ன என்பது குறித்த விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டியிருக்கிறது, மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கப்பட்டிருக்கிற ஒரு கூட்டு மரபு, நமக்கு இதழியல் வழியாகப் பல்வேறு நன்மைகளை வழங்கி இருந்தாலும், நமது வெகு மக்களின் இலக்கியத்தை மிகப்பெரும் பின்னடைவுக்குக் கொண்டு சென்றது, பல்வேறு கலாசார வெளிகளை உள்வாங்கிக் கொண்டு விட்ட நமது இலக்கியத்தின் கூறுகள் தீவிரமான இலக்கியத்தின் அடையாளங்களை அழித்து விட்டுக் கொஞ்ச காலம் மேற்கத்திய அரிதாரம் பூசிக் கொண்டிருந்தது, மேற்கத்திய சாயலில் சொல்லப்பட்ட கதைகள், அவற்றின் தாக்கங்களால் உண்டான பாத்திரங்கள் என்று நமது மண்ணின் இலக்கியத்தை கொஞ்ச காலம் நாம் இழக்க வேண்டியிருந்தது, இந்திய சமூகத்தின் மரபுகளை இலக்கிய நோக்கில் ஆய்வு செய்யும் போது ராஜஸ்தானில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதையையும், தமிழகத்தின் ஆண்டிபட்டியில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதையையும் பதிவு செய்யும் போது நிகழும் வேறுபாடுகள் புறக்கணிக்கப்பட்டன, நிலவியல் அமைப்புகள், கலாச்சார அடையாங்கள், உளவியல் சமன்பாடுகள் போன்றவற்றை கருத்தில் கொள்ளாது ஒரு பொதுவான இலக்கிய வடிவத்தை இந்திய தேசத்தின் நவீன எழுத்தாளர்கள் வடிக்க வேண்டிய தேவை அவர்களை அறியாமலேயே அவர்களின் மீது திணிக்கப்பட்டது, இப்படியான ஒரு சூழல் நிலவும் இலக்கிய உலகில் இன்றைய தமிழின் நவீன இலக்கியங்கள் என்று சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம், கவிதை இலக்கியம், கட்டுரை இலக்கியம், கடித இலக்கியம் என்று குறிப்பிட்டவற்றை நாம் வகைப் படுத்திக் கொள்ளலாம், இதன் ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு முன்னோடிகள் தொடர்ச்சியான மாற்றங்களை வழங்கிக் கொண்டே இருக்கப் பயணம் செய்து கொண்டிருக்கிறது நமது நவீன இலக்கியங்கள், மரபிலக்கியங்கள் ஏறக்குறைய வரலாற்று ஆவணங்களைப் போலவே காலத்தால் குறுக்கப்பட்டு விட்டன, மரபிலக்கியம் இவ்வாறு குறுகிப் போனதன் காரணம் பல்வேறு நுட்பமான ஆய்வுகளால் கண்டறியப்பட வேண்டியிருக்கிறது, பல்வேறு தொன்மையான சொற்களை நாம் இழந்து போனது ஒரு காரணம், சங்கப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட பல பாடலின் சொற்களை இன்று நம்மால் அடையாளம் காணுவதும் பொருள் அறிவதும் கடினமான ஒரு பணியாக இருக்கிறது, நமது ஊடகங்கள் அல்லது நம்மை ஆள்கிற ஊடகங்கள் மரபிலக்கியம் குறித்த பெரிதான அக்கறை கொண்டிருக்கவில்லை, கடந்த ஆண்டுகளில் தமிழின் மரபிலக்கிய வரிசைப் பாடல்களை அல்லது அது குறித்த குறிப்புகளை வெளியிட்ட வெகு மக்களால் வாசிக்கப்படுகிற வார இதழ்களையோ, அல்லது மாத இதழ்களையோ நான் அறியவில்லை. நாவாய் என்பது மிகப்பெரிய கப்பலைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறிச்சொல் என்று அறிகிறோம், நாவாயை நம்மால் பேருந்துக்குள் கொண்டு வர முடியுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான், இருந்தாலும் கேட்டு வைப்போம்.
இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் இத்தகைய மரபிலக்கியம் அல்லது வெகு மக்களின் இலக்கியம் குறித்த பரவலான விழிப்புணர்வை இரண்டு பகுதிகள் செய்து வருகிறது, ஒன்று சிற்றிதழ்கள், இன்னொன்று இணையப் பதிவுலகும் அதனுடன் இணைந்த சமூக இணையத் தளங்களும், சிற்றிதழ்களில் நிகழும் விவாதங்கள் நவீன இலக்கியம் மற்றும் மரபிலக்கியம் இரண்டையும் ஓரளவுக்கு நகர்த்திக் கொண்டே இருக்கிறது, மரபு இலக்கியம் குறித்த பல்வேறு விவாதங்களைத் துவக்கி வைத்துத் தொடர்ச்சியாக அவை குறித்துத் துறை சார்ந்த அறிஞர்களுடன் பகிர்தலை மேற்கொள்ளும் இன்றைய தமிழின் எழுத்தாளர்களில் “ஜெயமோகன்” மிக முக்கியமானவர். அவருடைய கருத்தியலோடு முரண்பாடுகள் காணப்பட்டால் கூட அவருடைய அயராத எழுத்தும், இலக்கியம் குறித்த பல்வேறு விவாதத் துவக்கப் புள்ளிகளும் பாராட்டப்பட வேண்டியவை. அவருடைய இத்தகைய துவக்கப் புள்ளிகளை கோலங்களாக மாற்ற வேண்டிய பெரும் பணி வளர்ந்து வருகிற இளைய தலைமுறை எழுத்தாளர்களிடம் இருந்து துவங்க வேண்டும். மேலை நாடுகளின் இலக்கியங்களைப் போற்றி அடி தொழுகிற பல்வேறு இலக்கியப் பெரும்புள்ளிகளை விடவும் மண்ணின் மரபிலக்கியம் குறித்துப் பேச விளைகிற ஜெயமோகனின் விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று என்னளவில் நான் கருதுகிறேன். பரப்பிலக்கியம் அல்லது பரப்பிசை என்கிற சொல்லாடலின் மூலம் தொடர்ந்து நிகழும் சொற்களின் பயன்பாட்டுக்கான விவாதம், தமிழ் இலக்கியச் சூழலில் நல்லதொரு துவக்கம் என்று நினைக்கிறேன், பரப்பிசை அல்லது பரப்பிலக்கியம் என்கிற சொல்லாடல் வெகு மக்களின் இசை அல்லது வெகு மக்களின் இலக்கியம் என்று அவரால் கையாளப்படுகிறது, “ராஜன் குறை” போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் இதைத் தவறானதாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள், இந்த விவாதத்தில் ஜெயமோகனின் பயன்பாடு தவறானதாகச் சுட்டிக் காட்டப்பட்டாலும் வெற்றி ஜெயமோகனுக்கும், கவிஞர் “பெருந்தேவி”க்கும் தான், ஏனெனில் இத்தகைய ஒரு விவாதத்தை ஜெயமோகன் மிக நேர்மையோடு அணுகிய விதம் இளைய தலைமுறைக்கு ஒரு முன்னோடியான செய்தி. இதனை விவாதப் பொருளாக்கிய வகையில் பெருந்தேவிக்கு ஒரு "ஓ" போடலாம்.
திராவிட இயக்கங்கள் நமது மரபிலக்கியத்தின் பல்வேறு நகர்வுகளுக்கு ஆற்றிய பணிகளை நாம் மறக்க இயலாது, ஆங்கில எதிர்ப்பில் அச்சிடப்பட்ட காகிதங்கள் தமிழ் இலக்கியச் சூழலில் பெரியாரின் வரவுக்குப் பின்னர் மிகப் பெரிய மாற்றம் கண்டன, தமிழின் மரபிலக்கியங்களை மீட்டுருவாக்கம் செய்து அவற்றை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், பெரியார், அண்ணா, இன்றைய தமிழக முதல்வர் ஆகியோருக்கு அளப்பரிய பங்கு இருக்கிறது, இவர்கள் தான் வாசிக்கும் பழக்கத்தை அல்லது எழுத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி தாங்கள் சார்ந்த இயக்கங்களை முன்னகர்த்தினார்கள், இவர்களின் இயக்கம் சார்ந்த அரசியல் நூல்கள் இலக்கிய உலகில் ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்கி பல புதிய எழுத்தாளர்களை நமக்கு அடையாளம் காட்டியது. இன்றைக்கு ஒரு புதிய தலைமுறை எழுச்சியோடு வாசிக்கும் பழக்கத்தை மீட்டுருவாக்கம் செய்ததில் திராவிட இயக்கங்களுக்கு இருக்கும் பங்கை யாராலும் மறுக்க முடியாது.
நமது மாண்டு போன கலைச் சொற்களை மீட்டெடுக்கவும், உயிர் இழந்தது போன்ற தோற்றம் காட்டும் மரபிலக்கியத்தைப் பொலிவூட்டவும், நமது மக்களின் வாழ்க்கையை, அவர்களின் வலியை, அவர்களின் உளவியல் சித்திரங்களை, அவர்களின் அழிந்து போன கலை வடிவங்களை, மரபுகளை இன்னும் பலவற்றை நாம் நமது மரபிலக்கியத்தின் வழியாகவே கண்டறிய வேண்டியிருக்கிறது, இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பல்வேறு பதிவுகள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் நமது மண்ணின் சுவடுகளைப் படம் பிடித்த எத்தனையோ இலக்கியவாதிகள் இருக்கிறார்கள், நமக்கான இலக்கியங்களை எழுதி அவற்றை அச்சுக்கு கொண்டு வர இயலாது தவிக்கும் எத்தனையோ இலக்கியவாதிகள் இருப்பதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டுமென்றால் நமது ஊடகங்களின் பக்கங்களை தீவிர இலக்கியத்தின் பக்கங்களால் நிரப்ப வேண்டும், தீவிர இலக்கியம் என்பது வேறொன்றுமில்லை, மொழியைப் பாதுகாக்கிற, மரபுச் சொற்களின் மேன்மையை உணர்த்துகிற, மனித மனங்களில் தாக்கங்களை, அதிர்வுகளை உண்டாக்குகிற இலக்கியம். அந்த அதிர்வுகள் நமது சமூகத்தை இன்னும் மேன்மையானதாய் மாற்றும் வல்லமை கொண்டவை, அந்த அதிர்வுகள் வலிந்து நமக்குத் தேவைப்படுகிற அதிர்வுகள்.
சரிப்பா, ஆனது எல்லாம் ஆச்சு, இந்தக் கட்டுரைக்கு நீ ஏன் இலக்கியமும், இசையும் என்று தலைப்பு வைத்தாய் என்று கேட்பீர்களே? இரண்டு நாட்களுக்கு முன்னதாக அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் (சிவப்பிந்தியர்களின்) இசையைக் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல் பிறந்தது, இணையத்தில் தேடித் பார்த்தேன், மரபிசைக் கலைஞரும் நண்பருமான “கோகுல் சாலவாடி” இடம் இருந்து சில குறிப்புகள் கிடைத்தன, தோழர் “அசோகன் மணிபாலன்” அவர்களின் குறிப்பொன்றில் கிடைத்தது இந்த இசை.
மனதை மயக்கும் ஒரு சிவப்பிந்தியத் தீவுப் பயணம் போல இருந்தது, அத்தனை எளிமையான ஆனால் முழுமையாக நம்மை ஆட்கொள்கிற இத்தகைய இசையை ஒரு முறை இளையராஜாவின் "ஏதோ தாகம், ஏதோ மோகம்" என்கிற பாடலில் உணர்ந்திருக்கிறேன் நான். பிறகு இன்னும் தேடித் தேடி சிவப்பிந்தியர்களின் குழல் இசையையும், அவர்களின் மரபு சார்ந்த தோல் கருவிகளின் இசையையும் கேட்ட போது என்னையும் அறியாமல் நமது மரபு இசை என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும் என்கிற உளைச்சலில் முடிந்து போனது அந்தப் பயணம், இசை குறித்த எந்த ஐயங்களையும் உடன் தோழர் கோகுல் சால்வாடி இடம் கேட்டு விடுவது என்னுடைய வழக்கம், இரவு பத்து மணிக்கு அழைத்து அவரைக் கேட்டால் அவரும் நமது மரபிசை என்று எவற்றைச் சொல்வது என்று குழம்பினார், பறை, கொம்பு, உறுமி, வில்லு, சலங்கை, நாதஸ்வரம், தவில், இவற்றில் ஏதாவது துவக்கங்கள் கிடைக்கலாம என்றார், யாழ் குறித்துக் கேட்டேன், யாழ் நமக்கே சொந்தமான இசைக்கருவி தான், ஆனால் யாழின் இசைக்குறிப்புகளை அதன் வாசிப்புத் திறனை நாம் யாரும் அறிந்திருக்கவில்லை, அந்தக் கருவியே அழிந்து போன ஒன்றாகி விட்டது, ஆனால் மேலை நாடுகள் சிலவற்றில் யாழை ஒத்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது என்று பல்வேறு தகவல்களை அவர் எனக்குச் சொன்னார், இன்றைய கர்நாடக இசையின் மூலம் தமிழிசையில் இருந்து எடுக்கப்பட்டது என்று தமிழ் இசையில் ஆய்வுகள் மேற்கொண்ட பலர் நிறுவி இருக்கிறார்கள், இருப்பினும், நமது மரபிசையின் வடிவங்களை நாம் எப்படி அடையாளம் காண்பது, மீட்டுருவாக்கம் செய்வது என்கிற கேள்வி எனக்குள் அப்படியே புதைந்து கிடக்கிறது. சிவப்பிந்தியர்களின் மரபிசை இணையத்தில் கிடைக்கிறது, தமிழர்களின் மரபிசை எங்கே கிடைக்கும்? இந்தக் கேள்விக்கான விடையை யாரேனும் இசை பற்றிய நுண்ணிய அறிவுள்ளவர்கள் சொன்னால் தான் உண்டு………
**************
Arumaiyaana isaiyai ketkka vaaippu kodutha thangalukku en nandri.. Siridhu neram en ullathin nun unarvugalellaam thudithu vittana indha isaiyin eerppil.. Kuzhal inidhu, Yaazh inidhu.. Marabu isaiyai inaiyathil kondu vara neengalum vazhi seiyungal Arivazhagan..
By: Shanmugham on செப்ரெம்பர் 29, 2010
at 10:42 பிப
அருமையான பதிவு…அண்மையில் எழுத்தாளர்/அரசியல் தலைவர் ரவிக்குமார் அவர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது…அவர் பாப் மார்லி பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளதாகவும் நமது மண்ணின் இசையை நாம் இன்னும் சரிவர உபயோகிக்கவில்லை என்றும் சொன்னார்…அவர் சொன்னதின் கருத்து உங்கள் வலைபதிவை படித்தபின்னரே என்னக்கு ஒழுங்காக விளங்கிற்று….இங்கு திறமைக்கு பஞ்சம் இல்லை…துணிந்து செயல்படுதலும் அதை உற்சாகபடுத்துதலும் குறைவு….உங்களை போன்ற சிந்தனையாளர்களும் கலைஞர்களும் இதை ஒருமுறை சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து இதற்காக குரல் கொடுக்கவேண்டும்…நாங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருப்போம்…
By: Daniel Peter on ஏப்ரல் 22, 2011
at 1:55 முப
தம்பி டேனியல் பீட்டர், ரவிகுமார் ஒரு நல்ல இலக்கியவாதி, அறிவுத் தளத்தின் மிக முக்கியமான மனிதர் , ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் நண்பர் என்பதை எல்லாம் ஒப்புக் கொள்கிறேன், ஆனால் ஒரு சிறு குறை, அவர் கொஞ்சம் மேலை நாடுகளின் மீது வியப்புக் குறி கொண்டவர், அவருக்கு மேலை இலக்கியங்கள், இசை குறித்த அறிவு அதிகம் என்பதை பல இடங்களில் உறுதி செய்து கொள்ளப் பெரும் பாடுபடுவார், அது ஒரு இந்திய நோய் என்று கருதுகிறேன், நமக்குத் தேவை நம் சொந்த மண்ணின் மனிதர்களைப் பற்றிய இசையும், இலக்கியமும். என்னால் ஆன பணிகளை நான் செய்து கொண்டுதானிருக்கிறேன், ஊர் கூடித் தேர் இழுத்தால் தேறும் நகரும், ஊரும் ஒன்று படும். உங்கள் அன்புக்கு நன்றி.
By: கை.அறிவழகன் on ஏப்ரல் 22, 2011
at 2:15 முப