கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 15, 2010

நாகரீகத்தின் கல்லறைகள்.

GraveyardLightColour

அலுவலகம் செல்லும் வழக்கமான ஒரு காலை தான் அது, பெங்களூர் மாநகரின் இரைச்சல் மிகுந்த சாலைகளைக் கடந்து செல்லும் வழியில் திடீரென்று ஒரு அமைதியைக் கண்ணுறும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்கும், செல்லும் வழியில் இருக்கிறது அந்தக் கல்லறைத் தோட்டங்களுக்கு இடையிலான சாலை, அந்தச் சாலையில் எப்போதும் ஒரு இனம் புரியாத அமைதி வழிந்து ஓடிக் கொண்டிருக்கும், சுற்றிலும் மரங்கள், பறவைகளின் ஒலி, குறைவான மனித நடமாட்டம் என்று ஒரு நகரத்துக்கு உண்டான எந்தப் பண்புகளும் அந்தச் சாலைக்குள் பொருந்தி வராது, ஒரு வயதான அம்மாவும்,இரண்டு இளம்பெண்களும் கைகளில் மலர்க் கொத்துக்களோடு உயரமான அந்தக் கல்லறைத் தோட்டத்தின் நுழைவாயிலில் தென்படுகிறார்கள், இறந்து போன தங்கள் உறவினர் யாருக்கோ அவர்கள் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார்கள், அந்தக் காட்சி ஒரு கணம் எனது ஊர்தியின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் போலிருந்தது, அவர்கள் இறந்து போன ஒரு மனிதனின் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள், அந்த மனிதன் அவர்களுக்குள் உண்டாக்கி இருந்த தாக்கமும், விளைவும் வேறு ஒருவரால் அறிந்து கொள்ள இயலாத உணர்வு. அவர்களுக்கான அஞ்சலியை வேறொருவர் செய்ய முடியாது, கீழிறங்கி வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டுக் கொஞ்சம் இடைவெளி விட்டு அவர்களைத் தொடர்கிறேன் நான், தொலைவில் ஊர்கூடி ஒருநாள் அவர்கள் புதைத்த மனிதனின் நினைவுகளை ஒரு கருப்பு நிறப் பளிங்குக் கல் ஏந்தியபடி நிற்கிறது, அவர்கள் முழங்காலிட்டு அந்தக் கல்லறையின் முன்பாக அமர்ந்து மலர்களை மென்மையாக வைக்கிறார்கள், இறந்த மனிதனின் உணர்வுகளுக்கும், அவன் உயிரோடு இருந்த போது பகிர்ந்த அன்புக்குமான அடையாளம் அந்த மென்மை, அந்த மூதாட்டியின் கண்களில் நீர் பெருகி இருக்கிறது, ஒரு கணத்தில் அவர் குலுங்கி அழத் துவங்குகிறார், அவரது தோள்களை ஒட்டியபடி இளம்பெண்களும், தொலைவில் இருந்து நானும்  அந்தத் துயரத்தில் பங்கு பெறுகிறோம், அந்த மனிதரைப் பற்றிய எந்தக் குறிப்பும் எனக்குத் தெரியாது, ஆயினும், அந்த இறந்த மனிதன் குறித்த சக மனிதர்களின் அக்கறை என்னையும்  அவனைப் பற்றி எண்ணம் கொள்ள வைக்கிறது, அவர்கள் இன்னும் நீண்ட நேரம் இருப்பார்கள் போலத் தோன்றியது, அனேகமாக அவர்கள் அந்தக் கல்லறையில் விளக்கேற்றுவார்கள், வழிபாடு செய்வார்கள்.

Confederate soldiers graves are seen in fog Thursday, Feb. 2, 2006, in the historic Oakwood Cemetery in Raleigh, N.C. (AP Photo/Karen Tam)

தொலைதூரக் கல்லறையில் மாலை நேரக் காற்றோடும், இரவின் நிழலோடும் நடனமாடும் அகல் விளக்கின் ஒளியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

பார்க்கவில்லை என்றால் ஒரு முறை பார்க்க முயற்சி செய்யுங்கள், அமைதியின் சரியான விளக்கத்தை அது உங்களுக்குத் தரக்கூடும், அதிகக் கூச்சல் இல்லாத சிறு நகரங்கள் அல்லது கிராமங்களில் மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ கல்லறைகளில் விளக்கேற்றி வழிபடும் மரபு எல்லா மதங்களிலும் இருக்கிறது, இந்துக்கள், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் அனைவருமே இப்படி ஒரு நினைவேந்தலை தங்களின் அன்புக்குரிய மனிதர்களுக்குச் செய்கிறார்கள், மதம், கலாச்சாரம் இவற்றைக் கடந்து உலகெங்கும் பரவி இருக்கும் ஒரு மரபாக இறந்தவர்களின் கல்லறைகளில் விளக்கேற்றி வழிபடும் பண்பாடு காணக் கிடைக்கிறது, இறப்பு குறித்தும், கல்லறைகள் குறித்தும் காலம் பல்வேறு படிப்பினைகளை, உள்ளீடுகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது, சிறுவயதில் நாங்கள் குடியிருந்த குடியிருப்பின் பின்புறம் மிக நீண்ட வெற்றிடம் இருக்கும், தொலைவில் மூன்று பெயர் பொறிக்கப்பட்ட கல்லறைகள் தவிர மனித நடமாட்டமோ, மரங்களோ இல்லாத அந்த வெற்றிடம் மாலை நேரங்களில் மிக அழகானதொரு விளையாட்டு மைதானம், எப்போதாவது தென்படும் ஆடுகள், நகரத்தில் வேலை முடித்துக் கொண்டு கிராமத்தை நோக்கிச் செல்லும் சில மிதிவண்டிகள், பொட்டல் காடுகளில் அமர்ந்திருக்கும் சில கழுகுகள் இவை மட்டும் தான் அப்பகுதியில் காணக் கிடைக்கும் காட்சிகள், கல்லறைகளுக்கிடையே கழுகுகள் ஏறத்தாழ மனிதர்களைப் போல அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போலிருக்கும், அவற்றுக்கான இரையோ அல்லது வசிப்பிடமோ அவ்விடத்தில் இல்லையென்றாலும் எப்போதும் சில கழுகுகள் அந்தப் பொட்டல் வெளியில் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதை மிகுந்த வியப்போடு நான் பார்த்துக் கொண்டிருப்பேன், அவை ஏன் அப்படி நின்று கொண்டிருகின்றன என்கிற கேள்விக்கு இன்று வரையில் விடை தெரியாது, சில நாட்களின் மாலைப் பொழுதில்  அந்தப் பொட்டல் வெளிகளில் நான் சுற்றித் திரிய யாரேனும் நண்பர்கள் கிடைப்பார்கள், அங்கிருந்த கல்லறைகளில் மிகப் பெரியதான ஒன்றின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அருகில் நின்று கொண்டிருக்கும் கழுகுகளின் அசைவைக் கவனிப்பது ஒரு அழகான அனுபவம், அந்தக் கழுகுகள் தலையை மட்டும் அசைத்து எங்களை அவ்வப்போது திரும்பிப் பார்க்கும், அச்சம் இல்லாத அந்தக் கழுகுகள் மனிதர்கள் மிக அருகில் செல்லும் வரை அப்படியே தான் நின்று கொண்டிருக்கின்றன, மனிதர்கள் நெருங்கிச் சென்றாலும் இரண்டு கால்களையும் தூக்கி சற்றுத் தொலைவில் ஒரு தாவல் மட்டும் தான் செய்யும் அந்தக் கழுகுகள், கல்லறைகளில் காதைப் பொருத்திக் கூர்ந்து கவனித்தால் இறந்த மனிதர்களின் உரையாடல்களைக் கேட்க முடியும் என்று நண்பர்களில் சிலர் அப்போது கிளப்பி விடவும், அவ்வப்போது பளிங்குக் கற்களின் இடைவெளிகளில் காது பொருத்தி நாங்களாகவே கற்பனை செய்து கொண்ட உரையாடல்களை இப்போது நினைத்தால் நகைப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது, எத்தனை அழகான நாட்களை, இளமைப் பருவத்தை, நண்பர்களை, வாழிடங்களை, மனிதர்களைக் கடந்து வந்து விட்டோம், அந்த நாட்களையும், பருவங்களையும், மனிதர்களையும் அதே புள்ளியில் இனி ஒரு போதும் சந்திக்கவோ, அடையவோ இயலாது என்பது மனித வாழ்க்கையில் எத்தனை சோகமான உண்மை.

Confederate soldiers graves are seen in fog Thursday, Feb. 2, 2006, in the historic Oakwood Cemetery in Raleigh, N.C. (AP Photo/Karen Tam)

எங்கள் விளையாட்டு முடிவுறும் சில நேரங்களில் ஒரு குதிரை பூட்டிய வண்டியில் கல்லறைக்கு அருகில் ஒரு குடும்பம் வந்திறங்கும், அந்த பளிங்கினால் கட்டப்பட்ட கல்லறையில் இறந்து புதைக்கப்பட்ட மனிதரின் உறவினர்கள் அவர்கள், புத்தாடைகளை உடுத்தி, கழுத்து நிறைய நகைகளோடும், ஆங்கிலம் கலந்த தமிழோடும் அந்தக் குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருப்பதை தொலைவில் நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு, கொண்டு வந்திருக்கும் மலர்களை அந்தக் கல்லறையின் மீது தூவி, விளக்குப் பொருத்தவென்றே கட்டப்பட்டிருக்கும் இடுக்கொன்றில் அகல் விளக்கை ஏற்றுவார்கள், பிறகு சிறிது நேரம் அங்கேயே இருந்து விட்டு இருட்டிய பின்னர் புறப்படுவார்கள், அவர்கள் சென்று நீண்ட நேரம் கழித்தும் அந்த விளக்கு அங்கே எரிந்து கொண்டிருக்கும், அது படிப்பதற்கான நேரம் ஆதலால் நூலொன்றைக் கையில் பிடித்தபடி சாளரங்களின் அருகில் இருந்து தொலைவில் எரியும் அந்தக் கல்லறை விளக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த விளக்கு நடனம் ஆடுவதைப் போலவும், காற்றோடு அது ஏதோ உரையாடல் நிகழ்த்துவது போலவும் இருக்கும், சாளரத்தின் வழியாகத் தெரியும் குடியிருப்பு மரங்கள், மரங்களின் பின்னால் இருக்கும் நீறேற்றத் தொட்டிகள், அதன் பின்னே மேட்டில் மங்கலாய்த் தெரியும் கல்லறைகள், அதில் ஏற்றப்பட்ட விளக்கு, அதன் திரியைச் சுற்றி எரியும் மஞ்சளும், சிவப்பும் கலந்த சுடர், அதன் சீரற்ற அசைவுகள், அந்தச் சுடர் உருவாக்கும் சீரான அமைதி என்று காட்சி விரிந்து கிடக்கும், மிகுந்த அழகான, அமைதியான மாலை எதுவென்று யாரேனும் இப்போது கேட்டாலும் அந்த மாலையைச் சொல்வேன்.

தொடர்பே இல்லாமல் கல்லறைகளைப் பற்றிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது நண்பர்களே, கல்லறைகள் நாகரீகத்தின் தொட்டில், இறந்த மனிதனை அவனது உடலுக்கான இறுதி மரியாதை செய்து புதைத்து அவ்விடத்தில் ஒரு நினைவிடத்தைக் கட்டுவது என்பது மனித வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு, ஏறத்தாழ மனித இனக் குழுக்கள் எல்லாவற்றிலும் இன்று இந்த மரபு காணப்படுகிறது, ஏறத்தாழ கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் அகழ்வாராய்ச்சி வல்லுனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகளில் மலர்தொட்டிகள், நினைவுப் பொருட்கள் இவற்றோடு மனித எலும்புகளைக் காண முடிகிறது என்றால் மனிதனின் இறப்பு மரியாதை செய்யப்பட வேண்டிய ஒன்று என்கிற மரபை ஆதி மனிதன் அறிந்து வைத்திருக்கிறான் என்கிற உண்மையை உணர முடியும். இறந்த பின்னர் எரிக்கும் மரபு முற்றிலுமாய் மரணம் குறித்த மனிதனின் அச்சம் காரணமாக நிகழ்ந்திருக்கிறது, மனித வாழ்வுக்குத் தீங்கு விளைவிக்கும் ஏதோ ஒரு அற்புத ஆற்றல் மனிதனின் உடலைத் தீண்டியதன் விளைவு தான் அவனது மரணம் என்றும் அவன் நம்பத் துவங்கி இருந்தான், ஆகவே கண்ணுக்குப் புலப்படாத ஆற்றலால் தீண்டப்பட்ட அந்த உடலை எரித்து சாம்பலாக்கி விடுவதே வாழும் மனிதனுக்குப் பாதுகாப்பானது என்று ஆதி மனிதன் அஞ்சியபடியே இறந்த மனித உடலை எரிக்கத் துவங்கினான், அல்லது இறந்த உடலை அப்படியே போட்டு விட்டு ஓடத் துவங்கினான், இன்றும் உலகின் பல பகுதிகளில் ஆதிப் பழங்குடியினர் இறந்த மனிதனின் உடலை  அப்படியே போட்டு விட்டு ஓடும் பழக்கத்தை மரபாகப் பின்பற்றுகிறார்கள், பார்சி மற்றும் திபெத் மலைப் பகுதியில் வசிக்கும் மனிதர்கள் இறந்த மனிதனின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று மலையுச்சியில் இருக்கும் ஓரிடத்தில் விட்டு விடுகிறார்கள், அந்த மனித உடலை கழுகுகளுக்கு உணவாக்குவதே அவர்களின் இறந்த உடலுக்கான மரியாதை என்று கருதுகிறார்கள். இந்தியப் பழங்குடிகளில் சிலருக்கு இறந்த மனிதனின் உடலை நாய்களுக்கு உணவாக்கும் பழக்கம் இருக்கிறது, நாய்களால் தின்னப்பட்ட மனிதனின் ஆன்மா மறு உலகில் இன்னும் மேன்மையான வாழ்க்கையை அடையும் என்பது அவர்களின் நம்பிக்கை. பழங்குடிகளில் ஒரு பிரிவினரான "காலதியன்ஸ்" களுக்கு  இறந்தவர்களின் உடலைத் தின்று விடும் பழக்கம் இருந்ததாக கிரேக்க வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஹீரோடாட்டஸ் தனது குறிப்புகளில் பதிவு செய்கிறார்.

ZFP0036524_P

மரணித்த மனிதர்கள் வாழும் மனிதர்களுக்கு எப்போதும் அச்சத்தை அளிக்கிறார்கள், மரணித்த மனிதர்களில் உடலோடு அவர்களின் உடைமைகள் அனைத்தையும் எரித்து விடும் பழக்கம் சில பழங்குடி மக்களிடம் இன்றும் காணப்படுகிறது. அச்சம் மனிதனின் நம்பிக்கைகள் அனைத்துக்கும் ஒரே பொதுவான காரணியாக இருக்கிறது, விதியும், கர்மமும் மனிதனை மரணத்தைக் கடந்து செல்வதற்கு ஒரு வாய்ப்பாக மாறுகிறது, நம்பிக்கைகளின் அடுக்குகள், தொகுப்புகள் இவற்றை வைத்து மதமும், மத நம்பிக்கைகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அறியாத சில உண்மைகளை ஒப்புக் கொள்ளும் வலிமையை மதங்களின் மூலமாக மனிதன் பெற்றுக் கொள்ள முயல்கிறான். ஆகவேதான் அவன் உடல் அழிகிறது, ஆன்மா இறைவனடி சேர்கிறது என்று தனக்குத் தானே ஒரு சமாதானம் தேடிக் கொள்கிறான். கல்லறைகள் எப்போதும் மனித இனத்தின் அமைதியைக் குறியீடு செய்கின்றன, கல்லறை கட்டி நினைவு கொள்ளப்படுகிற எந்த மனிதனும் முழுமை அடைகிறான், அவனது வாழ்வை, அவனது இருப்பின் இன்றியமையாமையை, அவனது அன்பை இவ்வுலகில் சில மனிதர்கள் தொடர்ச்சியாக நேசிக்கிறார்கள் என்பதற்குக் கல்லறை விளக்குகள் ஒரு அடையாளமாக இருக்கின்றன. ஏனென்றால் இவ்வுலகில் கேட்பதற்கு அல்லது இறுதி மரியாதை செய்வதற்கு என்று யாரும் இல்லாத மனிதர்கள் எண்ணிக்கையின்றி  நிறைந்து கிடக்கிறார்கள், சிலர் பசியாலும், பட்டினியாலும் இறந்து யாருமற்ற நிலங்களில் அழுகி நாற்றம் எடுக்கிறார்கள், இன்னும் சிலரோ எதற்கு மரணிக்கிறோம் என்று அறியாமலேயே அவர்கள் மீது ஏவப்படும் போரினால் மறைந்து போகிறார்கள், நிலங்களின் மீதான, மதங்களின் மீதான, மொழிகளின் மீதான, அரசு, அதிகாரங்களின் மீதான இன்னொரு மனிதனின் வெறிக்கும், வன்முறைக்கும் இந்த உலகில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பலர் அழிந்து போயிருக்கிறார்கள், அவர்களின் இறந்த உடலை இயந்திரங்களை வைத்துத் துடைத்தழிக்கும் அரசத் தலைவர்கள் சிவப்புக் கம்பளங்கள் விரிக்கப்பட்டு நானும் நீங்களும் வாழும் நாகரீக நாடுகளில் வரவேற்கப்படுகிறார்கள்.

life-purpose

அதனால் தான் ஒரு அறிஞர் இப்படிச் சொன்னார், " தனது குடிமக்களின் மரணத்தை ஒரு நாடு எப்படி மதிக்கிறது என்று எனக்குச் சொல்லுங்கள், அந்த நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரப் பெருமைகளையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்".

இப்போது கல்லறைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத வலியும், சோகமும் மனதை ஆட்கொண்டு விடுகிறது, இளம் பருவத்தில் இல்லாத கல்லறை குறித்த அச்சம் முதிர்ச்சியான ஒரு வாழ்க்கை நிலையில் எனக்கு உண்டாகி இருப்பது ஒரு விதமான மனப்பிறழ்வு என்று நினைக்கிறேன், மரணம் குறித்த அச்சம் அல்ல அது, தனது வாழ்வும், விடுதலையும் உறுதி செய்யப்பட்ட ஒரு நிலத்தில் நான் வசிக்க வேண்டும் என்று உயரிய நோக்கில் போராடி மடிந்து போன எண்ணற்ற என் இனத்து இளைஞர்களின் கல்லறைகள் கண்ணுக்கே எட்டும் தொலைவில் இறைந்து கிடக்கின்றன, அவர்கள் தனது சந்ததியின் வாழ்க்கை ஒருநாள் விடுதலை பெறும் என்ற ஒரே நம்பிக்கையில் மடிந்து போனார்கள், இறுதியாக எல்லா மனிதனும் அஞ்சுகிற மரணத்தை அவர்கள் அஞ்சாமல் எதிர் கொண்டார்கள், ஆயினும், அவர்களின் கனவு நனவாகும் முன்னரே அவர்கள் மறைந்து போனார்கள், அவர்களின் கனவுகள் அவர்களோடு புதைக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்பவில்லை, அவர்களின் கனவுகள் இன்னும் காற்றில் விடுதலை பற்றிய நம்பிக்கையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும். அந்த நம்பிக்கைக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் உண்டாகிற பயமும், சோகமும் தான் இப்போது கல்லறைகளைக் கண்டவுடன் எனக்கு உண்டாகிறது. அவர்களின் உழைப்பையும், அவர்களின் மண்ணையும் நம்பியே பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், யாருடைய வாழ்க்கையையும் தட்டிப் பறித்துக் கொள்ளும் போர்முறையோ, மரபோ அவர்களின் வரலாற்றில் இல்லை.

cemetery_051608_08

ஆயினும், இறுதி மரியாதை செய்யப்படாத மனித உடல்களை அவர்களின் மண்ணெங்கும் புதைத்து விட்ட இழிவான வரலாற்றைக் கண்ணுற்றவாறே வாழும் வாழ்க்கையை எனக்கு வழங்கிய இயற்கையை எப்படி எதிர் கொள்வது என்று புரியாத நிலை என்னைப் போலவே பலருக்கு உருவாகி இருப்பதை சாபம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மரணங்களுக்கும், கேட்பாரற்று மடிந்த மனித உடல்களுக்கும் நீதியைத் தேடுவது ஒன்றே அந்த சமூகத்தின் உறுப்பினனாக எனக்கு இருக்கும் கடமை என்று கருதுகிறேன். பொருள் சார் தேசியங்களும், அவற்றின் அரச தலைவர்களும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை, உயிரை, இறந்த மனிதனின் உடலை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை ஒரு அவல சாட்சியாக நின்று பார்த்திருந்த மனிதக் கூட்டத்தின் உயிராக உலகில் வாழும் அனைத்து உயிர்களின் மரணத்துக்கும் இறுதி வணக்கம் செய்யப்படும் மரபை நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. பெயர் தெரியாத மனிதனின் கல்லறையின் மீதும் அதற்காகவே அகல் விளக்குகளை ஏற்றி வைக்க நான் விரும்புகிறேன்.

ஏனென்றால் கல்லறைகளும், கட்டத்தலைகளும் (எரியூட்டும் இடங்கள்) மனித உயிர்களின் மகத்துவத்தை, மதிப்பை இந்த உலகிற்குப் பறை சாற்றும் இடங்கள், நவீன மனிதனின் வாழ்க்கையை அவ்விடங்கள் தான் வழி நடத்துகின்றன, அவற்றில் சுவர்களில் இருந்து தான் நாகரீகம் இந்த உலகில் பெருகி வழியத் துவங்கியது. அந்த உயரிய நாகரீகத்தை எள்ளி நகையாடிய எந்தத் தலைவனையும் வரலாறும், நீதியும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் இல்லை, நீதியின் முன்பாக ஒவ்வொரு கல்லறையின் அகல் விளக்கும், அனாதையாக இறந்து போன மனித உயிர்களும் நிறுத்தப்படும், அது நாளையே நிகழலாம், நூறாண்டுகள் கழித்து நிகழலாம், அல்லது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிப் பின் நிகழலாம், ஆயினும் அது நிகழ்ந்தே தீரும், அதுவரையில் ஏதாவது ஒரு கல்லறையில் ஏற்றப்படும் அகல் விளக்கை இறந்து போன மனித உடல்கள் எல்லாவற்றுக்குமான இறுதி மரியாதையாய் நம்பி இருப்போம் நாம்.

agents-need-to-earn-respect

*********

Advertisements

Responses

 1. மனம் கனத்து விட்டது.எந்த விசைக்கும் சமமான எதிவிசை உண்டு.கல்லறை இல்லா ஆன்மாக்களுக்கு அஞ்சலி செய்து விளக்கேற்றும் நாள் தொட்டுவிடும் தூரத்தில்தான்.

 2. கல்லறைகளும், கட்டத்தலைகளும் (எரியூட்டும் இடங்கள்) மனித உயிர்களின் மகத்துவத்தை, மதிப்பை இந்த உலகிற்குப் பறை சாற்றும் இடங்கள், நவீன மனிதனின் வாழ்க்கையை அவ்விடங்கள் தான் வழி நடத்துகின்றன, அவற்றில் சுவர்களில் இருந்து தான் நாகரீகம் இந்த உலகில் பெருகி வழியத் துவங்கியது. அந்த உயரிய நாகரீகத்தை எள்ளி நகையாடிய எந்தத் தலைவனையும் வரலாறும், நீதியும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் இல்லை, நீதியின் முன்பாக ஒவ்வொரு கல்லறையின் அகல் விளக்கும், அனாதையாக இறந்து போன மனித உயிர்களும் நிறுத்தப்படும், அது நாளையே நிகழலாம், நூறாண்டுகள் கழித்து நிகழலாம், அல்லது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிப் பின் நிகழலாம், ஆயினும் அது நிகழ்ந்தே தீரும்…….

 3. மரணம் ஒரு நிகழ்வு அல்ல
  மறுபடியும் ஒத்திகைப் பார்க்க – அது
  முடிந்து போன யுத்தம்…

  வாழ்க்கையில்
  ஜெயிப்பதற்காகப் போராடி
  ஜெயித்தப்பிறகு தோற்கிறோம்
  இறப்பில் முற்றுப்புள்ளியிடுவதால்
  இயற்கையே உயர்ந்தது…

  மிக மிக அருமையான பதிவு.. கல்லறைகள் மற்றுமொரு உள்ளங்களின் அறைகள் அவை சுமந்து கொண்டு இருப்பது வெறும் பெயர், தோற்றம், மறைவு, ஊர் அல்ல, ஒவ்வொரு உள்ளத்தின் எண்ணக்குவியல்கள்… அதனால் தான் ஒவ்வொரு முறையும் கல்லறைக்குச் செல்லும் போது விளக்கேற்றி, பூ பொழிந்து வழிபடுகிறார்கள். உள்ளங்களோடு உறவாடியவர்களை உணர்வு பூர்வமாய் மகிழ்விக்கவும், மகிழவும்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: