கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 9, 2010

இலக்கிய விமர்சனம் குறித்து ஒரு விவாதம்.

critics

“ஏதாவது ரெண்டு புக் படிச்சிட்டு முகநூலிலும் வலைப்பூவிலும் ட்விட்டரிலும் ஒரு கணக்கை துவங்கினால் யார் வேணும்னாலும் யாரை வேணும்னாலும் விமர்ச்சிக்கிலாம்னு நினைக்கிறானுக… அவனவன் இலக்கியத்துக்காக வாழ்க்கைய தொலைச்சிட்டு லோல் படறான். இவனுக வேய்கானாமா ஒரு வேலைக்கு போய் சம்பாதிச்சிட்டு பொழுது போகமா இலக்கியம் பேசிட்டு கிண்டல்பண்றானுக”

இது வளரும் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணனின் ஆதங்கம், அவர் இப்படி ஒரு செய்தியைத் தனது "facebook" முகப்பில் பதிவு செய்த போது இலக்கியம் மற்றும் இலக்கிய விமர்சனம் குறித்த ஒரு நீண்ட விவாதமாய் அது எழுந்து நிற்கும் என்றே தோன்றியது. நினைத்ததைப் போலவே அது ஒரு நீண்ட விவாதக் களமாய் மாறியது. பல முன்னோடிகள், என்னைப் போன்ற கத்துக்குட்டிகள் என்று சுவையாகவும், கலவர பூமியாகவும் மாறியது இரண்டு நாட்கள். மற்ற நண்பர்களின் கருத்துக்களை எடுத்து என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்வது எந்த அளவுக்குச் சரியானது என்று தெரியவில்லை. ஆகவே, என்னுடைய கருத்துக்களை மட்டும் எடுத்துப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.

முழுமையான விவாதத்தையும் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியில் படித்து ரசிக்கலாம்:-

http://www.facebook.com/profile.php?id=1261057093#!/profile.php?id=100001070594231&v=wall&story_fbid=143480925696175&il=0

இனி வருபவை அந்த உரையாடலில் என்னுடைய பகுதிகள் மட்டும்.

"இவங்கே, அவங்கே எல்லாப் பயலும் வியாக்கியானமா விமர்சனம் பண்ணவும், நல்லது கெட்டதப் பேசவும் தானே தலைவா இலக்கியம், அப்ப வேலைக்குப் போறவன் எல்லாம் இலக்கியத்த விமர்சனம் பண்ணக் கூடாதுன்னு சொல்றீங்களா? வேலைக்குப் போறவன் எல்லாம் இலக்கியம் படிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?இல்ல பட்டினியாக் கெடந்து செத்தவன் படைக்குறது மட்டும்தாண்டா இலக்கியம்னு சொல்ல வர்றீங்களா? வாழ்க்கையத் தொலைக்கச் சொல்லி எந்த இலக்கியவாதியையும் இந்தச் சமூகம் வலியுறுத்தி வாட்டி எடுக்குதா என்ன??"

எல்லாத் தரப்பிலும் வெகு நுட்பமானவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் இலக்கியம் வெறும் மேட்டுக் குடி மனநிலை போலாகவே புரிந்து கொள்ளப்படும், இலக்கியம் நுட்பமானதும், மிகக் கடினமானதும் என்கிற தோற்றப்பாட்டில் எளிய மக்களிடம் இருந்தும், உழைக்கும் வர்க்கத்தின் இடம் இருந்தும் இலக்கியத்தைப் பிரித்துப் பார்க்கும் ஒரு சூழல் நிலவ நேரிடலாம், இலக்கியவாதியின் வலியும், அவனது பணயம் வைக்கப்பட்ட வாழ்க்கையின் கணங்களும் எனது சிற்றறிவிலும் எட்டி இருக்கிறது. நாள் முழுவதும் வயல் வெளிகளில் கிடந்து வேர்த்து விருவிருத்துத் தன மண்ணுக்கான உணவைப் படைக்கிறானே அந்த விவசாயியின் உழைப்பிலிருந்து இலக்கியவாதியின் உழைப்பும் தியாகமும் எந்த அளவில் உயர்ந்தது என்று யாரேனும் சொன்னால் அறிந்து கொள்ள முடியும்.

constructive_criticism

இலக்கியம், விமர்சனம், விவசாயம், அரசியல், கலை இவை எல்லாம் இவ்வுலகின் வண்ணங்களில் ஒன்று தான். இலக்கியவாதியும், சிந்தனாவாதிகளும் ஒன்றும் இறக்கை முளைத்தவர்கள் அல்ல, இலக்கியம் எழுதுகிற எந்தப் படைப்பாளிக்கும் உழைப்பாளியும், இன்னொரு உணவு படைப்பாளியும் இல்லையென்றால் கதை கந்தலாகி விடும்.

இலக்கியம், விமர்சனம் போன்ற துறைகளை வெகு மக்களிடம் பிரிக்கவும், இலக்கியம் ஏதோ மாய மந்திரம் என்பது போலவும் முன்னோடிகள் பேசுவது வியப்பாய் இருக்கிறது. அவர் அவருக்கான ஒரு உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது, தன்னைச் சுற்றி இயங்கும் புற உலகை வைத்து எல்லாவற்றையும் புரிந்து கொள்கிற, விமர்சிக்கிற மனிதர்கள் இந்த உலகம் எங்கும் நிரம்பி இருக்கிறார்கள், எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் இலக்கியத்தைப் புரிந்து கொண்டு, படைப்பாளிகளின் மன நிலைக்கேற்ப விமர்சனங்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு வகையில் அறிவீனமானது, இலக்கியம் குறித்த புரிதல் என்பது அவனவன் மனநிலையைச் சார்ந்தே இயங்குகிறது.

இலக்கியம், குறித்த புரிதலும், இலக்கியம் குறித்த அறிவும் மட்டுமே இணையத்தில் இயங்க வேண்டும் என்றால் கணினித்துறை காலப்போக்கில் அழிந்து போய், எல்லோரும் ஓலைச்சுவடி கிறுக்க வேண்டியது தான். இலக்கியவாதிகளை விமர்சனம் செய்பவர்கள், இலக்கியத்தை விமர்சனம் செய்பவர்கள் பலர் இலக்கியம் குறித்த தெளிவான பார்வை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், அவர்களை இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் வழிக்குக் கொண்டு வர வேண்டும், கருத்துலகின் வீரியமின்மை காரணமாகவே இத்தகைய இடைவெளி இணையத்தில் நிரம்பி இருக்கிறது, அதை நிரப்புங்கள், வேர்களை விட்டு விட்டு விழுதுகளை வெட்டிக் கொண்டிருந்தால் விஷக் கனிகளைத் தரும் விருட்சங்களை அழித்து விட முடியுமா என்ன?

இணையம் என்றில்லை, எந்த ஒரு ஊடக வெளியிலும் பல்வேறு கருத்தியல்கள் மோதிக் கொள்வதும், பலரது பார்வை வேறுபடுவதும் நிகழ்கிறது, ஒரு சமூக இணையத் தளத்தில் இலக்கியத்தை ஒருவன் விமர்சனம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அவனுக்கு இலக்கியம் பற்றி அறிவே இல்லை, வாசிப்பு இல்லை, சரி. ஆனால் அவன் ஏனோ ஒரு காரணத்துக்காக விமர்சனம் செய்து விட்டான். அதற்காக அவனை அயோக்கியன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் ஒரு கணிப்பொறி நிபுணனாய் இருப்பான், உங்களின், எனதின் மொழியை அவன் இணையத்தில் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்தலாம் என்கிற தொழில் நுட்ப அறிவுக்குச் சொந்தக்காரனாய் இருப்பான். ஆனாலும், இந்த சண்டைகளிலும், சர்ச்சைகளிலும் தானே நமது மொழி இன்னும் வாழ்ந்து கொண்டு இணையம் வரைக்கும் தனது எழுத்துருக்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

கண்டிப்பாக இலக்கியத்தை விமர்சனம் செய்வதற்குத் தகுதிகள் வேண்டும். குறிப்பிட்ட அளவு வாசிப்பும், இலக்கிய மனநிலையும் இல்லாதவர்களால் செய்யப்படுபவை இலக்கிய விமர்சனங்கள் இல்லை. ஆனால், இணையத்தில் இலக்கிய விமர்சனம் செய்யும் எல்லோரையும் இந்த அடைப்புக்குள் கொண்டு வர முடியாது. அதுதான் இங்கே மையப் பொருள். என்னுடைய கோபம், வேலைக்குப் போய்க்கொண்டு பொருள் ஈட்டும் எவனும் இலக்கியம் குறித்த பரந்த அறிவற்றவன் என்கிற சுட்டலில் துவங்குகிறது.

இங்கே இணையத்தில் தங்களுடைய முகப்பில் இரண்டு மூன்று வரிகளில், அல்லது ஒரு சிறு குறிப்பில் இலக்கியத்தை அல்லது இலக்கியவாதியை விமர்சனம் செய்பவர்களை நீங்கள் இலக்கிய விமர்சனம் என்கிற பொருளில் எடுத்துக் கொள்வீர்களா? இலக்கிய விமர்சனத்தில் பல வகைகள் உண்டு, தன்னுடைய விமர்சனத்தைக் காதலிப்பவர்களால் எழுதப்படும் விமர்சனங்கள், மனநிலை பிறழ்ந்து, ஏதாவது ஒன்றை விமர்சனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொள்பவர்களின் விமர்சனங்கள், மையப் பொருளை நோக்கி விலகி தனி மனிதக் குறைபாடுகளை நோக்கி விமர்சனம் செய்யும் விமர்சனங்கள், ஒரு இலக்கியத்தை முன்னிறுத்த வேண்டும் அல்லது சந்தைப்படுத்த வேண்டும் என்று முடிவு கட்டிக்கொண்டு செய்யப்படும் விமர்சனங்கள், இவை தவிர சுய விமர்சனங்கள், குழு சார் விமர்சனங்கள், காழ்ப்பில் வளர்க்கப்படுகிற விமர்சனங்கள் என்று எல்லாவற்றையும் கடந்து, ஒரு துறையை அல்லது துறை சார்ந்த கருத்தியலை முன்னகர்த்த வேண்டும் என்றும் செய்யப்படுகிற விமர்சனங்களைத் தானே நீங்கள் உண்மையான விமர்சனம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும், போகிற வருகிற மனிதர்கள் எல்லாம் செய்யும் குப்பைகளை விமர்சனம் என்று படைப்பாளிகளே கருதிக் கொண்டு அவற்றுக்கு இன்னும் வலு சேர்ப்பது எந்த வகையில் துறை வளர்க்கும் செயலாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

criticism

ஒன்றை விமர்சனம் என்று சொல்ல வேண்டுமென்றால் அதற்கு, அதன் கருப்பொருள் குறித்த ஆழ்ந்த அறிவு, அந்தத் துறையின் வளர்ச்சி குறித்த அக்கறை, அந்தப் படைப்பாளியை மீண்டும் தன தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த படி நிலைக்குக் கொண்டு செல்கிற கண்டிப்பு, மொத்தமாகச் சொன்னால் ஒரு தாய்க்கும், தந்தைக்கும் தனது குழந்தையின் மீது இருக்கிற அன்பு மாதிரி தெளிந்த நீரோடையாய் அல்லவா இருக்க வேண்டும், குழந்தை ஒரு தவறு செய்கிறாள், அந்தக் குழந்தையை பெற்றோர் அடிக்கிறார்கள், ஏன் அடிக்கிறார்கள், அந்தக் குழந்தை அதே தவறை மீண்டும் செய்யக் கூடாது, அந்தத் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கண்டிப்பு. இப்படி விமர்சனம் என்பது ஒரு தனி இலக்கியமாக வளர்ந்து கிடக்கிறது, இடையில் யாரோ ஒருவன், துறை அறிவற்றவன், இலக்கியம் குறித்த ஆழ்ந்த அறிவற்றவன், வேறு ஏதோ ஒரு துறையைச் சார்ந்தவன், என்னவோ இரண்டு வரிகளில் கிறுக்கி விட்டுப் போய் விட்டான், அதை விமர்சனம் என்று சொல்லி, விமர்சனத்தையும் கொச்சைப்படுத்தி, படைப்பு, இலக்கியம் என்று எல்லாவற்றையும் ஏன் பிடித்து இழுக்க வேண்டும்.

பொது மனிதன் அல்லது வேறு துறையில் இருக்கும் மனிதர்களின் அறிவுத் தளங்களை நோக்கியும், அவர்களின் வாழ்க்கையை நோக்கியும் தான் இலக்கியங்கள் முன் வைக்கப்படுகின்றன, அவனது வாழ்க்கையை மேம்படுத்தவும் சமூகத்தின் பயணத்தைத் தன் குறிப்பில் ஏற்றிக் கொள்ளவும், வேறொரு காலத்தில் அதன் சாரத்தை உள்ளீடு செய்யவும் தானே இலக்கியங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு விவசாயியின் பயிர்களைக் குறித்த நுட்பமான அறிவும், அவன் அதில் இருந்து கற்றுக் கொள்கிற பாடங்களும், நிலம் குறித்தும், பயிர் குறித்தும், மழை குறித்தும் அவன் படுகிற தவிப்புகளை விடவும் இலக்கியவாதியின் படைக்கும் மனநிலை அல்லது அதற்கான இழப்பு மேலானதா? கீழானதா? நான் இவை இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறேன்,

ஆதி மனிதனின் பொழுதுகளில் இருந்த மகிழ்ச்சியின், துயரங்களின், வாழ்க்கையின் பன்முகத்தை இலக்கியங்கள் இன்று வரை சுமந்து வந்து நம்மிடம் சேர்த்து இருக்கிறது. இலக்கியம் பற்றி அறியாதவனாக இருந்தாலும் அவன் வாசித்த பின்பு தானே அந்தக் குறிப்பிட்ட படைப்பைப் பற்றி விமர்சனம் செய்திருப்பான். அல்லது அந்தப் படைப்பாளியின் ஏதோ ஒரு வரி தனக்கு உவப்பளிக்காத காரணமும் இருக்கலாம் தானே, ஆகையால் ஒற்றை வரியில் அவன் விமர்சனம் செய்து விட்டுப் போய் விடுகிறான். அவர்களைக் கணக்கில் எடுத்தும், அல்லது அவர்களுக்குப் பதில் எழுதிக் கொண்டும் ஒரு படைப்பாளி இருக்க வேண்டும் என்றால் கடைசியில் அது குழாயடிச் சண்டை மாதிரித் தான் முடியும்.

எனக்கு நண்பர் இளங்கோவின் விவாதத் துவக்கப்புள்ளி அந்த மாதிரி ஒரு தோற்றத்தையோ அல்லது தோற்றப் பிழையையோ உண்டாக்கியது. அதைத் தான் நானும் சொன்னேன், இன்றைய இலக்கியவாதிகளில் பெரும்பான்மையோர் வாழ்க்கையை இழந்து ஏதோ ஒன்றைப் பணயம் வைத்து கடும் பொருளாதார நெருக்கடிகளில் வாழ்கிறார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், அதே வேளையில் இது இலக்கியவாதிக்கு மட்டுமான நிலை இல்லையே, நமது நாட்டின் விவசாயிகள் தொடர்ந்து பொருளியல் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டும், அரசுகளின் அலட்சியத்தை எதிர் கொண்டும் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள், அவர்களை விடவும் மேலான வாழ்க்கையை நமது இலக்கியவாதிகள் வாழவில்லையா? அல்லது நமது இலக்கிய வாதிகள் எல்லோருமே அப்படி இருக்கிறார்களா?

இளங்கோ, இதற்கான மூலத்தை விட்டு விட்டார், இளங்கோ இணையத்தில் இத்தகைய ஒரு போக்கு நிகழ்வதற்கான காரணம் என்ன என்பது குறித்துச் சொல்லி இருக்க வேண்டும், இன்றைய நமது இலக்கியங்கள் என்று முன் வைக்கப்படுபவை எல்லாம் நமது மக்களுக்கான இலக்கியங்கள் தானா? இன்றைய நவீன உலகின் கவிஞர்கள், பின் நவீனத்துவக் கவிஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் எத்தனை பேர் வெகுமக்களின் ஊடகங்களாகச் சித்தரிக்கப்படுகிற வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், ஊடகங்கள் அதில் இயங்கும் முதலாளிகளின் வர்க்கம் தனக்குச் சார்பானவற்றையும், தான் உள்ளீடு செய்ய நினைப்பவற்றையும் தானே நமக்கு இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கின்றன, இதழியலில், இலக்கிய உலகில் நிகழும் அரசியல் நமது இன்றைய முதலாளித்துவ அரசியலுக்கும், வருண, வர்க்க அரசியலுக்கும் கொஞ்சமும் குறைவானதா?

criticism 2

நாம் சினம் கொள்ள வேண்டியதும், களம் காண வேண்டியதும் இவர்களுக்கு எதிராகவும், இந்த அரசியலுக்கு எதிராகவும் தானே? இணையத்தில் யாரோ ஒரு நண்பன் ஏதோ அவனுடைய மனநிலைக்கு அப்போதைக்குத் தோன்றிய ஒன்றை எழுதிப் போடுவதை எல்லாம் எதற்காக இத்தனை சினத்தோடு எதிர் கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி.

நாம் முதலில் நமக்கான ஊடகங்களை உருவாக்க வேண்டும், அந்த ஊடகங்களில் இந்த மண்ணின் மைந்தர்களைப் பற்றிய பதிவுகளை ஏற்ற வேண்டும், அதன் மூலமாக இலக்கியத்துக்கான மதிப்பையும், உயர்வையும் உறுதி செய்ய வேண்டும், மாறாக இலக்கியம் எழுதும் அனைவரும் அல்லது படைப்பாளிகள் அனைவரும் பெரும் செல்வந்தர்களாக மாறி விட வேண்டும் என்றோ, படைப்பாளிகளை இந்தச் சமூகம் தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோ நாம் சொல்ல முடியாது. இலக்கியம் என்கிற துறையை அதன் உள்ளடக்கத்தை செப்பனிடும் அல்லது மேன்மைப்படுத்தும் பணியும் இலக்கியவாதிக்கும், படைப்பாளிக்கும் இருக்கிறது இளங்கோ, அது ஒரு கடமை. அது ஒரு நீரோட்டம். நான் சொல்வது அல்லது என்னுடைய கவலை நாம் பெரிய மீன்களை விட்டு சின்னச் சின்னத் தவளைகளை விரட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது.

நமது இலக்கிய உலகம் இன்னும் மேன்மையுற்று, இலக்கியவாதிகள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்காமல் இருக்கட்டும் என்பது தான் எனது ஆசையும், ஆனால், அதற்குக் காரணம் இணையப் பக்கங்களில் ஏதாவது ஒரு உள்நோக்கில் செய்யப்படும் அல்லது பொழுது போக்காகச் செய்யப்படும் விமர்சனங்கள் அல்ல. நாம் நோய்களின் காரணிகளைக் கண்டறிவோம், நோய்களை விரட்ட ஏராளமான மருந்துகள் இணையத்திலேயே நமக்குக் கிடைக்கிறது. அவற்றைத் தெளித்து கொசுக்களை விரட்டுவோம்.

உண்மையான மொழியார்வமும், இலக்கிய தாகமும் கொண்ட நண்பர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து கிடக்கிறார்கள் என்பது இதில் நான் புரிந்து கொண்ட உண்மை. நண்பர்கள் இளங்கோவன், அஜயன்… மற்றும் தம்பி கௌதமனின் இலக்கியப் பணிகள் மற்றும் விமர்சனங்கள் எப்போதும் ஒரு கூர்மையான இலக்கைத் தாக்கும் ஆயுதங்கள் மட்டுமன்றி விவாதத்தைச் சரியான வழியில் திருப்பி இருக்கிறது என்று நம்புகிறேன்.

தமிழ் இலக்கிய உலகம் குறித்த மிகப் பரந்த அறிவோ, இலக்கியத் திறனோ அதிகம் இல்லாவிடினும் உங்களோடு உரையாடுவதன் மூலமாகவும், அறிந்து கொள்வதன் மூலமாகவும் தமிழ் இலக்கியத்தின் போக்குகளை மற்றும் மாற்றங்களை நோக்கி ஒரு பயணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். இளங்கோவனின் சினம் என்பது ஒரு இலக்கியவாதியின் மீது போகிற போக்கில் அள்ளித் தெளிக்கப்படுகிற சேற்றை மையமாக வைத்து உருவானது என்பதில் எனக்கு ஐயம் இல்லை. இருப்பினும் அதில் படிந்து கிடக்கிற பொருள் ஆழமான மொழியார்வமும், இலக்கிய தாகமும் கொண்ட அவர் குறிப்பிடுகிற தகுதிகளைக் கொண்ட இணையத் தமிழ் நண்பர்கள் பலருக்கு வெகுவான உளைச்சலையும், ஒரு விதமான தேக்க நிலையையும் கொடுக்கும் என்கிற எண்ணமே என்னை இந்த விவாதத்தில் பங்கு கொள்ள வைத்தது.

1

இன்றைய தமிழின் இலக்கிய உலகம் வெகு சிறப்பான படைப்பாளிகளையும், தீவிர இலக்கிய மனநிலை கொண்ட மனிதர்களையும் உள்ளடக்கி இருக்கிறது, ஆயினும், வெகு மக்களுக்குச் சொல்லப்படுகிற அல்லது பொது வெளிக்கு எடுத்துச் செல்லப்படுகிற இலக்கியங்கள் என்பது நமது மக்களுக்குத் தொடர்பில்லாத பல உள்ளீடுகளைக் கொண்டிருக்கிறது என்பதை இலக்கிய உலகைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன். தமிழில் இலக்கியவாதிகள் அல்லது எந்த மொழியின் இலக்கியவாதிக்கும் பொருந்துகிற ஒரு பண்பு தன்னை ஒரு படைப்பாளி என்று அவன் எண்ணிக் கொள்கிற செருக்கு, அந்தச் செருக்கு குறிப்பிட்ட அளவில் படைப்பாளிக்கு இருக்கும் வரையில் அது அழகாகவே இருக்கிறது, அந்தப் பண்பு இலக்கிய உலகின் பண்பாக மாற்றம் அடைகிற புள்ளியில் இலக்கியம் மற்றும் விமர்சனம் என்கிற இரண்டும் பொது வெளியில் இருக்கிற கடைநிலை வாசகனை எரிச்சல் அடைய வைக்கின்றன.

விமர்சனம் மற்றும் இலக்கியத்தை ஆற்றுப்படுத்துகிற அள்ளித் தெளிக்கப்படும் கருத்துக்கள், பாராட்டுக்கள் அல்லது சேறு இலக்கியத்தின் முனையைப் பிடித்துத் தெரு முனைக்குள் இழுக்கிறது, படித்தவர்களும், இலக்கிய மேதைகளும் மேதாவிகளும் இலக்கியத்தின் தலைப்பை அறிந்து கொள்ள வேண்டும், அது குறித்து சிலாகிக்க வேண்டும் என்றும் விரும்புகிற இலக்கியவாதிகளின் உண்மையான முகத்தை அல்லது அந்த இலக்கியத்தின் சாரத்தை சமூகத்தின் கடைசி மனிதனுக்கும் வழங்குவதில் அத்தகைய அள்ளித் தெளிக்கப்படும் கருத்துக்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. தோழர் அஜயன் சொல்வதைப் போல இன்றைய தீவிர இலக்கியத்தின் படைப்பாளிகள் பலரை அறிமுகம் செய்தும், இலக்கியத்தை அறிவுலகத்தின் பார்வையில் வைக்கும் உயிர்மை மற்றும் காலச்சுவடு போன்ற இதழ்களின் மையப் பொருள் புறம் பேசுகிற, அல்லது சேறு அள்ளி வீசுகிற அரசியலை மிகத் தீவிரமாகச் செய்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆயினும், இந்த அரசியல் இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே அடையாளம் காணப்பட வேண்டும் என்பதை நான் முன்வைக்கிறேன். காலம் காலமாக இலக்கியவாதிகளிடத்தில் காணக் கிடைக்கிற அரசியல் தான் இது. தவிர இலக்கியத்தின் தூண்களாக இருக்கிற இதன் பங்காளர்கள் இப்படியான ஒரு அரசியலை நிகழ்த்தும் போது, போது வெளியில் இயங்குகிற, வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டு இருக்கிற பலர் படைப்பாளிகள் குறித்த தங்கள் கருத்துக்களை இப்படி போகிற போக்கில் அள்ளித் தெளிக்கும் போது ஒன்று அதனைப் புறக்கணிக்க அல்லது தாண்டிச் செல்கிற பண்பை மட்டுமே ஒரு நல்ல படைப்பாளி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இந்தச் சிறுவனின் எண்ணம்.

புறக்கணிப்பதும், தாண்டிச் செல்கிற பண்பும் ஒரு படைப்பாளியின் முதிர்ச்சியை வைத்தும் அவன் தனது படைப்புகளை அல்லது மொழியைக் காதலிக்கிற தன்மையை வைத்தும் அளவிடப்படுகிறது. அப்படியான முதிர்ச்சி இல்லாதவர்கள் அல்லது மிகுந்த வெறியோடு படைப்பை அல்லது மொழியைக் காதலிப்பவர்கள் அத்தகைய அள்ளித் தெளிப்பு விமர்சனங்களை எதிர் கொண்டு போரிடலாம், அவர்களோடு சண்டையிட்டு அது அப்படி இல்லை என்பதை உறுதி செய்ய விழையலாம். அதுவும் கூட இலக்கியத்தின் ஒரு பகுதிதான். அடிப்படை மனித நாகரீகமும், மொழி குறித்து எந்த ஒரு உயர் எண்ணமும் இல்லாதவர்களின் விமர்சனங்களை எதிர் கொள்ளும் தவற்றை மட்டும் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இன்னொன்று அந்த உயிர்மை மற்றும் காலச்சுவடு கட்டுரை, நீங்கள் சொல்வது சரிதான், அதாவது இலக்கிய உலகம் என்றில்லை, (நமது இலக்கிய உலகம் உயிர்மை மற்றும் காலச்சுவடுக்குள் அடங்கி விடுவதாக யாரும் கருதி என் மீது சினம் கொண்டு விட வேண்டாம்), எல்லா நிலைகளிலும் முதலாளித்துவம் பல்கிப் பெருகி ஒரு திறந்த சந்தையாக உலக இயக்கமும் அதன் இயங்கு ஆற்றல்களும் மாறிக் கொண்டு வரும் கால நிலைகளில் மனிதனின் உழைப்பு, மனிதனின் கலை, மனிதனின் இலக்கியம், மனிதனின் தோற்றம், மனிதனின் நிறம் இவை கூட நல்ல விலைக்கு விற்கப்படும் உலகில் தெரிந்தோ தெரியாமலோ, உணர்ந்தோ உணராமலோ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சந்தைப்படுத்தும் கலை அறியாத ஒரு நல்ல படைப்பாளியும் கூட இங்கு தோற்றுப் போனவனாகக் கருதப்படுகிறான், அதே நிலையில் தன்னைத் தானே சந்தைப் படுத்திக் கொள்கிற ஆற்றலும், திறனும் நிரம்பிய குறைந்த அளவு இலக்கியவாதியும் கூட மிகப் பெரிய வெற்றி அடைகிறான். இப்படியான சூழலை யார் உருவாக்குகிறார்கள் அல்லது இது எப்படி நிகழ்கிறது?

ஒரு இலக்கியத் தரம் அற்ற படைப்பு என்பது இத்தகைய சந்தைப்படுத்தலில் சிக்கி ஒரு பத்தாண்டுகள் இருக்கலாம், இன்னொரு பத்தாண்டுகள் இருக்கலாம், ஒரு நூற்றாண்டு முழுவதும் நிற்க இயலுமா என்றால் வரலாற்றில் இல்லை. இலக்கியத்தை அல்லது படைப்பாளியைக் காலம் தான் முடிவு செய்கிறது, விமர்சனங்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், சந்தைப்படுத்தல் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நல்ல இலக்கியம் அதன் கடைநிலை சமூக வாசகனை எட்டி எதிரொலிக்கும் போதே நிலை நிறுத்தப்படுகிறது. நமது மொழியின் இலக்கியங்களை நீங்கள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் சென்று திரும்பி ஒரு முன்னோக்கிய பயணம் செய்து பாருங்கள், பொறுக்கி எடுக்கப்பட்ட இருபது நூல்களை அவரவர் ரசனைக்கேற்ற படி தேர்வு செய்ய முடியும், இலக்கியத்தின் ஊர்தியாக இருக்கிற இதழியல் அல்லது பதிப்புத் துறை அரசியல் என்பது இந்திய அரசியலில் எல்லாவற்றையும் போலவே வருணம் மற்றும் வர்க்கம் இவற்றோடு தொடர்புடையதாகவும், அதன் தாக்கம் நிரம்பியதாகவும் தான் இருக்கிறது. அதிகாரம் அதிகார வர்க்கம் என்பது குறிப்பிட்ட எல்லை வரை மாற்று ஆற்றல்களால் எதிர்க்கப்பட்டாலும் எல்லையைக் கடந்தவுடன் எதிர்த்து வந்தவற்றோடு கை கோர்த்துக் கொண்டு விடுகிறது. ஆக பொது வெளியில் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை எடுத்துக் கொண்டு பயணிக்கும் ஊடகங்கள் இலக்கியத்தை அடையாளம் செய்ய முனைகிறது, அல்லது ஏற்கனவே முடிவு செய்யப்பட அடையாளங்களை வெளித் தள்ளுகிறது. இலக்கியத்தின் தன்மையை இத்தகைய அரசியல் முடிவு செய்கிறது.

david_ward_criticism-311x400

எது இலக்கியம் என்கிற ஒரு குழப்பமான மன நிலையிலேயே ஊடகங்களின் தாக்கம் அல்லது அதற்குள் நிகழும் அரசியல் ஒரு தீவிர இலக்கிய வாசிப்பாளனை வைத்திருக்கிறது, அவன் எல்லாத் துறைகளிலும் தேர்வு செய்யப் பழகியவன் அல்ல, தேர்வு செய்ய அழுத்தப்படுபவன், அவனைச் சுற்றிலும் கடை விரிக்கப்பட்டிருக்கிற சில தேர்வுகளில் ஒன்றை இவனும் நல்ல இலக்கியம் என்று தேர்வு செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவான். பதிப்பு அரசியலுக்கே வராத கையெழுத்துப் பிரதிகளில் கூட ஒரு நல்ல இலக்கியம் ஒளிந்து கிடக்கலாம், அல்லது காணாமல் போயிருக்கலாம். இத்தகைய குழப்ப நிலையில் இருந்து கொண்டே தான் இணையத்தில் சுற்றித் திரியும் சில அறிவு ஜீவிகள் இளங்கோ சொல்வது மாதிரியான இலக்கிய புழுதித் தூற்றலை சமூகத்தை நோக்கி எறிகிறார்கள்.

இவற்றை எதிர் கொள்ள வேண்டுமென்றால், இந்த மறை பொருள் அரசியல் கோட்பாடுகளை அதாவது பதிப்புலக அரசியலில் அதிகார வரம்புகளில் சிக்கிக் கொள்ளாத முன்மாதிரியான சில இலக்கிய அமைப்புகளை நாம் கட்டமைக்க வேண்டியிருக்கிறது, நமக்கான ஊடகங்களை நாமே உருவாக்க வேண்டியிருக்கிறது, எளிய மக்களின் வாழ்க்கையை எதிரொலிக்கிற, எளிய மக்களின் வலிமையான உரையாடலை இலக்கியமாக்க நமது படைப்பாளிகளும், இலக்கியவாதிகளும் முதலில் இதன் கட்டுக்குள் இருந்து வெளியேறி வர வேண்டியிருக்கிறது, இருப்பில் இருக்கும் குறைகளை அல்லது குற்றங்களுக்குத் தண்டனை தருவதற்கு முன்னாள் நமக்கான நீதிமன்றங்களை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும், குற்றம் நிகழாத சமூகத்தின் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தான் என்னுடைய வாதமாக நான் வைக்கிறேன்.

தீவிர இலக்கியம் குறித்த அக்கறை மிகுந்த தமிழ் இலக்கிய உலகைக் கட்டமைக்க இணையம் ஆற்றி இருக்கும், இணையத் தொழில் நுட்பம் ஆற்றி இருக்கும் பங்கையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வோம், தொடர்ச்சியாக இலக்கியம் நமது மக்களுக்கானதாக, நமது மக்களிடம் சென்று சேரும் ஒரு எளிய வழிமுறையாக இருக்கும் என்பதை நாம் உறுதி செய்வோம். விதைகளை ஒரு கடமையாக எண்ணி விதைத்துக் கொண்டே இருப்போம், பயிரின் பலன்களை அல்லது பழங்களை நமது அடுத்தடுத்த தலைமுறைகள் நுகர்ந்துணரட்டும்.

LiteratureBookApple

அதுவரை நமக்கான பணிகள் தொடர்ச்சியாக நமது மக்களுக்கானதாக எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டவையாக இருக்க வேண்டும், நமக்கான இலக்கியம் என்பது, நமக்கான மனிதர்களிடம் இருந்து துவங்கி, நமக்கான கருத்தியல், நமக்கான வாழ்க்கை, நமக்கான அரசியல், நமக்கான அரசுகள், நமக்கான அரசு முறைகள், நமக்கான பொருளாதாரம், நமக்கான சந்தை, நமக்கான உலகம் என்று நகரத் துவங்குகிறது, இந்த நகர்வு காலத்தின் கைகளில் நமக்கான இலக்கியம் என்ன என்பதை முடிவு செய்து விட்டு மீண்டும் அதன் வழியில் பயணிக்கத் துவங்குகிறது. மேகங்கள் சூழ்ந்த முழு நிலவை இரவு மெல்ல வெளியே தள்ளிக் கொண்டு வரும் அழகைப் போலவே ஒரு நல்ல இலக்கியம் அல்லது படைப்பாளி காலத்தால் கண்டு கொள்ளப்படுகிறான். காலம், சுவடு, உயிர், மெய் என எல்லாம் அப்போது வெறும் காகிதங்களா அல்லது இலக்கிய ஊடகங்களா என்பதை நாம் அறிந்து கொள்ளலாம், அல்லது நமது பிள்ளைகள் அறிந்து கொள்வார்கள்.

********

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: