கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 29, 2010

தொலைந்த சிலவற்றைத் தேடி……..

2692416592_d71751010e

நான் அப்போது தான் ஊருக்கு வந்திருந்தேன், மூன்று நாட்கள் விடுமுறை, வந்ததும் வராததுமாக அம்மா "தம்பி, காளியம்மை ஆத்தாவுக்கு ரொம்ப முடியலையாம், போய் ஒரு எட்டுப் பாத்துட்டு வந்துருடா" என்றார்கள்,  காளியம்மைப் பாட்டியை நான் பார்த்து கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகள் இருக்கலாம், அப்போது அவர் கல்லலில் இருந்து  இருந்து சிவகங்கைக்கு   வருவார், அவரது வருகை எங்களுக்கு ஒரு திருவிழாக்காலம் போல, எங்களை அவர் திரைப்படங்களுக்கு அழைத்துப் போவார், வாங்கித் தின்பதற்கு காலையில் பத்துக் காசும், மாலையில் பத்துக் காசும் கொடுப்பார், உரையாடலும், சண்டைகளும் வீடு முழுதும் நிரம்பி இருக்கும், ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அவர் அம்மாவுக்கு நேரலையில் சொல்லிக் கொண்டிருப்பார், காசி மாமா ஊருக்குப் போவதற்கு முன்பு தன்னிடம் சொல்லாமல் போனதையும், பெரிய மருமகள் எடுத்தெறிந்து பேசுவதையும் அம்மா பஞ்சாயம் பண்ணி வைக்க வேண்டும் என்று சண்டை போடுவார், அம்மா, தனது தாயை இழந்த நிலையில் காளியம்மாள் பாட்டிதான் அம்மாவையும், மாமாவையும் வளர்த்து எடுத்தார்கள் என்று அத்தை எப்போதும் யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருப்பதை நான் உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன், தாயை இழந்த பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய பணி மட்டுமில்லை, மனித உறவுகளின் உன்னதமான உறவான தாய்மையை ஈடுகட்டும் ஒரு வேள்வி, அந்த வேள்வியை அவர் செய்திருக்கிறார், தனது இளமைக் காலத்தின் தாகங்களை, ஏக்கங்களை இரண்டு குழந்தைகளுக்காக அவர் பல நேரங்களில் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

முந்தைய தலைமுறையில் பெண்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதன் மிச்சத்தை நம்மால் இன்றும் உணர முடியும், வேலைக்குப் போகிறோம் என்கிற ஒரு காரணம் மட்டுமே ஆண்களுக்குப் பிள்ளை வளர்ப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு எளிமையான வழியாக இருந்திருக்கிறது, ஒரு குழந்தையின் தேவைகளை அறிந்து அவர்களுக்குச் சரியான நேரத்தில் உணவளிப்பது, அவர்களை உறங்க வைப்பது, அவர்களைப் பேணிப் பாதுகாப்பது என்பது ஏறத்தாழ ஒரு நிறுவன உயர் அலுவலரின் அன்றாடச் செயல்பாடுகளை விடவும் அதிகச் சுமையுடையது, பேறு காலத்தின் போதும், குழந்தை வளர்ப்பின் போதும் உண்டாகும் மன அழுத்தத்தையும், அயர்ச்சியையும் ஒரு ஆணால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன், கணவர்களின் தேவையை அறிந்து அவர்களை மகிழ்வடைய வைப்பதே முந்தைய தலைமுறைப் பெண்களின் பிறவிப் பயனாக இருந்திருக்கிற காலத்தில் இரண்டு தனக்குப் பிறக்காத குழந்தைகளை வளர்த்து அவர்களின் வாழ்க்கையை வழி நடத்தி இருக்கிறார் காளியம்மாள் பாட்டி. அதனால் தான் அவர் அம்மாவுக்கு மிக நெருக்கமானவரும், அன்பானவருமாக இருந்தார், அம்மாவுக்கு நெருக்கமாக இருக்கும் அனைத்தும் குழந்தைகளுக்கும் நெருக்கமானதாய் மாறி விடுகிறது, அப்படித்தான் எங்களுக்கு காளியம்மாள் பாட்டி நெருக்கமானார், ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு அவர் நெற்றியில் ஒரு சிவப்பு வண்ணப் பொட்டு இருக்கும், நான் உறங்கப் போகும் போதும், விழிக்கும் போதும் அந்தப் பொட்டு அழியாமல் இருந்ததன் ரகசியம் அவரது வாழ்க்கை முறை, அதிகாலையில் எழுந்து அனைவரும் உறங்கிய பின்னரே உறங்கப் போகும் அவரது வாழ்க்கை முறை தனி வழியானது. அள்ளி முடியப்பட்ட தலையும், வாய் நிறைய வெற்றிலை பாக்கும் அவரது கூடுதல் அடையாளங்கள், அதை விட மிக முக்கியமான அடையாளம் அவரது அன்பு, வரும்போதெல்லாம் ஓலைப்பெட்டிக்குள் ஒரு கோழியை ஈரத்துணி சுற்றி அவர் எடுத்து வந்து விடுவார். அச்சு முறுக்கு, பனங்கிழங்கு, பொறி உருண்டை, தட்டப் பயித்தங்காய் என்று ஒரு பெரிய பட்டியலே அவரது ஓலைப் பெட்டிக்குள் இருக்கும்.

Old_Indian_Women_preview

நான் என் நினைவுகளோடு பயணிக்க, சரவணன் என்னோடு பயணம் செய்து கொண்டிருந்தான், நாங்கள் அந்தப் பாலத்தைக் கடந்த போது சுருக்கென்று நெஞ்சுக்குள் முள்ளொன்று தைத்தது மாதிரி இருந்தது, கல்லலில் இருந்து வேப்பங்குளம் செல்லும் சாலை அது, எதிரில் கல்லல் ரயில் நிலையம், பழுதடைந்த பஞ்சு நூற்பாலை,  "சரவணா, கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்துடா" என்றேன், வண்டியை நிறுத்தி விட்டுப் பிறகு என்னிடம் "என்ன மச்சான், யூரின் போகனுமா?" என்றான் சரவணன். "இல்லடா, மொதல்ல எல்லாம் இங்கே தான டவுன் பஸ்சுக்கு நிப்போம், தண்ணி எப்பவும் தேங்கிக் கிடக்குமே அந்தப் பாலம் தானே இது? என்று நான் ரொம்ப சாவகாசமாகக் கேட்டது சரவணனின் முகத்தில் கலவரத்தை உண்டாக்கி இருந்தது, சரவணன் ஒன்பது மணியாகி விட்டால் சரக்கு அடிக்கப் பழகி இருக்கிறான் என்பதை சென்ற முறை ஊருக்கு வந்திருந்த போதே நான் அறிந்து கொண்டேன், மிகுந்த ஏழ்மையில் உழன்று, கடுமையாக உழைத்து வளைகுடா நாடுகளுக்குப் போய் தனது குடும்பத்தின் வறுமையை இல்லாதொழித்து சமூகத்தில் பசியும், வறுமையும் அற்ற ஒரு நிலைக்கு வந்திருக்கும் அவனிடம் அறிவுரை சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை, இத்தனை வறுமையிலும் அடித்துப் பிடித்து முன்னேறி வரத் தெரிந்த சரவணனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து வெளியேறத் தெரிந்திருக்கும், இல்லை இது அவனுக்குக் கொஞ்சம் நெகிழ்வான காலமாய் இருக்க வேண்டும். எங்கே வழக்கமான நேரத்துக்குப் போக முடியாதோ, கடை அடைத்து விடுவார்களோ என்று சரவணனுக்குப் பயம் வந்திருக்க வேண்டும் , "சரவணா, வேணும்னா, நீ இங்கேயே சாப்பிடேன்" என்று அரசு மதுக் கடை இருக்கும் பக்கமாகக் கையைக் காண்பித்தேன் நான், சரவணன் முகம் இப்போது கொஞ்சம் தெளிவடைந்தது போலிருந்தது, "நான் கொஞ்ச நேரம் இங்கயே உக்காந்திருக்கேன் சரவணா, நீ போயிட்டு வா", என்று சொல்லி அவன் கையில் ஒரு நூறு ரூபாயைக் கொடுத்தேன், சரவணன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு நகர்ந்தான், என்னுடைய மூளையின் உள்ளறைகளில் எங்கோ நினைவுகளைப் புதுப்பிக்கும் பணி வெகு வேகமாகத் துவங்கி இருந்தது.

Memories_of_the_past_by_WiciaQ

எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம், வேப்பங்குளத்தில் காளியம்மாள் பாட்டியின் வீட்டில் இருந்து ஒரு திருவிழா முடிந்து திரும்பி வரும்போது இந்த இடத்தில கொஞ்ச நேரம் பேருந்துக்காக நான் அம்மா, தங்கை மூன்று பேரும் அமர்ந்திருந்தோம், திருவிழாவில் காளியம்மாள் பாட்டி எனக்கு ஒரு "டிக்கி, டிக்கி" வாங்கிக் கொடுத்திருந்தார்கள், சோடா மூடியை வைத்துச் சிறு குழந்தைகளுக்காகச் செய்யப்படும் ஒரு விளையாட்டுப் பொருள் அது, மேலும் கீழுமாக அதனை அழுத்தும் போது டிக் டிக் என்று விசையோடு ஓசை எழும், ஒரு இசைக் கருவியைப் போலவும் அதனை நம்மால் பயன்படுத்த முடியும். பாலத்தின் அடியில் இருந்த சில வண்ணத்துப் பூச்சிகளை நோக்கி ஓடும்போது  என் கையில் இருந்த டிக்கி டிக்கி தெறித்துக் கீழே விழுந்தது, சுற்றிலும் தேடித் பார்க்கத் துவங்கினேன், கண்ணில் படவில்லை, சிறிது தூரம் நடந்து சென்று தேடித் பார்த்தேன், அது மாயமாகி விட்டிருந்தது, அம்மா, என்னை அதற்கு மேல் பாலத்தின் அடியில் விளையாடி இருக்க அனுமதிக்கவில்லை,  எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான், இருள் மெல்லப் படர்வதும், அந்தப் பாலத்தின் அடியில் இருந்து பறக்கத் துவங்கிய இருந்த ஒரு வௌவாலும் மட்டுமே என் கண்ணில் படுகிறது, என்னுடைய டிக்கி டிக்கி தொலைந்து போனது குறித்து நான் மிகவும் கவலை கொண்டிருந்தேன், அம்மாவுக்குப் பேருந்து இன்னும் வராத கவலை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சின்ன உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது, பொது உலகத்தைத் தாண்டி அந்தச் சின்ன உலகமே மனிதர்களை தற்காலிகமாக வழிநடத்துகிறது, என்னுடைய அன்றைய உலகம் ஒரு சின்னஞ்சிறு டிக்கி டிக்கியின் ஓசைக்குள் கட்டுண்டிருந்தது. என்னுடைய இன்றைய உலகம் பொது உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பார்ப்பதில் அதிகக் கவனம் கொண்டிருக்கிறது, காலமும், மனிதனும் எப்படி இணைந்து பயணிக்கிறார்கள் என்று வியக்கிறது, ஒரு சிறு குழந்தையாக இதே இடத்தில் டிக்கி டிக்கியைத் தேடிக் கொண்டிருந்த அதே சிறுவன் தான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன், அந்தச் சிறுவனின் மனநிலையும், தேடலும் இல்லாத ஒரு வளர்ந்த மனிதன், அவன் கடந்த காலம், வளர்ச்சி, இழப்புகள், மகிழ்ச்சி, துயரங்கள் என்று நீண்டு விழுதுகள் பரப்பிக் கிடக்கிறது காலம், காலம் ஒரு புனைவு அல்லது கற்பனைப் பொருள் என்று சில தத்துவங்கள் சொல்கிறது, காலம் ஒரு கற்பனையாக மாறி விட்டால் நாம் கடக்கும் நாட்களை என்னவென்பது? சூரியனே இல்லாத இன்னொரு தொலைதூரப் பால்வெளிக்கு வாழ்க்கையைக் கொண்டு போனால் நமது நாட்களும், வயதும் என்னவாகும்? குழப்பமான கேள்விகள் என்னைத் துரத்துகின்றன.

1476049619_59e376c33d

பாலத்தின் அடியில் இறங்கிக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன், எனக்குள் கிடந்த சிறுவன் இறங்கி ஓடுகிறான், தன்னுடைய நீண்ட நாட்களுக்கு முன்பு தொலைந்து போன டிக்கி டிக்கியை அதே ஆர்வத்துடன் அவன் தேடிக் கொண்டிருக்கிறான், நான் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அவனுடைய எண்ணை வழியும் முகம், படிய நாடு வகுப்பு எடுத்துச் சீவப்பட்ட தலைமுடி, அவனுக்கு இருந்த துடுக்குத்தனம், அவன் அப்படியே தான் இருக்கிறான், ஆனால், ஒளிந்து கொண்டிருக்கிறான், அவன் ஒளிந்து கொண்டாக வேண்டும், சமூகமும், சமூக உளவியலும் அவனை ஒளிந்து கொள்ளச் சொல்லி விரட்டுகின்றன, அவன் உலக சமூகங்களைப் பற்றித் தெரிந்து கொண்டாக வேண்டும், அவன் பொருள் சேர்க்கும் வித்தையைக் கற்றுக் கொண்டாக வேண்டும், உலகப் பொது சமூக மனநிலையில் இருந்து விலகி ஒளிந்து கொள்ளத் தெரியாத மனிதர்களை மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று இவ்வுலகம் விலக்கி விடுகிறது, 

குமார் என்றொரு வகுப்புத் தோழனை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், அவன் ஒளிந்து கொள்ளத் தெரியாதவன், தனக்குள் இருந்த சிறுவனை ஒளித்து வைத்து விட்டு வளர்ச்சி அடையாமல் இருப்பவன் என்று உலகத்தால் நம்பப்படுபவன், தன்னுடைய அதே மிதி வண்டியில், அவன் ஏதோ சுமைகளைச் சுமந்தவாறு பயணித்துக் கொண்டிருந்தான், இதற்கு முன்பு பலமுறை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் இருந்த சிறுவன் ஒளிந்து கொண்டு விடுவான், சமூக இயக்கமும், உளவியலும் தனி மனிதனுக்குள் உண்டாக்கும் தாக்கம் அது, எப்படியோ அன்று எனக்குள் இருந்த சிறுவன் குதித்து வெளியேறி விட்டான்,  அவனுடைய மிதிவண்டியை மறித்தபடி "குமார்" என்றேன் நான், குமார் உடன் கீழிறங்கி நீ நம்பிராஜன் தானே" என்றான். நான் அவனை அழைத்ததில் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகி இருக்க வேண்டும் என்று நான் கருதிக் கொண்டேன், "நீ நல்லா இருக்கியா குமார், உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்றேன் "நான், நல்லா இருக்கேன், கல்யாணம் இன்னும் ஆகல, பொண்ணு யாரும் குடுக்குற மாதிரி இல்ல நம்பி" என்று ஒரு விதமான கவலையோடு சொன்னான் குமார்,  பொது உலகத்தின் மனிதர்களை விடவும் நம்பகமானவன் குமார், நம் எல்லோரையும் விட நல்லவன் குமார், ஒரு பெண்ணை மிகுந்த மகிழ்ச்சியோடும், அன்போடும் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதற்குக் குமார் எல்லா வகையிலும் தகுதியானவனே, ஆனால், அவனுக்கு ஒளிந்து கொள்ளவும், பொருள் சேர்க்கவும் தெரியாது. ஆகவே இந்த உலகம் அவனை நம்ப மறுக்கிறது, அவனை பொது சமூக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள மறுக்கிறது. குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் சரக்கு எடுக்கும் பணியாளாக இருக்கிறேன் என்று என்னிடம் சொன்னான், அவனுடைய வறுமையின் நிறம் திட்டுத் திட்டாய் அவனுடைய சட்டைகளில் தெரிந்தது, விடைபெறும்போது அவனுக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது, ஆனாலும், நான் அதனைச் செய்யவில்லை, அது எனக்கும் அவனுக்கும் இடையிலான நெருக்கத்தைக் கொஞ்சம் விலக்கும் என்று தோன்றியது, அவன் என்னுடன் அமர்ந்து படித்த வகுப்புத் தோழனாகவே இருந்து விட்டுப் போகட்டும், எனக்குள் ஒளிந்திருக்கிற ஒரு எண்ணை வைத்துப் படிய சீவப்பட்ட சிறுவனின் பள்ளி நண்பன் அவன், அவனை நான் அப்போது ஒளிக்க விரும்பவில்லை, அவன் தான் இப்போது அந்தப் பாலத்தின் அடியில் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறான்,

Old-Indian-Woman-Picture

டிக்கி டிக்கியைத் தேடித் பாலத்தின் அடியில் நான்  திரிந்து  கொண்டிருந்த அந்த நாளில் தங்கை ஒரு கைக்குழந்தையாக இருந்தாள், அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே இங்கே இருந்த ஒற்றை அடிப்பாதையில் நடந்து திரிந்திருக்கிறேன், ஒற்றை அடிபாதை முடியும் இடத்தில ஒரு அடர்த்தியான புளியமரமும், அதன் அருகில் கல்யாணி அத்தையின், வீடும் இருந்தன. நாங்கள் வரும்போதெல்லாம் கல்யாணி அத்தை எங்களுக்கு வரட்டீ போட்டுக் கொடுப்பார்கள், கல்யாணி அத்தை அம்மாவுடன் படித்தவர்களாம், உள்ளூரிலேயே கல்யாணம் பண்ணி இங்கேயே இருக்கிறார்கள், என் கன்னத்தை உறுவி அவர்கள் கொடுத்த முத்தம் ஒன்று அங்கேயே உலவிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது எனக்கு, இப்போது எங்கே இருப்பார்கள்? தெரியவில்லை, சரவணன் வந்தவுடன் கேட்க வேண்டும்…, அந்த இடத்தில வீடு இருந்ததற்கான அறிகுறியே இல்லை இப்போது, பாலத்தில் வசதியாக அமர்ந்து கொண்டேன் நான், அந்த பாலத்தின் அடியில் நீர் எப்போதும் தேங்கிக் கிடக்கும், இப்போது நீரில்லை, சரவணன், சரக்கு அடித்து விட்டிருந்தான், அவனது வயிற்றுப் பகுதியில் ஏதோ புடைப்பாக இருந்தது, அனேகமாக அவன் இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன், என்னுடன் வரும்போது மட்டும் அவன் அதிகம் குடிப்பதில்லை என்று நினைக்கிறேன், "மச்சான், போகலாமா?" என்றான் சரவணன், "ம்ம்" என்றேன் நான், கொஞ்ச தூரம் போனதும் "சரவணா, இங்கே கல்யாணி அத்தை இருந்தார்களே?" என்றேன் நான், "அவுகள்ளாம் செத்துப் போயி அஞ்சாறு வருஷம் ஆச்சு மச்சான், வயித்துல கட்டி, கட்டின்னு ஊதி எடுக்கப் போனாங்க, அனேகமா புத்து நோயா இருக்கும்னு நெனைக்கிறேன்  மச்சான், நம்ம பயபுள்ளைக தான் எல்லாத்தையும் ஊதி ஊதியே எடுத்துருவாங்களே!!". என்றான் சரவணன். மனசு கொஞ்சமாய் அழுது பார்த்தது, கல்யாணி அத்தையிடம் வறட்டீயும், உறுவு  முத்தமும் பெற்றுக் கொண்ட ஒரு சிறுவனின் அழுகை அது என்பது எனக்குத் தெரியும், சரவணனுக்குத் தெரியாது,  அந்தச் சிறுவனை நான் ஒளித்து வைக்க வேண்டும், அதுதான் பொது உலகத்தின் நியதிகளுக்குச் சரியானதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

நாங்கள் கல்லலை அடைந்த போது நன்றாக இருட்டி விட்டிருந்தது, மழை வேறு பிடித்துக் கொண்டு விட்டது, சந்து பொந்துகள் எல்லாம் நுழைந்து காளியம்மைப் பாட்டியின் வீட்டை அடைந்த போது இரவு எட்டரை மணி இருக்கலாம், "அப்பத்தா" என்று அழைத்தவாறே சரவணன் மூன்றடி மண்சுவர் மீது கட்டி எழுப்பப்பட்ட அந்தக் கூரை வீட்டின் உள் நுழைகிறான், அவனை நான் பின் தொடர்கிறேன், குறுகலான அந்த வீட்டின் சாணி வைத்து மெழுகப்பட்ட மண் தரையின் பரப்பில் சில நெளிந்த அலுமினியப் பாத்திரங்கள் மழை நீரைச் சேமித்துக் கொண்டிருந்தன, பாத்திரங்களில் விழுந்து தெறிக்கும் மழைத்துளிகள் இந்த தேசத்தின் உழைக்கும் மக்களின் கண்ணீர்த் துளிகளைப்  போலவே மண்ணில் விழுந்து காணாமல் போவதை நான் பார்த்தேன், அந்த வீட்டின் மூலையில் முடங்கி இருந்த கட்டிலைப் போலவே காளியம்மைப் பாட்டியின் வாழ்க்கையும் அங்கே சுருண்டு கிடந்தது. காளியம்மைப் பாட்டியின் அந்த மிகப் பெரிய பொட்டு முதல் முறையாக நான் பார்க்க மறைந்து போயிருந்தது, " இது யாருன்னு சொல்லு அப்பத்தா" என்றான் சரவணன், "கண்ணு அவ்வளவாத் தெரியலடா சரவணம்" என்று சொன்னார் காளியம்மைப் பாட்டி, சரவணனை அவர் சரவணம் என்று தான் அழைப்பார், எதனால் அப்படி அழைக்கிறார் என்கிற காரணம் இந்து வரை தெரிந்து கொள்ள முடியாத பரம ரகசியமாக இருக்கிறது.  நான் அருகில் சென்று காளியம்மைப் பாட்டியின் பாதங்களைத் தொட்டு வணங்கினேன், எழுந்து "செல்வி மகென் மூத்தவன் பாட்டி " என்று சொல்வதற்கும், காளியம்மைப் பாட்டி என்னைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கும் சரியாக இருந்தது. அந்த அணைப்பு பல எளிய குழந்தைகளை அணைத்து வளர்த்த அன்னையரின் ஆசிகளைப் போல இருந்தது, அந்த அணைப்பில் நான் என்கிற புறப்பொருள் இல்லாமல் போனது.

indian-boy-swimming

அந்த வீட்டில் பொது சமூகத்தின் அடையாளங்களோடு ஒத்துப் போவதற்கு ஒரே பொருள் இருந்தது, அது இலவச வண்ணத் தொலைக்காட்சி, வண்ணத் தொலைக்காட்சிக்கு நேர் மேலாக பெரியாரின் கருப்பு வெள்ளைப் புகைப்படமொன்று சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது, மற்ற பொருட்களுக்கும் பொது சமூகத்தின் உளவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அந்த வீடுதான் தமிழகத்தில் ஏறத்தாழ உழைக்கும் மக்களின் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் சராசரி வீடாக இருக்கலாம், அந்த வீட்டுக்குச் செல்ல சாலை வசதியோ, இல்லை, தெரு விளக்குகளோ கிடையாது, ஏறத்தாழ தமிழகத்தின் பல்வேறு சிற்றூர்களில் நிலைமை இப்படித்தான் இருக்கிறது, மழை சாலைகளை சேறும் சகதியும் நிரம்பிய சிறு குளமாக மாற்றி விடுகிறது, தமிழகத்தின் வீடுகளுக்குள் இலவசமாக சோம்பேறித்தனமும், அறிவின்மையும் வெகு வேகமாகப் பரப்பபடுகிறது, இலவசத் திட்டங்கள், மக்களின் உரிமைகளை முடமாக்கும் கொள்கைகள் தேர்தலுக்குப் பணம் கொடுத்தல் அல்லது இலவசப் பொருட்களை வழங்குதல் என்ற பெயரில் திட்டமிட்டுச் செய்யப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை, தொலைக்காட்சி பெரும்பாலான மனிதர்களின் நேரத்தை, உறவுகளின் நெருக்கத்தை உண்டு கொழுக்கிறது, கல்வி, அரசியல் விழிப்புணர்வு, உரிமைகளை நோக்கிய மனித குலத்தின் பயணம் திராவிடக் கழகங்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, மிகப்பெரிய எதிரிகளான கல்வியின்மை, அரசியல் விழிப்புணர்வு இன்மை இவற்றை வீழ்த்திய அல்லது வீழ்த்தும் வலிமையைக் கொடுத்த தந்தை பெரியாரின் பெயரால் இங்கு மிகப் பெரிய அளவில் கலாச்சார வீழ்ச்சியும், தேக்க நிலையும் தென்படுகிறது. கல்வியின் உண்மையான முக்கியத்துவம் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் எந்தப் பெற்றோரும் அதிக அக்கறை செலுத்துவது போலத் தெரியவில்லை, மாறாக எப்படி அதிகப் பொருள் சேர்க்க முடியும் என்பது குறித்துத் தான் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள், பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், பக்கத்துக்கு வீடுகளில், பக்கத்துக்கு ஊர்களில் நான் சந்திக்கிற அநேகமான பெற்றோர் தன் பிள்ளைகள் அதிகப் பொருளீட்டுவது குறித்தே அதிகக் கவலை அடைகிறார்கள், தவிர அறம் குறித்த சிந்தனைகளை அறவே மறக்கவும் அடிக்கிறார்கள். இனி யாராவது மந்திரவாதி வந்து தான் தமிழக அறிவுச் சூழலை மாற்றி அமைக்க முடியும் போலத் தெரிகிறது.

imagesCAL2BAU8

"எய்யா, என்ன பாக்குற, ஐயா போட்டாவப் பாக்குறியா, ஐயாவைக் கும்புட்டுக்க" என்று காளியம்மைப் பாட்டியின் குரல் எனது கவலைகளை மறைக்கிறது, பாட்டி சொல்கிற ஐயா தன்னுடைய கணவரை என்பது எனக்குத் தெரியும், நான் பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு ஐயாவை, அவர் பெரிய ஐயா,  காளியம்மைப் பாட்டியின் இயலாத நேரத்திலும், தள்ளாத வயதிலும் அதே அன்பு, அதே பாசம், எங்களைப் பார்த்தவுடன் ஒரு பஞ்சாரத்தில் அடைக்கப்பட்டிருந்த கோழியைக் காட்டி அதனை நாங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொன்னார்கள் காளியம்மைப் பாட்டி, "பழைய கஞ்சியும், ஊறுகாயும் இருக்கு சாப்புட்டுப் போங்கடா", வேறு வழியில்லை, நாங்கள் இருவரும் சாப்பிடாமல் இங்கிருந்து தப்பித்துச் செல்வது இயலாத காரியம் என்று இருவருக்கும் தெரியும், "உக்காரு, சரவணா, பாட்டி சோறு போட்டு நம்ம உக்காந்து சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆச்சு" என்று நான் சொல்லவும், "அடுத்த வாட்டி வரும்போது இந்தக் கெளவி இருப்பனோ, என்னவோடா?, பயலுகளா, சாப்பிடுங்க" என்று சொல்லியவாறு எங்களுக்குத் தனது சுருக்கமும், அன்பும் நிரம்பிய கைகளால் பரிமாறத் துவங்கினார் காளியம்மைப் பாட்டி, பல செல்வச் செழிப்பான வீடுகளின் வரவேற்பறைகளில் அமர்ந்து அவர்கள் வீட்டின் விலை உயர்ந்த கோப்பைகளை நமக்குக் காட்டுவதற்காக வழங்கப்படுகிற தேநீரை விடவும் இந்தப் பழைய கஞ்சியும் அதில் கலந்திருக்கிற உண்மையான அன்பும் சுவையானதாகவும், பொருட்பசி நீக்கும் அருமருந்தாகவும் எனக்குத் தோன்றியது.  அந்த நேரமும், இடமும் சொல்லொணாத துயரங்களோடு பயணிக்கும் ஒரு ஏழைக் கிழவியின் இடம் போலத் தெரியவில்லை , நாங்கள் மூவரும் ஏதோ ஒரு பெயர் தெரியாத கோளின் உள்ளமர்ந்து மழையோடு உரையாடிக் கொண்டும், பசியாறிக் கொண்டுமிருந்தோம். அந்த இடம் ஏசுநாதர் பிறந்த மாட்டுத் தொழுவம் போல எனக்குக் காட்சி அளித்தது, அந்த இருட்டு வேளையிலும் சில கோழிகள் எங்கள் அருகில் பயமின்றி இரை கொத்தித் திரிகிறது, வயிறும், முகமும் ஒடுங்கிப் போயிருந்த ஒரு வெள்ளை நாய் எங்களோடு பல நாட்கள் உறவாடியதைப் போல வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.   அங்கு ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது, அங்கு பொருள் தேடித் தொலைதூரம் போனாலும் அன்பே கிடைத்தது. அநேகமாகக் கல்யாணி அத்தையின் புளியமரமும், குடிசையும் போல ஒருநாள் இந்தக் குடிசையும் தரையோடு கரைந்து போகக் கூடும், ஆனால், அந்த நிலத்தில் இருந்து கசிந்து வழியும் அன்பும், அறனும் கால காலத்துக்கும் இந்தப் பேரண்டத்தில் அடுத்த தலைமுறைக்கான விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கும், காலத்தை வென்று காளியம்மைப் பாட்டியின் கைகள் தன்னிடத்தில் வருபவர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கும். விடைபெற வேண்டும், காளியம்மைப் பாட்டி மெல்ல நகர்ந்து ஒரு பழைய குடையை எடுத்துக் கொண்டு வந்து எங்களிடம் கொடுக்கிறார்கள், அந்தக் குடை ஏறத்தாழ ஒரு கம்பி வேலியைப் போல பொத்தல்கள் நிறைந்ததாய் இருக்கிறது, அனேகமாக அந்த ஒரு குடை தான் பாட்டியிடம் இருக்க வேண்டும், நாங்கள் இருவரும் மழைக்கான உடை அணிந்திருப்பதால் குடை தேவை இல்லை  என்று சொல்லி விட்டு வெளியேறத் தயாரானோம், "உடம்பப் பாத்துக்குங்க பாட்டி, முடியாத மாதிரி இருந்தால் அம்மாவுக்குப் போன் பண்ணிச் சொல்லுங்க" என்றவாறு எழுந்து கால்சட்டைகளில் ஒட்டி இருக்கிற மண்ணைத் தட்டி விடுகிறோம் நாங்கள் இருவரும், "எய்யா, வாடா இங்கே" என்று என்னை அழைக்கிறார் காளியம்மைப் பாட்டி, தனது இற்றுப் போன சேலையின் முனையில் இருக்கும் முடிச்சை அவிழ்க்கிறார் அவர், அந்த முடிச்சுகளில் தஞ்சம் அடைந்திருந்த இரண்டு அழுக்கான பழைய பத்து ரூபாய்த் தாள்களை என் கைகளில் திணிக்கிறார் காளியம்மைப் பாட்டி, அப்போதைக்கு அவரிடம் அந்த இருபது ரூபாய்கள் தான் இருந்திருக்க வேண்டும், எனது கைகள் தடுமாறத் துவங்குகின்றன, கண்களை மறைக்கும் கண்ணீர்த்துளிகள் வழிந்து விடாது ஒளித்து வைக்க முயல்கிறேன் நான். ஒளிந்து கொள்ள முடியாத அந்த எண்ணை வைத்துப் படிய சீவப்பட்ட அந்தச் சிறுவன் தனது கைகளை நீட்டி அந்தப் பழைய பத்து ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறான். அவை பத்திரப்படுத்தப்பட வேண்டும், அவற்றின் மதிப்பு அதில் எழுதப்பட்டிருக்கும் எண்களை விடப் பல மடங்கு உயர்ந்தது.

0c66a711ac790bfd3d8d58e655fd_grande

அதே பாலம், அதே சாலை, நாங்கள் இருவரும் கடந்து செல்ல வேண்டும், நெருக்கத்தில் சில தவளைகள் இருளின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன, மழை நின்று இப்போது தூறல் சாலைகளின் விளக்கொளியில் பயணிக்கிறது, அம்மாவின் இளமைக் காலம், தாயை இழந்த குழந்தைகள், காளியம்மைப் பாட்டியின் ஒரு ரூபாய் அளவுக்கான பொட்டு, நான் தொலைத்த டிக்கி டிக்கி, கல்யாணி அத்தையின் வீடு, வரட்டீ, காலம், கடந்து வருகிற பாதை என்று எல்லாம் ஒவ்வொன்றாகப் பயணத்தில் வரும் மரங்களைப் போலக் கடந்து செல்கிறது, எதிரில் நீண்டு கிடக்கிற பாதையையும், சில நட்சத்திரங்களையும் போல அன்பு மழை நீரில் பெருக்கெடுத்து எங்களைச் சுற்றி ஓடிக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. நானும் சரவணனும் வீடு வரும் வரையில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எங்களுக்குள் ஒளிந்திருந்த சிறுவர்கள் நிறையப் பேசிக் கொண்டிருந்தார்கள், நாங்கள் கதை கேட்பவர்களைப் போல கட்டுண்டு கிடந்தோம். காலத்தைக் கடந்து காற்றில் மிதந்து வருகிறது தொலைந்து போன டிக்கி டிக்கியின் ஓசை, மழை ஈரத்தையும், குளிரையும் விரட்டியபடி சட்டைப்பையில் இருக்கும் பழைய பத்து ரூபாய் நோட்டுக்கள் இரண்டில் இருந்து பரவுகிறது வெம்மை.

***********

Advertisements

Responses

  1. mikka arumai nanpare….

  2. காரணம் இந்து வரை தெரிந்து


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: