கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 20, 2010

ஒரு புதைக்கப்பட்ட குழந்தையும், சமூகமும்.

child-playing-with-bubbles

ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடியாத தாய் கடந்த வாரத்தில் செய்தித் தாள்களில் குற்றவாளியாய் நிறுத்தப்பட்டிருந்தாள், அவள் ஈழ தேசத்தின் விடுதலைப் போரில் நாடு கடத்தப்பட்ட ஏதிலி, இரண்டு குழந்தைகளுக்கு உணவூட்டி அவர்களை வளர்க்க வேண்டுமென்றால் அந்தத் தாயும், தகப்பனும் கூலி வேலைக்குச் சென்றாக வேண்டும், மற்ற இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையும், எதிர்காலமும் முக்கியமா? மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கை முக்கியமா? என்கிற ஒரு மன உளைச்சல் அந்தத் தாயை வருத்தி அவள் மனதை அரித்துக் கொண்டே இருந்திருக்கிறது, கடைசியில் ஒரு நாள் மனநிலை பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தையை உயிரோடு புதைத்து விட்டாள் அந்தத் தாய். அந்தத் தாயின் மனநிலை எத்தனை கவலைக்குறியதாய்  இருந்திருக்கும்? உயிரோடு தான் பெற்ற மகவைப் புதைக்கிறோம் என்கிற குற்ற உணர்வு தனது வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வருமே என்று அந்தத் தாய் அறிந்திருப்பாள், ஆயினும், ஏனைய இரண்டு குழந்தைகளின் வயிற்றுப் பசியை இரண்டு வேளைகளாவது நீக்க வேண்டுமென்றால் அத்தகைய ஒரு முடிவை அவள் எடுத்தாக வேண்டியிருந்தது. சட்டமும், சமூகமும் அந்தத் தாயை ஒரு குற்றவாளியாக்கிக் கை விலங்கு பூட்டி விடுகிறது. சட்டத்திற்கு அப்பால் நிலவும் இந்த உயிர் வாழ்க்கையின் நிகழ்காலம் எப்படி இருக்கிறது என்று நாம் உணர்ந்து கொள்வதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறு துளி.

இன்னொரு புறம் ஒரு செய்தி, இந்தியாவில் வசிக்கும் ஒரே ஒரு குடும்பம் தனது ஒரு மாதத்திற்கான மின்கட்டணமாக ஏறத்தாழ எழுபது லட்சம் ரூபாய்களைச் செலுத்தி இருக்கிறது, இந்தக் குடும்பத்திலும் மூன்று குழந்தைகள் உண்டு, தாய் தந்தை இருவரும் வேலை செய்கிறார்கள், முதலாளி வேலை, இந்தப் பணத்தில் பத்தில் ஒரு பகுதியை முந்தைய மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை பெற்றிருக்குமேயானால் உயிருடன் புதைக்கப்பட்டிருக்காது, இரண்டாவது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் இருக்கிறது, இந்தியாவின் ஆளும் வர்க்கத்தை ஆட்டுவிக்கவும், பாமர இந்தியனின் வரிகளை நிர்ணயம் செய்யவும் இந்தக் குடும்பத்தின் குழந்தைகளால் கூட முடியும், உழைக்கும் மக்களின் உழைப்பைக் சிறுகச் சிறுகக் கொள்ளையடித்துச் சேர்க்கப்பட்ட கள்ளப் பணத்தால் கட்டி எழுப்பப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இப்படி  உணவின்றி உயிருடன் புதைக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகளின் புதைகுழிகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது. இது என்ன முரண்பாடு. இந்த முரண்பாடு எப்படி நிகழ்கிறது? 

hungry முதலாளித்துவம் நிகழ்த்திக் காட்டி இருக்கிற இந்த முரண்பாடுகளை மானுடம் எப்படிச் சமன் செய்யப் போகிறது என்கிற கேள்வி ஒரு மிகப் பெரிய மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கிறது, இயல்பாகவே மனிதனுக்குள் பொதிந்து கிடக்கும் பொருளுடைமை ஆசைகளும், உடல் வலிகள் ஏதும் இல்லாத மேம்பட்ட வாழ்க்கையை நோக்கிய தேடலும் இந்த முரண்பாட்டை நோக்கி மனித சமூகத்தை உந்தித் தள்ளுகிறது, ஒரு பக்கம் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் வர்க்கத்தின் மூலதனமான உடல் உழைப்பு மாற்று வர்க்கமான முதலாளிகளின் சாமரங்களாக மாறி விடுகிறது, பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து தனது கிளைகளைப் பரப்பத் துவங்கியது முதலாளித்துவத்தின் வேர்கள் என்று சொல்லப்படுவதை ஓரளவு ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், அது முற்றான உண்மை இல்லை என்பதை மனித வாழ்க்கையின் வரலாறு சொல்லிக் கொண்டே இருக்கிறது, ஆதி மனிதன் தனக்குக் கிடைத்த இறைச்சியின் உரிமையைக் கொண்டாடவும், அவற்றைப் பாதுகாத்துப் பின் புசிக்க ஒரு இடத்தைத் தனதென்றும் குறிக்க முயற்சி செய்த போதே முதலாளிகள் தோன்றி விட்டார்கள், ஆம், அதுதான் முதலாளித்துவத்தின் வித்து, மனிதனின் சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் தான் முதலாளித்துவ சமூகத்தைத் தோற்றுவித்த காரணிகள், தனது குடும்பமும், தனது வாரிசுகளும் தனது மறைவுக்குப் பின்னர் உணவுக்கும், உறைவிடத்துக்கும் அலையக் கூடாது என்ற ஆதி மனிதனின் ஆசையே இன்றைய முதலாளித்துவத்தின் ஊற்றுக் கண். தனக்கான குகை பின்னொரு காலத்தில் தனக்கான வீடானது அப்படியே நாடானது,   காலங்களைக் கடந்து இன்றைய நவீன மனிதனின் வாழ்க்கை முறையாக மாறிப் போயிருக்கிறது, பெரும்பாலான நாடுகளின் கோட்பாடுகளும், கொள்கைகளும், சட்டங்களும் முதலாளித்துவ உலகத்தை இன்னும் செழித்து வளர வைக்கும் அளவிலேயே நிலைத்திருக்கிறது. அதற்கான மூலகாரணம் முதலாளித்துவமும் அது சார்ந்த தேடலும் மனித வாழ்க்கையை இன்னும் எளிமையாக்கி இருக்கிறது, மனிதனின் வாழ்நாட்களை அதிகம் செய்திருக்கிறது. தொழிற்புரட்சிகளை உருவாக்கி உலகெங்கும் மனித இனத்தின் பசியைப் போக்கி இருக்கிறது.

அப்படி என்றால் ஏன் முதலாளித்துவத்தை நாம் எதிர்க்க வேண்டும், எழுபது லட்சம் மின்கட்டணம் செலுத்தும் குடும்பம் பல சிறு குடும்பங்களின் பசியைத் தனது நிறுவனங்களால் போக்குகிறதே? என்று ஒரு அடிப்படைக் கேள்வி எழும்! உண்மைதான், முதலாளித்துவம் இன்றைய நவீன உலகைக் கட்டி அமைத்திருக்கிறது, இன்றைய நவீன மனிதனின் ஆழ்மனக் கிடக்கையை அகலப்படுத்தி இருக்கிறது, பிறகு என்னதான் சிக்கல் முதலாளித்துவத்தில் என்று கேள்வி எழுப்புபவர்கள் மீண்டும் ஒரு முறை கட்டுரையின் முதல் பத்தியை மட்டும் படியுங்கள்.

முதலாளித்துவம் ஆர்ப்பாட்டமாக ஒருபுறம் தனி மனிதனின் வளர்ச்சியை உறுதி செய்து கொண்டே மறுபக்கம் சமூகத்தின் அறத்தை வெட்டி வீழ்த்தியது, முதலாளித்துவம் மனித இனத்தின் பொருட் தேவைகளை நிறைவு செய்து கொண்டே மறுபக்கம் சமூக மனதின் அகத் தேவைகளைப் பிடுங்கி எறிந்தது, சமூக இயக்கத்தின் ஆணி வேராக இருந்திருக்க வேண்டிய சமநீதியை, சமநிலையை முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் தின்று விட்டிருந்தன. அதுதான் இன்றைய சிக்கல், நுகர்வும், நுகர்வு மனநிலையும் முதலாளித்துவத்தின் விளைபொருட்கள், இன்றைய நவீன மனிதனின் வாழ்க்கையில் நுகர்வு ஒன்றே மையப் புள்ளியாக மாறிப் போனது தான் முதலாளித்துவம் செய்த மிகப்பெரிய தீமையாகவும், முரணாகவும் மாறிப் போனது. முதலாளித்துவம் தனது உற்பத்திப் பொருட்களை விற்கவும், தேவைக்கு அதிகமான லாபத்தை நோக்கிப் பயணம் செய்யவும் தனது தொழிலாளர்களின் குருதியை உறிஞ்சிக் குடித்தது, நுகர்வின் சாயல் படியாத இடங்களை நோக்கித் தனது உற்பத்திப் பொருட்களை நுழைத்தது, காடுகள், பழங்குடிகள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு நாகரீக வேடம் புனையப்பட்டது, இந்த நுகர்வு வேட்கையைப் பரவலாக்க உலக முதலாளிகளால் ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது, அறிந்தும் அறியாமலும் அவர்களால் உருவம் கொடுக்கப்பட்ட அந்தக் கோட்பாடு தான் உலகமயமாக்கல்.

உலகமயமாக்கல் பொருளைப் பல இடங்களில் ஒன்றாகக் குவித்தது, பல இடங்களில் மனிதர்களை வெவ்வேறாகப் பிரித்தது, சிதறடித்தது, உறவுகளை அழித்தது, கூட்டு வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டிருந்த எண்ணற்ற சமூகங்களைத் துண்டாடி அவர்களை திசைக்கொரு புறமாகத் துரத்தியது. அறத்தையும், அறம் சார்ந்த வாழ்க்கையையும், அன்பையும், அன்பு சார்ந்த உலகத்தையும் துரத்தி அடித்தது. பொருளையும், சந்தைகளையும் ஒரே குடையின் கீழ்க் கொண்டு வந்தது. அந்தச் சந்தையில் மனித உணர்வுகள், மனித உறவுகள் அனைத்தையும் காட்சிப்படுத்தி விலை பேசியது. பொருளால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று மனிதனை நம்ப வைத்தது. இன்னும் நம்ப வைக்கிறது.

Child-Labor-Blangladeshஇத்தகைய முதலாளித்துவத்தின் அகக் கோட்பாடுகள் தான் முதல் இரண்டு பத்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கிறது, முதலாளித்துவத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துகிற மிகப்பெரிய கருவியாக நுகர்வும், நுகர்வை முன்வைக்கிற ஊடகங்களும் இருக்கின்றன. தேவைகளே இல்லாத தேவைகளின் பிம்பங்கள் முதலாளித்துவத்தின் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்றன, முகம் சிவப்பாக இருப்பது தான் உலகின் இயற்கை நியதி என்று முதலாளித்துவ ஊடகங்கள் ஊளையிடுகின்றன, குழந்தைகளின் உயரத்தை, அவர்களின் அறிவுத்திறனை, பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சியின் நாட்களை இன்னும் இயன்ற எல்லாவற்றையும் முதலாளித்துவ ஊடகங்கள் தீர்மானிக்கின்றன, பரப்புகின்றன. ஆங்கிலம் பேசத் தெரிந்த, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் குறித்து விமர்சனம் செய்யத் தெரிந்த குடும்பங்களின் குழந்தைகள் தற்கொலை குறித்து ஆண்டாண்டு காலமாய் அவை கூச்சலிடுகின்றன, ஆனால் ஏழ்மையில், வறுமையில், உழைப்பின் சுமையில், பசியில் மடிந்து போகிற எண்ணற்ற குழந்தைகளை அவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, வானூர்தி விபத்துக்களைப் பின்தொடர்ந்து நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுக்கும் ஊடகங்கள், மாட்டு வண்டிகளில் பயணித்து மூழ்கிப் போன விவசாயக் குடும்பங்களைக் கண்டு கொள்வதே இல்லை, இதுதான் முதலாளித்துவ உலகின் முரண்பாடு, இந்த முரண்பாட்டை முற்றிலும் நீக்கும் ஒற்றை ஆற்றலாக வேறு ஏதேனும் கோட்பாடு இவ்வுலகில் காணக் கிடைக்கிறதா என்ற கேள்வியைத் தான் மார்க்ஸ் எழுப்பினார், அத்தகைய ஒரு கோட்பாட்டைக் கண்டறியும் வழிகளை, அவர் விளக்கினார், அந்தக் கோட்பாட்டின் பெயரைக் கம்யூனிசம் என்று சிலர் சொல்லலாம், சோஷலிசம் என்று இன்னும் சிலர் சொல்லலாம், பெயரே  தேவையற்ற மனித சமூகத்தின் மனநிலையில் அறத்தைப் புகுத்தும் எத்ததைய கோட்பாடும் முதலாளித்துவ முரண்பாடுகளின் மாற்றாக இருந்து விட்டுப் போகட்டும், நமது அவசரத் தேவை அத்தகைய சமூக அறம். நமக்கு அருகில் காணக் கிடைக்கிற பசிக்கு உணவளிக்கும் ஒரு அடிப்படை அறம் எவ்வழியில் இந்த மானுட குலத்திற்குக் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கத் துவங்க வேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்,

எடுத்துக்காட்டாக ஈழம் குறித்து நாமெல்லாம் வாயும், காதும் ஒன்றாகும் அளவுக்குப் பேசிக் கொண்டிருக்கிறோம், ஈழத்தில் நடந்த போரின் போது வெற்றிகளை எப்படிப் பெற்றோம், எங்கிருந்து எங்கே தாவினோம், குதித்தோம், வெட்டினோம், கொத்தினோம் என்று ஆர்ப்பரித்தோம், தோல்வியின் போது அழுதோம், கதறினோம், போராடினோம், இன்னும் போராடிக் கொண்டே இருக்கிறோம், அதெல்லாம் சரி, ஈழக் குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் என்ன தேவை என்று அதே அக்கறையோடு கவனித்தோமா என்றால் இல்லை, தமிழகத்தின் முகாம்களில் ஏறத்தாழச் சிறைக் கைதிகளைப் போல அடைபட்டிருக்கும் நமது உறவுகளின் தேவைகளை, அவர்களின் குழந்தைகளின் தேவைகளை, அவர்களின் உணவுக்கான போராட்டங்களை நமது இயக்கங்களும், அமைப்புகளும் கணக்கில் கொள்கிறதா என்றால் இல்லை. ஒரு வகையில் நாமெல்லாம் ஒரு விதமான மன நோய் பீடிக்கப்பட்ட மனிதர்கள் என்று நினைக்கிறேன், பரபரப்பான செய்திகளும், உணர்வுகளைக் கிளர்ந்தெழ வைக்கும்  போர்க்காலப் புகைப்படங்களும் நம்மை கிளர்ச்சி அடைய வைக்கின்றன, அதற்குப் பிறகு வசதியாக அந்தக் கால கட்டத்தை நாம் மறந்து விடுகிறோம், அந்தக் காலகட்டத்தின் தாக்கம் நிரம்பி வழியும் ஒரு இளம் தலைமுறையை நாம் தலை முழுகி விடுகிறோம், இடது, வலது, கிழக்கு மேற்கு என்று எல்லா அரசியல் நிலைப்பாட்டில் இருக்கும் அறிவு ஜீவிகளும் நிகழ் காலத்தின் தேவைகளை, நிகழ் காலத்தின் கொடுமையான கணங்களை விடுத்து எதிர் காலம் குறித்த விவாதங்களில் மிகுந்த அக்கறை செலுத்துகிறோமோ என்றொரு ஆழ்மன அச்சம் எனக்குள் வேர் பிடிக்கிறது.

Hungry childrenகடந்த வாரத்தில் ஒரு நண்பர் அமெரிக்காவில் இருந்து அலைபேசியில் அழைத்து நீண்ட நேரம் பேசினார், ஒரு ஈழக் குழந்தையையாவது நான் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன், இயக்கங்களிலும், அவற்றின் போராட்டங்களிலும் எனக்கு நம்பிக்கை இல்லை, குறைந்தபட்சம் ஒரு குழந்தையின் பசியை, அதன் கல்வியை நான் கருத்தில் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் மிகுந்த உணர்வுப் பூர்வமாக என்னிடத்தில் சொன்னார். இத்தகைய அகமனத்தின் அறத்தைத் தான் பல்வேறு இசங்கள் விளக்கிச் சொல்கின்றன, அவர் ஒரு கம்யூனிஸ்ட்டா இல்லை சோசலிஸ்ட்டா இல்லை இடது சாரியா வலது சாரியா என்றெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் அவரைப் போன்றவர்கள் தான் இந்த உலக வரலாற்றில் மனித இனத்தை அடுத்த படிக்கு நகர்த்திச் செல்பவர்கள் என்பது மட்டும் உறுதியாக எனக்குத் தெரியும்.

சக மனிதனின் வலியை, நம் கண் முன்னே பசியோடு துடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை, தேவைக்கு அதிகமான பொருளின் பகிர்வை உறுதி செய்யும் ஒரு அரசியல் முறையை நோக்கி நாம் நகர வேண்டியதும், அத்தகைய ஒரு உளவியல் அறத்தை நமது தலைமுறைக்குக் கற்றுக் கொடுப்பதும் தான் இந்த சமூக இயக்கத்தை முதல் இரண்டு பத்திகளில் காணப்படும் முரண்களற்ற ஒரு சமூகத்தைக் நோக்கிக் கொண்டு செலுத்தும். ஆடைகளற்ற, வேட்டைக் குடியாக இருந்த மானுட சமூகம் குறைந்தபட்ச அறங்களைப் பின்பற்றும் ஒரு நவீன மனித குலமாக மாறுவதற்கு ஏறத்தாழ இரண்டரை மில்லியன் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது, உடைமைகள் மீது நாட்டம் இல்லாத, பொது உடைமைச் சமூகம் ஒன்று உருவாகவும், தழைத்து வளரவும், பசியும், பிணியும் எந்த ஒரு தாயையும்  தான் பெற்ற மகவை உயிரோடு புதைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லாதிருக்கவும் இன்னும் இரண்டரை மில்லியன் ஆண்டுகள் தேவைப்படாது என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழக முகாம்களில் வாழும் ஈழக் குழந்தைகளைத் தேடி நான் பயணிக்கப் போகிறேன், அவர்களின் தேவைகளை நோக்கி என்னால் இயன்ற அளவில் நகரப் போகிறேன், வழித் துணைக்கும், பொருட் துணைக்கும் எண்ணற்ற இசங்களற்ற, இசங்களைப் பற்றி அறியாத நண்பர்கள் இருக்கிறார்கள். உலகப் பசியையும், பிணியையும் போக்கும் முன்னதாக நாம் நமது குழந்தைகளை மண்ணுக்குள் புதைக்காதிருப்போம்,  நம்புவோம், நாளை விடியும் என்று, நம்பிக்கைதானே வாழ்க்கை நண்பர்களே!!!!

Children_playing_304145013_std

**************


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்