கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 20, 2010

இடம்பெயர்தலின் வலி.

Avian-migration-Swans

இடப் பெயர்வு மனிதனுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கி இருக்கிறது எனினும் மனிதனின் உளவியல் துயரங்களின் மிக முக்கியக் காரணியாக இடப்பெயர்வு தான் இன்னும் இருக்கிறது, சென்னை விமான நிலையத்தில் ஒரு முறை காத்திருக்க வேண்டியிருந்தது, மும்பை செல்ல வேண்டிய வானூர்தி காலநிலை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படுவதாக இருந்ததால் அது ஒரு நீண்ட காத்திருப்பு, வானூர்தி நிலையங்கள் எப்போதும் உணர்வுகளின் கலவையாக இருக்கும், பிரிவு தரும் வலியை மறைத்துச் செயற்கையாகச் சிரிக்கும் மனிதர்கள், நீண்ட காலம் கழித்து உறவுகளைச் சந்திக்கும் அல்லது தனது பிறந்த மண்ணைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி நிரம்பிய மனிதர்கள் என்று அது ஒரு வினோதமான உலகமாய்க் காட்சி தரும், அங்கே இன்னும் சிறிது நேரத்தில் தனது பெற்றோரை, குழந்தைகளை, துணைவியரை, நண்பர்களை, சகோதரர்களை, உறவுகளைப் பிரிந்து நீண்ட தொலைவுக்குச் செல்லும் வலி நிரம்பிய விரல்கள் காற்றில் ஆடிக் கொண்டே இருக்கும், கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் எட்டிப் பார்த்துத் தங்கள் அன்பைச் சொல்லும் அந்தக் கைகள் மனித இனத்தின் பிரிக்க முடியாத அன்பின் அடையாளங்களாய் நிலைத்திருக்கும், விடைபெறும் போது கடைசியாகக் கொடுக்கப்படும் முத்தம் தான் எத்தனை வலி மிகுந்தது?. அந்த முத்தத்தில் மனிதன் தனது நினைவுகளைத் தேக்கி வைக்கிறான், பிறகு தேவைப்படும் போது தேக்கிய அந்த நினைவுகளை முத்தச் சுவடுகளில் அவன் பொருக்கி எடுக்கிறான், நீண்ட பிரிவின் பின்னர் அணைத்துக் கொண்டு நெற்றியில் கொடுக்கப்படும் முத்தங்கள் விலை மதிப்பில்லாதவை, பொருளீட்டச் சென்று திரும்பி வரும் எந்த மனிதனின் பெட்டியிலும் அடைபட்டிருக்கும் எந்தப் பொருளுக்கும் இல்லாத விலை மதிக்க முடியாத மதிப்பை அந்த முத்தங்கள் தான் இன்னமும் இவ்வுலகில் பாதுகாக்கின்றன.

வானூர்தி நிலையத்தின் ஒரு மூலையில் இருபத்தைந்து வயது சராசரி கொண்ட இளைஞர்களின் குழு ஒன்று நிற்கிறது, அவர்களின் மத்தியில் நின்று உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார் ஒரு நடுத்தர வயது மனிதர், அனேகமாக அவர் ஒரு வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருக்க வேண்டும், தமிழகத்தின் ஏதாவது தெருவொன்றில் கிரிக்கெட் ஆடிக் கொண்டும், கல்விக்கான காலத்தை வேறெங்கோ கழித்தும், இளமைக் காலத்தைத் தொலைத்து விட்ட இளைஞர்களின் அடையாளம் அவர்கள், அவர்களின் முகத்தில் எண்ணற்ற கனவுகள் வரிகளாய் நிரம்பிக் கிடக்கிறது, குடும்பத்தை விட்டுப் பிரிந்து நீண்ட தொலைவில் வசிப்பது எத்தனை கொடுமையான வாழ்க்கையாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை, அவர்களில் சிலர் நண்பர்களோடு உரையாடிக் கொண்டும், சிரித்து மகிழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள், அவர்களின் கண்களில் விரிந்து கிடக்கும் இடப்பெயர்வு வாழ்க்கைக்கும், உண்மைக்கும் இருக்கும் இடைவெளியை அவர்கள் அதுவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் காணப் போகும் உலகம் முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகமாகவும், உழைப்பை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைக் கூடாரமாகவும் தான் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, முதல் விமானப் பயணத்தின் மகிழ்ச்சியில் அவர்கள் திளைக்கப் போவதாய் எண்ணியபடி புன்னகைக்கிறார்கள்.

untitled

வெளிநாடுகளில் சென்று பொருளீட்டும் மனிதர்கள் ஏறக்குறைய தவம் செய்கிறார்கள், அவர்களில் பலரின் வாழ்க்கை சாபங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, மணவாழ்க்கையின் மகிழ்ச்சியை, இளம் துணைவியின் முத்தங்களை, பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைகளின் சிரிப்பை, அழுகையை, பெற்றோரின் அரவணைப்பை, முற்றத்தில் சிரிக்கும் பூக்களின் இதழ்களை, வாலாட்டி மேலேறும் நாய்களின் முனகலை, நண்பர்களின் கேலியை, வாழ்ந்த தெருக்களின் சுவர்களை, கண்மாய்க் கரைகளில் காய்த்திருக்கும் மாங்கனியின் சுவையை, தாவிக் குதிக்கும் கிணற்றின் குளுமையை, எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலையின் மேன்மையை உணர்த்தும் சொந்த மண்ணின் காற்றை இப்படி எல்லாவற்றையும் பிரிந்து பாலை நிலங்களில் உண்டாக்கப்படும் நகரங்களின் தோட்டங்களை நிர்மாணிக்கப் பணிக்கப்படுகிறார்கள், கடலைத் தூர் வாரி வாழும் நிலத்தை அதிகரிக்கிற உலக முதலாளிகளின் கனவுகளுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை அடகு வைத்துக் கூடாரங்களில் அடைந்து கிடக்கிறார்கள்.

அவர்களின் உலகம் தங்கள் அன்பான உறவுகளின்  அரவணைப்பிலும், இழந்த பலவற்றின் சுமைகளிலும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது, தங்கள் ஒப்பந்தம் முடிவடையும் நாளுக்காகவே ஒவ்வொரு நாளும் அவர்கள் விடியலை எதிர் கொள்கிறார்கள், அவர்களின் அறையின் புழுக்கத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் நாட்காட்டிகளும், கடிகாரங்களும் வழமையை விடவும் மெதுவாகவே காலத்தை நகர்த்திச் செல்கின்றன. விடை பெற்றுச் செல்லும் நாளுக்காகவே வளைகுடா நாடுகளின் குடியிருப்பு அறைகள் பல வாழ்க்கையை நிரப்பிக் கொள்கின்றன. எனக்குத் தெரிந்து மகிழ்ச்சியோடும், நிறைவோடும் வாழ்ந்து வந்த பல குடும்பங்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு இயந்திரங்களைப் போல மாறி இருக்கின்றன, பல குடும்பங்களின் வறுமை நீங்கி மகிழ்ச்சி நிலவுவது போலத் தோற்றம் இருப்பினும், அந்த மகிழ்ச்சிக்கு விலையாகப் பிரிவு எப்போதும் அவர்களை வாட்டிக் கொண்டே இருக்கிறது, இருக்கும் வரையில் தனது விவசாய நிலங்களில் வேளை பார்த்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்து கதைகள் பேசிய பக்கத்துக்கு வீட்டில் வசித்த பாலு அண்ணன் ஒரு நாள் வெள்ளைத் துணிகளால் சுற்றி அனுப்பப்பட்டிருந்தார், தொலைபேசியில் அவர் "வலி" "வலி" என்று கடைசியாகக் கத்தியதாக அவரது மனைவி சொல்லிக் கொண்டு அழுதது கண்களில் இருந்து அகற்ற முடியாத வலியாக பார்த்திருந்த யாருக்கும் மாறிப் போனது.

migration

உடல் நலத்தோடு பொருளீட்டும் வரையில் வெளிநாட்டு வாழ்க்கையும் நன்றாகவே இருப்பதாகப் பல இளைஞர்கள் சொல்கிறார்கள், தலைவலியோ, காய்ச்சலோ வந்து படுக்கிற போது மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய அன்பின் அருகாமை குறித்து உணர்வு மேலோங்கி விடுகிறது, நோயின் வலியை விடவும் அப்போது பிரிவின் வலி மேலோங்கி விடுகிறது, நோயும், பிரிவும் சேர்ந்து மனிதனை ஆட்கொள்ளும் போது மனித மனம் அதிகபட்சமான குழப்பம் கொள்கிறது, வாழ்க்கையை வெறுக்கத் துவங்குகிறது, தம்மைச் சுற்றி இயங்கும் ஒரு உலகம் தனக்கானது அல்ல என்பதை அப்போது தான் மனிதன் அறிந்து கொள்கிறான், தனது அறை நண்பர்கள், அலுவலக நண்பர்கள், வேலையிடத்தின் சக தொழிலாளர்கள், மேலதிகாரிகள், தன்னை ஊருக்கு அனுப்பிய முகவர், தனது முதலாளிகள் என்று தம்மைச் சுற்றி இருக்கும் பொருள் உலகுக்கு தனது அன்றைய உழைப்பு பயனற்றுப் போவது குறித்தான கவலைகள் தான் அதிகம் வருவதை நோயுற்ற மனிதன் யாரும் ரசிப்பதில்லை, அந்த இக்கட்டான நேரத்தில் அவனுக்குத் தேவையாய் இருப்பது கொஞ்சம் அன்பும், அரவணைப்பும், ஆனாலும் அவன் விரும்பும் அந்த அன்பும் அரவணைப்பும் மிக நீண்ட தொலைவில் கடலுக்கு அப்பால் ஒரு குடிசை வீட்டின் கதவுகளுக்குப்  பின்னால் அவனைப் போலவே உறக்கமின்றித் தவித்திருக்கலாம்.

இடம் பெயர்ந்து பிரிவின் துயரில் வாழும் மனிதனின் அக உலகம் தான் இவ்வுலகின் மிகப்பெரிய சிறைச்சாலையாய் இருக்கிறது, அவனது உடல் விடுதலை பெற்ற நிலையில் இருந்தாலும் அவனது மனம் ஒரு வெளியேறிச் செல்ல முடியாத சிறைச் சாலைகளுக்குள் அடைபட்டிருக்கிறது, அவனது உள்ளத்தின் வழியே விடுபடத் தவிக்கும் ஒரு பறவை எப்போதும் தனது சிறகுகளை விரித்தபடி இருக்கிறது, தனது வீடு இருக்கும் திசையை நோக்கியே அந்தப் பறவையின் கண்கள் நிலைகுத்தி இருக்கின்றன, தனது குழந்தைகளின் மழலை மொழி, தனது பெற்றோரின் விலைமதிக்க இயலாத திட்டுக்கள், விடைபெறும் போது துளிர்த்த இளம் மனைவியின் கண்ணீர், நண்பனின் வாடிய முகம் இவற்றில் ஏதாவது ஒன்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்குள் ஊடுருவி அவனது அமைதியைக் குலைத்து விடுகிறது. பொருள் தேடுதலின் ஒவ்வொரு கணத்திலும் தனது அன்புக்குரிய மனிதர்களின் தேவைகளை அந்த மனிதன் நிறைவு செய்து கொள்கிறான், தனது குழந்தைகளின் கல்வியை, அவர்களின் மூன்று வேளை உணவுத் தேவைகளை, புத்தாடைகளை, கனவுகளை எல்லாவற்றையும் அந்தப் பிரிவுத் துயரின் இடைவெளியில் மனிதன் போட்டு நிரப்பிக் கொள்கிறான், உலகம் மிகவும் சுருங்கி விட்டதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்வதும், வருவதும் இப்போது மிக எளிதாக நிகழ்வதாகவும் தனக்குத் தானே தேற்றுதல் கொள்ளும் மனிதனால் பிரிவின் இடைவெளியை நிரப்பவே இயலவில்லை.    

உலகம் மிகச் சுருங்கி விட்டதாகவும், அது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் அருகி அருகி ஒரு கிராமத்தைப் போல மாறி விட்டதாகவும் பல நேரங்களில் உரையாடல்களுக்கு இடையே ஒரு குரல் ஒலிக்கும், உண்மைதான், தகவல் தொடர்புக் கருவிகளும், தொலைத் தொடர்பு இயக்கங்களும் இந்தப் புவிப் பந்தை நெருக்கமாய் இணைத்து வைத்திருக்கின்றன, உலகின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் மனிதன், நம்மோடு நமது முகத்தைப் பார்த்தபடியும், நமது குரலைக் கேட்டபடியும் அலைபேசியின் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும், உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள இயலும், ஆனாலும், அந்த மனிதனுக்கும் நமக்கும் இடையிலான தொலைவு என்பது ஒரு இடைவெளியாகவே இருக்கிறது, அந்த இடைவெளியை மனிதனால் வெற்றி கொள்ள இயலவில்லை, அந்த இடைவெளியில் கலந்து இருக்கிற பிரிவின் பெருமூச்சு கால காலத்திற்கும் அப்படியே உலவிக் கொண்டிருக்கும் போலத் தெரிகிறது.

2

மனித இனம் தனது மூதாதைகளிடம் இருந்து விலகித் தங்கள் குடும்பங்களை உருவாக்கத் துவங்கி ஏறத்தாழ 1,50,000 ஆண்டுகள் ஆகி விட்டது, ஏறத்தாழ ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராக "ஹோமோ எரக்டஸ்" என்கிற குரங்குகளின் சற்றுப் பிந்தைய இனம் ஆப்ரிக்கக் காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா போன்ற நிலப் பகுதிகளில் வசிக்கத் துவங்கியதாக ஒரு சாரரும், ஆசியாவிலிருந்து நகர்ந்து ஏனைய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாக மற்றொரு சாரரும் சொல்லிக் கொண்டிருக்கையில் நவீன உலகின் மனிதன் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறான், மனிதனின் இடப்பெயர்வு பல்வேறு புற மாற்றும் அகக் காரணிகளால் நிகழ்கிறது, அவற்றில் பொருள் ஒரு இன்றியமையாத காரணியாகவும், போர், காலநிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணிகள் இரண்டாம் நிலைக் காரணிகளாகவும் காணக் கிடைக்கின்றன.

போரின் துயரால் இடம்பெயர்ந்த மனிதனின் வலி  தொடர்ந்து பிடுங்கப்படும் நிலங்கள், முதலாளித்துவத்தின் கால்களில் நசுங்கிச் சிதையும் விளைநிலங்கள் இவற்றோடு இளைய தலைமுறையின் கனவுகளும், வாழ்க்கையும் தொடர்ந்து நசுக்கப்படுகிறது, பல காலமாக விவசாயத்தை நம்பி இருந்த குடும்பங்களின் உறுப்பினர்கள் இடம்பெயர்ந்து தான் வாழ வேண்டிய நிலையில் தமிழகக் கிராமங்களில் பலவும் மாறி இருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் பெருநகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு இடம் பெயர்கிறார்கள். இடம் பெயர்தலின் போது மரபுகள் சார்ந்த ஒரு பழைய இருப்பிடத்தின் வாழ்க்கை முற்றிலுமாகத் தொலைக்கப்படுகிறது. நகரம் அல்லது முதலாளித்துவத்தின் வாழ்க்கை முறைகளை இடம் பெயர்ந்த மனிதன் நவீன உலகின் வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ளவும், ஏந்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

TAMIL_132350s

உலகம் மெல்ல மெல்ல முதலாளிகளின் பொம்மையாக மாறிக் கொண்டிருக்கிறது, இடம் பெயர்ந்த பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்கள், ஏதாவது ஒரு முதலாளியின் உற்பத்தி மையத்திலோ ஓய்வு இல்லத்திலோ பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், குறிப்பிட்ட விழுக்காடு மக்களின் உல்லாச வாழ்வுக்காக உலகின் பெரும்பான்மை மக்கள் எங்காவது உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள், உலகத் தமிழ் மக்களின் வாழ்க்கை இன்னும் துயரம் நிரம்பியதாகவும், வலிகள் நிரம்பியதாகவும் வரலாற்றில் உறைந்து கிடக்கிறது, உலகப் போர்களின் பின்னர் நிகழ்ந்த இடப் பெயர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களின் வலி மிகுந்த ஈழப் போர் இடப்பெயர்வுகள் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. ஆயினும் அறிவு சார் பயணத்தை இன்னும் தமிழர்கள் தொடங்கவே இல்லையோ என்ற அச்சம் மேலிடுகிறது, திராவிடக் கட்சிகள் துவக்கி வைத்த அறிவுகப் பயணத்தை அவர்களே சிதைத்து இலவசங்களும், ஏமாற்றுத் திட்டங்களும் நிரம்பிய ஒரு அரசியல் வழிமுறையை சிறப்பானதாக விளம்பரம் செய்கிறார்கள், எந்த ஒரு தெளிவான சமூகக் கண்ணோட்டமும் இல்லாத அரசியல், பொருளாதார நகர்வில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி முறைகள் வீழ்ந்து கிடப்பதைத் தாண்டி மொழியை, அறிவுலகத் திறப்பை, அரசியல் விழிப்புணர்வை, விடுதலையை நகர்த்த வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு இன்றைய தமிழ் கூறும் நல்லுலகின் அறிவு சார் இயக்கங்களுக்கு இருக்கிறது, அப்படியான இயக்கங்கள் ஏதேனும் தமிழகத்திலோ, இல்லை ஈழத்திலோ, புலம் பெயர் நிலைகளிலோ இயங்குகிறதா என்கிற கேள்வி இந்தக் கட்டுரையின் முடிவில் விஸ்வரூபம் எடுத்து நிற்பதைத் எவ்வளவு முயன்றும் என்னால் தவிர்க்க இயலவில்லை.

எல்லா நிலைகளிலும் நமது உலகம் முதலாளிகளாலும், அரசுகளாலும் ஆட்டுவிக்கப்படுகிற பொம்மைகளைப் போலவே இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது, அவற்றைத் தாண்டி இயங்குகிற எந்த இயக்கத்தையும் பிரிவும், பிளவுகளும் நீர்க்க வைப்பதில் மும்முரமாய் இருக்கிறது, அரசுகளின் இயக்கம் தீவிரமான முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டின் கீழ் இயங்குவதையும், அரசு அலுவலகங்கள் ஏறக்குறைய சிறு மற்றும் பெரு முதலாளிகளின் மற்றொரு துறை அலுவலகங்களாக மாறி வரும் சூழலில் நாம் எப்படி நமக்கான அரசியல் நிலைகளைத் தேர்வு செய்யவும், இயக்கவும் போகிறோம் என்பது மலைப்பாகவும், சுமை மிகுந்ததாகவும் தோன்றுகிறது, வெகு மக்களின் ஊடகங்களில் நிகழும் வழமையான காட்சிப்படுத்தலும் செயல் இழந்த அரசுகளின் நிலைப்பாடுகளை மீளக் கட்டமைக்கும் பணிகளில் மும்முரமாய் இருக்கையில், இலக்கியவாதிகளும், கலைஞர்களும் கூட எந்திரன்களின் இன்றைய வணிக நிலவரம் குறித்தே அதிகம் கவலைப்படுகிறார்கள். ஒன்று எந்திரனுக்கு ஆதரவு நிலைப்பாடு அல்லது எதிர்ப்பு நிலைப்பாடு என்பது தான் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் உயிர்ப்பு போலக் காட்சி அளிக்கிறது.

bye-bye-girl-9_3

ஆயினும், இடம் பெயர்ந்த இளைஞர்களின் உழைப்பும், அறிவுலகும், அரசியல் விழிப்புணர்வும் மட்டுமே தமிழர்களுக்கான ஒரே நம்பிக்கை ஒளியாக இன்றளவும் விளங்குகிறது, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு அவர்கள் இழந்த பொருளாதாரத்தை, நிலங்களை, உறவுகளை, மொழியை மற்றும் உணர்வுகளை மீட்கப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள், இன்றைய இளம் தலைமுறை ஒன்று வலி மிகுந்த இடப்பெயர்விலும் தனக்கான அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்வது ஒன்று தான் இடம் பெயர்தலின், பிரிவின் வலிகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க இருக்கும் ஒரே வழி. அதற்காக நாம் எத்தனை காலம் எடுத்துக் கொள்வோம் என்பதில் அடங்கி இருக்கிறது இந்தக் கட்டுரையின் முடிவுரை.

நம்பிக்கை தானே வாழ்க்கை, நாமும் நம்புவோம், நமக்கான உலகம் ஒரு நாள் பூத்துக் குலுங்கும் என்று………

**********

Advertisements

Responses

  1. ////அங்கே இன்னும் சிறிது நேரத்தில் தனது பெற்றோரை, குழந்தைகளை, துணைவியரை, நண்பர்களை, சகோதரர்களை, உறவுகளைப் பிரிந்து நீண்ட தொலைவுக்குச் செல்லும் வலி நிரம்பிய விரல்கள் காற்றில் ஆடிக் கொண்டே இருக்கும்/////

    ///ஒரு பறவை எப்போதும் தனது சிறகுகளை விரித்தபடி இருக்கிறது, தனது வீடு இருக்கும் திசையை நோக்கியே அந்தப் பறவையின் கண்கள் நிலைகுத்தி இருக்கின்றன, தனது குழந்தைகளின் மழலை மொழி////

    வாழ்வின் அத்தனை கட்டங்களையும் இழந்து வறுமைத்தீயில் பொசுக்கபடும் தன் சொந்தங்களின் சுகவீன நாளைக்காக , தனிமையில் வெறுமையில் அரை வயிற்று ஆகாரம் உண்டு , சுகங்கள் மறந்து சுமைத்தூக்கி சொல்லொல்லா துயரம் கொண்டுள்ள என் போன்ற இடம்பெயர்ந்தவனின் இதயக் குமுறலுக்கு இதமான மருந்தாக இருந்தது அண்ணா உம் கடிதம்…

  2. இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் அறிவு சார் இயக்கங்களுக்கு அவ்வளவாக இடமில்லை என்பதே கசப்பான உண்மை. அதை சரியாக சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.

    அதற்கு மேலும், ‘Suitcase’ மனிதனாகிய எனக்கு தொலை தூரத்தில் இருக்கும் நெருடல் புரிகிறது. அத்துடன், எழுத்தும் பிரமாதம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: