கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 18, 2010

எஸ்.ராமகிருஷ்ணன் – சமகால இலக்கியத்தின் அடையாளம்.

s-ramakrishnan

பெங்களூர் நகரத்தின் புகழ் பெற்ற "Landmark" நூல் அங்காடிக்குச் செல்லும் போதெல்லாம் தமிழ் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு அலமாரியில் நீண்ட நேரம் அமர்ந்து ஏதாவது ஒரு நூலையாவது வாங்கி விடலாமா என்று யோசித்துக் கொண்டே இருப்பேன், ஏனைய ஆங்கில நூல்களைப் போலவே ஒரு தனிப் பிரிவு தமிழ் நூல்களுக்காக அங்கு இருந்தது, பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி யாரும் பார்க்க இயலாத ஒரு சிறு அலமாரிக்குள் சுஜாதாவின் சில நூல்களோடு சிறுத்துப் போனது தமிழ். பெரும்பாலும் நான் வாங்க முடியாத நூல்களே அங்கு நிரம்பிக் கிடக்கும், சங்கராசாரிகளைப் பற்றிய பக்தி நூல்கள், ராமாயணம், சுஜாதாவின் சில நூல்கள், பாலகுமாரனின் நாவல்கள், சமையல் கலை நூல்கள் என்று ஏறத்தாழ அங்கு நான் படிக்கும் நூல்கள் கிடைப்பதே இல்லை, இருப்பினும் விடாமல் அந்தப் பகுதிக்குச் சென்று பார்க்க நான் தவறியதே இல்லை, ஒரு முறை ராஜீவ் கொலை வழக்கு குறித்து கார்த்திகேயன் எழுதிய நூல் அங்கு கிடைத்தது, பின்னொரு நாளில் அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள் கிடைத்தது. ஒரு மாதத்திற்கு முன்னாள் அங்கே சென்ற போது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது எனக்கு, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் "மலைகள் சப்தமிடுவதில்லை" நூலும், "காண் என்றது இயற்கை" நூலும் பல பிரதிகள் காணக் கிடைத்தது, அதனினும் அதிர்ச்சி நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இரண்டு பேர் அவற்றை வாங்கிக் கொண்டது. இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா? ஐந்து வருட "Landmark" வரலாற்றில் நான் எஸ். ராமகிருஷ்ணனின் நூல்களை இது வரை அங்கு பார்த்ததில்லை, அது மட்டுமன்றி தமிழ் நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் அலமாரிப் பக்கமே யாரையும் நான் பார்த்ததும் இல்லை. ஏறத்தாழ முப்பது விழுக்காடு தமிழ் மக்கள் வசிக்கும் பெங்களூர் மாநகரில் தாய்மொழியில் வாசிக்கும் பழக்கம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை "Landmark"  அலமாரியை வைத்தே அளந்து கொள்ளலாம்.

"எழுத்து என்பது ஒரு சமூகத்தின் மௌனத்திற்கு எதிரான போராட்டம்" என்பார் கார்லோஸ் பீயூன்ட்ஸ். சமகாலத்தில் நிகழும் பிழைகளை, முரண்களைக் கண்டும் காணாமல் பயணிக்கிற சமூகத்தின் மௌனத்தை எழுத்தும், இலக்கியமும் தான் உடைக்கிறது,

LEO TOLSTOI

ஒரு இலக்கியவாதி இந்த சமூகத்தைப் பீடித்திருக்கும் பிணிகளின் அடையாளமாய் இருக்கிறான், இந்த சமூகத்தின் மிச்சமிருக்கும் பெருமைகளின் மகரந்தக் குவியலாய் இருக்கிறான், மொழியின் பாதையில் முளைத்துக் கிடக்கும் முட்செடிகளைத் தன் பேனா முனைகளால் வெட்டிச் செதுக்கிய வண்ணம் காலத்தைக் கடந்து பயணிக்கிறான், ஒரு நல்ல இலக்கியவாதி சில நேரங்களில் வாழ்க்கையைப் பற்றிய ரகசியங்களை அறிந்த ஞானியைப் போல அமைதியாய் தெளிந்த நீரோடை போலவும், பல நேரங்களில் சமூக முரண்பாடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் கண்டு ஆழிப் பேரலை ஆட்கொண்ட கடல் போலவும் துடிக்கிறான், வாழும் சமூகத்தின் நிறை குறைகளைக் கண்டு அவற்றின் காரணிகளைத் தேடும் ஒரு எளிய மனிதனாய் இலக்கியவாதி நம்மிடையே வாழ்கிறான், இலக்கியம் வாழும் காலத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஒரு கருவியாக இருக்கையில் அந்தக் கருவியைப் பயன்படுத்தத் தெரிந்த ஒருவனாக இலக்கியவாதி இருக்கிறான்.

இவ்வுலக வாழ்க்கையின் எல்லைகளை, அவிழ்க்க முடியாத சில சிக்கல்களை அவன் தன்னளவில் தேடிக் கண்டடைய முயல்கிறான். தனிப்பட்ட வாழ்வில், புற உலகின் தேவைகளைக் கடந்து விடவும், அக உலகின் தேவைகளை அடைந்து விடவுமாய் அவன் போராடிக் கொண்டே இருக்கிறான், வாழ்க்கையை அதன் போக்கில் நுகரும் சக மனிதர்களுக்கு இடையே அவன் தன்னை ஒரு தட்டான் என்றும் வண்ணத்துப் பூச்சி என்றும் தனக்குள் முனகியபடி சமூக எல்லைகளுக்குள் இருந்து வெகு தூரம் பறக்கிறான், புதிய இடங்களைக் கண்டறிகிறான், புதிய மனிதர்களைக் கண்டடைகிறான், புதிய உலகமொன்றைப் படைக்கிறான். இலக்கியவாதிகளின் உலகம் புவி எல்லைகளைக் கடந்து வெகு தூரம் பயணிக்கிறது, மனிதனின் திறன்களை, மனிதனின் எல்லைகளை மாற்றி அமைக்கும் வலிமைகளைக் கொண்டிருக்கிறது. ஆகவேதான் உலகெங்கும் எழுத்தாளர்களால், இலக்கியவாதிகளால் அரசுகளைக் கவிழ்க்கவும், அரசியலை மாற்றி அமைக்கவும், புதிய வாழ்க்கை முறைகளை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் முடிகிறது.

Landmark_in_The_Forum,_Bangalore

இலக்கியம் எத்தனை வலிமையானது என்பதை உணர்ந்த சமூகம் அறிவார்ந்த சமூகமாகவும், அற நெறிகளைப் போற்றும் சமூகமாகவும் இருக்கிறது, நமது தமிழ்ச் சமூகமும் இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் போற்றி வளர்த்த ஒரு சமூகமாக உலக வரலாற்றில் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும், மனமும் ஒரு மிகப்பெரிய இலக்கிய வடிவமாகவே இருக்கிறது, இலக்கியவாதியால் மட்டுமே அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றை புத்தம் புதிய கோணத்தில் தோற்றுவிக்கவும் முடிகிறது, தெரியாத ஒன்றைப் பொதுவானதாக மாற்றவும் முடிகிறது. தனது கனவுகளை இந்த சமூகத்தின் கனவுகளாக மாற்ற ஒரு எழுத்தாளனால் மட்டுமே முடிகிறது, ஒரு வெள்ளைத் தாளில் நடமிடும் தனது எண்ணங்களை காற்றில் பரப்பி அண்ட வெளியில் மிதக்க விடுகிறான் கவிஞன். கண்களின் வழியே உள்வாங்கி அவற்றைத் தன் மனத்திரையில் கண்டு களிக்கிறான் வாசிப்பவன். வாசிப்பு அப்படி ஒரு களிப்பையும், புதிய உலகத்தையும் நமக்குத் திறந்து விடுகிறது.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது வாழ்க்கையையும், படகையும் ஒப்பிட்டு ஒரு கவிதை எழுதி எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுக்கு அஞ்சல் அட்டையில் அனுப்பி வைத்தேன், சில நாட்களுக்குப் பின்னர் அவரிடம் இருந்து ஒரு பதில் அட்டை வந்திருந்தது, "உனது கவிதை நன்றாகவே இருக்கிறது, ஆனால், தொடர்ந்து வாசிப்பதில் கவனம் செலுத்தி விட்டு பின்னர் எழுதத் துவங்கலாம்". அதன் முழுமையான பொருளை நான் உணர்ந்து கொள்ள நீண்ட காலம் பிடித்தது. ஆனாலும், ஒரு சிறுவனுக்கு மதிப்பளித்து பதில் எழுதும் உன்னதமான குழந்தை மனம் அவரிடம் இருந்தது. அதற்குப் பிறகு நான் அனேகமாக எழுதுவதை நிறுத்தி விட்டேன், நூல்களைத் தேடுவதிலும், வாசிப்பதிலும் நீண்ட காலம் செலவிடுவது ஒரு மனிதனின் வாழ்க்கையையும், உயிர் வாழ்க்கையின் புரிதலையும் எப்படி மாற்றி அமைத்து விடுகிறது என்பதை வாசிப்பவர்கள் அறிய முடியும் என்றே நினைக்கிறேன்.

im73

வாசிப்புப் பயிற்சியின் இடையில் ஒரு முறை சென்னையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, எனது வாசிப்பு அனுபவத்தில் முதன் முதலாக மனதில் சலனங்களை உண்டாக்கிய ஒரு எழுத்தாளரை மிக நெருக்கத்தில் சந்திக்கும் வாய்ப்பு அது, அவருடைய சில கட்டுரைகளையும், சிறுகதைகளையும் அப்போது தான் நான் படிக்கத் துவங்கி இருந்தேன், தனது இரண்டு குழந்தைகளோடும், துணைவியாருடனும் அவர் சென்னைக்கு வந்திருந்தார், தனது பார்வையால் சுற்றி நிகழும் அனைத்தையும் அவர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார், இடையிடையில் தன்னுடைய குழந்தைகளின் கேள்விகளுக்கும், மற்றவர்களின் உரையாடல்களுக்கும் பதில் அளித்துக் கொண்டு இருந்த அவரது அசைவுகளை வெகு நுட்பமாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் அன்று தன் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு சீரிய தகப்பனாய் இருந்தார்.எஸ். ராமகிருஷ்ணன் ஒரு அற்புதமான பேச்சாளர், அன்று மாலை அதே நிகழ்வில் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் உரையாற்றினார், ஒரு தெளிந்த நீரோடையைப் போல தனது இளமைக் கால நினைவுகளை எங்களோடு அவர் பகிர்ந்து கொண்டது பசுமையாக நினைவில் நிற்கிறது.

உலகின் எந்த ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரின் எழுத்தோடும் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்களை என்னால் சமமாக ஏற்றுக் கொள்ள முடியும், ஏன் ஒரு படி மேலேயே வைத்துப் போற்ற முடியும், தமிழில் என்றில்லை எந்த மொழியிலும் இயற்கை குறித்தும், இயற்கையின் அருகாமை குறித்தும் அத்தனை நெருக்கமாய் எழுதும் ஒருவரை நான் இது வரையில் வாசிக்கவில்லை, ஒரு பறிக்கப்பட்ட இலையின் நாட்களைக் குறித்து அவரால் எழுத முடியும், பேருந்துச் சாளரங்களில் நடனமிடும் ஆடுகளின் தாடி குறித்து அவரால் சிந்திக்க முடியும், ஊட்டி ஏரியில் அதிகாலையில் பட்டுத் தெறிக்கும் மலைகளை குறித்தும், சாலையைக் கடக்கும் ஒரு பூனையைப் பற்றியும் அவரால் சொல்ல முடியும், அந்தப் பூனை புற்களில் புரண்டு பின்னெழுந்து ஓடுவதை காட்சியாக்கி உவகை செய்ய அவரால் முடியும், ஆஸ்திரேலியாவின் நெட் கெல்லி அடைபட்ட சிறைக்குள் நம்மை அழைத்துச் செல்ல அவரால் முடியும், நோயுற்றிருந்த லியோ டால்ஸ்டாயின் கடைசி நாட்களுக்கு, அஸ்தபோவ் ரயில் நிலையத்திற்கு உங்களையும் என்னையும் அவரால் மட்டுமே கூட்டிச் செல்ல முடியும். போலிக் கவிஞர்களை நையாண்டி செய்து ஒரு தெலுங்குக் கவிஞர் உடனான சந்திப்பை ஒரு கட்டுரையில் அவர் வர்ணிக்கும் போது அவரது நகைச்சுவை உணர்வு "வடிவேல்" ரேஞ்சுக்கு மாறி இருந்தது.அவரது எழுத்தும், வாழ்க்கையும் பிரம்மிப்பானவை, தான் உணர்ந்தவற்றையே அவர் பெரும்பாலும் எழுதுகிறார்.

im68

ஒரு கிராமத்துத் தாயோடு பயணிக்கும் கைக்குழந்தை நீருக்காக அழுவதையும், நகரத்து மாந்தர் தம் கைப்பைகளில் ஒளித்து வைத்திருக்கும் நீர்க் குப்பிகளை வெளியில் எடுக்காது பாதுகாக்கும் உலகில் தான் நாம் அனைவரும் வசிப்பதாக அவர் கூறுகையில் சொல்ல முடியாத வலியும், இயலாமையும் பீறிடுகிறது, அவர் வெறும் எழுத்தாளராய் மட்டுமே வாழ்ந்து விடவில்லை, மனிதர்களையும், உயிர் வாழ்க்கையையும் ஆய்வு செய்யும் மானுடவியலாராய், காட்டுயிர்களை அறிமுகம் செய்யும் அறிவியல் அறிஞராய், குழந்தைகளுக்கான ஒரு கதை சொல்லியாய், இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு வழிகாட்டியாய், உலகின் பல்வேறு இலக்கிய வடிவங்களை மொழிபெயர்க்கும் மொழி அறிஞராய், ஒரு மொழி இயக்கமாய், சமூகக் கடமை நிரம்பிய குடிமகனாய் தமிழில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது எழுத்துக்கள் ஒரு போதும், மிகையானதாகவோ, வேறு உள்நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கவில்லை. சிக்மண்ட் பிராய்டின் "INTERPRETATION OF DREAMS" நூலைப் படித்து நான் அறிந்து கொண்ட ஆழ்மன நிகழ்வுகளையும், உயிர் வாழ்க்கையின் ரகசியங்களை விடவும் எஸ்.ராமகிருஷ்ணனின் "ஓடும் ஆறு" என்கிற சின்னஞ்சிறு கட்டுரை அதிகமாக வாழ்க்கையைப் பற்றி சொல்லிக் கொடுத்தது. அவர் காலத்தைத் தன் பேனா முனைகளில் கட்டி இழுத்துச் செல்கிறார், கங்கைக் கரையில் விழுகிற மழைத்துளி ஆகட்டும், பழைய நூல்களை விற்கும் ஒரு இஸ்லாமியப் பெரியவர் ஆகட்டும், இவரது எழுத்துக்குள் விழுந்து பெருவிருட்சமாய் காட்சி தருகிறார்கள், தமிழ்ச் சமூகம் தனது நிகழ்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளர்களை, கவிஞர்களை கண்டு கொள்வதில்லை, இன்று வாசிப்பு என்கிற மிகப்பெரிய பழக்கமே பெரும்பாலான இளைஞர்களிடம் காணாமல் போய் காட்சி ஊடகங்கள் ஒரு மயக்கத்தில் அவர்களை வீழ்த்தி இருக்கிறது.

திரைப்படம், தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்கள் முதலாளித்துவத்தின் மிகப்பெரிய பாதுகாவலர்களாகவும், நுகர்வுக் கலாசாரத்தின் அடிநாதமாகவும் ஒரு விதமான நோய் போலவும் பரவிக் கிடக்கிறது, காட்சி ஊடகம் ஒரு மனிதனின் சிந்தனை வெளியை முடக்கி அவனை குறிப்பிட்ட எல்லைகளில் அடைத்து ஒரு சிறைவாசி ஆக்கி விடுகிறது, எழுத்து ஒவ்வொரு வரியிலும் வாசிக்கும் மனிதனின் சிந்தனைகளை அவனது உள்ளீடுகளை சுமந்து கொள்கிறது, “மலையுச்சியில் பூத்திருக்கும் ஒரு ஒரு மலரைப்” பற்றி ஒரு நூலில் படிக்கும் போது வாசிக்கிற மனிதனின் மலை அனுபவமும், மலர் அனுபவமும் அந்த வரிகளோடு ஒட்டிக் கொள்கிறது, எழுத்தாளனின் மலை அனுபவமும், மலர் அனுபவமும் வாசிப்பில் இணைகிற போது வெவ்வேறு புதிய மலைகளும், மலர்களும் மனக் கண்ணில் காட்சியாய்ப் படிகிறது, காட்சி ஊடகமொன்றில் காட்டப்படுகிற அதே “மலையுச்சியில் பூத்திருக்கும் ஒரு மலர்” உள்ளீடுகள் அற்ற ஒரு பிம்பமாக மட்டுமே உறைந்து பார்ப்பவனை நிலை நிறுத்துகிறது.

banner_1

உலகெங்கும் பயணம் செய்து தேடிக் கண்டடையும் நூல்கள், மனிதர்கள், வாழ்க்கை முறைகள், நிலவியல் தடங்கள், பல்லுயிர் வாழ்க்கை குறித்த செய்திகள், சிறந்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள், குறும்படங்கள் பற்றிய அறிமுகங்கள் என்று தமிழில் எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தை ஒரு தவமாய்ச் செய்து வருகிறார் என்பதை ஒவ்வொரு இளம் எழுத்தாளரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரையை எழுத வேண்டும் என்று தோன்றியது, தவிரவும் பண்பட்ட நமது தமிழ்க் கலாச்சார மரபுகளை அவரது எழுத்துக்கள் மீட்டுருவாக்கம் செய்கின்றன, அவரது எழுத்துக்களில் கடை நிலை மனிதனின் வாழ்க்கை குறித்த அக்கறையும், கவலையும் அதிகம் இருக்கும்,  மனித நேயத்தின் சுவடுகள் அவரது பேனா முனைகள் பயணம் செய்யும் பாதைகள் எங்கும் பெருகி வழிவதை நான் அதே பாதையில் பயணம் செய்து பலமுறை கண்டிருக்கிறேன். ஆர்ப்பாட்டம் இல்லாத, முன்னரே முடிவு செய்யப்பட்ட கருத்தியலை அவர் கடத்திச் செல்வதில்லை, அவரது எழுத்துக்களில் தீர்வுகள் காணப்படுவதில்லை மாறாக தீர்வுகளைத் தேடிச் செல்லும் வலிமையை மட்டும் வாசிப்பவனுக்குக் கொடுக்கும் எளிமையும், உண்மையும் எப்போதும் இருக்கும்.

நமது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களை தேடி அறிமுகம் செய்ய வேண்டியது ஒரு அவசரத் தேவை. எழுத்துலக அரசியல், பதிப்புலக அரசியல், இடது, வலது முரண்பாடுகள், இவற்றை எல்லாம் கடந்து அவரால் தமிழில் ஒரு வெற்றியடைந்த எழுத்தாளராய் எப்படி இயங்க முடிகிறது என்று எப்போதும் நான் வியப்பது உண்டு, வாசிப்பும், எழுத்தும், வாழ்க்கை அனுபவமும் நிறைந்த மனிதன் அமைதியாய் அனைத்தையும் கடந்து விடுகிறான், மரணத்தையும் கூட. எஸ்.ராமகிருஷ்ணன் அப்படி ஒரு மனிதர். வாழும் காலத்தில் தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நான் அவரைப் போற்றுகிறேன், அவரைப் பின்தொடர்கிறேன், அவரது படைப்புகளுக்காய் எப்போதும் பஞ்சு மிட்டாய் வண்டியின் பின்னோடும் ஒரு குழந்தையைப் போலக் காத்திருக்கிறேன்.

************

Advertisements

Responses

 1. I really enjoy your blog. Could let me know how I can go about subscribing with it? By the way I stumbled upon your blog through Aol.

 2. friend,
  u r also a good writer, nice

  regards
  maruthu

 3. It is proven time and time again that information’s worth is not the main factor which impacts article promotion results. Instead, the degree at which you manage to broadcast information as speedily as possible. And I’m not referring to article distribution, but to the fluency of your writing.

 4. You completed several nice points there. I did a search on the subject and found a good number of persons will consent with your blog.

 5. I’m having a small problem I can’t seem to be able to subscribe your feed, I’m using google reader by the way.

 6. Thanks really nice post i did many research about this.

 7. hey there i ve read your whole post.really thanks

 8. Sorry for the huge review, but I’m really loving the new Zune, and hope this, as well as the excellent reviews some other people have written, will help you decide if it’s the right choice for you.

 9. There can be no such thing, in law or in morality, as actions to an individual, but permitted to a mob. -Ayn Rand

 10. decent spreading best wishes.

 11. can you descdribe more admin for everybody. is there any body therex.-


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: